World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: the career of Christian Democratic Union leader Angela Merkel

Part 2: From Kohl's "little girl" to the conservatives' chancellor candidate

ஜேர்மனி: கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் தலைவர் ஏஞ்சலா மெர்கலின் எழுச்சி

பகுதி 2 : கோலின் "சிறுமியில்" இருந்து பழைமைவாதிகளின் அதிபர் வேட்பாளர் வரை

By Lena Sokoll
9 July 2005

Back to screen version

கீழேயுள்ள கட்டுரை ஜேர்மன் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) தலைவரும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியனின்(CSU) இணைப்பான பழைமைவாத யூனியனின் அதிபர் வேட்பாளருமான ஏஞ்சலா மெர்கலின் அரசியல் வாழ்க்கையை பற்றிய இரு கட்டுரைத் தொகுப்பின் முடிவுப் பகுதி ஆகும்.

பேர்லின் சுவர் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து, அதிபர் ஹெல்முட் கோல் கொடுத்திருந்த பழைய கிழக்கு ஜேர்மனியில் "செழித்துகுலுங்கும் பூமி'' என்ற உறுதிமொழி, கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கு (CDU) டிசம்பர் 1990ல் நடந்த முதல் அனைத்து ஜேர்மனிய தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு உதவியது. ஜனவரி 1991ல், ஜனநாயக எழுச்சி (Democratic Awakening-DA) இல் சேர்ந்த ஓராண்டிற்குள்ளும், தன்னுடைய அரசியல் விசுவாசத்தை கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுக்கு மாற்றிக் கொண்ட ஆறு மாதங்களுக்குள்ளாகவும், மெர்கெலுக்கு கோலின் மந்திரிசபையில் மகளிர், இளைஞருக்கான மந்திரி என்ற வாய்ப்பு கிடைத்தது.

மந்திரியாக இருந்த காலத்தில், தன்னுடைய சக்தி வாய்ந்த ஆசான் என்று கருதிய ஹெல்முட் கோலை "ஜேர்மனிய ஒற்றுமையின் தந்தை" என்று மரியாதை செலுத்தும் எந்த வாய்ப்பையும் மெர்கல் நழுவவிடவில்லை. எந்த குறிப்பிட்ட கட்சிக் குழுவிலும் சேர்ந்திராவிட்டாலும், பொதுவாக அவர் பழைமைவாதிகளுக்குள் மிக அதிக வலதுசாரி போக்கை கொண்டிருந்தவர்களை ஆதரித்துவந்தார். உதாரணமாக, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியனில் இருந்த வெறிபிடித்த கருக்லைப்பு-எதிர்ப்பாளர்களுடன் சேர்ந்து, ஜேர்மனிய கருக்கலைப்பு சட்டங்களுக்கு விவாதத்தில் திருத்தத்திற்கு ஆதரவைக் கொடுத்தார். மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு பொது நடத்தை, ஆர்வம் இவற்றிற்கான மதிப்பெண்கள் கொடுக்கும் பழக்கத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்றும், இனவாத வன்முறையை எதிர்க்கும் ஒரு வழிமுறையாக "இன, கலாச்சாரவியல்" ஒரு பாடத்திட்டமாக்க் கற்பிக்கப்பட்டவேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தவும் செய்தார்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கை எழுச்சியின் ஆரம்ப காலத்தில், ஜேர்மனிய மறு ஒன்றிணைப்பை தொடர்ந்து, தன்னுடைய முந்தைய ஆசான்களால் எதிர்கொள்ளப்பட்ட பிரச்சினைகளை பயன்படுத்தி மெர்கல் தன்னை அரசியல் அளவில் முன்னேற்றிக் கொள்ளவும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனில் தன்னுடைய நிலையை வலுப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது. நாடுகள் ஒன்றான பின்னர், கிழக்கு ஜேர்மனியில் கடைசி பிரதம மந்திரியான லோடர் டி மைஷிரே, கிறிஸ்தவ ஜனநாயக யூனியனில் கோலுடைய துணை அதிகாரியான பின்னர், வார ஏடான Der Spiegel இல் கிழக்கு ஜேர்மனிய இரகசிய போலீசில் ஓர் ஓற்றராக இருந்தார் என்ற செய்தி அம்பலமானதை அடுத்து இராஜிநாமா செய்தார். தன்னைச் சுற்றி விசுவாசமானவர்கள் இருப்பதை விரும்பிய கோல் தன்னுடைய ஆதரவாளரான மெர்கலை கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு உயர்த்தினார்; கிழக்கு ஜேர்மனியில் இருந்து வந்துள்ள 37 வயது பெண்மணி, இவரால் "சிறுமி" என்று விளிக்கப்பட்டவர், பின்னர் தன்னுடைய நிலைமைக்கே ஆபத்தை ஏற்படுத்துவார் என்பதை அவர் அப்பொழுது அறிந்திருக்கவில்லை.

மெர்கலுடைய மற்றொரு முக்கிய ஆசான் குந்தர் கிரெளவ்ஸ் ஆவார்; அப்பொழுது அவர் மந்திரிசபையில் போக்குவரத்து மந்திரியாக இருந்து Deutsche Bundesbahn (ஜேர்மன் கூட்டாட்சி இரயில்துறை) இனை தனியார்மயமாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தார். தன்னுடைய அரசியல் பதவியில் இருந்து தனிப்பட்ட முறையில் ஏராளமான விஷயங்களில் அவர் ஆதாயம் அடைந்தை அடுத்து, அவருடைய நிலை தொடர்ந்து இருக்க முடியாமல் போகவே, அவர் 1993ம் ஆண்டு கோலால் பதவிநீக்கம் செய்யப்பட்டார். கிறிஸ்தவ ஜனநாயக யூனியனில் Mechlenburg Pomerania மாநிலத்தில் தன்னுடைய தலைமைப் பதவியை தக்கவைத்துக் கொள்லாம் என்று கிரெளவ்ஸ் நம்பினாலும், இந்தப் பதவியை கோலின் ஆதரவுடன் மெர்கல் பெற்றார்.

1994ம் ஆண்டு கூட்டரசு பாராளுமன்ற தேர்தல்களில் கோல் அரசாங்கம் மீண்டும் பதவிக்கு தன்னுடைய பெரும்பான்மையை சற்றே அதிகரித்திக் கொண்டு வர முடிந்தது. மெர்கல் மந்திரி சபையில் தொடர்ந்ததுடன், ஒப்புமையில் முக்கியத்துவம் இல்லாத மகளிர் மந்திரிப்பதவியில் இருந்து சுற்றுச் சூழல் மந்திரிப் பொறுப்பை ஏற்றார். பதவிக்கு வந்தவுடன் செய்த முதல் நிகழ்வுகளில் ஒன்று அவர் அரசாங்க செயலர் கிளெமென்ஸ் ஸ்ட்ரோட்மனை அமைச்சரகத்தில் இருந்து அகற்றியதாகும். இந்த அசாதாராண நடவடிக்கை ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது; ஏனெனில் ஸ்ட்ரோட்மன் சுற்றுச் சூழல் அமைச்சரகத்தில் மெர்கெலுக்கு முன்பு பதவியில் இருந்த கிளவுஸ் ரொப்பரின் பொறுப்பில் பெரும் புகழை ஈட்டியிருந்தார். ஆனால் தனக்கு பக்கத்தில் "மறைமுகமான சுற்றுச்சூழல் மந்திரி" ஒருவரை பொறுத்துக்கொள்ளுவதற்கு மெர்கெல் தயாராக இல்லை.

1995ம் ஆண்டில் கணிசமான மக்கள் எதிர்ப்பு மற்றும் லோயர் சாக்சோனி மாநிலச் சட்ட மன்றத்தில் எதிர்ப்பு இவற்றிற்கிடையே, பூசலுக்குட்பட்டிருந்த அணுக்கழிவுகளை கோர்லெபென் நகரத்தில் இருந்த தற்காலிக கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்படுவதில் கட்டாயம் காட்டியதற்காக, அணுசக்தி தொழிற்துறையின் கையாள் என்றுதான் மெர்கல் அழைக்கப்பட்டிருந்தார். ஏப்ரல் 1995ல், கழிவுகள் அடங்கிய போக்குவரத்து இரயிலை பாதுகாப்புடன் கிட்டங்கிக்கு எடுத்துச் செல்ல கிட்டத்தட்ட 7,600 போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர். எனது வழி (My Way) என்று 2004ல் வெளியிடப்பட்ட பேட்டிகளில் அவர் தன்னுடைய "மிகப் பெரிய பணிகளில் ஒன்றாக" இந்தச் சூழ்நிலையில் "அரசாங்க அதிகார உரிமையை" செயல்படுத்தியதுதான் என்று குறிப்பிட்டுள்ளார். இதே பிரச்சினையில், அவருடைய வாழ்க்கை நூலை எழுதிய Wolfgang Stock, "மேற்கு ஜேர்மனிய அரசியலில் ஓர் அடிப்படை பலவீனம் பலமுறையும் முடிவெடுக்கப்படாமல் இருந்ததுதான் (இதுதான் பூசலுக்கே காரணம்). இச்செயலினால் அரசாங்கத்தின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒன்றும் குறைந்துவிடவில்லை" என்று எழுதியுள்ளார்.

மெர்கலின் ஜேர்மன் அணுசக்தி தொழில் துறையுடனான நல்ல உறவுகள், அவர் சுற்றுச் சூழல் மந்திரியாக இருந்தவரை தொடர்ந்தன. மெர்கல் அதிபர் பதவிக்கான பிரச்சாரத்தின் போது தன்னுடைய ஆக்கப்பணிகளை பற்றிக் கூறிய சிறந்தவற்றில் இதுவும் ஒன்றாக இருந்தது: அதாவது ஜேர்மனிய அணுசக்தி ஆலைகளில் செயற்காலத்தை நீடிப்பதும் ஒன்றாகும்.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியனை வழி நடத்தியது

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் 1998 பாராளுமன்ற தேர்தல்களில் கடுமையான தோல்வியை கண்டபோது, சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் ஹெகார்ட் ஷ்ரோடரின் கீழ் பதவிக்கு வந்தபோது மெர்கல் தன்னுடைய மந்திரிப் பதவியை இழந்தாலும், தன்னுடைய நிலைமையை கட்சிக்குள் முன்னேற்றுவித்துக் கொண்டார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் கட்சியில் புதிய தலைவர் Wolfgang Schaeuble இவரை கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்த்தினார்.

தேர்தல்களில் தோற்றபின், கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுள் பலமான உள் அழுத்தங்கள் ஏற்பட்டன; பல தசாப்தங்களாக இவை வளர்ந்து வந்திருந்ததோடு கட்சி அடிமட்டத் தொண்டர்கள் நிலையில் இருந்து உயர்மட்டம் வரை இது படர்ந்திருந்தது. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியனுக்குள் கோல்தான் மட்டமான தேர்தல் முடிவுகளுக்குக் காரணம் என்று கூறப்பட்டுவிட்டது; தன்னுடைய 16 ஆண்டுகால ஆட்சியில் கட்சித் தலைவர் தன்னைச் சுற்றி விசுவாசமானவர்களை கொள்ளுவது எப்படி, கட்சி நடவடிக்கைகளில் குறைகூறுபவர்களை எப்படி ஒதுக்கி வைப்பது என்ற வித்தையில்தான் தேர்ந்திருந்தார் என்பதன் விளைவாகத்தான் இந்நிலை ஏற்பட்டது. அரசாங்கப் பதவியை இழந்த பின்னர் கோல் கட்சித் தலைமையை Wofgang Schaeuble இற்கு விட்டுக் கொடுக்கும் கட்டாயம் ஏற்பட்டது. அதே நேரத்தில், அவர் இவருக்காகவே தோற்றுவிக்கப்பட்ட "கெளரவத் தலைவர்" என்ற பதவிக்கு உயர்த்தப்பட்டார்

கோலின் வெளிப்படையான ஒப்புதலுடன்தான் Schaeuble மெர்கலை பொதுச் செயலாளராக்கினார் என்பதற்கும் அவருடைய பதவிப் பொருத்தத்திற்கு எந்தத் தொடர்பும் கிடையாது. கோல் உடைய அரசாங்கத்தில் மெர்கல் மந்திரிசபை உறுப்பினராக கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இருந்திருக்கிறார்; கிட்டத்தட்ட கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உறுப்பினராக இருந்த கால அளவு போன்றதே இதுவும்; இது ஒன்றும் கட்சியின் மிக உயர்ந்த பதவிகள் ஒன்றுக்கு தகுதியைக் கொடுத்துவிடாது. மாறாக Schaeuble காட்டிய விருப்பம், உட்கட்சி எதிர்ப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்கும் பல உள் குழுக்கள் மீது தடைகளை கொண்டுவருவதற்கும் ஒரு வசீகரமான பொதுச்செயலாளர், மேற்கு ஜேர்மன் கட்சியின் "அதிகாரக் குழுக்கள்" மற்றும் எந்த குறிப்பிட்ட சக்திக் குழுவிடம் இருந்தும் வரவில்லை என்பதாலும்தான் இருந்தது.

கட்சியில் சில பிரிவுகள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனிற்குள் அரசியலில் தன்னுடைய நிலைமையை மாற்றிக் கொண்டு கோலுடன் முறித்துக் கொள்ளவேண்டும் என விரும்பின; அவர் நான்கு முறை பதவியில் இருக்குமாறு தன்னை காத்துக் கொண்டதற்குக் காரணம் பொதுச் செலவினங்களை நிறையச் செய்வதற்கு ஒப்புக் கொண்டு நாட்டில் சமுதாய சமநிலையை ஓரளவு காப்பாற்றியிருந்தார். ஆனால் அதிபர் என்னும் முறையில் அவருடைய அதிகாரம் முடிந்துவிட்டிருந்தாலும், அவர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனில் சில பிரிவுகளில் செல்வாக்கைக் கொண்டிருந்தார். எனவே புதிய தலைவரான Schaeuble கட்சியின் திட்டத்தில் மெதுவாக, கவனமான மாற்றங்களைக் கொண்டுவரத் தலைப்பட்டார். ஆனால் "கட்சியின் நன்கொடைகள் விவகாரம்" என அழைக்கப்பட்ட விவகாரம் விரைவில் கோல், மற்றும் அவர் கடைப்பிடித்திருந்த கொள்கைகளுடன் முற்றிலும் முறித்துக் கொள்ள வாய்ப்பை அளித்தது.

1999ம் ஆண்டு இறுதியில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் பல ஆண்டுகளாக மில்லியன் கணக்கு மதிப்புடைய "நன்கொடைகளை" மக்களிடம் இருந்து மறைத்தது பொது மக்களுக்கு தெரிய வந்தது; இரகசிய கணக்குகளில் இருந்த இப்பணம், பெருவணிகத்திடம் இருந்து பெறப்பட்ட ஊக்கத் தொகைகளாகத்தான் இருந்தது. பல வாரங்கள் செய்தி ஊடகமும் அரசாங்க வக்கீல் அலுவலகமும் புதிய குற்றச் சாட்டுக்களையும் ஆதாரங்களையும் அம்பலப்படுத்தின. வெகு வரைவில் இது ஒரு குறிப்பிட்ட நபர்களின் ஊழல் விவகாரம் என்றில்லாமல் திட்டமிட்ட குற்றம் சார்ந்த வகையில் நடத்தப்பட்டது எனத் தெரிய வந்தது. கட்சியின் ஆண்டறிக்கையில் பெருந்தொகைகள் பட்டியலிட்டு அறிவிக்கப்பட்டு இருந்தன; அவை எங்கிருந்து வந்தன, எதற்காக வந்தன என்பது வெளியிடாமல் இந்த மறைக்கப்பட்ட ஊழல்தொகைகள் சிலருக்கு நிதியுதவிகள் கொடுக்கவும், "இடதுகளை எதிர்த்துப் போரிட" என்றும் பயன்படுத்தப்பட்டன.

இப்படி தொடர்ந்து அம்பலமான செயற்பாடுகள் ஹெல்முட் கோலுக்குக் கணிசமான அழுத்தத்தை கொடுத்தன; டிசம்பர் 1999ல் ஒரு உரையாடல் நிகழ்ச்சியின்போது அவர் தானும் தனிப்பட்ட முறையில் மில்லியன் கணக்கில் நன்கொடைகளைப் பெற்றுக் கொண்டதாக ஒப்புக் கொண்டார். ஆனால் இத்தகைய தாராள நன்கொடையாளர்கள் யார் என்பதை வெளியிட உறுதியாகக் கூற தொடர்ந்து மறுத்துவிட்டார். கோலின் மீதும், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைமையின் தில்லுமுல்லுச்செயல்கள் மீதும் மக்களுடைய இகழ்வுணர்வு அதிகரித்ததுடன் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உறுப்பினர்களிடையேயும் பெரும் பிளவு ஏற்பட்டது. இறுதியில் தகர்க்கப்பட முடியாதவர் எனக்கருதப்பட்ட கெளரவத் தலைவர் வேட்டையாடப்படலாம் என்று ஏற்பட்டுவிட்டது.

மெர்கல் "நன்கொடை விவகாரம்" அளித்த வாய்ப்பை உணர்ந்து, கோலை அகற்றுவதற்கு மட்டுமின்றி அவருக்குப் பின் வந்த, தயக்கம் காட்டிய Schaeuble ஐயும் தூக்கி எறிந்துவிட்டுத் தன்னையே கட்சித் தலைவியாக்கி கொள்ளுவதற்கு அதைப் பற்றி எடுத்துக் கொண்டார். Schaeuble ஐயும் கலந்து ஆலோசிக்காமல், பழைமைவாத நாளேடான Frankfurter Allegemeine Zeitung ல் அவர் ஒரு கட்டுரை எழுதினார்; இதில் தன்னை கோலிடமிருந்து தொலைவில் இருத்திக் காண்பித்ததுடன் தன்னையே பகிரங்கமாக கட்சித் தலைவராகவும் வெளிப்படுத்திக் கொண்டு, "கோலின் முறையை" பெரிதும் அகற்ற விரும்புவராகவும் அறிவித்தார்.

2000ம் ஆண்டு ஆரம்பத்தில், தானும் ஒரு பெட்டி நிறையப் பணத்தை ஆயுத விற்பனை விவகாரத்தில் Karl Heinz Winter இடம் இருந்து பெற்றுக் கொண்டது வெளிப்பட்டதை அடுத்து, அதை ஒப்புக் கொண்டு Schaeuble கட்சித் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகும் கட்டாயம் ஏற்பட்டது; கெளரவத் தலைவர் பதவியில் இருந்து கோலும் விலக நேரிட்டது.

இப்பொழுது கிடைக்க கூடிய கட்சித் தலைமை பதவிக்கு வேட்பாளராக தயார் செய்யும் வகையில் பல கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் மாநில மாநாடுகளிலும் இவருக்கு தொண்டர்களால் பெரும் உபசரிப்பு நடைபெற்றது; அதையொட்டி இவர் தனது போட்டியாளர்களான Volker Ruehe, Juergen Ruettgers மற்றும் Kurt Biedenkopf ஆகியோரை ஒதுக்க முடிந்தது. இறுதியில் கட்சி மாநாட்டில் பெரும் ஆரவாரக் கரவொலிகளை பெற்றார்; இனி எவ்வித கறைபடிந்த செயல்களுக்கும் இடமில்லை எனக் கருதி உறுப்பினர்களால் அவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டிற்குள் "கோல் சகாப்தத்திற்கு" முற்றுப்புள்ளி வகைக்கும் மெர்கலின் திறன், மிகத் தெளிவாக கட்சியில் திட்ட முறை மறுசீரமைப்பில் காணப்பட்டதே ஒழிய, பரந்திருந்த ஊழல்களை அகற்றும் முயற்சிகளில் காணப்படவில்லை. கட்சியில் தலைவர் என்று அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது கிறிஸ்தவ ஜனநாயக யூனியனை தகர்க்கும் வகையில் அச்சுறுத்திய ஊழல்களில் இருந்து இப்பொழுது கட்சியைத் தனியே வைத்தது. பெயர் அறிவிக்கப்பட்டாத "கொடையாளிகளின்" அடையாளம், எந்த அளவு பணம் பயன்படுத்தப்பட்டது போன்றவை இன்னும் புதிராகத்தான் உள்ளன. அந்தச் சூழ்ச்சியில் சிக்கியிருந்த பல கட்சித் தலைவர்களும் இப்பொழுது அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறுகின்றனர்; இதில் ஹெஸ்ஸ மாநிலத்தில் பிரதம மந்திரியான ரோலண்ட் கோக்கும் அடங்குவார். 2000ம் ஆண்டு இலையுதிர்காலத்தில், ஜேர்மனிய மறு ஒற்றுமையின் தசாப்த விழாவில் மெர்கல், ஹெல்முட் கோலின் மறுபுனருத்தானத்தை தொடங்கினார்.

ஆனால் கிழக்கு ஜேர்மனியர்களுக்கு "செழித்துக்குலுங்கும் பூமியை" உறுதியளித்த கோலிடம் இருந்து கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் இப்பொழுது திட்டவகையில் வேறுபட்டுவிட்டது; அவருடைய அதிபர் பதவிக்காலத்தில் மக்களுடைய எதிர்ப்பிற்கு அஞ்சி அவர் சமூகச் செலவுகளில் பெரிய குறைப்பைச் செய்வதற்குத் தயாரற்று இருந்தார். பின்னாக்கில் தற்பொழுதைய சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணியின் தீவிரமான சிக்கன நடவடிக்கைகளை பார்க்கையில், கோல் பலமுறையும் "இறுதி சமூக ஜனநாயகவாதி" என்று அழைக்கப்படுகிறார்.

கோல் பதவி விலகியதை அடுத்து, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் பொதுச் செலவினங்களில் குறைப்புக்கள் இன்னும் இரக்கமற்ற முறையில் கொண்டுவரப்பட்டு செல்வந்தர் அடுக்கு இன்னும் கூடுதலான முறையில் செல்வக் கொழிப்பு பெற இயல வேண்டும் என்று அழைப்பு விடும் சக்திகளின் எழுச்சியைத்தான் கண்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் பொருள்சார் மற்றும் அரசியல் உயர்வு பெற்று மதிப்பில் அதிகமாகிவிட்டவர்களின் பிரதிபலிப்பை அவர்கள் மெர்கலிடம் காண்கின்றனர். மெர்கல் ஒன்றும் ஜேர்மனியின் பழைய பொதுநல அரசாங்க மரபுகளினால் கட்டுண்டதாக தன்னை கருதிக் கொள்ளவில்லை.

2002 கூட்டாட்சி தேர்தல்களின் போது நாட்டின் அதிபர் வேட்பாளர் தகுதியைப் பெறும் முயற்சியில் மெர்கல் வெற்றி பெறவில்லை; அப்பொழுது இவர் கிறிஸ்தவ சமூக யூனியனின் தலைவராகவும், மற்றும் பவேரிய மாநிலப் பிரதமராகவும் இருந்த Edmund Stoiber இடம் தோற்றுவிட்டார். அந்நேரத்தில் கட்சியை பொறுத்தவையில் அது இன்னும் நிதானப் போக்கைக் கொண்ட ஒருவர், சமூக நலன்களை சமன்படுத்தும் ஆற்றல் நிறைந்த மாநிலப் பிரதமர் ஒருவரிடம் கூடுதல் நம்பிக்கை காட்டியது போலும். இப்பொழுது, 2005 தேர்தல்கள் கிட்டத்தட்ட கிறிஸ்தவ ஜனநாயக யூனியனால் வெற்றி அடையப்பட்டுவிடும் என்ற நிலையில், மெர்கல் தடையில்லாமல் அதிபர் வேட்பாளராக தன்னை கொண்டுவரலாம். மேலும் ''மாறுதல்களை கண்டு கூச்சப்படுகிற ஜேர்மனியர்கள் தாங்கள் கேட்பதையும் பார்ப்பதையும் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பார்கள்" என்று Die Zeit பத்திரிகை கூறியிருப்பது போன்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு வேட்பாளராக உள்ளார்.

அரசியல் நிலைப்பாடுகள்

மெர்கலின் வாழ்க்கை போக்கில் எந்த விதமான நிலைத்த அரசியல் கருத்தையோ, உறுதியான நம்பிக்கைகளையோ காண்பது கடினமாகும். தன்னுடைய போக்கு முழுவதும், அரசியல்வாதி என்னும் முறையில் மெர்கல் தன்னுடைய நிலைப்பாட்டில் வளைந்து கொடுக்கும் தன்மையையும் உடன்பாடுகளையும்தான் வெளிப்படுத்தியுள்ளார்; தன்னுடைய நிலைமையை தக்கவைத்துக் கொள்ள அனைத்தையும் பயன்படுத்தியிருக்கிறார். மெர்கலுடன் நடத்தப்பட்ட பல பேட்டிகளின் அடிப்படையில், அவருடைய இசைவு கொடுக்கப்பட்டுள்ள, ஸ்டாக் எழுதியுள்ள அவருடைய வாழ்க்கை நூலில் வெற்றுத் தனமாக ஒன்றும் இல்லை; ஒரு சில தெளிவாக்கப்பட்டுள்ள அரசியல் கருத்துக்களை காணலாம். பல முறையும் ஆக்கிரோஷத்துடன் கூடவே மெர்கல் "தொண்டர் மட்ட ஆதரவுடைய ஜனநாயகம்", "கூடுதலான சமத்துவம் நாடுபவர்" போன்ற நிலைப்பாடுகளில் இருந்து தன்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது; இது திருச்சபைக் குழுக்கள் என்றாலும், கட்சி அமைப்புக்கள் என்றாலும், அணுசக்தி எதிர்பாளர்கள் என்றாலும் ஒரே நிலைப்பாடுதான்; அவருடைய வலியுறுத்தல், நாடு என்பது "சக்தியின் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்க வேண்டும்.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் பொதுச் செயலராக ஆரம்பத்தில், 1999 மாநிலத் தேர்தல்கள் ஹெஸ்ஸவில் நடைபெற்றபோது கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் ஒரு கையெழுத்து பிரச்சாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார் என்பதற்கு காரணமும் இதில் கிடைக்கிறது. அவர் வலதுசாரி தீவிரத்தை, குடியேறுபவருக்கு இரட்டை குடியுரிமைளிக்கும் இனவெறித் தன்மை பிரச்சாரத்தை எதிர்க்கவில்லை; ஆனால் கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் மாநில பிரதமரான கோக்கின் ஆரம்ப முயற்சியைத்தான் எதிர்த்தார்; ஏனெனில் இந்த நடவடிக்கை மிக அதிகமான வகையில் "அடிமட்ட தொண்டர் ஜனநாயகத்தை" வெளிப்படுத்தியது போல் அவருக்குத் தோன்றியது. அத்தகைய பிரச்சாரம் சாதாரண மக்களுக்கு தங்கள் கருத்தை வெறும் தேர்தல்களில் வெளிப்படுத்துவது போலன்றி அதற்கு அப்பால் வெளிப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கும் என்று அவர் கருதினார். ஆனால் இறுதியில் அவர், கட்சியின் மிகத் தீவிர கூறுபாடுகளினால் இத்தகைய இனசார்பு பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு இசைவு தெரிவிக்குமாறு ஊக்குவிக்கப்பட்டார்.

பல நேரடிக் கேள்விகளுக்கு விடையளிக்க தொடர்ந்து தவிர்த்தாலும்கூட, அதிபர் வேட்பாளருக்கு தயார் செய்யத் தொடங்கியதில் இருந்து மெர்கலின் அரசியல் நிலைப்பாடுகள் தெளிவாகத்தான் தெரியவந்துள்ளன. அண்மையில் ஜேர்மனிய உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்த விவாதங்கள் பலவற்றில், தன்னுடைய கருத்துக்கள் பலவற்றை விரிவாக்கும் கட்டாயம் அவருக்குத் தவிர்க்கமுடியாமல் ஏற்பட்டது; அவை பொதுவாக தீவிர வலதுபக்கத்தில் இருப்பதுடன் ஒரு மெர்கல் அரசாங்கத்திடம் எதை எதிர்பார்க்கலாம் எனக் கூறுவதாகவும் இருந்தன. சமூக மற்றும் பொருளாதார துறைகளில் மெர்கலின் கருத்தாய்வுகள் "சந்தை சக்திகள் கட்டவிழத்துப்படவேண்டும்" என்று சுருக்கமாக கூறினாலே போதும். இவர் ஷ்ரோடர் அரசாங்கம் அறிமுகப்படுத்திய சமூக நலச் செலவுகள் குறைப்பு, செல்வந்தருக்கு நலன் கொடுக்கும் வகையில் செல்வப் பகிர்வு என்ற கொள்கைகளை தொடரந்தும், தீவிரப்படுத்தவும் விரும்புகிறார். குறைவூதிய பிரிவின் வளர்ச்சியை இவர் முன்வைக்கிறார்; "இன்னும் கூடுதலான வகையில் செல்வந்த தட்டுக்கள் வளரும் வகையில்" பரந்த அளவிலான தனியார்மயமாக்குதல், "தொழிலாளர் சட்டத்தில் வளைந்து கொடுக்கும் தன்மை" மற்றும் "போட்டி" ஆகியவற்றையும் சமூகநலன்களை பொறுத்தவரையில் "தனி நபரின் பொறுப்பு" வேண்டும் என்றும் விரும்புகிறார்.

சுகாதார காப்புத் திட்டம் மறுசீரமைப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டியது பற்றிய விவாதம், மெர்கலின் அரசியல் கருத்தாய்வுகளை உயர்த்தி காட்டியுள்ளது. சுகாதார செலவினங்களை பொறுத்தவரையில் ஒரு நிலையான தொகைதான் காப்புறுதி தொகையாக இருக்க வேண்டும் என்று ஆணித்தரமாக வாதிட்டு தன் நிலையை காட்டியுள்ளார்; இது இப்பொழுதுள்ள வருமான அளவை அடிப்படையாகக் கொண்ட காப்புறுதிமுறைக்கு எதிரானதாகும். இதன் முக்கிய விளைவு முதலாளிகள் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் துணை ஊதியங்களில் குறைப்பு வரும்; தனியார் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களுக்கும் வகை செய்யப்படும்.

எனது வழி(My way) என்பதில், மெர்கல் ஜேர்மனியில் வேலைநாள் என்பது 10 மணி நேரம்தான் என்று இருக்க வேண்டும் என்று மட்டுப்படுத்தும் சட்டத்தை அகற்றுவதற்கு அழைப்பு விடுகிறார்; ஏனெனில் "மாறிவிட்ட போட்டிச் சூழலில் ஆலைகளுக்கு தக்கவிதத்தில் மாறுதல்கள் செய்துகொள்ள வேண்டிய நிலை வழங்கப்பட வேண்டும்". சட்டத்திருத்தம் இல்லாவிட்டால், "வேலை நேரம் முடிந்த பின்னர் சிலர் சட்ட விரோதமாக வேலைக்கு வருவர்". ஒருவருடைய உழைப்பு வாழ்க்கை முழுவதும் ஒருவர் நாளொன்றுக்கு 15 மணி நேரம் கட்டாயம் உழைக்க வேண்டாம் என்றாலும் மெர்கலின் கருத்தின்படி அத்தகைய நிலைப்பாடு சட்டபூர்வமாக இருக்க வேண்டும், ஏற்கப்பட வேண்டும் என்பதாகும்.

தொழிலாள வர்க்க மக்களுடைய சுதந்திரங்களை பற்றிய மெர்கலுடைய பார்வையின் தன்மையாவது: "தனிநபருக்கு முடிவெடுக்கும் அதிகாரங்களில் கூடுதல் வாய்ப்பு கொடுப்பதால்தான்,... இந்த மாறுதலை உணர்ந்துகொள்வதை உருவாக்கமுடியும். எங்களுடைய பார்வையில், ஆலை போலந்திற்கு மாற்றப்படாமல் இருப்பதற்கு, தனிப்பட்ட தொழிலாளி தான் இன்னும் ஒரு மணி நேரம் கூடுதலாக வேலை பார்க்கலாமா அல்லது குறைந்த ஊதியம் சம்பாதித்தால் போதுமா என்பதை அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்பது முக்கியம்." அதே நேரத்தில் பங்குதாரர்களுக்கு 20ல் இருந்து 30 சதவிகித இலாபம் கொடுப்பதற்காக, ஆட்களை பதவியில் இருந்து அகற்றுவதற்கான Deutsche Bank தலைவர் Josef Ackermann இன் முடிவிற்கும் அவர் ஆதரவு கொடுக்கிறார்; ஏனெனில் இது ஒன்றுதான் "வெளிநாட்டு போட்டியாளர்கள் நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுவதை தடுத்து நிறுத்தும்."

இப்படிப்பட்ட திட்டம் தொழிலாள வர்க்கத்தின் மீது போர் அறிக்கைக்கு ஒப்பாகும்; தவிர்க்க முடியாமல் கடுமையான எதிர்ப்பைத்தான் சந்திக்கும். இதையொட்டி அரசாங்கம் உள்நாட்டில், எந்த எதிர்ப்பையும் சமாளிப்பதற்காக வலுவாக்கப்படும். சிறிது காலத்திற்கு மெர்கல் ஜேர்மனிய இராணுவம் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையில் அரசியலமைப்பு மாற்றத்தை கூடக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

புஷ் நிர்வாகத்துடனான சார்பு

வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரையில், ஜேர்மனிய இராணுவ செயற்பாடுகளில் பரப்பு அதிகரிக்கத்தான் வேண்டும். அமெரிக்க கொள்கையின் பால், மெர்கல் சார்பு கொண்டுள்ளது ஈராக்கியப் போருக்கு முன் நடந்த நிகழ்வுகளிலேயே தெரியவந்தது; அப்பொழுது அவர் புஷ்ஷின் கட்சிக்கு பெரும் ஆதரவு கொடுத்து வாஷிங்டனின் ஒவ்வொரு பொய்யையும் கிளிப்பிள்ளை போல் திருப்பிக் கூறினார். பெப்ரவரி 22, 2003 அன்று, ஜேர்மனிய மக்களில் 80 சதவிகிதத்தினர் வரவிருக்கும் போரை எதிர்த்து கருத்துக் கணிப்பில் வாக்களித்திருந்த நிலையில், உலகம் முழுவதும் இதுகாறும் கண்டிராத போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்திருந்த நிலையில், இவர் புஷ் நிர்வாகத்திற்கு ஆதரவாகப் பேசினார். வாஷிங்டன் போஸ்டிற்கு கருத்தை தெரிவிக்கும் வகையில் "ஷ்ரோடர் அனைத்து ஜேர்மனியரின் சார்பிலும் பேசவில்லை" என்ற தலைப்பில் அக்கட்டுரை இருந்தது. இதுதான் மெர்கல் அடிபணிந்து வெள்ளை மாளிகைக்கு கொடுத்த தன்னுடைய அடையாள அட்டை; தான் சிறந்த அதிபராக இருப்பேன் என்ற அவருடைய உறுதிமொழி அது.

தன்னுடைய அணுகுமுறையை அதற்குப் பின்னரும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. இன்று மெர்கல், ஷ்ரோடர் ஈராக்கிய போருக்கு பொறுப்பு என்ற அபத்தமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்; ஏனெனில் அவர் சதாம் ஹுசைன் சர்வதேச சமூகத்துடன் "பூனை எலி" விளையாட்டு விளையாடுவதற்கு, அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் உடன்பாடு காண முற்படவில்லை; "....துரதிருஷ்டவசமாக இதையொட்டி அமெரிக்கத் தலையீடு தவிர்க்க முடியாமற் போயிற்று." எனவே இப்பொழுது இவர் பாரிஸ்-பேர்லின்-மாஸ்கோ அச்சு" வேண்டும் என்பதற்கு எதிர்ப்பைத்தான் கொண்டுள்ளார்; மாறாக இவர் அமெரிக்க சார்புடைய கிழக்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுடன் கூடுதலான தொடர்புகள் வேண்டும் என்றும், அமெரிக்காவுடன் இராணுவ, பாதுகாப்பு கொள்கை பிரச்சினைகளில் மிகவும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

"ஓர் உலகக் கொள்கை, இராணுவவாத உறுதிப்பாடு, அரசியல் புத்திஜீவிதம் போன்றவற்றால் பயங்கரவாதம் தப்பிப் பிழைக்க வழியில்லை" என்பதற்காக புஷ்ஷிற்கு ஆதரவு கொடுத்து நிற்க மெர்கல் விரும்புகிறார். இந்த உணர்வின் அடிப்படையில், அவர் ஒருதலைப்பட்சமான போரை நியாயப்படுத்த சர்வதேச சட்டத்தை "உருவாக்க" முற்படுகிறார். "பேரழிவு ஆயுதங்கள் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள அது ஒன்றுதான் வழி" என்று அவர் கூறியுள்ளார். ஈராக்கிய போரை நியாயப்படுத்திக் கூறப்பட்டவை அனைத்தும் பொய்கள்தான் என்று சரிந்தபின்னரும் கூட இவருடைய கருத்து இவ்வாறு இருக்கின்றபோது, ஈரான், வட கொரியா மற்ற நாடுகளுக்கு எதிராக போர்கள் நடத்துவதற்கு காரணங்கள் தேவையாக உள்ளது.

புஷ் நிர்வாகத்தை மாதிரியாகக் கொண்டு, உள்நாட்டிலும் வெளியுறவிலும், செயல்படுவதற்கு மெர்கல் தயாராகத்தான் இருக்கிறார். ஆனால் அத்தகைய போக்கின் மூலம் அவருக்கு ஓர் உறுதியான அரசாங்கத்திற்கு தலைமை தாங்க முடியாது என்பதுதான் பொருளாகும். கிறிஸ்தவ ஜனநாயகவாதிகள் வரவிருக்கும் தேர்தல்களில் வலுவான கட்சியாக வந்தாலும், அத்தகைய கொள்கை பெரும்பாலான மக்களிடம் இருந்து எந்த ஆதரவையும் பெறாது: தவிர்க்க முடியாமல், தன்னுடைய கட்சியிடமிருந்தும்கூட, அது எதிர்ப்பிற்குத்தான் உட்படும். மெர்கலின் மிக விரைவான எழுச்சி திடீரென்று முடிவிற்கும் உள்ளாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved