World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா

Behind the political crisis in Taiwan

தாய்வான் அரசியல் நெருக்கடியின் பின்னணி

By John Chan
7 June 2004

Back to screen version

சென் சூய் பியான் (Chen Shui-bian) மே 20 ல் தாய்வானின் ஜனாதிபதியாக 2 வது முறையாக சம்பிரதாயபூர்வமாக பதவி ஏற்றுள்ளார். இருப்பினும், அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் அவரது தேர்தல் வெற்றிபற்றி பல்வேறு சட்டபூர்வமான ஆட்சேபனைகள் இன்னும் விசாரணையில் உள்ளன. மார்ச் 20 ல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்தவுடன் சென்னுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மிகப்பெரும் கண்டனப்பேரணிகள் நடாத்தப்பட்டன.

சென் தனது பதவியேற்பு உரையின்போது, தேர்தலில் கடுமையான போராட்டத்திற்கு உட்பட்ட மைய பிரச்சனையில் சமரசப்போக்கை மேற்கொண்டார். குறிப்பாக, சீனாவுடன் தாய்வானுக்குள்ள உறவு பற்றியதாகும். ஜனநாயக முற்போக்குக் கட்சியின் (Democratic Progressive Party - DPP) தலைவராக உள்ள சென், தாய்வானை சுதந்திர அரசாக பிரகடணப்படுத்தும் உறுதிமொழியின் அடிப்படையில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். இந்த முயற்சியை பெய்ஜிங் கடுமையாக எதிர்க்கிறது. புதிய ஜனாதிபதி ''தேசிய இறையாண்மை, ஆட்சிப் பரப்பு, ஒன்றிணைப்பு மற்றும் சுதந்திரம்'' ஆகியவை தொடர்பான அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அமுல்படுத்தப் போவதில்லை என்று மேலும் தனது உரையில் உறுதியளித்தார்.

ஆதலால், இந்த அரசியல் நெருக்கடி தற்காலிகமாக தணிந்திருக்கிறது என்றாலும் மோதலை தூண்டிவிட்ட அடிப்படைப் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்படவில்லை. தோல்வியடைந்த வேட்பாளரும், குவாமின்டாங்கின் (KMT) தலைவருமான லியான் சான் (Lien Chan) மக்கள் முதல் கட்சியுடன் (Peoples First Party - PFP) ஐக்கியப்பட்டு ஜனநாயக முற்போக்குக் கட்சியை சவால்விடும் சக்திவாய்ந்த எதிர்க்கட்சியை ஸ்தாபிக்க திட்டமிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது குவாமின்டாங் - மக்கள் முதல் கட்சி ஆகியன சுதந்திர பிரகடனம் வெளியிடுகின்ற எந்த நகர்வையையும் எதிர்த்து வந்தன. அதற்குப்பதிலாக, இந்த தீவு சீனாவுடன் ஒன்றிணைந்த பகுதி என்று வலியுறுத்தி வரும் பெய்ஜிங்குடன் அரசியல் இணக்கம் காண விரும்பின.

இந்த மோதலில் உடனடி அரசியல், தேர்தல் மற்றும் தனிப்பட்ட கருத்துக்கள் கூட பங்களிப்பு செய்திருக்கக்கூடும். ஆனால் தீர்க்க முடியாத பதட்டங்களின் நெருக்கடியானது, ஆளும் வட்டாரங்களுக்குள் நிலவுகின்ற ஆழமான வேறுபாடுகளின் உற்பத்திதான் என்பதை விளக்குகிறது. பெரிய நிறுவனங்களின் பல்வேறு தட்டின் மோதல் நலன்கள் இந்தப் பிரச்சனையில் நேரடியாக சம்மந்தப்பட்டிருப்பதால், இந்த இடரான நிலையில் தீவின் எதிர்கால திசை அமைந்திருக்கிறது.

சீனாவின் மலிவு கூலித் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்வதற்காக வெள்ளம் போல் குவிந்து கொண்டிருகிற சர்வதேச முதலீட்டாளர்களோடு தாய்வானின் பெரு வர்த்தகங்களின் குறிப்பிடத்தக்க பிரிவுகள் இணைந்து கொண்டிருக்கின்றன. தாய்வானின் மொத்த வெளிநாட்டு முதலீடுகளின் பாதி அல்லது சுமார் 70 பில்லியன் டாலர்கள் தற்போது சீனாவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. அங்கு குறைந்த பட்சம் 200,000 தாய்வானியர்கள் பெரிய நிறுவனங்களில் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். ஆதலால், தாய்வான் அரசாங்கம் பெய்ஜிங்கை பகைத்துக் கொள்ளுமானால், பதட்டங்கள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம் தாங்கிய மோதல்கள் என்பன தாய்வானின் வர்த்தகத்தில் பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது மட்டுமல்லாமல், சீனாவிலேயே பில்லியன்கணக்கான டாலர்கள் மதிப்பீட்டில் தீட்டப்பட்டுள்ள திட்டங்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.

அதே நேரத்தில், தாய்வான் பூகோள உற்பத்தி முறைகளோடு மிகப்பெருமளவிற்கு ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. தாய்வானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 80 சதவீதமானது ஏதாவது ஒரு விதத்தில் வெளிநாட்டு வர்த்தகத்தை சார்ந்திருக்கிறது. இந்தத் தீவின் வர்த்தக செல்வந்த தட்டினரைப் பொறுத்தவரை, தாய்வான் ஒரு அரை-அரசாக (semi-state) ஒரு சில சிறிய நாடுகளால் சம்பிரதாய ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருப்பதும், பல சர்வதேச அமைப்புக்களிலிருந்து ஒதுக்கப்பட்டிருப்பதும் மிகப்பெருமளவில் சகித்துக்கொள்ள முடியாத தடைக்கல்லாக இருக்கிறது.

தாய்வான் ஆளும் வர்க்கத்தினர் எதிர்நோக்கியுள்ள இக்கட்டான நிலையானது, பல்வேறு ஒன்றுக்கொன்று தொடர்புடைய காரணிகளால் உண்டுபண்ணப்பட்டுள்ளன: குறிப்பாக, 1990 களின் தொடக்கத்தில் குளிர்யுத்த கட்டுக்கோப்பு வீழ்ச்சியடைந்தது, பூகோள உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கால் பழைய தேசிய ரீதியாக நெறிப்படுத்தப்பட்ட பொருளாதாரம் சீர்குலைந்தது, மற்றும் 1997-1998 ல் ஏற்பட்ட ஆசிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து பொருளாதாரப் பிரச்சனைகள் ஆழமாகியது மற்றும் ஆசியாவின் இதர பகுதிகளிலும் சர்வதேச அளவிலும் தாய்வானிலும் பழைய அரச கட்டமைப்புகள் சிதைந்து கிடப்பது ஆகியன வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் ஆழமாக வேரூன்றிவிட்ட அடிப்படை பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளின் வெளிப்பாடாக இருக்கின்றன. இதற்கு முதலாளித்துவ வர்க்கத்திடம் முற்போக்கான தீர்வு எதுவும் இல்லை.

நெருக்கடிகளின் வரலாற்று அடிப்படைகள்

சீனாவும், தாய்வானும் பிரிந்து செல்வதற்கான ஊற்று இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பு நிகழ்ந்த விளைவுகளினால் ஏற்பட்டது. அப்போது சீனாவில், தேசியவாத குவாமின்டாங் அரசாங்கத்தை ---ஊழல் மிக்க முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் ஆட்சி நிலவியது--- மா ஓ சேதுங்கின் விவசாயிகளின் படை தூக்கி வீசியபோது, அவர்கள் 1949 ல் தாய்வானுக்கு தப்பி ஓடினார்கள். பின்பு, அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்போடு குவாமின்டாங் தாய்வானில் ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை ஸ்தாபித்ததோடு, எஞ்சியிருந்தவற்றைக்கொண்டு தான் சட்டப்பூர்வமான சீன அரசாங்கம் என்று வலியுறுத்தி வந்தது.

குவாமின்டாங்கின் தலைவரான சியாங் காய் சேக், சீனாமீது படையெடுத்து பெய்ஜிங்கில் ஆட்சியை அபகரித்துகொண்ட ''கம்யூனிஸ்ட்களிடமிருந்து'' அதிகாரத்தைக் கைப்பற்ற போவதாக அறிவித்தார். 1970 கள் வரை குவாமின்டாங் ஆட்சியானது, சீனக் குடியரசு என்று அழைக்கப்பட்டு ஐ.நா உட்பட சர்வதேச அரங்குகளில் சீனாவின் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டது. 1990 கள் வரை, தாய்வான் நாடாளுமன்றம் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்திருக்கிற அரசாங்கத்தின் அமைப்பு போன்று உருவாக்கப்பட்டிருந்ததோடு, அதன் 29 முக்கிய பகுதி (mainland) மாகாணங்கள் ஒவ்வொன்றின் ''பிரதிநிதிகளுக்கும்'' நாடாளுமன்றத்தில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.

வாஷிங்டனின் குளிர் யுத்தகால வார்த்தை ஜாலங்கள் எதுவாக இருந்தாலும், தாய்வானில் குவாமின்டாங் ஆட்சியில் ஜனாநாயக அம்சம் எதுவும் இருக்கவில்லை. 1890 களின் இறுதிக் காலத்திற்கு பின்னர் ஜப்பானின் ஒரு காலனியாக இருந்த தாய்வானை, சீனப்புரட்சிக்கு முன்னர் குவாமின்டாங் தன் கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டதோடு, எல்லாவிதமான உள்ளூர் எதிர்ப்புக்களையும் கொடூரமாக அடக்கியது. அதில், மிகவும் இழிபுகழ்பெற்ற சம்பவம் ஒன்று 1947 பெப்ரவரி 28 ல் நடைபெற்றது. அப்போது, தாய்வானில் நடைபெற்ற கண்டனப்பேரணி ஒன்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படையினர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக குவாமின்டாங் தனது பிரதிநிதிகள் நிறைந்த நாடாளுமன்றம் மற்றும் இராணுவச் சட்டங்களால் ஆட்சியை நடாத்தி வந்தது. 160 அடக்கு முறைச்சட்டங்கள், நெறிமுறைகள் மூலம் எல்லா வகையான அடிப்படை ஜனநாயக உரிமைகளும், குறிப்பாக பொதுக்கூட்டம் நடத்துகிற உரிமை, அரசியல் கட்சிகளை அமைக்கின்ற உரிமை உட்பட சகலதும் ரத்துசெய்யப்பட்டன. குறிப்பாக தொழிலாள வர்க்கத்திடமிருந்து வருகின்ற எதிர்ப்பு உட்பட எந்த அரசியல் எதிர்ப்பையும் அடக்குவதற்கு விரிவான ரகசிய போலீஸ் வலைப்பின்னல்கள் மற்றும் அரசு கட்டுப்பாட்டில் இயங்குகின்ற தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன.

1949 ற்கு பின்னர் சீனாவிலிருந்து இரண்டு மில்லியன் மக்கள் தப்பி ஒடிவந்தனர். ---அதில் பணக்கார வர்த்தகர்கள், குவாமின்டாங் அலுவலர்கள் மற்றும் இராணுவத்தினர்கள் அடங்குவர்--- குவாமின்டாங் திட்டமிட்டு தனது ஆட்சிக்கு அரசியல் அடிப்படையாக இனப் பிளவுகளை ஊட்டி வளர்த்ததோடு, தாய்வானின் பூர்வகுடி மக்களுக்கு எதிராக பாரபட்ச ஆட்சியை நடாத்தியது. அந்த அரசியலமைப்பில் 85 சதவீதமான மக்கள் அடங்கியதுடன், மான்டரின் (Mandarin) உத்தியோகபூர்வ மொழியாக உயர்த்தப்பட்டது. வானொலியிலும், பள்ளிக்கூடங்களிலும் பாரம்பரிய மொழிகளும், மரபு வழக்கங்களும் தடுக்கப்பட்டன.

மிக உயர்ந்த அளவிற்கு நெறிமுறைப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும், சியாங் குடும்பத்தினர் என்று அழைக்கப்பட்டவர்கள், சியாங் காய் சேக்குடன் சம்மந்தப்பட்ட அரசியல் அடிவருடிகள், பணக்கார வர்த்தகர்கள் ஆகியோர் மேலாதிக்கம் செலுத்தினர். பெரும் தொழிற்சாலைகளும், வங்கிகளும் குவாமின்டாங் ஆட்சியாளர்களால் ''தேசியமயமாக்கப்பட்டு, அவை ''நான்காண்டுத் திட்டம்'' மூலம் நெறிமுறைப்படுத்தப்பட்டன. பரவலான விவசாயப் பொருளாதாரம் அரச மானியங்களில் சார்ந்திருந்ததோடு, சலுகைமிக்க வர்த்தக ஒப்பந்தங்கள் ஆகியவை அமெரிக்காவையும் அதன் கூட்டணி நாடுகளையுமே கணிசமாக நம்பியிருந்தன.

1960 களின் கடைசியிலும், 1970 களின் துவக்கத்திலும் இந்தப் பொருளாதார உறவுகள் மாறத் தொடங்கியதால், தாய்வானும் ''ஆசியப்புலிகள்'' என்று அழைக்கப்பட்ட தென்கொரியா, ஹோங்கொங் மற்றும் சிங்கப்பூரும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கு அனுமதி வழங்கத் தொடங்கின. பெரும்பாலும் தாய்வானின் பூர்வகுடி மக்கள் நடாத்திய தனியார் நிறுவனங்கள் என்பன குறைந்த ஊதிய அடிப்படையைக் கொண்ட ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கின.

இந்த நிலையமையில் தாய்வான் ஒரு அரசியல் கொந்தளிப்புக்கு முகம் கொடுத்தது. வியட்நாமில் தோல்வியை எதிர்நோக்கிய வாஷிங்டன் ஆசிய நாடுகளில் தனது நலன்களை வளர்த்துக் கொள்வதற்கு ஒரு வழியாகவும், சோவியத் யூனியனுக்கு எதிராக சீனாவுடன் ஒரு உடன்படிக்கையை உருவாக்கிக் கொள்வதற்காகவும் 1971 ல் பெய்ஜிங்குடன் ஒரு அரசியல் நிலை நோக்கை உருவாக்கிக் கொண்டது. இதற்கு மா ஓ சேதுங் கேட்ட அரசியல் விலை என்னவெனில் ''ஒரே சீனா'' என்ற கொள்கை கோரிக்கையாகும். தாய்வான் உட்பட சீனா முழுவதற்கும் மக்கள் குடியரசுதான் சட்டப்பூர்வமான அரசாங்கம் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மிகப்பெரும்பாலான சர்வதேச அமைப்புகளிலிருந்து தாய்வானை ஒதுக்கிவிட வேண்டும் என்றும் சீனா கோரியது.

தாய்வானில் இதன் தாக்கம் உடனடியாக எதிரொலித்தது. குவாமின்டாங்கின் சீனக் குடியரசு, அதன் ஐ.நா உறுப்பினர் பதவியையும், அதன் வலுவான நண்பரான அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் இராஜதந்திர உறவுகளையும் இழந்தது. வாஷிங்டனும் ''இருபொருள் மூலோபாயத்தை'' தெளிவற்ற வகையில் நிலைநாட்டியதோடு, தாய்வான் மீது சீனாவின் இறையாண்மையை அங்கீகரித்தது. அதே நேரத்தில் சீனாவிலிருந்து எந்த இராணுவத் தாக்குதல் வந்தாலும் தாய்வானை தற்காத்து நிற்பதற்கு அமெரிக்கா உறுதியளித்தது. 1979 ல் நிறைவேற்றப்பட்ட தாய்வான் உறவுகள் சட்டம் அமெரிக்காவின் நிலைப்பாட்டை உருவாக்கியதன் மூலம் தாய்வானுக்கு ஆயுதங்களை விற்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.

தாய்வான், மலிவு கூலித் தொழிலாளர் அரங்காக குறிப்பாக ஜப்பானுக்கு மாறிக்கொண்டிருக்கிற கட்டத்தில், அது தனது சர்வதேச அங்கீகாரத்தை இழந்தது. 1972 ல் தைபேயில் (Taipei) இருந்த ஜப்பான் தூரதரக அலுவலகம் மூடப்பட்டதன் பின்னரும் இரண்டு தசாப்தங்களுக்கு இருதரப்பு வர்த்தகங்கள் 20 மடங்குகள் பெருகின. ஜப்பான் முதலீட்டுப் பொருட்களையும் உபகரணங்களையும் தாய்வானுக்கு அனுப்பியது. தாய்வான் பொருட்களை உற்பத்தி செய்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிற பிரதான அரங்காக மாற்றப்பட்டது. 1990 களின் துவக்கத்தில் தாய்வானின் பத்து தலைமை கார் தயாரிப்பு தொழிற்சாலைகளை ஜப்பான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அவற்றின் மிகப்பெரும்பாலான நேர்த்தியான சந்தைகளும் (supermarket chains) ஜப்பான் வசம் இருந்தன.

1980 களிலிருந்து தாய்வான், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகவும் மற்றும் ஜப்பானிலும் அமெரிக்காவிலும் உள்ள கம்பியூட்டர் இயந்திர சாதனங்கள் தயாரிப்பு தொழில்நுட்ப சந்தையாகவும் மாற்றப்பட்டது. பங்கு மார்க்கெட்டுகளும், தனியார் நிதி நிறுவனங்களும் தாய்வான் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற ஆற்றல் அடிப்படையில் வளர்ந்தன.

அரசியல் மாற்றம்

இந்த மாற்றங்கள் அனைத்துமே ஒருங்கிணைந்து குவாமின்டாங்கின் பொருளாதார மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை சீர்குலைத்தன. தாய்வானில் வளர்ந்துவந்த பெரிய கார்ப்பரேட் செல்வந்த தட்டானது குவாமின்டாங்கின் அரசியல் பிடியை தளர்த்தக் கோரியதுடன், அரசாங்கம் கொள்கை வகுக்கும்போது அதில் தனக்கொரு பங்கு இருக்கவேண்டும் என்றும் கோரியது. அதே நேரத்தில் சர்வதேச அங்கீகாரம் இல்லாததால் தாய்வானின் பொருளாதார அபிலாஷைகள் நிறைவேறுவதற்கு தடை ஏற்பட்டது. இதனால், தாய்வானின் பெரிய நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதற்கு பல சர்வதேச அமைப்புக்களை அணுக முடியாத நிலை ஏற்பட்டது.

இது பெய்ஜிங்கிற்கு ஒரு வாய்ப்பை வழங்கியதுடன், 1978 ல் பதவிக்கு வந்த டெங் ஷியாவோ பிங் தலைமையானது, சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளின் வேகத்தை அதிகரித்ததினால் முதலீடுகள் வளர்ந்தன. இதில் தாய்வானையும் இணைத்து சீனாவிற்குள் அதன் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 1980 களின் தொடக்கத்தில் டெங் ''ஒரு நாடு, இருமுறைகள்'' என்ற தத்துவத்தை விரிவாக்கினார். அந்தத் தீவின் மீது பெய்ஜிங்கின் இறையாண்மையை தைப்பே சம்பிரதாய முறையில் அங்கீகரிக்கிற வரை, டெங் தாய்வானுக்கு முழுமையான தன்னாட்சி உரிமை வழங்க முன்வந்தார். அவற்றில் சுதந்திர இராணுவம், அரசாங்கம் மற்றும் நாணயமும் அடங்கும்.

இப்படி சம்பிரதாய முறையில் சீனா அங்கீகரித்திருப்பதும், பொருளாதார அமைப்புக்கள் உட்பட சர்வதேச அமைப்புக்களை பெய்ஜிங் வழியாக தாய்வான் அணுக வேண்டும் என்ற நிபந்தனையையும், அதன் ஆளும் செல்வந்த தட்டின் சில பிரிவுகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. சீனாவை மீண்டும் வென்றெடுத்துவிட முடியும் என்ற குவாமின்டாங்கின் கனவு கானல்நீராகிக் கொண்டு வந்ததால், தாய்வானை ஒரு சுதந்திர நாடக மாற்றவேண்டுமென்ற நிர்பந்தங்கள் பெருகத் தொடங்கின.

1975 ல் சியாங் காய் சேக்கின் மரணத்திற்கு பின்னர் அவரது புதல்வர் சியாங் சிங் கு ஜனாதிபதியாக பொறுப்பேற்றதும் ''தாய்வான்மயமாக்கல்'' திட்டத்தை மேற்கொண்டார். அவர், தாய்வான் பூர்வகுடி மக்கள் வழிவந்த செல்வந்த தட்டினரை குவாமின்டாங்கின் உறுப்பினர்களாக சேர்த்ததோடு, பல்வேறு அரசியல் சீர்திருத்தங்களையும் மேற்கொண்டார். 1987 ல் இராணுவச் சட்டம் ரத்து செய்யப்பட்டதன் மூலம் குவாமின்டாங்கின் அதிகார இடிக்குப்பிடி தளர்ந்தது.

இந்த ''சீர்திருத்தங்களின்'' பிரதான அம்சத்தால் தாய்வான் தொழிற்துறையில் தொழிலாள வர்க்கத்தினுடைய வளர்ச்சி ஏற்பட்டது. 1980 களில் அரசாங்கம் நடத்துகிற தொழிற்சங்கங்களுக்கு வெளியில், தொழிலாளர்கள் போர்க்குணம்கொண்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். அடிப்படை ஜனநாயக உரிமைகள், ஊதிய உயர்வு மற்றும் வாழ்க்கைத்தரம் மேம்பாட்டிற்கான போராட்டங்களை குவாமின்டாங் எதிர் கொண்டது. இந்த அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ஆளும் வர்க்கம் இனப் பிளவுகளை பெருமளவிற்கு வளர்த்ததோடு, உழைக்கும் மக்களை பிரிப்பதற்காக ''பூர்வகுடி தாய்வானியர்களை'' ''சீனாவிலிருந்து'' குடியேறியவர்களுக்கு எதிராக கிளப்பிவிட்டது.

இந்த அரசியல் சூழ்நிலையில் 1986 ம் ஆண்டு ஜனநாயக முற்போக்குக் கட்சி (DPP) தோற்றம் கண்டதுடன், முதலில் அதிருப்தி கொண்ட தாய்வான் மத்தியதர மக்களிடையே தனது செல்வாக்கையும் நிலைநாட்டிக் கொண்டது. அவர்கள் குவாமின்டாங்கின் ஆட்சியை வெளியிலிருந்து திணிக்கப்பட்ட, தாங்க முடியாத சுமையென்று கருதினர். ஆதலால், ஜனநாயக முற்போக்குக் கட்சி ஆரம்பத்தில் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டு போலீஸ் அடக்குமுறைக்குள் அகப்பட்டுக் கொண்டது. அத்தோடு, தாய்வான் தனி அரசு என்ற கோரிக்கையை இக்கட்சி விடுத்ததன் மூலம், பூர்வகுடி மக்களிடையே அதன் விரிவான செல்வாக்கை பெற முயன்றது.

இந்த மாற்றங்கள் குவாமின்டாங்கிற்கு உள்ளேயும் நடந்து கொண்டிருந்தது. சியாங் சிங் கு 1988 ல் காலமான பின்பு, தாய்வானில் பிறந்த லீ டெங் குய் ஜனாதிபதியாக பதவி ஏற்றார். 1991 ல் சோவியத் யூனியனின் முடிவிற்குப் பின்னர் குளிர் யுத்த கட்டமைப்புக்கள் முடிவிற்கு வந்தன. இதனால் தாய்வானின் பொருத்தமற்ற அரசாங்க கட்டுகோப்புக்களை மாற்றுவதற்கு லீ முயன்றதோடு, ''கம்யூனிச கிளர்ச்சிக் காலம்'' முடிந்துவிட்டது என்று அறிவித்தார். அத்துடன், அவர் 1948 முதல் நிலவி வந்த ''தற்காலிக விதிமுறைகளை'' ரத்து செய்து, ஜனாதிபதிக்கு விரிவான அதிகாரங்களை வழங்கியதால், நூற்றுக்கணக்கான மூத்த குவாமின்டாங் உறுப்பினர்கள் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் இதர அரசாங்க சபையிலிருந்து ஒய்வு பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டனர்.

குவாமின்டாங்கின் பழைய தலைவர்களுக்கு எதிராக லீ, ஜனநாயக முற்போக்குக் கட்சியின் பக்கம் திரும்பினார். 1992 டிசம்பரில் முழுமையான நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெறும் என்ற உறுதிமொழியை ஏற்று ஜனநாயக முற்போக்குக் கட்சியினர் தமது அடிப்படை கிளர்ச்சிப்போக்கை கைவிடுமாறு அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில், ஜனநாயக முற்போக்குக் கட்சியின் செல்வாக்கு வளர்ந்துகொண்டு வருவது பெய்ஜிங்கிற்கு எரிச்சலை ஊட்டியதுடன், தாய்வான் சுதந்திரம் பெறவேண்டும் என்ற இக்கட்சியின் செயற்திட்டம் ''நெருப்போடு விளையாடுவதாக'' ஆகும் என்று பெய்ஜிங் கடுமையாக எச்சரித்தது. 1989 ல் தியானமென் சதுக்கத்தில் நடைபெற்ற கண்டனங்களை கொடூரமாக ஒடுக்கியதைத் தொடர்ந்து, சகல எதிர்ப்புக்களையும் பெய்ஜிங் உணர்வுப்பூர்வமாக எடுத்துக்கொண்டது. தாய்வான் மீது பெய்ஜிங் தெரிவித்த கண்டனம் என்பதானது, சீனத் தேசியவாத உணர்வை தூண்டிவிட பயன்பட்டதோடு, சீனாவிற்குள்ளேயே நிலவுகின்ற இதர பிரிவினைவாதப் போக்குகளையும் எச்சரிப்பதாக அமைந்தது.

கூர்மையான முரண்பாடுகள்

கடந்த தசாப்தங்களில் தாய்வான் எதிர்நோக்கிய முரண்பாடுகள் யாவும் தீர்த்துவைப்பதற்கு பதிலாக அவை மேலும் அதிகரித்துள்ளன. தியானமென் சதுக்க ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து சீனாவில் பெரும் எடுப்பில் வெளிநாட்டு முதலீடுகள் குவிவதற்கான கட்டம் உருவாயிற்று. ''உலகின் தொழிற்பட்டறை'' என்று குறிப்பிடுகிற அளவிற்கு சீனா மாறிக்கொண்டு வந்தது. தாய்வான் முதலாளிகளில் சில பிரிவினர் இந்த தில்லுமுல்லுகளில் கலந்து கொண்டதினால் பெய்ஜிங்கிற்கும், தைபேயிக்கும் இடையே ஒரு உடன்படிக்கை உருவாவதற்கான அழுத்தம் உருவாயிற்று.

அதே நேரத்தில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார இயக்கங்களை நடத்த வேண்டிய அவசியத்தினால் தங்களுக்கு ஒரு சமூக அடித்தளத்தை உருவாக்குவதற்காக தாய்வான் தேசிய உணர்வை கிளிறிவிட்டன. இந்தப் பிரச்சனையில் குவாமின்டாங்கில் 1994 லும், மீண்டும் 2000 லும் பிளவு ஏற்பட்டது. கட்சியின் பழைய முன்னோக்கை லீ கைவிட்டுவிட்டதாக கட்சியின் பழைய தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

1996 ல் முதலாவது நேரடியான ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முன்னர் அவரது பொருளாதார சீரமைப்பு திட்டங்களுக்கு வளர்ந்து வரும் எதிர்ப்பை லீ சந்திக்க வேண்டிவந்தது. தோல்வியை தவிர்ப்பதற்கான தீவிர முயற்சியாக அவர் சீனா பற்றிய தனது கொள்கையை மிக கவனமாக அறிவித்ததோடு, அந்தக் கொள்கை ''விசேட அரசிலிருந்து அரச உறவுகளிற்கு'' சம்மந்தப்பட்டது என்று குறிப்பிட்டார். அவர் தாய்வான் தனி நாடாக வேண்டுமென்ற கோரிக்கையை விடுக்கவில்லை. என்றாலும் சீனாவின் ஆவேசமான எதிர்ப்பை அது கிளறிவிட்டுள்ளது.

தாய்வான் தொடுகடல் பகுதிக்குள் சீனா இரண்டு ஏவுகணைகளை ஏவிவிட்டதனால் கொந்தளிப்புக்கள் மிக அதிகமாக வளர்ந்தன. வாஷிங்டன் அப்பகுதிக்கு இரண்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் பிரிவுகளை அனுப்பியது. அந்தத் தீவில் போர் மேகம் சூழ்ந்துகொண்டிருந்த நிலையில் லீ தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால், இந்த மோதலானது செல்வாக்குள்ள வர்த்தக குழுக்களிடையே குவாமின்டாங்கின் நம்பகத்தன்மையை சிதைத்தது. அடுத்த ஆண்டில் தோன்றிய ஆசிய நிதி நெருக்கடியானது, தாய்வானுக்கு செல்வச்செழிப்பை கொண்டு வந்ததான குவாமின்டாங்கின் உரிமை கொண்டாட்டங்களின் மதிப்பை இழக்கச் செய்ததோடு, அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்புக்கள் மேலும் அதிகரித்தன.

குவாமின்டாங்கிற்குள் நிலவிய பிளவுகள் மற்றும் அதன் ஆட்சிக்கு மக்களிடையே உருவான எதிர்ப்புக்கள் ஆகியவற்றை பயன்படுத்திக்கொண்ட சென்னின் ஜனநாயக முற்போக்குக் கட்சி, முதல் தடவையாக 2000 ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றதோடு, சென்னும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது வெற்றியானது, பெய்ஜிங்குடன் கொந்தளிப்பை முற்றுச் செய்துவிடும் என்று பயந்தவர்களை சமாதானப்படுத்துகின்ற வகையில் சென் சீனாவுடன் நிலவுகின்ற உறவை மாற்றப்போவதில்லை என்று உறுதியளித்தார். இந்த சிக்கல் நிறைந்த தாய்வான் அந்தஸ்து பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டுமென்ற பொருளாதார நிர்பந்தங்களும் கூடவே வளர்ந்தன.

எடுத்துக்காட்டாக, சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) சேர்ந்ததைத் தொடர்ந்துதான் 2001 ல் தாய்வான் WTO சேர்ந்து கொள்ள முடிந்தது. அத்தோடு, ''தாய்வான் தனி சுங்கத் தீர்வு ஆட்சிப்பரப்பு'' என்று குறிப்பிடப்படுகின்றபோதிலும், இது ஒரு குறைந்த அந்தஸ்துள்ள நிலையே தவிர, இதர நாடுகளைப்போன்று அதே உரிமைகள், சலுகைகள் தாய்வானுக்கு கிடைக்காது. தாய்வான் இப்போது சீனாவிடமிருந்து வளர்ந்துவரும் தொழிற் போட்டியை சமாளிக்க வேண்யுள்ளது. தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளிலும் இந்தப் போட்டி நிலவுகிறது. தற்போது சீனா உலகிலேயே மூன்றாவது பெரிய தகவல் தொழில் நுட்ப பொருட்களை விநியோகம் செய்யும் நாடாக தாய்வானுக்கு மேல் முன்னேறி வருகிறது.

பெருகிவரும் பொருளாதார பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிற வகையில் லீ பொருளாதார சீர்திருத்தங்களை முடுக்கிவிட்டுள்ளார். ஊழலை ஒழித்துக்கட்டுகிறோம் என்கிற பெயரால் அவரது நிர்வாகம் கொண்டு வந்த சட்டங்கள் ஆகியன குவாமின்டாங்கின் வர்த்தக சாம்ராஜ்ஜியங்களான வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், பெட்ரோலிய இரசாயனக் கம்பெனிகள் மற்றும் ஊடக நிறுவனங்களை சிதைத்துள்ளது. தொலைத் தகவல் தொடர்பு மற்றும் இதர பொதுத்துறை நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் யாவும் நீக்கப்பட்டன. விவசாயிகளுக்கு மலிவு வட்டியில் கடன் கொடுத்து வந்த கூட்டுறவு, கடன் வழங்கும் சங்கங்கள் யாவும் ஒழிக்கப்பட்டன.

இந்தக் கொள்கைகள் சமூகக் கொந்தளிப்புக்களை மேலும் அதிகரிக்கவே செய்தன. சென் பதவியேற்ற இரண்டாண்டுகளுக்குப் பின்னர் தாய்வானில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாயிற்று. அதே நேரத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு முன் கண்டிராத அளவில் 5.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. உள்நாட்டில் பெருகிவரும் சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எந்தத்தீர்வும் இல்லாத நிலையில், சென் அவரது முந்தைய ஜனாதிபதி லீயைப் போன்று தகராறுக்குரிய சுதந்திர, பொதுவாக்கெடுப்புப் பிரச்சனையை கிளறிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னின் கொள்கைகள் உடனடியாக செல்வாக்குமிக்க பெரிய நிறுவன அதிபர்களை விரோதித்துக் கொள்வதாக அமைந்துவிட்டது. சீனா தற்போது தாய்வானின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருப்பதுடன், 2000 ல் அமெரிக்க உயர் தொழில் நுட்ப நீர்க் குமிழி வளர்ச்சியின் சிதைவு மற்றும் ஆசியப் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஆசியப் பொருளாதாரத்தை மீள்கொணர்வதில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே, இந்த வர்த்தகப் பிரிவுகள் சீரமைக்கப்பட்ட குவாமின்டாங் கட்சியின் பக்கம் சேர்ந்திருப்பதால், கட்சியின் தலைவர் லியான் சான், லீயை கட்சியிலிருந்து தூக்கி எறிந்துவிட்டு சீனாவுடன் உறவுகளை மேம்படுத்தும் கொள்கையை கடைப்பிடிக்கிறார்.

ஆகவே, இத்தேர்தலைத் தொடர்ந்து எந்தப் பிரச்சனையும் தாய்வானில் தீர்த்து வைக்கப்படவில்லை. அத்தோடு, சீனாவின் அரசியல் குழப்பம் மற்றும் பெய்ஜிங் தொடர்பாக புஷ் நிர்வாகத்தின் அணுகுமுறையில் காணப்படும் நிச்சயமற்ற, மற்றும் விரோத தன்மையினால் ஆளும் குழுக்களுக்குள் நிலவும் கசப்பான வேறுபாடுகள் என்பன மேலும் தீவிரமடையவே செய்யும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved