World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel boycotts International Court on West Bank barrier: Why the wall is being built

மேற்குக்கரை தடுப்புச்சுவர் ஏன் எழுப்பப்படுகிறது: சர்வதேச நீதிமன்றத்தை இஸ்ரேல் புறக்கணிக்கிறது.

By Chris Marsden
24 February 2004

Back to screen version

மேற்குக்கரை பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் எழுப்புவது சட்டபூர்வமான நடவடிக்கையா? என்பது குறித்து ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஒரு ஆலோசனைக் கருத்தை கூறுகின்ற உரிமையை ஏற்றுக்கொள்வதற்கு இஸ்ரேல் அரசாங்கம் மறுத்துவருகிறது. அது நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்று இஸ்ரேல் கூறுகிறது. அதன் நிலைப்பாட்டை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஆதரிக்கின்றன.

மூன்று நாள் நடைபெறும் விசாரணையில் கலந்து கொள்வதில்லை என்று லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி முடிவு செய்திருப்பதுடன் நீதிமன்றத்திற்கு வெளியில் பல்வேறு சியோனிஸ்ட் குழுக்கள் தற்கொலை குண்டுவீச்சுக்கள் மற்றும் இதர பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு தடுப்புச்சுவர்கள் எழுப்பப்படுவதாக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

டிசம்பரில் ஐ.நா-பொதுசபைக்கு பாலஸ்தீனியர்கள் மனுச்செய்தனர். நான்காவது ஜெனீவா ஒப்பந்தத்தின் 147-வது பிரிவை மீறுகின்ற வகையில் சுவர் எழுப்பப்படுவதாக அவர்கள் வாதிடுகின்றனர். இராணுவ அவசியத்தை நியாயப்படுத்துவதற்கு புறம்பாக விரிவான அடிப்படையில் நாசங்களை விளைவித்து சொத்துக்களை கைப்பற்றிக் கொள்வது தொடர்பாக அந்தப்பிரிவு விளக்கம் தருகிறது. சட்ட விரோதமாக வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நடவடிக்கை "பயங்கரமான அத்துமீறல்" ஆகும். சென்ற செப்டம்பரில் ஐ.நா இந்த தடுப்புச்சுவர் நாடு பிடிக்கும் சட்டவிரோதமான நடவடிக்கை என்று கண்டனம் செய்து அறிக்கை வெளியிட்டது.

இஸ்ரேல் தடுப்புச்சுவருக்கு எதிராக எழுப்பப்படும் எந்த ஆட்சேபனையையும் ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் அந்த தடுப்புச்சுவர் பயங்கரவாதத்தை சமாளிப்பதற்கும், மேற்பட்ட வழிவகைகளாக கருதப்படுகின்றன. வலதுசாரி சியோனிச ஆட்சி ஆக்கிரமிப்பு செய்துகொண்டுள்ள மேற்குக்கரையின் பெரும்பாலான நிலபரப்பை கையகப்படுத்திக் கொள்ளவேண்டும் அவற்றை நிரந்தரமாக இஸ்ரேலுடன் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற மூலோபாய குறிக்கோளுடன் அது பிணைந்துள்ளது.

பயங்கரவாதத்தை சமாளிக்கும் ஒரே நோக்கத்தோடுதான் இந்த தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது என்ற போலி வாதம் நீதிமன்ற வழக்கு பாதுகாப்பு வேலி அமைக்கப்படுவதை தடுக்காது என்ற உண்மையால் எடுத்துக்காட்டப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், 1967-ல் இருந்த இஸ்ரேல் எல்லையை ஒட்டியே வேலி அமைக்கப்பட வேண்டும் என்பது அதன் அர்த்தமாக இருக்க வேண்டும். அதாவது மேற்குக்கரை பகுதியை சட்ட விரோதமாக பிடித்துக்கொள்வதற்கு முன்னிருந்த நிலையாகும்.

வேலி அமைக்கும் வழித்தடத்தில் பல்வேறு சிறிய மாற்றங்களை செய்வதை ஏற்றுக்கொள்வது குறித்து இஸ்ரேல் ஆராயும், ஆனால் 1967 எல்லையை இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளாது. ஏனென்றால் பாலஸ்தீனியர்களது நிலத்தை பெருமளவில் அபகரித்துக்கொள்ள இஸ்ரேல் கருதுகிறது.

720 கிலோ மீட்டர் (480 மைல்) தடுப்புச்சுவரில் ஏற்கனவே ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. ஒரு சில பகுதிகளில் 8 மீட்டர் உயர கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் வீடுகளை இடித்துத்தள்ளியும், வேளாண்மை விளைச்சல் நிலங்களை அழித்தும் முள்வேலி அமைத்திருக்கிறது. இந்த முள்வேலி மேற்குக்கரைப் பகுதியில் பல கிலோ மீட்டர்கள் உள்ளே ஊடுருவிச் செல்கின்றன. பாலஸ்தீன கிராமங்களையும், நகரங்களையும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாமல் பிரிக்கும் அதேவேளை, அந்த முள்வேலி யூதர்கள் சட்டவிரோத குடியிருப்புக்கள் பலவற்றை இஸ்ரேல் எல்லைக்குள் கொண்டு வருவதாகவும் அமைந்திருக்கிறது.

தடுப்புச்சுவர் எழுப்புவது ஒன்றரை மில்லியன் பாலஸ்தீன மக்களை மேற்குக்கரையின் 42-சதவீத நிலப்பரப்பில் நெருக்கமாக வாழுகின்ற நிலைக்கு உள்ளாக்கிவிடும். பாலஸ்தீன நிர்வாகம் அதன் தலைநகராக அமைய வேண்டும் என்று விரும்பும் கிழக்கு ஜெருசலமிலிருந்து அவர்களை துண்டிக்கும். 200,000 ற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் வேலைவாய்ப்பு மற்றும் சமூக சேவைகள் பெறுவநற்கான வாய்ப்புக்களிலிருந்து துண்டிக்கப்பட்டு ஒரு இனச்சுத்திகரிப்பு வடிவில் ஒரு நிலைக்கு நகருவதற்கு நிர்பந்திக்கப்படுவார்கள். அவர்கள் இழந்த நிலத்தின் பெரும்பகுதி மிகவும் வளமானது மற்றும் விவசாய உற்பத்தியை அதிகம் தரக்கூடியது.

இந்த கசப்பான உண்மையை மூடிமறைக்க ஷரோன் காசா பகுதியிலிருந்து 21 சியோனிச குடியிருப்புக்களில் 17ஐ அகற்ற அவர் கருதியிருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். என்றாலும் இதில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான யூதர்கள்தான் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த முயற்சியின் மூலம் அவர் மேற்குக்கரையின் பெரும் பகுதியை இஸ்ரேலோடு சேர்த்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.

காசா பகுதியிலுள்ள 21 குடியிருப்புக்களில் 1.3 மில்லியன் பாலஸ்தீனர்களுக்கு நடுவில் 5,000 இஸ்ரேலியர்கள் தான் குடியிருந்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புக்களின் முக்கிய பணி என்னவென்றால் ஆக்கிரமிப்புக்கு முன்னோடி சாவடிகளாக செயல்படுவது. எந்தவிதமான உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் மூலம் உருவாகும் தீர்வாக இருந்தாலும், 1993-ல் உருவான ஓஸ்லோ உடன்படிக்கையில் உறுதியளிக்கப்பட்ட நிலத்தைவிட மிகக்குறைவாக வழங்கும் அமெரிக்கா வகுத்தளித்துள்ள ''சாலை வரைபடம்" அடிப்படையில் அமைந்ததாக இருந்தாலும் அத்தகைய சமரச உடன்படிக்கைகள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் அதற்கு முரணாக ஒருதலைப்பட்சமாக பாலஸ்தீனர்களிடமிருந்து தனிமைப்படுத்திவிட தனது நோக்கத்தை ஷரோன் பிரகடனப்படுத்தியுள்ளார் என்பதன் காரணமாக அவற்றை அப்புறப்படுத்தல் ஆழ்ந்த கவனத்திற்குரியதாகவே இருந்துவருகிறது. காசாவிலிருந்து அப்புறப்படுத்தப்படும் யூத குடியேற்றக்காரர்கள் மேற்குக்கரைக்கு இடம்மாற்றப்பட்டு ஏற்கனவே அங்கே குடியேறியுள்ள 230,000 பேருடன் இணைவர் எனவே இஸ்ரேலின் கட்டுப்பாட்டை அதிகரிக்கவே நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்குக்கரையிலிருந்து சில சிறிய குடியிருப்புக்கள் நீக்கப்படலாம். ஆனால் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை சீரமைப்பதற்கும், தனிநபர்கள் மற்றும் ஆதார வசதிகளை வேறு இடங்களுக்கு மாற்றித்தரவும் அது பயன்படுத்தப்படும்.

சியோனிச குடியிருப்புக்கள் காசா பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்படுவது இஸ்ரேல் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதை அர்த்தப்படுத்தாது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சால் பொப்பாஸ் இராணுவம் காசா பகுதியின் வான்வெளி முழுவதையும் மற்றும் கரையோர நீர்பரப்புக்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மற்றும் காசா எகிப்து எல்லையில் ரோந்துபணியிலும் ஈடுபடும் என்று வலியுறுத்திக் கூறினார். இந்த நிலைப்பாட்டைக்கூட இஸ்ரேல் பாதுகாப்புப்படை தலைமைத் தளபதி லெப்டினட் ஜெனரல் மோஸே யாலோன் ஆட்சேபித்திருக்கிறார். ''ஒரு உடன்படிக்கையின் ஒரு பகுதியாகத்தான் நாம் காசாவிலிருந்து வெளியேறுவோம்'' என்று வலியுறுத்தினார். சென்றவாரம் ஷரோன் தனது இராணுவத்திட்ட தலைமை அதிகாரிகளைச் சந்தித்தார். அவரது தேசிய பாதுகாப்பு இயக்குநர் Giora Eiland காசாவிற்கு நான்கு வகையான திட்டங்களை தாக்கல் செய்தார், அவை இராணுவம் முற்றிலும் வெளியேறுவதிலிருந்து அந்தப்பகுதியில் துருப்புக்கள் நிறுத்தப்படுவதுவரை அமைந்த ஆலோசனைகளாகும்.

ஷரோன் வாஷிங்டனின் உறுதியான ஆதரவை பெற்றிருக்கிறார். இது சாலை வரைபடத்துக்கும் அர்த்தமுள்ள வகையில் மற்றும் பக்கத்தில் அமையும் பாலஸ்தீன அரசுக்கான அதன் கடப்பாட்டிற்கும் தனது தொடர்ந்த ஆதரவு உண்டு என்று அவர் அர்த்தமற்ற உறுதிமொழிகளை தர வைத்துள்ளது. அண்மையில் அமெரிக்க வர்த்தகர்கள் மாநாட்டில், ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் ''திட்டத்தை'' செயல்படுத்த தாம் விரும்புவதாகவும், ஆனால் ''பாலஸ்தீன தரப்பிலிருந்து நம்பிக்கையான பங்குதாரர் கிடைக்கும்போதுதான் அது சாத்தியமாகும்'' என்றும் குறிப்பிட்டார். யாசிர் அரஃபாத்தை தீண்டத்தகாதவர் என்று பிரகடனப்படுத்துவதில் அவருக்கு வாஷிங்டன் ஆதரவு அளித்திருப்பதால், ஷரோன் அத்தகைய பங்குதாரர் இல்லாத நிலையில் ''பாலஸ்தீனியர்களிடமிருந்து பிரிந்து நிற்பதற்கு ஒருதலைபட்சமான பாதுகாப்பு நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கும்'' என்று அறிவித்தார்.

மேற்குக்கரையில் புதிய குடியிருப்புக்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக புஷ் நிர்வாகம் வேடிக்கை காட்டியது. தடுப்புச்சுவர் சில பெரிய குடியிருப்புக்களின் பக்கம் திருப்பி விடப்பட்டது. மற்றும் ஷரோன், ஜோர்டான் பள்ளத்தாக்கிற்கு நடுவில் வேலியை அமைக்கக்கூடாது என்று வாஷிங்டன் கேட்டுக்கொண்டது. ஏனென்றால் அப்படிச்செய்தால் பெரும்பாலான பாலஸ்தீன மக்கள் சுற்றி வளைக்கப்பட்டு மிகப்பெரிய சிறை முகாம் போன்று ஆகிவிடும் என்று கூறியது.

அத்தகைய கட்டளைகள் பொதுமக்களது கவனத்தை கவர்வதற்குத்தான் என்பதை ஷரோன் அறிவார். வாஷிங்டனுடன் அவர் நெருக்கமாக பணியாற்றி வருகிறார். பெப்ரவரி 19 அன்று ஷரோன் அரசுத்துறை துணைச்செயலர் William Burns தலைமையிலான அமெரிக்க தூதர்கள் குழுவை சந்தித்துப் பேசினார். அந்த தூதுக்குழுவில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் துணை இயக்குநர் ஸ்டீபன் ஹேட்லியும் இடம் பெற்றிருந்தார். ''நம்பகத்தன்மையுள்ள பாலஸ்தீன பங்காளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது விரும்பத்தக்கது என்றாலும் "இதுவரை பாலஸ்தீனர்கள் அந்த சோதனைக்கு ஈடுகொடுக்கின்ற வகையில் செயல்படவில்லை என்று இஸ்ரேல் கூறுவதுடன் அமெரிக்கா உடன்படுவதாக'' அமெரிக்கத்தூதர் டானியல் குர்ட்ஸர் குறிப்பிட்டார்.

சாலை வரைபடத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துக்கொண்டே ஷரோன் குடியிருப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை முடுக்கிவிட்டிருக்கிறார். சென்ற வாரம் அரசாங்கம் ஆக்கிரமித்த நிலத்தில் யூதர் குடியிருப்புக்களை அமைப்பதற்கு 22 மில்லியன் டாலர் பட்ஜெட் (NIS 96-மில்லியன்) ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்தது. இவற்றில் பெரும்பாலான குடியிருப்புக்கள் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலத்தில் உருவாக்கப்படுமென்று நம்பப்படுகிறது.

இதுவும் கூட ஷரோனின் தீவிர வலதுசாரி கூட்டணி கட்சியினருக்கு போதுமானதாக தோன்றவில்லை. ஒரு தனிப்பட்ட காவல் சாவடியை நீக்குவதைக்கூட துரோகம் இழைக்கும் செயல் எனஅவர்கள் கருதுகிறார்கள். பாலஸ்தீன தன்னாட்சி அரசாங்கத்தை எந்த வடிவத்திலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேசிய ஒன்றியக் கட்சி தலைவரும் ஷரோனின் போக்குவரத்து அமைச்சருமான அவிக்டர் லிபர்மேன் மேற்குக்கரையில் நான்கு தனித்தனி இனக் குழுவினர் செறிந்து வாழும் பகுதிகளை அமைத்து, அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் ஆயுதப்படைகளால் சுற்றி வளைக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.

வீட்டுவசதி அமைச்சர் Effi Eitam தேசிய மதவாத கட்சியை சேர்ந்தவர். அவர் பாலஸ்தீன நாட்டிற்கே இடமில்லை என்று அறிவித்தார். இறுதியில் காசா பகுதிகள் எகிப்தோடு இணைக்கப்படும், மற்றும் மேற்குக்கரையில் குடியிருப்பவர்கள் பக்கத்திலுள்ள ஜோர்டானுடன் ஒரு கூட்டமைப்பில் இணைவர். இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்க முடிவு செய்யும் பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேலில் வாக்களிக்கும் உரிமை கூட இருக்காது என்று அந்த அமைச்சர் கூறினார்.

ஷரோன் தீவிரவலதுசாரிகள் மேற்கொண்டுவரும் மோதல்போக்கு மற்றும் IDF- மிருந்து குடியேற்றக்காரர்களை காப்பாற்றுவதாக காட்டப்படும் பாவனையில் ஒரு நாடக அம்சம் பெருமளவில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. உண்மையிலேயே ஷரோன் ஒருசில குடியிருப்புக்களைத்தான் அப்புறப்படுத்தியிருக்கிறார். அவற்றில் மிகப் பெரும்பாலானவை மக்கள் எவரும் குடியிருக்காதவை, அல்லது ஒன்று அல்லது இரண்டு குடும்பங்கள் குடியிருப்பவை. குடி உரிமைகள் குழுவான அமைதி இப்பொழுது (Peace Now) என்ற அமைப்பு சியோனிச குடியிருப்புக்கள் பற்றிய தனது ஆண்டு புள்ளிவிவரக் கணக்கெடுப்பு அறிக்கையில், ''2003ம் ஆண்டு சோதனைச்சாவடி தொழில் வளருகின்ற காலமாகும் மற்றும் இந்த சோதனைச்சாவடிகளை நிரந்தர குடியிருப்புகளாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் காலம் என்றே வர்ணிக்க முடியும்.'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

அந்த அறிக்கை 2003- இறுதி வாக்கில் கடுங்கோட்பாட்டு சியோனிச குடியிருப்புக்காரர்கள் டஜன் கணக்கான டிரெய்லர்களை புதிய குன்றுகளின் உச்சிகளுக்கும், சிறிய "பொய் குன்று உச்சிகளுக்கும்" கொண்டு சென்றனர், இவை பதிற்சலுகையாக மேலும் ஒரு சோதனைச் சாவடியை அமைத்துக் கொள்வதற்குப் பதிலாக இறுதியில் கலைக்கப்பட முடியும் என்று அந்த அறிக்கை விளக்குகிறது. மொத்தம் 15-புதிய எல்லைச்சாவடிகள் 2003-ல் அமைக்கப்பட்டன. அதேநேரத்தில் 20 நீக்கப்பட்டன. ஆனால் 15 சட்டவிரோத சாவடிகளில் நிரந்தர கட்டடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 12க்கு மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதர 11-சாவடிகளுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுவிட்டன அல்லது அமைக்கப்பட்டு வருகின்றன. மொத்தத்தில், கடந்த ஆண்டில் 34 குடியிருப்புக்கள் "குறிப்பிடத்தக்க விரிவாக்கம்" செய்யப்பட்டுள்ளன.

Peace Now இயக்குநர் யாரிவ் ஒபன்ஹீமர் (Yariv Oppenheimer) தந்துள்ள விமர்சனத்தில், ''ஷரோன் காசா குடியிருப்புக்களை அப்புறப்படுத்துவது குறித்து பேசுகிறார் மற்றும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்புக்கள் அடங்கிய முயற்சிபற்றி புஷ் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொண்டு வருகிறார், ஆனால் அதே நேரத்தில் மேற்குக்கரையில் இஸ்ரேலின் பிடியை மிக ஆழமாக இறுக்கிக்கொண்டு வருகிறார்'' என்று விளக்கியிருக்கிறார்.

இரண்டு தரப்புக்களுமே அறிவது தவறானது என்ற கூற்றுக்களின் பின்னால் குடியிருப்புக்கள் விரிவாக்கப்பட்டு வருகின்றன என்ற உண்மையை எவ்வாறு மூடிமறைப்பது என்பதில் புஷ் மற்றும் ஷரோனுக்கு இடையில் ஒருங்கிணைந்த செயற்பாடு இருக்கின்றது என்பது பற்றி மட்டுமே ஒருவர் முடிவுக்கு வரமுடியும்..


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved