World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Washington unleashes bloodbath in Iraq

ஈராக்கில் இரத்தக்களரியைக் கட்டவிழ்த்துவிடும் வாஷிங்டன்

By the Editorial Board
28
April 2004

Back to screen version

மத்திய ஈராக்கிலுள்ள பல்லூஜா நகரத்திலும் தெற்குப்பகுதியில் உள்ள நஜாப் நகரத்திலும் மக்களை வெளியேற்றி ஆயிரக்கணக்கான துருப்புக்கள் முற்றுகை இட்டுள்ள நிலையில், புஷ் நிர்வாகம் ஈராக் மக்களுக்கு எதிராக இரத்தக்களரியை கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.

பல்லூஜாவில் செவ்வாயன்று அமெரிக்கப்படைகள் தங்களது தாக்குதல்களை முடுக்கிவிட்டிருக்கின்றன. AC- 130 போர் விமானங்கள் நெரிசல்மிக்க குடியிருப்புப் பகுதிகளில் பீரங்கி குண்டுகளை வீசி தாக்கி வருகின்றன. ஹெலிகாப்டர் பீரங்கிகள், ஜெட் போர் விமானங்கள், டாங்குகள் மற்றும் எந்திரத்துப்பாக்கிகளால் நகரத்தை தாக்கி வருகிறார்கள்.

ஒரு சம்பவத்தில் டாங்கி ஒன்று தாக்கி உள்ளூர் மசூதியின் பள்ளி வாயில் தூபி இடிந்து விழுந்தது. பல்லூஜா நகருக்கான கடைசி நுழைவு வழியை கடற்படைவீரர்கள் மூடிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற சண்டைகளில் தங்களது வீடுகளிலிருந்து தப்பி ஒடியவர்கள் இனி தங்களது வீடுகளுக்கு திரும்ப முடியாதபடி தடுக்கப்பட்டிருக்கின்றனர். 3,00,000 மக்களைக் கொண்ட இந்த நகரம் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பதில் முன்னணியில் உள்ளது. இந்த நகரத்தின் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்துவற்கான முன்னேற்பாடாகத்தான் நகரத்தின் கடைசி நுழைவுவழி மூடப்பட்டிருப்பதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

நியூஜேர்சியை சேர்ந்த பேர்மிங்காம், அலபாமா அல்லது நியூவார்க் ஆகியவற்றிற்கு இணையான அளவாக கருதப்படும் இந்த நகரம் பற்றி குறிப்பிட்ட ஒரு கடற்படை தளபதி இந்த நகரத்தை ''மிகப்பெரிய எலி'' வலைப்பின்னல் என்று குறிப்பிட்டார்.

ஷியா மதத்தலைவர் மொக்தாதா அல் சதருக்கு விசுவாசமான மஹ்தி சேனையை சேர்ந்தவர்கள் பலர் செய்வாய்க்கிழமையன்று நஜாப் நகரில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக பென்டகன் அதிகாரிகள் கூறினர். ராக்கெட்டுகளை செலுத்துகின்ற ஹெலிகாப்டர் துப்பாக்கிகள் 60- குடிப்படையை சேர்ந்த வீரர்களை சுட்டு வீழ்த்துவதற்காக, அழைக்கப்பட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். என்றாலும் உள்ளூர் மருத்துவமனை ஊழியர்கள் பலியானவர்களில் நிராயுதபாணிகளான குடிமக்களும் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்தினர். அமெரிக்கத்துருப்புக்கள் ஒரு பெரிய மருத்துவ மனையை பிடித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. மற்றும் காயமடைந்த ஈராக்கியருக்கு சிகிச்சையளிக்க விரும்புபவர்களுக்கு, அனுமதியை மறுக்கவும் அல்லது மருந்துகள் வருவதைத்தடுக்கவும் இவ்வாறு மருத்துவமனையை அவர்கள் பிடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மோதலை தொடர்ந்து நஜாப் வாசிகள் போரில் மடிந்த போராளிகள் 7-பேர் அடங்கிய சவப்பெட்டிகளோடு பெருந்திரளாக தெருக்களில் திரண்டு வந்தனர். அமெரிக்கப்படைகள் அந்த நகரத்தை தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் எந்த முயற்சியையும் எதிர்த்து நிற்கப்போவதாக உறுதி எடுத்துக்கொண்டனர்.

''இந்த மனிதரை மண் கவ்வச்செய்யப் போகிறோம்'' என்று சதர் பற்றி அமெரிக்காவின் முதலாவது கவசப் படைப்பிரிவு தலைமை அதிகாரி குறிப்பிட்டார்.

அமெரிக்க இராணுவம் தங்களது நாட்டை தொடர்ந்து ஆக்கிரமிப்புச் செய்து கொண்டிருப்பதை ஈராக் மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு பயமுறுத்தி பணிய வைப்பதற்காக பெருந்திரளாக பொதுமக்களை கொன்று குவிப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 25-மில்லியன் மக்களைக் கொண்ட நாட்டை கண்காணிப்பற்கு தேவையான இராணுவம் இல்லை எனவே, இரண்டாம் உலகப்போரின் போது ஐரோப்பாவில் நாஜி ஆக்கிரமிப்பாளர்கள் செக் நகரமான Lidce மற்றும் Warsaw MTM மக்கள் செறிந்து வாழும் பகுதியை தரைமட்டமாக்கிய பாணியை பல்லூஜா நகருக்கும் Sadr இயக்கத்திற்கும் உதாரணம் கற்பிக்க வாஷிங்டன் உறுதியோடு உள்ளது.

வெள்ளை மாளிகையில் இப்போது வீறிறிருப்பவர் பிறரைத்துன்புறுத்தி அதிலே இன்பம் காணும் சாடிஸ்ட். அவர் இந்த இரண்டு முற்றுகைகள் பற்றியும், இறுதி முடிவுகளை எடுக்கிறார் என்று கூறப்படுகிறது. பழிவாங்கும் வெறி உணர்வோடு அச்சுறுத்தும் தாக்குதல்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏப்ரல் தொடக்கத்திலிருந்து 122- அமெரிக்கத் துருப்புக்கள் போரில் மடிந்திருக்கின்றனர். அதேகாலத்தில் ஈராக் மக்கள் அதைவிட 10-மடங்கு அதிகமாக கொல்லப்பட்டிருக்கின்றனர். அவர்களில் பலர் மகளிரும் குழந்தைகளும் ஆவர்.

நகரங்களுக்கு முற்றுகையிட்டு மருத்துவ மனைகளை மற்றும் மசூதிகளைத் தாக்குவது, மருத்துவ உதவிகள், உணவு மற்றும் இதர அத்தியாவசிய சேவைகளை குடிமக்களுக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்கச் செய்யாமல் தடுப்பது மற்றும் 20,000- வரை ஈராக் மக்களை குற்றச்சாட்டுக்களோ அல்லது விசாரணையோ இல்லாமல் சிறையில் அடைத்திருப்பது ஆகியவையெல்லாம் போர்க் குற்றங்களாகும். அமெரிக்க மக்களின் பெயரால் இதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஈராக் மீது படையெடுத்து அந்த நாட்டை பிடித்துக்கொள்வதற்கு ஆரம்பத்தில் எடுத்து வைக்கப்பட்ட சாக்குப்போக்குகள் பேரழிவு ஆயுதங்களில் பாக்தாத்திற்கும் அல்கொய்தாவிற்கும் நிலவுவதாக கூறப்பட்ட தொடர்புகள்வரை நீண்ட காலத்திற்கு முன்னரே பொய்கள் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டன. வாஷிங்டன் ஈராக்கிற்கு சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் கொண்டுவர முயலுகிறது என்ற கூற்று ஒரு மோசடி என்று இப்போது நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் வாஷிங்டனின் கறைப்படிந்த காலனி ஆதிக்கப்போரின் முழுமையான பயங்கரங்கள் இப்போது பெருமளவில் பெருகிக்கொண்டு வருகின்றன.

மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் இந்தப்போரை எதிர்க்கின்றபோது மற்றும் கொலைகள் பெருகிக் கொண்டுவருவதை வெறுப்போடு பார்க்கின்றபோது, ஈராக் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அமெரிக்க நிர்வாகத்தின் முழு ஆதரவையும் இரண்டு அரசியல் கட்சிகளின் முழு ஆதரவையும் பெற்றுள்ளன. அந்த வாரம் இரண்டு செல்வாக்கு மிக்க நாளேடுகள் வெளியிட்டுள்ள தலையங்கங்கள் ஈராக் மக்கள் மீது இரத்தக்களரி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆளும் குழுவில் ஒட்டுமொத்த பொதுக்கருத்துகள் நிலவுகின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன.

''The Fallujah Stakes" என்ற தலைப்பில் ேவால் ஸ்ரீட் பத்திரிகை திங்களன்று வெளியிட்டுள்ள தலையங்கத்தில், புஷ் நிர்வாகத்திற்கு அரசியலில் அதிக நெருக்கமாக உள்ள குடியரசுக்கட்சி வலதுசாரி பிரிவுகளிடையே ஆதிக்கம் செலுத்துகின்ற இரத்தவெறி தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஈராக் மீது நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக கடைபிடித்து வருகின்ற கொள்கைகளிலிருந்து பின்வாங்குவதாக உணர்ந்து இந்த சக்திகள் பெருமளவில் கலவரம் அடைந்து வருகின்றன. ஜூலை முதல் தேதி இடைக்கால அரசாங்கம் என்று கூறப்படுவதற்கு தேவையான மனிதர்களை ஐ.நா தூதர் லக்தார் பிரம்மி தேர்ந்தெடுக்க அனுமதிக்கப்பட்டிருப்பதாக புஷ் அறிவித்ததை தொடர்ந்து இந்தக் கலவரப்போக்கு தீவிரமடைந்துள்ளது.

முதலாவது வளைகுடா போரின்போது பத்திரிக்கை "பலாத்காரம்தான் வேலைசெய்யும்" என்ற அருவருக்கத்தக்க சொல்லை உருவாக்கிற்று, இப்போது மிகப் பெருமளவில் இரத்தம் சிந்தவேண்டும் என்று விரும்புகின்றது. புஷ் நிர்வாகம் தனது "இராணுவ நடவடிக்கையை குறைத்துக் கொள்ளக்கூடாது, அது தவிர்க்க முடியாதது" என்று திங்களன்று அந்தப்பத்திரிகை எச்சரிக்கை செய்திருக்கின்றது. அது தொடர்ந்து குறிப்பிட்டது: ''பாத் கட்சியின் மிச்சம் இருப்பவர்கள் ஜிஹாத்திகள் மற்றும் கிரிமினல்கள் பல்லூஜாவை தங்களது புகலிடமாகப் பயன்படுத்தி கொள்பவர்கள் விரைவில் முடிந்தவரை கொல்லப்பட வேண்டும். அவர்களுடன் பேரம் நடத்தக் கூடாது. அவர்களுக்கு நியாயம் கற்பிக்கக் கூடாது. அவர்களால் தான் ஜூன் 30-க்குப்பின் அமைதியான முறையில் ஈராக்கில் அதிகார மாற்றம் தோல்வியடைந்துவிட்டது. கிளர்ச்சியாளர்கள் வீழ்த்தப்பட வேண்டும், தூதரக நடவடிக்கைகளால் அல்ல, துப்பாக்கி முனையில். அதை நாம் செய்வதற்கு தயாராக இல்லை என்றால் புஷ் துருப்புக்களை தற்போது நாட்டிற்கு திரும்ப அழைத்துக் கொள்ளலாம்.''

அதற்கு முதல்நாள் "ஈராக்கிற்கு வலுவான படை" என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் ஜனநாயகக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரி எடுத்திருக்கும் நிலைப்பாடுகளை பெரும்பாலும் ஒட்டி வருகின்ற வகையில் அமைந்திருக்கிறது. புஷ் நிர்வாகம் "மகிழ்வற்ற யதார்த்தங்களை" எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஈராக்கை பிடித்துக்கொள்ள கூடுதலாக 50,000- அல்லது அதற்கு மேற்பட்ட துருப்புக்களை அனுப்பவேண்டும் மற்றும் 2006-க்கு அப்பாலும் ஆக்கிரமிப்பு நீடிக்கவேண்டும் என்று கூறியுள்ளது. "கூடுதல் படை வலிமை தருகின்ற பாதுகாப்பை ஈராக் மக்களுக்கும், நமது படைகளுக்கும்" புஷ்ஷின் வெள்ளை மாளிகை மறுத்துவருவதாக கூறியுள்ளது.

அந்த தலையங்கம் தனது முடிவுரையில் கூறியுள்ளதாவது: இறுதியில் புஷ்- மேற்கொண்டுள்ள பணிகள் நமது வீரம் செறிந்த இராணுவ வீரர்களும், வீராங்கனைகளும் மற்றும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்குப் போராடிக் கொண்டிருக்கின்ற ஈராக் குடிமகன்களும் சாதிக்க இயலாத நிலையை உருவாக்கியுள்ளது. ஆனால் அந்தக் கட்டத்தை நாம் அடைந்துவிடவில்லை. இது பின்வாங்குகின்ற தருணம் அல்ல, நிச்சயமாக இது அரைகுறை நடவடிக்கைகளை எடுக்கின்ற தருணம் அல்ல. (அழுத்தம் சேர்க்கப்பட்டது)

அமெரிக்க இராணுவம் பல்லூஜா மற்றும் நஜாப் நகர்களை முற்றுகையிட்டுள்ள நிலையில் எழுதப்பட்டுள்ள இந்தக்கடைசி வாக்கியத்தின் பொருள் - சந்தேகத்திற்கு இடம் இல்லாதது. "அரைகுறை நடவடிக்கைகள்" கூடாது என்று சொல்லுகின்றபோது முழு இராணுவ வலிமையோடு மக்களது கிளர்ச்சியை ஒடுக்க வேண்டும் என்று பொருளாகின்றது. அப்படிச் செய்யும்போது பெரும் அளவில் பொதுமக்களைக் கொல்லாமல் முடியாது.

புஷ் நிர்வாகத்தின் மிகத்தீவிரமான வலதுசாரி ஆதரவாளர்களும், தாராண்மை அமைப்பு என போகிற போக்கில் கூறப்படுவதில் உள்ள அரசியல் எதிரிகள் என்று கருதப்படுபவர்களும், அதே பொய்களைக் கூறி ஈராக் படுகொலையை நியாயப்படுத்தி வருகிறார்கள். அந்த இரு தரப்பினருமே ஈராக்கில் உள்ள ஆக்கிரமிப்பு படைகள் "சுதந்திரம்" மற்றும் "ஜனநாயகம்" இவற்றை ஈராக்கிற்கு கொண்டுவரும் ஆயுதம் தாங்கிய மத போதகர்கள் என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கின்ற ஈராக் மக்களை கொன்று குவித்தபின்னர்தான் "ஈராக்கியர் வசம்" ஆட்சி மாற்றம் செய்யப்படும் என்று ேவால்ஸ்ரீட் ஜேர்னல் கருதுகின்றது. டைம்சை பொறுத்தவரை ஏற்கனவே 10,000- ஈராக் சிவிலியன்களை பலி கொண்டிருக்கின்ற அமெரிக்கத் துருப்புக்கள் எண்ணிக்கையை மிகப்பெரும் அளவில் உயர்த்தினால் தான் ஈராக் மக்களது "பாதுகாப்புக்கு" வழி செய்யும் என்று கூறுகிறது.

ஈராக் மக்கள் கொன்று குவிக்கப்படுவது நூற்றுக்கணக்கான இளம் அமெரிக்க வீரர்கள் காரணமில்லாமல் தங்களது உயிரைப் பலிகொடுப்பது இவையெல்லாம் மேற்கொள்ளப்பட்டு வருவது சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் பாதுகாப்பு என்று போர் ஆதரவாளர்கள் கூறிவருகின்ற நம்பத்தகாத காரணங்களால் அல்ல. மாறாக, அமெரிக்க ஏகாதிபத்தியம் நாடு முழுவதையும் பிடித்து அந்த மக்களை ஒடுக்கி மிகப்பெருமளவில் கிடைக்கின்ற எண்ணெய் வளத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு உலகின் மிக முக்கியமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் மேலாதிக்கம் செலுத்த முடிவு செய்து விட்டது.

ஈராக் மக்களிடம் "இறையாண்மையை ஒப்படைப்பதற்கான" ஏற்பாடுகள் ஜூன் 30-ந்தேதி நிறைவேறும் என்று முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க காலனி ஆதிக்க திட்டத்தின் அகந்தைப்போக்கு மறுக்க முடியாத அளவிற்கு உள்ளது. Reuters செய்தி நிறுவனத்திற்கு திங்களன்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பவல் பேட்டியளிக்கும் போது பொறுக்கி எடுக்கப்படும் ஈராக் அதிகாரிகளின் புதிய குழுவிடம் "இறையாண்மையை" ஒப்படைப்பது என்பது அவர்களது அலுவலக மேஜையோடு முடிந்துவிடும் என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

''அது இறையாண்மைதான், ஆனால், அந்த (சில) இறையாண்மையின் ஒரு பகுதியில் அவர்கள் சார்பில் அவர்களின் அனுமதியோடு நாங்கள் செயல்படுத்துவோம். நாங்கள் எதையும் அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளவதல்ல'' என்று பவல் கூறியிருக்கிறார்.

பறித்துக் கொள்வதற்கு எதுவுமில்லை. அமெரிக்க இராணுவம் தொடர்ந்து அந்த நாட்டை பிடித்துக் கொண்டிருக்கும். இராணுவச் சட்டத்திற்கு இணையான அதிகாரங்களை தன்வசம் வைத்திருக்கும் புதிய நிர்வாக அமைப்பு ஆக்கிரமிப்பு நிர்வாகத்தால் ஆணையிடப்பட்டவற்றில் புதிய சட்டங்களை இயற்றுவதற்கோ அல்லது அதில் திருத்துவதற்கோ, வாஷிங்டன் எதிர்ப்பு தெரிவிக்கும். எல்லா அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளையும், ஈராக்கிற்கு புதிதாக வரும் தூதர் ஜோன் நெக்ரபான்ட் எடுப்பார். அவருக்கு உதவியாக அமெரிக்க தூதரகத்தில் 4,000- ஊழியர்கள் இருப்பார்கள். உலகிலேயே மிகப்பெரியதாக இருக்கும் காலனி வைஸ்ராய் போன்று தூதர் செயல்படுவார்.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு சூறையாடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு படையெடுப்புத்தான் அந்த நாட்டை விடுவிப்பதற்காக அல்ல, என்பதை ஈராக்கில் முதலில் பொறுப்பு வகித்த அமெரிக்க அதிகாரி சென்ற மாதம் அளித்த ஒரு பேட்டியில் தெளிவாக கூறியுள்ளார். ஓய்வு பெற்ற ஜெனரல் J. கார்னர் BBC- நிருபர் கிரக் பாலஸ்டிற்கு பேட்டியளிக்கும்போது 2001- தொடக்கத்திலேயே ஈராக்கின் எண்ணெய் வளத்தை அதன் பொருளாதாரத்தை தனியார் உடைமையாக்குதற்கு அமெரிக்க நிர்வாகம் விரிவான திட்டங்களை தீட்டியதாக தெரிவித்தார். விரைவில் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அவர் அழைப்புவிடுத்ததால் கர்னல் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தனது கட்டளைகள் மூலம் சூறையாடுவது மற்றும் பொருளாதார வளத்தை கைப்பற்றிக் கொள்வது என்ற அமெரிக்க நிர்வாகத்தின் திட்டத்திற்கு எதிராக அவரது ஆலோசனை அமைந்திருந்ததால் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் இதை அவரே சொல்லியிருக்கிறார். படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் ஈராக்கின் செல்வத்தை அமெரிக்க எண்ணெய் ஏகபோக நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கம்பெனிகள் வசம் ஒப்படைப்பதுதானே தவிர "ஜனநாயகத்திற்கும்" அவர்களது நடவடிக்கைக்கும் சம்மந்தம் இல்லை என்ற உண்மையை அதிக தெளிவாக வேறு ஒன்றும் உறுதிப்படுத்தி இருக்கமுடியாது.

திட்டத்தின் ஒருபகுதி ஈராக்கை ஒரு இராணுவ தளமாக்கி மத்திய கிழக்கு முழுவதிலும் செயல்படுத்துவது என்பதை கார்னர் விளக்கியுள்ளார். 1898- ஸ்பெயின் -அமெரிக்கப்போர் முடிவில் தேசியவாத கொரில்லாக்களை நசுக்கியபின்னர் பிலிப்பைன்ஸ் நாட்டில் அமெரிக்காவை பசுபிக்கின் கடற்படை வல்லரசாக முன் நிறுத்தியதைப் போல் ஈராக்கும் பயன்படும் என்று அவர் கூறினார்.

''அது ஒரு தவறான உதாரணம் என்று நினைக்கிறேன். ஆனால் இப்போது நம்கண் முன்னால் உள்ள ஈராக் நமது கூட்டணியின் மத்திய கிழக்கு நிலையமாகும். அங்கு நமது இராணுவ நடமாட்டம் ஓரளவிற்கு உள்ளது. அங்கு நமக்கு ஒரு மூலோபாய அணுகூலம் உண்டு'' என்று கார்னர்- சொன்னார். இந்த வார்த்தைகள் சம்மந்தப்பட்ட தளபதியின் வாயிலிருந்தே வருகின்றது. கொடூரமான வெட்கக்கேடான காலனி ஆதிக்கம் புத்துயிர் பெற்றிருக்கின்றது என்பதற்கு அது சர்ச்சைக்கிடமில்லாத உண்மையாகும்.

அமெரிக்க ஆளும் செல்வந்தத் தட்டு மற்றும் அவர்களது அரசியல் சேவகர்களின் அகந்தைப் போக்கிற்கும் கபட வேடத்திற்கும் எல்லையில்லாமல் போய்விட்டது. 1980-களில் CIA நிதியுதவியுடன் இயங்கிவந்த ஆப்கனிஸ்தான் முஜாஹைதீன்கள், சோவியத் இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக போர் புரிந்தார்கள், அவர்களை ரொனால்ட் றேகன் "சுதந்திரப்போராளிகள்" என்றும் அமெரிக்காவை உருவாக்கிய வீரர்களுக்கு இணையான இன்றைய வீர்களாகவும் பாராட்டப்பட்டனர். அப்படியிருந்தும் இன்றைக்கு ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போராடுபவர்களை குற்றவாளிகள் என்று பட்டம் கட்டியிருக்கிறார்கள்.

மறுக்க முடியாத மக்கள் ஆதரவுடன் பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் அபரிமிதமான இராணுவ பலம் கொண்ட ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். அமெரிக்க அதிகாரிகளாலும் செய்தி ஊடகங்களாலும் அவர்கள் வழக்கமாக "பயங்கரவாதிகள்", "முரடர்கள்" மற்றும் "தீவிரவாதிகள்" என்று விவரிக்கப்படுகிறார்கள். தங்களது நாட்டை சட்டவிரோதமாக காலனி ஆதிக்கப்பாணியில் பிடித்து கொண்டிருப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க போராடுவதற்கு அவர்களுக்கு எல்லாவிதமான உரிமையும் உண்டு.

ஈராக்கிலிருந்து எல்லா அமெரிக்க துருப்புக்களும் உடனடியாக எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஈராக்கில் மக்களுக்கு போர் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்காவிற்கு உள்ளேயே இரட்டிப்பு வலுவோடு கோரிக்கை எழுப்பப்பட வேண்டும். பொய்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க மக்களை இந்தப் போருக்கு இழுத்துச் செல்ல காரணமாக இருந்தவர்கள் போர்குற்றவாளிகள் அவர்கள் மீது குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

அமெரிக்கா ஆக்கிரமிப்பு நீடிக்க வேண்டும் அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கில் இல்லாவிட்டால் அந்த நாடு உள்நாட்டுப்போரில் மூழ்கிவிடும் என்ற "தாராள" வாதம் காலனி ஆதிக்கம் போன்று பழமையானதாகும் மற்றும் புறக்கணிக்கத்தக்கதாகும். ஈராக்கில் மிக மோசமான மாற்று, எதுவென்றால் இந்த ஏகாதிபத்தியத் திட்டத்தின் "வெற்றி"தான், அது ஈராக்கை நிரந்தரமாக ஆக்கிரமிப்பதையும் முடிவற்ற இரத்தக்களரி நடப்பதையும் தவிர்க்கமுடியாததாக்கும், அதே நேரத்தில் புதிய மேலும் தீவிரமான பேரழிவுப் போர்களுக்குத்தான் வழி வகுக்கும்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு நீடிப்பது தொடர்பாக தேர்தல் அரங்குகளில் எந்தவிதமான விவாதமும் நடைபெறாமல் ஒதுக்குவதில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளுமே உறுதியாக உள்ளன. கெர்ரி, புஷ் ஆகிய இருவரும் அமெரிக்க மக்கள் மில்லியன் கணக்கில் திரண்டு போர் எதிர்ப்பு உணர்வுகளை வெளிப்படுத்தி இருப்பதை சட்டவிரோதமானது மற்றும் ஒடுக்கப்பட வேண்டுமென்று கூறுகின்றனர்.

போருக்கு எதிரான போராட்டத்தை புஷ் இல்லாமல் வேறு எவரும் என்ற சர்வ சாதாரண அரசியல் அடிப்படையில் நடத்திவிட முடியாது. அமெரிக்க உழைக்கும் மக்கள் சர்வதேச உழைக்கும் மக்களோடு இணைந்து ஒரு புதிய சுயாதீனமான வெகுஜன அரசியல் இயக்கத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும்.

2004-தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடுவது உழைக்கும் மக்களின் வெகுஜன சோசலிசக் கட்சியை உருவாக்குவதற்கான அத்திவாரங்களை அமைப்பதற்காகும். எமது வேட்பாளர்கள் மட்டுமே ஈராக் கிரிமினல் போருக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று கோருகின்றனர். இந்தப் போரை எதிர்க்கின்ற அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை ஆதரிக்க வேண்டுமென்று அழைப்பு விடுக்கிறோம்.

நமது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களான பில்வான் ஒகென் மற்றும் ஜிம் லோரன்ஸ் ஆகியோரை முடிந்தவரை பல மாநில வாக்குச்சீட்டுக்களில் இடம் பெறச் செய்யவேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களை உங்களது மாநில காங்கிரசுக்கான வாக்குப்பதிவுச் சீட்டிலும் உள்ளூர் வாக்குப்பதிவுச் சீட்டிலும் இடம்பெறச்செய்ய முன் வாருங்கள். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக ஆதரிப்பதன் மூலம் இராணுவவாதத்திற்கும் ஏகாதிபத்திய போருக்கும் எதிராக பலத்த அடி கொடுக்க முன்வாருங்கள்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved