World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

The politics of opportunism: the "radical left" in France

றிணீக்ஷீt யீஷீuக்ஷீ: tலீமீ க்ஷீஷீஷீts ஷீயீ றிணீதீறீஷீவீsனீணீ லீவீstஷீக்ஷீவீநீணீறீ க்ஷீமீஸ்வீமீஷ்

சந்தர்ப்பவாத அரசியல்: பிரான்சில் "தீவிர இடது"

பகுதி 4: பப்லோவாதத்தின் வேர்கள் - ஒரு வரலாற்று மறு ஆய்வு

By Peter Schwarz
22 May 2004

Back to screen version

பிரான்சில் "தீவிர இடது" எனக் கூறிக்கொள்ளும் கட்சிகளின் அரசியல் பற்றிய ஏழு கட்டுரை தொடரின் நான்காம் பகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி மே 15ம் தேதியும், இரண்டாம் பகுதி மே 17 அன்றும், மூன்றாம் பகுதி மே 19 அன்றும் (ஆங்கிலத்தில்) பிரசுரிக்கப்பட்டன.

பப்லோவாத அகிலத்தின் பதினைந்தாம் உலக மாநாட்டின் தீர்மானங்களை, ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மிசேல் பப்லோவினால் நான்காம் அகிலத்தின் திட்டங்களாக நுழைக்கப்பட்ட சந்தர்ப்பவாத திரித்தல்களோடு ஒருவர் ஒப்பிட்டுப்பார்த்தால், மிக வியக்கத்தக்க முறையில் உள்ள ஒற்றுமைகளை பார்க்கலாம். சிறிய மாற்றங்கள்தான் ஏற்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நான்காம் அகிலத்தின் செயலாளராக இருந்த பப்லோவும் அவருடைய ஆதரவாளர்களும், இரண்டாம் உலகப்போருக்குப் பின் முதலாளித்துவத்தின் ஸ்திரப்படுத்தல் மற்றும் ஸ்ராலினிசத்தின் தோற்ற அளவிலான பலம் இவற்றின் விளைவான அரசியல் அழுத்தங்களுக்கேற்ப மாற்றிக்கொண்டனர். முதலாம் உலகப் போருக்குப்பின் ஐரோப்பா சீற்றம் நிறைந்த வர்க்கப் போராட்டங்களால் அதிர்ந்தது; ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப்பின், ஐரோப்பாவில் நிலைமையை அமைதிப்படுத்துவது சாத்தியமாயிருந்ததுடன், ஒப்பீட்டளவில் மிகக் குறுகிய காலத்திலேயே முதலாளித்துவ வர்க்க ஆட்சியை மீண்டும் உறுதிப்படுத்த முடிந்தது.

அமெரிக்காவின் தலையீட்டைத் தவிர, இது மாஸ்கோ தலைமையிலான ஸ்ராலினிச கட்சிகள், ஒவ்வொரு புரட்சி எழுச்சியையும் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி முளையிலேயே கிள்ளி எறிந்ததாலும் இந்நிலை ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களிடையே பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்த இத்தாலியிலும் பிரான்சிலும் அவர்கள் பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பை நிராயுதபாணியாக்கி, தற்காலிகமாக முதலாளித்துவ அரசாங்கங்களில் பதவிகளை வகித்தனர். ஸ்ராலினும், நேச நாட்டுத் தலைவர்களும் யால்டாவிலும் பொட்ஸ்டாமிலும் கொண்டிருந்த உடன்பாடுகளை அவர்கள் நடைமுறைப்படுத்தினர்; அவற்றின்படி மேற்கு ஐரோப்பா முதலாளித்துவ வாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கவேண்டும் என்றும், சோவியத் ஒன்றியம் தன்னுடைய அதிகாரத்தை USSR எல்லையை ஒட்டியிருந்த இடைத்தடை நாடுகளின்மீது தனது ஆட்சியை செலுத்தலாம் என்றும் அனுமதிக்கப்பட்டு இருந்தது.

மாஸ்கோ அதிகாரத்துவத்திற்கு மேற்கிலோ அல்லது இடைத்தடை பகுதிகளிலோ புரட்சியை வளர்க்கும் அக்கறை இருந்தது இல்லை. அத்தகைய வளர்ச்சி, அதன் சொந்த எதேச்சாதிகார ஆட்சியினை தவிர்க்கமுடியாமல் கீழறுத்திருக்கும். எனவே, முதலாளித்துவ சொத்துடமை உறவுகளை தீவிரமாக சவால் செய்யாமல், கிழக்கு ஐரோப்பிய அரசாங்கங்களினால் செய்யப்படும் முடிவுகள்மீது கணிசமான செல்வாக்கை கொள்ள அது முற்பட்டது. இந்த முடிவை கருத்தில் கொண்டு, மக்கள்மீது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வதற்காக, செல்வாக்கிழந்திருந்த முதலாளித்துவ அரசியல்வாதிகளை செல்வாக்கான பதவிகளில் மீள அமர்த்தியது.

இந்நிலை 1947, 1948களில் பனிப்போர் தொடங்கியதுடன் மாறியது. தொழிலாள வர்க்கத்தின் பெருகிவரும் அழுத்தம் ஒருபுறமும், பெருகிவந்த மேற்கின் விரோதம் மறு புறமும் என்ற நிலையில், ஸ்ராலினிச அதிகாரத்துவம் தன்னுடைய பிடியை இறுக்கத் தலைப்பட்டது. தன்னுடைய முதலாளித்துவப் பங்காளிகளை அகற்றிவிட்டு, தன்னுடைய சொந்த அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக அது ஒரு பரந்த தேசியமயமாக்கும் திட்டத்தை மேற்கொண்டது. அதே நேரத்தில், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தன்னுடைய அடக்குமுறை நடவடிக்கைகளையும் அதிகரித்துக் கொண்டது; ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு (கிழக்கு ஜேர்மனி), ஹங்கேரி மற்றும் போலந்து நாடுகளில் 1950களில் தொழிலாள வர்க்கத்தின் கிளர்ச்சிகள் இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறையால் நசுக்கப்பட்டதிலிருந்து இதை அறியமுடியும்.

இந்த நிகழ்வுகள் பப்லோவை கிழக்கு ஐரோப்பாவில் தேசியமயமாக்கல் பற்றி, ஸ்ராலினிச அதிகாரத்துவம் அழுத்தத்தின் கீழ் ஒரு புரட்சிகரப்பங்கை ஆற்ற முடியும் என்று விளக்கம் கொடுப்பதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை. அமெரிக்காவிற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே மூன்றாம் உலகப் போர் தவிர்க்கமுடியாது என அவர் உறுதியாக நம்பியிருந்தார்; அதையொட்டி, அத்தகையை நிகழ்வு உலகம் தழுவிய உள்நாட்டுப் போரை ஏற்படுத்தும் என்றும் இதன்விளைவாக ஸ்ராலினிச அதிகாரத்துவம் ஒரு சமூக புரட்சியை நடத்துமாறு நிர்பந்திக்கப்படும் என்றும் அவர் கருதினார்.

1951ம் ஆண்டில் தன்னுடைய நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக்கிய முறையில் "நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்?" என்ற ஆவணத்தில் பப்லோ பின்வருமாறு சுருக்கமாகக் கூறியிருந்தார்: "நம்முடைய இயக்கத்தைப் பொறுத்தவரை புறநிலைச் சமூக யதார்த்தம் அடிப்படையில் முதலாளித்துவ ஆட்சியும் ஸ்ராலினிச உலகமுமாகத்தான் இருக்கின்றன. மேலும், நமக்குப் பிடித்தாலும் பிடிக்கவில்லை என்றாலும், இந்த இரண்டு கூறுபாடுகளும்தான் பெரிதும் இன்றைய புறநிலை சமூக யதார்த்தமாக விளங்குகின்றன, முதலாளித்துவத்தை எதிர்க்கும் சக்திகளில் அதிகப் பெரும்பான்மையானவை இப்போது சோவியத் அதிகாரத்துவத்தின் கீழ் அல்லது அதன் தலைமையின் செல்வாக்கின் கீழ் காணப்படுகின்றன." (1)

அக்காலக்கட்டத்தில் பிரெஞ்சுப் பகுதியின் ஒரு முன்னணி தலைவர் அந்நேரம் சரியாக விளக்கியது போல், இத்தகைய அணுகுமுறை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான பங்கினை கொடுக்க வில்லை. Marcel Bleibtreu கூறினார்: "அடிப்படை வர்க்கங்களுக்கு இடையே --பாட்டாளி வர்க்கத்திற்கும் முதலாளித்துவ வர்க்கத்திற்கும் இடையே உள்ள முரண்பாடுகளில் சமூக யதார்த்தம் இருப்பதாக நாங்கள் நினைத்தோம். இது தவறு, ஏனெனில் இப்பொழுதில் இருந்து இரண்டு வர்க்கத்தையும் கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆட்சி ஒரு முழுத்தன்மை உடையதாக ஆகிறது... அதாவது ஸ்ராலினிச உலகத்திற்கு சமனான எதிர் ஆற்றலாக உள்ளது." (2).

முதலாளித்துவம் மற்றும் ஸ்ராலினிசம் என்ற இரு முகாம்களிலும் சீற்றத்துடன் வெளிப்பட்டிருந்த வர்க்கப் போராட்டத்தை, பப்லோ அப்படியே புறக்கணித்திருந்தார். அவருடைய பார்வை, ஸ்ராலினிஸ்டுகளே பிரச்சாரப்படுத்தியிருந்த கூட்டுக்கள் தத்துவத்தின் எதிரொலியாக இருந்தது. அதுதான் 1947ல் தோற்றுவிக்கப்பட்டிருந்த கம்யூனிச தகவல் நடுவத்திற்கு (Cominform) அடிப்படையாக இருந்தது. இம்முறையின்படி, ஒவ்வொரு சோசலிஸ்டும் ஒரு ஏகாதிபத்திய சார்பு அல்லது ஏகாதிபத்திய எதிர்ப்பு முகாம் என கிரெம்ளினில் இருக்கும் அதிகாரத்துவத்துடன் சேரவேண்டும். ஸ்ராலினிசத்தைக் குறை கூறும் ஒவ்வொருவரும் ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாளர் என முத்திரையிடப்பட்டனர்.

பப்லோவின் புதிய நிலைப்பாடு ஸ்ராலினிசத்தை ஏற்றுக் கொண்டதுடன் மட்டும் மட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. அது நான்காம் அகிலத்திற்கு சுயாதீனமான பங்கு இல்லை என்றது, அதன் அர்த்தம் சாராம்சத்தில், அதைக் கலைத்துவிடவேண்டும் என்பதாகும்.

பப்லோவாதத்தின் வேர்கள் பற்றிய விரிவான ஆய்வில், டேவிட் நோர்த் குறிப்பிடுகிறார்: "தொழிலாள வர்க்கம் மற்றும் ட்ரொட்ஸ்கிசம் இரண்டும் அதிகசக்தி வாய்ந்த சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களை சர்வதேச தொழிலாளர் இயக்கத்திற்குள் தோற்கடிக்கும் திறனைக் கொண்டவை என்ற நம்பிக்கையை பப்லோ இழந்துவிட்டார்; மேலும் அவை பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவ தேசியவாதிகளின் செல்வாக்கை கடக்கமுடியும் என்ற நம்பிக்கையையும் இழந்துவிட்டார்." இதன் விளைவாக, "வேலைத் திட்டங்கள், முன்னோக்கு, கொள்கை பற்றிய அனைத்து பிரச்சினைகளையும் தடையற்ற சந்தர்ப்பவாத மூலோபாயத்திற்காக தாழ்த்திவிட்டார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அன்றாட நடைமுறைகள், இனி பாட்டாளி வர்க்கத்திற்கு கல்வி புகட்டுவது, அதன் வரலாற்றுப் பணிகள் தொடர்பாக அதனை நனவாக்குவது, மற்ற வர்க்கங்களில் இருந்து அதை வேலைத்திட்ட ரீதியாக அதன் நிபந்தனையற்ற மற்றும் அமைப்பு ரீதியான சுயாதீனத்தை அடையவைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிராது [....] மாறாக, இதன் பணி சரியானதைக்காட்டிலும் நன்மை பயக்கும் ஒன்றுக்கான சிறிய தந்திரோபாய மாற்றமாக குறைக்கப்பட்டு, இப்போதுள்ள ஸ்ராலினிச, சமூகஜனநாயக மற்றும் முதலாளித்துவ தேசிய அமைப்புக்களின் தலைமையை செல்வாக்கிற்கு உட்படுத்திவிடலாம், அவற்றை இடதுபுறம் இயக்கலாம் என்ற வெற்று நம்பிக்கையை கொண்டு, பல பத்தாண்டுகளின் போராட்டத்தில் வெற்றி கண்ட கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடு சரணாகதிக்கு உள்ளாக்கப்பட இருந்தது." (3)

இதை "மக்களின் உண்மையான இயக்கத்துடன் ஒன்றாகக் கலந்துவிடுதல்" என்று பப்லோ விளக்கினார். 1951 இலையுதிர்காலத்தில் நடைபெற்ற நான்காம் அகிலத்தின் முன்றாம் உலக மாநாட்டில், இவர் "சம்பிரதாயபூர்வமான சுதந்திரம் அல்லது எதுவாயினும், அனைத்து அமைப்புமுறை நெறிகளையும், ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் இயக்கம் எதில் தன்னை வெளிக்காட்டிக்கொள்கிறதோ அதில் உண்மையாக ஒருங்கிணைத்து விடவேண்டும்" என்ற அழைப்பை அனைத்து பேராளர்களுக்கும் விடுத்தார்.

அவர் வெளிப்படையாகவே சுயாதீனமான அரசியல் வேலைத்திட்டம் என்பதை குப்பையில் எறிந்துவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்: "கடந்தகாலத்தைவிட நம்மை சிறப்பித்துக் காட்டுவது, நம்முடைய இயக்கத்திற்குத் தன்மையை அளிப்பது, நம்முடைய வருங்கால வெற்றிகளை உறுதியாக அளக்கப் பயன்படுவது, இது பலநேரம் துரோகத்தனமான, சந்தர்ப்பவாத, இடைநிலைவாத, அதிகாரத்துவ மற்றும் முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ தலைமையினால், அடிக்கடி குழப்பப்படுகின்ற -- நிலவும் மக்கள் இயக்கத்தின் தன்மையை மதிப்பீடு செய்வதற்கான, புரிந்துகொள்வதற்கான எமது வளரும் திறனாகும் மற்றும் நம்முடைய இடத்தை இந்த இயக்கத்தில் கண்டறிந்து அதை இப்பொழுதுள்ள உயர்நிலைகளை விடக் கூடுதலான உயர் நிலைகளுக்கு உயர்த்தும் பெரு முயற்சியுமாகும்."(4)

Francois Vercammen இந்தப் பகுதியை தனக்கு முன் வைத்துக் கொண்டு 50 ஆண்டுகளுக்குப் பின் எழுதியது போல் கூறியுள்ளார்: "அத்தகைய உருவாக்கத்தில், புரட்சிகர மார்க்சிசவாதிகள், புரட்சிகர வேலைத்திட்டம் கொண்ட 'புரட்சிகர இயக்கத்தின்' முன்னணிப்படையில் இரகசியமாகவோ அல்லது வெளிப்படையாகவோ விரைந்து செலுத்தும் வகையில் 'நுழைவுவாதத்தை' செயற்படுத்தமாட்டார்கள். அவர்கள் இணைந்து முன்னெடுப்பவர்களாக, இணைந்து ஒழுங்கமைப்பவர்களாக, இணைந்த தலைவர்களாக இந்தப் பரந்த கட்சியில் இருப்பார்கள். அவர்கள் தற்போதைய போராட்டம், முன்னேற்றம் ஆகியவற்றின் அனுபவத்தை, சோசலிசத்திற்காக போராடும் திறனுள்ள ஒரு பரந்த முதலாளித்துவ - எதிர்ப்புக் கட்சியை நோக்கி இணைந்து முன்னேறுவர். (5)

டேவிட் நோர்த் தன்னுடைய பப்லோவாதத்தைப் பற்றிய பகுப்பாய்வில் விளக்கிக் காட்டுவதுபோல், இந்த அணுகுமுறை வர்க்கப்போராட்டத்தின் ஒரு நூற்றாண்டு மையப் படிப்பினையை நிராகரிக்கிறது. இது அரசியல் அதிகாரத்திற்கான தொழிலாள வர்க்கத்தால் நடத்தப்படும் போராட்டத்தில் நனவான தலைமையின் முக்கியத்துவத்தை மறுக்கிறது.

மார்க்சிசத்திற்கு முற்றிலும் எதிரிடையான கோட்பாட்டுமுறையை, பப்லோவாதம் அடிப்படை அணுகுமுறையாகக் கொண்டுள்ளது. நோர்த் இதைப் பற்றிக் கூறுவதாவது: "புறநிலைவாதத்தின் தன்மை புரட்சிகரமான செயல்முறை நடவடிக்கை என்பதைவிட ஆழ்ந்து சிந்தித்தல், போராட்டத்தைவிட நன்கு கவனித்தல் என்பது ஆகும்; எது கட்டாயம் நடக்க வேண்டும் என்பதை விளக்குவதைக் காட்டிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நியாயப்படுத்துகின்றது. இந்தவழியின் மூலம் கோட்பாட்டு முறைக்கு ஒரு முன்னோக்கு கிடைத்தது, இதில் ட்ரொட்ஸ்கிசம் வரலாற்றின் போக்கை மாற்றுவதற்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் உறுதிபடைத்த ஒரு கட்சியின் செயல்முறை நடவடிக்கைக்கு வழிகாட்டும் கொள்கை விளக்கமாக பார்க்கப்படவில்லை; மாறாக வரலாற்று வழிவகையில் சோசலிசம் இறுதியாக பாட்டாளி வர்க்கம் அல்லாத, நான்காம் அகிலத்திற்கு விரோதப்போக்கு காட்டும் சக்திகளால்தான் அடையப்பட முடியும் என்ற வரலாற்று வகைக்கான விளக்கம் கொடுக்கப்படுகிறது. இதுவரை ட்ரொட்ஸ்கிசத்திற்கு நிகழ்வுகளில் ஏதேனும் நேரடிப் பாத்திரம் இருப்பதாக மதிப்பு கொடுக்கப்படுகிறது என்றால், அது ஸ்ராலினிஸ்டுகள், நவீன ஸ்ராலினிஸ்டுகள், அரைகுறை ஸ்ராலினிஸ்டுகள், மற்றும் ஏதேனும் ஒருவகை குட்டிமுதலாளித்துவ தேசியவாதிகள் ஆகியோரது நடவடிக்கைகளை நனவற்றமுறையில் வழிகாட்டும் ஒரு வகை ஆழ்மன நிகழ்ச்சிப்போக்காக மட்டுமே இருந்தது என்பதாகும்." (6)

அனைத்துலகக் குழு நிறுவப்படல்

பப்லோவின் புதிய கருத்துக்களுக்கு சவால் இல்லாமல் போய்விடவில்லை. பிரெஞ்சுப் பகுதிதான் முதலில் எதிர்ப்பை தெரிவித்தது.

போர் முடிவடைந்த பின்னர், Parti Communiste Internationaliste (PCI சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி) கணிசமான செல்வாக்கை அடைந்திருந்தது. 1946ல் இந்த அமைப்பு கிட்டத்தட்ட 1,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்து பாராளுமன்றத் தேர்தல்களில் 11 வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது; அவர்கள் இரண்டிலிருந்து ஐந்து சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தனர். அதன் செய்தித்தாளான La Verite வெளிப்படையாக செய்தித்தாள் விற்பனைக் கடைகளில் விற்கபட்டுவந்ததுடன் பரந்த முறையில் வாசகர்களையும் கொண்டிருந்தது. இதன் செல்வாக்கு ஏனைய அமைப்புக்கள்மீதும் படர்ந்திருந்தது. மொத்தம் 20,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்த சோசலிச இளைஞர் அமைப்புக்களின் முழுத் தலைமையும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளை ஆதரித்து வந்தனர்.

ஆயினும், PCI அரசியலில் வலுப்படாதிருந்தது. 1947ம் ஆண்டு, சமூகஜனநாயக SFIO வலதுபுறம் தீவிரமாக திரும்பி, தன்னுடைய இளைஞர் பிரிவைக் கலைத்து அதன் ட்ரொட்ஸ்கிச தலைமையையும் கலைத்துவிட்டது. இந்த நிகழ்வுகள் PCIக்குள் ஓர் ஆழ்ந்த நெருக்கடிக்கு இட்டுச்சென்றது.

இதற்கு விடையிறுக்கும் முறையில் எத்தகைய புரட்சிகர முன்னோக்கையும் விலக்கிவிடுவது என வலதுசாரி முடிவு எடுத்தது. 1947ல் PCI யின் தலைவராக இருந்த Yvan Craipeau, பின்கருத்தாக எழுதினார்: "PCI இன் புரட்சிகர முன்னோக்குகள் உண்மைநிலைக்கு இயைந்த அளவு இல்லை என்பது தெரியவந்தது. 1917ல் ரஷ்யா இருந்தது போல் பிரான்ஸ் இல்லை: பெரும்பாலான மக்கள் ஆட்சிக்கு எதிராக தாக்குதல் நடத்தத் தயாராக இல்லை; வேலைநிறுத்தம் என்பதை அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு ஒரு படியாக நினைக்காமல் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளும் கருவியாக மட்டும்தான் நினைத்தனர் என்பதும் தெரியவந்தது. அவர்களுடைய கம்யூனிஸ்ட், சோசலிச அமைப்புக்களுடைய கொள்கைகள் அவர்கள்மீது ஒருதலைப்பட்சமாக சுமத்தப்பட்டிருக்கவில்லை என்பதும், அவர்களுடைய உளப்பாங்கைத்தான் ஓரளவு பிரதிபலித்தன என்பதும் தெரியவந்தது. மீண்டும், அரசியல் மதிப்பீட்டையும் நோக்குநிலையையும் தீவிரமாக மறு பரிசீலனைக்கு உட்படுத்துவது அவசியமானது என்று காணப்பட்டது." (7)

தொழிலாளர்களின் "உளப் பாங்கு" ஸ்ராலினிச, சமூக ஜனநாயகவாதிகளுடைய கொள்கைகளுக்கு காரணம் என்று கூறியதில், Craipeau உண்மைநிலையை திரித்துக் கூறிவிட்டார். 1947ம் ஆண்டு, ஸ்ராலினிஸ்டுகளின் சார்வாதிகாரப் போக்கிற்கு எதிராக பிரெஞ்சு தொழிலாள வர்க்கம் கிளர்ந்து எழுந்தது; ஸ்ராலினிஸ்டுகள், சோசலிஸ்டுகளுடனும், முதலாளித்துவ தீவிரப் போக்கினருடனும் அரசாங்கத்தில் இருந்துகொண்டு, தேசியப் பொருளாதாரம் மீட்கப்படவேண்டும் என்ற பெயரில் கடுமையான தியாகங்களை தொழிலாளர்களிடம் இருந்து கோரினர். இதன் விளைவாக வேலைநிறுத்தங்கள் அலைபோல் கார்த் தொழிலில் ஏற்பட்டு ஸ்ராலினிச ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த தொழிற்சங்கமான CGT இன் கட்டுப்பாட்டில் இருந்து அகன்று ஒரு குறுகிய காலத்தில் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலைமைக்கு வந்தது. பெரும் சீற்றத்தை திசைதிருப்பும் வகையில் ஸ்ராலினிஸ்டுகள் அரசாங்கத்தில் இருந்த தங்கள் மந்திரியை திரும்ப அழைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாயினர்.

PCI க்குள், Craipeau வைச்சுற்றியிருந்த வலதுசாரியினர் விரைவில் பெரும்பான்மையை இழந்தனர். அவர் 1948ம் ஆண்டு Rassemblement Démocratique Révolutionnaire (RDR) என்னும் மெய்யியலாளர் Jean-Paul Sartre ஆல் தோற்றுவிக்கப்பட்டிருந்த இடதுசாரிக்குழுக்கள் கூட்டணியில் கட்சியைக் கரைத்துவிட வேண்டுமென்று போராடியதை ஒட்டி வெளியேற்றப்பட்டார். Sartre உடைய RDR ஒரு சிலமாதங்களிலேயே கலைந்து போயிற்று. கட்சியில் வலதுசாரிப் பிரிவினர் பலர், மிசேல் றொக்கா உடைய ஐக்கிய சோசலிசக் கட்சியில் சேர்ந்தனர்; இக்கட்சி 1970ம் ஆண்டு François Mitterand உடைய சோசலிசக் கட்சியுடன் இணைந்தது.

Craipeau உடன் ஏற்பட்ட மோதல் PCI ஐ பப்லோவுடன் போராட்டம் நடத்த தயார் செய்திருந்தது. பப்லோ பிரெஞ்சுப் பகுதிக்குள் தன்னுடைய அரசியல் திரித்தல்களை எதிர்த்தவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில், அதிகாரத்துவமுறையில் 1952ம் ஆண்டு பெரும்பாலான கட்சிக்காரர்களை கட்சியை விட்டு வெளியேற்றியிருந்தார். அவர் Pierre Franke மற்றும் Ernest Mandel இவர்களுடைய தலைமையில் இருந்த கட்சிச்சிறுபான்மையை நம்பியிருந்தார். வரவிருந்த ஆண்டுகளில் இந்த இருவருமே பிரெஞ்சு, மற்றும் சர்வதேச பப்லோவாதத்திற்கு முக்கிய ஆதரவுதரும் பேச்சாளர்களாயினர்.

இறுதியில் 1953ம் ஆண்டு, நான்காம் அகிலத்தின் பல பிரிவுகளும் வெளிப்படையாக பப்லோவை எதிர்த்து வெளிவந்தன. நவம்பர் 16ம் தேதி அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரான ஜேம்ஸ் பி. கனன் உலகெங்கிலும் இருக்கும் ட்ரொட்ஸ்கிஸ்டுகளுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி, பப்லோவினால் முன்னெடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் குறித்து உறுதியாகவும் முழுமையானதும் ஆன விளங்கங்களை கொடுத்தார். தன்னுடைய இறுதி ஆண்டுகளில் ட்ரொட்ஸ்கி சோசலிச தொழிலாளர் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழகியிருந்ததனால், சர்வதேச இயக்கத்தில் இதற்கு கணிசமான செல்வாக்கு இருந்திருந்தது.

"இப்பொழுது முழு நனவோடும், வேண்டும் என்றும் பலநாடுகளில் வரலாற்று ரீதியாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ட்ரொட்ஸ்கிச உறுப்பினர்களை சீர்குலைக்கவும், பிரிக்கவும், உடைக்கவும் நான்காம் அகிலத்தையே கரைத்துவிடுவதற்கும்" பப்லோ பிரிவு (கன்னை) முயன்று வருகிறதென பகிரங்கக் கடிதம் குற்றஞ்சாட்டியது. "பப்லோவாத திரித்தல்வாதத்திற்கும் மரபுவழியிலான ட்ரொட்ஸ்கிசத்திற்கும் இடையே உள்ள பிளவு பெரிதாகிவிட்டதால் அரசியல் முறையிலோ, அமைப்பு முறையிலோ சமரசம் என்பது காணப்படமுடியாததாகிவிட்டது" என்றும் அது முடிவுரைத்தது.

இந்தப் பகிரங்கக் கடிதம் வெளியேற்றப்பட்டிருந்த பிரெஞ்சு பிரிவின் பெரும்பான்மை மற்றும் பிரிட்டிஷ் பகுதி உள்பட மரபுவழியிலான அனைத்து ட்ரொட்ஸ்கிஸ்டுகளையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் ஒன்றுபடுத்தியது.

பப்லோவாதம் பற்றிய இருப்புநிலைக் குறிப்பு

இந்தத் தொடரின் நோக்கம் பப்லோவாத வரலாற்றைப் பற்றி விரிவாக எழுதுவது அல்ல. (1953ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் பிளவிற்கு பின்னர் பப்லோவை பின்தொடர்ந்தவர்கள் ஐக்கிய செயலகம் (United Secretariat) என்ற பெயரில் தங்களை ஒரு குழுவாக அமைத்துக் கொண்டனர்). அத்தகைய திட்டம் பல நூல்களைக் கொண்டுதான் முடிவடையும். பப்லோவாத அகிலம் முழுப் பொறுப்பு அல்லது பகுதிப் பொறுப்புக் கொண்ட அரசியல் பேரழிவுகளைப் பற்றிப் பட்டியல் போட்டால் கூட, அதற்கும் போதுமான இடம் இல்லை.

முன்னணி பப்லோவாதிகள் ஒரு புரட்சிகர முன்னணியினர் என்று ஊடாடுவதற்கும் சித்தரிப்பதற்கும் அரசியல் பிரமுகர்களையும் அமைப்புக்களையும் கண்டு அறிவதில் அவர்களின் தணியாத ஆர்வத்தை நிரூபித்திருந்தனர். அதிலும் இந்த விஷயத்தில் ஏர்னஸ்ட் மண்டேல் காட்டிய ஆர்வம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பலகாலங்களில் நிலைமையைப் பொறுத்து அவருடைய மாதிரிப்பட்டியலில் மார்ஷல் டிட்டோவிலிருந்து மாவோ வரையிலும், போலந்து ஸ்ராலினிஸ்ட் விளாடிஸ்லாவ் கோமுல்கா, பிடல் காஸ்ட்ரோ, சன்டினிஸ்டாக்கள், குழம்பிய மனத்தினரான GDR அதிருப்தியாளர் ருடோல்ப் பஹ்ரோ, பின்னர் தன்னுடைய கடைசி புத்தகத்தில் புகழ்ந்திருந்த மிகையீல் கோர்ப்பச்சேவ் வரை (இந்நூலை போரிஸ் யெல்டினுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார்) நீடிக்கப்பட்டிருந்தது.

இந்த அமைப்புக்களில் ஒன்றுகூட அல்லது தலைவர்களில் ஒருவர்கூட பப்லோவாதிகளின் எதிர்பார்ப்புக்களுக்கு ஈடுகொடுத்துவிடவில்லை. அவர்கள் தங்கள் அரசியலில் வலதுபுறம் தவிர்க்கமுடியாமல் சாய்ந்தனர், பெரும்பாலனவற்றில், அவர்களின் விழிப்பின்போது இடது அரசியல் பேரழிவை ஏற்படுத்தினர். இதனால் பப்லோவாதிகள் தளர்ந்துபோய்விடவில்லை. நீருக்குள் இருந்து வெளிப்படும் வாத்துக்களைப் போல், அவர்கள் தங்களுடைய இறகுகளை சிலிர்த்து அடுத்த பேரழிவிற்கு பின்னனால் பாய்ந்து மூழ்கினர். அவர்களின் அரசியல் செயற்பாட்டின் முடிவுகளுக்கான தங்களின் சொந்தப் பொறுப்பினை மறுத்தல், மற்றும் அவ்வாறே தொடர்தல், ஒவ்வொரு அரசியல் நிகழ்வையும் அனாமதேய வரலாற்று சக்திகளின் வேலை என்று அவர்கள் விளக்க விரும்பும் புறநிலை ரீதியான கண்ணோட்டத்தின் சிறப்பியல்பாகும்.

ஆயினும், பப்லோவாதிகளின் ஆலோசனைகளைக் கேட்டு அவற்றைப் பின்பற்றியவர்களுக்கு நிகழ்வுகள் எளிதாக இருந்துவிடவில்லை. ட்ரொட்ஸ்கிசத்தைத் தலைமுறை தலைமுறையாய் பின்பற்றியிருந்த தொழிலாளர்களும், இளைஞர்களும் தவறான வழியில் தள்ளப்பட்டு மன உறுதி அவர்களுக்கு குறைந்துபோயிற்று. இலத்தீன் அமெரிக்காவில் மண்டேலுடைய ஆலோசனேயைக் கேட்டு நகரங்களை நீங்கி காடுகளில் நடைபெற்ற கொரில்லாப் போரில் ஈடுபட்ட பல இளைஞர்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். தொழிலாள வர்க்கத்திடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் வெகு எளிதில் பாசிச துணை இராணுவத்தினரின் பிடியில் துவண்டனர்.

1953ம் ஆண்டு பிளவிற்கு பின்னர் பப்லோவும் மற்றய பிரெஞ்சு பப்லோவாதிகளும் நிபந்தனையற்ற முறையில் அல்ஜீரிய விடுதலை முன்னணிக்கு (FLN) தங்கள் பணிகளைக் கொடுத்தனர்; அதில் நிர்வாகப் பொறுப்புக்களான சட்டவிரோத செய்தித் தாள்களை அச்சிடுதல், கள்ள நோட்டுக்களை அச்சிடுதல், போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர். மொரோக்கோவில் ஒரு ஆயுத தயாரிப்பு ஆலையையும் தொடக்கினர். FLN பிரெஞ்சு காலனித்துவ ஆட்சியை வென்றவுடன், பப்லோ அல்ஜீரிய அரசாங்கத்தில் பணியிலமர்ந்தார். நாட்டின் தலைவரான பென் பெல்லாவின் சிறப்பு ஆலோசகர் என்ற முறையில் அவர் அல்ஜீரிய தொழிற்சாலைகளில் யூகோஸ்லாவியாவில் முதலில் தொடக்கப்பட்டிருந்த "தொழிலாளர் சுய நிர்வாகம்" என்ற முறையைக் கொண்டுவந்ததற்குப் பொறுப்புக் கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், அவர் அதிகாரபூர்வமாக அல்ஜீரிய அரசாங்கத்திற்கும் உலகெங்கிலும் இருந்த தேசிய இயக்கங்களுக்கும் இடையே உறவுகளை ஒருங்கிணைக்க முற்பட்டார். அங்கோலாவில் MPLA, மொசாம்பிக்கில் Frelimo, காங்கோவில் Désiré Kabila இவற்றுடன் அவர் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக்கொண்டார். ஆபிரிக்கா தழுவிய இயக்கம் (Pan-African Movement) இதற்குப் பின்னர் காலனித்துவ அடக்குமுறை, பொருளாதார பின்னடைவு என்று அது தொடங்கப்பட்ட காலத்தில் பப்லோ விட்டுச் சென்ற அளிப்புக்களில் இருந்து இன்னும் கடக்கமுடியாமல் தத்தளித்து நிற்கிறது.

சேகுவாரா உடன் சேர்ந்துகொண்டு, பப்லோ மூன்று கண்டங்களிலும் அமைக்கப்பட்ட ஒரு புதிய அமைப்பான, டிட்டோ-நேரு கண்டிருந்த கூட்டுசேரா இயக்கத்திற்கு இடதாக நின்ற அமைப்பு ஒன்றில் பங்கு கொண்டார். புதிய அமைப்பில் ஹோ சி மின், Kim II -Sung உடனும் கமால் அப்துல் நாசருடனும் சேர்ந்து சற்று ஆர்வம் காட்டினார். பென் பெல்லாவின் பெயரில் பப்லோ இந்த நாடுகளின் தூதரகங்களில் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அவர் சோவியத் அரசாங்கத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.

1965ம் ஆண்டு, பென் பெல்லா ஒரு வன்முறை ஆட்சிக் கவிழ்ப்பில் இராணுவத்தால் வீழ்த்தப்பட்டு Houari Boumedienne அதிகாரத்தை எடுத்தபோது, அல்ஜீரியாவில் பப்லோவாத நடவடிக்கைகள் திடீரென முடிவிற்கு வந்தது. MPLA மூலம் கிடைத்த ஒரு பாஸ்போர்ட் மூலம் பப்லோ நாட்டைவிட்டு தப்பி ஒட முடிந்தது; ஆனால் அவருடைய நண்பர்கள் சிலர் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாயினர். ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக் கொண்டவர்கள் நிபந்தனையற்ற முறையில் அல்ஜீரிய தேசிய முதலாளித்துவத்தினரிடம் சரணடைந்த நிலையில், அல்ஜீரிய தொழிலாள வர்க்கம், FLN- ஆல் எடுக்கப்பட்ட தவிர்க்க முடியாத இந்த வலதுபுற சாய்விற்கு முற்றிலும் அரசியல் ரீதியில் தயாரிப்பற்ற நிலையில் விடப்பட்டது.

இதே ஆண்டில் ஐக்கிய செயலகத்திற்கும் பப்லோவிற்கும் இடையிலான உறவில் ஒரு முறிவு ஏற்பட்டது. இவர்களுக்கிடையிலான வேறுபாடுகளில் மாஸ்கோவுக்கும் பீகிங்கிற்கும் இடையிலான பூசல் பற்றிய வேறுபாடுகளும் அடங்கியிருந்தன. அல்ஜீரிய அரசாங்கத்தில் வேலைபார்த்து வந்தபோது, கிரெம்ளினுடன் பப்லோ நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தார்; அதன் பங்கிற்கு ஐக்கிய செயலகம் மாவோ சேதுங்கை ஆதரித்திருந்தது. பப்லோவின் வழியில் இருந்து பிரிந்து போனாலும், ஐக்கியச் செயலகம், பப்லோவாத நிலைப்பாட்டின் அரசியல் அஸ்திவாரங்கள் பற்றிய சரியான மதிப்பீட்டை முறையாகக் கொண்டிருக்கவில்லை. அது முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களை துதிபாடுவதை தொடர்ந்து கொண்டிருந்தது. இது கொண்டாடிய வீரர்களில் ஒருவராக "இயல்பிலேயே மார்க்சிஸ்ட்" என்றழைக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோவும் இருந்தார்.

பப்லோவாதத்தின் பிற்போக்கு விளைவுகள் பப்லோ செல்லுவதற்கு ஓராண்டிற்கு முன்னரே இலங்கை நிகழ்வுகளில் காணக்கூடியதாக இருந்தன. ஐக்கியச் செயலகத்தின் இலங்கைப் பகுதியான, லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), தற்போதைய இலங்கை ஜனாதிபதியின் தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தலைமையிலான முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்திருந்தது. இந்தச்செயல் ஒரு அரசியல் நிகழ்ச்சிப்போக்கை தூண்டிவிட்டது, அது இறுதியில் இன்றளவும் தொடரும், தன்னையே அழித்துக் கொள்ளும் உள்நாட்டுப்போரில் நாட்டை மூழ்கடித்தது.

லங்கா சமசமாஜக் கட்சி இலங்கையில் தொழிலாளர் இயக்கத்தில் மிக முக்கியமான கட்சியாக இருந்தது. இதற்கு பாரிய மக்கள் ஆதரவு தமிழ், சிங்கள தொழிலாளர் என்ற இரு பகுதிகளிடையேயும் இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், இது ஒன்றுதான் இலங்கையின் புதிய அரசியலமைப்பை எதிர்த்த கட்சியாகும்; இந்த அரசியல் அமைப்பு பழைய பிரிட்டிஷ் காலனித்துவ அதிகாரத்தின் துணையுடன் இலங்கையின் முதலாளித்துவ ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் வகையில் இரு முக்கிய இனப்பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.

1953ம் ஆண்டில், LSSP பப்லோவைப் பற்றி சில கருத்துவேறுபாடுகள் கொண்டிருந்தபோதிலும், சோசலிசத் தொழிலாளர் கட்சியின் பகிரங்கக் கடிதத்தை ஆதரிக்கவில்லை. மாறாக, பப்லோவாத அகிலத்துடன் உறவுகளை சீராகவைத்துக்கொள்ளும் முயற்சிகளைத்தான் கொண்டிருந்தது. இதற்கு அடுத்த ஆண்டு, பப்லோவாதிகளின் ஊக்கத்துடன், LSSP யில் சந்தர்ப்பவாதப் போக்குகள் தலையெடுத்து, தேசிய முதலாளித்துவத்துடன் நேரடி அரசியல் கூட்டு வைக்கும் அளவிற்கு வளர்ந்தன.

இது 1964ம் ஆண்டு நிகழ்வுகளில் உச்சக் கட்டத்தை அடைந்தது. வரலாற்றிலேயே முதல் தடவையாக தன்னை ட்ரொட்ஸ்கிச இயக்கம் எனக் கூறிக்கொண்ட ஒரு கட்சி, முதலாளித்துவ அரசாங்கத்தில் நுழைந்தது. இது நான்காம் அகிலத்தை இலங்கையில் மட்டும் இல்லாமல் இந்தியத்துணைக் கண்டம் மற்றும் மூன்றாம் உலகம் என அழைக்கப்படும் பகுதி முழுவதிலும் செல்வாக்கிழக்க செய்தது.

லங்கா சமசமாஜக் கட்சி, பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் பங்குபற்றுவதற்காக கொடுத்த விலை, சிங்கள பிறஇன பழிப்பு வாதத்துக்கு (Chauvinism) அதன் நிபந்தனையற்ற அடிபணிவாகும். கூட்டரசாங்கத்தின் ஒரு பகுதி என்ற முறையில், LSSP (சிங்களம் உத்தியோகபூர்வமான தேசிய மொழி என நிறுவியது போன்ற) தமிழ் சிறுபான்மையினரை பாரபட்சப்படுத்தும் பல நடவடிக்கைகளை ஆதரித்தது.

இதன் விளைவாக, கிராமப்புறத்தில் இருந்த ஏழைத் தட்டுக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக இளைஞர்கள் தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படாமல் தடுக்கப்பட்டு அவர்கள் வேறு ஒரு நோக்குநிலையை நாடினர். பிரிவினைவாத இயக்கங்களான தமிழ் புலிகள் (LTTE) போன்றவை, தமிழர்களிடையே சுதந்திரமான தமிழ் அரசுக்கான ஆயுதமேந்திய போராட்டம் என்பதில் இவ் இளைஞர்களை அணிதிரட்டுவதில் வெற்றியடையவும் முடிந்தது. தெற்கே ஏழ்மையான கிராமப்புற பகுதிகளில், ஜனதா விமுக்தி பெருமுனை (JVP) போன்ற அமைப்புக்கள் செல்வாக்கு கொள்ளத் தலைப்பட்டன. ஆரம்பத்தில் மாவோயிசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த JVP விரைவில் தீவிர சிங்கள பிற இனபழிப்பு வாதத்தை (Chauvinism) தழுவி, ஒரு கட்டத்தில் பாசிச அரசியல் கூறுபாடுகளையும் தழுவியிருந்தது.

இலங்கையின் காட்டிக்கொடுப்பு, பப்லோவாதம் முதலாளித்துவ எதிர்ப்புரட்சி முகாமிற்குச் சென்றுவிட்டதற்கான மறுக்கமுடியாத நிரூபணத்தைக் கொடுத்தது. பப்லோவாத அகிலத்தின் வரலாற்றில், 1964ம் ஆண்டு காட்டிக் கொடுப்பு, 1914, ஆகஸ்ட் 4ம் தேதி, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி காண்பித்த முக்கியமான முறிவிற்கு ஒப்பானதாகும், அன்றைய தினம்தான் அக்கட்சி முதல் உலகப் போருக்கு ஆதரவு கொடுத்து வாக்களித்தது.

LCR - ன் தோற்றம்

1953ம் ஆண்டின் பிளவிற்கு பின்னர் பிரெஞ்சுப் பப்லோவாதிகள் மிக வறிய நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அமைப்பில் ஒரு சில டஜன் உறுப்பினர்களே இருந்தனர்; கட்சியில் தொழிலாளர்களும் இல்லை, தொழிற்சங்கங்களில் இதற்குப் பிரதிநிதித்துவமும் இல்லை. 1960 களில் இவர்கள் கம்யூனிஸ்ட் மாணவர் சங்கம் (Communist Student Union) என்ற பாரிசின் சோர்போன் பல்கலைக்கழக இலக்கியத்துறையைச் சேர்ந்த அமைப்பின் ஆதரவைப் பெற முடிந்தது. இந்தக் குழு அலன் கிறிவின் (Alain Krivine) என்பவருடைய தலைமையில் செயல்பட்டது; அவர் ஒரு ஸ்ராலினிஸ்டாக தன் அரசியல் வாழ்வை ஆரம்பித்திருந்ததோடு 1956ம் ஆண்டு மாஸ்கோவில் இளைஞர் விழா ஒன்றிலும் பங்கேற்றிருந்தார்.

அல்ஜீரிய போரில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) எடுத்திருந்த நிலைப்பாட்டைப் பற்றி விமர்சித்திருந்த கிறிவின், பப்லோவாதிகளுக்கு நெருக்கமானார். இவருடைய நான்கு சகோதரர்களில் இருவர் உண்மையில் சில காலமாக பப்லோவாத அமைப்பின் இரகசிய உறுப்பினராக இருந்தவர்கள் ஆவர். 1965ம் ஆண்டு, கிறிவின், மற்றும் சோர்போனில் உள்ள கம்யூனிஸ்ட் மாணவர் சங்கமும் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சில நூற்றுக் கணக்கான உறுப்பினர்கள் கிறிவினுடன் தங்களைச் சேர்த்துக் கொண்டு Ligue Communiste Revolutionnaire (LCR) ஐ தோற்றுவித்தனர். ஆயினும், பல உறுப்பினர்களுக்கு கிறிவினின் பப்லோவாதிகளுடனான உறவுகள் பற்றித் தெரியாமல் இருந்தது.

1968ன் மாணவர் இயக்கம் LCR விரைவில் வளர்வதற்கு வழிவகுத்தது; ஒரு குறுகிய காலத்தில் இக்கட்சியில் சில ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் சேர்ந்தனர். அரசியல் ரீதியாக, இது மாணவர்களின் பிரமைகளுக்கேற்ப தன்னை அமைத்துக்கொண்டு பல தடுப்புக்களிலும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. பப்லோவாதிகள் மாணவர்களின் தீவிர ஆர்வத்திற்கு துதிபாடி, அவர்களை புரட்சியின் புதிய முன்னணிப்படையினர் என அறிவித்தனர். 1969ம் ஆண்டு, பியர் பிராங் (Pierre Frank) தலைமையிலான PCI மற்றும் கிறிவின் உடைய LCR ஆகியன ஒன்றுபட்டு Communist League (Ligue Communiste) என்ற அமைப்பை உருவாக்கின; அது தன்னை 1973 ல் LCR என்ற பெயரில் மீண்டும் அழைத்துக் கொண்டது.

1968ம் ஆண்டில் பல்கலைக்கழக பகுதிகளில் (Latin Quarter) நிகழ்ந்த தடுப்புக்களில் கலந்து கொண்டு தன்னுடைய புரட்சித் தோற்றத்தைக் காட்டியதன் மூலம் --இந்தக் கூடுதலான இளைஞரின் உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகள், ஒரு திட்டமிட்ட அரசியல் செயல்பாட்டைவிட அதிகமாக இருந்தன-- மாணவர் எழுச்சி தளர்ந்த பின்னர், LCR ஸ்ராலினிச சுழல் வட்டத்திற்குள் மீண்டும் வந்தது. பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களிடையே நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் LCR விரைந்து வந்து பூசலிடும் பிரிவுகளில் ஒன்றைத் தழுவி அதை ஒரு புதிய "இடது" அமைப்பிற்கான அடிப்படை என அறிவித்தது; அது விரைவாக வலதிற்குப் போய் விட்டிருந்தது என்பதைப் பின்னரே கவனித்தது.

எடுத்துக்காட்டான வகையில் நடந்து கொண்டதற்கான சான்று LCR, PCF அதிருப்தித் தலைவர் Pierre Juquin க்கு 1988 ஜனாதிபதி தேர்தல்களில் கொடுத்த ஆதரவும் அடங்கும். இது LCR உடைய அரசியலுக்கு தக்க உதாரணமாக இருப்பதால், அதைப்பற்றிச் சுருக்கமாகப் பார்ப்போம்.

அடிப்படையில் Juquin வலதுபுறத்தில் இருந்து PCF ஐ தாக்கி வந்திருந்தார். இவர் "Euro-Communism" என இத்தாலிய, ஸ்பானிய கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கியிருந்த கருத்திற்கு நெருக்கமாக இருந்தார். இந்த அமைப்புக்கள் மாஸ்கோவில் இருந்து விலகி தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவிரும்பி, தங்களுடைய நாடுகளின் ஆளும் வர்க்கங்களுடன் கூடுதலான ஒத்துழைப்பை பெருக்கிக் கொள்ள முனைந்திருந்தன.

ஜோர்ஜ் மார்சே (Georges Marchais) தலைமையிலான பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி Euro-Communism இடம் இரு மனப் போக்கை கொண்டிருந்தது. 1976 லிருந்து PCF "பிரெஞ்சு வண்ணத்தில் சோசலிசம்" என்ற ஒரு திட்டத்தை பிரச்சாரம் செய்து, சோசலிஸ்டுகளுடனும், இடது தாராள வாதிகளுடனும் ஒரு பொதுத் திட்டத்தை கொண்டிருந்தது; ஆனால் சோசலிஸ்டுகள் தங்களை தந்திரமாகத் தாழ்த்திவிடுவரோ என்ற எச்சரிக்கை உணர்வும் இவர்களிடையே இருந்தது. 1977ம் ஆண்டு மார்சே, சோசலிஸ்டுகளுடன் உடன்பாட்டை முறித்துக் கொண்டு, தன் கட்சியின் நோக்குநிலையை மாஸ்கோ பக்கம் தீவிரமாகச் செலுத்தினார். இது பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, 1981ம் ஆண்டு சோசலிஸ்ட் கட்சித் தலைவர் மித்திரோன் தேர்தல்களில் வென்றபோது அவருடைய கூட்டணி ஆட்சியில் நுழைவதற்கு எந்தத் தடையையும் கொண்டிருக்கவில்லை.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் தெளிவாக மித்திரோன் தன்னுடைய பொருளாதாரக் கொள்கையில் வலதுபுறம் திரும்பியவுடன், பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திற்கு தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொண்டது. இதன் விளைவாக புதுப்பிக்கப்பட்டவர்கள் (Rénovateurs) என அழைக்கப்பட்ட ஒரு பிரிவு (கன்னை) எழுச்சி உற்றது, ஒருகாலத்தில் கட்சிப் பேச்சாளராக இருந்த Pierre Juquin, மார்சேயின் "மரபுவழிப் போக்கை" விமர்சித்து, பின்னர் சோசலிஸ்டுகளுடன் கூடுதலான ஒத்துழைப்பு வேண்டும் என்ற ஆதரவைக் கொடுத்திருந்தார்.

இதற்குப் பின்னர் Juquin பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதோடு 1988ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரபூர்வ பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு எதிராக நின்றார். அலன் கிறிவின் ஏற்கனவே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றாசிரியரான Jean Elleinstein உடன் 1970களில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். Elleinstein பிரெஞ்சு யூரோ கம்யூனிஸ்டுகளுடைய செய்தித் தொடர்பாளராகவும் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

Juquin, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், LCR தன்னுடைய செய்தித்தாள்களின் பங்கங்களை Juquin-க்குத் திறந்துவிட்டதுடன் அவருடைய ஜனாதிபதி தேர்தலின் பிரச்சாரத்தையும் அமைத்தது. இதையொட்டி, ஸ்ராலினிஸ்டுகள், முன்னாள் தீவிரப்போக்கினர், ஏமாற்றம் அடைந்திருந்த மாணவர்கள் அனைவரும் ஒன்றாகத் திரள்வர் என்று பப்லோவாதிகள் நம்பிக்கை கொண்டிருந்தனர். அவர்கள் முயற்சி வீணாயிற்று. Juquinக்கு மொத்தத்தில் இரண்டு சதவிகித வாக்குகள்தான் கிடைத்து, அவர் அரசியல் அரங்கிலிருந்தே விரைவில் மறைந்து போனார்.

பப்லோவாத அகிலத்தின் வலது சாரி வளர்ச்சி

பப்லோவாத அகிலத்தின் கொள்கைகள் வழமையாக முட்டுச்சந்திலும் அரசியல் பேரழிவிலும் முடிவுற்ற போதிலும், இது ஒரு அரசியல் போக்கு என்ற வகையில் பப்லோவாதம் தானாகவே மறைந்துவிடும் நிலை காணப்படவில்லை. அனைத்துலகக் குழுவே, பப்லோவாத போக்கை ஒத்த பல போக்குகளின் வளர்ச்சியை சந்தித்தது, மீண்டும் மரபுவழி ட்ரொட்ஸ்கிஸ்டுகள் தாங்கள் சிறுபான்மையாய் இருப்பதைக் கண்டனர்.

1963ம் ஆண்டு, எவ்விதமான சமரசமும் பப்லோவாதத்துடன் கூடாது என்று அறிவித்திருந்த பகிரங்கக் கடிதம் பிரசுரமாகி பத்து ஆண்டுகள் கடந்த பின்னர், அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) பப்லோவாத அகிலத்தில் சேர்ந்து கொண்டது. முன்பிருந்த கருத்து வேறுபாடுகளைப் பற்றி எந்த விவாதமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த ஐக்கியத்திற்கு அரசியல் அளவில் அடிப்படையாக இருந்தது பொதுவாக பிடெல் காஸ்ட்ரோவிற்குக் கொடுக்கப்பட்ட ஆதரவு ஆகும்.

1971ம் ஆண்டு, அனைத்துலகக் குழுவின் (International Committee) பிரெஞ்சுப் பிரிவான Organisation Communiste Internationaliste (OCI) தனியே பிரிந்தது. அது ஐக்கிய செயலகத்தில் இருந்தும் அதன் பிரெஞ்சு பகுதியான LCR உடனும் ஒதுங்கியே இருந்த போதிலும், சோலிஸ்ட் கட்சிக்கும், தொழிலாளர் சக்தி (Force Ouvrière) என்ற தொழிற்சங்கத்திற்கும், ஏற்ப முற்றிலும் தன்னை மாற்றிக்கொண்டது. அதேநேரத்தில் தன்னுடைய சந்தர்ப்பவாத உறவுகளை முன்னாள் காலனித்துவ நாடுகளிலுள்ள தேசிய முதலாளித்துவ கட்சிகளுடன் ஏற்படுத்திக்கொண்டது.

இறுதியாக, 1970 களில் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவான தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP), அதிகரித்த அளவில் பப்லோவாத நிலைப்பாட்டிற்கு மாற்றிக் கொண்டது; தேசிய விடுதலை இயக்கங்கள், பிரிட்டிஷ் தொழிற்சங்கம், தொழிற் கட்சி அதிகாரத்துவம் மற்றும் இறுதியில் மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவம் என்று எல்லாவற்றின் மீதும் இது கொண்ட போக்கு பப்லோவாதத்தை ஒட்டி இருந்தது. இந்த செயல்முறை ஒரு ஆழ்ந்த உள்நெருக்கடிக்கு வழிவகுத்து, இறுதியில் 1985ம் ஆண்டு கட்சியின் உடைவில் உச்சக் கட்டத்தை அடைந்தது.

இன்று, அனைத்துலகக் குழு, பப்லோவாதத்திற்கு அடிபணிவதை எதிர்த்து அமெரிக்கா, இலங்கை, பிரிட்டன் ஆகியவற்றில் போராடிய சக்திகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது; இவற்றைத் தவிர மேலும் புதிய பகுதிகள் இப்போராட்டத்தின் அடிப்படையில் இதில் சேர்ந்துள்ளன. பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP)-ன் சீரழிவுக்கு எதிரான போராட்டம் மற்றும் இந்த அமைப்புடன் 1985-86 குளிர்காலத்தில் முறித்துக் கொண்டமை, அனைத்துலகக் குழுவின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை பிரதிநிதித்துவம் செய்கிறது. தொழிலாளர் புரட்சிக் கட்சி யின் சீரழிவின் வேர்கள் பற்றிய அடிப்படை விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல் உண்மையான மார்க்சிசத்திற்கு ஒரு மறுமலர்ச்சியை தொடக்கி வைத்தது. இதுதான் உலக சோசலிச வலைத் தளத்தில் காணப்படும் மிக உயர்ந்த அரசியல் பகுப்பாய்வில் இன்று பிரதிபலிக்கிறது. இந்தப் போராட்டம் சர்வதேச மார்க்சிச தொழிலாளர் இயக்கத்தை புதிப்பித்தலுக்கான அரசியல் மற்றும் தத்துவார்த்த அடிப்படையை ஏற்படுத்தி இருக்கிறது.

பப்லோவாதத்தின் வேர்களுடைய நீண்டகாலத் தன்மை மற்றும் மரபுவழி மார்க்சிசம் மீதான அதன் தற்காலிக ஆதிக்கம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிலவிய அரசியல் மற்றும் சமூக உறவுகளில் காணக் கிடைக்கின்றன. தொழிலாள வர்க்கம் மீதான ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகம் ஆகியவற்றின் மேலாதிக்கம் மற்றும் முன்னாள் காலனித்துவ நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான குட்டி முதலாளித்துவ தேசியவாதத்தின் மேலாதிக்கம் இவற்றை துணையாக கொண்டு பப்லோவாதம் தன்னை ஊட்டத்துடன் வளர்த்துக் கொண்டது. அது அத்தகைய மேலாதிக்கத்தை நியாயப்படுத்தும் அரசியல் மற்றும் தத்துவார்த்த வாய்பாடுகளை வளர்த்ததுடன் அதற்கு ஒரு இடது மூடுதிரையையும் கொடுத்தது. அதேநேரத்தில் வர்க்க சமரசத்தினால் பெரும் நன்மை அடையக்கூடிய சமுதாயத்தின் தட்டுக்களிலிருந்து -தொழிற்சங்க அதிகாரத்துவம் குட்டி முதலாளித்துவ அறிவுஜீவிப் பகுதியினர் மத்தியில்- அது உறுப்பினர்களை சேர்க்கக்கூடியதாக இருந்தது.

பப்லோவாதத்தை ஒரு புறநிலை சமூக இயல்நிகழ்ச்சி (சமூக நிகழ்வுப்போக்கு) என்று எடுத்துக் கொண்டால், அது தவிர்க்கமுடியாமல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த சோவியத் ஒன்றியத்தின் வாழ்வுடன் பிரிக்கவியலாத வகையில் பிணைந்திருந்தது எனக் கூறலாம். சோவியத் ஒன்றியம் இருந்த தன்மை ஒன்றே, மேற்கு நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தை வர்க்கப் போராட்டம் கூர்மையாக மாறாமல் இருக்கும் வகையில் பல நடவடிக்கைகளை வர்க்க சமரசம் மூலமும் தொழிலாள வர்க்கத்திற்கு சமூக சலுகைகள் கொடுப்பதின் மூலமும் குறைக்க வைத்தது. இது ஒரு பரந்த முறையில் சீர்திருத்தக் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் செயலாற்ற வழிவகை செய்திருந்தது. குளிர் யுத்தம் உருவாக்கிய சூழ்நிலைமைகள், தேசிய விடுதலை இயக்கங்கள் தங்களின் சொந்த நலன்களை முன்னெடுப்பதற்கான ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தை நிலைநாட்டுவதற்கு இரு எதிர் முகாம்களுக்கு இடையேயான முரண்பாட்டை பயன்படுத்தக் கூடியதாய் இருந்தது. அதேநேரத்தில், உலக அளவில், ஸ்ராலினிசம் ஒரு முக்கியமான எதிர்ப் புரட்சிக் கருவியாக தொடர்ந்து விளங்கியதுடன் தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு சுயாதீன நடவடிக்கைகளையும் முளையிலேயே கிள்ளி எறிந்து வந்தது.

1991ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பொறிந்ததானது பப்லோவாதத்தை ஓர் ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளியது. அதுவும் அதிகாரத்துவமே சோவியத் ஒன்றியத்தை கலைக்க எடுத்துக் கொண்ட முயற்சி, ஸ்ராலினிசத்தின் எதிர்ப்புரட்சிகர தன்மையை உறுதிப்படுத்த உதவியது; பப்லோவாதமோ ஒருபோதும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் அப்படிச் செயல்படாது என கூறிவந்திருந்தது. அதேநேரத்தில் இச் சம்பவமானது, சமூக சீர்திருத்தவாதிகள், குட்டி முதலாளித்துவ தேசிய வாதிகள் இவற்றின் அரசியல் செயற்பாடுகளுக்கான அடிப்படையை அகற்றியதுடன், இவ்வமைப்புக்கள் அனைத்தும் வலதுக்கு மாறும் தன்மைக்கும் சீரழிவுக்கும் இட்டுச்சென்றது.

ஐக்கியச் செயலகமும் துண்டு துண்டுகளாகப் போயிற்று. அதனுடைய பலபிரிவுகளும் பொறிந்தன அல்லது ஸ்ராலினிசக் கட்சிகளின் இடது பிரிவுகளில் தம்மைக் கரைத்துக் கொண்டன. மற்றவை ஒன்று சேர்ந்து ஸ்ராலினிச கட்சிகளின் பின்தோன்றல்களில் நுழைந்தன மற்றும் பெயரளவிற்கு மட்டுமே ஐக்கிய செயலகத்துடன் தொடர்பு கொண்டிருந்தன. எந்த அளவிற்கு பப்லோவாத சர்வதேச இயக்கம் நெருக்கடியின் பெரும் விளைவுகளை சந்தித்தது என்பது ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள பதினைந்தாம் மாநாட்டில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது கூறுகிறது: "எந்தப் புரட்சிகர அமைப்பும் இந்த நவீன-தாராளவாத, எதிர்ப்புரட்சி காலத்திலிருந்து சேதம் இல்லாமல் தப்பவில்லை. ஒவ்வொரு அமைப்பும் பின்னடைவைக் கண்டது. அனைத்துமே கொள்கை மாற்றத்தை கொள்ள வேண்டியதாயிற்று." இன்னொரு பகுதியில் 1985 முதல் 1995 வரையிலான பத்தாண்டுக்காலம் "நரகத்திற்கு இறங்கும் வழி" என அது கூறியிருக்கிறது.

முதலாளித்துவ அரசியலின் இடது சாரியாக இந்தக் கழுவாய் (கடும்துன்ப) நிலையில் இருந்து பப்லோவாத அகிலம் மீண்டும், எந்த விதமான மார்க்சிச கூப்பாடும் இல்லாமல் வெளிவந்துள்ளது. இது குறிப்பிடத்தக்க வகையில் வலது பக்கம் திரும்பியுள்ளது மற்றும் இது முதலாளித்துவ ஆட்சியின் சீர்திருத்தவாத முண்டுகால்களுக்கு இடது முகமூடி வழங்கும் பங்கை இனி காட்டவேண்டிய தேவையில்லை. மாறாக இதுவே அத்தகைய ஆட்சிக்கு ஒரு முண்டுகாலாக இருக்கலாம் என்ற பங்கைக் கொண்டுவிட்டது. முதலாளித்துவ ஆட்சியில் பங்கு என்பது, 1964ம் ஆண்டு இலங்கையில் பப்லோவாதத்தின் உச்சக் கட்ட காட்டிக்கொடுப்பாக (விதிவிலக்காகவும்) இருந்தது, இப்பொழுது விதிமுறையாக மாறிவிட்டது.

பப்லோவாத இயக்கத்தின் தலைவருள் ஒருவரும், இத்தாலியின் Rifondazione Communista இன் முக்கிய உறுப்பினராகவும் பல ஆண்டுகள் இருந்த, லிவியா மைடன் (Livio Maitan), பதினைந்தாம் மாநாட்டை, தன்னுடைய சொந்த அணியின் முதலாளித்துவ அமைச்சருக்கு வாழ்த்து என்றபடியே தொடங்கிவைத்தார் -பப்லோவாதிகளுக்கே கூட இது ஒரு புதுமையாகும். மைடன் 1964 நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிடும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, "இலங்கையில் நெறிபிறழ்வு" என வெறுப்புடன் விவரித்தார்.

அவர் கூறினார்: "கொள்கை அளவில், தொழிலாளர்கள் இயக்கத்தை வாட்டிய பாராளுமன்ற தடைப்பட்ட அறிவு மந்தநிலை என்ற இகழ்வான தன்மையை நாங்கள் எப்பொழுமே கொண்டதில்லை, இலங்கையிலிருந்து மற்ற கண்டங்களில் உள்ள நாடுகள் வரை சில சமயம் நாங்கள் தடம்மாறியதால் பாதிப்புக்குக்கூட ஆளாகி இருக்கிறோம். எனவே நாங்கள் அழுத்தங்களுக்கு பயந்ததில்லை, எங்களுடைய வளரும் செல்வாக்கின் எதிரொலியாக, கடந்த பத்தாண்டுகளில் நாங்கள் பல நாடுகளிலும் தொடர்ந்த முறையில் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பி இருக்கிறோம், பிரேசிலில் இருந்து பிலிப்பைன்ஸ் வரை, டென்மார்க்கில் இருந்து போர்த்துக்கல் வரை, மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும் அனுப்பி இருக்கிறோம். பிரேசிலில், தோழர் Miguel Rossetto, உடைய அரிய குணநலன்களும் போர்க்குண தன்மையும் நன்கு அறியப்பட்டது, இன்று அரசாங்கத்தின் ஒரு உறுப்பினராக வெளிப்பட்டு லூலாவின் தேர்தலில் முன்னோடியில்லாத அளவு மக்கள் வெற்றியை வெளிப்படுத்தியுள்ளார். மிகத்தீவிரமான விவசாயச் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது இவருடைய முக்கிய பொறுப்பாக உள்ளது; இவர் இதை "அமைப்பு முறையுடன் தொடர்பறுக்கும் பொது ஆற்றலுடன்" செயல்படுத்தி வருகிறார். அவருடைய போராட்டத்தை ஆர்வத்துடன் கண்டு நாம் ஆதரவும் கொடுப்போம்; அதில் எல்லா PT, MST (Landless Workers Movement) இவற்றின் முன்னேற்றகரமான பிரிவுகளுக்கும் பங்கு உண்டு; இந்தக் கடினமான முயற்சியைப் பற்றிய கவலையை அடக்கிக் கொண்டு, நாம் இந்தப் பேரவையில் அவருக்கு நம்முடைய மனமார்ந்த ஒற்றுமையைத் தெரிவிப்போமாக."

அடுத்த பகுதியில் இந்த "அமைப்பு முறையுடன் தொடர்பறுக்கும் பொது ஆற்றல்" நடைமுறையில் பிரேசிலில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆராய்வோம்.

Notes:

1) Quoted from David North, The Heritage We Defend, Labor Publications, Detroit, 1988, p. 187

2) "Where is Pablo Going?" by Bleibtreu-Favre, June 1951, in Trotskyism Versus Revisionism vol. 1, New Park Publications, London, 1974, p. 54

3) David North, The Heritage We Defend, in particular, chapters 13-18. Here, p. 191

4) ibid, p. 194

5) See part three of this series

6) The Heritage We Defend, p. 188

7) La Vérité 583, p. 2138) The Heritage We Defend, pp. 231, 240


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved