World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The official US response to the capture of Saddam Hussein: a degrading spectacle

சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்காவின் அதிகாரபூர்வமான கருத்து: கண்ணியக்குறைவான காட்சி

By David Walsh
16 December 2003

Back to screen version

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டது தொடர்பாக அதிகாரபூர்வமாக அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து, ஆழமான வெறுப்பு உணர்வை தூண்டிவிடுவதாக அமைந்திருக்கிறது. அரசியல் மற்றும் ஊடகங்கள் நிர்வாகத்தில் ஜனநாயகத்தின் அல்லது மனிதநேய உணர்வுகளின் எல்லா அடையாளச் சின்னங்களும் அழிக்கப்பட்டு விட்டனவோ, என்று கருகின்ற அளவிற்கு அறியாமை பழிவாங்கும் உணர்வு மற்றும் பிறரை துன்புறுத்தி அதிலேயே இன்பம் காணும் போக்கை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இப்போது வாஷிங்டனில் இருக்கின்ற அரசாங்கம்தான் உண்மையிலேயே, இயல்புக்கு மாறான உணர்வுகளை கொண்ட அரசாங்கம் எனவேதான் சதாம் ஹூசைன் என்கிற வலதுசாரி தேசிய முரடனும் முன்னாள் அமெரிக்க நண்பனுமான ஹூசைனுக்கு ஓரளவிற்கு அனுதாபத்தை உருவாக்குகின்ற வகையில் புஷ் நிர்வாகம் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கிறது.

தலைப்பு செய்திகள் ''அவரை நாங்கள் பிடித்துவிட்டோம்!'' -என்று அலறின. அவற்றிலிருந்து வேறுபட்ட பல்வேறு மற்றும் சலிப்பை ஏற்படுத்துகின்ற தலைப்புக்கள் "எலியை" அதன் "வளையில்" வைத்து பிடித்துவிட்டதாக அறிவித்தன. இந்த நிகழ்ச்சியை, எண்ணிறைந்த செய்திகள் ஜோர்ஜ்-W-புஷ்ஷின் "மிக உயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு" என்று வர்ணித்திருக்கின்றன. இவற்றை எல்லாம் கூட்டிக்கழித்துப் பார்த்தால் என்ன வரும்? வெற்றி பெற்றவர் வழங்குகின்ற நீதிதான் மிஞ்சும், அது, சொல்லவே நாக்கு கூசும் பிற்போக்கான மற்றும் வெறுப்பூட்டும் தன்மை கொண்டது.

தற்போது இராணுவப்படைகள் ஈராக்கில் நிலைப்பெற்றுள்ள விதம் அமெரிக்கப் படைகள் லஞ்சம் கொடுப்பதற்கும், மிரட்டுவதற்கும் மற்றும் சித்ரவதை செய்வதற்கும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள நிலையை எடுத்துக் கொண்டால், சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டது தவிர்க்க முடியாத சம்பவம், இது போன்ற தொடர்கதைகளில் இது கடைசியாக மிக பரபரப்பாக கிடைத்திருக்கின்ற கதை மட்டுமே ஆகும். 1980-களில் அமெரிக்க காலனி ஆதிக்கத்தின் அப்பட்டமான மறு வெளிப்பாடு வெடித்துச் சிதறியதன் பின்னர் 1989-ல் பனாமாவின் மானுவேல் நோரிகா மற்றும் 2001-ல் முன்னாள் யூகோஸ்லாவியாவின் மிலோசெவிக் போன்ற தலைவர்களை பூதாகரமாக சித்தரிக்கும் நீதியின் முன் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டுத் தலைவர்களின் நீண்ட பட்டியல் ஒன்றை அமெரிக்கா உருவாக்கி வைத்திருக்கிறது. அதே பாணி இப்போது கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒசமா பின் லேடன் உட்பட இந்த தனி மனிதர்களும், மற்றவர்களும் தொடர்புபடுத்தப்படுவதற்கு ஒரே நூலிழை, அவர்கள் அமெரிக்க அரசாங்கம், இராணுவம் அல்லது சிஐஏ- உடன் முன்பு கொண்டிருந்த தொடர்புதான்.

அமெரிக்க ஊடகங்களின் முட்டாள் தனமும் அகந்தைப் போக்கும் எல்லையற்று சென்றுவிட்டது. பல ஆண்டுகளாக சதாம் ஹூசைனின் அரண்மனைகளைப்பற்றி மிகுந்த கண்ணியத்தோடு வர்ணித்து வந்தார்கள். இது ஊடக நிபுணர்கள் -கோடீஸ்வரர்களிடமிருந்து வந்தது- இப்போது அவர்கள் அதே சதாம் ஹூசைனின் இழிவான முடிவு குறித்து விளக்கும்போது "தரையில் களிமண் செங்கல்களான ஒரு குழியில்" பதுங்கியிருந்தார் என்று சுட்டிக்காட்டுகிறார்கள், இப்படிப்பட்ட கண்ணிய குறைவான நிலையை அவரே தேர்ந்தெடுத்துக் கொண்டது போல் எழுதுகிறார்கள். ருப்பேர்ட் முர்டோக்கின் நியூயோர்க் போஸ்ட் பொதுவாக அதன் இயல்பிற்கு ஏற்ப சாக்கடை இதழியலின் முடைநாற்றம் எடுக்கும் சான்றாக ஹூசைனைப்பற்றி விமர்சனம் செய்திருக்கின்றது: "ஒரு மருத்துவர் அவரது தலையில் பேன்கள் இருக்கின்றனவா என்று சோதித்து பார்த்த பொழுதில் அவர் சுரங்க ரயிலில் பிச்சை எடுக்கும் பரதேசியின் தோற்றம் உடையவராக காணப்பட்டார்......... அவரை தூய்மையாக்கி முகச்சவரம் செய்து விட்டபின்னர் கூட அவர் போராடுகின்ற உறுதியை இழந்துவிட்டார் என்பது தெளிவாக தெரிந்தது, அவரது கண்கள் எந்த நோக்கமும் இல்லாமல் நிலையாக நின்றது மற்றும் அவரது முகத்தில் அடிபணியும் நோக்கு காணப்பட்டது."

இது மிக பணக்காரத்தனமான வர்ணனை. ஹூசைன் உலகிலேயே மிக பயங்கரமான இராணுவப்படையின் கண்ணில் இருந்து பல மாதங்களாக தலைமறைவாக இருந்தார். அவரது மகன்கள் கொல்லப்பட்டு விட்டனர். ஹூசைன் எந்த நிலையில் காணப்பட்டு இருப்பார்? அவரது தோற்றத்தைப் பொறுத்தவரை எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் அதே நிலைப்பாடுகளில் இருந்திருந்தால், எந்த அளவிற்கு நிலைகுலைந்து போயிருப்பார்களோ அதைவிடக் குறைவாகத்தான் உறுதிப்பாட்டோடு இருந்திருக்கிறார் என்று உண்மையாய் கூறப்பட முடியுமா? அமெரிக்க அரசியல்வாதிகள் ஒரு பூர்வாங்க தேர்தலில் கூட தோற்று விடுகிறபொழுது கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள். ரிச்சார்ட் நிக்ஸன் ''வாட்டர் கேட்'' ஊழலை ஒட்டி ராஜிநாமா செய்தபோது 1974-ஆகஸ்டில் வெள்ளை மாளிகையில் கிழக்கு அறையில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை ஒரு பத்திரிகையாளர் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்: ''துக்கம் அடைகிற அளவிற்கு மிக மோசமாக பிதற்றி அழுது கொண்டிருந்த அவரது மனைவி, தள்ளாடிக் கொண்டிருந்த அவரை ஜன்னல் இல்லாத ஒரு வாகனத்தில் ஏற்றி, காட்சிக்கு மறைவாய் தொலைவான இடத்துக்கு அழைத்துச் செல்லட்டும் என்று சிலவேளைகளில் ஒருவர் வாழ்த்துவார்."

ஹூசைனைக் கொல்வதா அல்லது சித்ரவதை செய்வதா?

தற்போது பத்திரிகையாளர்கள் புஷ்ஷையும் அவரது கூட்டாளிகளையும் சதாம் ஹூசைனுக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றி கேள்விகளை எழுப்பி நிர்பந்தம் செய்து கொண்டிருக்கின்றனர். திங்களன்று நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் புஷ், ஒரு நிருபரால் ''தூக்கு தண்டனை விதிப்பது ஒரு வழி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' என்று கேட்கப்பட்டார்.

இதற்கு புஷ் ஏளனமாய் நகைத்து கூறினார், ''அவர் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார். ஈராக்கியர்களுடன் இணைந்து அவரை விசாரிப்பதற்கு ஒரு வழியை உருவாக்க வேலை செய்வோம் அது சர்வதேச ஆய்விற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும், அதை சிறந்த முறையில் வைப்பது இப்படித்தான் என நான் ஊகிக்கிறேன்...... அவரை எப்படி நடத்த வேண்டும் என்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் கருத்துக்கள் உண்டு, ஆனால் நான் ஈராக்கிய குடிமகன் அல்ல. அந்த முடிவுகளை ஈராக்கிய மக்கள்தான் செய்ய வேண்டும்.'' கூடியிருந்த நிருபர்கள் அவரது கடைசி கருத்தை நம்புவதாக நடித்தனர்.

சதாம் ஹூசைன் பல்வேறு குற்றங்களுக்கு பதிலளிக்க வேண்டியவர் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால், அந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, நூரம்பேர்க் விசாரணைகள் நிலைநாட்டியுள்ள முன்மாதிரி ஏதாவது சிறப்பை நிலைநாட்டுமானால் ஈராக்கிற்கு எதிராக ஆக்கிரமிப்பு போரை தொடக்கிய ஜோர்ஜ்-W- புஷ் மற்றும் அவரது சகாக்கள் செய்ததும் குற்றம்தான். ஈராக்கில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் -பாக்தாத்தில் அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள அஹமது சலாபி, ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி- அப்படிப்பட்டவர்கள் சதாம் ஹூசைனை வழக்கில் உட்படுத்துவதற்கு தார்மீக உரிமை இல்லாதது ஒரு புறம் இருக்கட்டும், என்ன சட்டரீதியான உரிமை பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் அனைவரது கரங்களும் தூய்மையானவை அல்ல. உத்தேசிக்கப்பட்டுள்ள நீதிமன்றம் வாஷிங்டனின் குற்றவியல் நோக்கத்திற்கும் சர்வதேச சட்ட அவமதிப்புக்கும் மற்றொரு உதாரணம் ஆகும். அந்தந்த நேரத்தில், இராணுவத்திற்கு, அரசியலுக்கு அல்லது தேர்தல் தேவைகளுக்கு ஏற்ப போகிற போக்கில் புஷ் நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே போகிறார்கள்.

ஜனநாயகக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக் கொள்வது போல, ஊடகங்களும் அப்படியே ஏற்றுக் கொண்டுவிடுகின்றன. தவிர்க்க முடியாது அடுத்த தேர்தலில் அவர் கட்சியின் சார்பில் ஜனாதிபதியாக போட்டியிடுவதற்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர், கனக்டிக்கெட் செனட்டர் ஜோசப் லீபர்மேன், உடனடியாக அவரை பலியிட வேண்டும் என்று கூட்டுக் கோரிக்கையில் குரல் எழுப்புகிறார். ஒரு சர்வதேச அல்லது ஈராக் நீதிமன்றம் சதாம் ஹூசைனுக்கு தூக்கு தண்டனை விதிக்க வில்லையென்றால் "அவரை அமெரிக்க இராணுவ நீதிமன்றதின் முன் கொண்டு வரவேண்டும் மற்றும் மரண தண்டனையை சந்திக்க வேண்டும்" என்று லீபர்மேன் கூறினார்.

அமெரிக்க ஊடகங்கள் எந்த அளவிற்கு கீழான நிலைக்கு மூழ்கிவிட்டன என்பதற்கு ஒரு அடையாளச் சின்னமாக ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிடலாம். ஞாயிறு இரவு CBS- செய்திப்பிரிவின் கெளரவமிக்க 60-நிமிடங்கள் நிகழ்ச்சியில் லெஸ்லீ ஸ்டால் (Leslie Stahl) ரம்ஸ் பீல்ட்டிடம், ஹூசைனை கொல்வதா அல்லது சித்ரவதை செய்வதா இதில் எது விரும்பத்தக்கது என்ற பாணியில் கேள்வி ஒன்றை கேட்டார். ''முழுக் கேள்வியையும் நான் எழுப்புகிறேன். வேறு சிறந்த வார்த்தை கிடைக்காததால் சித்ரவதை என்ற சொல்லை பயன்படுத்துகிறேன். அவர் ஒத்துழைக்க மறுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவரை தூங்கவிடாது நாம் தடுப்போமா, அவர் எங்கிருந்தாலும் அவர் மிகக்கடுமையான குளிரையோ அல்லது வெப்பத்தையோ சந்திக்கின்ற நிலையையோ உருவாக்குவோமா?'' என்று லெஸ்லி ஸ்டால் கேட்டார். "அவர் இதுவரை நடந்து கொண்டதைவிட அதிகமான அளவிற்கு விசாரணையில் ஒத்துழைப்பு தரச் செய்வதற்கு எந்த முறையில் அவரை நடத்த வேண்டும் என்பதற்கு ஏதாவது கட்டுப்பாடுகள் இருக்கின்றனவா?" என்றும் அவர் கேட்டார். அமெரிக்கா சித்ரவதை செய்யாது என்று டிரம்ஸ் பெல்ட் கோடிட்டு காட்டிய பொழுது, அதற்குப் பின்னரும் அந்த நிருபர் அந்த விவகாரத்தை விடவில்லை, தொடர்ந்தார், ''இந்த மனிதனின்" தூக்கத்தைப் பறிப்பது, அது போன்ற விசாரணை முறைகள் இருக்காது என்று நீங்கள் கூறுகிறீர்களா, முழுமையாக அத்தகைய நடவடிக்கைகளை தள்ளுபடி செய்வதாக சொல்லுகிறீர்களா?'' என்று கேட்டார்.

அதற்குப் பின்னர் இருவருக்கும் இடையில் இந்த அருவருக்கத்தக்க உரையாடல் நடைபெற்றது:

ஸ்டால்: "அவர் எங்கிருந்தார் என்று அவர்கள் அறிவார்கள் மற்றும் அவரைப் பிடித்துவிட முடியும் என்று அதைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்ட உடன் அந்தச் சூழ்நிலையில் அவர் கொல்லப்பட்டிருந்தால், அது நல்லதாக இருந்திருக்கும் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? அவர் உயிரோடு இல்லையென்றால், அது நன்றாயிருக்கும் இல்லையா?"

ட்ரம்ஸ் பெல்ட்: ''நல்லது, அது நியாயமான கேள்வி. நான் கவலைப்படுகிற விவகாரங்கள் நிறைய உண்டு என்பது உங்களுக்கு தெரியும். நான் அவற்றைச் சிந்திக்க முயலுகிறேன். அந்த ஒரு விவகாரத்தில் நான் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் அவரை பிடிக்கப்போகிறோமா? அல்லது கொல்லப் போகிறோமா? என்று கேட்டால் எங்களது கொள்கை நாங்கள் அவரை பிடிக்க முயலுகிறோம். கொல்வதற்கல்ல, எங்களால் பிடிப்பதற்கு முடியவில்லை என்றால் நாங்கள் கொல்ல முடியும். அதை நாங்கள் செய்கிறோம்.''

இரண்டு மாஃபியா கும்பல் பேர்வழிகளுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை நாம் கவனித்துக் கொண்டிருப்பது போன்று இது அமைந்திருக்கிறது.

இழிவுபடுத்தவும், பயங்கர நடவடிக்கைகள் மூலம் பயமுறுத்தவுமான ஆசை ரம்ஸ் பெல்ட், செனி, வொல்வ்போவிட்ஸ், மற்றும் புஷ்சின் சிந்தனைக் குழு அதேபோல அவர்களது ஊடக ஊழியர்கள் மனங்களில் நிறைந்திருக்கிறது. அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையை உலகம் முழுவதும் தொலைக்காட்சி நேயர்களுக்கு ஒளிபரப்பிக் காட்டியது உள்பட ஹூசைனை ஜெனீவா ஒப்பந்தங்களுக்கு முரணாக இழிவுபடுத்தும் வகையில் நடத்தியிருக்கிறார்கள். ஈராக்கில் எதிர்ப்பாளர்களை பயமுறுத்துவதற்கும், பொதுவாக மக்களையும், அரபு உலகத்தையும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கருதக்கூடிய சர்வதேச அளவிலான அனைவரையும் அச்சுறுத்துகின்ற வகையிலும், ஆனால், இறுதியாக அமெரிக்க மக்களையும் அச்சுறுத்துகின்ற வகையில் இதை செய்திருக்கிறார்கள். இதில் அவர்கள் விடுக்கின்ற செய்தி இதுதான்: அனைத்து எதிர்ப்பும் பயனற்றது, உங்கள் மீதும் நாங்கள் ஏறி மிதித்து செல்வோம்.

இன்றைய தினம் யாருடைய ஆதரவைப் பெறுவதற்காக இத்தகைய காட்சியை அவர்கள் நடாத்தினார்கள்? அமெரிக்க மக்களிடையே மிகமிக பிற்போக்குத்தனமான தார்மீக ஒழுக்கத்தை தலைகீழாக புரட்டிவிட்ட பகுதி, குடியரசுக் கட்சியின் அரைப் பாசிச அடித்தளம் கொண்ட, புராதன உலகில் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு ஆணையோ, சிங்கத்தை அவிழ்த்துவிட்டு அதன் முன் தூக்கி எறிந்து அதைக் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்களே அந்த தொன்மைக்கால மக்களைப் போன்ற வக்கிரம் பிடித்த மனோதத்துவ நிலையில் உள்ள அமெரிக்க மக்கள் ஆகியோருக்காக இந்தக் காட்சியை நடத்தி காட்டியிருக்கிறார்கள். இந்த காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை கொண்டாடுவது, அப்படிக் கொண்டாடுபவர்கள்களிடம் மனித நேயத்தன்மை இல்லாததைக் காட்டுகிறது.

இப்படி ஹூசைனை இழிவுபடுத்துவதற்கு முன்னர் இந்த ஆண்டு ஆரம்பத்தில் அவர்களது புதல்வர்களின் உடல்களை மிக ஆபாசமாக காட்டினார்கள். அரபு செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசையான அல்ஜெசீரா சென்ற மார்ச் மாதம் மாண்டுவிட்ட மற்றும் பிடிக்கப்பட்ட அமெரிக்கப் போர்வீரர்களை படம் பிடித்து காட்டியது என்பதற்காக பென்டகன் கூக்குரல்களை எழுப்பியதை அமெரிக்க ஊடகங்களில் உள்ள எவரும் இப்போது நினைவுபடுத்திப் பார்க்க மாட்டார்கள். அந்த நேரத்தில் டிரம்ஸ் பெல்ட் மிகுந்த பயபக்தியோடு, ''போர் கைதிகளை இழிவுபடுத்துவதோ அல்லது சங்கடப்படுத்துவதோ மற்றும் அவர்களை படம் பிடிப்பதோ அல்லது ஜெனீவா ஒப்பந்தப்படி அனுமதிக்கப்படவில்லை'', என்று பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டதை கொண்டாடுகின்ற உத்தியோகபூர்வ அமெரிக்க காட்சி, குறிப்பாக நாகரிகம் வளராத கால மற்றும் ரத்த வெறி சடங்குகளை ஒளிபரப்பியமை பொதுமக்களை அவமதிப்பதற்கும் அச்சமூட்டுவதற்கும்தான். இப்போது ஒன்று, நாளுக்கு நாள் தெளிவாகிக் கொண்டு வருகிறது. நவீன சமுதாய வாழ்வில் இது அண்மைக்கால அம்சமாக உள்ளது. அமெரிக்கர் உட்பட மிகப்பெரும்பாலான மனிதகுலத்தின் வாழ்வு மற்றும் உணர்வுகளில் இருந்து அந்நியப்பட்டு தொலை தூரத்தில் இருக்கின்ற அரசியல் மற்றும் ஒழுக்கமுறை உலகில் அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது. கண்ணியமிக்க மனப்போக்கு கொண்ட மக்களுக்கு இத்தகைய நடவடிக்கைகள் வெட்க உணர்வைத்தான் ஏற்படுத்தும், மிக அருவருக்கத்தக்க தூய்மையற்ற ஏதோ ஒரு காட்சியை காண்பது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தக் கூடும்.

புஷ்சும் அவரது கூட்டாளிகளும் எதைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக் கொள்ள முடிந்தாலும் அது அமெரிக்க மக்களின் மிகச்சிறந்த கண்ணியமிக்க பாரம்பரியங்கள் மற்றும் கருத்துக்ககளுக்கு விரோதமானதும், எந்தவிதமான தொடர்பு இல்லாததும் ஆகும். அவர்கள் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஈராக்கியர் கொண்டாடுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை

ஹூசைனின் குற்றங்கள் தொடர்பான பட்டியலை சந்தேகிப்பதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை. ஆனால் அவர் வாஷிங்டனுடன் உண்மையிலேயே கூட்டணி சேந்திருந்த நேரத்தில்தான் அவற்றில் கொடூரமான குற்றங்கள் நிகழ்ந்தன என்பதை எந்த அமெரிக்க விமர்சகரும் சுட்டிக்காட்ட மாட்டார். அப்படியிருந்தாலும் நிருபர்கள் ஈராக் மக்களிடையே உற்சாகம் இல்லை என்பதை உடனடியாக சுட்டிக்காட்டினர். கடந்த எட்டுமாதங்களாக அமெரிக்க இராணுவ ஆட்சி மூலம் கிடைத்த அனுபவம், அத்துடன் இயல்பாகவும் தவிர்க்க முடியாத உள்ளுணர்வின் காரணமாகவும் வெளிநாட்டு காலனி ஆதிக்கத்திற்கு எழுகின்ற உணர்வு பூர்வமான எதிர்ப்பு ஆகியவை இணைந்து, ஊழல் மலிந்த அல்லது மிகவும் அப்பாவியான ஈராக்கியரைத் தவிர்த்து அனைவரையும் அமெரிக்காவின் நீதி பற்றிய மாய்மாலத்திலிருந்து விடுவித்து விட்டது. அண்மையில் ஈராக் மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு முன்னாள் ஆட்சி உறுப்பினர்களை தேடுவது அல்லது அவர்கள் மீது வழக்குத் தொடர்வது என்பதில் 91 சதவீதம் பேருக்கு எந்தவிதமான அக்கறையும் இல்லை என்று சுட்டிக்காட்டியது.

ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஜோஷுவா லோகன் எழுதியிருப்பதை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம்: ''சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டதில் ஏற்பட்ட மகிழ்ச்சி மாறி, ஈராக்கிய மக்கள் புதிதாக இரத்தக் களரியையும் பற்றாக்குறைகளையும், விலைவாசி உயர்வையும், அமெரிக்க படையெடுப்பில் சந்தித்துக் கொண்டிருப்பதால் வாஷிங்டன் மீது அது வெறுப்பாக அமைந்துவிட்டது. பலர் சதாம் ஹூசைன் கூண்டில் ஏற்றப்பட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைந்தாலும் அவர் தனது செயல்களுக்கு பதில் கூறுவார் என்று நம்பினாலும், அமெரிக்காவிற்கு நன்றி தெரிவிக்க பலர் அவசரப்படவில்லை. ஏனென்றால் அவர்களது பார்வையில் ஏப்ரலில் சதாம் ஹூசைன் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் ஈராக்கில் இருந்து வரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள்தான் தங்களது பிரச்சனைகளுக்கு மூல ஆதாரம்." ஹூசைன் பிடிபட்டதைத் தொடர்ந்து அமெரிக்கப் படைகள் மீதும், அவர்களது ஈராக்கிய நண்பர்கள் மீதும் பொதுமக்களது எதிர்ப்பு தாக்குதல்கள் தொய்வின்றி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதே போன்று மத்திய கிழக்கு முழுவதிலும் அரபு மக்களின் பொது கருத்தும் அமெரிக்காவிற்கு விரோதமாகவே அமைந்திருக்கிறது. அமெரிக்க இராணுவம் முன்னாள் தலைவரை இழிவுபடுத்தி மரியாதைக் குறைவாக நடத்தி வருவதாக மத்திய கிழக்கு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேற்கு நாட்டு ஊடகங்கள் பேட்டி கண்ட, ஹூசைன் பிடிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைந்தவர்கள் கூட புஷ்சும் அவரது அமெரிக்க இராணுவமும் தான் அவரது ஆட்சியை கவிழ்த்தன என்ற உண்மையை இட்டு வருத்தம் தெரிவித்திருக்கின்றனர்.

குறிப்பாக போர் ஆதரவு வெறியர்கள் அடங்கியுள்ள சிறுகுழுக்களுக்கு வெளியில் மற்றும் ஊடகங்களின் பிரச்சார பீரங்கிகள் இருப்பினும் (அல்லது ஒரு வேளை அதன் காரணமாக) அமெரிக்க மக்களிடையே ஆதரவு மனப்போக்கு திட்டவட்டமாக கம்மிய தொனியில் இருந்தது. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள ஒரு கருத்துக் கணிப்பு முடிவுகளின் படி, ஹூசைன் கைது செய்யப்பட்டிருப்பதால் அது "பெருமளவிற்கு உதவியாக" இருக்கும் என்று 13-முதல் 25 சதவீதம் பேர்தான் கருத்து தெரிவித்துள்ளனர். அமெரிக்க மக்களில் 10-பேரில் 9-பேர் ஈராக்கில் இன்னமும் "பெரிய சவால்கள்" நீடிக்கின்றன என்றே கருதுகிறார்கள். 42 சதவீத அமெரிக்க மக்கள் இந்தப் போரினால் எந்தவிதமான பயனும் இல்லை என்றே கருதுகின்றனர். 84-சதவிகிதம் மக்கள் போர் எதிர்பார்த்ததைவிட நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைவிடவும் அது மோசமாகிக் கொண்டு போவதாகவும் கூறினர்.

CNN- காலூப் கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதே பொதுவான கருத்தைத்தான் தெரிவிக்கின்றன. சதாம் ஹூசைன் பிடிக்கப்பட்டதால் போர் அல்லது புஷ் பற்றிய பொதுமக்களது அணுகு முறையில் எந்தவிதமான சிறு தாக்கமும் கூட ஏற்படவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றன.

அமெரிக்காவில் பொதுமக்களது கருத்து, மிகுந்த எச்சரிக்கையோடும், ஐயுறவாதத்தோடும், அலட்சியப் போக்கோடும் அமைந்திருக்கிறது. புஷ் "நாட்டிற்கு ஆற்றிய உரையில்" அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதை கேட்பதற்கு பலர் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருந்ததைப்போல் அவர் மிகப் பகட்டாகவும் பொய் சொல்லியிருக்கிறார். ஹூசைன் பிடிக்கப்பட்ட சம்பவத்தால் அமெரிக்காவில் எவரும் ஏன் மகிழ்ச்சியடையவில்லை, அவர் பிடிக்கப்பட்டதால் ஈராக்கில் அமெரிக்க இராணுவத் தலையீட்டிற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுவிடப் போவதில்லை, எந்த ஈராக்கியர் அல்லது அமெரிக்கப் போர்வீரரின் உயிரையும் காப்பாற்ற போவதில்லை, சர்வதேச அல்லது அரபு பிராந்திய அமைதி ஏற்பட்டுவிடப் போவதில்லை அல்லது உள்நாட்டில் மிகப்பெரும்பாலான மக்கள் பிரிவுகளின் மிக மோசமான பொருளாதார நிலையை சரிசெய்துவிடப் போவதில்லை, அப்படியிருக்கும் போது ஏன் அமெரிக்காவில் உள்ள எவரும் அவர் பிடிபட்டதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும்?

ஒப்பிடும்போது ஹூசைன் குற்றங்கள் மறைந்து விடுகின்றன

1968-ம் ஆண்டு பாத்கட்சி ஈராக்கில் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அப்போது தொடங்கி நடைபெற்ற ஒவ்வொரு குற்றத்திற்கும் ஹூசைன் தான் பொறுப்பு என்பது உண்மையானால் கூட, அதே கால கட்டத்தில் பதவிக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதிகளோடு ஒப்பிடும்போது அவர்களால் சிந்தப்பட்ட ரத்தத்தில் சிறு பின்ன அளவில் சதாம் ஹூசைன் கரங்களில் இரத்தக்கறை இன்னும் படியாது. கென்னடி, ஜோன்சன், மற்றும் நிக்சன் ஆகியோரது பதவிக்காலத்தில் நாற்பதுலட்சம் வியட்நாம் மக்கள் அமெரிக்க தலையீட்டின் விளைவாக மாண்டனர். அத்துடன் பத்துலட்சம் கம்போடிய மக்களும், ஐந்து லட்சம் லாவோசிய மக்களும் மாண்டனர். இந்தோனேஷியாவில் 1965-ம் ஆண்டு CIA- ஆதரவில் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் போது ஐந்து லட்சம் பேர் மாண்டார்கள். 1954-முதல் 2002-வரை குவாத்திமாலா நாட்டில் அமெரிக்க ஆதரவோடு நடத்தப்பட்ட அரசாங்க ஒடுக்கு முறையால் 300,000 மக்கள் பலியானார்கள். இன்னும் 100,000 பேர் எல்சால்வடார் நாட்டில் மாண்டதாக கருதப்பட்டது.

அர்ஜென்டினா மற்றும் சிலியில் 1970-களில் நிக்சன்-கிசிங்கர் மற்றும் கார்டர்-பிரிஜேஜின்ஸ்கி ஆட்சிகளில் இராணுவ கொலைகாரர்கள் 50,000-மக்களை சித்ரவதை செய்தார்கள் மற்றும் கொலைசெய்தார்கள். அமெரிக்கப் படைகள் நடத்திய இரண்டு போர்களின் விளைவாகவும் இருபது ஆண்டுகள் புஷ் மற்றும் கிளிண்டன் நிர்வாகத்தில் பேரழிவுகரமான பொருளாதாரத் தடைகள் செயல்படுத்தப்பட்டதனாலும் பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய மக்கள், அதற்கு அதிகம் இல்லாவிட்டால் கூட, ஐந்து லட்சம் குழந்தைகள் உட்பட துயரமிக்க சாவை சந்திக்கவேண்டி வந்தது.

1979-முதல் ஆப்கனிஸ்தான் பேரழிவுகளால் மேலும் பத்துலட்சம் மக்கள் மாண்டார்கள், 2001 செப்டம்பரில் பயங்கரவாத தாக்குதல்களால் 3,000-அப்பாவி அமெரிக்கர்கள் மாண்டார்கள். அந்த நிகழ்ச்சி மத்திய ஆசிய நாட்டுடன் அமெரிக்கா நடாத்திய பேரழிவுகர மோதலின் விளைவாக இருந்தது.

குர்து இன மக்களின் உரிமைகள் பற்றி இப்போது பேசிக் கொண்டிருந்தாலும், அமெரிக்கா அந்த மக்களது மிகக் கொடூரமான ஒடுக்கு முறையாளரான துருக்கி ஆட்சியாளர்களோடு ஒத்துழைத்தது. உண்மையிலேயே ஹூசைன் கைது செய்யப்பட்டது அமெரிக்க உதவியோடு 1999-பெப்ரவரியில், குர்து இனத்தலைவர் அப்துல்லா ஒசலான் பிடிபட்டதை ஒப்பிடும்போது ஹூசைன் கைது செய்யப்பட்டிருப்பது செய்தியே அல்ல.

பிடிக்கப்பட்ட எதிரிகளை நடத்தும் முறை

நயத்தகு நாகரீகம் நிலவிய காலங்களில் மிகக்கொடூரமான எதிரிகள் கூட போர்க்காலங்களில் பிடிபடும்போது மிக கண்ணியமாக நடத்தப்பட்டனர். நெப்போலியன் போனபாட் அவரது சமகாலத்து பிரிட்டனின் வரலாற்று ஆசிரியர் வர்ணித்திருப்பதைப் போல் ''மிக நீண்ட காலம் ஐரோப்பாவையே சித்ரவதை செய்த அந்த இரத்த வெறிகொண்ட விஷமி'' மற்றும் "ஐரோப்பாவின் ஒவ்வொரு நாட்டிலும் அதை ஒட்டியுள்ள அவர் படையெடுத்துச் சென்ற ஆபிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் அவர் புரிந்த கொடுமைகள் ரத்தக்கறைபடிந்த அத்தியாயங்களாக எழுதப்பட்டுள்ள", அப்படிப்பட்ட நெப்போலியன் போனபாட் 1815-ம் ஆண்டு ஜூலை மாதம் சரணடைந்த போது கப்பலில் அவருக்குரிய மரியாதையோடு நடத்தப்பட்டார். அவர் முதலில் தப்பியோடி, பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பின்னர்தான் இந்தச் சம்பவம் நடந்தது.

அமெரிக்காவில் அமெரிக்காவிற்கு எதிராக அடிமைகளை வைத்திருப்பதை ஆதரித்து, கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து 600,000 அமெரிக்கர்கள் சாவிற்கு காரணமாகயிருந்த தளபதி றொபர்ட் இ லீ (Robert E. Lee) நடத்தப்பட்ட விதம் என்ன? அவரது உறுதிமிக்க எதிரியான தளபதி உலிசிஸ் எஸ்.கிரண்ட் (Ulysses S. Grant) 1865-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உரையாற்றும் போது லீ-யைப் பற்றி கீழ்கண்டவாறு கூறினார்: ''அவரது (தளபதி லீ-யின்) உணர்வுகள் எதுவாக இருந்தாலும் அந்த உணர்வுகள் என்னுடைய பார்வையிலிருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டுவிட்டன; ஆனால் என்னுடைய சொந்த உணர்வுகள், (பேச்சு வார்த்தைகளை முன்மொழிந்த) அவரது கடிதம் எனக்கு கிடைத்ததும் அதனால் மகிழ்ச்சி ஏற்படும் என்ற நிலைக்கு மாறாக, துக்கம் கொண்டதாகவும் சோர்வுற்றதாகவும் ஆயின. நீண்ட காலம் வீரத்தோடு போராடிய மற்றும் தனது கொள்கைக்காக எவ்வளவோ துன்பங்களை அனுபவித்த, ஒரு எதிரி வீழ்ந்ததில் மகிழ்ச்சியைக் காட்டிலும் வேறு விஷயங்களை உணர்ந்தேன், ஓய்வொழிவில்லாமல் இந்த அளவிற்கு மிக மோசமான ஒரு காரணத்திற்காக மக்கள் போராடியது இது என நினைக்கிறேன், அதற்கு எந்தவிதமான மன்னிப்புமே இல்லை. அப்படியிருந்தாலும், எங்களை எதிர்த்து நின்ற மிகப்பெரும் மக்கள் கூட்டத்தை அதன் நேர்மையை நாம் சந்தேகிக்கவில்லை."

இந்த ஒப்புநோக்கு சரியானது அல்ல என்று சிலர் வாதிடலாம்; ஏனென்றால் சதாம் ஹூசைன் நெப்போலியனோ அல்லது லீ-யோ அல்ல என்று. அவர் அந்த வரலாற்று நாயகர்கள் அல்ல என்பதில் சந்தேகமும் இல்லை. ஆனால் புஷ் ஒரு வெல்லிங்டனோ அல்லது கிரான்ட்டோ அல்ல. அது எப்படியிருந்தாலும் வீழ்த்தப்பட்டவரது நடவடிக்கைகள் அல்லது அவரது குணங்கள் பற்றி கேள்வி அதிகம் இல்லை. வெற்றி பெற்றவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் பிரச்சனை. ஹூசைன் கொடூரமாகவும், சட்டவிரோதமாகவும் நடத்தப்பட்டிருப்பது, அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டு எந்த அளவிற்கு அரசியல், தார்மீக மற்றும் பண்பாட்டு சீரழிவில் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு மேலும் ஒரு அடையாளச் சின்னம் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved