World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq's illegitimate interim constitution

ஈராக்கின் சட்ட விரோத இடைக்கால அரசியலமைப்பு
By James Conachy
13 March 2004

Back to screen version

மார்ச் 8-ல் ஈராக் நிர்வாக சபையின் (IGC) உறுப்பினர்கள் 25 பேர் அல்லது அவர்களது பிரதிநிதிகள் பாக்தாத்தில் கூடினர். 62 பிரிவுகளைக் கொண்ட "நிர்வாக சட்டம்" அல்லது இடைக்கால அரசியலமைப்பில் கையெழுத்திடுவதற்காக அந்தக் கூட்டம் நடந்தது. அதில் ஈராக் மக்களது ''அடிப்படை உரிமைகள்'' விளக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்படும் ஈராக் அரசாங்கத்திற்கு நாட்டின் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடமிருந்து வெளிவேஷத்திற்கு மாற்றிக் கொடுப்பது பற்றிய படிநிலைகள் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த சம்பவம் வெள்ளை மாளிகைக்கு ஒரு பிரச்சாரத்திற்கு வெற்றிகரமான நடவடிக்கையாக, அமைந்துவிட்டது. நீண்ட காலம், துன்பத்தில் சிக்கித் தவித்த மக்களுக்கு அவர்களை விடுவிக்க வள்ளல் வந்து விட்டதைப் போலவும், நன்றியுணர்வு கொண்ட மக்கள் அமெரிக்காவோடு, இணைந்து பணியாற்றுவதாகவும் ஒரு கற்பனைக் காட்சியில் புஷ் நிர்வாகம் மிதந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, போரை நியாயப்படுத்துவதற்கும் ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் ''வெளியேறுவதற்கு மூலோபாயத்தையும்'' உருவாக்கியிருப்பதாக ஜனாதிபதி புஷ் வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் தன் நாட்டு மக்களை கவர்வதற்காக இது பயன்பட்டது.

இதற்கெல்லாம் மாறாக கற்பனைக்கும் உண்மையான ஈராக்கின் நிலவரத்திற்குமிடையில் இந்த கையெழுத்திடும் நிகழ்ச்சி ஈராக் மக்களுக்கு துயரமாகவும், கபட நாடகமாகவும் அமைந்து விட்டது.

IGC தேர்ந்தெடுக்கப்படாத அமைப்பு ஆகும், ஈராக் மீது சட்டவிரோதமாக படையெடுத்தமை மற்றும் ஆக்கிரமித்துக் கொண்டதுமாகிய நடவடிக்கைகளில் ஏதாவது ஒரு வகையில் எதிர்காலத்தில் ஆட்சி அதிகாரமும் சலுகைகளும், கிடைக்குமென்ற நம்பிக்கையில், அமெரிக்காவோடு, ஒத்துழைத்து வந்தவர்கள்தான் இதில் பெரும்பாலும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஈராக் மக்களிடையே இந்த அமைப்பிற்கு எந்தவிதமான நம்பகத்தன்மையும் இல்லை. அமெரிக்கத் துருப்புக்கள், வெளியேறிவிடுமானால் IGC நீடித்திருக்கமுடியாது என்று அமெரிக்க தளபதிகளே கருத்து தெரிவித்துள்ளனர்.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் வந்துள்ள தகவலின்படி, இடைக்கால அரசியலமைப்பு, பெரும்பாலும் ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள கூட்டணி இடைக்கால நிர்வாகக் கூட்டணி (CPA) தலைவர் போல் பிரேமர் எழுதிய குறிப்புக்களிலிருந்து தயாரிக்கப்பட்டதுதான், அதை ஒப்புதலுக்காக தாக்கல் செய்துவிட்டார்கள்.

அரசியல், தார்மீக அல்லது சட்ட அடிப்படை எதுவுமில்லாமல் ''நிர்வாகச் சட்டத்தின்'' பின்னால் உள்ள நிர்வாகம் ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள 150,000 அமெரிக்க மற்றும் வெளிநாட்டு படைகள்தான். இந்தச் சூழ்நிலைகளில் அந்த ஆவணத்தில் உறுதி செய்து தரப்பட்டுள்ள குடியுரிமைகள் அது அச்சிடப்பட்டுள்ள காகிதத்தின் அளவு கூட மதிப்பு இல்லாதவை.

ஒவ்வொரு நாளும் ஈராக் மக்களது அடிப்படை உரிமைகள் அனைத்தையும், அமெரிக்க துருப்புக்கள் மீறிக் கொண்டிருக்கின்றன. வீடுகளை அடித்து நொறுக்குகிறார்கள் ஆக்கிரமிப்பிற்கு நியாயமான, எதிர்ப்பு தெரிவிப்பதில், பங்கெடுத்துக் கொண்டவர்கள் என்று சந்தேகிக்கப்படுகின்ற மக்கள் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். தெருக்களை சுற்றிவளைத்தும், சாலைகளில் தடைகளை ஏற்படுத்துகிறார்கள். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மக்கள், நடமாட முடியாத அளவிற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பத்திரிகை முன் தணிக்கை செயல்படுத்தப்படுகிறது. வேலை நிறுத்தங்கள் சட்ட விரோதமென்று அறிவிக்கப்பட்டுள்ளன, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுடுவது சாதாரணமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஈராக் பத்திரிகையாளர் முஸ்தபா அல்ராவி, புதனன்று லெபனான் Daily Star பத்திரிக்கையில் மிக உருக்கமாக, "ஓர்வல் (Orwell) கற்பனையாக எழுதிய சிம்ம சொப்பன காட்சிகள், இப்போது ஈராக்கில் உண்மையிலேயே நடந்து கொண்டிருக்கின்றன. கான்கிரீட் தடைக் கற்கள், சோதனைச் சாவடிகள், மற்றும் திடீர் சோதனைகள் இப்போது ஈராக்கில் நடைபெற்றுக் கொண்டுள்ளன" என்று எழுதியிருக்கிறார்.

மார்ச் 7 நியூயோர்க் டைம்சில், அமெரிக்க இராணுவமே, குறைந்த பட்சம் 10,000 ஈராக்கியர்களை, அமெரிக்கா இயக்கும் சிறை முகாம்களில், எந்தவிதமான, குற்றச்சாட்டோ அல்லது வக்கீல்கள் உதவியோ இன்றி காவலில் வைத்திருப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறது. சில கைதிகள், 11 வயது சிறுவர்கள் ஆவர். ''கூட்டணி படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை'' ஆதரித்தவர்கள் என்பதற்காக கிராமங்களில் ஆண்கள் அனைவரையுமே கைது செய்து சென்றிருக்கிறார்கள்.

இடைக்கால அரசியலமைப்பில் கையெழுத்திடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எவரும் இந்தப் பிரச்சனையை எழுப்புவதற்கு கவலைப்படவில்லையே தவிர ஈராக் மக்கள் மீது அமெரிக்க இராணுவம் காலவரையின்றி தனது ஒடுக்குமுறைப் போரை நீடிக்கும் என்பதுதான், வெளிப்படையான அறிவிக்கப்படாத விஷயமாகும். கடந்த 13 ஆண்டு புறநிலையாக ஈராக் மீது அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பு ஜனநாயக அல்லது மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அக்கறைகளால் அல்ல. ஆனால் சதாம் ஹூசைன் ஆட்சிக்குப் பதிலாக தனது நீண்டகால கட்டுப்பாட்டை தனது எல்லைகள் மீதும் எரிவாயு வளங்களின் மீதும், நிலைநாட்டிக் கொள்ள சம்மதிக்கும் ஒரு ஆட்சியை கொண்டுவர வேண்டுமென்பதுதான் நோக்கமாகும். அந்த நாட்டை பிடித்துக்கொண்ட பின்னர், மற்றவர்கள் கரத்தில் அந்த நாடு செல்வதை அனுமதிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் விரும்பவில்லை.

இடைக்கால அரசியலமைப்பின் 59(B) பிரிவு இந்த ஆண்டு இறுதியில் மாற்று அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேர்தல் நடக்கும் போது, 2005 அக்டோபரில் நிரந்தர அரசியலமைப்பிற்கான, பொது வாக்கெடுப்பு நடைபெறும்போது இறுதியாக 2005 டிசம்பரில் முதலாவது அதிகாரபூர்வமான அரசாங்கத்திற்கு தேர்தல் நடந்து முடியும். ஆக இதுபோன்ற பணிகள் பூர்த்தியாகும்வரை, ''அமைதியையும் பாதுகாப்பையும் நிலைநாட்டவும், பயங்கரவாதத்தை எதிர்த்து போரிடுவதற்காகவும்'', "ஒன்றிணைந்த கட்டுப்பாட்டில்" தான் ஈராக்கின் ஆயுதப்படைகள் தொடர்ந்து செயல்படும்.

ஆக அமெரிக்கப்படை வீரர்கள் மற்றும், ஈராக்கில் புதிதாக திரட்டப்பட்டு அமெரிக்கர்களால் பயிற்றுவிக்கப்படும் மற்றும் ஆணையிடப்படும் இராணுவ வீரர்கள் ஆகியோரது துப்பாக்கி முனையில் ஈராக்கியர்கள் ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பார்கள். வெளிநாட்டுப் படைகளின் ஆக்கிரமிப்பை கண்டித்து வருகின்ற, தனி மனிதர்கள் மற்றும் அமைப்புக்கள் -பெரும்பாலான, ஈராக் மக்களின் உணர்வுகளை எதிரொலிப்பவை- தேர்தலில் கலந்து கொள்ள முடியாமல் தடைவிதிக்கப்படும்.

அமெரிக்காவின் போர் நோக்கங்களில் பிரதான அம்சங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் ஒரு நிகழ்வுப்போக்கை இந்த அமைப்பின் மூலம் உருவாக்கிவிட முடியுமென்று புஷ் நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அமெரிக்க நலன்களுக்கு கடமைப்பட்ட ஒரு அரசாங்கம் ஈராக்கில் பதவியில் அமர்த்தப்படும்போது, அந்த அரசாங்கம் ஈராக்கின் எண்ணெய் தொழிலையும், இதர பெரிய சொத்துக்களையும் அமெரிக்க கம்பெனிகளுக்கு விற்க கையெழுத்திட்டுவிடும். அத்துடன் நாட்டில் நிரந்தரமாக தனது தளங்களை அமைத்துக்கொள்ள அமெரிக்க இராணுவத்திற்கு அழைப்பு விடுக்கும். அதிகம் விளக்கப்படாத 59(6) பிரிவு தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசாங்கம் ஈராக்கில் வெளிநாட்டுப்படைகள் காலவரையின்றி நீடிப்பதற்கு அனுமதி வழங்கும், ''சர்வதேச ரீதியான கட்டுப்படுத்தும் உடன்படிக்கைகளை'' உருவாக்கிக் கொள்ள அதிகாரம் அளிக்கிறது.

மார்ச் 8-ல் கையெழுத்திடும் முயற்சிக்கு முன்னர் நடைபெற்ற சம்பவங்கள் வெள்ளை மாளிகையின் கருத்துக்களை எதிரொலிக்கின்றன. அவற்றை மிகப் பெரும்பாலான அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபனங்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன - இவை தெளிவான சுய ஏமாற்றாகும்.

IGC-ல் பதட்ட நிலை

ஜனநாயக முறையில் பொதுக் கருத்தும், முன்னேற்றகரமான நிலையும் உருவாவதற்கு பதிலாக, அமெரிக்கா உருவாக்கப்போகும் அரசின் தன்மை பற்றிய தங்களின் பகை உணர்வுகளையும் கவலைகளையும் வெளிப்படுத்துகின்ற ஈராக்கின் செல்வந்தத் தட்டின் போட்டிக் குழுக்களுக்கான களமாக இப்பத்திரத்தை ஏற்றுக் கொள்வதற்கான IGC- ன் ஆழ்ந்த சிந்தனை மாறிவிட்டது. அமெரிக்கா உருவாக்கியுள்ள நவ-காலனித்துவ தன்மை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ள, அவர்களது கைக்கூலிகளுக்கிடையிலேயே ஓரளவிற்கு கவலையை உருவாக்கியுள்ளது.

எதிர்பாராத ஒரு வட்டாரத்திலிருந்து, மிகவும் வெளிப்படையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அமெரிக்க ஆதரவு பெற்ற ஈராக் தேசிய, காங்கிரஸ் (INC) தலைவர் அஹமது சலாபி IGC உறுப்பினராவார். செவ்வாயன்று அமெரிக்காவின் தேசிய பொது வானொலிக்கு பேட்டியளித்தார். தேர்ந்தெடுக்கப்படாத ஒர் அமைப்பு என்பதால் ஈராக் மக்களை அது கையெழுத்திட்டுள்ள அரசியலமைப்பை சட்டபூர்வமானதென்று ஏற்றுக் கொள்ள செய்ய இயலாது என திரும்ப திரும்ப சலாபி வலியுறுத்திக் கூறினார்.

"இது சிக்கலானது, மிகப் பெரும்பாலான மக்கள் அதை விரும்பத்தக்கதல்ல என்று கூறிவிடுவார்களானால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தேசிய நாடாளுமன்றம் அதை தள்ளுபடி செய்யலாம். இந்த அரசியல் சட்டம் நாடு பிறர் பிடியிலிருந்தபோது உருவாக்கப்பட்டது. எனவே அதை நாங்கள் விரும்பவில்லை என்று இறையாண்மை கொண்ட ஈராக் அரசாங்கமும், இறையாண்மை கொண்ட ஈராக் நாடாளுமன்றமும் அறிவிக்கலாம். இப்போது நாம் செய்யக் கூடியது என்னவென்றால் மக்களுக்கு நாம் என்ன செய்கிறோம் என்பதை தெளிவாக விளக்கிவிடுவோமானால் அதன் மூலம் நமது முயற்சிகளுக்கு அதிகமான ஆதரவை திரட்ட முடியும். அப்படி திரட்டுவது அவசியம்". என்று அவர் கூறினார்.

சலாபியை போன்ற ஒருவர் அமெரிக்க, திட்டங்களின் சாத்தியக்கூறு குறித்து பகிரங்கமாக, ஆட்சேபனைகளை எழுப்பியிருக்கின்ற உண்மை, ஈராக்கில் நிலவுகின்ற கொந்தளிப்பையும், ஆக்கிரமிப்புக்கு நிலவுகின்ற ஆழமான எதிர்ப்பையும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. IGC-ல் வேறு எவரையும் விட சலாபி ஒரு அமெரிக்க கைப்பொம்மை. ஒரு பணக்கார, மன்னராட்சி ஆதரவாளர்களான ஷியா குடும்பத்தைச் சேர்ந்த அவர் 1958-ம் ஆண்டில் ஈராக்கிலிருந்து தப்பி ஓடினார். அவரும் அவரது அமைப்பும் அமெரிக்க படையெடுப்பு மூலம் ஈராக்கில் தாங்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விட முடியும் என்று அதிகம் எதிர்பார்த்தனர்.

2002 முழுவதிலும் INC ஈராக்கிடம் இன்னும் பேரழிகரமான ஆயுதங்கள் உள்ளன என்ற புஷ் நிர்வாகத்தின் பொய்யை உறுதிப்படுத்துவதற்கு, தவறான அறிக்கைகளை தருவதில் உயிர்நாடியான பங்களிப்பு செய்திருக்கின்றது. எந்த அளவிற்கு வெள்ளை மாளிகை INC -ன் பங்களிப்பை மதிக்கிறது என்பதை வியாழனன்று அம்பலப்படுத்துகின்ற வகையில் பென்டகன் ''புலனாய்வு தகவலை திரட்டுவதற்காக'' இன்றைக்கும் மாதம் 340,000 டாலர்களை INC-க்கு வழங்குகிறது என்பது அம்பலத்திற்கு வந்தது.

ஒரு கைப்பாவை கூட ஓரளவிற்கு, தயக்கமில்லாமல், அரசியல் தற்கொலை செய்து கொள்ள மாட்டார். புஷ் நிர்வாகமும் ஊடகங்களும், பொதுவாக ஈராக் மக்கள் அமெரிக்கா பிடித்துக் கொண்டதை ஆதரிக்கிறார்கள் என்று சொல்லுவது ஒரு பக்கம் இருந்தாலும், சலாபியும் அவரைப் போன்ற தலைவர்களையும் தான் சில மாதங்களில் ஈராக் மக்கள் முன் அவர்களது அரசாங்கம் என்று அணிவகுத்துக் காட்டவிருக்கிறது. அவரது கருத்துக்கள் ஒன்றை தெளிவாக எடுத்துரைக்கின்றன. அமெரிக்கா உருவாக்கி திணித்துள்ள ''இறையாண்மை'' கொண்ட அரசாங்கத்தில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பதையும் அத்தகைய திணிக்கப்படும் நடைமுறைகளை ஈராக் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளன.

இதற்கு முன்னர் இரண்டு முறை இடைக்கால, அரசியலமைப்பில் ஒப்புதல் கையெழுத்திடும் நிகழ்ச்சியானது, சலாபி உட்பட IGC -ன் ஷியைட் உறுப்பினர்கள் பகிரங்கமாக மறுப்புத் தெரிவித்ததால் அவ்வாறு தள்ளி வைக்கப்பட்டது. அவர்களது ஆட்சேபனைகள் குறிப்பிட்ட பிரிவுகள் அல்லது உட்பிரிவுகள் சம்பந்தப்பட்டவை. மிக அடிப்படையான ஒரு நிலவரம் என்னவென்றால், IGC- க்குள்ளேயே நடுக்கம் அதிகரித்து வருகிறது. ஏனென்றால் ஈராக் மக்கள் எரிமலை போன்று கொந்தளித்து கிளம்புகின்ற கட்டம் உருவாகி கொண்டிருக்கிறது.

ஈராக்கை ''விடுவித்தமை" தொடர்பாக அமெரிக்கா மேற்கொண்டுவரும் பிரச்சாரத்திற்கு முரணாக அனைத்து அரசியல் பிரமுகர்களும் முதலாவது வளைகுடா போரிலிருந்து அமெரிக்கா கடைபிடித்து வரும் கொள்கைகளின் தாக்கத்தால் பரவலாக எதிர்ப்புணர்வு நிலவுகிறது என்பதை நேரடியாக அறிந்திருக்கின்றனர். ஈராக் பிடிக்கப்பட்டிருப்பதற்கு நிலவுகின்ற விரோத உணர்வின் மிகத் தெளிவான அடையாளந்தான் தினசரி அமெரிக்க துருப்புக்கள் மீதும், ஈராக் பாதுகாப்பு படைகள் மீதும் நடத்தப்பட்டு வருகின்ற கொரில்லா தாக்குதல்கள். அமெரிக்கா விளைவித்துவிட்ட சமூக சீரழிவுகள் குறித்து படிப்படியாக வளர்ந்து கொண்டு வருகின்ற ஆவேசம் நீண்டகால அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

24 மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில் 12 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் வேலையில்லாமல் இருக்கின்றனர். CPA ஈராக்கின் இலாபம் குவிக்கும் எண்ணெய் தொழிலை சீரமைப்பதற்கு மற்றும் புதிய போலீஸ் படையை உருவாக்குவதற்கு மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டு வருகின்ற நேரத்தில், நாட்டின் பெரும்பகுதியில் உறுதியான மின்சார விநியோகம் இல்லை, பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீர் இல்லை, கல்வி நிலையங்கள் மற்றும் சுகாதார பணிகள் சீராக நடைபெறவில்லை, தெருக்களில் அச்சமின்றி நடமாட முடியவில்லை. ஈராக் மக்கள் சதாம் ஹூசைனின் முந்தைய ஆட்சிக்காக ஏங்கவில்லை, ஆனால் இந்த நிலவரங்களுக்கு அமெரிக்காதான் காரணமென்று நியாயமான முறையில் குற்றம் சாட்டி வருகின்றனர்.

வகுப்புவாதம் ஊக்குவிப்பு

தற்போது மக்களது ஆவேசம் இன மற்றும் வகுப்புவாத அடிப்படையில் அமைந்த கோரிக்கைகளின் பக்கம் பிற்போக்குத்தனமாக திருப்பிவிடப்பட்டிருக்கிறது. எதிர்கால ஈராக் அரசாங்கத்திற்குள் தங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்குமாறு அமெரிக்காவை நிர்பந்திப்பதற்காக ஷியைட் மத குருமார்களும், குர்திஸ் செல்வந்த தட்டினரும் மக்களது அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று வருகிறார்கள்.

நாட்டின் சட்ட நெறிமுறைகளின் ''அடிப்படை ஆதாரமாக'' இஸ்லாமிய ஷரியா சட்டத்தை பிரகடனப்படுத்த வேண்டும் என்று ஷியைட்டுகளின் உயர் தலைவர் அயத்துல்லா-அல்-சிஸ்தானி விடுத்த அழைப்பை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால் IGC கூட்டத்தில் ஷியா உறுப்பினர்கள், முதலாவது வெளிநடப்பு நடவடிக்கையில் இறங்கினர். அதற்குப் பின்னர் ஒரு வாரம் மிக பரபரப்போடு பேரம் பேசப்பட்டது, விவாதங்கள் நடத்தப்பட்டன. இறுதியாக உருவாக்கப்பட்ட திருத்தப்பட்ட வாசகத்தின்படி இஸ்லாத்தில் ''அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ள நெறி'' முறைகளுக்கு முரணாக எந்த சட்டமும் இயற்றப்படக் கூடாது என்ற வாசகம் சேர்க்கப்பட்டது. இதை ஷியா மத போதகர்கள் சட்டங்களை ரத்து செய்வதற்கு தங்களிடமுள்ள ஆயுதமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று இப்போது விளக்கம் தரப்பட்டு வருகிறது.

இதற்குப் பின்னர் மார்ச் 5-ல் சிஸ்தானி கடைசி நேரத்தில் தெரிவித்த திருத்தத்தையொட்டி, இடைக்கால அரசியல் சட்டத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியை 5 ஷியைட் உறுப்பினர்கள் புறக்கணித்தனர். அக்டோபர் 2005-ல் நடைபெறவிருக்கும், நிரந்தர அரசியலமைப்பு தொடர்பான பொது வாக்கெடுப்பில் ஈராக்கின் 18 மாகாணங்களில் 3 மாகாணங்களைச் சேர்ந்த வாக்காளர்களில் மூன்றில் இரு பகுதியினர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டால் அந்த அரசியல் சட்டம் செல்லாது என்ற பிரிவை சிஸ்தானி எதிர்த்தார்.

ஈராக் மக்களில் 60 சதவீதம் பேர் ஷியைட்டுக்கள். அவர்கள் இன அடிப்படையில் அணிதிரட்டப்பட்டால், ஷியா கட்சிகள் ஈரான் பாணி மத அடிப்படை அரசை ஆதரிக்கின்ற கட்சி உட்பட எதிர்கால நாடாளுமன்றங்களில் பெரும்பான்மையான இடங்களை பிடித்துக்கொள்ள முடியும். ஷியைட்டுக்களின் எதிர்பார்ப்புக்களை மட்டுப்படுத்துகின்ற வகையில் பொது வாக்கெடுப்பு பற்றிய பிரிவு அமைக்கப்பட்டிருக்கிறது. ஷியைட்டுக்களை பெரும்பான்மையினராக கொண்ட நாடாளுமன்றம் உருவாக்கும் இறுதி அரசியல் சட்ட நகலை மத்திய ஈராக்கிலுள்ள சுன்னிகள் பெரும்பான்மையினராயிருக்கின்ற பிராந்தியம் அல்லது வடக்கிலுள்ள மூன்று குர்து மாகாணங்கள் தடுத்து நிறுத்தி விடமுடியும். பொதுவாக இந்த அரசியலமைப்பின் கூட்டாட்சித்தன்மை வடக்கில் குர்து தன்னாட்சிக் கட்டுப்பாட்டை நிலை நாட்டுகிறது. மத்திய ஷியைட்டுக்கள் மத்திய அரசாங்கத்தில் மேலாதிக்கம் செலுத்த எதிர்பார்ப்பதை பலவீனப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

IGC உறுப்பினர்களில் அதிருப்தி கொண்ட ஷியைட் உறுப்பினர்கள், தங்களது கருத்துக்களை மாற்றிக் கொள்வதற்கு என்ன வழிகள் கையாளப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால் குர்துகளுக்கு வழங்கப்பட்ட கூட்டாட்சி அடிப்படையிலான சலுகைகள் அப்படியே நீடிக்கின்றன. இடைக்கால அரசியல் நிர்ணய சட்டம் தொடர்பாக ஷியைட் மத குருமார்களின் ஏமாற்றத்தை எடுத்துக் காட்டுகின்ற வகையில் திங்களன்று சிஸ்தானி மத ஆணை அல்லது பட்வா ஒன்றை வெளியிட்டார். "இந்த சட்டம் நாட்டிற்கு நிரந்தர அரசியலமைப்பை உருவாக்கும் பாதையில் தடைக் கற்களை உருவாக்கியுள்ளது. நாட்டின் ஒற்றுமையையும் எல்லா பிரிவுகள் மற்றும் இன பின்னணி உள்ளவர்களது உரிமைகளையும் நிலைநாட்டும் வகையில் அரசியல் சட்டத்தை நிரந்தரமாக உருவாக்குவதற்கு இந்த இடைக்கால அரசியலமைப்பு தடைக்கல்லாக உள்ளது" என்று அந்த கட்டளையில் குறிப்பிட்டிருக்கிறார்.

குர்திஷ் கட்சிகளும், ஏற்பட்டுள்ள முடிவு குறித்து கசப்படைந்துள்ளன. 1991-ற்கு பின்னர் பாக்தாத்திற்கெதிராக அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பிற்கு அவர்கள் உதவியது, வடக்கு ஈராக்கிலும் கிர்குக் நகரிலும், அதற்கெல்லாம் மேலாக சுற்றியுள்ள வளமான, எண்ணெய் கிணறுகளின் மீதும் தங்களது கட்டுப்பாட்டை நிலைநாட்டிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான். வடக்கில் மட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி உரிமை அவர்களுக்கு, வழங்கப்பட்டிருக்கிற அதேவேளை, கிர்குக் மற்றும் எண்ணெய் வருமானத்தில் ஏக போக உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. பெப்ரவரியில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் IGC குர்திஷ் உறுப்பினர் முஹமது உதுமான், மிக ஆவேசமாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும்போது, "நான் எனது மக்களிடம் திரும்பிச் சென்று அவர்களிடம் இந்தக் கருத்துக்களை சொல்லி இவற்றை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்வேனானால் என்னுடைய கழுத்தை நெரித்து விடுவார்கள். பிரேமரே அவர்களிடத்தில் சென்று சொல்லட்டும்" என்று குறிப்பிட்டார்.

இடைக்கால அரசியலமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும், பல்வேறு குழுக்களிடையே வேறுபாடுகள் கூர்மையாவதற்கான சாத்திய கூறுகள் இப்போது உருவாகியுள்ளன. அந்த இடைக்கால சட்டத்திலிருந்து உருவாகும் எந்த அரசாங்கமும் அதில் திருத்தங்களை கொண்டு வர முயன்றால், என்னவாகும் என்பதை சிஸ்தானியின் பட்வா மிக கடுமையாக எச்சரித்துள்ளது. "இடைக்காலத்தில் உருவாக்கப்படும் எந்த சட்டமும் சட்டப்படி செல்லுபடியாகாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நாடாளுமன்றம் அங்கீகரிக்கும் சட்டம்தான் செல்லுபடியாகும்" என்று எச்சரிக்கிறது.

இந்த குறுங்குழுவாத மற்றும் இனக்குழு இயக்கங்கள் எதுவும் ஈராக் மக்களை எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு முற்போக்கான மற்றும் ஜனநாயக முறையில் தீர்வு எதுவும் கண்டுவிட முடியாது. பால்கன் நாடுகளைப் போல், வகுப்பு வாதத்தின் தர்க்க ரீதியான முடிவு சகோதரர்களுக்கிடையில், கொலை வெறி மோதலாகத்தான் முடிவடையும். அதனால் ஈராக்கிற்குள்ளேயும், பரவலாக மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.

முக்கிய பிரச்சனை என்னவென்றால், தொழிலாள வர்க்கத்தின் சமூக சமத்துவத்தையும், சர்வதேச ஐக்கியத்தையும் அடிப்படையாகக் கொண்ட உண்மையான சோலிச இயக்கத்தை, மத்திய கிழக்கிலும் ஈராக்கிலும் வளர்த்தெடுக்கப் போராட வேண்டும். அமெரிக்க ஆக்கிரமிப்பு, அது நியமிக்கும் சட்டவிரோத அரசாங்கம் மற்றும் பல்வேறுபட்ட வகுப்புவாத கிளர்ச்சியாளர்கள் ஆகியோருக்கு எதிராக அனைத்து பின்னணிகளையும் சார்ந்த பொதுமக்களை அத்தகைய இயக்கம் மட்டுமே ஒன்றுபடுத்த முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved