World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel: Air Force pilots reject participation in targeted assassinations

இஸ்ரேல்: குறிவைத்து படுகொலைகள் செய்வதில் பங்குபெற விமானப்படை விமானிகள் மறுப்பு

By Chris Marsden
4 December 2003

Back to screen version

மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகளில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகளில் பங்குபெற மறுத்து, செப்டம்பர் மாதம் 27 இஸ்ரேல் விமானப் படை விமானிகள் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இந்தக் கடிதத்தை இஸ்ரேல் விமானப்படைத் தளபதி, ஜெனரல், டான் ஹாலட்ஸ் (Dan Halutz) இடம் கொடுத்திருக்கின்றனர். ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத், அல் அக்ஸா தியாகிகள் படை அமைப்பில் செயல்படுபவர்களை படுகொலை செய்யும் இஸ்ரேலின் கொள்கையைக் கண்டிக்கும் வகையில் இந்த விமானிகளது கடிதம் அமைந்திருக்கின்றது.

ஜெனிவா ஒப்பந்தங்களின்படி, சட்டத்திற்கு அப்பால் நடக்கும் இது போன்ற கொலைகள் போர்க் குற்றங்களாக கருதப்படுகின்றன.

காசா பகுதி மற்றும் மேற்குக் கரைப் பகுதிக்கு, தரைப் படைகளை ஏற்றிச் செல்வதிலோ அல்லது, போராளிகளைக் கண்டு பிடித்து கொலை செய்யும் பணிகளிலோ, பங்கெடுத்துக் கொள்ள அந்த விமானிகள் மறுத்துவிட்டனர். "அப்பாவி குடிமக்களுக்குத் தீங்கு செய்யும் நடவடிக்கைகளை தொடர நாங்கள் மறுக்கிறோம்.... இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிலைநாட்டிக் கொண்டே செல்வது, நாட்டின் பாதுகாப்பிற்கும், அதன் தார்மீக வலிமைக்கும் பேராபத்தாக அமைந்துள்ளது" என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் படைப்பிரிவுகளிலேயே, மிகவும் தெளிவான உயர்மட்டக் குழுவாகக் கருதப்பட்டு வரும் விமானப்படையிலிருந்து, முதலாவது பகிரங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அந்தக் கடிதம் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. 27 விமானிகளில் 9 பேர் தற்போது விமானப்படையில் முனைப்பான சேவைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

விமானப்படை மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக 120-க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் சட்டத்திற்குப் புறம்பாகக் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்படிக் கொலை செய்யப்பட்டவர்களில் 84 பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்ற குடிமக்களாவர். பெரும்பாலான கையெழுத்திட்டவர்களைப் பொறுத்தவரை கடைசித்துருப்பு சீட்டு, மக்கள் நிறைந்த காசா புறநகர்ப் பகுதியொன்றில், ஹமாஸ் தலைவர் சாலா ஷெகாதி வீட்டின் மீது 2002 ஜூலை மாதம் F-16 விமானப்படை விமானியொருவர் ஒரு டன் எடையுள்ள குண்டை வீசியபொழுது, குண்டு மற்ற 14 இதர குடிமக்களுடன் சேர்த்து ஷெஹாதியையும் கொன்றது, அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகளாவர்.

காப்டன் அலோன், என்று அடையாளம் காட்டப்பட்டுள்ள, அந்த விமானிகளில் ஒருவர் Yedioth Ahronoth- க்கு அளித்த பேட்டியில், "எனக்குள் ஓர் ஆழமான உணர்வு வெடித்துக் கிளர்ந்தெழுந்தது. இரவில் நான் நன்றாக தூங்கவில்லை. நாம் குற்றங்களைச் செய்து கொண்டிருக்கிறோம் என்று நாம் உணரும் வரை, இன்னும் எத்தனை பேரை நாம் கொல்ல வேண்டி வருமோ"? என்று கூறினார்

விமானிகளின் சவாலுக்கு அரசாங்கம் மிகுந்த ஆத்திரத்தோடு பதில் அளித்தது, அந்த விமானிகள் துரோகம் செய்து விட்டதாக கூறியது. வானொலியில் நாட்டிற்கு ஆற்றிய உரையில் பிரதமர் ஏரியல் ஷரோன், அறிக்கை விட்ட விமானிகளைக் கண்டித்தார். அதேபோன்று இராணுவ, மற்றும் விமானப்படைத் தளபதி மோசி யாலோனும், டான் ஹலுட்ஸ்ம் கண்டனம் செய்தனர்.

"இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் உங்கள் விருப்பம் போல் செயல்படுகிற அமைப்பல்ல" என்று ஷரோன் குறிப்பிட்டார். அறிக்கையில் கையெழுத்திட்ட விமானிகள் உடனடியாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, விமானப் படையிலிருந்தே நீக்கப்பட்டனர். அவர்களுக்கு சிறைத் தண்டனையும் வழங்கப்படலாம் என்று ஹாலுட்ஸ் அறிவித்தார். "இந்த நடைமுறை தாமே நிரூபணமாகியுள்ளது'' என்று அவர் Haaretz-க்கு தெரிவித்தார்.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து, கடிதத்தில் கையெழுத்திட்ட மூன்று விமானிகள் மட்டுமே, தமது பெயர்களை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இப்படி கையெழுத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டவர்களில் சிவிலியன் ஏர்லைன் எல் அல் விமானியும், ஒரு ரிசர்வ் பைலட்டும் அடங்குவர். ரிசர்வ் பைலட் தனது வேலையை இழந்தார். சிவிலியன் ஏர்லைன் பைலட் வேலை இழப்பார் என்று அச்சுறுத்தப்பட்டார். மற்றவர்கள் பணி மறுப்புக் கடிதத்தில் கையெழுத்திட்டனர். தற்போது 30-க்கு மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர்.

இது ஒரு சிறிய எதிர்ப்புத்தான் என்றாலும், அதன் முக்கியத்துவம் குறித்து, அரசாங்கமும் ஆயுதப் படைகளும் கொண்டுள்ள கவலைகள் எந்த வகையிலும் குறைந்து விடவில்லை. கையெழுத்திட்டுள்ளவர்கள் பட்டியலில் 1982-ம் ஆண்டு ஈராக் அணு உலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கெடுத்துக் கொண்ட பிரிகேடியர் ஜெனரல், யி்ஃப்டா ஸ்பெக்டர், லெப்டினன்ட் கேர்னல் அவ்னர் ரன்னன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 1994-ல் Lieutenant-Colonel Avner Raananக்கு இஸ்ரேலில் மிக உயர்ந்த இராணுவ விருதுகளில் ஒன்று வழங்கப்பட்டது.

Yediot Aharonotல், இராணுவ விமர்சகர் ஒருவர் எழுதி உள்ளதில், இந்தக் கடிதம் ''ஆபத்தானது'' ஏனெனில் இது ஒரு ''முன்மாதிரியை'' உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

"விமானிகளின்'' கிளர்ச்சி ஒரு பூகம்பம் ஆகும். இது பேரழிவை உருவாக்கும் வல்லமை கொண்டது. தற்போது, அதன் பாதிப்பின் அளவை மதிப்பிடுவது சிரமமான காரியமாகும்.... இந்தப் புயல் விரைவில் நீங்காவிட்டால், இராணுவத்தின் இதர படைப் பிரிவுகளும் இந்தப் புயலில் சிக்கிக் கொள்ளும் விமானப் படை மட்டுமே அல்ல."

இன்றுவரை, ஏறத்தாழ 1200 இஸ்ரேலிய சிப்பாய்களும், ரிசர்வ் படைகளும், இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள பகுதிகளில் பணியாற்ற மறுத்து வருகின்றனர். அவர்களில் 300 பேர் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளனர். விமானிகளின் நடவடிக்கையை ஆதரித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் 200 இஸ்ரேல் பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக 500-க்கு மேற்பட்ட கடிதங்கள் கிடைத்திருக்கின்றன.

விமானப்படையிலிருந்து நீக்கப்பட்ட பின்னர், விமானிகள், Guardian- பத்திரிகையை சேர்ந்த கிரிஸ் மேக்கிரீலுக்கு தங்களது முதலாவது பகிரங்க அறிக்கையைத் கொடுத்திருக்கின்றனர்.

ஹமாஸ் இராணுவத் தலைவர் சலா ஷெகாதி வீட்டின் மீது ஒரு டன் எடையுள்ள குண்டு வீசப்பட்டதை அவர்கள் மீண்டும் குறிப்பிட்டிருக்கின்றனர். அவர்கள் தகவலின்படி, "ஒரு காப்டன், அந்த குண்டு வீச்சு திட்டமிட்ட கொலைபாதகம் என்று வர்ணித்துள்ளார், கொலை என்றும் குறிப்பிட்டார். மற்றொரு காப்டன், உடன் பணியாற்றுவோர் அந்தவிளக்கம் பற்றி அவரை அழுத்திய போதும், அதை அரசாங்கத்தின் பயங்கரவாத நடவடிக்கை என்று வர்ணித்தார்."

காப்டன், அலோன் R.: ஷெஹாதி கொலையைத் தொடர்ந்து, நான் எனது நம்பிக்கைகளை மறுமதிப்பீடு செய்யத் தொடங்கினேன். நாங்கள் 14 அப்பாவி மக்களைக் கொன்றோம். அவர்களில் 9 பேர் குழந்தைகள். எனது தளபதி அளித்த பேட்டியில், தான் இரவில் நன்றாகத் தூங்கியதாகவும், அதேபோன்று, தனது சிப்பாய்களும் தூங்குவர் என்றும் குறிப்பிட்டிருந்தார். நான் அவ்வாறு தூங்க முடியவில்லை. அது ஒரு அப்பாவித்தனமான தவறு என்பதை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். எதிரி டாங்கிகளை அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட F-15 போர் விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் உலகிலேயே அதிக மக்கள் நெரிசல் உள்ள பகுதிகளில் ஒன்றின் மீது வீசி, கார்களையும், வீடுகளையும் அழிப்பதற்குப் பயன்படுத்தலாமா?" எனக் கூறினார்.

காப்டன் அசாப் L : "ஒரு தொன் குண்டு மிகப் பெரும் நாசத்தை ஏற்படுத்தும் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு மிகப் பெரிய அறிவாளி தேவை இல்லை என்று கூறினார். உயர் மட்டத்தில் உள்ள யாரோ ஒருவர் அந்தக் குண்டு கட்டடங்களை அழிக்கும் என்று தெரிந்தே அத்தகைய குண்டை வீச முடிவு செய்கிறார்... அப்பாவி மக்களைக் கொல்வதென்று யாரோ ஒருவர் முடிவு செய்கிறார். இப்படிச் செய்வதால் நாம் பயங்கரவாதிகளாகி விடுகிறோம். இது பழிக்குப் பழி வாங்கும் செயலாகும்".

லெப்டினன்ட் கேர்னல் அவ்னர் ரான்னன் கூறினார், ''கடந்த மூன்று ஆண்டு நிகழ்ச்சிகளை நாம் பார்த்தோம் என்றால், தற்கொலை குண்டு வெடிப்பு நடக்கிறதென்றால், இஸ்ரேல் விமானப்படை மிகப் பெரும் நடவடிக்கையில் இறங்குகிறது. குடிமக்கள் கொல்லப்படுகின்றனர். அப்பாவிகள் இதை பழி வாங்கும் நடவடிக்கை என்றே கருதுகின்றனர். இஸ்ரேல் தெருக்களில் அதைக் கேட்டகலாம்; மக்கள் பழிக்குப்பழியை விரும்புகின்றனர். ஆனால் அப்படி நாம் நடவடிக்கையில் இறங்கக் கூடாது. நாம் மாஃபியா கும்பல் அல்ல."

கேப்டன் ஜோனதொன் S. கூறினார், "நாம் நமது குடியேற்றங்களை வைத்திருக்க போர் புரிந்து வருகிறோம் மற்றும் பாலஸ்தீன மக்கள் நம்மைக் கொல்வதால் அவர்களை ஒடுக்க விரும்புகிறோம். இஸ்ரேல் நாட்டில் நாம் பாதுகாப்பாக வாழும் நமது உரிமையைக் கொன்று விடும் நடவடிக்கையாக அது ஆகிவிட்டது. இஸ்ரேல் மக்களில் நிதானமிக்க பெரும்பான்மையினரை இஸ்ரேலில் ஒரு சிறு குழுவினராகச் செயல்படும் தீவிரவாதப் போக்கினர், அழிவிற்கு இட்டுச் செல்கின்றனர்."

இந்த தீவிரவாத வலதுசாரிக் கும்பலில் சில முன்னணி பிரமுகர்களை கேர்னல் ரான்னன் அடையாளம் காட்டியுள்ளார். அரசியலில் தலையிட்டதன் மூலம் விமானிகள் தங்களது இராணுவ சீருடையைக் களங்கப்படுத்தி விட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு கேர்னல் ரான்னன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

"விமானப்படை தளபதி குடியேற்றங்களுக்கு (சியோனிச) ஆதரவாக, ஷரோனின் லிக்குட் கட்சி மாநாட்டில், ஷரோனுக்கு அருகில் அமர்ந்து கொண்டு பேசியுள்ளார். இது அரசியல் ஆகும். இஸ்ரேலுக்கு ஒரு பாதுகாப்பு மந்திரி இருக்கிறார். அவர்தான் முப்படைகளின் தளபதி, என்றுமில்லாத வகையில் மிகவும் அரசியல் கொண்டதாகும். கீழ்நிலை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என்று சொல்வது பைத்தியக்காரத்தனமாகும். அவர்கள் அர்த்தப்படுத்துவது என்னவென்றால், அரசாங்கத்தின் கருத்தை ஒட்டிச் செல்கிறவரை நாம் அரசியல் பேசலாம் என்பது தான். அது ஜனநாயகம் அல்ல."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved