World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Yasser Arafat: 1929-2004

யாசர் அரஃபாத்: 1929-2004

By Chris Marsden and Barry Grey
12 November 2004

Back to screen version

பாலஸ்தீனிய விடுதலை மேம்பாட்டிற்குச் சிறிதும் தளராத விசுவாசத்துடனும், பெரும் தைரியத்துடனும் பாடுபட்ட மனிதர் என்று யாசர் அராஃபாத் எப்பொழுதும் நினைவிற் கொள்ளப்படுவார். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாலஸ்தீனியர்களது எதிர்ப்பின் சர்வதேச அடையாளச் சின்னமாக விளங்கிய அராஃபாத்தின்மீது, போர்க்குற்றவாளிகளான ஏரியல் ஷரோன், ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் போன்றோர் அவரைப் பயங்கரவாதி என்று திமிருடன் அழைத்து அவதூறுகளை அள்ளிவீசியதை, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இகழ்வுடன் ஒதுக்கிவிடுவர்.

இந்தப் பிரச்சினை பற்றி, அராஃபாத்தே ஐ.நா.வில் 1974ம் ஆண்டு மிகச் சிறந்த முறையில் விடையிறுத்திருந்தார்:

"ஒரு புரட்சியாளனுக்கும் பயங்கரவாதிக்கும் இடையேயுள்ள வேறுபாடு அவர் என்ன காரணத்திற்காகப் போராடுகிறார் என்பதில் அடங்கியுள்ளது. எவர் நீதியின் பக்கம் நின்று, படையெடுத்து வந்தோரிடமிருந்தும், வந்து குடியேறியவர்களிடமிருந்தும், காலனித்துவ வாதிகளிடத்தில் இருந்தும் தன்னுடைய நாட்டின் சுதந்திரம், விடுதலை இவற்றைப் பெறுவதற்குப் போராடுகின்றனரோ, அவர்களை பயங்கரவாதிகள் என்று கூற இயலாது. நீதியற்ற காரணத்திற்காகப் போராடுபவர்கள், மற்ற மக்களின் நிலத்தை ஆக்கிரமிக்க, காலனியமயமாக்க மற்றும் அவர்களை ஒடுக்கவேண்டும் என்பதற்காகப் போராடுபவர்கள்தான் பயங்கரவாதிகள். அவர்களுடைய நடவடிக்கைகள்தான் கண்டனத்திற்கு உட்படுத்தப்படவேண்டும்; அவர்கள்தாம் போர்க்குற்றவாளிகள் என்று அழைக்கப்படவேண்டும்; ஏனெனில் ஒரு காரணத்திற்கான நியாயம், நீதி ஆகியவைதான் போராட்டத்திற்கான உரிமையை நிர்ணயிக்கின்றன."

பாலஸ்தீனியர்களுக்கு இடையே காணப்படும் துயரத்தின் அளவு, எந்த அளவிற்கு அரஃபாத் ஆழ்ந்த அன்புடன் அங்கு போற்றப்பட்டார் என்பதைக் காட்டுகிறது. ஆயினும் கூட, எல்லாவற்றிற்கும் மேலாக அவருடைய துன்பியலில் இருந்து அரசியல் படிப்பினைகளைப் பற்றி எடுப்பது தேவையாகிறது; ஏனெனில் இத்துன்பியல் பாலஸ்தீனியர்களது மட்டுமல்ல, ஒட்டுமொத்தமான அரபு மக்களதுமாகும்.

மத்திய கிழக்குப் பகுதியின், மிருகத்தனமாக சுரண்டப்பட்டுள்ள, உழைக்கும் மக்களிடையே தைரியம், தியாகம், போராட்டத்திற்கான விருப்பம் இவை என்றுமே குறைந்திருக்கவில்லை. அராஃபாத்தினாலும் கொடுக்க முடியாததாக எது குறைந்து இருந்தது என்றால், ஏகாதிபத்திய ஆதிக்கம், அதன் தவிர்க்கமுடியாத விளைவுகளான வறுமை, அடக்குமுறை இவற்றை முடிவுகட்டுவதற்கான செயல்முறைபடுத்தக் கூடிய ஒரு புரட்சிகர முன்னோக்கைத்தான் ஆகும்.

அரஃபாத்தின் தேசிய செயல்திட்டத்தின் இறுதித் தோல்வியை ஒரு தனிமனிதனுடைய தன்னிலைக் குணநலன்களால் ஏற்பட்டது என்று காரணம் கூறமுடியாது. அரஃபாத்தின் பலமும், பலவீனங்களும் அவர் தலைமை தாங்கி நடத்தியிருந்த அரசியல் இயக்கத்தின் சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் இவற்றைப் பிரதிபலித்தவையாக இருந்தன.

இன்று பாலஸ்தீனிய மக்கள் எதிர்கொண்டுள்ள தப்பிக்கமுடியாத சூழ்நிலை ஒரு விதிவிலக்காக இல்லை, மாறாக அன்றாட விதிமுறையாக இருக்கிறது. மத்திய கிழக்கு முழுவதும், மற்றும் சர்வதேச ரீதியிலும், அந்நிய மேலாதிக்கம், சமுதாய அநீதி இவற்றிற்கு ஒரு தேசியத் தீர்வைக் காணும் முயற்சி செல்தகைமையற்றது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த இடங்களில் தேசியப் புரட்சிகர இயக்கங்கள் காலனித்துவ ஆட்சிக்கும் அந்நிய ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சிகளில், அல்ஜீரியாவை போல வெற்றி பெற்றுள்ளனவோ, அங்கும் கூட நாடுகடந்த வங்கிகள், பெருநிறுவனங்கள் இவற்றின் ஆதிக்கம் தொடர்கின்றன; தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகளின் சமூக நிலைமைகள் மிகவும் இழிவாகத்தான் உள்ளன; ஊழல் மிகுந்த உள்ளூர் முதலாளித்துவ கும்பல்கள்தாம், பழைய காலனித்துவ நிர்வாகிகளுக்கு பதிலாக அதிகாரத்தில் உள்ளனர்.

அரஃபாத்தின் துன்பியலுக்கு மூலகாரணம் அவருடைய அரசியல் போராட்டம் அடிப்படையாகக் கொண்டிருந்த தவறான அரசியல் முன்னோக்காகும். ஒப்பீட்டளவில் கையளவேயான நாடுகடந்த வங்கி நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களால் மேலாதிக்கப்படும் பூகோளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தில், இன்றைய சூழ்நிலையில், இன்னும் வலியுறுத்திக் கூறக் கூடிய முறையில், இருபதாம் நூற்றாண்டின் அடிப்படைப் படிப்பினைக்கு உரியதாய் இருப்பதாவது: தேசிய ஒடுக்குமுறை, சமூக சுரண்டல் இவற்றிற்கான தீர்வை ஒரு தேசிய அளவில் காண இயலாது; மாறாக சர்வதேச, சோசலிசப் பாதையில்தான் காணமுடியும் என்பதேயாகும்.

பாலஸ்தீனிய மக்களின் பிரச்சினை ஒரு சர்வதேசப் பிரச்சினை ஆகும். மத்திய கிழக்கில் உள்ள முதலாளித்துவ தேசிய அரசுகளின் நிலவும் கட்டமைப்பிற்கூடாக ஏகாதிபத்தியம் தன்னுடைய கட்டுப்பாட்டை செலுத்தும் இம்முறைக்குள்ளே இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. மத்திய கிழக்கில் இப்பொழுதுள்ள சமன்பாட்டில் பாலஸ்தீனிய நாட்டைச் சேர்த்துக்கொள்ளுவது, அது கனிந்து வந்தாலும்கூட, பாலஸ்தீனிய மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்காது. இந்த கட்டமைப்பே கட்டாயம் அகற்றப்பட்டு, உழைக்கும் மக்களுடைய தேவைகளுக்கு ஒத்து வரும் ஒரு புதிய முறையால் பதிலீடு செய்யப்பட வேண்டும். அத்தகைய கட்டமைப்பு மத்திய கிழக்கின் ஐக்கிய சோசலிச அரசுகள் என்பதாகும். இந்த நிலையை அடையக்கூடிய சமூக சக்தி தொழிலாள வர்க்கமே; அது ஏகாதிபத்தியம் மற்றும் இந்தப் பிராந்தியத்தின் தேசிய முதலாளித்துவ வர்க்கங்கள் இவற்றுக்கெதிரான போராட்டத்தில், தனக்குப் பின்னே கிராமப்புற வறியோரை அணிதிரட்டி ஐக்கியப்படுத்தும்.

பாலஸ்தீனிய தேசிய வேலைத் திட்டத்தின் தோல்வி, இருபதாம் நூற்றாண்டின் மற்றோர் முக்கிய தேசிய இயக்கமான சியோனிசத்தின் நெருக்கடியைப் பிரதிபலிக்கிறன்து என்பது வரலாற்றின் மிகப் பெரிய விந்தைகளுள் ஒன்றாகும். சியோனிச முயற்சியின் "வெற்றி" என்னவென்றால், மனிதகுல வரலாற்றில் மிகப் பெரும் துயரங்களைச் சந்தித்த ஒடுக்கப்பட்ட மக்களை, பாலஸ்தீனியர்கள் என்ற மற்றொரு மக்கள் கூட்டத்தை ஒடுக்குபவர்களாக மாற்றியதுதான்.

பாலஸ்தீனிய விடுதலை இயக்கம், மற்றும் அராஃபாத்தின் வரலாறு இரண்டும், பாலஸ்தீனிய மக்கள் அடக்கப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டது வெறும் இஸ்ரேலிய வன்முறையினாலும், இராணுவத்தினாலும் மட்டும் அல்ல, ஆனால் அரேபிய முதலாளித்துவ வர்க்கத்தின் துரோகத்தினால் என்பதையே மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டுகின்றன. தன்னுடைய தேசியவாத வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அரபு ஆட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தும், அவர்களிடையே சூழ்ச்சிமுறைகளை கையாண்டும், தன் இலக்கை அடையலாம் என்று கருதியிருந்த அராஃபாத்தினால் உண்மையான விடுதலையை அவர்களிடம் இருந்தோ அவர்களுடைய ஏகாதிபத்திய எஜமானர்களிடம் இருந்தோ பெறமுடியவில்லை. அதேபோல், சோவியத் ஒன்றியத்தை, இஸ்ரேல், அமெரிக்கா இவற்றிற்கெதிரான எதிர் எடையாக வலிமையாக நம்பி இருந்த அவருடைய முயற்சிகள், முடிவில் தவிர்ககமுடியாமல் பாலஸ்தீனிய, அரேபிய மக்களுடைய உறுதியான விரோதியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உதவியை நாடத்தான் இட்டுச் சென்றன.

மாபெரும் பேரழிவு

முகம்மது அப்தெல் ரஹ்மான் அப்தெல் ராவுப் அரஃபாத் அல் குடுவா அல் ஹுசைனி என்ற பெயருடன், கெய்ரோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் காசாவிலிருந்து குடிபெயர்ந்திருந்த பாலஸ்தீனியர்களுக்கு, 1929ல் அரஃபாத் பிறந்தார். அவருடைய தந்தையார் ஒரு சிறு வணிகராவார். அரஃபாத் ஐந்து வயது நிரம்பிய அளவில் அவருடைய தாயார் காலமான பின்னர், அவர் ஜெருசலேம் எனும் பழைய நகரத்தில் உறவினர்களின் பாதுகாப்பில் வளருவதற்கு அனுப்பிவைக்கப்பட்டார். சிறுவயதினாராக இருந்தபோது, அரஃபாத் பாலஸ்தீனிய போராட்டத்தில் நெருங்கிய தொடர்பு கொண்டார்; அந்த உறுதிப்பாட்டில் இருந்து அவர் பின்னர் சிறிதும் அசைந்து கொடுக்கவில்லை.

அக்காலகட்டத்தில் யூத, அரேபிய தொழிலாளர்களை முதலாளித்துவத்திற்கு எதிரான பொதுப்போராட்டத்தில் ஒன்றாக இணைக்கும் சக்தி வாய்ந்த வர்க்க உணர்வு ஏற்பட்டது, 1921ல் பாலஸ்தீனிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PCP) தோற்றத்திற்கு வழிவகுத்திருந்தது. ஆனால் மாஸ்கோவில் பின்னர் அதிகாரத்தை வலுப்படுத்திக் கொண்ட ஸ்ராலினிச அதிகாரத்துவம் PCP ஐ தன்னுடைய சொந்த வெளிநாட்டுக் கொள்கைத் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டது; அக்கொள்கை மேலை ஏகாதிபத்திய சக்திகளுக்கு சவாலாக இருக்கும் வகையில் மத்திய கிழக்கில் இருந்த பல தேசிய முதலாளித்துவ ஆட்சிகளுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதில் குவிமையப்படுத்தி இருந்தது, மேலும் தொழிலாள வர்க்கத்தின் பங்கில் எவ்விதமான சுதந்திர அரசியல் முன்முயற்சியில் ஈடுபடுவதையும் நசுக்கிவிடும் தன்மையையும் அது கொண்டிருந்தது.

ஐரோப்பாவில் யூதர்களுக்கு எதிரான நாஜிப் பிரச்சார பாரிய இனப் படுகொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக மாறினர்; சோவியத் ஒன்றியம் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு இஸ்ரேல் நாடு தனியே தோற்றுவிக்கப்படுவதற்கு ஆதரவைக் கொடுத்தது. இதன் விளைவாக, பாலஸ்தீனியத்தை இரு நாடுகளாக, ஒரு பாலஸ்தீனம், ஒரு யூத நாடு எனப் பிரித்தல் வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பொது மன்றத்தை வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் சியோனிஸ்டுகள் வெற்றியடைந்தனர். பிரிட்டிஷ்காரர்கள் வெளியேறிய பின்னர், இஸ்ரேல் என்ற நாடு 1948 மே மாதத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது.

பாலஸ்தீனியர்கள் பல அரபு ஆட்சிகளையும் தங்கள் உதவிக்கு வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அரபு லீக்கின் படைகள் மிக மோசமான முறையில் பிளவுற்றிருந்ததோடு மட்டும் இல்லாமல் எண்ணிக்கையில் அது இஸ்ரேலியப் படைகளால் விஞ்சப்பட்டிருந்தன, ஏகாதிபத்திய சக்திகள் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் அரேபிய முதலாளித்துவக் குழுக்களின் வர்க்க நலன்களுக்கான வேண்டுதல்களில் - அவர்களுக்குத் தேவையான புதிய நிலப்பகுதி, "அவர்களுடைய" சொந்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளையே சுரண்டுதல், இதற்கு உதவி செய்யும் வகையில் பெரிய வல்லரசுகளில் ஏதாவது ஒன்றின் ஆதரவைப் பெறுதல் ஆகியற்றில்- தங்கி இருக்க முடிந்தது.

சில பாலஸ்தீனியர்கள் தங்கள் இல்லங்களை விட்டு இஸ்ரேல், அரேபிய ஆட்சிகளுக்கு இடையே நடக்கும் போர்களைத் தவிர்க்கும் முறையில் ஓடியபோதிலும், பலர் இஸ்ரேலிய இராணுவத்தின் மிருகத்தனமான இனத் துடைத்தழிப்பு பிரச்சாரத்தின் விளைவாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறினர். இந்த அச்சுறுத்தலின் தாக்கம் Deir Yassin என்ற இடத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் ஒரு சுருக்கவடிவமாகத் தெரிந்தது; இதைப்பற்றி அரஃபாத் விவரித்திருக்கிறார். சியோனிஸ்டுகளைப் பற்றி அவர் கூறினார்: "அவர்கள் பாலஸ்தீனத்தின், ஒரு மில்லியன் அரேபியர்களை அகற்றி, மொத்த நிலப்பகுதியில் 81 சதவிகிதத்தை ஆக்கிரமித்தனர். அவர்கள் 524 அரேபிய நகரங்கள், கிராமங்கள் முதலியவற்றை ஆக்கிரமித்தனர்; அவற்றில் 385 இடங்களை அழித்தனர்; இந்தவகையில் அவர்கள் எதையும் விட்டுவைக்காமல் முழுமையாக அழித்தனர். அவ்வாறு செய்த பின்னர் தங்களுடைய குடியிருப்புக்கள், குடியேற்றப்பகுதிகளை எங்களுடைய பண்ணைகள், தோட்டங்கள் இவற்றின் அழிவில் அமைத்துக் கொண்டனர்."

இஸ்ரேலாக மாறிய பாலஸ்தீனியப் பகுதியில் முதலில் மொத்தம் இருந்த 1,200,000 பாலஸ்தீனியர்களில் 200,000 பேர்களே அங்கு தொடர்ந்தும் இருந்தனர், அவர்கள் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். மற்றவர்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் முகாம்களில் தங்கத் தலைப்பட்டனர்; குறிப்பாக புதிதாக விரிவாக்கப்பட்டிருந்த ஜோர்டானில் இந்த எண்ணிக்கை கூடுதலாக இருந்தது; இதில் மேற்குக் கரையும் அடங்கியிருந்தது. ஒரு மக்கட்தொகுப்பு என்ற முறையில் வாழும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது; "அவர்கள் வாழ்கிறார்கள் எனக் கூறுவதற்கில்லை" என இஸ்ரேலியத் தலைவர் கோல்டா மேயர் மட்டும் இவ்வாறு கூறவில்லை; பாலஸ்தீனியர்களைத் தங்களுடன் இணைத்துக் கொள்ளவோ அவர்களுடைய நிலங்களை மீட்டுத் தரும் விருப்பமோ இல்லாத அரேபியத் தலைவர்களும் இவ்வாறுதான் கூறினர்.

அரேபிய ஆட்சியாளர்களின் துரோகச் செயல்பற்றி அரஃபாத் நன்கு அறிந்திருந்தார்; ஆயினும்கூட, ஆரம்பத்தில் இருந்தே அவர்களை தந்திரோபாய முறையில்தான் உதவிக்கு அழைக்க முடியும் என்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் உணர்ந்தார். இது பல பேரழிவான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியது.

எகிப்தில் 1954ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கேர்னல் அப்துல் நாசர், அரேபிய உலகு முழுவதும் மக்களிடைய பொய்த் தோற்றங்களை ஏற்படுத்தினார்; ஏனெனில் இவர் வரம்பிற்குட்பட்ட முறையில் சமூக பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்து, அதை அரேபிய சோசலிசம் என்று அழைத்ததுடன் தன்னுடைய தலைமையின்கீழ் அனைத்து அரேபிய ஒற்றுமையும் வளரவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

அரஃபாத் காசாப் பகுதியைச் சென்றடைந்தார்; அப்பொழுது அது எகிப்தினால் நிர்வாகிக்கப்பட்டு வந்தது; இப்பகுதியில் அவர் இஸ்ரேலுக்கு எதிராக சிறுதாக்குதல்களை நடத்தி வந்த பாலஸ்தீனிய துணை இராணுவப் படையில் சுறுசுறுப்புடன் இயங்கிவந்தார். அவர் அபு இயத், அபு ஜிகாத் ஆகியோருடனும் இணைந்து செயலாற்றி வந்தார். மாஸ்கோவில் இருந்து பொருளாதார, இராணுவ ஆதரவைப் பெற்று வந்த நாசர் ஐ.நா. தலையீடு மூலம் ஒரு உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தார்; இதன்படி ஐ.நா. அவசரப் படைப் பிரிவு ஒன்று காசாப் பகுதிகளைக் காக்கும் என்றும் பாலஸ்தீனிய கொரில்லாப் போராளிகள் இஸ்ரேலுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துவதைத் தடுக்கும் என்றும் ஏற்பாடாகி இருந்தது. இதையொட்டி பாலஸ்தீனிய கொரில்லாப் போராளிகள் சுற்றி வளைக்கப்பட்டதோடு, அரஃபாத்தும் அவருடைய சகாகக்களும் தாம் தனிமைப்படுத்தப்பட்டதை உணர்ந்தனர்.

1957ம் ஆண்டு, அரஃபாத்தும், அபு ஜிகாத்தும் கெய்ரோவில் இருந்து குவைத்திற்குச் சென்று அங்கு இருந்த அபு இயத்துடன் பாலஸ்தீனியத் தேசிய விடுதலை இயக்கத்தைத் (Palestine National LIberation Movement, Al Fateh) தோற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த அமைப்பு ஒரே ஒரு பிரச்சினையான, இஸ்ரேலினால் கைப்பற்றப்பட்டிருந்த நிலத்தை மீட்டு ஜனநாயக, மதசார்பற்ற பாலஸ்தீனத்தை தோற்றுவிக்கவேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் ஒரு போராட்டத்தை முன்னெடுத்தது.

1964ம் ஆண்டு, உயர்புறத்து ஜோர்டான் தண்ணீரை மாற்றுத் திசையில்திருப்பிவிடுவோம் என்று இஸ்ரேல் அச்சுறுத்தியபோது, எகிப்துதான் அரபு லீக்கின் கீழ் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தை அமைப்பதற்குக் காரணமாக இருந்தது. PLO வின் தலைவர் அஹ்மத் ஷுகைரி மூலம் நாசர் தனது ஆதிக்கத்தை செலுத்த முயன்றார்; PLO இன் ஆயுதப் படைகள் எகிப்து, சிரியா, ஜோர்டான், ஈராக் இவற்றின் இராணுவங்களின் ஒரு பகுதியாக இருந்தன.

பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தில் ஃபத்தா சேர்ந்திருந்தது; ஆனால் அரஃபாத்தோ பாலஸ்தீனியப் போராளிகளை நடுநிலைப்படுத்திவிடும் முயற்சியைத் தோற்கடிப்பதில் தீவிரமாக இருந்ததுடன், இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தொடரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அல் ஃபத்தா உறுப்பினர்கள் இன்னும் கூடுதலான முறையில் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர். ஜோர்டானில் மன்னர் ஹுசைன், ஃபத்தா போராளிகள் அனைவரையும் தேடிப்பிடித்துச் சிறையிலிடுமாறு உத்தரவிட்டார்.

1967ம் ஆண்டு நிகழ்ந்த அரபு-இஸ்ரேல் போர் அரேபியர்கள், யூதர்கள் இருவருக்குமே ஒரு திருப்பு முனையாக அமைந்தது. ஆறு நாட்களுக்குள் அரேபிய இராணுவங்களை இஸ்ரேல் அழித்தது எகிப்து, சிரியாவில் இருந்த மதசார்பற்ற தேசிய அரசாங்கங்களையும் அவற்றிற்கு ஆதரவு கொடுத்திருந்த சோவியத்தின் ஸ்ராலனிஸ்டுகளையும் செல்வாக்கிழக்க வைத்தது. இஸ்ரேல் தன்னுடைய எல்லைப்புறங்களைப் பெரிதும் விரிவுபடுத்தியது; இதன் விளைவாக இன்னும் 350,000 அகதிகள் உருவாகினர்; இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேத்தையும் இணைத்துக் கொண்டது.

இப்போர் நாசருடைய அனைத்து அரேபிய-ஒன்றிய முயற்சிக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்தது. இதன் பின்னர் அனைத்து அரேபிய முதலாளித்துவ ஆட்சிகளும் விரைவில் வலதுசாரிப் புறம் நகர்ந்து விட்டன. இராணுவம் அல்லது இராணுவத்தினால் ஆதரவு கொடுக்கப்பட்டிருந்த ஆட்சிகள் சிரியா, ஈராக்கில் ஆட்சியைக் கைப்பற்றின; எகிப்தைப் பொறுத்தவரையில் எண்ணெய் வளம் நாடும், பழமைவாதம் கொண்ட மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஆதரவான நிலையை அடைந்தது.

பாலஸ்தீன விடுதலை அமைப்பை ஃபத்தா ஏற்றல்

அரேபியர்களின் தோல்வி, பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக சுதந்திரமான இராணுவ முயற்சிகள் தேவை என்று வாதிடும் பல கொரில்லா அமைப்புக்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இனி இஸ்ரேலுக்கு எதிரான இப்போராட்டம் அல்ஜீரியர்கள், வியட்நாமியர்கள் மேற்கொண்ட கொரில்லா வழிமுறைகளை பயன்படுத்தி பாலஸ்தீனிய தேசிய வாதம் என்ற பதாகையின் கீழ் நடத்தப்பட இருந்தது.

கொரில்லா அமைப்புக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக ஃபத்தா எழுச்சி பெற்றது; அதிலும் குறிப்பாக மேற்குக் கரையில் Karameh என்னும் இடத்தில் இஸ்ரேலியர்களுக்கு எதிராக அது கொண்ட நிலைப்பாட்டிற்குப்பின் இது தீவிரமாயிற்று. பெப்ரவரி 1969ல் பாலஸ்தீனிய காங்கிரஸ் கெய்ரோவில் நடைபெற்றபோது இயக்கத்தின் தலைமையை அது அகற்றிவிட்டு, அரஃபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் புதிய தலைவரானார்.

ஃபத்தாவின் உறுப்பினர் எண்ணிக்கை ஒரு சில நூறுகள் என்பதிலிருந்து 30,000 என உயர்ந்து, அது தொடர்ச்சியாக இஸ்ரேலின் மீது தாக்குதல்களை நடத்தத்த தலைப்பட்டது. அதன் அரசியல் மற்றும் இராணுவ வெற்றிகளின் விளைவாக, ஃபத்தாவின் தலைமையில் PLO ஓர் உண்மையான மக்கள் இயக்கமாக பாலஸ்தீனியரிடையே மாற்றத்தைக் கொண்டது. 1960களின் கடைசி ஆண்டுகளில் இருந்து பாலஸ்தீனிய மக்களுடைய போராட்டமும் PLO உம் மத்திய கிழக்கு முழுவதும் புரட்சி இயக்கங்களில் மாறுதல்களைக் கொண்டு வரும் ஊக்கியாகவும், குவிமையமாகவும் ஆனது.

1970-1982 காட்டிக்கொடுப்பு

இதற்கடுத்த 20 ஆண்டுகளில் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் அரேபிய ஆட்சிகளிடம் பலமுறையும் தாக்குதல்களை சந்திக்கவேண்டியிருந்தது: ஜோர்டானால் பாலஸ்தீனியர்கள் 1970 "கறுப்பு செப்டம்பரில்" படுகொலை செய்யப்பட்டது, இதற்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் Karantina, Tel al Zaatar முகாம்களில் பாலஸ்தீனியர்களை லெபனான் பாசிச முறையில் அழித்ததற்கு சிரியா குற்றத்துணை புரிந்தது, அதேபோன்ற படுகோலைகள் 1982ல் Sabra, Shatilla முகாம்களில் நிகழ்த்தியது, அரேபிய ஆட்சிகள் இன்றளவும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இஸ்ரேலிய அடக்குமுறையை எதிர்க்க மறுத்தல் ஆகியவை இதில் அடங்கும்.

1970க்குப் பின் லெபனானை தளமாகக் கொண்டிருந்த பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கு எதிராக சிரியா தலையிட்டமை மிகுந்த தீமையைக் கொண்டிருந்தது. 1970 களின் நடுப்பகுதியில் PLO, லெபனானில் கமால் ஜும்ப்ளாட் தலைமையிலான இடது தேசியவாத சக்திகளுக்கும் பாசிச கிறிஸ்துவ Falange க்கும் இடையே நடந்துவந்த உள்நாட்டுப் போரில் கலந்துகொள்ள நேரிட்டது. அரஃபாத் ஜும்ப்ளாட்டிற்கு ஆதரவு கொடுத்தார்; இடதுசாரி சக்திகள் வலதுசாரி அணியை கிட்டத்தட்ட அழிக்கும் நிலை ஏற்பட்டபோது சிரியா அவர்களுக்கு எதிராகத் தலையிட்டது. Karantina மற்றும் Tel al Zaatar இல் நடத்தப்பட்ட படுகொலைகள் இந்தக் காட்டிக் கொடுத்தலின் விளைவாகும்.

1982ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் PLO வை வெளியேற்றுவதற்காக லெபனான் மீது படையெடுத்தபோது, சிரிய முதலாளித்துவ ஆட்சி மீண்டும் அதன் பாலஸ்தீனிய நலன்கள் பற்றிய வெறுப்புணர்வை நிரூபிக்கும் வகையில், PLO வைக் காப்பதற்கு சுண்டு விரலைக் கூட உயர்த்த மறுத்துவிட்டது; இதை ஒட்டி பாலஸ்தீனிய இயக்கம் லெபனானை விட்டு நீங்கும்படி நிர்பந்திக்கப்பட்டது மற்றும் துனீசியாவில் புதிய தலைமையிடத்தை நிறுவியது.

இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம்தான் சாப்ரா மற்றும் ஷட்டிலா இனஅழிப்புப் படுகொலைகள நிறுத்தும்படி அழைப்பு விட்டது. மக்கட்தொகையில் பத்தில் ஒரு பங்கு இருந்திருந்த, 400,000க்கு மேற்பட்டோர், இப்படுகொலைகளை அனுமதித்திருந்த மெனாசிம் பெகின், மற்றும் பாதுகாப்பு மந்திரி ஏரியல் ஷரோன் ஆகியோருடைய லிக்குட் அரசாங்கத்திற்கு எதிராக டெல் அவிவ் தெருக்களில் திரண்டனர். இது ஜனநாயகமுறை, மற்றும் முற்போக்கான உணர்வுகளின் சக்திவாய்ந்த வெளிப்பாடு ஆகும்; இது அரேபிய மற்றும் யூதத் தொழிலாளர்களிடையே ஐக்கியப்பட்ட போராட்டத்திற்கான திறன் உள்ளது என்பதைப் புலப்படுத்தியது. இத்தகைய போராட்டம், மத்திய கிழக்கு முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியோரின் வர்க்க நலன்களைப் பற்றி உரைக்கும் ஒரு சோசலிசத் திட்டத்தின் அடிப்படையில்தான் சாத்தியமாகும்.

1973ம் ஆண்டு "Yom Kippur" போருக்குப் பின்னர், எகிப்திய தலைவர் அன்வர் சதாத் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் நேரடியாகவே நெருக்கமான தொடர்புகளை கொள்ள முயற்சிகளை மேற்கொண்டார்; 1978ம் ஆண்டு காம்ப் டேவிட்டில் இஸ்ரேலுக்கு ஒப்புதல் கொடுத்தவகையில் இம்முயற்சி உச்சக் கட்டத்தை அடைந்தது. தன்னுடைய வருங்கால அண்டை நாடுகளுடன் நடத்தவிருக்கும் போர்களில், மிக முக்கியமான அரபு நாட்டின் நடுநிலைமையை இஸ்ரேல் அடைந்தது; இதன் விளைவாக பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் தனிமைப்படுத்தப்பட்டு, பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலின் வலிமை ஓங்கியது.

இன்டிபாடாவும் சோவியத் ஒன்றியத்தின் சரிவும்

1980களின் நடுப்பகுதியில், மிகப் பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு அவை அரஃபாத்தை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடிகளுள் சிக்க வைத்தன. மிகையில் கோர்பச்சேவ் தலைமையின் கீழ் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவ மீட்சிக்கு திரும்புவதற்கான முயற்சியைக் கொண்டதும் சோவியத் ஒன்றியம் உலக ஏகாதிபத்தியத்திய கட்டமைப்புக்களுக்குள் மீண்டும் கொண்டுவரப்பட்டதும் இவற்றில் மிக அடிப்படையானவையாகும். "1987ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் இஸ்ரேலுடனான பூசலுக்கு ஓர் அரசியல் தீர்விற்கு ஆதரவு தருவதாக சமிக்கை காட்டும் வண்ணம், தன்னுடைய மரபுவகை நட்பு நாடுகளுக்கு கொடுத்து வந்த ஆயுத உதவியைக் குறைத்துவிட்டு, எகிப்து, ஜோர்டான், இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தூதரக மற்றும் பொருளாதர உறவுகளை விரிவுபடுத்தியது." [Marr & Lewis, Riding The Tiger, Westview Press, 1993, p.92]

அதேகால கட்டத்தில், 1987 டிசம்பர் மாதம், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பகுதியில் இருந்த தொழிலாளர்கள், இளைஞர்களுடைய தன்னியல்பான கிளர்ச்சி இன்டிபாடா வெளிப்பட்டது. இது இஸ்ரேலியர்களுக்கு மட்டும் அல்லாமல், அரேபிய முதலாளித்துவத்தினருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது; அவை இந்தப் புரட்சிகர இயக்கம் கட்டுப்பாட்டை மீறிப் பெருகும் என்றும் மத்திய கிழக்கும் முழுவதும் தீவிரப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருதின.

அவர் நம்பியிருந்த அனைத்து அரபு ஆட்சிகளும் வாஷிங்டனுடன் சமாதானம் செய்து கொள்ளத் தீவிரமாக இருந்த நிலையிலும், அமெரிக்கா மத்திய கிழக்கில் எந்த விதமான தீவிர சவாலையும் எதிர்கொள்ளவில்லை என்ற நிலையிலும், அரஃபாத் தந்திரோபாயங்களை கையாளுவதற்கான வாய்ப்புக்கள் பெரிதும் குறைந்து விட்டன. டிசம்பர் 1988ல் அமெரிக்க வெளியுறவுத்துறை வரிக்கு வரி கொடுத்திருந்த அறிக்கையின்படி, அரஃபாத் இஸ்ரேலுக்குப் பாதுகாப்பை உறுதிசெய்ததுடன், இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கை ஒரு "மூலோபாயம் என்றும் இடைக்காலத் தந்திரோபாயம் அல்ல" என்றும் ஏற்றுக்கொண்டார்; மேலும், "தனிநபர், குழுக்கள் மற்றும் அரச பயங்கரவாதம் உள்பட" அனைத்துவிதமான பயங்கரவாதங்களையும் கைவிட்டுவிடுவதாகவும் அறிவித்தார். ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இஸ்ரேலை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டது பற்றி தன்னுடைய ஒப்புதலை வெளிப்படையாக அறிவிக்குமாறு கோரப்பட்டபோது, தன்னுடைய அவமானத்தை வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில் அராஃபாத் கூறினார்: "உங்களுக்கு என்ன வேண்டும்? நான் ஆடைகளைக் கழற்றி விட்டு ஆட வேண்டுமா? அது உகந்ததாக இருக்காது" என்றார்.

அமெரிக்காவையும், இஸ்ரேலையும் எதிர்ப்பதற்கு ஒரு தளத்தைக் கொள்ள வேண்டும் என்ற இறுதி முயற்சியில், பாத்திச ஆட்சி 1991ல் வாஷிங்டனால் தாக்கப்பட்டபோது, சதாம் ஹுசைனுடைய பாதிஸ்ட் ஆட்சிக்கு அரஃபாத் தன்னுடைய ஆதரவை அறிவித்தார். ஆனால் அவர் தான் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதை அறிந்தார்: ஏனெனில் அரபு ஆட்சிகள் அனைத்தும் அமெரிக்கப் போர் உந்துதலின் முன்னே நெடுஞ்சாண்கிடையாய் அதன் காலடியில் விழுந்துகிடந்தன. முதல் வளைகுடாப் போர் முடிவடைந்த பின்னர், அரஃபாத் மீண்டும் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கப்பட்டார், அது இறுதியில் 1993ம் ஆண்டு ஒஸ்லோ உடன்பாடுகளில் நிறைவு அடைந்தது.

ஒஸ்லோவில் அரஃபாத்தால் ஏற்கப்பட்டிருந்த விதிமுறைகள் தோற்றுவித்த பாலஸ்தீனிய தேசிய அதிகாரம் (PA) ஃபத்தா கூறியிருந்த நோக்கமான ஒரு ஜனநாயக, மதச்சார்பற்ற பாலஸ்தீனம் என்ற கருத்திலிருந்து மிகவும் விலகிய ஒன்றாகும். PLO விற்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உடன்பாடு பாலஸ்தீனிய மக்கள் உரிமை கொண்டாடியிருந்த பகுதிகளில் 22 சதவிகிதம் தவிர ஏனைய பாலஸ்தீனிய நிலப்பகுதியை கைவிட்டதைத்தான் பிரதிபலித்தது. ஒரு பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் இடைக்கால அதிகாரம் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கும் என்றும், இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்புச் சுமை குறைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டபோது, உண்மையில் ஒரு சியோனிச ஆட்சிதான் எல்லைகள், வெளிநாட்டுக் கொள்கைகள், இவற்றின் மீது கட்டுப்பாட்டைக் கொள்ளும் என்றும், மேற்குக் கரை, மற்றும் காசாவில் இருக்கும் சட்டவிரோதக் குடியேற்றங்கள் அனைத்தின் பாதுகாப்பும் அதன் பொறுப்பில்தான் இருக்கும் என்றும் ஆகிவிட்டன.

உண்மையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறைக்கு, பாலஸ்தீனிய மக்களின் எதிர்ப்பை கண்காணிக்கும் பொறுப்பில்தான் அரஃபாத் வைக்கப்பட்டார்.

ஒஸ்லோவால் ஆரம்பிக்கப்பட்ட "அமைதிக்கான வழிவகைகள்" என்று அழைக்கப்படுபவை மோசடி ஆகும். கடந்த தசாப்தம் நீண்ட காலமாக பாலஸ்தீனிய மக்கள் அனுபவித்துவரும் துயரங்களில் மிகக் கசப்பான தசாப்தம் ஆகும். பாலஸ்தீனிய இடைக்கால அதிகார அமைப்பு ஏற்படுத்துவதற்கு முன்பு அவர்கள் கொண்டிருந்த சமூக, பொருளாதார நிலையை விட அவர்களுடைய இன்றைய நிலை மோசமாக உள்ளது. இதைவிட மிருகத்தன்மையையும், அடிக்கடி இராணுவ ஊடுருவல்களையும், அவர்களுடைய தலைவர்கள் படுகொலை செய்வதையும், இறுதியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் தயாரிக்கப்படும் எத்தகைய துரோகத்தனமான தீர்விலும், அதை ஏற்கத் தயாராக உள்ள இடைக்கால அதிகாரத்தையும், அதிலுள்ள பெருகிவரும் ஊழல் மலிந்த முதலாளித்துவ அடுக்கு அதற்கு தலைமை தாங்குவதையும்தான், அவர்கள் எதிர்கொள்ளும் நிலையாக காணப்படுகிறது.

ஒஸ்லோ உடன்பாடுகளின் கீழ் 1993 முதல் நடைபெற்றுவந்த தன்னுடைய சட்ட விரோதமான குடியேற்ற நடவடிக்கைகளில் தான் இனி ஈடுபடாது என்று அளித்திருந்த உறுதிமொழியை இஸ்ரேல் மீறியதோடன்றி, குடியேறியுள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வந்த இஸ்ரேல் அரசாங்கங்களின் ஆட்சியில் இரு மடங்கிற்கும் மேலாகிவிட்டது. சியோனிஸ்டுகள், கிழக்கு ஜெருசலேத்தின் நிலை, பாலஸ்தீனிய அகதிகளும் அவர்கள் வழித் தோன்றல்களும் மீண்டும் திரும்பிவருதல் பற்றிய உரிமைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவும் மறுத்து வருகின்றனர்.

கொடுக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சலுகைகளுக்கு கூட இஸ்ரேலிய வலதுசாரி, குடியேற வேண்டும் எனக் கூறும் பிரிவினரிடையே சீற்றமான எதிர்ப்பைத் தூண்டி விட்டதுடன், 1995 நவம்பர் மாதம், அரஃபாத்தின் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளில் பங்காளராக நின்ற தொழிற் கட்சியின் பிரதம மந்திரியான Yitzhak Rabin இன் படுகொலையும் நிகழ்த்தப்பட்டது. இந்தச் செயல், குடியேறவேண்டும் என்ற கூறுவோருக்கு ஆதரவாக இருந்த லிக்குட் கட்சியின் தலைவரான பெஞ்சமின் நேதன்யாகு, ராபினுக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என்று தீவிர ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து நிகழ்ந்தது. அதையொட்டி, ராபினுடைய மனைவி நேதன்யாகுதான் கொலையைத் தூண்டி விட்டார் என்று நேரடியாகக் குற்றம் சாட்டினார். ராபின் படுகொலையானது, பாலஸ்தீனியர்களுடன் எந்த விதமான தொடர்பையும் கொள்ளக் கூடாது என்ற இஸ்ரேலிய ஆளும் தட்டினரின் நிலைப்பாட்டைத்தான் குறிக்கிறது.

நேதன்யாகுவின் தலைமையின் கீழ் லிக்குட் தேர்ந்தெடுக்கப்பட்டமை, பாலஸ்தீனியர்களுடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளையும் வேண்டுமென்றே நாசத்திற்கு உட்படுத்தும் கொள்கையை தொடக்கியதுடன் இன்னும் கூடுதலான கோரிக்கைகளையும் கடுமையான சலுகைகளையும் அரஃபாத்திடம் இருந்து வற்புறுத்திப் பெறும் நிலையையும் தோற்றுவித்தது; அதாவது பாலஸ்தீனியர்கள் ஆயுதங்களைக் கைவிடவேண்டும், மீண்டும் தங்கள் பகுதிகளுக்கு வரும் உரிமையை கைவிட வேண்டும், கிழக்கு ஜெருசலேத்தின் மீதான உரிமையைக் கைவிடவேண்டும் போன்றவை, அவற்றிற்கு பாலஸ்தீனியரிடையே எதிர்ப்பு பெருகிய வகையில் இத்தகைய கோரிக்கைகளுக்கு அரஃபாத்தால் இசைவு தரமுடியாது என்பது நன்கு தெரிந்ததே.

அமெரிக்க ஜனாதிபதி கிளின்டன் தலைமையில், ஜூலை 2000 த்தில் மேரிலாந்தில் உள்ள காம்ப் டேவிட்டில் நடைபெற்ற PLO மற்றும் இஸ்ரேலிய தொழிற்கட்சியை சார்ந்த பிரதம மந்திரி எகுட் பராக்கிற்கும் இடையேயான விவாதங்கள், அரஃபாத், ஒஸ்லோவில் கொடுத்ததைவிடக் கூடுதலான சலுகைகள் தரத் தயாராக இருப்பதைப் புலப்படுத்தின; இதில் யூதர்கள் மிகப் பெரிய அளவில் கொண்டுள்ள குடியேற்றங்களை இணைத்துக் கொள்ளுவதற்கும், பாலஸ்தீனியர்கள் திரும்பிவருவதற்கான உரிமையில் சில வரம்புகளும், ஒரு சர்வதேச நிதியில் இருந்து இழப்புத் தொகை ஏற்கப்படும் போன்றவையும் அடங்கியிருந்தன.

ஆனால் ஜெருசலேம் முழுவதும் இஸ்ரேலிய இறைமையின் கீழ் இருக்கவேண்டும் என்ற திட்டத்தை அரஃபாத்தினால் ஏற்க முடியவில்லை. பேச்சுவார்த்தைகள் முறிந்து போயின; நூற்றுக்கணக்கானவர்கள் காசாவில் அணிவகுத்துச் சென்று இஸ்ரேலுக்கு எதிராக மீண்டும் இன்டிபாடா தொடக்கப்பட வேண்டும் என்று கோரினர். அரஃபாத்திற்கு ஒரு பெரிய மாவீரருக்குரிய வரவேற்பு எகிப்தில் உள்ள அலெக்சாந்திரியாவில் ஆரவாரம் செய்த மக்களால் அளிக்கப்பட்டது; பாலஸ்தீனிய இடைக்கால அதிகாரமும் அவ்வாறே வரவேற்றது; ஏனெனில் அவர் ஜெருசலேம் பற்றிய இஸ்ரேலியக் கோரிக்கைகளை ஏற்க மறுத்துவிட்டார்.

2000 இலையுதிர்காலத்தை ஒட்டி வெடித்து தோன்றிய இரண்டாம் இன்டிபாடா, லிக்குட்டினாலும் ஏரியல் ஷரோனாலும் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்டவை; இஸ்ரேலியர் சலுகைகளை கொடுக்க வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்தை நிறுத்தும் வகையாக அவை மேற்கொள்ளப்பட்டன. அதிலிருந்து, அரஃபாத் இஸ்ரேலியர்களாலும், அமெரிக்க புஷ் நிர்வாகத்தாலும், அரக்கன் போல் சித்தரித்துக் காட்டப்படுகிறார். ஏனெனில் அவர் பாலஸ்தீனியர்களை இவர்கள் கோரும் வகையில் கடுமையான, இரக்கமற்ற முறையில் அடக்குவதற்கு மறுத்துள்ளார். இது அவருக்குப் பெருமைதான். ஆனால் அவருடைய பின்தோன்றல்களுடைய உள்ளங்களில் அடக்குமுறையை கையாள தயக்கம் ஏதும் இராது. மற்றவற்றைப் போன்றே இதிலும் தனிப்பட்ட தலைவர்களின் தன்னிலை விருப்பங்களுக்கும் குணநலன்களுக்கும் முடிவெடுக்கும் இடம் இல்லாமல், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக சக்திகள்தாம் அனைத்தையும் நிர்ணயிக்கின்றன.

அரஃபாத்தின் வரலாற்றுப் பாத்திரத்திற்கும், மக்கள்பால் அவர் கொண்டிருந்த விசுவாசத்திற்கும் புகழாரமாகக் கூறக்கூடியது, அவருடைய அரசியல் வரம்புகள் குறுகியவையாக இருந்தபோதிலும் கூட, அவரது கடைசி ஆண்டுகளில், அவர் தடையற்ற முறையில் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டின் வெறுப்பிற்கு இலக்காகி இருந்தார் என்பதாகும். கடந்த 50 ஆண்டுகளில் எந்த முக்கிய அரசியல் பிரமுகரும் அராஃபாத் போல பொறுமையுடன் அத்தகைய சோதனைகளை சந்தித்தது கிடயாது. தன்னுடைய மிக நெருக்கமான அரசியல் நண்பர்கள், தோழர்கள் படுகொலை செய்யப்பட்டதை அவர் கண்ணுற்றிருந்தார். அவரே பலமுறையும் படுகொலை முயற்சிகளின் இலக்காக இருந்தார்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் அவரிடம் நடந்து கொண்டமுறை காட்டுமிராண்டித்தனம் நிறைந்ததாகும். மூப்பு மிகுந்து, உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், மாதக் கணக்கில் அவர் இல்லக் காவலில் ரமல்லாவில் உள்ள இடைக்கால அதிகார அமைப்பின் தலைமையிட அலுவலக அறைகளில் இருக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டார்; இவை இஸ்ரேலியப் படைகளால் சூழப்பட்டிருந்ததுடன், பல அடிப்படை வசதிகளும் மறுக்கப்பட்டு இருந்தன. இருந்தபோதிலும், அவர் விடாப்பிடியாய் தன்னுடைய பதவியைவிட்டு அகல மறுத்துவிட்டார்; ஏனென்றால் இஸ்ரேலியர்கள் அவரை மீண்டும் திரும்ப அனுமதிக்க மாட்டார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது.

இறுதியில்கூட, அவர் ரமல்லாவில் இருந்து வெளியேறி பாரிசில் மருத்துவ உதவி பெறுவதற்கு, இஸ்ரேல் அரசாங்கம் அவர் திரும்பிவரலாம் என்று உத்தரவாம் கொடுத்த பின்னர்தான் உடன்பட்டார். அவருடைய மக்களின் போராட்டத்திற்கு அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு அந்த வகைச் சிறப்பைக் கொண்டிருந்தது.

சிக்கல்கள் மற்றும் முரண்பாடுகள் நிறைந்த ஒரு மரபுவழியை அரஃபாத் விட்டுச் சென்றுள்ளார். ஆனால் ஏகாதிபத்திய அடக்கு முறை, சமத்துவமற்ற நிலை இவை அகற்றப்படும் வருங்கால உலகில், வரக்கூடிய தலைமுறைகள், பாலஸ்தீனிய விடுதலைக்காக பாடுபட்டார் என்று அவரை அடையாளம் கண்டு அவரது பங்களிப்பை பெருமைப்படுத்தும். போராடும் மனித சமுதாயத்தால் ஒருபோதும் மறக்க முடியாத மிக அரிதான அரசியல் பிரமுகர்களில் அவரும் ஒருவராவார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved