World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US shuts down anti-occupation Iraqi newspaper

ஆக்கிரமிப்பு எதிர்ப்பு ஈராக்கிய பத்திரிகையை அமெரிக்கா மூடியது

By James Conachy
30 March 2004

Back to screen version

ஈராக்கிய வாரப்பத்திரிகையான Al-Hawza, அமெரிக்க அதிகாரிகளால் மூடப்பட்டதை கண்டித்து பாக்தாத் நகர தெருக்களில் ஞாயிறன்று ஷியா மதபோதகர் Muqtada-al-Sadr- ன் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் அணிவகுத்து வந்து கண்டன பேரணியை நடாத்தினர். Sadr இன் ஆசிரிய செல்வாக்கின் கீழ் அந்த வாரப் பத்திரிக்கை வெளியிடப்பட்டது. அந்த பத்திரிகை அலுவலகத்திற்கு வெளியில் பீதியுடன் நின்ற அமெரிக்க துருப்புக்களுக்கும், ''இப்போது ஜனநாயகம் எங்கே?'' என்று ஆத்திரத்துடன் கேட்ட ஈராக் மக்களுக்குமிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அன்றையதினம், அமெரிக்க கட்டுப்பாட்டிலுள்ள கூட்டணி இடைக்கால நிர்வாக (CPA) தலைவரான போல் பிரேமர் நேரடி கட்டளையின்படி, அமெரிக்கத்துருப்புக்கள் Al-Hawza பத்திரிகை அலுவலக கதவுகளை சங்கிலிகளால் கட்டி மூடினர். 60-நாட்களுக்கு இந்தத்தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க கட்டளையை மீறி அந்த பத்திரிகை வெளியிடப்படுமானால் அந்த பத்திரிகை ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஒராண்டுவரை சிறைதண்டனை விதிக்கப்படும் மற்றும் 1,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும்.

பத்திரிகைகள், கூட்டணிப் படைகளுக்கு எதிரான வன்முறையை தூண்டிவிடுதன் மூலம் குழப்பத்தை விளைவிக்க முயன்றால் அவற்றிற்கு தடைவிதிக்கப்படும் என்று கூறும் அமெரிக்கா கொண்டுவந்துள்ள சட்டம், சுமார் 50,000-பிரதிகள் விற்கின்ற அல் ஹவாசா வாரப்பத்திரிகை சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதாக CPA- குற்றம் சாட்டியுள்ளது. அந்தப் பத்திரிகை பெப்ரவரி 26-ல் பிரசுரித்த இரண்டு கட்டுரைகளில் வன்முறை தூண்டப்பட்டிருப்பதாக" கூறப்பட்டது. முதலாவது கட்டுரை பெப்ரவரி 10-ந்தேதி இஸ்கந்திரியா நகரத்தில் 53- ஷியாக்கள் மடிந்தது, அமெரிக்க இராணுவம் குற்றம் சாட்டியிருப்பதைப் போல் பயங்கரவாத குண்டு வெடிப்புக்களால் நடந்ததல்ல, மாறாக அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மூலம் வீசப்பட்ட ராக்கெட்டில் நடந்ததென்று குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது கட்டுரை "சதாம் வழியில் பிரேமர் நடைபோடுகிறார்" என்ற தலைப்பில் எழுதப்பட்டிருந்தது. ஈராக் மக்களின் ஜனநாயக உரிமைகளை எந்த அளவிற்கு அமெரிக்கா ஆக்கிரமிப்புப்படைகள் நசுக்கி வருகின்றன என்பது அந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டிருந்தது.

CPA சார்பில் குரல்தரவல்ல Al-Elsadr வாஷிங்டன் போஸ்ட்- க்கு தகவல் தரும்போது ''அந்த பத்திரிகையின் தவறான தகவல் நாட்டின் அமைதியை கெடுக்கிறது. அது ஏராளமான வெறுப்புணர்வை தூண்டிவிடுகிறது. மக்களை கொன்று குவிப்பதற்கு நாங்கள் தயாராகி வருவதாக மக்கள் சிந்திக்கவேண்டும் என்பதுபோல் எழுதிவருகிறது. உண்மையிலேயே கூட்டணிப்படைகள் தங்களை கொன்று குவிப்பதாக மக்கள் கருதுவார்களானால் அது உண்மையிலேயே ஆபத்தானது. அது தூண்டிவிடும் செயல்தான்'' என்று விளக்கினார்.

உண்மையிலேயே, Al-Hawza சதாம் ஹூசைன் வழியில் அமெரிக்கா செல்கிறதென்று குற்றம்சாட்டியிருப்பது, பல ஈராக்கியரின் அனுபவத்தையும் கருத்துக்களையும் எதிரொலிப்பதுதான். அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் ஈராக் மக்களுக்கு எந்தவிதமான உரிமைகளும் இல்லை. நூற்றுக்கணக்கான சிவிலியன்கள், திடீர் சோதனைகளில், சோதனைச்சாவடிகளில் அல்லது கண்டனப் பேரணிகளின்போது சுட்டுக்கொல்லப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்களை அவர்களது வீடுகளிலிருந்து அமெரிக்கப்படைகள் இழுத்து வந்து சிறை முகாம்களில் அடைக்கிறார்கள். பல ஆண்டுகள் பொருளாதாரத் தடைகளாலும், போரினாலும், அந்த நாடு அழிந்துவிட்டது. ஏராளமான சமூக பிரச்சனைகள் பெருகியுள்ளன. அவற்றை கவனிப்பதற்கு அமெரிக்கா எந்த முயற்சியும் செய்யவில்லை.

எந்த நேரத்திலும் ஈராக்கில் சமுதாய கொந்தளிப்பு வெடிக்கும் நிலை இருப்பதால் அமெரிக்க அதிகாரிகள் எதிர்ப்புகளை ஒடுக்கிவருகிறார்கள். கண்டனங்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கிறார்கள். பத்திரிகையாளர்கள், குறிப்பாக உண்மையான நிலவரங்களை வெளியிட முயலுபவர்கள் மிகுந்த சங்கடத்தில் உள்ளனர். சென்ற ஆண்டு ஈராக்கில் 13-பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் மிகப்பெரும்பாலோர் அமெரிக்க துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானவர்கள். இரண்டு சந்தர்ப்பங்களில், அமெரிக்கா அல்-ஜெசீரா மற்றும் அல்-அராபியா அரபுமொழி தொலைக்காட்சி சேவைகளில் இடையூறுசெய்ய முயன்றிருக்கிறார்கள். அவை "வன்முறையை தூண்டுவதாக" குற்றம் சாட்டினார்கள்.

Sadr பத்திரிகை மூடப்பட்டது தொடர்பாக கருத்துத்தெரிவித்த, ஈராக்கிய சுதந்திர பத்திரிகையாளர் ஓமர் ஜெசீம், வாஷிங்டன் போஸ்ட் நிருபரிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, "இது ஜனநாயகத்தில் புஷ்ஷின் பதிப்பு என்று நான் கருதுகிறேன்'' என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவிற்கெதிராக நெருக்கடி மிகவேகமாக வளர்ந்து கொண்டு வருகின்ற நிலையில் Al-Hawza மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஷியா மத தலைவர்களில் மிகப்பெரும்பாலோர் முன்னணி மத போதகர் Ali-Al- Sistani உட்பட CPA மார்ச் 8-ல் அறிவித்துள்ள இடைக்கால அரசியல் சட்டத்தை ஏற்க முடியாதென்று அறிவித்துவிட்டனர். ஷியா மதபோதகர்களின் பல கோரிக்கைகளை உள்ளடக்கிய புதிய அரசியல் சட்டம் எழுதப்பட வேண்டும் என்று கோரி ஒவ்வொரு மசூதியிலும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. ''இந்த இடைக்கால அரசியல் சட்டம் சட்ட விரோதமானது ஏனெனில் சாதாரண ஈராக் மக்களின் நம்பிக்கையை பெறாத நிர்வாகிகளால் இயற்றப்பட்டது'' என்று அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்ற ஷியா மத போதகர்களில் Sadr மிக கடுமையாக அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு கண்டனம் செய்து வருகிறார். பாக்தாத் நகரத்திலுள்ள பெரும்பாலான ஏழை ஷியாக்களிடம் அவருக்கு கணிசமான ஆதரவு இருக்கிறது. 31-வயதாகும் அவர் உடனடியாக அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற வேண்டுமென்று கோருகிறார். நாட்டின் கட்டமைப்பு வசதிகள் சீர்குலைவதற்கு அமெரிக்காதான் காரணமென்று கண்டனம் செய்து வருகிறார். பாக்தாத்தின் கிழக்குப்பகுதி Sadr நகரம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. அவரது தந்தை Mohammed Sadek Al- Sadr 1999-ல் சதாம் ஹூசைன் கட்டளைப்படி கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. 10,000-பேர் அடங்கிய Medhi போராளி இராணுவம், இவருக்கு விசுவாசமுள்ளது. அந்த பகுதியிலுள்ள பரவலான குடிசைப்பகுதிகளில் தனது ஆதிக்க கட்டுப்பாட்டை நிலைநாட்டி வருகிறார். Sadr புனித நஜாப் நகரில் பிரதான ஷியா அடித்தளத்தில் செல்வாக்குள்ளவர், அங்குதான் அவர் வாழ்ந்து வருகிறார்.

Sadr- ன் போராளிகளது ஆயுதங்களை பறிமுதல் செய்து முன்னணி மதபோதகர் ஒருவரை கைது செய்வதற்கு CPA முயன்றபோது சென்ற அக்டோபரில் கர்பலாவிலும், பாக்தாத்திலும் கொந்தளிப்பான நிலை தோன்றியது. அப்போது நடைபெற்ற மோதல்களில் பல Sadr- ன் வீரர்களும் அமெரிக்க துருப்புக்களும் கொல்லப்பட்டனர். அந்தநேரத்தில் Sadr-க்கு தடைவிதிக்க வேண்டாமென்று அமெரிக்கா முடிவு செய்தது. இந்த வாரம் Al-Hawza மூடப்பட்டிருப்பது Sadr- ன் அமைப்போடு அமெரிக்கா நேரடியாக மோதுவதற்கு முதல் நடவடிக்கையாக இருக்கக்கூடும். இடைக்கால அரசியல் அமைப்புக்கு எதிராக ஷியாக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதை மட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமையலாம். பத்திரிகையின் அடுத்த இதழ் இந்தப் பத்திரத்தைக் கண்டனம் செய்வதும் அதற்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஆதரவாக ஷியைட்களை அழைப்பதாகவும் இருக்கும்.

ஆளும் தட்டின் ஒரு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் Sadr ஈராக்கில் படுமோசமான வறுமையில் சிக்கியுள்ள மக்களை பிற்போக்குத்தனமான இஸ்லாமிய ஆட்சி என்ற வழியில் அழைத்துச்செல்ல திட்டமிடுகிறார். சதாம் ஹூசைனின் மதச்சார்பற்ற பாத் ஆட்சியை அமெரிக்கா கவிழ்த்துவிட்டதால் ஷியா மத போதகர்கள் ஆட்சிக்கு வருவதற்கு சிறந்த சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு மத அடிப்படையிலான அரசை உருவாக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அவர் கருதுகிறார்.

அமெரிக்காவின் நடவடிக்கைகளால் அவரது செல்வாக்கு, ஈராக் மக்களிடையே வளரத்தான் செய்யும். நேற்று பாக்தாத்தில் Al-Hawza விற்கு ஆதரவாக ஆவேசமான அதே நேரத்தில் அமைதியான ஆர்பாட்டங்கள் நடக்கத்தான் செய்தன. Sadr-ன் பிரதிநிதியான Sheikh Mahammed Sudani AFP க்கு பேட்டியளிக்கும் போது, ''எங்களது பத்திரிகை மீண்டும் திறக்கப்படும்வரை எங்களது கண்டனத்தை தொடர்ந்து நடத்த உறுதியுடன் இருக்கிறோம்'' என்று கூறினார். அந்த பத்திரிகையின் ஆசிரியர் வாஷிங்டன் போஸ்ட் நிருபரிடம், ''அந்தக் கதவில் மாட்டப்பட்டிருக்கிறதே அந்தச் சங்கிலிதான் சுதந்திரத்திற்கான அமெரிக்காவின் அடையாளச் சின்னங்களில் ஒன்று. இதுதான் அரசியல் சுதந்திரமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?'' என கேட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved