World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Alarming rise in suicides among US troops in Iraq

ஈராக்கில் பணியாற்றும் அமெரிக்கத் துருப்புக்களின் தற்கொலைகள் அச்சமூட்டும் வகையில் அதிகரிப்பு

By Jeff Riley
5 December 2003

Back to screen version

ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க சிப்பாய்களிடையே தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்துக் கொண்டிருப்பது, ஆக்கிரமிப்பு துருப்புக்களிடையே மனவுறுதி படுமோசமாகக் குறைந்து கொண்டிருப்பதை பயங்கரமாக கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.

கடந்த 7 மாதங்களுக்கு மேலாக ஈராக்கில் குறைந்த பட்சம் 17 துருப்புக்கள் மாண்டுள்ளனர். அவர்களில் 15 பேர் இராணுவத்தினர் மற்றும் இருவர் கடற்படையினர் என்று அண்மையில் அமெரிக்க அசோசியேட்டட் செய்தி நிறுவனம் இராணுவச்சேதம் பற்றி வெளியிட்டுள்ள ஆய்வில் விளக்கியுள்ளது. ஈராக்கில் பிரதான போர் நடவடிக்கைகள் எல்லாம் முடிந்து விட்டதாக மே மாதம் முதலாம் தேதி புஷ் நிர்வாகம் அறிவித்த பின்னர்தான் ஏறத்தாழ இந்த தற்கொலைகள் அனைத்தும் நடைபெற்றுள்ளன.

போர் நடவடிக்கைகளுக்கு அப்பால் ஈராக்கில் நடைபெற்ற சாவுகளில் இந்தத் தற்கொலைகள் 10 சதவீதத்திற்கு அதிகமாகும். வழக்கமாக நடைபெறும் தற்கொலைகளை விட அமெரிக்கத் துருப்புக்கள் மூன்று மடங்கு அதிகமாகத் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

டசின் கணக்கில் நடந்துவரும் இதர சாவுகள் குறித்து புலன்விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. உண்மையான சாவுகள் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கக் கூடும். மன நலம் குன்றிய காரணத்தினால் அண்மையில் ஈராக்கிலிருந்து 500 க்கு மேற்பட்ட இராணுவ சிப்பாய்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இப்படி மன உளைச்சலும், தற்கொலைகளும் அதிகரித்துக் கொண்டிருப்பதால் அமெரிக்க இராணுவம் மனநல மருத்துவ நிபுணர்குழுவை ஈராக்கிற்கு அனுப்பியுள்ளது. அவர்கள் அமெரிக்க இராணுவத்தினரின் மனநலம் குறித்து மதிப்பீடு செய்வார்கள்.

தற்போது ஈராக்கில் 130,000 அமெரிக்க இராணுவத்தினர் ஆண்டு முழுவதிலும் நீடித்துப் பணியாற்ற வேண்டிய நிலையில் உள்ளனர். ஈராக் மக்களது எதிர்ப்பு வலுத்துக் கொண்டுவரும் மிகக்கடுமையான சூழ்நிலைகளின்கீழ் வாழும் அவர்கள், தினசரி கொரில்லாத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர்.

டிசம்பர் 3 ந் தேதி நிலவரப்படி 441 படையினர் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஈராக்கில் பிரதான போர் முடிந்துவிட்டது என்று ஜனாதிபதி புஷ் மே மாதம் முதல் தேதி அறிவித்த பின்னர் 302 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 154 பேர்களின் மரணம் 'மோதலில் சம்மந்தப்படாத' சாவுகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. 2145 அமெரிக்கப் படையினர் காயமடைந்ததாக பென்டகன் விவரம் தந்திருக்கிறது. இவர்களில் 351 பேர் மோதல் அல்லாத காரணங்களால் காயமுற்றவர்கள். அத்துடன் காயம்பட்டவர்களில் 20 வீதம் பேர் கடுமையான மூளை தொடர்புடைய காயம் அடைந்தவர்களாக உள்ளனர். அதில் பலரின் உடல் உறுப்புக்களை வெட்டி எடுக்க வேண்டிய அளவிற்குப் உடல் ஊனமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் அருவறுப்பான தோற்றமடையும் அளவிற்கு கடுமையாக காயமடைந்துள்ளனர்.

ஈராக்கில் கடுமையான உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகிற அளவிற்கு காயமடைந்திருக்கிற அமெரிக்கத் துருப்புக்களில் ஒரு சிறிய அளவுதான் புள்ளி விவரங்களாக வெளியே வந்திருக்கின்றன. நவம்பர் 20 ந்தேதி நிலவரப்படி ஜேர்மனியில் உள்ள இராணுவ மருத்துவ நிலையத்திற்கு 8,093 காயமடைந்த அல்லது நோய்வாய்பட்ட துருப்புகள் வந்திருக்கின்றன. இவர்களில் பலர் மனநலக் கோளாறுள்ளவர்கள் ஆவர்.

சில தற்கொலைகள் தற்செயலாக நடந்திருக்கக் கூடும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இருந்தபோதிலும், ஈராக்கிலிருந்து வெளியேறிச் சென்றுவிட வேண்டுமென்ற விரக்தியில் உள்ளவர்கள் தங்களைத் தாங்களே காயம்படுத்திக்கொள்ள முயன்றுள்ளனர். நீ அமெரிக்காவிற்கு திரும்பிச் செல்ல முடியாது என்று கூறப்பட்ட ஒரு இராணுவ சிப்பாய் தன்காலில் தானே சுட்டுக் கொண்டார். அந்தக் குண்டு ஆழமாகப் பாய்ந்து இரத்தக் குழாய் வெட்டப்பட்டதால் இரத்தம் வெளியேறி அவர் மாண்டார்.

இதேபோன்று மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது. ஈராக்கில் இராணுவத்தில் பணியாற்றும் ஒரு பெண் தன் வயிற்றில் தானே சுட்டுக் கொண்டு பலியானார். காயமடைந்தால் அதன் அடிப்படையில் ஈராக்கிலிருந்து தாய்நாடு திரும்பலாம் என்ற அடிப்படையில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. இந்த இரண்டு சிப்பாய்களும் தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றிருக்க மாட்டார்கள் என்று தான் நம்புவதாக திக்ரிட்டில் பணி புரியும் இராணுவ சிப்பாய்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளை ஆராய்கிற காப்டன் ஜஸ்டின் கோல் தெரிவித்தார்.

இது போன்ற இதர சம்பவங்களில் தாங்கமுடியாத மூளைக் கோளாறுகள் மற்றும் உணர்வுப் பூர்வ நெருக்கடிகள் வெளிப்படுகின்றன. கிழக்கு பேர்லினைச் சேர்ந்த 20 வயதான கோரேஸ்மால் என்பவர் அமெரிக்க இராணுவத்தில் ஊழியராகப் (பிரைவேட்) பணியாற்றி வந்தார். 4 வயதான மகனைக் கொண்டிருக்கும் அவரும் அவரது குடும்பத்தினரும் கிழக்கு ஜேர்மனியில் உள்ள போர்ட் போல்க் லா பகுதியில் வாழ்ந்து வந்தனர். சென்ற மே மாதம் அவர் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டார். ஜூலை மாதம் பாக்தாத்தில் உள்ள வெறிச்சோடிக் கிடக்கும் ஒரு மருத்துவ மனையில் பணியில் அமர்த்தப்பட்டார். அங்கு தண்ணீரும் கிடையாது. மின்சாரமும் கிடையாது.

அவர் ஜூலை மாதம் 3 ந் தேதியன்று மாண்டுவிட்டார். மோதல் அல்லாத சமயத்தில் அவர் மாண்டதாகக் கூறப்பட்டது. சக இராணுவ சிப்பாய்கள் தொலைபேசியில் பேசுவதற்காகக் காத்து நிற்கும்போது அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு பலியானார்.

இராணுவ சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த, 24 வயதுடைய ஜோசப் D.சுவெல் என்பவர் டெக்ஸ்லுள்ள லுப்கினை சேர்ந்தவர் ஆவர். பாலைவனத்தில் பணியாற்ற அவர் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து டைலினோல் (Tylenol) மாத்திரைகளை அளவிற்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி ரெபெக்கா சுவல் அசோசியட் பிரசுக்கு பேட்டியளித்தபோது, ''எனது கணவர் தற்கொலை செய்து கொள்கிற அளவிற்கு ஏன் துக்கமாகவும், களைப்பாகவும் இருந்தார்? என்பது எனக்கு வியப்பளிப்பதாக உள்ளது. நான் அவரை எந்த அளவிற்கு நேசிக்கிறேன் மற்றும் எந்த அளவுக்கு அவரைக் குழந்தைகள் இழந்து விட்டனர். அவர்களுக்கு, அவர் எந்த அளவு தேவைப்படுகிறார் என்பதையும் அறிந்த பின்னர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோசப் சுவெல் தனது குடும்பத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் தூக்கமின்றி இரவுகளைக் கழித்துக் கொண்டிருப்பதாகவும் ''என்னைச் சுற்றி துப்பாக்கிக் குண்டுகள் வெடிக்கும் சத்தமும், மக்கள் எழுப்பும் அவலக் குரல்களுமே'' கேட்டுக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது அத்தை தெபோரா மெக்கேவுக்கு எழுதிய கடிதத்தில் துப்பாக்கி குண்டுகளுக்குத் தான் பலியாகி விடக்கூடும் என்ற பயத்தில் நடமாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கத் துருப்புக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு ஈராக் குழந்தைகள் கூட குண்டுகளையும், கைவெடிகுண்டுகளையும் கையில் எடுத்துக்கொண்டு நடமாடுவதாகவும் அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வீடு திரும்ப வேண்டும் என்பதில் எந்த அளவிற்கு தீவிரமாகவும், விரக்தி நிலையிலும் இருந்தார் என்பதை உணர்த்தும் வகையில் அவரே தனது மனைவியிடம், இதுபற்றி தனது தளபதியிடம் முறையிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், தனது கணவர் அருகில் இல்லாமல் தன்னால் வாழ்க்கையைச் சமாளிக்க முடியவில்லை என்று மனைவி விடுத்த கோரிக்கையை இராணுவத் தளபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

மருத்துவ தாதியர் பாடசாலையில் படித்துக் கொண்டு, வால்-மார்ட் பகுதியில் பணியாற்றி விட்டு மூன்று குழந்தைகளையும் வளர்ப்பது என்பது, தன்னால் தனியாக தாங்கிக் கொள்ளும் சக்திக்கு அப்பாற்பட்டு இருப்பதாக, தான் இராணுவத் தளபதியிடம் விளக்கியதாக அவர் தெரிவித்தார். தனது மூன்றாவது பெண் குழந்தை பிறந்த அன்று கணவர் ஈராக் போர்ப்பணிக்குச் சென்று விட்டதால் அவளுக்குத் தந்தையே தெரியாது என்றும், கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது அவரது குடும்பத்தோடு சேர்ந்திருக்க அவர் விரும்பினார் என்றும் ரெபக்கா குறிப்பிட்டார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் முதலாவது கிருஸ்துமஸ் விழாவைச் சந்திக்கின்றனர். விடுமுறைக் காலத்தில் தான் தற்கொலைகளின் எண்ணிக்கை உச்சக்கட்டத்திற்குச் செல்வது வழக்கம் என்று சில மன நல நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

செப்டம்பர் மாதம் Stars and Stripes என்கிற அரை-அதிகாரப்பூர்வ செய்திப்பத்திரிகை ஒன்று வெளிநாடுகளில் பணியாற்றும் இராணுவத்தினர்கள் மற்றும் சிவிலியன்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது. அந்தப் பத்திரிகை ஒரு ஆய்வை நடத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள இராணுவத்தினர்களின் உற்சாகம் கடுமையான பிரச்சனையாகி விட்டதாக அந்த ஆய்வு விவரிக்கிறது. சோர்வு, கடுமையாகவும் குறைவாகவும் இருப்பது துருப்புக்களுக்கு ஆபத்தான விளைவுகளை உண்டுபண்ணும் தொல்லைக்கு ஆளாக்குகிறது என்றும் குறிப்பிடுகின்றது.

இந்த ஆய்வுக்கு 2000 அமெரிக்கத் துருப்புக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டனர். அவர்களில் ஏறத்தாழ பாதிப்பேர் தங்களது உற்சாகம் குறைந்துள்ளதாக அல்லது அதிக அளவில் குறைந்து விட்டதாகத் தெரிவித்தனர். மூன்றில் ஒரு பகுதியினர் தங்களது ''பணி தெளிவாக விளக்கப்படவில்லை'' அல்லது ''பணிபற்றி விளக்கமே தரப்படவில்லை'' என்று பதிலளித்தனர். ஈராக் போர் பற்றிக் கருத்துத்தெரிவித்த இராணுவ சிப்பாய்கள் மூன்றில் ஒரு பகுதியினர் ஈராக் போரினால் ''சிறிதளவே பயனுள்ளது'' அல்லது ''எந்தப் பயனும் இல்லை'' என்றும் தெரிவித்தனர். பெரும்பாலான இராணுவத்தினர்கள் ''முரட்டுத்துணி அணிந்து உட்கார்ந்து'' கொண்டிருக்கிறார்களே தவிர போரில் பங்கு பெறுபவர்களாகத் தோன்றவில்லை என்றும் கருத்து தெரிவித்தனர்.

இந்த ஆய்வு பற்றிக் கருத்துத் தெரிவித்த மெரிலேண்ட் (Maryland) பல்கலைகழகத்தின் இராணுவ சமூகவியல் ஆய்வாளரான டேவிட் செகால் ''அவர்கள் மிகப்பெரும் அளவிற்கு விரக்தியடைந்துள்ளனர் என்ற உணர்வு கொள்கிறேன். தங்ளுக்கோ அல்லது அமெரிக்க மக்களுக்கோ புரியாத ஒரு சிக்கல் நிலவுவதான உணர்வு அவர்களுக்கு ஏற்படுகிறது'' என விளக்கியுள்ளார்.

அமெரிக்கப் படைகள் மீது தினசரி நடைபெற்றுவரும் தாக்குதல்களின் எண்ணிக்கை ஈராக்கில் பெருகி வருகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக 30 க்கு மேற்பட்ட தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. அவற்றில் அடிக்கடி உயிர்சேதமும் ஏற்படுகிறது. பல படையினர்களுக்கு எப்போது இந்த மோதல்கள் நிற்கும் என்ற முடிவே தெரியாமல் தத்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மோதல்கள், மற்றும் தினசரி வாழ்வின் கடுமைகள் என்பன இராணுவத்தினர்களுக்கு உடல் அளவிலும் உளவியல் அளவிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க இராணுவ அதிகாரி மார்த்தா ரூட் நடப்பு நிலவரத்தின் தனித்தன்மை குறித்து பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். ''இதற்கு முந்திய மிகப்பெரும்பாலான போர்களில், போருக்குச் சென்றோம். போர் புரிந்தோம். வீட்டிற்குத் திரும்பினோம். ஆனால் இந்தப் போரில் போருக்குச் சென்றார்கள். போர் புரிந்தார்கள். இன்றைக்கும் அவர்கள் ஈராக்கிலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள்'' என்று அந்த அதிகாரி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

ஈராக் மக்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் பலாத்கார தாக்குதல் நடவடிக்கைகளும், அமெரிக்கத் துருப்புக்களின் நிதானத்தைப் பாதிக்கின்றன. அண்மையில் ஒரு ஈராக் குடிமகன் பாரிய துப்பாக்கிக் குண்டால் தாக்கப்பட்டு இரண்டு துண்டுகளானதைப் பார்த்துக்கொண்டு நின்ற இராணுவ சிறப்புப்படை அலுவலரான சார்ஜன்ட் ஜார் ஆன்ரி பொகானி என்பவர் நிலைகுலைந்து உடல் நடுங்கி நின்றார்.

பொகானியால் இரவில் தூங்க முடியவில்லை. பீதி உணர்வுகளால் அவர் பாதிக்கப்பட்டதாக அவரே கூறியுள்ளார். அவர் மீது ''கோழைத்தனமானவர்'' என்ற குற்றச்சாட்டு கூறப்பட்டது. பின்னர் அவர் ''கடமை தவறியதாக'' குற்றம் சாட்டப்பட்டார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்கத் துருப்புகளின் உற்சாகம் குறைந்து வருகின்றதுடன், தற்கொலைகளின் அளவு அச்சமூட்டும் வகையில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்க மக்களை ஈராக் போருக்கு இட்டுச்சென்ற புஷ் நிர்வாகத்தின் பொய்கள் நாளுக்கு நாள் அம்பலமாகிக் கொண்டும் வருகின்றன. ஈராக் தரப்பிலிருந்து எந்தவிதமான ஆத்திரமூட்டும் நடவடிக்கையும் வராமல், பொய்யான சாக்கு போக்குகளின் அடிப்படையில் ஈராக் போருக்கு தாங்கள் அனுப்பப்பட்டிருப்பதாக அமெரிக்கப் படையினர்களிடையே வளர்ந்து வரும் உணர்வுகள், நேரடியாகச் சந்திக்கும் தாக்குதல்கள் என்பன இராணுவத்தினர்களின் உற்சாகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved