World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The Democrats and "Bush's war"

ஜனநாயகக் கட்சிக்காரர்களும் "புஷ்ஷின் போரும்"

By the Editorial Board
9 April 2004

Back to screen version

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கெதிராக தேசிய எதிர்ப்புப்போர் வெடித்திருப்பது அமெரிக்க படையெடுப்பின் கிரிமினல் குணத்தையும், வெட்கக்கேடான காலனி ஆதிக்க முயற்சியில் அமெரிக்க மக்களை இழுத்துச்சென்றதில் முழு அரசியல் அமைப்பினதும் கண்டிக்கத்தக்க செயலையும் வலியுறுத்திக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற கொந்தளிப்புக்களில் குறைந்தபட்சம் 40-கடற்படையினரும் மற்றும் இதர இராணுவத்தினரும் மடிந்திருக்கின்றனர். ஈராக்கியர்களில் மடிந்தவர்கள் எண்ணிக்கையை ஆக்கிரமிப்பு அதிகாரிகள் கணக்கிடுவது கூட இல்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் நிராயுதபாணிகள் என்பதால் நெரிசல்மிக்க நகரப்பகுதிகளில் ராக்கெட்டுகள், குண்டுகள் மற்றும் கனரக இயந்திர துப்பாக்கிகளால் நடத்தப்பட்ட தாக்குதலால் 1000-ற்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஈராக் முழுவதிலும் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

சுன்னிக்கள் முக்கோணம் என்று கூறப்படும் பகுதிகளிலிருந்து பெரும்பாலும் ஏழைமக்கள் வாழ்கின்ற பாக்தாத் குடிசைப்பகுதிகளுக்கும் பெரும்பாலும் ஷியாக்கள் வாழ்கின்ற தெற்கு ஈராக் நகரங்களுக்கும் கலவரம் பரவியிருப்பது, வாஷிங்டனின் வேடத்தை ஈராக் மக்களது நம்பிக்கையை வென்றெடுத்துவிட்டதாகவும் நாட்டில் தன்னாட்சி அமைப்புக்களை உருவாக்கி இருப்பதாகவும் கூறும் பாசாங்குகளை பொய்யாக்கியிருக்கிறது.

அதற்கு மாறாக தினசரி வெளிநாட்டு ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட தலைகுனிவு, அத்துடன் அமெரிக்க ஒப்பந்தக்காரர்கள் கொள்ளைலாபம் அடிப்பது மற்றும் ஈராக் எண்ணெய் வளத்தை சுரண்டுவதற்கு அமெரிக்கா கொண்டுள்ள எண்ணம் பெரும் சீற்றத்தையும் கிளர்ச்சி மனப்பான்மையையும் தோற்றுவித்திருக்கிறது.

வெள்ளை மாளிகையில் புஷ் நிர்வாகம் பதவியில் அமர்த்தப்பட்டது முதல் ஈராக்கில் நடைபெற்றுவரும் கொந்தளிப்பான சம்பவங்கள் ஆழமான நெருக்கடியை உருவாக்கியுள்ளன. கருத்துக்கணிப்புக்கள் பெரும்பாலான அமெரிக்க மக்கள் ஜனாதிபதியின் ஈராக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை கோடிட்டுக்காட்டுகின்றன. மற்றும் அந்த நாட்டிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்கர்களிடையே வளர்ந்து வருகிறது.

நகரங்கள் முழுவதும் கிளர்ச்சிக்காரர்கள் கைக்குள் வந்துகொண்டிருக்கின்றன. பலூஜாவில் வீட்டுக்கு வீடு தெருச்சண்டைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. பெரும்பாலும் ஊழல் மலிந்த ஒத்து ஊதுகின்ற ஊடகங்கள் புஷ் நிர்வாகத்தின் தகவல்களை கிளிப்பிள்ளைகள் போல் அப்படியே சொல்லிக்கொண்டிருக்கின்றன. அமெரிக்க இராணுவம் ஒரு சிறிய "குண்டர்கள்" மற்றும் "பயங்கரவாதிகள்" குழுவைத்தான் சந்தித்து வருவதாக மற்றும் "அந்தப் போக்கை தொடரப்போவதாகவும்" புஷ் நிர்வாகம் கூறிவருவதை எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.

நிர்வாகத்தின் அரசியல் எதிரணியினர் என்று சொல்லிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சியின் நிலை என்ன? அவர்கள் ஈராக் எழுச்சியின் தன்மை குறித்து நிர்வாகம் கூறிவரும் பொய்களை அம்பலப்படுத்தினார்களா? அமெரிக்க மக்களது பெயரால் நடத்தப்பட்டுவரும் அட்டூழியங்களை கண்டிக்க முன்வந்தார்களா? ஈராக்கில் கொல்லப்பட்டு வருகின்ற உடல் ஊனம் அடைந்து கொண்டிருக்கின்ற, மன உளைச்சலுக்கு உள்ளாகின்ற இளம் அமெரிக்க இராணுவத்தினருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உண்மையான ஆதரவு காட்டுகின்ற வகையில் அவர்கள் ஈராக்கிலிருந்து திரும்பப்பெறப்பட வேண்டும் என்பதற்கு உண்மையான ஆதரவு தெரிவித்தார்களா? இந்தக் கேள்விகளைக் கேட்பது அவர்களுக்கு பதில் சொல்வதற்காகும்.

ஜனநாயகக் கட்சி தலைவர்களுக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. Massachusetts செனட்டர் எட்வார்ட் கென்னடி குடியரசுக் கட்சியின் கோபத்தை சம்பாதித்துக்கொண்டார். ஏப்ரல் 5-ல் அவர் ஆற்றிய உரை ஒன்றில், ஈராக் ஜோர்ஜ் புஷ்ஷின் வியட்நாம் என்று வர்ணித்ததற்காக அவரது கட்சியின் கண்டனத்திற்கு ஓரளவிற்கு இலக்கானார். போருக்கு சாக்குப்போக்கை உருவாக்குவதற்காக நிர்வாகம் WMD- க்கள் பற்றி பொய்சொன்னதாக அவர் குற்றம் சாட்டினார். ஈராக்கில் தலையிட்டதன் மூலம் "உண்மையான பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" இருந்து கவனம் திசை திருப்பப்பட்டுவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் கென்னடி இவ்வளவு கடுமையான கண்டங்களைத் தெரிவித்தாலும் அமெரிக்கா ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஆலோசனை எதையும் கூறவில்லை அல்லது உண்மையிலேயே எந்த மாற்றுக் கொள்கையையும் எடுத்துவைக்கவில்லை.

செனட்டின் இதர முக்கிய ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களான தெற்கு டக்கோட்டாவைச் சேர்ந்த Tom Daschle மற்றும் இண்டியானாவைச் சேர்ந்த Evan Bayh போன்றவர்கள் புஷ் வலியுறுத்திக்கூறிவரும் ஈராக்கில் "போக்கைத் தொடர்தல்" என்பதையே எதிரொலித்து வருகின்றனர். புதனன்று NBC-ன் "டுடே" நிகழ்ச்சியில் பேட்டியளித்த புஷ் அமெரிக்கர்கள் கொல்லப்படுவதற்கும், மடிவதற்கும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். ''இது உண்மையிலேயே விடாமுயற்சிக்கு ஒரு சோதனைக்களமாகும். இது சங்கடம் நிறைந்ததாக இருக்கப்போகிறது, துரதிருஷ்டவசமாக நேற்றைய தினம் போல் நாம் பல துயர தினங்களை சந்திக்க இருக்கிறோம்'' என்று கூறினார்.

லிபர்மன்: "மிதமிஞ்சிய படைவலிமையை" பயன்படுத்தல்

சிலர் புஷ் நிர்வாகம் ஒடுக்குமுறை வன்முறையை தீவிரப்படுத்த வேண்டும் என்றுகூட வலியுறுத்தி வருகின்றனர். ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர், கனெக்டிகட் ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜோ லிபர்மன், ஈராக்கில் "கிளர்ச்சிக்காரர்களோடு போரிடுவதற்கும் சிவில் நிர்வாக கட்டுப்பாட்டை உருவாக்குவதற்கும்" மிகக்குறைந்த அளவிற்கே அமெரிக்க துருப்புக்கள் இருப்பதாக கூறுகிறார். "பவலின் கொள்கைவழியான மிதமிஞ்சிய படைவலிமை ஈராக்கில்" இருக்கவேண்டுமென்று புஷ்ஷைக் கோருகிறார். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செனட்டர் ஜோன் கெர்ரி ஜனாதிபதியுடன் இணைந்து அமெரிக்க இராணுவ வலிமையை பெருக்குவதற்கான திட்டத்தை தீட்டவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ஈராக் பிரச்சனையை கெர்ரி தானே மிக கவனமாக அணுகிக்கொண்டிருக்கிறார். புதனன்று பொருளாதார நிலவரம் பற்றி கெர்ரி உரையாற்றிக்கொண்டிருக்கும்போது ஈராக்கில் அண்மையில் நடந்துவரும் சம்பவங்கள் பற்றி குறிப்பிடவேண்டிய அவசியம் வந்தது. அப்போது அவர் ''ஈராக் கொள்கை அணுகுமுறை தொடர்பாக கருத்துவேறுபாடுகள் எவை இருந்தாலும் -சிலகருத்து வேறுபாடுகள் இருக்கின்றன- நாம் அனைவரும் ஒரு நாடு என்கின்ற முறையில், நமது துருப்புக்களை ஆதரிப்பதில் ஒன்றுபட்டு நிற்கிறோம். மற்றும் இறுதியாக நமது குறிக்கோளான ஸ்திரதன்மை கொண்ட ஈராக்கை உருவாக்க வேண்டும் என்பதிலும் ஒன்றுபட்டு நிற்கிறோம்'' என்று கூறியுள்ளார்.

எவ்வளவு கோழைத்தனம் பாருங்கள்! போருக்கெதிரான முன்னாள் வியட்நாம் போர்வீரர்கள் குழுவின் தலைவராக பணியாற்றி தனது அரசியல் வாழ்வை தொடக்கியவர் கெர்ரி. ஈராக்கில் சிக்கிக்கொண்டுள்ள பெரும்பாலான துருப்புக்கள் அவர்களில் பலர் ஓராண்டிற்கு மேலாகவே அங்கு உள்ளனர். அவர்கள் விரும்புகின்ற "ஆதரவு" தங்களை தங்களது தாய் நாட்டிற்கு அழைத்துவரும் விமானங்களைத்தான் என்பதை அவர் நன்றாகவே அறிந்திருக்கிறார்.

ஈராக் மக்கள் பூச்செண்டு கொடுத்து அமெரிக்க போர் வீரர்களை வரவேற்பார்கள் என்று ஊகித்த நிர்வாகத்தை கெர்ரி கண்டித்தார். அதே நேரத்தில் ஜூன் 30-ல் ஒரு ஐந்தாம்படை அரசாங்கத்திடம் "இறையாண்மையை" ஒப்படைப்பதாக அறிவித்த திட்டத்தை கண்டிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார். அவரது வாதத்தின் உட்பொருள் என்னவென்றால் அமெரிக்காவின் காலனி ஆதிக்க ஆட்சியும் ஒடுக்குமுறையும் நீடிக்கவேண்டும் என்பதுதான்.

இப்படிப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட வட்டத்திற்குள்ளே சுற்றிவருகின்ற கருத்துக்களைத்தான் பிரதான அமெரிக்க தினசரிகளின் முன்னாள் லிபரல் கட்டுரையாளர்களும் எதிரொலித்துள்ளனர்.

வாஷிங்டன் போஸ்ட்-ஐ சேர்ந்த, போரை எதிர்த்து வந்த Harold Meyerson, புதனன்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தும் வகையில், ''ஈராக்கில் வாய்ப்புக்களுக்கு வழியில்லை'' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். புஷ் நிர்வாகத்தின் கொள்கைகள் "பல இன நாட்டை" உருவாக்கும் திட்டத்தை சீர்குலைத்துவிட்டதாக அறிவித்திருக்கிறார். தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர மாற்று எதுவுமில்லை என்று Meyerson முடிவிற்கு வந்துவிட்டார். அவரது தர்க்கப்படி, கிரிமினல் மற்றும் தார்மீக நெறிக்கு முரணான படையெடுப்பு ஆக்கிரமிப்பை நீடிக்கும் தார்மீக கடமையை உருவாக்கியிருக்கிறது.

''ஆனால் இது நாம் போரிட்டாக வேண்டிய சண்டையல்ல என்பதால் தான் நாம் போரை நிறுத்திக்கொண்டு வெளியேறுவது அரசியல் அடிப்படையில் தார்மீக நெறிப்படியும் மோசடி நடவடிக்கையாக அமைந்துவிடும்'' என்று Meyerson எழுதுகிறார். ''தேவையில்லாத நேரத்தில் நாம் ஈராக் கட்டுப்பாட்டை கையில் எடுத்துக்கொண்டோம். இன வன்முறைகள் மிகவேகமாக வளர்ந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அந்த நாட்டின் சொந்த அமைப்புக்களிடம் நிர்வாகத்தை ஒப்படைப்பது மிகவும் ஏமாற்றமளிக்கும் முடிவாகிவிடும். அமெரிக்க மக்கள் முன்னர் மிக தெளிவாகவுள்ள நல்ல அரசியல் கொள்கை வாய்ப்பு என்னவென்றால் இந்த குழப்பத்தில் நம்மை இழுத்துச்சென்ற ஜனாதிபதியை பதவியிலிருந்து விரட்டுவதுதான்'' என்று எழுதுகிறார்.

கெர்ரி நவம்பரில் வெற்றி பெறுவதால் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப்போவதில்லை என்பதை இதைவிட தெளிவாக கோடிட்டுக்காட்டவியலாது.

அதற்குப் பின்னர் வார்த்தையில் வர்ணிக்க முடியாத நியூயார்க் டைம்ஸ் தோமஸ் பிரைட்மன் இருக்கிறார். அவர் போரை மத்திய கிழக்கை ஜனநாயக வழிக்கு இட்டுச் செல்லும் ஒரு பணியாக முன்னிலைப்படுத்தி வருபவர். வியாழன் அன்று அவரது கட்டுரையில் வழக்கமான அவரது மோசடி முட்டாள்தனம், அகந்தைப்போக்கு ஆகியவை கலந்த கலவை இதழியல் முத்திரை வெளிப்படுகிறது.

அந்தப் பந்திக்கு ஆத்திரமூட்டும் வகையில் ''ஈராக்கில் யாராவது ஈராக்கியர் இருக்கிறார்களா?'' என்று தலைப்பிட்டிருக்கிறார். இந்த கேள்வியை ஈராக்கிலுள்ள எந்த அமெரிக்க போர்வீரரும் கேட்பதில்லை. ஏனெனில் ஈராக்கியர் இருக்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். ஏனென்றால் ஈராக்கியர்கள் சுன்னிக்கள் மற்றும் ஷியாக்கள் இணைந்து நின்று அவர்களை சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஈராக் கிளர்ச்சி முழுவதுமே மதவெறியாலும், மதக்குழுக்களாலும் தூண்டிவிடப்பட்டிருக்கிறது என்ற மோசடியோடு பிரைட்மன் தனது கட்டுரையை ஆரம்பிக்கிறார். ஈராக்கில் "அமைதியாக இருக்கும் பெரும்பான்மை'' இந்தக் கிளர்ச்சியை எதிர்ப்பதற்கு முன்வருமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

''தங்களை ஷியாக்கள் என்றோ, சுன்னிக்கள் என்றோ, குர்துகள் என்றோ அடையாளப்படுத்தி கொள்ளாமல் ஈராக் மக்கள் அனைவருக்கும் சுயநிர்ணய உரிமை வாய்ப்பு வேண்டுமென்று கோருவதற்கு, போராடுவதற்கு தயாராக அந்த முக்கியமான மக்கள் அணி தயாராக இருக்கிறதா?'' என்று அவர் கேட்கிறார்.

சுயநிர்ணய உரிமை என்பதற்கு பிரைட்மன்னது கருத்துரு, அந்த பதம் பாவிக்கப்பட்ட காலத்திற்கு பின்னர் எப்போதுமே இல்லாத அளவிற்கு 20ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சுயநிர்ணய உரிமைக்காக போராடுகின்ற ''உண்மையான ஈராக்கியர்களை'' ஈராக் மண்ணிலிருந்து வெளிநாட்டுப்படைகளை வெளியேற்ற வேண்டுமென்று கோரிகை விடுப்பவர்களுக்கு எதிராக அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளோடு சேர்ந்து கொள்ள வேண்டும் என்று தனது வாசகர்களுக்கு பிரைட்மன் சொல்கிறார்.

"ஈராக்கின் அமைதியான பெரும்பான்மையினரை" ஏமாற்றுவதற்காக "அமெரிக்க எதிர்ப்பு என்ற முகமூடிக்குள் தங்களுது உண்மையான குறிக்கோள்களை மறைத்துக் கொள்ள" கிளர்ச்சிக்காரர்கள் முயன்று வருவதாக அவர் குற்றம் சாட்டுகிறார். (இந்த அரசியல் ரீதியில் செல்வாக்கிழந்த சொல்லை உருவாக்கிய ரிச்சார்ட் நிக்ஸனுக்கு அதற்குரிய சிறப்பைத் தருவதற்கு பிரைட்மன் தவறிவிட்டார்.) பிரைட்மன் கூறுவதைப்போல் அந்த "அமைதியான பெரும்பான்மை" ஈராக்கில் அமெரிக்க திட்டத்தை ஆதரிக்குமானால் அத்தகைய அமெரிக்க எதிர்ப்பு "வேடம்" எப்படி மக்களிடையே செல்வாக்கை பெறமுடியும் என்பதை அவர் விளக்கவில்லை. ஆக ஒரே தர்க்க முடிவு பிரைட்மனுக்கு இருக்குமானால், இந்த அமைதியான பெரும்பான்மை கிளர்ச்சிக்காரர்களை போல் அமெரிக்க ஆக்கிரமிப்பை வீழ்த்தும் விஷயமாகத்தான் சுயநிர்ணய உரிமையைப் பார்க்கின்றனர்.

புஷ் நிர்வாகம் ஆக்கிரமிப்புக்கு தேவையான ஆதாரங்களை தருவதற்கு தவறிவிட்டது என்ற கண்டனத்துடன் அவர் ஒரு முடிவிற்கு வருகிறார். அவர் எழுதுகிறார்: ''இப்போது நடவடிக்கையை தொடருவதுதான் சரியான வழியென்று நான் அறிவேன். கெட்டவர்களை தோற்கடிக்க வேண்டும், போராளிகள் ஆயுதங்களை பறிமுதல் செய்யவேண்டும். ஒரு அரசியல் கட்டுக்கோப்பை உருவாக்க முயல வேண்டும்..... ஆனால் இதற்கு அவகாசமும் தியாகமும் தேவைப்படும். அவற்றை உருவாக்குவதற்கு ஒரேவழி ஐ.நா, நேட்டோ மற்றும் நமது நட்பு நாடுகள் அனைத்தையும் போதுமான அளவிற்கு திரட்டுவதுதான்.''

ஈராக்கிய போர் விவாதத்தை சட்டப்பூர்வமில்லாததாக ஆக்குவது

இந்த வார்த்தைகளை கெர்ரியே நேரடியாக சொல்லியிருக்கக்கூடும். நவம்பர் தேர்தல் நெருங்கி வருகின்ற நேரத்தில் ஜனநாயகக் கட்சி ஈராக் தொடர்பான நிலைப்பாட்டிற்கு அதுதான் அடிப்படை. புஷ் நிர்வாகம் எப்படி போருக்கு முன்னேற்பாடுகளை செய்தது? அல்லது ஐ.நா ஒப்புதலை பெறத்தவறியது என்பதை பற்றி கண்டிக்கலாம், ஆனால் ஈராக் மக்களுக்கு எதிராக போர் நீடிப்பது குறித்து எந்தவிதமான விவாதமும் நடைபெறக்கூடாது.

ஈராக் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஜனநாயகக் கட்சி தலைமை ஊடகங்களில் வெளியிடப்படும் லிபரல் கருத்துக்கள் ஆகியவை அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டின் அடிப்படை அக்கறைகளை எதிரொலிக்கின்றன. ஜனநாயகக் கட்சியின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான போட்டியின் திட்டமிட்ட அடிப்படை அரசியல் சூழ்ச்சி கையாளலும் அதுதான்.

சென்ற ஆண்டு ஜனநாயகக் கட்சியின் ஆரம்பநிலை தேர்தல்கள் ஈராக் போருக்கு மக்களிடையே நிலவுகின்ற எதிர்ப்புணர்வின் தீவிர அரசியல்போக்கால் மேலாதிக்கம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இந்த எதிர்ப்பு உணர்வு பெரும்பாலும் வெர்மாண்ட் முன்னாள் கவர்னர் ஹோவார்ட் டீன் வேட்பாளரின் பின்னே வழிப்படுத்தப்பட்டது. புஷ் நிர்வாகம் மீதும் போருக்கு ஆதரவளித்த ஜனநாயகக் கட்சியினர் மீதும் கண்டனம் தெரிவித்ததன் மூலம் தொடக்க நிலைக்கு முந்திய வாக்கு கணிப்புக்களில் அவர் முன்னணியில் நின்றார். அவரது செல்வாக்கு எரி நட்சத்திரம் போல் வருவது அரசியல் நிர்வாகத்தில் அபாய மணியை ஒலித்தது.

2004-தேர்தலில் புஷ் தோற்கடிக்கப்படக்கூடும் என்ற உணர்வு ஏற்பட்டது. இது ஆளும் தட்டில் தங்களது சொந்தக்காரணங்களால் வரவேற்கத்தக்க அம்சமாக அமைந்தது. எனவே அவர்கள் தங்களுக்கு நம்பகத்தன்மையுள்ளவர் என்று சோதிக்கப்பட்ட ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். ஊடகங்கள் டீன் மீது கொடூரமான தாக்குதலை மேற்கொண்டன. அவர் அரசியல் அடிப்படையில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கு போதுமான தகுதியில்லாதவர் என்று நிரூபித்தனர். அவர் தனது எதிர்பாளர்களை சமாதானப்படுத்துவதற்கு ஆப்கானிஸ்தான் போரை ஆதரித்தார். ஈராக் மீது படையெடுத்ததை கண்டித்தாலும் தொடர்ந்து அந்நாட்டில் அமெரிக்க ஆக்கிரமிப்பு நீடிப்பை ஆதரித்தார். டீன் நிலையற்றவர் என்றும் தேர்ந்தெடுப்பதற்கு தகுதியில்லாதவர் என்றும் சித்தரிக்கப்பட்டார். ஜோன் கெர்ரி முன்னாள் போர் வீரர் மற்றும் அமெரிக்க செனட்டின் மிகப்பெரும் பணக்கார உறுப்பினர், அவர் ஈராக் போரை ஆதரிக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதற்காக அவர் பின்னால் ஆதரவு திரண்டது.

இந்த அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பின்னால் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால் டீன் மூலம் எந்த ஆபத்தும் வரும் என்பதால் அல்ல அவர் பழமைவாத முதலாளித்துவ அரசியல்வாதிதான். இதன் நோக்கம் ஜனாதிபதி தேர்தலில் பொதுமக்களிடமிருந்து அமெரிக்க ஆக்கிரமிப்புக்கெதிராக கிளம்பும் எந்த உணர்வும் சவாலாக தோன்றிவிடக்கூடாது மற்றும் போர் எதிர்ப்பு உணர்வை சமநிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் அண்மைய ஈராக் நடப்புக்கள் அத்தகைய கண்ணோட்டம் எவ்வளவு அவசியமானது என்பதை காட்டுகிறது மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் எதிர்வினை ஈராக் பற்றிய கடுமையான எந்த விவாதத்தையும் தவிர்க்கும் அரசியல் குறிக்கோளை உறுதிப்படுத்தி இருக்கிறது.

ஈராக்கிய மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் யுத்தமானது வெறுமனே புஷ் நிர்வாகத்தின் குற்றவியல் துணிகரச் செயல் அல்ல. அது இரு கட்சிகளதும் கொள்கையாகும். ஈராக்கிய மக்களை "கைவிடாமல் இருப்பது" பற்றி ஜனநாயக தாராண்மைவாதிகள் நீண்டகாலமாக எல்லா வகையிலும் கைகளைப் பிசைந்துகொள்வதன் பின்னணியில் இருப்பது, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் மூலோபாய தேவைகளில் ஒன்றான, ஈராக் உட்பட முழு மத்திய கிழக்கிலும் உள்ள எண்ணெய் வளங்கள் மீது இராணுவ மரணப்பிடியை பேணுவதேயாகும்.

கெர்ரி தேர்ந்தெடுக்கப்படுவதால் ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் விலக்கிக்கொள்ளப்படும் என்று பொருளாகாது. அவர்கள் அதிகரித்த எண்ணிக்கையில் தொடர்ந்து கொல்வார்கள் மற்றும் இறப்பார்கள். இந்தப் படுகொலைக்கு எதிர்ப்பானது ஜனநாயகக் கட்சியிலிருந்து தீர்க்கமாக முறித்துக் கொண்டு போரையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும் உறுதியோடு எதிர்த்து நின்று போராடுகின்ற உழைக்கும் மக்களின் சுதந்திரமான அரசியல் இயக்கம் ஒன்றை தோற்றுவிப்பதன் மூலமும் மட்டுமே அரசியல் ரீதியாய் முன்னெடுத்துச் செல்லப்பட முடியும்.

அத்தகைய இயக்கத்திற்கு அரசியல் அடித்தளங்களை அமைப்பதற்காககத்தான் சோசலிச சமத்துவக் கட்சியும், அதன் வேட்பாளர்களும் 2004- அமெரிக்கத் தேர்தல்களில் கலந்து கொள்கின்றனர். நமது கட்சி ஈராக்கிலிருந்து நிபந்தனைகள் எதுவுமில்லாமல் உடனடியாக அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேற வேண்டும் மற்றும் இந்தப் போரை தொடங்கிய குற்றத்திற்கு காரணமாக இருந்த அனைவரையும் அதற்கு பொறுபேற்க செய்வதற்குமான கோரிக்கைகளை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved