ICFI
தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

"அப்சர்வர்" சட்டவழக்கு விசாரணை

தொழிலாளர் புரட்சிக் கட்சியினது (WRP) அரசியல் சீரழிவின் சுவடுகளைத் தேடும் நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், தொழிற் கட்சி அரசாங்கம் நலிந்து கொண்டிருந்த நாட்களின் போது அங்கே அரசியல்ரீதியாக வெளிப்படுத்திக் காட்டும் சம்பவம் ஒன்று இருந்தது — அது அப்சர்வர் பத்திரிகைக்கு எதிராக WRP கொண்டு வந்த வழக்கு விசாரணையாகும். செப்டம்பர் 1975 இல், அந்த வழக்குக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர், WRP கல்வி மையத்தின் நிலத்துக்கு கீழ் தளத்தில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டு அப்சர்வர் பத்திரிகையில் ஓர் அவதூறு பரப்பும் கட்டுரை வெளியானதும், அப்பள்ளியில் பொலிஸ் திடீர் சோதனை நடத்தியது. அவதூறு பரப்பியதற்காக WRP சரியாகவே சட்டரீதியான நடைமுறைகளை மேற்கொண்டது, அந்த வழக்கு 1978 அக்டோபர்-நவம்பர் இறுதியில் விசாரணைக்கு வந்தது.

ஹீலியோ பண்டாவோ WRP இன் தரப்பில் சாட்சியமளிக்க செல்லவில்லை. அதற்கு பதிலாக அவர்கள், கட்சி கொள்கைகளை விளங்கப்படுத்துவதை, கொறின் ரெட்கிறேவ் (Corin Redgrave), வனசா றெட்கிறேவ் (Vanessa Redgrave), ரோய் பாட்டர்ஸ்பி (Roy Battersby) என மற்ற மூன்று மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் WRP இன் வழக்குரைஞரிடம் விட்டுவிட்டனர். அப்சர்வர் வெளியிட்ட குற்றச்சாட்டுக்களின் தன்மை ஒருபுறம் இருக்க, அந்த பத்திரிகையின் வழக்குரைஞர்கள் அந்த வழக்கு நெடுகிலும் வேண்டுமென்றே நீதி விசாரணைக் குழுவின் கவனத்தை வன்முறை சம்பந்தமான WRP இன் நிலைப்பாடு மீதே செலுத்த முயற்சித்தனர். மார்க்சிச புரட்சியாளர்களுக்கு இதுவொன்றும் முன்னொருபோதும் ஏற்பட்டிராத சூழ்நிலை அல்ல, அவர்கள், ஆளும் வர்க்கத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட அரசு வன்முறைக்கு எதிராக புரட்சிகர வன்முறையைப் பயன்படுத்துவதற்கான பெருந்திரளான மக்களின் உரிமை மீதான விட்டுக்கொடுப்பற்ற பாதுகாப்பை, தனிநபர் பயங்கரவாதம் மீதான ஒரு தெளிவான நிராகரிப்புடன் சேர்த்து, முன்னெடுத்து வந்துள்ளனர்.

ஆனால் WRP பிரதிவாதிகளின் நடவடிக்கை வெட்கக்கேடாகவும், முதலாளித்துவ பொதுக்கருத்துக்குப் பரிதாபகரமாக சரணடைவதாகவும் இருந்தது. அந்த வழக்கில் வழக்காளிகளாகவும் குற்றச்சாட்டுக்களை முகங்கொடுக்காதவர்களாகவும் இருந்த WRP இன் சாட்சியங்கள், சட்டத்தை மதிக்கும் கண்ணியமான குட்டி-முதலாளித்துவ கலந்துரையாடல் மன்றத்தின் உறுப்பினர்களாக, கௌரவம்மிக்க கனவான்கள் மற்றும் சீமாட்டிகளாக தங்களைக் காட்டிக்கொள்ள அவர்களால் ஆன அனைத்தையும் செய்தனர். சீமாட்டி வனசா (OBE) மற்றும் சீமான் கொறினைப் பொறுத்த வரையில், வரப்பிரசாதமாக வாய்த்த இந்த நவரச நடிகர்கள், ஹீலி எழுதிய வரிகளுக்கேற்ப நடித்து கொண்டிருந்தார்கள் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அந்த வழக்கை புரட்சிகர கிளர்ச்சிகள் மற்றும் பிரச்சார நோக்கத்திற்காக பயன்படுத்தக் கூடாதென அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களின் வாக்குமூலங்கள் நீதிமன்ற அறையில் மாண்புமிகு நீதியரசருக்கும் மற்றும் நடுத்தர வர்க்க நீதி விசாரணைக் குழுவுக்கும் வழங்கப்பட்டன. வன்முறை சம்பந்தமான அவர்களின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, மார்க்சிசத்தின் புரட்சிகரக் கோட்பாடுகள், குவாக்கர் (Quaker) மத சமூகத்தின் மத நம்பிக்கைகளுக்கு முற்றிலும் பொருந்தி இருப்பதைப் போல பதிலளித்தனர்.

அனைத்து புரட்சிகர கோட்பாடுகளையும் கைவிட்டு, தொழிலாளர் புரட்சிக் கட்சி, அந்த வழக்கின் தொனியை அதன் வழக்குரைஞர் திரு. ஜோன் வில்மேர்ஸ் QC அமைப்பதற்கு அனுமதித்தனர், அவர் மிகக் கவனமாக, நீதிமன்றத்தையும் அதன் தவறான அபிப்ராயங்களையும் சமாதானப்படுத்தும் விதத்தில் அவரின் விளக்கவுரைகளை வடிவமைத்திருந்தார். நியூஸ் லைன் பத்திரிகை அக்டோபர் 25, 1978 இல் அவரின் ஆரம்ப அறிக்கையை வெளியிட்டது:

"வழக்கு தொடுத்திருப்பவர்கள் 'மிகவும் உணர்வுபூர்வமாக மார்க்சிசத்தை நம்புபவர்கள்,' என்று திரு. வில்மேர்ஸ் தொடர்ந்தார்."

"அவர்கள் இந்நாட்டில் ஒரு புரட்சியைக் கொண்டு வர விரும்புகிறார்கள், ஆனால் ஒரு புரட்சி என்பது வீதிகளில் சுட்டுத் தள்ளும் அர்த்தத்தில் அல்ல, அடிப்படை மாற்றம் என்ற அர்த்தத்தில்."

"அவர்கள் முதலாளித்துவத்தைத் தூக்கிவீசி, சோசலிச சமுதாயத்தைக் கட்டமைப்பதற்காக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது குறித்து பேசுகிறார்கள்."

"ஆனால் அவர்கள் அடிப்படையிலேயே வன்முறை மற்றும் பலவந்தத்தை எதிர்க்கிறார்கள்."

“பிரச்சாரம் மூலமாக அவர்களின் நம்பிக்கையை மக்களுக்குக் கல்வியூட்டுவதன் மூலம் அவர்களின் நோக்கங்களை அடைய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்."

இந்த தொடக்க அறிக்கை, WRP சாட்சியங்களால் சவால் செய்யப்படாமலும் திருத்தப்படாமலும் விடப்பட்டு, தொடர்ந்து வந்த ஒரு சில வாரங்களில் மார்க்சிசத்தை நிராகரிப்பது போலானது. வியாழக்கிழமை அக்டோபர் 26, 1978 இல், நியூஸ் லைன் பத்திரிகை கொறின் ரெட்கிறேவின் முந்தைய நாள் வாக்குமூலங்களை வெளியிட்டது. அது ட்ரொட்ஸ்கிச கோட்பாடுகளின் பரிகசிப்பாக இருந்தது.

"பிற்பகலில், பிரதிவாதிகளுக்காக திரு. கொலின் ரோஸ் முன்றோ QC, தொழிலாளர் புரட்சி கட்சியின் அரசியல் கொள்கை குறித்து திரு. ரெட்கிறேவ் ஐ குறுக்கு விசாரணை செய்தார்."

"தொழிலாளர் ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டம் குறித்து கேட்டதற்கு, திரு. ரெட்கிறேவ், அது அமைதியான முறையில் சட்டபூர்வ அரசியலமைப்பு வழிமுறைகளில் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்."

" ‘WRP தலைமையிலான ஆயுதந்தாங்கிய எழுச்சி இல்லையா?,' என்று சட்ட ஆலோசகர் வினவினார்."

" 'எங்கள் இலக்குகளைப் பொறுத்தவரை இதுவரையில் இல்லை,’ என்று திரு. ரெட்கிறேவ் பதிலிறுத்தார்."

“'பிரிட்டனின் ஒரு பாசிசவாத அரசு அமையும் சம்பவத்தில் — படைகளைக் கொண்டு படைகளைச் சந்திக்க ஒருவேளை ஆயுதம் நாடும் சாத்தியக்கூறைக் கட்சி பரிசீலிக்கலாம் என்று திரு. ரெட்கிறேவ் தெரிவித்தார்.

“இந்த சூழ்நிலை, எல்லா விதமான ஜனநாயகமும் அழிக்கப்பட்ட, பெரும்பாலான மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளை இழந்திருக்கும் சூழலாக இருக்கலாம்.”

இந்த வாக்குமூலம், முதலாளித்துவ ஜனநாயகத்தின் வர்க்கத்தன்மை பற்றிய மார்க்சிசத்தின் அடிப்படை போதனைகள் அனைத்தையும் கோழைத்தனமாக மறுதலிப்பதற்கு நிகராக இருந்தது. ஆயுதங்களை ஏந்துவதற்கான சாத்தியக்கூறு, பாசிசவாத அரசுக்கு எதிரான போராட்டத்துடன் மட்டுப்படுத்தப்பட்டது — அதாவது, பாட்டாளி வர்க்கத்தின் தோல்விக்குப் பின்னர் வரையில். அந்த வாக்குமூலம் விரைவிலேயே இன்னும் மோசமடைந்தது.

"தொழிலாள வர்க்கம் ஒரு எழுச்சிக்கான ஆயுதங்களை எங்கிருந்து பெறும் என்ற கேள்விக்கு, தங்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்பும் ஆயுதப் படைகளின் பகுதிகளில் இருந்து வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக திரு. ரெட்கிறேவ் தெரிவித்தார்."

“கடந்த காலங்களில் அதுபோன்ற ஜனநாயக உரிமைகளின் வரலாறு இருந்துள்ளது, அதுதான் போர்ச்சுக்கலில் நடந்தது.”

தொழிற் கட்சி அரசாங்கத்தை பதவியிலிருந்து கீழிறக்க வேண்டும் என்ற WRP இன் கிளர்ச்சி உச்சத்தில் இருந்த அந்த தருணத்தில், மற்றும் ஆட்சி அதிகாரத்துக்கான பேராட்டத்தில் கட்சி ஈடுபட்டிருப்பதாக அது அறிவித்திருந்த அந்த தருணத்தில் இந்த வாக்குமூலம் வழங்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் பொதுவிடத்தில் பேசும் போதும் மற்றும் பெருந்திரளான தொழிலாள வர்க்க கூட்டத்தினரிடையே உரையாற்றும் போதும், ரெட்கிறேவ், புரட்சிகர வன்முறையைக் நிராகரித்தது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் ஆயுதப்படைகள் மற்றும் அதன் அரசின் மீது அவரின் நம்பிக்கையை மற்றும் ஆதரவையும் பிரகடனப்படுத்தினார். வேறெதையும் விட, அரசாங்கத்தைப் பதவியிலிருந்து கீழிறக்குவது மற்றும் அதிகாரத்திற்குப் போராடுவது சம்பந்தமாக அதன் அரசியல் பகட்டாரவாரப் பேச்சுக்களைப் பொறுத்த வரையில், இந்த வாக்குமூலமே முதலாளித்துவ அரசு பற்றி WRP பிரமிப்படைந்திருந்தது என்பதை அம்பலப்படுத்தியது. அக்கட்சியின் சாட்சியங்கள், மீண்டும் மீண்டும், மேற்படி சட்ட நடவடிக்கைகளில் இருந்து WRP ஐ பாதுகாக்கும் நோக்கில் அதிகவனமான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்ட போதும் கூட, அரசை சாந்தப்படுத்தும் அவர்களின் வழியில் சென்று, பெருந்திரளான மக்களை ஏமாற்றவும் மற்றும் அவர்களின் அரசியல் நனவைக் கீழறுக்கவும் மட்டுமே சேவையாற்றிய அறிக்கைகளை அவர்களே தானாக முன்வந்து வழங்கினார்கள்.

இடங்களை ரோந்து செய்ய போதுமான பொலிஸ் இல்லாதபட்சத்தில் மட்டுமே தொழிலாளர்களின் பாதுகாப்பு குழுக்கள் அவசியம்! என்று கூறுமளவுக்கு ரெட்கிறேவ் சென்றார்.

WRP இன் தலைமை பேச்சாளராக செயல்பட்டு கொண்டிருந்த கொறின் ரெட்கிறேவிடம் இருந்து வெறுப்புமிக்க இன்னும் அதிக வாக்குமூலங்களை, அக்டோபர் 28, 1978 சனிக்கிழமை, நியூஸ் லைன் பிரசுரித்தது: “'எனக்கு வன்முறை கற்றுக் கொடுக்கப்படவில்லை, நான் ஒருபோதும் வன்முறையைப் பிரயோகித்ததில்லை, நான் வன்முறையை எதிர்க்கிறேன், இதுதான் என் கட்சி எப்போதும் ஏற்று வந்துள்ள பாதை,' என்றவர் தெரிவித்தார்."

நீதி விசாரணை சபை விசாரணையின் முடிவில், அப்சர்வர் உண்மைக்குப் புறம்பானதை எழுதியிருந்ததைக் கண்ட பின்னரும், றெட்கிறேவும் மற்றும் ஏனைய WRP வழக்காளிகளும் பணிந்து யாசித்த ஒரு விடயமான கௌரவத்தை நீதிபதி, அவர்களுக்கு வழங்க மறுத்தார். ஆனால் இந்த வழக்கின் எதிர்முரணான விடயம் என்னவென்றால், WRP வழக்காளிகளுக்கு அப்சர்வர் குற்றஞ்சாட்டியதால் ஏற்பட்ட அவமதிப்பைக் காட்டிலும், அவர்களின் நடத்தையாலேயே அவர்கள் மிக அதிகமாக மதிப்பிழந்தார்கள்.