World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Nader gets his meeting with Kerry

நாடெர் கெர்ரியுடன் சந்திப்பு

By Patrick Martin
22 May 2004

Back to screen version

ரால்ப் நாடெர் மே 19-ல் ஜனநாயகக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியுடன் ஒரு மணிநேரம் சந்தித்து பேசியது, அமெரிக்காவின் இரு-கட்சி முறைக்கு இந்த ''சுயேச்சை'' ஜனாதிபதி வேட்பாளர் கடுமையான (Serious) அல்லது கொள்கை அடிப்படையிலான மாற்றீடாக இருப்பார் என்று இன்னும் மனப்பிரமை கொண்டிருப்பவர்களுக்கு தெளிவுபடுத்துகின்ற வகையில் இந்த சந்திப்பு நீண்டகாலம் போக வேண்டும்.

நாடெரின் வேண்டுகோளுக்கிணங்கி மூடிய கதவு கூட்டம், ஜனநாயகக் கட்சி வேட்பாளரின் தலைமை அலுவலகத்தில் வாஷிங்டன் நகருக்குள் நடைபெற்றது. கெர்ரி விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து, மிகப்பொதுவாக கருத்துத் தெரிவித்தமை தவிர விமர்சனம் எதுவும் செய்யவில்லை. ஆனால் அந்த சந்திப்பிற்குப்பின் நாடெர் பல பத்திரிகை பேட்டிகளை அளித்தார் மற்றும் கூட்டத்தில் நடைபெற்றதைப் பற்றி அவர் தந்த விளக்கங்கள் கெர்ரியின் உதவியாளர்களால் பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டது.

2004 தேர்தலில் மிக முக்கியமான பிரச்சனை, இரண்டு வேட்பாளர்களும் நடத்திய உரையாடலில் ஈராக் போர் பற்றி எதுவும் பேசவில்லை. கூட்டம் நடைபெற்ற பின்னர் CNN- ன் ஜூடி வூட்றூபிற்கு (Judy Woodruff) அளித்த சிறிது நேர பேட்டியில், நாடெர் அதுபற்றி எந்த விவாதக் குறிப்பையும் கூறவில்லை. அந்தப் பிரச்சனை விவாதிக்கப்பட்டதா என்று வூட்றூப் நேரடியாக அவரைக் கேட்டபொழுது, அதற்கு நாடர் பதிலளிக்கும்போது ''உங்களிடம் வெளியேறும் மூலோபாயம் இல்லை என்று நான் கூறினேன். தம்மிடம் அத்தகைய ஒன்று இருப்பதாக அவர் கூறினார்'' என்று பதிலளித்தார்.

அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கெர்ரியின் ஆலோசகர் Steve Elmendorf பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கும்போது அவரோ அல்லது பிரச்சார மேலாளர் Mary Beth Cahill-லோ ஈராக் பற்றி விவாதிக்கப்பட்டதாக நினைவுபடுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டார். Elmendorf இந்தக் கருத்து வேறுபாடுகளை அமுக்குவதற்கு மிகவும் சிரமப்பட்டாலும், எவ்வாறாயினும், ெலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்சிற்கு பேட்டியளிக்கும்போது, ''ரால்ப் நாடெர் மிகப்பெரிய நேர்மை வாய்ந்தவர், அவர் விவாதித்ததாக கூறினார் என்றால், அவர் விவாதித்திருக்க கூடும், ஆனால் நான் அங்கிருக்கும் பொழுது அதை கேட்கவில்லை'' என்று கூறினார்.

ஈராக் தொடர்பாக ''வெளியேறும் மூலோபாயம்'' கெர்ரியிடம் உள்ளது என்ற கருத்தை கெர்ரி தேர்தல் பிரச்சாரத்தில் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். ஜனநாயகக் கட்சி ஆரம்ப தேர்தலுக்கு ஹோவார்ட் டீனின் போட்டியை சமாளிப்பதற்காக கெர்ரி தெளிவில்லாமல் போருக்கு எதிரான பாவனையை மேற்கொண்டார். அதற்குப்பின்னர் அண்மை மாதங்களில் புஷ் நிர்வாகம் போரை நடத்துவதில் பயனுள்ள வகையில் செயல்படவில்லை என்று கண்டித்தார், அமெரிக்கா ஆக்கிரமிப்பு காலவரையின்றி நீடிக்க வேண்டுமென்பதை ஆதரித்தார்.

பேச்சுவார்த்தைக்கிடையில் அந்தப் பிரச்சனையை தான் குறிப்பிட்டதாகவும், புஷ் நிர்வாகத்தின் கொள்கைகளிலிருந்து கெர்ரி தன்னை வேறுபடுத்திக் காட்டவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதாகவும் நாடெர் குறிப்பிட்டார். இது சம்மந்தமாக தொலைபேசியில் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்சிற்கு பேட்டியளித்த நாடெர் "பிரதான நீரோட்டத்து ஈராக்கியர்களின் கண்ணோட்டத்தில் அதைப் பார்க்க வேண்டுமென்று நான் அவரிடம் கூறினேன், அந்த தூண்டுதலில் கலந்து கொண்டிருக்கிற மக்களை கிளர்ச்சியாளர்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கு, அவர்களை எவ்வாறு ஒரு வழிக்கு கொண்டுவருவது என்பது பற்றியும் நான் அவரிடம் கூறினேன்'' என்று தெரிவித்தார். ஈராக்கிலிருந்து ''இராணுவம் மற்றும் பெரிய நிறுவனங்கள்'' வெளியேறுவதற்கு ஒரு திட்டவட்டமான தேதியை நிர்ணயிப்பது இந்த வகையில் உதவும் என்று அவர் கூறினார். ''பொதுமக்களுக்கு ஒரு வெளியேறும் மூலோபாயத்தை நீங்கள் தர வேண்டுமென்று நான் கூறினேன்,'' புஷ்ஷிடம் அத்தகைய மூலோபாயம் இல்லை, என்னிடம் அத்தகைய மூலோபாயம் உண்டு, அது பற்றி நான் அதிகம் கூறுவேன் என்று அவர் [கெர்ரி] கூறினார்'' என நாடெர் டைம்ஸ்க்கு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி முழுவதுமே சில உண்மைகளை தீவிரமாக அம்பலப்படுத்துவதாக இருக்கிறது. ஈராக்கில் கொந்தளிப்புக்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. அபு கிரைப் சிறைச்சாலையில் சித்திரவதை, கொலை உட்பட ஈராக்கைதிகள் முறைகேடாக நடத்தப்படுவது அம்பலத்திற்கு வந்து அது உலகளாவிய கடுங் கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நாடெர் அதுபற்றி குறிப்பிடவில்லை. நாடெரே சொல்லியுள்ளபடி அந்தப்பிரச்சனை விவாதத்திற்கு வந்தபோது, புஷ் நிர்வாகத்தின் மற்றும் ஜனநாயக கட்சிக்காரர்களின் அடிப்படை மூலோபாய நோக்கத்தில் தனது உடன்பாட்டை நாடெர் வெளிப்படுத்தினார்: கிளர்ச்சிக்காரர்களை தனிமைப்படுத்தி தோல்வியடையச் செய்ய வேண்டியது அவசியம் என்பதுதான்.

அவருடைய கருத்து வேறுபாடு என்பது தந்திரோபாயம் பற்றியது. ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதற்கு தங்களது இறுக்கமான பிடிப்பை தளர்த்த வேண்டும் ஐக்கிய நாடு மற்றும் ஐரோப்பிய வல்லரசுகளை அதிகம் சார்ந்திருக்க வேண்டும் என்று நாடெர் ஆலோசனை கூறுகிறார்.

''பிரதான நீரோட்டத்து ஈராக்கியர்களை'' ''கிளர்ச்சிக்காரர்களிடமிருந்து'' தனிமைப்படுத்த வேண்டுமென்று நாடெர் எதிராக பேசுவது அவர் காலனித்துவப் போருக்கான உத்தியோகபூர்வ சாக்குப்போக்கை ஏற்றுக்கொள்கிறார் என்பதையே கோடிட்டுக்காட்டுகிறது. அமெரிக்கா, ஈராக்கை ''விடுதலை'' செய்வதற்காக தலையிட்டது என்ற கூற்றும், ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு பொதுமக்களது ஆதரவில்லாமலும் பயங்கரவாதிகள், குற்றவாளிகள், சதாம் ஹூசைன் ஆட்சியின் மிச்சசொச்சத்தின் ஆதரவைக் கொண்டதுதான் என்ற அப்பட்டமான பொய்யையும் நாடெர் ஏற்றுக்கொள்கிறார்.

கெர்ரி, புஷ்ஷிற்கு ஒரு முற்போக்கான மாற்று என சித்தரிப்பதற்கு நாடெர் முயற்சிகளை மேற்கொண்டாலும், ஈராக்கில் அமெரிக்க இராணுவம் ''வெற்றி'' பெற வேண்டுமென்பதில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அதே உறுதிப்பாட்டோடுதான் இருக்கிறார், எனவே நவம்பரில் கெர்ரி வெற்றி பெறுவது போருக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவோ அல்லது அமெரிக்கத் துருப்புக்களை விலக்கிக் கொள்வதாகவோ ஆகாது.

கெர்ரி, புஷ்ஷை விட அதிக நம்பகத்தன்மையுள்ள போர்க்காலத் தலைவர் என்று தன்னை ஆளும் செல்வந்த தட்டிற்கு விடாமுயற்சியுடன் காட்டிவருகிறார். சர்வதேச ஆதரவை அதிகம் திரட்டுவதற்கான முயற்சியில் வெற்றிபெறப்போவதாக உறுதியளித்திருக்கிறார். அதாவது ஐ.நா நிர்வாகிகள், வெளிநாட்டு துருப்பு பிரிவுகள், நிதியுதவி மற்றும் முதலீடுகளை அதிகம் பெற்று முற்றுகையிடப்பட்டுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு உற்சாக மூட்ட உறுதியளித்திருக்கிறார். ஈராக்கில் காலனித்துவ பாணியில் அமெரிக்க நிர்வாகத்தை நீடிக்கச் செய்வதற்கு நீண்ட கால அடிப்படையில் அமெரிக்க மக்கள் பெருமளவில் தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும், அதற்கு அமெரிக்க மக்களை அணிதிரட்டுவதற்கு தன்னை சரியான வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதற்கு கெர்ரி தயாராகிறார். உள்நாட்டில் சமூக செலவினங்களை வெட்டவேண்டிவரும், கூடுதல் இராணுவம் தேவைப்படும் அதற்கு மீண்டும் கட்டாய இராணுவ சேவைத்திட்டத்தை கொண்டுவருவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.

ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்ததற்கான ஏகாதிபத்திய நோக்கங்களுக்கு கெர்ரி உடன்பட்டவர் என்பது நாடெர்க்கு தெளிவாக தெரியும், இந்த நோக்கங்களை அவர் பகிர்ந்து கொள்வதால்தான் அவர் அந்தப் பிரச்சனையை ஆட்சேபிக்கவில்லை. அமெரிக்க முதலாளித்துவ உறவுகளில் நாடெர் செயல்பாடு இடைவிடாது தொல்லைக்கொடுக்கும் பங்கை வகிக்கும் நிலைப்பாட்டை ஒத்ததாக உள்ளது. எப்போதாவது கடுமையாக, அமெரிக்க பெரிய நிறுவனங்களின் சில அம்சங்களை நாடெர் விமர்சிக்கிறார் என்பது உண்மையாயினும், ஆனால் அவர் ஒட்டுமொத்த இலாப முறையையும் சவால் விடவில்லை.

உள்நாட்டுப் பிரச்சனைகள் மற்றும் அமெரிக்க அரசியல் முறையில் பெரிய நிறுவனங்களின் செல்வாக்கு பற்றி நாடெர்-கெர்ரி கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் உள்ளடக்கியிருந்த போக்கு நிலவியது. நாடெர் குறிப்பிட்டதன் படி, ஜனநாயகக் கட்சி நுகர்வோர் பாதுகாப்பு, நலன்புரி செலவினங்கள், வர்த்தக நெறிமுறைகள் போன்ற பிரச்சனைகளில் பெரிய நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுப்பதின் அடிப்படையில் வலதுசாரி போக்கில் சென்று கொண்டிருப்பதாக புகார் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கெர்ரி ''என்னை எனக்கு முந்தியிருந்த தலைவர்களோடு ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய வேண்டாம். உங்களுக்கு பில் கிளிண்டன், அல்லது அல்கோர் அல்லது நாடாளுமன்ற ஜனநாயகக் கட்சி தலமையோடு கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கக் கூடும்..... ஆனால் நான் அதுவல்ல. நான் உங்களோடு சேர்ந்து போராடியிருக்கிறேன். பல்வேறு பிரச்சனைகளில் உங்களோடு உடன்பட்டிருக்கிறேன். செனட்டில் என்னுடைய சாதனை அடிப்படையில் என்னை மதிப்பிட வேண்டும்'' என்று பதிலளித்தார். இதை கெர்ரியின் உதவியாளரும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

இந்தக் கலந்துரையாடலை பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் பேட்டிகளில் நாடெர் உறுதிப்படுத்தியுள்ளார், கெர்ரின் பதில்கள் தனது ''செவிகளுக்கு இசைபோல்'' அமைந்ததாக கூறியுள்ளார். ''மானியங்கள், உதவித்தொகைகள் மற்றும் உடனடி உதவிகளை'' பெரிய நிறுவனங்களின் நலன்களுக்கு வழங்குவதை குறைப்பதிலும் தொழிற் சங்கங்களை வலுப்படுத்துவதிலும் ''பெரிய நிறுவனங்கள் புரிகின்ற குற்றங்கள், மோசடி,'' முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுப்பதிலும் ''பொதுவான உறுதிப்பாட்டை'' நாடேர் புகழ்ந்துரைத்தார்.

அமெரிக்க அரசியல் முறை பெரிய நிறுவனங்கள் கட்டுபாட்டில் இருப்பதை எதிர்ப்பதாக நாடெர் சொற்சிலம்பம் ஆடினாலும், ஜனநாயகக்கட்சி தேர்தல் நிதிக்கு மிகப்பெருமளவில் கம்பெனிகள் பணம் கொடுப்பது பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை. அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கணக்கின்படி புஷ்ஷைவிட கெர்ரிக்கு அதிகமாக தேர்தல் நிதி வழக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு மாநிலங்களில் நாடெரின் பெயர் வாக்குப் பதிவில் இடம் பெறுவதை ஜனநாயகக் கட்சி தலைவர்கள் எதிர்த்து நிற்கும் அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து மற்றும் மனுதாக்கல் செய்யப்பட்டதும் நாடெரின் வாக்குப் பதிவு மனுக்களுக்கு சட்டப்பூர்வமான ஆட்சேபனை தெரிவிக்கப் போவதாக ஜனநாயகக் கட்சித் தலைர்கள் அச்சுறுத்தி வருவது குறித்து கெர்ரியிடம் நாடெர் எதுவும் மூச்சுவிடவிலை.

மாறாக கெர்ரியை நாடெர் வானளாவ புகழ்கிறார். ''ஜனாதிபதிக்கு'' அதிகம் தகுதியுள்ளவர் என்று வர்ணிக்கிறார். சிறந்த பேச்சாளர், வேட்பாளர் என்று பாராட்டிவிட்டு வியட்நாம் போருக்கு எதிரான இயக்கதில் கெர்ரியின் பங்களிப்பை நினைவுபடுத்துகிறார். ''நீண்டகாலமாக அவரை எனக்குத் தெரியும்'', ஒரு 27-வயது இளைஞர் போர்க்களத்திலிருந்து திரும்பிவந்து, போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு தலைமை தாங்க முயலுகிறார் என்றால் அவரை எப்படி விரும்பாமல் இருக்க முடியும்?'' என்று நியூயோர்க் டைம்ஸிற்கு அளித்த பேட்டியில் நாடெர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது தேர்தல் பிரச்சாரத்தினால் கெர்ரியின் வாக்குகள் எந்த வகையிலும் பாதிக்கப்படமாட்டாது என்ற தனது கருத்தை நாடெர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார். மாறாக புஷ்ஷை தோல்வியடையச் செய்யும் முயற்சி வலுப்படுத்தப்படும் என்றும் நவம்பரில் வெள்ளை மாளிகையில் ஒரு ஜனநாயகக் கட்சிக்காரரை பதவியில் அமர்த்த உதவுமென்றும் நாடெர் வாதிட்டார். இந்த வாதம் அமெரிக்காவின் இரண்டு கட்சி முறைக்கு உண்மையான சுயேச்சை வேட்பாளராக நாடெர் வருவார் என்ற நாடகத்தை கேலிக்கூத்தாக்குவதாக அமைந்திருக்கிறது என்பதை சொல்லத்தேவையில்லை.

கெர்ரியை முன்னாள் துணை ஜனாதிபதியும் 2000-ல் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான அல்கோருடன் ஒப்பு நோக்கியுள்ளார். ''புதிதாக செழித்து வளர்ந்து கொண்டிருக்கும் மரத்திற்கும், மக்கிவிட்ட மரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு தான்'' கெர்ரி-க்கும் கோருக்கும் இடையே நிலவுவதாக நாடெர் குறிப்பிட்டார். கோர் மக்கிவிட்ட மரம் அசையாமல் நின்றார். இது போன்ற கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை. மூன்றாண்டுகள் துணை ஜனாதிபதியாக இருந்த போது இதுபோன்ற கூட்டங்களை விரும்பவில்லை. கெர்ரி மிகவும் வெளிப்படையானவர்'' என்று நியூயோர்க் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் நாடெர் குறிப்பிட்டுள்ளார்.

தனிமனிதரைக் குறிவைத்து கூறப்பட்ட இந்த முட்டாள் தனமான விமர்சனம் கூட அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது. 2000- தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் கோர் அமெரிக்க முதிலாளித்துவ அரசியலுக்குள் இடதுசாரிபக்கம் சாய்ந்தார். ''பயங்கரவாதத்தின் மீது போர்'' என்ற நடவடிக்கையில் ஜனநாயக உரிமைகள் மீது புஷ் நிர்வாகம் தாக்குதல் தொடுத்ததை கடுமையாக கண்டித்தார், ஈராக் மீது போர் தொடுக்கும் முடிவை எதிர்த்தார். இறுதியாக ஹோவார்ட் டீன் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார்.

ஜனநாயகக் கட்சி வேட்பாளர் நியமனம் பெறுவதில் டீன் தோல்வியடைந்ததும், கோர் தனது போர் எதிர்ப்பு உரைகளை நிறுத்திக் கொண்டார், கெரி -க்கு பின்னால் அணிவகுத்து நிற்கத் தொடங்கினார். கெரி-யின் போர்-ஆதரவு நிலைப்பாட்டை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார். எப்படியிருந்தாலும் கெர்ரி கோரைவிட ஓரளவிற்கு ''இடது'' அல்லது ''முற்போக்கானவர்'' என்று சித்தரிக்க முயல்வது நேர்மைக்குறைவானது போலவே அபத்தமானதும் ஆகும்.

பெரும்பாலான அமெரிக்கர்கள் போரை எதிர்க்கின்றனர் என்பதை நாடெர் மிகத்தெளிவாக அறிவார், போருக்கு எதிரான உணர்வு ஜனநாயகக்கட்சி வாக்காளர்களிடையே மிக அதிகமாக உள்ளது. ஈராக் போரையும் ஆக்கிரமிப்பையும் எதிர்த்து நிற்பதை தனது மையப் பிரச்சினையாக தீவிரமாக முன்னெடுக்கும் சுதந்திர வேட்பாளரின் பக்கம் வாக்காளர்கள் திரும்பிவிடக்கூடும் என்பதை சுட்டிக்காட்டிய பல முதலாளித்துவ விமர்சகர்கள், கெர்ரி இன் மிகப்பெரிய பலவீனமாகவும் அது ஆகிவிடக்கூடும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

ஆனால் நாடெர், ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் வேட்பாளரோடு சமரச உடன்படிக்கை செய்து கொள்வதற்காக, இதுவரை போர் பிரச்சனையை அமுக்கி வாசித்துக் கொண்டே வருகிறார். இது நாடெரின் கொள்கையற்ற அரசியல் தன்மையையும், எந்த அரசியல் முறையை அவர் எதிர்ப்பதாக காட்டிக்கொள்கிறாரோ அதையே ஊட்டி வளர்க்கவும் தற்காத்து நிற்கவும் தனது அரசியல் சேவைகளை அவர் தருவதையும் தெளிவாகவே எடுத்துக்காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved