World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Sectarian violence in Pakistan's commercial capital

பாக்கிஸ்தானின் வர்த்தக தலைநகரில் மத உட்குழு வன்முறைகள்

By Vilani Peiris
24 June 2004

Back to screen version

பாக்கிஸ்தானின் பிரதான வர்த்தக மற்றும் தொழிற்துறை மையப் பகுதியான தலைநகர் கராச்சி மே மாதத்திலும் ஜூன் மாத தொடக்கத்திலும் பல்வேறு மத உட்குழு வன்முறைகளால் நிலைகுலைந்து நின்றது. 60-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் காயமும் அடைந்தனர். இதற்கு முன்னரும் ஷியைட்டுகளும், சுன்னி பிரிவை சேர்ந்தவர்ளும் இரத்தம் சிந்தும் மோதல்களில் ஈடுபட்டிருந்தார்கள் என்றாலும், அண்மையில் நடைபெற்ற மோதல்கள் சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்றிராத படுமோசமான மோதல்களாகும்.

ஊடகங்களும் போலீசாரும் Lashkar-e-Jhangvi (LEJ) குடிப்படை தான் பொறுப்பு என்று சுட்டிக் காட்டினர், இது சுன்னியை தளமாக கொண்ட Sipah-e-Suhaba-வோடு தொடர்பு கொண்டது மற்றும் ஷியைட்டுகள் மீது மதவெறி தாக்குதல் தொடுப்பதில் இழிபுகழ் பெற்றது. ஆனால் எந்த அமைப்பும் எந்த வன்முறைக்கும் பொறுப்பேற்கவில்லை. மேலும் பாக்கிஸ்தானில் இராணுவமும் அதன் புலனாய்வு பிரிவும் சம்மந்தப்படவில்லை என்று தள்ளிவிடவும் முடியாது. இராணுவம் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களோடு நெருக்கமான தொடர்புகளை நிலைநாட்டி கடந்த காலத்தில் தனது சொந்த நோக்கங்களுக்காக மத வெறி அடிப்படையிலான வன்முறையை திறமையாய் கையாண்டன.

யார் நேரடியாக பொறுப்பாக இருந்தாலும், வாஷிங்டன் கராச்சியிலும் பாக்கிஸ்தான் முழுவதிலும் பதட்டங்களை தூண்டிவிடுவதிலும் வன்முறைக்கு தூபம் போடுவதிலும் பிரதான பங்களிப்பை செய்திருக்கிறது. அமெரிக்கா தலைமையில் ஆப்கானிஸ்தான் மீதும், ஈராக் மீதும் படையெடுப்பு நடத்தப்பட்டது, மற்றும் பாக்கிஸ்தான் ஆட்சி அல்கொய்தா மற்றும் தலிபான் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களை வேட்டையாடுவதற்கு ஒத்துழைத்தமை ஆகிய நடவடிக்கைகள் பாக்கிஸ்தானின் பரந்த தட்டினருக்கு ஆத்திரமூட்டிவிட்டது. இந்த விரோதப்போக்கை பல்வேறு இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்கள் பயன்படுத்திக் கொண்டும், சில நேரங்களில் மத குறுங்குழு வழிகளில் திருப்பிவிட்டன.

கராச்சியில் மே 7-ல் சமீபத்திய சுற்று வன்முறையில், Haideri, ஷியைட் மசூதி குண்டுவெடிப்பில் 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 125-பேர் காயமடைந்தனர். மூன்று வாரங்களுக்குப் பின்னர், மே 30-ல், முன்னணி சுன்னி தலைவரும் Binoria மசூதி தலைமை நிர்வாகியுமான, Mufti Nizamuddin Shamzai, கராச்சியில் அவரது வீட்டிற்கு முன்னர் கொலைசெய்யப்பட்டார். அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய நபர்கள் அவரது காரை நோக்கிச்சுட்டதில் அவரது புதல்வர், மைத்துனர், மற்றும் கார் டிரைவர் ஆகியோரும் காயமடைந்தனர்.

எந்தவிதமான ஆதாரமும் வழங்காமல், ஊடகங்கள் உடனடியாக ஷியைட் மசூதி மீது நடந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்த படுகொலை என்று ஊகச்செய்திகளை வெளியிட்டன. மே 31-ல், ஆத்திரம் கொண்ட சுன்னி மக்கள் தெருக்களில் கண்டனப்பேரணிகளை நடத்தினர். Jamshed Quarters போலீஸ் நிலையத்தை தாக்கி சூறையாடியதுடன், 20 வாகனங்கள், இரண்டு வங்கி கிளைகள், மற்றும் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு தீ வைத்தனர்.

அதே நாளில், Ali Raza Imam Bargah ஷியைட்டு மசூதியில் குண்டுவெடித்ததில், 20-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டும், குறைந்த பட்சம் 75-பேர் காயமும் அடைந்தனர். Shamzia படுகொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 2-கிலோ மீட்டருக்கும் குறைந்த தூரத்தில் தான் அந்த மசூதி உள்ளது. குண்டு வெடிப்பில் மசூதியின் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டும், எதிரே உள்ள ஒரு கட்டிடத்தின் சன்னல்கள் நொருங்கியும் விழுந்தன.

மறுநாள், ஷியைட்டு மக்கள் துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் தெருக்களில் அணிவகுத்தனர், கண்டனம் நடத்துவோரை தடுப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான துருப்புக்களுடனும் போலீசாருடனும் மோதல் ஏற்பட்டது. ஒரு வங்கி, கடைகள், ஒரு அரசு அலுவலகம் உட்பட வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அணிவகுத்துவந்த இளம் ஷியைட்டுகள் போலீசாருடன் மோதியும், சாலைப்போக்குவரத்தையும், ஒரு ரயில் வழியையும் அடைத்தனர்.

இப்படி பெருகிவந்த வன்முறையும், கண்டனங்களும் உடனடியாக பாக்கிஸ்தானின் இராணுவ சக்திவாய்ந்த மனிதர் பெர்வஸ் முஷாரஃப்புக்கும் அவரது பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் - QA (PML-QA) இற்கும் உடனடியாக அழுத்தம் ஏற்படுத்தின. PML-QA சிந்து மாகாணத்தை ஆட்சி செய்து வருகிறது, அதன் தலைநகர் கராச்சியாகும். ஆறு இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகளின் கூட்டணியான The Muttahida Majlis-e-Amal (MMA) ஜூன் 2-ல், வன்முறையை தடுப்பதற்கு சிந்து அரசாங்கம் தவறிவிட்டதை கண்டித்து நாடு தழுவிய பேரணிக்கு அழைப்பு விடுத்தது. பாக்கிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தனியாக பேரணிகளை நடத்தியது.

இந்த கண்டனப் பேரணிகளை நடத்தியவர்களின் மனோபாவம் அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமல்லாமல், அமெரிக்காவிற்கும் எதிரானது என்பதை எடுத்துக்காட்டியது. மக்களிடையே வளர்ந்து வரும் ஆத்திரத்தை மட்டுப்படுத்துவதற்காக சிந்து மாகாண கவனர்னர், Dr Ishratul Ebad ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது: ''பாக்கிஸ்தானில் ஸ்திரமற்றதாக்க (Destabilise) ஒரு சதித்திட்டமும் கராச்சியின் வர்த்தக மையப்பகுதியை அழித்துவிடவும் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.'' என்று குறிப்பிட்டார். Ebad- அமெரிக்காவின் பங்களிப்பையும் குறிப்பிட்டு, பயங்கரவாதத்திற்கு எதிராக அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்தத்தாக்குதல்கள் நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

வாஷிங்டனின் அழுத்தத்தால் முஷாரஃப் ஆட்சி பெப்ரவரியில் பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மலைப்பகுதி மக்கள் வாழுகின்ற பகுதிகளில் 70,000- துருப்புக்கள் தலையிட்டு தலிபான் மற்றும் அல்கொய்தா ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கைகளில் இறங்கின. மார்ச் மாதம் நடைபெற்ற கடுமையான மோதல்களில் இருதரப்பிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இராணுவம் தற்காலிகமாக பின்வாங்கிக் கொண்டாலும், அமெரிக்கா நடவடிக்கையை தொடருமாறு முஷாரஃப்பை வலியுறுத்தியது.

அல் கொய்தா முன்னணி தலைவர்களை தேடுகின்ற வேட்டை தொலைதூர எல்லை பகுதிகளில் மட்டும் நடக்கவில்லை. பிரதான பாக்கிஸ்தான் நகரங்களில் FBI மற்றும் இதர அமெரிக்க அதிகாரிகள் உதவியோடு தேடுதல் வேட்டைகள் நடைபெற்று வருகின்றன. வாஷிங்டனிலுள்ள ஆப்கானிஸ்தானின் தூதர் Tayeb Jawad, பாக்கிஸ்தான் நகரங்களிலும் அமெரிக்கா கவனம் செலுத்திவருவதை சுட்டிக்காட்டினார், மே 25-ல் அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பில், ஒசாமா பின்லேடனை தேடுவதற்கான முயற்சி கராச்சி அல்லது குயெட்டா மையப்பகுதியில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். கடந்த காலத்தைப்போல், காபூலில் அமெரிக்க ஆதரவு ஆட்சி விசுவாசத்தோடு அமெரிக்காவின் கோரிக்கையான, பாக்கிஸ்தான் ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரை'' முன்னெடுக்கவேண்டும் என்பதை விசுவாசத்துடன் எதிரொலிக்கின்றது.

LEJ போன்ற சில இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பை பயன்படுத்தி அரசாங்க அலுவலகங்களில் மட்டுமல்ல ஷியாக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்தி வருகின்றன, அவர்களை அமெரிக்க உளவாளிகள் என்று குற்றம் சாட்டி வருகின்றன. ஷியைட்டுக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஆப்கானிஸ்தானிய இனக் குழுவான Hazaras அமைப்பு, 2001-ல் தலிபான் ஆட்சியை கவிழ்ப்பதில் அமெரிக்கப்படைகளோடு இணைந்து அமெரிக்க ஆதரவு வடக்கு கூட்டணி படைகளில் அதிகம் இடம்பெற்றிருந்தது என்று அந்த குழு குற்றம்சாட்டியுள்ளது. சென்ற ஆண்டு ஜூலை மாதம் Quetta- விலுள்ள ஷியைட்டு மசூதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு தானே பொறுப்பென்று LEJ அறிவித்துள்ளது, அந்தத் தாக்குதலில் குறைந்த பட்சம் தொழுகையில் ஈடுப்பட்டிருந்த 53-பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமுற்றனர்.

அண்மையில் நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து பல இஸ்லாமிய குழுக்கள் இதுபோன்ற மத உட்குழு மோதல்களை புறக்கணிக்கவும் சுன்னிகளும், ஷியைட்டுகளும் ஐக்கியப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்திருக்கின்றன. ஷியாத்தலைவர் யூசுப் ஹூசேன் சுன்னி மதபோதகர் Shamzai மே 30-ல் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்திருக்கிறார், இரண்டு சமுதாயங்களும் ஐக்கியப்பட்டு நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இந்தியாவில் இயங்கும் Rediff.com வலைத் தளத்தில் தந்துள்ள தகவலின்படி, "Binori மதரசாக்களில் உள்ள Shamzai-யின் பல சகாக்கள் ஷியா தீவிரவாதிகள் அந்த படுகொலைக்கு காரணம் என்று பழிபோடுவதைத் தவிர்த்துவிட்டனர்.''

இந்த வேண்டுகோள்கள் பரவலாக பாக்கிஸ்தானியரிடையே நிலவுகின்ற வெறுப்புணர்வை வெளிப்படுத்துகின்றது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக இதுபோன்ற மத உட்குழு வன்முறைகளால் குறைந்த பட்சம் 4,000 உயிர்கள் பலியாகியிருகின்றன. MMA- ஜூன்-4ல் வேலை நிறுத்த அழைப்பு விடுத்திருந்தது, அதற்கு சுன்னிகளும், மற்றும் ஷியைட்டுகளும் பரவலாக ஆதரவு தெரிவித்தனர், நகரம் முழுவதுமே அதில் கலந்து கொண்டது, கடைகள் மூடப்பட்டன, பல தெருக்கள் வெறிச்சோடிக்கிடந்தன மற்றும் கராச்சி பங்குச்சந்தை மூடப்பட்டது.

இந்த கண்டனங்கள் ஏற்கனவே ஆட்டம் கண்டு கொண்டிருக்கிற முஷாரஃப் ஆட்சிக்கு மேலும் கீழறுப்பதாக அமைந்திருக்கிறது, புஷ் நிர்வாகத்தோடு ஒத்துழைப்பதால்தான் இத்தகைய எதிர்ப்பிற்கு தூபம் போடப்படுகிறது என்பது முஷாரஃப் ஆட்சிக்கு தெளிவாகவே தெரியும், ஜூன் தொடக்கத்தில் ஆளும் PML-QA தலைவர் Chaudhry Shujaat சிந்து மாகாணத்தில் MMA மற்றும் PPP அடங்கிய பொதுக்கருத்து ஆட்சி அமைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இந்த வேண்டுகோளை இரண்டு கட்சிகளும் ஏற்க மறுத்துவிட்டதால் முஷாரஃப் மேலெழுந்தவாரியான பல மாற்றங்களை செய்தார். சிந்து மாகாண முதலமைச்சர் அலி முகமது மெஹாரை பதவிவிலக நிர்பந்தித்தார் மற்றும் கராச்சி தலைமை போலீஸ் அதிகாரியை மாற்றினார்.

என்றாலும், இந்த முயற்சிகள் கராச்சியிலும், பாக்கிஸ்தானின் இதர இடங்களிலும் நிலவுகின்ற கொந்தளிப்பை தடுத்து நிறுத்த முடியவில்லை பாக்கிஸ்தானின் தலைமை இராணுவ தளபதிகளில் ஒருவரான Lieutenant General Ahsan Hayat ஜூன் 10-ல் கராச்சியில் அவரது பாதுகாப்பு வாகனம் தாக்கப்பட்ட நேரத்தில் மயிரிழையில் உயிர்தப்பினார். அவரது பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 10-பேரும் தெருவில் நின்றுகொண்டிருந்த ஒருவரும் துப்பாக்கி ஏந்திய நபர்களால் கொல்லப்பட்டனர்.

அந்தத் தாக்குதல் நடைபெற்ற நேரம், எல்லைப் பகுதிகளில் மீண்டும் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய தருணமாகும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற வகையில் இந்தத்தாக்குதல் நடைபெற்றிருக்கக் கூடும். அல்கொய்தா போராளிகளுக்கு புகலிடம் தந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மலைப்பகுதி தலைவர் Nek Mohammad, தளபதி மீது திடீர் தாக்குதல் நடைபெற்ற பின்னர் அரசாங்கத்திற்கு பின்வருமாறு ஓர் எச்சரிக்கை விடுத்தார்: ''அரசாங்கம் தனது நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பெஷாவரில் இஸ்லாமாபாத்தில் மற்றும் கராச்சியில் தாக்குதல்கள் நடக்கும்''.

இந்த எச்சரிக்கைக்கு பதிலளிக்கிற வகையில் முஷாரஃப் ஆட்சி கராச்சியில் போலீஸ் வலையை விரித்தது மற்றும் தெற்கு வசிரிஸ்தான் மலைப்பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. ஜூன் 13-ல் போலீசார் வெளியிட்ட ஓர் அறிவிப்பில் அல்கொய்தாவோடு தொடர்பு உள்ளவர்கள் என்று கூறப்படும் 10-பேரை அல்லது கராச்சி வன்முறைகளுக்கு காரணமானவர்களை தாங்கள் கைது செய்திருப்பதாக அறிவித்தது. பாக்கிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறிவிப்பில் Neck Mohammad-ஐ அவர் பதுங்கியிருந்த இடத்தில் ராக்கெட் வீசி கொன்றுவிட்டதாக தெரிவித்தது.

''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்'' இவை ''வெற்றி'' என்று இஸ்லாமாபாத் சொல்லிக்கொண்டாலும், அண்மையில் நடைபெற்றுள்ள சம்பவங்கள் ஏற்கனவே கொந்தளிப்பாக உள்ள பாக்கிஸ்தான் நிலவரத்தை மேலும் கொளுந்துவிட்டு எரியவே செய்யும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved