World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Fallujah and the laws of war

பல்லூஜாவும் போர் சட்டங்களும்

By Richard Hoffman
24 November 2004

Back to screen version

அமெரிக்க படைகள் ஈராக்கிய நகரங்களுக்கெதிராக புதிய தாக்குதலை தொடங்குகின்ற நேரத்திலேயே பல்லூஜா தாக்குதலின் போது அமெரிக்க இராணுவம் புரிந்த கடுமையான போர்க்குற்றங்கள் தொடர்பாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ஒரு தொலைக்காட்சி குழு முன்னர் அவர்கள் நேரில் பார்த்துகொண்டிருக்கும்போதே நடைபெற்ற ஒரு சம்பவத்தை அமெரிக்காவும், உலக ஊடங்களும் குறிப்பாக குவிமையப்படுத்தி இருக்கின்றன ----அது பாதுகாப்பற்ற ஈராக் கைதி ஒருவரை கொலை செய்தது ஆகும். அது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி என்று சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மாறாக, அமெரிக்கப்படைகள் புரிந்த அப்பட்டமான திட்டமிட்ட கொலைகள் மற்றும் நாச வேலைகள் பற்றிய எல்லாவித சுதந்திரமான சான்றும் பல்லூஜா நகரத்தின் பெயர், வரலாற்று நூல்களில் 1937-ல் Guernica குண்டுவீசி தாக்கப்பட்ட இழிவுமிக்க அட்டூழியங்கள், 1944-ல் வார்சோ நசுக்கப்பட்டது மற்றும் வியட்நாம் போர் இவற்றோடு சேர்த்து இடம்பெறப்போகிறது என்பதில் எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமில்லை.

அந்த நகரத்தின் மீதும் அதன் மக்களுக்கெதிராகவும், சட்ட விரோதமாகவும் ஒரு திட்டமிட்ட வகையிலும் வெகுஜனங்களை பழிவாங்கும் முறையில் பல்லூஜா மீது தாக்குதல் நடத்தவேண்டுமென்று திட்டமிடப்பட்டது. 2004- ஏப்ரலில் அந்த நகரத்தின் எதிர்ப்பை அமெரிக்கப் படைகள் அழித்துவிட தவறிவிட்டதற்குப் பழிவாங்குவதாக அது இருக்கிறது. போர் சட்டங்கள் தொடர்பான ஜெனீவா ஒப்பந்தங்கள் 1949-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின் கொடூரங்களுக்கு பதிலாக குறிப்பாக நாஜி ஆயுதப்படைகள் கிழக்கு ஐரோப்பாவிலும், சோவியத் யூனியனிலும் புரிந்த கொடுமைகளுக்கு பதிலளிக்கிற வகையில் நிறைவேற்றப்பட்டன, அந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் துச்சமாகவும் அப்பட்டமாகவும் மீறுகின்ற வகையில் இந்தப்போர் நடத்தப்பட்டிருக்கிறது.

இந்த நடவடிக்கை தொடங்குவதற்கு முன், உற்சாகமூட்டுகின்ற வகையில் உரையாற்றிய ஈராக்கிலுள்ள மிக மூத்த மரைன் மேஜர் சர்ஜண்ட் Carlton Kent தமது துருப்புக்களை நோக்கி கூறினார்: ''நீங்கள் அனைவரும் வரலாற்றை உருவாக்கிக்கொண்டிருக்கிற நிகழ்ச்சிப்போக்கில் உள்ளீர்கள். மற்றொரு Hue நகரம் உருவாகிக் கொண்டிருக்கிறது. உங்களில் ஒவ்வொருவரும் நீங்கள் எப்போதும் செய்ததைத்தான் இப்போதும் நமக்கு அனுமதி கிடைத்தால் செய்யப்போகிறீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை- சில துப்பாக்கிகளால் தாக்க வேண்டும்'' (1968-ல் வியட்நாம் போரின்போது வியட்நாம் பேரரசின் முன்னாள் தலைநகரான Hue, Tet தாக்குதலை முறியடிக்கின்ற முயற்சியில் அமெரிக்க இராணுவம் ஏறத்தாழ அந்த நகரத்தையே அழித்துவிட்டது.

வெள்ளை மாளிகைக்கும் பென்டகனுக்கும் வழிகாட்டியாக உள்ள மனப்பான்மையை முன்னாள் இராணுவ அதிகாரியும், நியூயோர்க் போஸ்ட் கட்டுரையாளருமான Ralph Peters சுருக்கமாக கூறுகிறார்: ''நாம் பல்லூஜாவை ஒரு உதாரணமாக்குவதற்கு பயந்துவிடக்கூடாது. அமெரிக்க இராணுவத்தை நிலைகுலையச்செய்ய முடியாது அல்லது முறியடிக்க முடியாது என்பதை நாம் எடுத்துக்காட்டியாக வேண்டும். அப்படியென்றால் அதனால் பரவலான நாசம் வரும் என்றால் அதற்கான விடையையும் நாம் தந்தேயாக வேண்டும்..... Carthage நகரம் அழிந்ததைப்போல் பல்லூஜாவும் மண்மேடாக ஆகிவிட்டால் கூட அதற்கு நாம் தருகின்ற விலை சரியானதுதான்.''
இதில் ஒரு புறநிலையான வரலாற்று அளவுகோலைக் கொண்டுதான் புஷ் நிர்வாகம் மற்றும் அமெரிக்கப்படைகளின் நடவடிக்கைகளை மதிப்பிட வேண்டும். 1949 ஜெனீவா ஒப்பந்தத்தின் படி, நிபந்தனை 1ன் கீழ் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் கூட்டுநடவடிக்கையின் அனைத்துவிதமான நடவடிக்கைகள் ஐயத்திற்கிடமின்றி தடைவிதிக்கிறது. ''கூட்டுத்தண்டனைகள் மற்றும் அதேபோன்று எல்லாவிதமான மிரட்டல் நடவடிக்கைகள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருக்கின்றன'' என்று ஒப்பந்தம் 1-ல் கண்டுள்ள 51-வது பிரிவு தெளிவுபடுத்துகிறது.

அங்கு நடத்தப்பட்ட படுகொலைகள் அவற்றின் அளவு மற்றும் வெறிப்போக்கு ஏறத்தாழ ஒரு பைத்திக்காரத்தன்மை கொண்டதாக அமைந்திருக்கிறது. ஒருவாரத்திற்கு மேல் அந்த நகரத்தை நிலைகுலையச் செய்யும் அளவிற்கு விமான மற்றும் தரைப்படை குண்டு வீச்சுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன, பாரியளவிற்கு தற்காப்பு படைகளும், இராணுவ அமைப்புக்களும், இருந்தால்தான் இவ்வளவு பெரிய இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்த முடியும். வீசப்பட்ட சில குண்டுகள் (2000- இறாத்தல் வரை) போலந்து, பிரான்சு மற்றும் ரஷ்யா மீது Luftwaffe விமானப்படை (ஜேர்மன் விமானப்படை) குண்டு வீச்சாளர்கள் வீசித்தாக்கிய குண்டுகளை விட அளவில் பெரிய எடையுள்ளவை.

அந்த நகரத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த ஈராக் மக்களை அச்சுறுத்தி பணியவைப்பதையும் நாடு முழுவதிலும் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு மேலும் உருவாக்கின்ற எல்லாவிதமான எதிர்ப்பையும் மண்டியிட செய்வதும் இதன் நோக்கமாகும். ''சிவிலியன் மக்களிடையே பயங்கர உணர்வுகளை பரப்புகின்ற பிரதான நோக்கத்தோடு மூர்க்கத்தனமான மிட்டல் அல்லது நடவடிக்கைளை'' 51-வது பிரிவு தெளிவாக தடுக்கிறது.

இந்தத்தாக்குதலின் ஆரம்ப கட்டங்களில் அந்த நகரத்தின் மருத்துவ வசதிகளை மற்றும் மருத்துவ ஊழியர்களை அழிப்பதும் மற்றும் கொல்வதும், பிடிப்பதும் அல்லது குறிப்பாக அழிப்பதும், அடங்கும். ஒரு வாரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையில், ஏறத்தாழ எல்லா மருத்துவ வசதிகளும் செயல்பட முடியாமல் ஆக்கப்பட்டன. காயம்பட்டவர்கள் துன்பத்தை அதிகரிக்கவும் அவர்களது அதிர்ச்சியை பெருக்கவும், அந்த நகரத்திற்கு மனிதநேய மற்றும் மருத்துவ உதவிகள் தருவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

ஜெனீவா IV-வது ஒப்பந்தத்தின் 18- வது பிரிவு கூறுகிறது: ''சிவிலியன்கள் மருத்துவ மனைகள், காயமடைந்தவர்கள் மற்றும் நோய்வாய்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பிள்ளைப்பேறுகள் போன்ற சேவைக்காக ஏற்பாடு செய்யப்படுபவை, அவை எந்தச்சூழ்நிலையிலும் தாக்குதலுக்கு இலக்காகக்கூடாது ஆனால் எல்லா நேரங்களிலும் அவை மதிக்கப்பட வேண்டும், மோதல்களில் சம்மந்தப்பட்ட தரப்பினரால் பாதுகாக்கப்பட வேண்டும்".

சிவிலியன் மருத்துவ மனைகளுக்கு தரப்படவேண்டிய பாதுகாப்பு தலையாய கடமை என்று கருதப்படுவதால் விதி 19- கூறுவதாவது: '' இந்த மருத்துவமனைகளில் நோய் நொடி கண்ட அல்லது காயமடைந்த ஆயுதப்படைகளை சார்ந்தவர்கள், சிகிச்சை பெற்று வருகிறார்கள்'' என்பது ஒரு சாக்குப்போக்காக ஆகாது அல்லது ''அத்தகைய போர் வீரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிறிய ஆயுதங்களும், தளவாடங்களும் முறையான சேவையிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பதும் சாக்குப்போக்காக ஆகாது''

பல்லூஜா நகரத்தின் மீது கண்மண் தெரியாத வகையில் குண்டுவீச்சு தாக்குதல்கள் நடந்திருக்கிறது, அதேபோன்று மக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிவிலியன்களுக்கும் எதிர்ப்பு போராளிகளுக்கும் இடையில் எந்த வகையிலும் வேறுபடுத்தி பார்த்து தாக்குதல் நடக்கவில்லை. அந்த நகரத்தில் 15-முதல் 55 வயதிற்கு உட்பட்ட அனைவரும் திட்டவட்டமாக குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகின்றனர். அந்த நகரத்தைவிட்டு வெளியேறி ஓட முயன்ற மக்களும் சுட்டுக் கொல்லப்படுகின்ற அளவிற்கு கொடூரம் நடந்திருக்கிறது. தாக்குதலில் இருந்து தப்பி ஓடிவிடலாம் என்று யூப்ரடிஸ் ஆற்றை நீந்திக்கடக்க முயன்ற முழு குடும்பங்களையும் சுட்டுக்கொன்றது பற்றி தகவல்கள் வந்திருக்கின்றன.

ஒப்பந்தம் 1- பிரிவு 51- ன் கீழ் மேலும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாவது: ''சிவிலியன் மக்களும் சிவிலியன்களான தனிமனிதர்களும் தாக்குதலுக்கான ஒரு இலக்காக ஆக்கப்படக்கூடாது...... கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. கண்மூடித்தனமான தாக்குதல் என்பது: (a) ஒரு குறிப்பிட்ட இராணுவ இலக்கை நோக்கி நடத்தப்படாத தாக்குதல்கள் (b) ஒரு திட்டவட்டமான இராணுவ இலக்கை நோக்கி போரிடுகின்ற வழிமுறை அல்லது ஒரு முறையை பயன்படுத்துவது அல்லாத நடவடிக்கைகள், அல்லது (c) இந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள வரையறைக்குள் வராத அளவிற்கு தாக்கங்களை ஏற்படுத்துகின்ற அளவிற்கு ஒரு முறையையோ அல்லது வழி முறைகளையோ, கையாண்டு தாக்குதல் நடத்துவது''

ஒரு கண்மூடித்தனமான தாக்குதல் என்பதற்கு ''அந்த தாக்குதல் நடக்கும்போது தற்செயலாக சிவிலியன்களுக்கு உயிர் சேதம், சிவிலியன்களுக்கு காயம், சிவிலியன் சொத்துக்களுக்கு சேதம், அல்லது இவை மூன்றும் சேர்ந்து நேரடியான இராணுவ சாதகமென்று எதிர்பார்க்கப்பட்ட திட்டவட்டமான நேரடி இராணுவ நடவடிக்கைக்கும் மிதமிஞ்சிய நடவடிக்கைகள்'' என்று விளக்கம் தரப்பட்டிருக்கிறது.

வீடுகளிலும் மற்றும் கட்டடங்களிலும் மக்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது- வெப்பத்தால் மனித நடமாட்டத்தை, மனிதர்கள் உள்ளேயிருப்பதை கண்டுபிடிக்கும் கருவிகளால் அடிக்கடி கண்டுபிடிக்கப்பட்ட போது---- அந்தக் கட்டடங்கள் எந்திர துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும் உள்ளேயிருப்பவர்கள் யார் என்பதைக்கூட கருதிப்பாராமல் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. நகரத்தின் இடிபாடுகளுக்கிடையில் பல நூறு மடிந்த மற்றும் காயமடைந்த சிவிலியன்கள் புதையுண்டு கிடக்கின்றனர். நகரம் முழுவதிலும் தெருக்களுக்கு குறுக்கேயும், நடைபாதைகளிலும் டசின் கணக்கான சடலங்கள் சிதறிக்கிடக்கின்றன மாண்டவர்கள் எத்தனைபேர் என்பது என்றைக்கும் தெரியப்போவதில்லை, ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் மடிந்திருக்கலாம்.

ஒப்பந்தம் 1 பிரிவு 18- கூறுகிறது: ''போரிடுகின்ற துருப்புக்கள் எல்லா நேரங்களிலும் சிவிலியன் மக்களுக்கும், மற்றும் போரிடுபவர்களுக்குமிடையில் சிவிலியன் இலக்குகளுக்கும், இராணுவ இலக்குகளுக்குமிடையில் வேறுபடுத்திப்பார்த்து அதற்கு ஏற்ப இராணுவ இலக்குகளுக்கெதிராக மட்டுமே நடவடிக்கைகளுக்கு கட்டளையிட வேண்டும்''

பல்லூஜா நகர் வெளிநாட்டு பயங்கரவாதிகளைக் கொண்டது. அல்லது அத்தகைய பயங்கரவாதிகள் அந்த நகரத்தை தங்களது இறுக்கமான பிடியில் ''பணயமாக வைத்துக்'' கொண்டிருக்கிறார்கள் என்ற அமெரிக்க பிரச்சாரத்தை நிரூபிப்பதற்கு அந்த நகரத்தில் சிதைந்து கிடக்கும் இடிபாடுகளிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கும் புகை மூட்டத்திலிருந்து கூட ஒரு சிறிதும் சான்று கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, அமெரிக்கா சட்டவிரோதமாகவும் படைபலம் கொண்டும் தங்களது நாட்டை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதற்கு எதிராக ஒரு சட்டபூர்வமான ஆயுதந்தாங்கிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பது சம்பவங்களிலிருந்து தெளிவாகத்தெரிகிறது.

என்றாலும், அமெரிக்கா பல்லூஜாவை அழிப்பதற்கு வலியுறுத்திக் கூறிவருகின்ற காரணங்கள் உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அதாவது அபு மூஸாப் அல் சர்காவியும் மற்றவர்களும் பல்லூஜாவை தங்களது தளமாக பயன்படுத்திக்கொண்டு வருகிறார்கள் என்பது உண்மையாக இருந்தால் கூட, அமெரிக்கப்படைகள் புரிந்துள்ள செயல்களுக்கு அது ஒரு சட்டபூர்வமான நியாயப்படுத்துவதாக என்றைக்கும் அமையாது. ஒப்பந்தம் 1-பிரிவு 50 கூறுகிறது: ''சிவிலியன் மக்களுக்கிடையில் சிவிலியன் என்ற சட்ட விளக்கத்திற்குள் வராத நபர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக அந்த மக்களின் சிவிலியன் தன்மையை இழக்கச்செய்துவிடாது''.

போர் சட்டங்கள்

பல்லூஜா மக்கள் மீது அமெரிக்கா தனது தாக்குதலை நடத்தியதன் மூலம் கடந்த 400- ஆண்டுகளுக்கு மேலாக உருவாகி வந்திருக்கும் நவீன போர்ச்சட்டங்களை புறக்கணித்திருக்கிறது. அந்தச்சட்டம் மிக முன்னேறிய வடிவத்தில் எதிரொலிப்பது நாகரீக சமுதாயம் மனிதநேய அடிப்படையில் போரினால் வருகின்ற துன்பங்களை முடிந்தவரை ஒரு குறைந்த அளவிற்கு கொண்டுவருவதற்கு வகை செய்கிறது.

1625-ம் ஆண்டு டச்சுநாட்டு சட்ட நிபுணர் Hugo Grotius போர் சட்டங்களும் சமாதானமும் என்ற தனது நூலில், முதன் முதலாக ஒரு நாடு மற்றொரு நாட்டை ''விசாரணை இன்றி, அல்லது இலாபத்திற்காக'' தாக்குதல் நடத்த முடியும் என்ற கருத்தைக் கண்டித்தார். இதுதான் ஆக்கிரமிப்புப் போர்களை சட்ட விரோதமாக்கும் நவீன சர்வதேச சட்ட தத்துவத்தின் ஆரம்பமாகும்.

சென்ற ஆண்டு படையெடுப்பில் தொடங்கி ஈராக்கில் அமெரிக்கா புரிந்துவருகின்ற போர்குற்றங்கள் கொடுங்கோன்மையானதாகவும், இலாப நோக்கோடும் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாஷிங்டன் உலக பொருளாதாரத்தில் பெருமளவில் கடன்பட்டுள்ள அமெரிக்க முதலாளித்துவத்தின் அந்தஸ்து சரிந்துவருவதை தடுத்து நிறுத்தி மாற்றுகின்ற ஒரு முயற்சியாக மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை தன்கையில் எடுத்துக்கொள்ள வாஷிங்டன் முயன்றுவருகிறது.

ஜெனீவா ஒப்பந்தங்கள் நேரடியாக அமெரிக்க உள்நாட்டு போர் அனுபவத்திலிருந்து உருவானதாகும். அதுதான் முதலாவது நவீன ஆயுதப்போர், அதில் ஏற்பட்ட கொடூரமான துன்பங்களின் விளைவாக 12 நாடுகள் 1864-ம் ஆண்டு முதலாவது ஜெனீவா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அந்த ஒப்பந்தம் பிரதானமாக காயம்பட்ட மற்றும் நோய் நொடி கண்ட இராணுவத்தினர், கைதிகள் நடத்தப்படும் விதம் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும் பாதுகாப்பு மற்றும் நடுநிலையோடு அவர்களை நடத்துவது பற்றி குறிப்பிடுகிறது. அமெரிக்க மண்ணில் நடைபெற்ற முதலாவது போர் குற்றவழக்கு--- 1865-ல்----நடைபெற்றது. குற்றம்புரிந்தவர்களுக்கு ஆதரவாக (Confederate) இருந்த அதிகாரி ஹென்றி விர்ஸ், யூனியன் போர்கைதிகளை கொலை செய்தார் என்பதற்காக அவர் தண்டிக்கப்பட்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

போர் குற்றங்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டாலும், அமெரிக்க சட்டத்தின் கீழும் வழக்கு தொடரலாம். 1996-ம் ஆண்டு இயற்றப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான மத்திய அரசின் சட்டத்தின் கீழ் ஜெனீவா ஒப்பந்தங்கள் மற்றும் நிபந்தனைகள் கடுமையாக மீறப்படுவது கிரிமினல் குற்றமாகும். ஒரு கிரிமினல் நடவடிக்கையால் ஒருவரது உயிர் பிரியுமானால் அந்த குற்றம் புரிந்தவருக்கு தூக்கு தண்டனை மற்றும் ஆயுள் சிறைதண்டனை உட்பட தண்டனை விதிக்கவும் அமெரிக்கச் சட்டத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கில் தனது படுபயங்கரமூட்டும் பலாத்காரத்தை கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், உலகம் 1946-ல் நூரம்பேர்க்கில் நடைபெற்ற விசாரணைகளை நினைவுபடுத்திப்பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் நீதிபதி, நீதிபதி Parker தமது தீர்ப்பில் எழுதினார்:
''போர் குற்றங்கள் தொடர்பான சான்று அதன் அளவிலும், விவரங்களிலும் மலைக்கவைக்கிறது. இதில் உண்மை என்னவென்றால் பெருமளவிற்கு போர்குற்றங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. போர் பற்றிய வரலாற்றில் இதற்கு முன்னர் கண்டிராத அளவிற்கு குற்றங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.... இவற்றில் பெரும்பாலானவை ''ஒட்டுமொத்த போர்'' என்ற நாஜி கண்ணோட்டத்திலிருந்து எழுந்தவை, அந்தக் கண்ணோட்டத்தோடு ஆக்கிரமிப்புப்போர்கள் நடத்தப்பட்டது ஒப்பந்தங்களில் உள்ளீடாக உள்ள தார்மீக கருத்துக்கள்.... போர் அதிக மனிநேயத்தோடு நடத்தப்படவேண்டும் என்பது- செல்லுபடியாகவில்லை அல்லது செயல்திறனை இழந்துவிட்டது. போரின் ஒட்டுமொத்தமான உயர்ந்த நோக்கிற்காக அனைத்தும் கீழ்படிந்து செல்லுகின்ற நிலை ஏற்பட்டது. விதிகள், நெறிமுறைகள், உறுதிமொழிகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்ற அனைத்துமே சர்வதேச கட்டுப்படுத்தும் சட்ட நெறிமுறைகளிலிருந்து நீக்கப்பட்டு நாஜித்தலைவர்கள் படு காட்டுமிராண்டித் தனமாக ஆக்கிரமிப்பு போரை நடத்தியுள்ளார்கள். தங்களுக்கு எங்கு எப்போது அணுகூலமென்று கருதுகிறார்களோ, அங்கெல்லாம் அந்த நேரத்திலெல்லாம் Fuhrer-ம் அவரது நெருங்கிய சகாக்களும் போர்க்குற்றங்களை புரிந்திருக்கிறார்கள். அவற்றில் மிகப்பெரும்பாலானவை திட்டமிட்ட மற்றும் கிரிமினல் தன்மைகொண்ட கணிப்புக்களால் நடத்தப்பட்டவை.''
இந்த வார்த்தைகள் புஷ் நிர்வாகத்தைப் பற்றியும் எழுத முடியும். அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப் பட்டவுடன் பல்லூஜாவில் நடத்தப்பட்டுள்ள போர் குற்றங்கள் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் எதிர்கால போக்கு குறித்து ஒரு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் நடவடிக்கையாகும். அமெரிக்க நிர்வாகமும் ஈராக்கிலுள்ள அதன் பொம்மை அரசாங்கமும் ஒரு அரசியல் மற்றும் இராணுவ புதை சேற்றை எதிர் நோக்கியுள்ளன. அல்லாவியின் தலைமையிலுள்ள இடைக்கால ஆட்சிக்கு தென்பகுதி ஷியாக்களிடமோ அல்லது சுன்னி பிராந்தியங்களிலோ குறிப்பிட்டு சொல்லுகின்ற அளவிற்கு எந்த சமூக ஆதரவு அடிதளமும் இல்லை. எனவே தான் அமெரிக்கப்படைகள் மிகக்கொடூரமாக செயல்பட்டிருக்கின்றன. ஆனால் பல்லூஜா சிதைக்கப்பட்டது அனைத்து அரசியல் மற்றும் இராணுவ பிரச்சனைகளையும் சிக்கலாக்குவதையே கூட்டியிருக்கிறது.

இந்த தோல்வி ஆழமாகும் போது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஏகாதிபத்திய நடவடிக்கைகள் மேலும் பின்னடைவுகளை சந்திக்கும்போது நிர்வாகத்திலும், ஊடகங்களிலும் அதிக துருப்புக்கள் தேவை என்ற கூப்பாட்டுக்குரல் ஓங்கி ஒலிக்கும். ஏற்கனவே நியூயோர்க் டைம்ஸ் மேலும் 40,000- துருப்புக்கள் தேவை என்று கோரிக்கை விடுத்திருக்கிறது. (பார்க்க: ஈராக்கிற்கு கூடுதல்படைகளை நியூயோர்க் டைம்ஸ் கோருகிறது, நவம்பர் 9-2004) விரைவில் ''ஒட்டுமொத்த போரின்'' ஒரு புதிய வடிவத்தை அதற்காக விடப்படும் கோரிக்கையை நாம் கேட்கலாம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved