World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US assault leaves Fallujah in ruins and unknown numbers dead

அமெரிக்கத் தாக்குதல் பல்லூஜாவை அழிவில் ஆழ்த்தியுள்ளது எண்ணிக்கை தெரியா அளவில் மரணத்தை விளைவித்துள்ளது

By James Cogan
11 November 2004

Back to screen version

பல்லூஜா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் ஒரு குற்றகரமான மற்றும் காட்டுமிராண்டித் தனமான நடவடிக்கையாகும். பல்லூஜாவின் வடக்கு புறநகர் பகுதிகளில் இராணுவம் புகுந்துள்ள நடவடிக்கைகள் பற்றிய விவரக் குறிப்புக்கள், அந்த நகரம் சிதைக்கப்பட்டிருப்பதையும் அந்த நகரத்தை தற்காத்து நின்ற, சரியான ஆயுதமில்லாத போராளிகள் கொன்று குவிக்கப்பட்டதையும், தெளிவாக விளக்குகிறது. 10,000 அமெரிக்க போர் வீரர்கள் எந்தவிதமான தார்மீக நெறிமுறையும் இல்லாமல் தாக்குதல்களை நடத்தினர்.

ஒரு மரைன் பிரிவோடு இணைக்கப்பட்டுள்ள Christian Science Monitor-ரின் பத்திரிகையாளர், புதனன்று எழுதினார்: "ஒவ்வொரு வாகனமும் ஒரு கார் குண்டுவீச்சு தாக்குதலுக்கான, வல்லமையுள்ள ஆயுதம் என்றும், ஒவ்வொரு நபரும் ஒரு எதிரியாகவும் கருதப்பட்டார். நாய்களைக்கூட சுட்டுக் கொல்லுமாறு வானொலி மூலம் ஒப்புதல் வந்தது, அவை ஆயுதங்களை கவ்விக் கொண்டு செல்வதைத் தடுப்பதற்காக".

அமெரிக்கப் படைகள் நகரத்திற்குள் முன்னேறிக்கொண்டிருந்தபோது, ஒரு Chicago Tribune பத்திரிக்கையாளர், ஒரு உளவியல் நடவடிக்கைப் பிரிவுப் படைகளுக்கு பின்னால் சென்றதைப் பற்றிய தகவல்களை தந்திருக்கிறார். அவர்களது, வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கிகள் Wagner -ன் Ride of the Valkyires இசையை ஒலித்துக் கொண்டு சென்றன. அந்த இசை, திரைப்பட இயக்குநர் Francis Ford Coppola தனது Apocalypse Now என்ற திரைப்படத்தில் பயன்படுத்திய இசையாகும், ஒரு வியட்நாம் கிராமத்தில், அமெரிக்கத் துருப்புக்கள் சிவிலியன்களை கொன்று குவித்தபோது அது பயன்படுத்தப்பட்டது.

பல்லூஜாவின் வடக்குப் பகுதியில் ஈராக் போராளிகள் அமெரிக்க இராணுவத்தின் கொலைவெறி தந்திரோபாயங்களாலும் சுடுகின்ற வலிமையாலும் நசுக்கப்பட்டனர். அமெரிக்க காலாட் படைப்பிரிவு ஒரு பாதுகாப்பான தூரத்தில் காத்துக் கொண்டிருந்தபோது, ஜெட்டுகளும், ஹெலிகாப்டர்களும், டாங்கிகளும் மற்றும் இதர கவச வாகனங்களும், தங்களுக்கு, முன்னால் உள்ள கட்டிடங்கள் மீது ராக்கெட்டுக்களாலும் குண்டுகளாலும் கனரக இயந்திர துப்பாக்கி குண்டுகளாலும் தாக்கி போராளிகள் இல்லாதவாறு காலி செய்தனர். தெருக்களில் கண்ணி வெடிகளை அப்புறப்படுத்தும், குண்டுகளை வெடித்தனர், பீரங்கிகள் குடியிருப்பு பகுதிகளில் கந்தகக் குண்டுகளால் தாக்குதல்களை நடத்தினர். அதனால் ஏற்பட்ட தீப்பிழம்புகளை, தண்ணீரால் அணைக்க முடியாது. சிவிலியன்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க அமெரிக்க இராணுவம் முயற்சி எதுவும் எடுக்கவில்லை.

பல்லூஜா -விலிருந்து Reuters செய்தி நிறுவனத்திற்காக, தகவல் தந்த ஈராக் பத்திரிகையாளர், Fadil-al-Badrani செவ்வாயன்று கூறினார்: "ஒவ்வொரு நிமிடமும், நூற்றுக்கணக்கான குண்டுகளும், ரவைகளும் வெடித்துக் கொண்டிருக்கின்றன..... நகரத்தின் வடக்குப் பகுதி, தீப்பிழம்பாக காட்சியளிக்கிறது. நெருப்பையும், புகையையும்தான் நான் பார்க்கிறேன். பல்லூஜா நரகம் போல் மாறிவிட்டது...

"குண்டு வீச்சில் பிரதான மின் இணைப்பு நிலையம் சேதமடைந்து விட்டதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது. தண்ணீர் வழங்குவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. மக்கள், குறிப்பாக குழந்தைகளும், பெண்களும் வீட்டிற்குள்ளேயே அடைபட்டு கிடக்கின்றனர். ஒரு இராணுவ இலக்கென்று தங்களை தவறாக கருதக்கூடும் என்பதால் அவர்கள் அஞ்சி வீடுகளில் அடைபட்டுக் கிடக்கின்றனர்."

புதன் கிழமையன்று, பத்ரானி அல்-ஜசீரா -விற்கு தகவல் தரும்போது நகரத்தின், 120 மசூதிகளில் ஏறத்தாழ பாதி அமெரிக்க விமானப்படை மற்றும் டாங்கிகளின் இலக்குகளாக கருதப்பட்டு அழிக்கப்பட்டன.

நியூ யோர்க் டைம்ஸ் நிருபர்கள் தந்துள்ள தகவலின்படி, வடக்கு புறநகர் பகுதிகளான, ஜோலான் மற்றும் அஸ்கரியில் பாதிக்கு மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுவிட்டன, புதன்கிழமையன்று அவர்கள் கொடுத்துள்ள செய்தியில், "பல்லூஜாவின் மிகப் பழமையான இடங்களுள் ஒன்றான ஜோலனின் சாலைகளிலும் குறுகலான சந்துகளிலும் சடலங்கள் சிதறிக் கிடந்தன, சில வீடுகளின் சுவர்களில் இரத்தமும், சதைகளும் படிந்திருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர் மற்றும் தெருக்களில் குழிகள் நிறைந்து காணப்பட்டன.

ஈராக் போராளிகள் 5 மாடி குடியிருப்பு வளாகங்களிலும் மருத்துவமனைகளிலும் இருந்து கொண்டு அமெரிக்க இராணுவத்தோடு போரிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்க டாங்கிகளும், இயந்திர துப்பாக்கிகளும் அந்தக் கட்டிடங்களை தரைமட்டமாக்கியதாக அமெரிக்கப் படை பிரிவுகளோடு இணைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் தந்த இதர தகவல்கள் விவரித்தன. பெண்களும் 12 வயது சிறுவர்களும் கூட தங்கள் நகரத்தின்மீது படையெடுத்து வந்த படைகளுக்கு எதிராக, துப்பாக்கி ஏந்தி சண்டையிட்டனர்.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கெதிராக பொதுமக்களின் எதிர்ப்பாக குவிமையப்படுத்தப்படும் பல்லூஜாவின், Al Hadra al-Muhammadiya, மசூதி பிடிக்கப்பட்டது தொடர்பாக, Los Angeles Times வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், அமெரிக்க இராணுவம் கட்டவிழ்த்து விட்ட குண்டு தாக்குதல் வல்லமையும், ஈராக் போராளிகள் எதிர்த்தாக்குதல் நடத்தும் திறனும் ஒப்புநோக்கி விவரிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு மரைன் காப்டன் அந்த செய்தி பத்திரிக்கையிடம் கூறினார்: "இதுதான் எதிர்ப்பின் உயிர்நாடி மையம்---- மற்றும் இங்கே நாங்கள் இருக்கிறோம்." இந்த ''உயிர்நாடி மையத்தில்'' தோற்றுவிக்கப்பட்ட ஆயுதங்கள் என்னவென்றால் ராக்கெட்டுக்களால் இயங்கும் வெடி குண்டுகள் (RPGs), AK- 47, காலாவதியாகிவிட்ட துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டு கருவிகள், கையிலுள்ள வெடிமருந்து மூடி ஆகியவைதான்.

பல்லூஜாவில் குண்டு மழை பொழிந்ததிலும், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததிலும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததிலும், தீயிலும் எத்தனைபேர் மடிந்தார்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை, பல மாதங்களுக்கு அல்லது வாரங்களுக்கு அந்த விவரங்கள் தெரியப் போவதில்லை. என்றாலும் அமெரிக்க இராணுவத்தின் சொந்த மதிப்பீட்டின்படி, அவர்கள் வன்முறையை தொடக்குவதற்கு முன்னர் அந்த நகரத்தில் 100,000 முதல் 1,50,000 குடிமக்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

புதன் கிழமையன்று மரைன் படைப்பிரிவு அதிகாரி ஒருவர், "எவரும் (சிவிலியன்கள்) காயமடைந்தது தொடர்பாக" அமெரிக்க இராணுவத்திற்கு தகவல் எதுவுமில்லை என்று அறிவித்தார். அவர்கள் அத்தகைய தகவலை தேடவில்லை என்பதுதான் இப்படிக் கூறுவதன் மூலம் தெளிவாகிறது. பல்லூஜாவில் குடியிருப்பவர் பிடிட்டீஷ் கார்டீயனுக்கு தொலைபேசியில் தந்த தகவலின்படி, "பொது மக்கள் மருந்தகங்களுக்கோ அல்லது மருத்துவமனைகளுக்கோ செல்ல முடியவில்லை, மற்றும் காயமடைந்தவர்கள் பலர் உள்ளனர். மிகப் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளிலேயே உள்ளனர்..... ஏராளமான மக்கள் மடிந்ததை நானே நேரில் பார்த்தேன்" என்று குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் முன்னேறிக் கொண்டிருக்கையில் அமெரிக்க இராணுவம் ஒட்டுமொத்த மக்களையும் ஒரு இலக்காக கருதுகிறது என்பது தெளிவாகிறது. புஷ் நிர்வாகம் தனது அகந்தை பிரச்சாரமான ஜனவரியில் தேர்தல் நடக்கும் முன்னர் அந்த நகரத்தை அபு முசாப் அல்-சர்காவி, தலைமையிலான வெளிநாட்டு பயங்கரவாதிகள் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டுவருகிறது என்ற வழக்கமான பிரச்சாரத்தை இப்போது புஷ் நிர்வாகம் ''கைவிட்டு'' விட்டது.

வாஷிங்டனில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இராணுவ அதிகாரி நியூயோர்க் டைம்ஸ்க்கு தெரிவித்த தகவலின்படி, "சர்காவிக்கும் அவரது வலைப்பின்னலுக்கும் இடையிலான ஒரு நடவடிக்கையல்ல இது என்பதை கருதிப்பார்க்க வேண்டியது முக்கியமான கருத்தாகும். ஒரு சிக்கலான மற்றும் பன்முக கிளர்ச்சியை முறியடிப்பதற்காக எடுக்கவேண்டிய பல்வேறு நடவடிக்கைகளில் இது ஒன்று. அந்த நடவடிக்கைளில் சர்காவி வலைப்பின்னல் ஒரே ஒரு அம்சம்தான்." அமெரிக்க தளபதிகளும், அதிகாரிகளும் தற்போது சர்காவியும் ''வெளிநாட்டு பயங்கரவாதிகளும்'' பல்லூஜாவை விட்டு வெளியேறியிருக்கலாம் என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.... ஆனால் பல்லூஜா போராளித் தலைவர்கள், அந்த நகரத்தில் அவர்கள் இல்லை என்று கூறிவந்ததற்கு எந்தவிதமான மறுப்புசான்றையும் அவர்கள் தரவில்லை.

அமெரிக்க ஊடகங்கள், கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சர்காவி தங்கியிருக்கும் இல்லங்களில் ''துல்லியமான தாக்குதலை'' பல்லூஜா மீது விமானப்படை குண்டு வீசி தாக்கியதை கடமை தவறாமல் வெளியிட்டு வந்தன. ஆனால் இப்போது அந்த நகரத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அடிப்படை மாற்றப்பட்டிருப்பது குறித்து எந்தவிதமான விமர்சனத்தையும் வெளியிடவில்லை. என்றாலும் அடுத்து ஈராக்கில் அழிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள நகரம் எதுவோ அதில், ரமடி, சமார மற்றும் பக்குபாவில் சர்காவி "காணப்பட்டார்" என்ற அமெரிக்க இராணுவத்தின் கூற்றுக்களை முக்கியத்துவம் கொடுத்து அவை வெளியிடும் என்பதை திட்டவட்டமாக ஊகிக்க முடியும்.

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பில் உண்மையான முகம் பல்லூஜாவில் நடைபெறும் காட்டுமிராண்டித்தனத்தில் தெளிவாகத் தெரிகிறது. ஜனவரியில் நடைபெறவிருக்கின்ற ''ஜனநாயக தேர்தல்களுக்கு'' வசதி செய்வதற்காக, அந்த நகரத்தில் இந்த படுகொலைகள் நடக்கின்றன என்ற புஷ் நிர்வாகத்தின் கூற்று அருவருக்கத்தக்கது. நாட்டில் அமெரிக்க இராணுவப்படை நடமாட்டத்திற்கு எந்தவகையான எதிர்ப்பும் கிளம்பாமல் அடக்கி ஒடுக்குகின்ற ஒரு முன்னோக்கின் ஓர் அங்கமாகத்தான் பலூஜாவை தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்தத் தேர்தல்கள் நடந்தாலும் அதில் பங்கெடுத்து கொள்பவர்கள், பிரதமர் இயத் அல்லாவி தலைமையிலான ஈராக் இடைக்கால பொம்மை அரசாங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஒழுக்கச் சிதைவுள்ள, ஆக்கிரமிப்பு ஆதரவு அமைப்புக்களை சார்ந்த பிரதிநிதிகளாகவே இருக்க முடியும்.

ஈராக் ஆக்கிரமிப்பு ''ஜனநாயகத்தின்'' எழுச்சிக்கு வழி செய்யாது. ஆனால் அமெரிக்க ஆதரவு போலீஸ்-அரசு அமைவதற்கே உதவும், அது அமெரிக்கத் துருப்புக்கள் காலவரையின்றி நீடித்திருக்கவும், அமெரிக்க பெருநிறுவனங்கள் நாட்டின் எண்ணெய் வளங்களை சூறையாடுவதற்கும், அனுமதி வழங்கும். அத்தகைய நோக்கங்கொண்ட ஒரு ஆட்சியின் தலைவரான அல்லாவி ஈராக் மக்கள் தருகின்ற "மீசையில்லாத சதாம்" என்ற புனைப் பெயரைப் பெற்றிருக்கிறார். ஏற்கனவே கைதிகளை நேரில் கொலை செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர், நாட்டின் மிகப் பெரும்பகுதி முழுவதிலும் இராணுவ சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் மற்றும் ஈராக்கின் இதர 21 நகரங்களில் போராளிகளுக்கெதிராக இரத்தக்களரி இராணுவ நடவடிக்க்ைகளை எடுக்குமாறு அமெரிக்க இராணுவத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். செவ்வாய் இரவு பல்லூஜாவிலிருந்து காயமடைந்தவர்களையும், போராளிகள் அல்லாதவர்களையும் வெளியேற்றுவதற்கு ஒரு நான்கு அல்லது ஐந்து மணி நேர சண்டை நிறுத்தத்திற்கு வகை செய்ய வேண்டுமென்று விடுக்கப்பட்ட ஒரு கோரிக்கையை உடனடியாக மறுத்துவிட்டார்.

பல்லூஜாவின் தெற்கு புறநகர் பகுதிகளில் சண்டை நீடித்துக்கொண்டிருக்கிறது மற்றும் வரும் பல நாட்களில் நீடிக்கவும் கூடும். எவ்வாறாயினும், புஷ் நிர்வாகமும் அமெரிக்க இராணுவமும் கருதியிருப்பதற்கு நேர் மாறான விளைவுகள்தான் அந்த நகரத்தை வென்றெடுப்பதால் உருவாகும். ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு இந்தத் தாக்குதல்களால் பலவீனப்படுவதற்கு பதிலாக வடக்கு மற்றும் மத்திய ஈராக் பிரதான சுன்னி முஸ்லீம் பிராந்தியங்களில் போராளிக் குழுக்கள் ஏற்கனவே தங்களது தாக்குதல்களை முடுக்கிவிட்டிருக்கின்றன. கடந்த 48 மணி நேரத்திற்கு மேலாக பாக்தாத், மோசூல், ரமதி, மற்றும் இதர சிறிய நகரங்களில் அமெரிக்கத் துருப்புக்களுக்கும், கொரில்லாக்களுக்குமிடையே மோதல்கள் நடந்துள்ளன.

இதன் விளைவாக, ஆக்கிரமிப்பு படைகளின் சேதாரம் துல்லியமான புள்ளி விவரங்கள் இல்லாமலேயே பல்லூஜாவில் மடிந்த மற்றும் காயமடைந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நவம்பரில் இதுவரை சண்டையில் 30 அமெரிக்கத் துருப்புக்கள் கொல்லப்பட்டதாக, உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அத்துடன் பிரிட்டிஷ் பிளாக் வாட்ச் படைப்பிரிவைச் சார்ந்த நான்கு பேரும் மாண்டிருக்கின்றனர். பல்லூஜா நடவடிக்க்ைகளுக்காக, அமெரிக்க இராணுவத்திற்கு பிளேயர் அரசாங்கம் தந்திருக்கும் படைப்பிரிவு அதுவாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved