World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Long-time CIA "asset" installed as interim Iraqi prime minister

இடைக்கால ஈராக் பிரதமராக நீண்ட-கால CIA ''சொத்து'' நியமனம்

By Peter Symonds
31 May 2004

Back to screen version

ஈராக்கின் புதிய இடைக்கால பிரதமராக அயத் அல்லாவி (Ayad Allawi) நியமிக்கப்பட்டிருப்பது ஈராக்கிற்கு ஜனநாயகத்தை கொண்டு வருவதாகவும் ஜூன்-30-ல் இறையாண்மை கொண்ட அரசாங்கத்திடம் பொறுப்பை ஒபடைக்க தயாரிப்பு செய்துவருவதாகவும் வாஷிங்டன் கூறும் கூற்றுக்களை கேலிக்கூத்தாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், அவரது நியமனம் மிக கொச்சையானதாகவும், முறைகேடானதாகவும் அமைந்திருப்பது புஷ் நிர்வாகத்திற்குள்ளேயே உட்குழப்பம் முழுமையாக நிலவுவதை அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு ஈராக்கில் விரோதம் வளர்ந்து கொண்டு வருவதால் அதை தணியவைப்பதற்காக அமெரிக்கா ஈராக்கில் ஒரு இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஐ.நா மற்றும் அதன் சிறப்புத்தூதர் Lakhdar Brahimi-யின் சேவைகளை நாடியது. பல வாரங்கள் ஈராக்கில் இரகசியமாக Brahimi பேரம் நடத்திவந்தார், இந்த வாரம் அமெரிக்கா மற்றும் ஐ.நா பாதுகாப்பு சபையின் ஒப்புதலுக்காக புதிய அரசாங்கத்தை அறிவிக்கவிருந்தார்.

இந்தத் திட்டம் சென்ற வாரம் பிரதமர் தேர்வு தொடர்பாக நிலவிய கடுமையான கருத்து வேறுபாடுகளால் விரைவில் சிதைந்துவிட்டது. தற்போது புஷ் நிர்வாகம் தேர்நதெடுத்துப் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஈராக்கிய ஆளும் சபையில் (Iraqi Governing Council -IGC) இடம்பெற்றுள்ள எந்த அரசியல் பிரிவையும் சாராத தொழில்நுட்ப (Technocrat) நிர்வாகியை இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டுமென்று Brahimi தெளிவாக குறிப்பிட்டார். ஆயினும், அமெரிக்க நலன்களுக்கு முற்றிலும் கீழ்படிந்து நடக்காத ஒருவரை முக்கிய நிர்வாகப் (Executive) பொறுப்பில் நியமிப்பதை சகித்துக்கொள்ள வாஷிங்டன் தயாராக இல்லை.

பாக்தாத்திலுள்ள அமெரிக்க தலைமை நிர்வாகி (Proconsul) போல் பிரேமர் III கட்டளைப்படி, ஈராக்கிய ஆளும் சபை (IGC) சென்ற வெள்ளிக்கிழமையன்று Ayad Allawi யை பிரதமர் பதவியில் நியமிக்க முடிவு செய்தது. அந்தக் கூட்டத்திற்கு தனது சம்பிரதாய வாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக பிரேமர் அழைக்கப்பட்டார் மற்றும் பத்திரிகைகளுக்கு முடிவு அறிவிக்கப்பட்டது. இதனால் Brahimi எந்த முடிவையும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது, அவருக்கு எந்த வாய்ப்பும் இல்லை, Allawi தேர்வை வரவேற்பதைத் தவிர வேறுவழியில்லாத நிலை ஏற்பட்டது.

ஐ.நா அதிகாரிகள் அந்த முடிவை ஏற்றுக்கொண்டனர், ஆனால் அவர்கள் ஓரங்கட்டப்பட்டது பற்றி வெளிப்படையாய் சீற்றம் கொண்டிருந்தனர். ஐ.நா- பேச்சாளரான Fred Eckhard சென்ற வெள்ளிக்கிழமையன்று மிகுந்த ஆவேசத்தோடு இந்த முடிவு ''எதிர்பார்க்கப்பட்டது" அல்ல என்று குறிப்பிட்டார். ஐ.நா பொதுச்செயலாளர் கோபி அன்னன் அந்த முடிவை ''மதித்தார். ''மதித்தார் என்ற சொல் மிகுந்த கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகும்'' என எக்கார்ட் மேலும் குறிப்பிட்டார். ''இந்தத் தேர்வு செல்லுபடியாகும் என்று நான் கருதுகிறேன், ஆனால் அந்த நடைமுறை இன்னும் முற்றுப்பெறவில்லை. நாம் காத்திருப்போம். இந்தப் பெயரைப் பற்றி ஈராக் தெருக்களில் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்'' என்று Eckhard கூறினார்.

ஈராக்கிய ஆளும் சபை (IGC), வாஷிங்டனின் அரசியல் கையாட்களாக பரவலாக கருதப்படுவதால், பரவலாக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதால், IGC முடிவால் கவலை ஏற்படுத்தியுள்ளது என்பதை Eckhard குறிப்பிட்டுள்ள ''ஈராக் தெரு'' எதிரொலிக்கிறது. அந்த IGC-யே கூட பிரேமர் மற்றும் அமெரிக்க அலுவலர்களது முடிவிற்கு ரப்பர் ஸ்டாம்பாக செயல்படுவதற்கு மேலாகச் சென்றிருக்கிறது. IGC-யின் குர்திஷ் உறுப்பினர் மஹ்முது ஒத்மான் வாரக்கடைசியில் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கும்போது, அல்லாவி அமெரிக்காவால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மனிதர் என்று கூறினார். ''அவர் ஒரு அமெரிக்க வேட்பாளர். அவரை எங்களுக்கு முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். நாங்கள் அவரை ஆதரித்தோம்'' என்று குறிப்பிட்டார்.

''ஈராக் தெருவைப்'' பொறுத்தவரை அல்லாவி ஈராக் மக்களால் மிகப்பரவலாக வெறுத்து ஒதுக்கப்படுபவர். ஈராக் ஆய்வு மையம் சென்ற மாதம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வு அறிக்கையில் 17-முன்னணி ஈராக் அரசியல் தலைவர்களில் அடிமட்ட செல்வாக்குள்ளவர் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறார். கருத்துக்கணிப்பில் ஏறத்தாழ 40-சதவீத ஈராக்கியர்கள் அல்லாவிக்கு ''கடுமையான எதிர்ப்பு'' தெரிவித்துள்ளனர்----பென்டகனின் நவீன பழமைவாதிகளின் ஆதரவுபெற்ற அஹமது சலாபியைவிட இவரை எதிர்ப்பவர்கள் அதிகமாக உள்ளனர்.

அல்லாவி இந்த அளவிற்கு மக்களிடையே செல்வாக்கு குறைந்திருப்பதற்கு காரணத்தை கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. அவர் மேற்கு நாட்டு புலனாய்வு முகவாண்மைகளோடு நெருக்கமான இணக்கமும் பாத் கட்சியிடம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தும், சதாம் ஹூசைன் ஆட்சியின் அதிருப்தியாளர்களோடும் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். அவர் பிரேமர் மீது ''எதிப்பை'' தெரிவித்த ஒரு காரணம் ''பாத் கட்சியை ஒழித்துக்கட்டுவது'' பற்றிய பிரச்சனையில்தான். சதாம் ஆட்சியின் அரசு அடக்குமுறையின் முக்கிய அமைப்புக்களான-- இராணுவம், போலீஸ் மற்றும் புலனாய்வு சேவைகளில் பழைய அதிகாரிகளையே நீடிக்கச்செய்ய வேண்டும், அதன் மூலம் ஆக்கிரமிப்பிற்கு பெருகிவரும் எதிர்ப்பை சமாளித்துவிட முடியும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

IGC -ன் பாதுகாப்பு குழுவிற்கு அல்லாவி தலைமை வகிக்கிறார், ஈராக் இராணுவம் மற்றும் போலீஸ் படையை உருவாக்குவதில் அவருக்கு பங்குண்டு. அவரது துணைத்தலைவரான நூரி பட்ரானும் (Nouri Badran), உள்துறை அமைச்சகத்தை நடத்தி வரும் அல்லாவியின் ஈராக் தேசிய உடன்படிக்கை (Iraqi National Accord-INA) -ல் உறுப்பினராக உள்ளார். அவரது மைத்துனர் அலி அல்லாவி (Ali Allawi) பாதுகாப்பு துறையை நடத்தி வருகிறார். ஆயுதந்தாங்கிய அமெரிக்க எதிர்ப்புக் கிளர்ச்சியை சமாளிப்பதற்கு புதிய ஈராக் புலனாய்வு சேவையை உருவாக்குவது குறித்து CIA டைரக்டர் George Tenet-உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்ற டிசம்பரில் அல்லாவி (Allawi) CIA தலைமை அலுவலகத்திற்கு சென்றிருந்தார்.

நியூயோர்க் டைம்ஸில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஒரு கட்டுரையின்படி, சதாம் ஹூசைன் ஆட்சியில் சித்திரவதை மற்றும் கொலைகளுக்கு பொறுப்பான, வெறுக்கப்பட்ட Mukhabarat புலனாய்வு சேவையின் முன்னாள் ஊழியர்களை பதவியில் அமர்த்துவதற்கு அல்லாவிக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. அல்லாவியின் நண்பரும், IGC பாதுகாப்புக் குழுவின் மற்றொரு உறுப்பினருமான Ibrahim al-Janabi அந்த நகர்வை பொது அமைதியை நிலைநாட்ட அவசியமென்று நியாயப்படுத்தினார். ''சதாம் ஆட்சியில் கட்டமைப்பு முழுவதும் ஈராக்கில் பாதுகாப்பைச் சுற்றியே அமைக்கப்பட்டது. மக்களுடைய மனப்போக்கும், அந்தப் பாதுகாப்பைச் சுற்றியே வந்தது'' என்று ஜனாபி கூறினார்.

அல்லாவி CIA- மற்றும் இதர புலனாய்வு அமைப்புகளோடு நீண்டகால தொடர்புள்ளவர். பணக்கார ஷியைட் வர்த்தக (Merchant) குடும்பத்தில் பிறந்தவர், அவர் பாக்தாத்தில் மாணவராக இருந்த காலத்திலேயே பாத் கட்சியில் ஆர்வத்துடன் உறுப்பினரானார். 1971-ல் தனது மருத்துவக் கல்விக்காக லண்டன் சென்றார், 1975-ல் கட்சியிலிருந்து விலகினார். 1978-ல் லண்டனில் அவரை கொல்வதற்கான முயற்சி நடைபெற்றது, அப்போது ஈராக் உளவாளிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. அண்மையில் வாஷிங்டன் போஸ்ட்டிற்கு பேட்டியளித்த அல்லாவி (Allawi) ''அந்த நேரத்தில் பாத் கட்சியின் முன்னணி தலைவர்களோடும், முன்னணி இராணுவ அதிகாரிகளுடனும் நான் தொடர்பு வைத்திருந்தேன், சதாம் கட்சியைக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டார் என்ற எனது கருத்தை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

பாத் கட்சி அதிருப்தியாளர்களுடன் குறிப்பாக இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகளுடன் அவர் கொண்டிருந்த நோக்குநிலை அவர் ஹூசைன் ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் தரக்குறியீடாக இருந்தது. 1980-கள் முழுவதிலும் முதலில் பிரிட்டிஷ் M-16 அதற்குப்பின்னர் CIA- உதவியோடு அவர் வலைப்பின்னல் (Network) போன்ற உறவுகளை ஏற்படுத்திக்கொண்டு, மத்திய கிழக்கில் ஒரு வர்த்தகர் என்ற முறையில் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்தார். 1990 டிசம்பரில், முதலாவது வளைகுடாப்போர் நடந்து கொண்டிருந்த நேரத்திலேயே அல்லாவி ஈராக் தேசிய உடன்பாடு (INA) என்ற அமைப்பை, லண்டன் மற்றும் வாஷிங்டன் ஆதரவு மட்டுமின்றி ஜோர்டான், துருக்கி, மற்றும் செளதி அரேபியாவின் ஆதரவோடும் ஸ்தாபித்தார்.

அல்லாவி அவரது எதிரியான சலாபியின் ஈராக் தேசிய காங்கிரசிலிருந்து (Iraqi National Congres-INC) ஒதுங்கியே நின்றார், INC ன் அதிதீவிரமான மக்கள் கிளர்ச்சித் திட்டங்களிலிருந்து விலகிநின்று பாக்தாத்தில் அரசியல் சூழ்ச்சிகளில் ஈடுபடுவதையே விரும்பினார். சலாபி CIA வுடன் மோதி விலகிக்கொண்டதும், அல்லாவி தனது உறவுகளை வலுப்படுத்திக்கொண்டு சதாம் ஹூசைனுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பிற்கு ஒப்புதலைப் பெற்றார். பிரிட்டன் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியா ஆதரவோடு ஜோர்தானில் தனது தலைமை அலுவலகங்களையும், வானொலி நிலையத்தையும் 1996-ல் அமைத்தார். அடுத்த ஆண்டு கடைசியில் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி படுதோல்வியடைந்தது, அதன் பின் அவரோடு தொடர்புடைய உறுப்பினர்கள் பாக்தாத்தில் பரவலாக கைது செய்யப்பட்டனர்.

1998-ல் அமெரிக்கா நாடாளுமன்றம் இயற்றிய ஈராக் விடுதலை சட்டப்படி அமெரிக்காவின் நிதியைப்பெற்ற ஆறு அமைப்புக்களில் INA வும் ஒன்று. CIA- வுடன் அல்லாவி தொடர்ந்து தனது நெருக்கமான உறவுகளை நிலைநாட்டி ஒத்துழைத்து வந்தார், ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்துவதற்கு "புலனாய்வு தகவல்களை தந்த பிரதான மூல ஆதாரங்களில் அல்லாவியும் ஒருவர். குறிப்பாக பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயரால் தீயவழியில் பயன்படுத்தப்பட்ட 45- நிமிடங்களுக்குள் ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்களை (WMD) ஏவி விடக்கூடும் என்ற கூற்றுக்கு அல்லாவி தான் பொறுப்பு.

சதாம் ஹூசைன் ஆட்சி வீழ்ந்ததும், ஈராக்கிய ஆளும் சபையில் (IGC) அமெரிக்கா நியமித்தவர்களில் அல்லாவியும் ஒருவராவார். CIA மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் ஆதரவைப் பெற்றிருந்த அல்லாவி அமெரிக்காவில் அமெரிக்க ஊடகங்களிலும் அரசியல் ஸ்தாபனங்களிலும் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக சிறிய தொகையை செலவிட்டு தொழில்முறை ஆதரவுதிரட்டுபவர்களை நியமித்தார். அமெரிக்க, நீதித்துறைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் அல்லாவியின் பணக்கார ஆதரவாளர்கள் முன்னாள் அமெரிக்க இராஜதந்திரி Patrick Theros, சட்ட நிறுவனமான Preston, Gates Ellis & Rouvelas Meeds மற்றும் மக்கள் தொடர்பு நிறுவனமான Brown Lloyd James ஆகியோருக்கு 300,000 டாலர்களுக்கு மேல் வழங்கியுள்ளனர்.

இந்த நீண்டகால CIA ''சொத்து'' பாக்தாத்தில் இடைக்கால அரசாங்க தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது ஈராக் மக்களை மேலும் அந்நியப்படுத்தவே செய்யும், ஜூன் 30-ல் பதவியேற்கும் ஆட்சியில், அதன் அமைப்பில் ஈராக் மக்களுக்கு எந்த உரிமையுமில்லை. பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் ரீதியில் முற்றிலுமாக வாஷிங்டனை நம்பியே இருக்கும், புதிய ஈராக்கிய நிர்வாகம் வெள்ளை மாளிகையின் கூப்பிட்ட குரலுக்கு அடிபணியும் என்பதை இந்த நியமனம் உறுதிப்படுத்துகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved