World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Guerrilla war intensifies in Iraq despite Hussein's capture

சதாம் ஹூசைன் பிடிபட்ட பின்னரும் ஈராக்கில் கொரில்லாப் போர் தீவிரமடைந்தே வருகிறது

By James Conachy
11 February 2004

Back to screen version

புஷ் நிர்வாகம், பென்டகன் மற்றும் பெரும்பாலான அமெரிக்க செய்தி ஊடகங்கள் தெரிவித்திருந்த ஊகங்களுக்கு எதிராக, சதாம் ஹூசைன் சென்ற டிசம்பரில் பிடிக்கப்பட்ட பின்னர், அமெரிக்க ஆக்கரமிப்புப் படைகளுக்கு எதிராக ஈராக் மக்களின் எதிர்ப்பு தீவிரமடைந்துள்ளது. ஏறத்தாழ ஆக்கிரமிப்பு நடந்து ஓராண்டிற்கு பின்னர் அமெரிக்கத் துருப்புக்கள் ஒவ்வொரு நாளும் 1,500 க்கு மேற்பட்ட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்கவும் தனது கட்டுப்பாட்டை நாட்டில் நிலைநாட்டவும் பணியாற்ற வேண்டியுள்ளது. ஈராக்கின் இடைக்கால நிர்வாகம் மிக அண்மையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அண்மை வாரங்களில் தினசரி அமெரிக்கத் துருப்புக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் 18 லிருந்து 24 ஆக உயர்ந்திருக்கிறது என்று விளக்கியுள்ளது.

ஹூசைன் பிடிக்கப்பட்டதன் தாக்கத்தை, மற்றும் வடக்கு நகரான மோசூல் பகுதி சண்டைகளைப்பற்றி அமெரிக்காவின் 101 வது விமானப்படை கேனல் லொஸ் ஏஞ்ல்ஸ் டைம்ஸிற்கு பிப்ரவரி 4 ல் அளித்த பேட்டியில் ''அவர் பிடிக்கப்பட்ட நேரத்திலிருந்து குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் எந்த வழியிலும், எந்த வடிவிலும் அல்லது உருவத்திலும் மாறவில்லை'' என்று கூறியுள்ளார்.

ஜனவரியில், ஈராக்கில் 45 இராணுவத்தினர்கள் மாண்டார்கள். டிசம்பரில் கொல்லப்பட்டவர்களைவிட இதில் ஐந்து பேர் அதிகமாகும். மற்றும் 209 பேர் காயமடைந்தனர். போர் தொடங்கிய பின்னர் இதுவரை 534 அமெரிக்கப் படையினர்கள் பலியாகி உள்ளனர். மற்றும் 2617 பேர்கள் காயமடைந்தனர். போர் அல்லாத சம்பவங்களில் 408 பேர் காயமடைந்தனர். குறைந்தபட்சம் 8,500 இராணுவத்தினர்கள் இதர மருத்துவ காரணங்களுக்காக வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.

மாண்டுவிட்ட அமெரிக்கர்கள், அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் வந்த போர்ப் படையினர்கள் ஆவர். மற்றும் அமெரிக்காவின் காலனிகளான போர்த்தோ ரிக்கோ (Puerto Rico) மற்றும் அமெரிக்கன் சோமோ (American somoa) ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். போரில் மாண்டவர்களின் வர்க்கங்கள் தொடர்பான விவரங்கள் சிந்தியா தக்கர் என்பவர் Atlanta Journal-Constitution என்ற பத்திரிகையில் எழுதியுள்ள விமர்சனத்தில் தெளிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. ''அரசாங்க பணி வருமானத்தை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கிற, சராசரி நீல நிற ஆடை அணியும் (blue-collar) குடும்பத்தைச் சேர்ந்த பலர் இராணுவத்தில் சேவை செய்ய முன் வந்திருக்கின்றனர்''. இவர்களது எண்ணிக்கைதான் மிக அதிகம். இப்படி இராணுவத்தில் சேர்ந்தவர்களின் குடும்ப வருமானம் 32,000 ற்கும் 34,000 திற்கும் இடைப்பட்ட டாலர்களில் இருக்கிறது. இராணுவ சமூகவியல் ஆய்வாளர் சார்ல்ஸ் மாஸ்கோஸ், தக்கரிடம் கூறியது என்னவென்றால்: ''மக்கள் மறந்து விடுகிறார்கள், அமெரிக்க தலைவர்களின் புதல்வர்கள் மற்றும் புதல்விகள் மடியவில்லை. ஆனால் அடிப்படையிலேயே தொழிலாள வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான் மடிகின்றனர்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரியில் இதுவரை ஏழு அமெரிக்கத் துருப்புக்கள் கொல்லப்பட்டிருக்கின்றன. 28 பேர் காயமடைந்ததாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிற்காக பணியாற்றிவருகிற நூற்றுக்கணக்கான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். அல்லது காயமடைந்திருக்கின்றனர். தற்போது ஈராக்கின் எந்தப் பகுதியும் பாதுகாப்பானது என்று கருதிவிட முடியாது.

இந்த மாத தொடக்கத்தில், வடக்கு நகரான இர்பிலில் ஆக்கிரமிப்பிற்கு ஆதரவான இரண்டு குர்து அரசியல் கட்சிக் கூட்டங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 109 ஈராக் குர்துக்கள் மாண்டார்கள். மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

நேற்று, பாக்தாத்திற்கு தெற்கிலுள்ள ஷியாட் பிரிவினர்கள் உள்ள இஸ்கன்தரியா நகரத்தில் போலீஸ் நிலையத்திற்கு வெளியே நடந்த குண்டு வெடிப்பில் குறைந்த பட்சம் 53 பேர் கொல்லப்பட்டனர். 60 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தற்கொலை குண்டுவெடிப்பா? அல்லது தொலைவிலிருந்து இயக்கப்பட்ட குண்டுவெடிப்பா? என்பதை அமெரிக்க நிர்வாகம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. கொல்லப்பட்டவர்களில் பலர் ஈராக் போலீஸ் பணியில் சேருவதற்காக மனு கொடுப்பதற்கு வரிசையில் நின்றவர்களென்று நம்பப்படுகிறது அந்த நகருக்கருகில் பிப்ரவரி 3 ல் சாலையோரத்தில் குண்டு ஒன்று வெடித்ததால் ஒரு அமெரிக்க சிப்பாய் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலுக்கு உள்ளூர் மக்கள் அமெரிக்கா மீது பழிபோட்டனர். அந்தளவிற்கு அமெரிக்கப்படைகள் மீது கசப்புணர்வு பெருகிவருகிறது. ஈராக்கின் ஷியாட்டுக்களையும், சன்னிகளையும் பிரிப்பதற்காக அமெரிக்க இராணுவம் குண்டு வீசி தாக்குதல்கள் அல்லது அதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறது என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சிதைந்துவிட்ட போலீஸ் நிலையத்திற்கு வெளியில் நகர மக்கள் டஜன் கணக்கில் அணிவகுத்து ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்பினர். ''அமெரிக்காவிற்கு இடமில்லை, இடமில்லை! போலீசார் துரோகிகள்! இதற்கு ஷியாட்டுக்களும் காரணமல்ல. சன்னிகளும் காரணமல்ல. அமெரிக்கர்கள்தான் குற்றம் புரிந்தார்கள் என்று தொடர்ந்து முழக்கம் எழுப்பிக்கொண்டிருந்த மக்களை கலைப்பதற்காக அவர்கள் தலைக்கு மேலாக துப்பாக்கிகளால் சுட்டு விரட்டினர்'' என்று அசோசியேட் பிரஸ் தகவல் தந்துள்ளது.

நேற்று நடைபெற்ற மற்றொரு தாக்குதலில், நான்கு ஈராக் போலீசார் கொல்லப்பட்டனர். இது பாக்தாத்தில் நடைபெற்ற திடீர்த் தாக்குதலாகும். போலீஸ்படையின் தலைவர் ஜெனரல் அஹமது காசீம் சென்ற ஏப்ரலில் அமெரிக்கா தனது படைகளை நிலைநாட்டிய பின்னர் கொல்லப்பட்ட போலீசார் 604 பேர் என்று தெரிவித்தார். காயமடைந்த போலீசார் எத்தனை பேர் என்று தெரியவில்லை. அது ஆயிரக்கணக்கில் இருக்கக்கூடும்.

சாலையோரங்களிலிருந்து வீசப்படும் குண்டுகள் அல்லது புதிதாக தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள் (improvised explosive devices - IED) அமெரிக்க துருப்புக்களுக்கு கடுமையான உயிர்சேதத்தை ஏற்படுத்துகின்றன. ஜனவரியில் IED க்கள் வெடித்ததன் மூலம் 23 அமெரிக்கத் துருப்புக்கள் கொல்லப்பட்டனர். திங்களன்று பாக்தாத்திற்கு வடக்கேயுள்ள சிஞ்சார் நகருக்கருகில், அந்தப் பகுதியைச் சுத்தம் செய்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு கிடந்த குண்டு தற்செயலாக வெடித்ததில் இரண்டு அமெரிக்கப் படையினர் மாண்டனர். ஆறு பேர் காயமடைந்தனர். கவனமாக திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த திடீர் தாக்குதலில் பாக்குபா அருகே இதர நான்கு படையினர் காயமடைந்தனர். ஒரு சிப்பாய் சாலையோரத்தில் வெடிக்காமல் கிடந்த ஒரு குண்டின் அருகே சென்றதும் அது வெடித்தது. அவருக்கு உதவுவதற்காக மற்றவர்கள் ஓடி வந்தபோது இரண்டாவது குண்டும் வெடித்தது. இந்த இரண்டு குண்டுகளுமே தொலைவிலிருந்து இயக்கப்பட்டு வெடித்திருக்கக்கூடும்.

ஞாயிறு இரவில் மூன்று தனித்தனி அமெரிக்க கவசவாகனங்கள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மோசூல், பல்லுஜா மற்றும் பாக்தாத்திற்கு தெற்கேயுள்ள நகரமான மகமுதியா ஆகியவற்றின் சாலையோர குண்டுகள் அல்லது ராக்கட்டுகள் வெடித்ததில் ஒரு அமெரிக்க இராணுவ சிப்பாய் கொல்லப்பட்டார். குறைந்த பட்சம் மூன்று பேர் அதில் காயமடைந்தனர்.

ஞாயிறு இரவில், கொரில்லாக்கள் பாக்தாத் விமான நிலையத்தில் நடத்திய பீரங்கித் தாக்குதலில் பிஜித்தீவு முன்னாள் இராணுவ சிப்பாய் கொல்லப்பட்டார். அவர் பிரிட்டனின் நிறுவனமான Global Risk Strategies International லில் பணியாற்றியவர் ஆவர். அதே நிறுவனத்தில் பணியாற்றும் மற்றொரு பிஜி ஊழியர் காயமடைந்தார். இந்த நிறுவனத்திற்கு பல மில்லியன் டாலர் ஒப்பந்தங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது. ஈராக்கின் பல்வேறு அமைப்புகளிலும் அரசாங்க அலுவலகங்களிலும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் முன்னாள் பிரிட்டிஷ் படைகளான நேபாள கூர்க்கர்கள் 500 பேரையும் பிஜி முன்னாள் இராணுவத்தினர் 500 பேரையும் பாதுகாப்புப் பணியில் அமர்த்தியுள்ளது. இது மிகப்பெருமளவில் தரப்பட்டுள்ள பங்களிப்பாகும்.

பீரங்கித் தாக்குதல்கள் தற்போது சாதாரண அன்றாட நடவடிக்கையாகிவிட்டது. இந்த மாதம் குறிப்பாக மிகக்கொடூரமான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 5 ல் பாக்தாத் விமான நிலையத்தில் கொரில்லாக்கல் நடத்திய தாக்குதலில் ஒரு அமெரிக்க சிப்பாய் மாண்டார். மற்றொருவர் காயமடைந்தார். பிப்ரவரி 1 ல் பாக்தாத்திற்கு வடக்கே 75 கிலோ மீட்டர் அப்பாலுள்ள பலாட் நகருக்கருகில் அமைந்துள்ள அமெரிக்கத் தளத்தில் கொரில்லாக்கள் குறைந்த பட்சம் ஏழு ராக்கெட் தாக்குதல்களை நடத்தினர். அதில் ஒரு அமெரிக்க சிப்பாய் மாண்டார். 12 பேர் காயமடைந்தனர்.

சில ஈராக் நகரங்களில் எதிர்ப்பாளர்கள் சுதந்திரமாக நடமாடி தாக்குதல்களை முடுக்கிவிட்டிருப்பதற்கான அறிகுறிகள் வளர்ந்து வருகின்றன. கிளர்ச்சிக்காரர்கள், அமெரிக்கா உருவாக்கியுள்ள ஈராக் போலீஸ், இராணுவம் மற்றும் சிவில் நிர்வாகத்துறைகளில் ஊடுருவிவிட்டனர் என்பதும் அதிக அளவில் தெளிவாகி வருகிறது.

சனிக்கிழமையன்று, அமெரிக்கா உருவாக்கிய புதிய ஈராக் இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ஒரு பஸ் பலுஜா நகரின் மேயர் அலுவலகத்திற்கு வெளியில் பட்டப்பகலில் சென்றபோது RPG தாக்குதலுக்கு இலக்கானது. இந்தத் தாக்குதலில் குறைந்த பட்சம் ஐந்து ஈராக் இராணுவத்தினர்கள் காயமடைந்தனர். தாக்கியவர்கள் தப்பியோடிவிட்டனர்.

அதே நாளில், பாக்தாத்திற்கு தெற்கிலுள்ள சுவாரா (Suwayrah) போலீஸ் நிலையத்திற்குள் குண்டு வெடித்ததில் நான்கு ஈராக் போலீசார் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர். அந்த குண்டு வெடித்த அறைக்குள் வேறு எவரும் செல்ல முடியாது என்பதால் தனது அதிகாரிகளில் ஒருவரே இந்த குண்டு வெடிப்பில் ஈடுபட்டிருக்கவேண்டுமென்று, அந்த போலீஸ் நிலைய கமாண்டர் லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிற்கு தெரிவித்தார். டிக்ரிட் நகரில் எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்காணித்துவந்த அமெரிக்கத் துருப்புக்கள் மீது ஒரு வீட்டிலிருந்த எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமையன்று துப்பாக்கியால் சுட்டனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒரு ஈராக்கியர் கொல்லப்பட்டார். மற்ற இரண்டு பேர் காயமடைந்தனர். கொல்லப்பட்டவர் உள்ளூர் போலீஸ் அதிகாரியென்று பின்னர் தெரிய வந்தது.

தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ள கொரில்லாப்போர் மற்றும் உயிர்ச் சேதங்களின் தொடர்கதையானது, அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் விரிவான அமெரிக்க மக்களிடையே எழுப்பியுள்ள கேள்வி என்னவென்றால், ஈராக்கில் ஏன் அமெரிக்கா இருக்கிறது? என்பதாகும். புஷ் நிர்வாகத்தின் பொய் மூட்டைகள் தற்போது முழுமையாக அம்பலப்படுத்தப்பட்டுவிட்டன. ஈராக் வசம் பேரழிவுகரமான ஆயுதங்கள் எதுவுமில்லை. மற்றும் ஈராக் மக்கள் அவர்களது உணர்வுகள் - சதாம் ஹூசைனைப்பற்றி எதுவாக இருந்தாலும் - அவர்கள் அமெரிக்கப்படைகளை தங்களை ''விடுதலை செய்ய வந்தவர்கள்'' என்று வரவேற்கவில்லை. பெரும்பாலான ஈராக் மக்கள் தங்கள் நாட்டின் மீது ஆக்கிரமித்து வந்தவர்கள் மற்றும் தங்களது எண்ணெய் வளத்தை சூறையாடுவதற்காக வந்தவர்கள் என்று கருதுகிறார்கள். மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நலன்களுக்கான பொம்மை அரசாக மாற்றுவதற்காக ஆக்கிரமித்து வந்தார்கள் என்றும் நினைக்கிறார்கள்.

ஈராக்கில் தனது பணி பூர்த்தியான பின்னர் தாய்நாடு திருப்புவதற்கு தயார் நிலையில் இருந்த 4 வது காலாட்படை பிரிவு கமாண்டர் companycommand.com இணையத் தளத்தில், புதிதாக தனது பிரிவிற்கு பதிலாக டிக்ரிட்டில் பணியாற்ற வருகின்ற அமெரிக்கப் படைகளுக்கு அப்பட்டமான ஆலோசனையை கூறியிருக்கிறார். ''அவர்கள் என்ன புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இங்குள்ள மிகப்பெரும்பாலான மக்கள் நாம் இறந்து விட வேண்டுமென்று விரும்புகிறார்கள். அவர்கள் நம்மை வெறுக்கிறார்கள். நமது குறிக்கோள்கள் அத்தனையையும் வெறுக்கிறார்கள். சந்தர்ப்பம் எது கிடைத்தாலும் அதைப்பயன்படுத்தி நமக்கு தீங்கே செய்வார்கள்''.

அமெரிக்கப் படைகள் பலியாவது மற்றும் காயமடைவதை குறைப்பதற்காக, பென்டகன் ஈராக்கின் பிரதான நகர்களின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள கடுமையான பாதுகாப்புகள் உள்ள இராணுவத் தளங்களுக்கு அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பிவிட்டு அன்றாடம் நடைபெறுகின்ற சண்டைகளில் ஈராக் படைகளையே பயன்படுத்திக் கொள்ளக் கருதியிருக்கிறது. மே முதல் தேதிவாக்கில் பாக்தாத்திலுள்ள 26 இராணுவத் தளங்களை 8 ஆக குறைத்து விட அமெரிக்கா கருதுகிறது. நகரத்திற்கு 35 கிலோமீட்டர் அப்பால் பல அமெரிக்கத் துருப்புக்களை அனுப்பிவிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

ஈராக் போலீசில் (பாக்தாத்தில்) ஏற்கெனவே 9,000 பேர் பணியாற்றி வருவதாகவும், உள்நாட்டு சிவில் பாதுகாப்பு துருப்புக்களில் 4,000 பேரும், 5,700 க்கு மேற்பட்ட பாதுகாப்பு காவலர்களும் பணியாற்றி வருவதாக அமெரிக்கா கூறிவருகிறது. இந்த மாத தொடக்கத்தில் பாக்தாத் நகருக்கு வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை துணையமைச்சர் போல் உல்போவிச் கீழ்க்கண்டவாறு அறிவித்தார்: ''அவர்கள் முன்னணித் தளங்களில் இருப்பது நமக்கு நல்லது என்பது தெளிவாகும். அப்படி அவர்கள் பணியாற்றுவது அவர்களுக்கும் நல்லது அவர்கள் நாட்டுக்கும் நல்லது''

கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக ஈராக் படைகள் குறிப்பாக பயனுள்ள வகையில் செயல்பட முடியாது என்று கருதப்படுகிறது. முதலாவதாக அவர்களது கட்டுப்பாட்டு உணர்வுகளும் நோக்கங்களும் வேறானாதாக இருக்கிறது. அத்தோடு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாக இருப்பதால் மிகப்பெரும்பாலோர் ஈராக்கில் சம்பளத்திற்காக இராணுவத்தில் சேர்ந்திருக்கிறார்களே தவிர, அமெரிக்காவிற்கு ஆதரவு காட்டுவதற்காக அல்ல. இரண்டாவதாக ஈராக் இராணுவத்திடம் சரியான ஆயுதங்களில்லை. Chicago Tribune பத்திரிகை இந்த மாதம் பாக்தாத் நகரில் பணியாற்றி வருகிற 160 ஈராக்கியர் அடங்கிய சிவில் பாதுகாப்பு துருப்புக்கள் செயல்பாடு குறித்து மதிப்பீடு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அவர்களிடம் வாகனங்கள், வானொலி தொடர்பு சாதனங்கள், துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவச உடைகள், அல்லது தங்களது படைமுகாம்களில் மேஜை நாற்காலிகள் கூட இல்லாமல் இருக்கின்றனர் என்று எழுதியிருக்கிறது.

பாக்தாத்திலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் விலக்கிக்கொள்ளப்படுவதால் ஏற்படுகின்ற தாக்கம் என்னவாக இருக்குமென்றால் கிளர்ச்சிக்காரர்கள் தங்களது போராளிகளை திரட்டுவதற்கும் அனுப்புவதற்கும் எளிதாக வழிவகைகளை ஏற்படுத்தும் என்பதாகும். மேலும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாட்டுப்படை இலக்குகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து தாக்குதல்களை அவர்களால் நடத்தவும் முடியும்.

பல்லுஜா நகரத்திலிருந்து பெரும்பாலான துருப்புக்கள் வெளியேறிவிட்டன. ''முஹமதுவின் இராணுவம்'' என்று கூறிக்கொள்ளும் ஒரு எதிர்ப்புக்குழு சென்ற வாரம் துண்டு அறிக்கையொன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் உள்ளூர் மக்களுக்கும் காவல் துறையினருக்கும் அந்த அமைப்பு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. நகரம் தங்களது கட்டுப்பாட்டில் வந்துவிடுமென்றும் அமெரிக்கா முற்றிலும் வெளியேறிவிடும் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறது ''அமெரிக்கா தனது வாலை இரண்டு பின்னங் கால்களுக்கு இடையில் சுருட்டிக் கொண்டு நமது நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருக்கிறது'' என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

வாஷிங்டன் போஸ்ட்டில் டேனியல் வில்லியம்ஸ் ஞாயிறு அன்று எழுதியுள்ள கட்டுரையில் ''பல்லுஜா நகரத்தின் சகதி நிறைந்த தெருக்களில் அடிக்கடி இப்போது அமெரிக்கப் படைகளை பார்க்க முடியவில்லை. எப்போதாவது அபூர்வமாகத்தான் நடமாடுகிறார்கள். அமெரிக்கா அனுப்பியுள்ள உள்ளூர் அரசாங்கம் தடுப்பு வளையங்களுக்கு பின்னால் இருந்து கொண்டு நிர்வாகம் நடத்திக்கொண்டிருக்கிறது. பெரிய சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது போன்ற பகுதிகளுக்குள்ளே போலீசார் பதுங்கிக் கொண்டிருக்கிறார்கள். மிக எளிதாக எதிர்ப்பாளர்கள் நகருக்குள் நுழைகிறார்கள் மற்றும் வெளியேறுகிறார்கள். அமெரிக்காவிற்கு எதிரான வெளிநாட்டு ஊடுருவல்காரர்கள் அந்த நகரத்தில் வீடுகளை வாடகைக்கு அமர்த்தி குடியிருப்பதாக அங்குள்ள மக்கள் சொல்கின்றனர்'' என்று டேனியல் வில்லியம்ஸ் எழுதியுள்ளார்.

சில மாதங்களில் பாக்தாத்தின் பெரும்பகுதி இதே நிலையில்தான் இருக்கும். ஈராக்கிலிருந்து அமெரிக்க மற்றும் வெளிநாட்டுத் துருப்புக்கள் அனைவரும் முழுமையாக வெளியேறி ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் வரை சண்டைகள் நடந்துகொண்டுதான் இருக்கும். சேதங்கள் பெருகிக்கொண்டுதானிருக்கும். இது ஈராக் மக்களை மட்டுமல்ல, ஈராக்கை ஆக்கிரமித்துக் கொண்டவர்களையும் பாதிக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved