World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : போர்த்துக்கல்

ளிதீவீtuணீக்ஷீஹ்: கிறீஸ்ணீக்ஷீஷீ சிuஸீலீணீறீ றீமீணீபீவீஸீரீ தீமீtக்ஷீணீஹ்மீக்ஷீ ஷீயீ றிஷீக்ஷீtuரீணீறீs 1974 க்ஷீமீஸ்ஷீறீutவீஷீஸீ

இரங்கற்குறிப்பு: அல்வாரோ குன்ஹால் -- போர்த்துக்கலின் 1974 புரட்சியின் முன்னணி காட்டிக் கொடுப்பாளர்

By Keith Lee and Paul Mitchell
21 July 2005

Back to screen version

1961ல் இருந்து 1992 வரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியின் (PCP) தலைவராக இருந்த அல்வாரோ குன்ஹால், தன்னுடைய 91வது வயதில் கடந்த மாதம் காலமானார். நீண்ட நாட்கள் பணியாற்றிய இந்த ஸ்ராலினிசவாதி, 1974ம் ஆண்டு செலசார்-கேடினாவின் (Salazar-Caetano) சர்வாதிகாரம் சரிந்தபின் நிகழ்ந்த "இளம்சிவப்பு புரட்சி'' என்ற எழுச்சியில் இருந்து போர்த்துக்கீசிய முதலாளித்துவ முறையைக் காப்பாற்றியதில் முக்கிய பங்கை கொண்டிருந்தார்.

இந்தப் புரட்சி எழுச்சிக் காலத்தில், குன்ஹால் இலாகா இல்லாத மந்திரியாக பல இடைக்கால அரசாங்கங்களில் பணிபுரிந்து, 1987ம் ஆண்டு வரை போர்த்துக்கீசிய குடியரசு பாராளுமன்றத்திலும் உறுப்பினராக இருந்தார்.

சர்வதேச முதலாளித்துவத்திற்கு 1974-75 புரட்சியால் ஏற்பட்டிருந்த அச்சுறுத்தலை சமாளிக்க பாடுபட்டிருந்த குன்ஹால், மரணம் அடைந்ததைத் தொடர்ந்து போர்த்துக்கீசிய, சர்வதேச தலைவர்கள் அவர்மீது பெரும் புகழாரங்களை சூட்டியுள்ளனர். குன்ஹாலுக்காக ஒரு தேசிய இரங்கல் தினத்தை அனுசரிக்கவேண்டும் என்று அறிவித்த ஜனாதிபதி ஜோர்ஜ் சாம்பையோ, "இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றுடன் இணைந்திருந்த ஒரு மாபெரும் மனிதன் அவர் என்றும், சர்வாதிகார புரட்சிக்கெதிரான போராட்டத்தில் அவருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளதுடன், புரட்சிக்குப் பின்னர் போர்த்துகீசிய ஜனநாயகம் ஒருங்கிணைக்கப்பட்டதிலும் அவருடைய பெயர் நிலைத்து நிற்கும்" என்று கூறியுள்ளார்.

வடக்குப் போர்த்துக்கல் பகுதியில் கோய்ம்ப்ரா என்ற இடத்தில் 1913 நவம்பர் 10 ம் தேதி, ஒரு பெரும் அரசியல், சமூக நெருக்கடிக் காலத்தில் குன்ஹால் பிறந்தார். முதலாவது குடியரசுக் காலம் 1910ல் இருந்து 1926 வரை எட்டு ஜனாதிபதிகளையும் 45 அரசாங்கங்களையும் போத்துக்கல் சந்தித்திருந்தது. ஒரு தீவிரமான தொழிலாள வர்க்கம் 1917ல் ஒரு பொது வேலைநிறுத்தத்தை நடாத்தி, இரண்டு முற்றுகைகளை மேற்கொண்டிருந்தது.

அக்டோபர் 1917ல் ரஷ்யாவில் போல்ஷிவிக்குகள் ஒரு வெற்றிகரமான புரட்சிக்குத் தலைமை அளித்திருந்தனர். லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டிற்கு அது ஒரு சக்திவாய்ந்த நிரூபணத்தை அளித்தது. ரஷ்யா பொருளாதார அளவில் சோசலிசத்தை எட்ட முடியாத பின்தங்கிய நிலையில் உள்ளது என்ற மென்ஷிவிக்குகளின் கருத்தாய்விற்கு எதிராக, ரஷ்ய வளர்ச்சியின் உண்மையான செயலியக்கம் உலகப் பொருளாதாரத்தின் பின்னணியில்தான் அறியப்படமுடியும் என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தியிருந்தார். இதன் விளைவாக முன்பு முதலாளித்துவ புரட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த ஜனநாயகப் பணிகள் தொழிலாள வர்க்கத்தின் தலைமையின்கீழ்த்தான் முடிக்கப்பட முடியும் என்றும், அதற்கு இந்த வர்க்கம் தனக்கு ஆதரவாக, உலக அரங்கில் சோசலிசப் புரட்சியை முடிப்பதற்கான ஒரு பகுதியாக கிராமப்புற மக்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் ட்ரொட்ஸ்கி கூறினார்.

வறிய நிலையில் உள்ள, போரினால் சீரழிந்துள்ள ரஷ்யாவில் சோசலிசம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பது ஜேர்மனி மற்றும் அதிக தொழில்துறை முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சிகள் வெற்றியடைவதைப் பொறுத்து உள்ளது என்பதை போல்ஷிவிக் தலைவர்கள் அறிந்திருந்தனர். இதை ஒட்டி, கம்யூனிஸ்ட் அகிலத்தின் உதவியுடன் (Comintern - மூன்றாவது அகிலம்) 1921 ம் ஆண்டில் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.

ஆனால், போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அடுத்த கட்ட வளர்ச்சியும், உலகிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் வளர்ச்சியும் சோவியத் ஒன்றியத்தில் ஜோசப் ஸ்ராலினின் தலைமையில் இருந்த அதிகாரத்துவ தட்டின் எழுச்சியினால் உருவாக்கப்பட்டுவிட்டது. மூன்றாம் அகிலத்தின் வழிவகைச் சார்புகள் லெனினுடைய மரணத்திற்கு பின்னர் முற்றிலும் மாறியது. "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" என்ற கருத்தாய்வு ஸ்ராலின் மற்றும் புக்காரினால் 1924ம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டதானது, உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்தை கைவிடுவதற்கான கோட்பாட்டு அடிப்படையை அளித்ததோடு, சர்வதேச தொழிலாளர்கள் இயக்கம் பெருகிய முறையில் தன்னுடைய பொருள்சார் நலன்களுக்காக இயங்கிக் கொண்டிருந்த ஸ்ராலினிச அதிகார வர்க்கத்திற்கு அடிபணிந்து நிற்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் தொழிலாள வர்க்கத்திற்கு மாபெரும் தோல்விகள் ஏற்பட்டன. இதில் மிகப் பேரழிவு தந்த நிகழ்வு 1933ம் ஆண்டு ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தது ஆகும். இதையொட்டி ட்ரொட்ஸ்கி, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் அதன் மூன்றாம் அகிலத்திலுள்ள இதர கட்சிகளும் சீர்திருத்தப்பட முடியாது என்ற முடிவிற்கு வந்து, நான்காம் அகிலம் தோற்றுவிக்கப்பட்டு உலக சோசலிசப் புரட்சியை முன்னேற்றுவிக்க அடித்தளம் நாட்டப்படவேண்டும் என்று கூறினார்.

ஸ்ராலினிசமும் மக்கள் முன்னணியும்

ஸ்ராலினிசம், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியில் ஆயுதம் இழக்கச் செய்ததானது போர்த்துக்கலில் பேரழிவை ஏற்படுத்தியது. பொருளாதாரத்தில் உறுதியற்ற நிலை மற்றும் எழுச்சியுற்ற தொழிலாள வர்க்கம் ஆகியவற்றிக்கு இடையில் 1926ம் ஆண்டு ஒரு வலதுசாரி சதி முலம் ஆட்சி கைப்பற்றப்பட்டது. 1933ல் இத்தாலி முசோலினியின் பாசிசத்தின் செல்வாக்குப் பெற்ற பிரதம மந்திரி அந்தோனியோ டூ செலசார், முறையான வகையில் ஒரு சர்வாதிகாரம் நிறைந்த "புதிய ஆட்சியை" பிரகடனப்படுத்தினார். இந்தப் பாசிச தேசிய ஒன்றியம் (National Union) ஒன்றுதான் சட்டபூர்வமான ஒரே கட்சியாக இயங்கமுடியும் என்றும், சுதந்திரமாக இருந்த பல தொழிற்சங்கங்கள், மற்றும் வேலைநிறுத்தங்கள் என்பன சட்டத்திற்கு புறம்பானவை என்றும் அறிவிக்கப்பட்டது. கடுமையான செய்திக் கட்டுப்பாட்டையும், பெரும் குற்றம் நிறைந்த இரகசிய போலீஸ் படையையும் செலசார் நிறுவினார்.

போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி சட்டவிரோதமாக்கப்பட்டதுடன் அதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது நாடுகடத்தப்பட்டனர். மூன்றாம் அகிலத்தின் ஆறாவது மாநாட்டிற்குப் பின் 1929ம் ஆண்டில் கட்சி திருத்தியமைக்கப்பட்டு, முந்தைய ஆண்டில் கட்சியில் சேர்ந்திருந்த பென்டோ கோன்ஸ்லாவ்ஸ் அதன் பொதுச் செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.

பல்கலைக் கழகத்தில் சட்டம் பயிலும்போது 1931ம் ஆண்டில் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்த குன்ஹால், பின்னர் சோவியத் ஒன்றியத்தில் 1935ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கம்யூனிஸ்ட் இளைஞர் அணிக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதற்குச் சென்றிருந்தார். இந்தக் காலக்கட்டத்தில்தான் ஸ்ராலினிச அதிகாரத்துவம் தன்னுடைய "மக்கள் முன்னணி" கொள்கையை "ஜனநாயக" முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தாராளவாத-சீர்திருத்தக் கூறுபாடுகளுடன் இணைந்து சோவியத் ஒன்றியதைக் காப்பாற்ற பாசிசத்தை எதிர்த்துப் போராடவேண்டும் என்ற கட்டமைப்பை முன்வைக்கத் தொடங்கியது.

போர்த்துக்கலில் மக்கள் முன்னணிக் கருத்தின் முழு உருவமாக விளங்கிய குன்ஹால் இளைஞர் அணி அமைப்பின் தலைவரானார். பின்னர் 1936ம் ஆண்டில் 22 வயதிலேயே போர்த்துக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஆனார்.

ஐரோப்பிய வரலாற்றில் அந்த ஆண்டு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஜூன் மாதத்தில் பாரிய வேலைநிறுத்தங்கள் பிரான்சை ஒரு புரட்சி முனைக்குத் தள்ளியிருந்தது. ஸ்பெயினில் ஜெனரல் பிராங்கோவின் தலைமையில் ஜூலை மாதம் பாசிச இராணுவ அதிகாரிகள் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஒரு தொழிலாளர் எழுச்சி மற்றும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் நிலையில் இருந்தன. மக்கள் முன்னணிக் கொள்கையைச் சுமத்தியும், முதலாளித்துவ முறையின் அனைத்துக் கூறுபாடுகளுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் அணிதிரள்வை எதிர்க்கும் வகையிலும், மூன்றாம் அகிலம் ஸ்பெயினின் முதலாளித்துவ முறையை பாதுகாத்தல், ஸ்பானிய புரட்சியை தகர்த்தல், இவற்றில் முக்கிய பங்கைக் கொண்டிருந்து. இதன் மூலம் பிராங்கோவின் பாசிசப் படைகளின் வெற்றியை அது எளிதாக்கியது.

போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியும் இதே வழிவகையை ஏற்றுக்கொண்டதோடு, போர்த்துக்கல் தொழிலாளர்கள் செலசாரின் ஆட்சியை சவாலுக்கு உட்படுத்தும் முயற்சியைத் தடை செய்வதற்கும் உதவியது. மேலும், இதையொட்டி அந்த ஆட்சி இரண்டாம் உலகப்போரில் இருந்து தப்பி, நாட்டை இன்னும் மூன்று தசாப்தங்களுக்குப் பிடியில் வைத்திருக்கவும் அது உதவியளித்தது.

போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி அடக்குமுறைக்கு உட்பட்டிருந்தபோதிலும்கூட, -----குன்ஹால் மொத்தம் 15 ஆண்டுகளை சிறையில் கழித்திருந்தார்--- ஸ்ராலினிஸ்ட்டுக்களின் இரண்டு கட்ட புரட்சிக் கோட்பாட்டிற்கு அடிமைத்தனமான முறையில் கட்சி உடன்பட்டிருந்தது. இந்தத் தவறான, பேரழிவைத் தரக்கூடிய கருத்தாய்வின்படி, புரட்சியின் "முதல் கட்டத்தில்" தேசிய முதலாளித்துவ வர்க்கத்திடம் தொழிலாள வர்க்கம் தன்னையும், தன்னுடைய வர்க்க நலன்களையும் முன்னேற்றம் தரும் எனக் கருதப்பட்ட முதலாளித்துவ சக்திகளுக்கு தாழ்த்திக் கொள்ளவேண்டும். "இரண்டாம் கட்டத்தில்", அதாவது சோசலிசப் புரட்சியானது மிகவும் காலம் தாழ்ந்துதான் வரும் என்றும் கூறப்பட்டது.

பாரிய சமூகப் போராட்டங்களை எதிர்த்து தன்னுடைய ஆட்சியைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், செலசார் அரசியல் கைதிகள் அனைவருக்கும் ஒரு பொது மன்னிப்பு வழங்கி, செய்தி தணிக்கையின் கடுமையையும் சற்றுக் குறைத்தார். அந்த ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி, Movement of Deomocratic Unity (MUD) என்று அப்பொழுது அரசியல் கலப்படமாக இருந்த (தீவிர வலதுசாரிகள் உட்பட) பல் வேறு சக்திகளின் கூட்டணியுடன் இணைந்தது. இந்தத் தேர்தல்களில் மோசடி நடந்துவிட்டதாகக் கூறி, MUD அதில் இருந்து பின்வாங்கியதும் அதன் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

1958ம் ஆண்டு, போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி "புதிய அரசு" என்ற அமைப்பின் முக்கியத் தலைவராக இருந்த ஜெனரல் ஹம்பெர்டோ டெல்கடோவிற்கு, தேர்தல் மோசடிகள் பரந்திருந்த தேர்தலில் அதிகாரபூர்வமாக வெற்றிபெற்றிருந்த தேசிய ஒன்றியத்திற்கு எதிராக, ஜனாதிபதி பதவிக்கு அவர் போட்டியிட்ட போது ஆதரவைக் கொடுத்தது. ஜனாதிபதித் தேர்தல்கள் இன்னும் கூடுதலான முறையில் நேரடித் தேர்தல்களாக இருக்காத வகையில் செலசார் அரசியலைமைப்பை மாற்றிக்கொண்டார்.

1961ம் ஆண்டு போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்ட குன்ஹால் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தேசிய விடுதலை தேசபக்த முன்னணி (Patriotic Front For National Liberation (FPLN) என்பதை சோசலிஸ்ட் கட்சி மற்றும் டெல்கடோ போன்ற தாராளவாத முதலாளித்துவப் பிரமுகர்களுடன் சேர்ந்துகொண்டு அமைத்தார்.

1970ம் ஆண்டு ஸ்ராலினிச இரண்டு கட்டக் கருத்தாய்விற்குத் தன் ஆதரவை குன்ஹால் வலியுறுத்தினார். "புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், பாட்டாளி வர்க்கம் வெவ்வேறு வர்க்கங்கள், மக்கட் தொகுப்பின் வேறுபட்ட பிரிவுகளுடன் உடன்படிக்கையை கொள்ளவேண்டும்..... பாட்டாளி வர்க்கத்தின் சோசலிசப் புரட்சிக்கான கூட்டுக்கள் தேசிய ஜனநாயகப் புரட்சியில் இருப்பதுபோல் இருக்க மாட்டாது" என்று அவர் எழுதினார்.

இது மார்க்சிசத்தை முற்றிலும் கைவிட்ட நிலைப்பாடு ஆகும். மேலும், இருபதாம் நூற்றாண்டின், எல்லாவற்றிற்கும் மேலாக ரஷ்ய புரட்சி உட்பட, மிக முக்கியமான படிப்பனைகளைக் கைவிட்டது போலவும் ஆகும். அத்தோடு, போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி அடுத்த சில ஆண்டுகளில் வெடிக்க இருந்த புரட்சியில் எத்தகைய பங்கைக் கொள்ளும் என்பதற்கான எச்சரிக்கையாகவும் இது இருந்தது.

1970களின் ஆரம்ப ஆண்டுகளில் முதலாளித்துவ அமைப்பு முறையானது, மிகப் பெரிய சர்வதேச அளவிலான நெருக்கடியைக் கண்ணுற்றது. அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் டொலரை தங்கத் தரக் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கிவிட்டு பிரெட்டன் வூட்ஸ் உடன்பாட்டிற்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அந்த உடன்பாடு 1944ல் இருந்து உலகப் பொருளாதாரம் முழுவதற்கும் அச்சாணியாக இருந்தது. இதையொட்டி உலகப் பொருளாதாரத்தில் கடுமையான மந்த நிலை ஏற்பட்டது.

போர்த்துக்கல் நாட்டை பிற்போக்கான, ஒதுக்கமான முறையிலேயே இருத்தும் வகையில் அனைத்தையும் செலசார் ஆட்சி செய்திருந்த போதிலும், உலகப் பொருளாதாரத்தில் இருந்து நாடு தனிமையாக இயங்க முடியவில்லை. 1960களில், போர்த்துக்கல்லில் வெளிநாட்டு மூலதனம் மும்மடங்காகியது. இதில் பெரும்பங்கு அமெரிக்காவிலிருந்து வந்தது. 1973ஐ ஒட்டி 150 பெருநிறுவனங்கள் முழுப் பொருளாதாரத்தின்மீதும் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், தலைமை நிலையில், ஒரு சில செல்வம் கொழித்திருந்த போர்த்துக்கீசியக் குடும்பங்கள்தான் இருந்தன.

போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியும் இராணுவ ஆட்சிக் குழுவும்

1970 களில், போர்த்துக்கீசிய ஆளும் செல்வந்த தட்டு உள்நாட்டில் பாரிய வேலை நிறுத்தத்தையும், அதன் காலனித்துவ நாடுகளில் பாரிய எழுச்சிகளையும் எதிர்கொண்டது. தேசிய வருமானத்தில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி 150,000 படையினர்களை அயல்நாடுகளில் நிறுத்தி, அங்கோலா, மொசாம்பிக் மற்றும் கினி பிசாவு ஆகிய நாடுகளில் இருந்த விடுதலை இயக்கங்களை எதிர்க்க செலவு செய்யப்பட்டன. கட்டாய இராணுவ சேவை, குறைந்த ஊதியம் ஆகியன இராணுவத்தினரிடையே குறைபாடுகளை பெருக்கி, அதிகாரத்திற்கு எதிராக "காப்டன்களின் இயக்கம்" என்று மேற்கொள்ளப்பட்டிருந்த இயக்கத்திற்கு ஆதரவை ஊக்கப்படுத்தின. பின்னர் இதுதான் இராணுவப் படைகளின் இயக்கம் (Armed Forces Movement - MFA) என்று அழைக்கப்பட்டது.

ஏப்ரல் 25, 1974 அன்று இராணுவப் படைகளின் இயக்கமானது, செலசாருக்குப் பின் வந்த Marcello Caetano உடைய ஆட்சியை அது "மக்களுடைய நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறது" என்று கூறி அகற்றியது. ஒரு தேசத்தைக் காக்கும் குழு அல்லது இராணுவக் குழு ஒன்று அமைக்கப்பட்டதோடு, அதில் பெரும்பான்மையாக இராணுவத்தின் உயர் அதிகாரிகள் இருந்தனர். படைகளின் இரண்டாம் உயர் அதிகாரியான தளபதி, மற்றும் போர்த்துக்கல்லின் இரு பெரு ஏகபோக உரிமை நிறுவனங்களில் இயக்குனராகவும் இருந்த அந்தோனியோ டூ ஸ்பினோலா (Antonio de Spinola) ஜனாதிபதியாக நியமனம் பெற்றார்.

ஒரு எளிய "மாற்றத்தை" மட்டுமே ஆட்சிக் கவிழ்ப்பு கொடுத்தால் போதும் என்று ஸ்பினோலா நினைத்திருந்தார். ஆனால், அது தெருக்களுக்கு மக்களைக் கொண்டுவந்து, இன்னும் கூடுதலான மாற்றங்கள் வேண்டும் என வலியுறுத்த வைத்தது. தொழிலாளர்கள் ஆலைகளின் நிர்வாகத்தையும், அலுவலக நிர்வாகத்தையும், கடைகளையும் கைப்பற்றினர். விவசாயிகள் பண்ணை நிலங்களை எடுத்துக் கொண்டனர். புரட்சிகர சூழ்நிலை படைகள் முழுவதும் பரவியது. தரைப்படை மற்றும் கடற்படையினர்கள் தொழிலாளர்களுடன் இணைந்து சோசலிசம் தேவை என்ற கோஷ அட்டைகளைச் சுமந்து அணிவகுத்தனர்.

முன்னால் தடைக்குட்பட்டிருந்த கட்சிகள் தலைமறைவில் இருந்து, அல்லது நாடுகடத்தப்பட்ட நிலையில் இருந்து மீண்டும் வெளிப்பட்டன. இதில் போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் போர்த்துக்கீசிய சோசலிஸ்ட் கட்சி என்று மரியோ சோரசின் தலைமையிலான கட்சியும் அடங்கும். ஆளும் செல்வந்தத் தட்டுக்களில் தூரப் பார்வையுடைய உறுப்பினர்கள் சமூகப் புரட்சி ஒன்று ஏற்படாவண்ணம், இக்கட்சிகளை செயல்படவைக்கப்படலாம் என்பதை அறிந்திருந்தனர். இதனால், மாஸ்கோவில் புலம் பெயர்ந்திருந்த குன்ஹால், விமான நிலையத்தில் இராணுவ முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டு திருப்பி நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார். அரசாங்கத்தில் இரண்டாம் முக்கிய மந்திரிப் பதவி, கார் டிரைவர் மற்றும் மெய்காப்பாளர் என்று அவருக்கு கொடுக்கப்பட்டு, போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்று ஒதுக்கப்பட்டது.

அதிகாரிகளின் இயக்கமான, "MFA மற்றும் மக்கள் கூட்டணி" என்ற கோஷத்தை வைத்துக் கொண்டிருந்த MFA இயக்கமானது, போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் போர்த்துக்கீசிய சோசலிஸ்ட் கட்சி மற்றும் பல "இடது குழுக்களால்'' சவாலுக்கு உட்படவில்லை. புரட்சி தோற்றுவித்த முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று இதைப் பற்றியதாக இருந்தது. ஆனால், குன்ஹாலோ MFA உடன் நடைமுறை உடன்பாடு ஒன்றைக் கொண்டு, "இது ஒரு உந்துதல் சக்தியாக இருந்து நம்முடைய புரட்சிக்கு உத்தரவாதம் அளிக்கும்.... மக்கள் முன்னணிக்கும் MFA க்கும் இடையே உடன்பாடு தேவை என்று கம்யூனிஸ்டுக் கட்சி கருதுகிறது, ஜனநாயக ஆட்சி நிறுவப்படுதலுக்கு அது முக்கியமான காரணியாக இருக்கும், ஒரு புரட்சிப் போக்கிற்கு உறுதியான உத்தரவாதமாக அது இருக்கும்" என்று அறிவித்தார். போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய செய்தித்தாளான Avante "சோசலிசப் போக்கைக் கொண்டுள்ள" அரசாங்கம் தேவை எனக் கூறுவோர் "முற்றிலும் நடைமுறையை அறியாதவர்கள்" என்று கண்டித்தது.

மக்களைத் திருப்தி செய்யும் கட்சி என்று காட்டிக் கொண்டாலும்கூட, MFA முதலாளித்துவ முறையில் வலிமைக் கரத்தைத்தான் பிரதிபலித்தது. ஒரு புதிய சர்வாதிகாரம் வரக்கூடிய அச்சுறுத்தலின் திறனையும் அது கொண்டிருந்தது. தொழிலாளர் வர்க்கத்தின் எந்தவிதமான சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் கடுமையாக அடக்குவதை அது தீவிரமாக் கொண்டிருந்தது. குறிப்பாக இராணுவத்தின் வலிமையைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் அது பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. "AFM (MFA) தவிர வேறு எந்த அரசியல் அமைப்புக்களும் அவை கட்சிகளை பிரதிபலித்தாலும், தனியாக இருந்தாலும் இராணுவத்தில் அனுமதிக்கப்படமாட்டாது. அத்துடன், அனைத்து இராணுவ அதிகாரிகளும் தங்கள் இயக்கத்திற்குள்ளேதான் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்" என்று அது அறிவித்தது.

அதே நேரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் போர்த்துக்கீசிய ஆதரவாளர் அமைப்பான League for the Construction of the Revolutionary Party ஆகியன, போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் முதலாளித்துவக் கட்சிகள், அரசாங்க இயந்திரம் மற்றும் MFA இவற்றில் இருந்து முறித்துக் கொள்ளவேண்டும் என்றும், இராணுவம் கலைக்கப்பட்டு தொழிலாளர்கள், விவசாயிகள் இணைந்த சோவியத் படையினர்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரியது.

மாறாக, போர்த்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அவேலினோ கோன்ஸ்லாவ்ஸ் என்பவர் குன்ஹாலுடன் இணைந்து முதல் இடைக்கால அரசாங்கத்தில் தொழிலாளர் துறை மந்திரியாகச் சேர்ந்து தொழிலாளர்களிடையே கட்டுப்பாட்டைக் கொண்டுவரவும் MFA உடைய "உற்பத்திக்கான போருக்காக" கடும் சிக்கன நடவடிக்கைகளைக் கொண்டுவரவும் செய்தார். "தேசியப் பொருளாதாரத்தைக் காப்பாற்றுக" என்று கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுத்ததோடு, தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமான நடவடிக்கை எதையும் வெளிப்படுத்தினால் அதைக் கண்டிக்கவும் செய்தது.

குன்ஹாலும் பங்கு கொண்டிருந்த, இதற்குப் பின் வந்த அரசாங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு எதிரான சட்டங்களை அறிமுகப்படுத்தி, இராணுவ உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாத தொழிலாளர்களைக் கைது செய்ததுடன், "இனி எந்த அரசியல் செயலிலும் ஈடுபடமாட்டேன்" என்ற உத்தரவாதத்தைக் கொடுத்தால்தான் விடுவிக்கவும் செய்தனர்.

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி

சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் ஸ்ராலினிஸ்டுக்களின் இந்த செயல்கள் பிற்போக்காளர்கள் மீண்டும் தலையெடுக்க உதவியதுடன் இன்னும் இரண்டு ஆட்சிக் கலைப்புக்கள் 1974 செப்டம்பர், மார்ச் 1975 ஆகியவற்றில் தோன்றவும் வழிவகுத்தன.

இதற்குப் பின் அரசாங்கம் MFA உடைய இசைவிற்கு உட்பட்ட பொருளாதாரத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததோடு, இத்திட்டத்தில் "முதலாளித்துவ நிர்வாகம் சமூக ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும்" என்ற கருத்தை ஒதுக்கியுமிருந்தது. அத்துடன், ஒருபகுதி தேசியமயமாக்குதல்களுக்கு அழைப்பு விடுத்து, சில பெரிய, மோசமாக நிர்வாகம் செய்யப்பட்டு வந்திருந்த பண்ணைகளை எடுத்துக் கொள்ளுவதற்கும் அழைப்பு விடுத்து, கூடுதலான அயல்நாட்டு முதலீடு வேண்டும் என்றும் அரசாங்கம் கூறியது.

வணிகம் "மக்களுடைய பணிக்காகத் தேசியமயம் ஆக்கப்பட்டுவிட்டது" என்று PCP பெரும் கடமையுணர்வுடன் கூறியது. ஆனால், இந்த முதலாளித்துவமுறைத் தேசியமயமாக்கல் என்பது இரண்டாம் உலகப் போருக்குப் பின் பல மேலை நாடுகளிலும் நிகழ்ந்த முறையில் இருந்து அதிகம் வேறுபட்டிருக்கவில்லை. இது பொருளாதார, அரசாங்க அதிகாரங்களை முதலாளித்துவத்தினரிடம்தான் அளித்திருந்தது. தொழிலாளர்களினால் நிர்வகிக்கப்பட்டிருந்த நிறுவனங்களில் அரசாங்கம் நியமித்திருந்த நிர்வாகிகளைக் கொண்டு நடத்துவது என்பது இந்த தேசியமயமாக்குதலின் ஒரு வகை ஆயிற்று.

1975 ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற தேர்தல்களில், கிட்டத்தட்ட 38 சதவிகித வாக்குகளை போத்துக்கீசிய சோசலிசக் கட்சி (PSP) பெற்றது. அரைப் பாசிச கட்சியான பாப்புலர் ஜனநாயகக் கட்சி (Popular Democratic Party - PPD) 26.4 சதவிகிதத்தையும், போத்துக்கீசிய கம்யூனிஸ்டுக் கட்சி (PCP) 13 சதவிகிதத்தையும் பெற்றன. ஆனால், உறுதியளிக்கப்பட்டிருந்த நிலச்சீர்திருத்தங்கள் வரும் என்ற நிலை காணப்படாத நிலையில், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களும் நகர்ப்புற எழுச்சி இயக்கங்களில் சேர்ந்து கொண்டு பெரும் விவசாயப் பண்ணைகளை எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டு அவற்றைக் கூட்டு முறையில் இயக்கினர். இப்படி நிலத்தை எடுத்துக் கொள்ளுவதை PCP ''அராஜகவாதமுறை'' என்று கூறி இனி அத்தகைய நிலப்பறிப்புக்கள் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டிற்குள்தான் வரும் என்று அறிவித்தது (அவற்றை இது கட்டுப்படுத்தியது.)

1975 ம் ஆண்டு ஜூனில் இருந்து ஆகஸ்டிற்குள்ளாக PSP, PPD இரண்டும் நான்காவது இடைக்கால அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய பின்னர், PCP யும் அதன் கூட்டாளிகளும், அரசாங்கம், அமைச்சரவை ஆகியவற்றின் கட்டுப்பாடு முழுவதையும் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். PCP உடைய இராணுவப் பிரிவு MFA உடைய புரட்சிக் குழுவில் ஆதிக்கம் கொண்டிருந்தது.

MFA, PCP இரண்டும் Front of Revolutionary Unity (FUR) எனப்பட்ட புரட்சி ஒற்றுமை முன்னணி ஒன்றைக் கூட்டி MFA க்கும் மக்களுக்கும் இடையே ஒர் "உடன்பாட்டைக்" காண முற்பட்டன. FUR புரட்சியை அதன் மிக முக்கியமான காலகட்டத்தில் காட்டிக்கொடுப்பதற்காக நிறுவப்பட்ட மக்கள் முன்னணியாகும். இதற்குப் பெரும்பாலான இடது குழுக்களின் ஆதரவு இருந்தது. அவை அனைத்துமே "மக்கள் மன்றங்கள்" என்றும் "மக்களுடைய அதிகாரத்தின் தன்னாட்சிக் கூறுபாடுகள்" என்றும் "புரட்சிப் பாதையில் முன்னேற்றுவிக்கும் அமைப்புக்கள்" என்றும் கூறிக் கொண்டன.

இத்தகைய மக்கள் முன்னணிகள், உண்மையில் எழுச்சி பெற்று இரட்டை அதிகாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் தன்மையைத் தடுக்கவும், சோவியத்துக்கள் அல்லது தொழிலாளர்கள் குழுக்களைத் தோற்றுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குழுக்களின் சுயாதீனத் தன்மையை அழிக்கும் வகையில்தான் செயல்பட்டன. இந்த அமைப்புக்கள் MFA உடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டிருந்ததால், அனைத்து மட்டங்களும் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்தன. இதையொட்டி, அவை "அனைத்து அரசியல் கட்சிகளில் இருந்தும் தனித்து இருந்த நிலை" என்று பாதுகாக்கப்பட்டது. அத்தோடு, MFA ஐத் தவிர வேறு எந்த அரசியல் கட்சி அமைப்பும் இராணுவத்திற்குள் செல்வாக்கைப் படரவிட அனுமதிக்கப்படவில்லை.

இந்த நடவடிக்கைகள் மூலம் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்புக்களைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவர முடியாமற்போனபோது, முதலாளித்துவ ஆட்சிக்கு நேரடியான புரட்சிகர சவாலைத் தவிர்க்கும் வகையில், PCP தனது ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த ஐந்தாம் இடைக்கால அரசாங்கத்திலிருந்து, MFA உடைய முக்கிய உறுப்பினரும் PCP உடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவருமான பிரதம மந்திரி General Vasco Gncalves உடன் சேர்ந்து ராஜிநாமா செய்தது. இதன்பின்பு, PSP, PPD உடன் சேர்ந்து கொண்டு PCP பின்னர் ஆறாம் இடைக்கால அரசாங்கத்தில் சேர்ந்தது. இதற்கு அட்மிரல் ஜோஸ் பாப்டிஸ்டா பின்கீரோடி அஜெவேடோ தலைமை தாங்கினார். இது உடனடியாக கடும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் அடக்குமுறைக்கான திட்டங்களைச் சுற்றறிக்கைக்கு விட்டது.

இந்த நெருக்கடி உச்சக்கட்டத்தை விரைவில் அடைந்தது. ஆறாம் அரசாங்கமும் புரட்சிக் குழுவும் சமுதாயத்தின் பல பிரிவுகளாலும் எதிர்க்கப்பட்ட நிலையில், இரட்டை அதிகாரம் போன்ற நிலைமை நிலவியது. ஆனால், சில நாட்களுக்குள் இராணுவம் தலையிட்டு தடுப்புக்களை அகற்றி, ஒரு பெரும் போரைத் தவிர்த்து குண்டுவீச்சு இல்லாமல் தொழிலாளர்களையும், படையினர்களையும் ஆயுதத்தை இழக்கச் செய்தது. முந்தைய வாரங்களில் பல்லாயிரக்கணக்கானவர்களை ஆர்ப்பாட்டத்திற்குத் திரட்டிய பல இராணுவ அமைப்புப் பிரிவுகளும் 200 கமாண்டோக்களை எதிர்கொள்ளமுடியாமல் கரைந்து போயின.

ஒரு புதிய அரசியல் அமைப்பு, ஏப்ரல் 2, 1976ல் பிரகடனப்படுத்தப்பட்டது. ஒரு புதிய பாராளுமன்றத்திற்கான, அதாவது குடியரசின் சட்டமன்றத்திற்கான தேர்தல்கள் நடந்து PSP க்கு வெற்றியைக் கொடுத்தன. சோர் (Soares) சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடி பெருவணிகத்தின் இசைவிற்கு ஏற்ப கடுமையான அடிப்படை மாற்றத் திட்டங்களைச் செயல்படுத்தினார்.

தொழிலாளர் வர்க்கத்தை முதலாளித்துவக் கட்சிகள், அரசாங்க இயந்திரம் மற்றும் MFA ஆகியவற்றுடன் கட்டுப்போட்ட குன்ஹாலின் போத்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் இடது ஆதரவாளர்களின் காட்டிக்கொடுப்புக்கு போர்த்துக்கீசிய பூர்சுவாசி நன்றி செலுத்திக்கொண்டது. போர்த்துக்கல்லின் புரட்சி வெற்றி பெற்றிருந்தால் அது சர்வதேச முதலாளித்துவத்திற்குப் பலத்த அடியாக இருந்திருக்கும். அது 1970 களில் உலகம் முழுவதும் சமூக இயக்கங்கள் வளர்வதற்கான ஊக்கத்தையும் கொடுத்திருக்கும். 17, பெப்ருவரி 1975 பதிப்பில் நியூயோர்க் டைம்ஸ் ஒரு தலையங்கத்தில் அக்காலத்திய நெருக்கடியைப் பற்றி ஒரு குறிப்பைக் கொடுத்து, "போர்த்துக்கல்லில் கம்யூனிசம் வெற்றி பெற்றிருந்தால், அது இத்தாலியிலும், பிரான்சிலும் அதே போன்ற போக்கிற்கு ஊக்கத்தைக் கொடுத்து, கிரேக்கத்திலும் துருக்கியிலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி, ஸ்பெயினிலும் போராட்டத்தை ஏற்படுத்தி, யூகோஸ்லாவியாவிலும் மேற்கு ஐரோப்பா முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும்" என்று அறிவித்திருந்தது.

ஆனால், குன்ஹாலோ அல்லது PCP யோ "கம்யூனிசம் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும்" எந்தவிதமான முயற்சியையும் கொள்ளவில்லை. குன்ஹாலின் அரசியல் கருத்துக்கள் அடிப்படையில் ஒரு போர்த்துக்கீசிய குட்டி முதலாளித்துவ தேசியவாதியுடையதாகத்தான் இருந்தன. இது Quademi Communisti க்கு 1995ம் ஆண்டு அவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தெளிவாக உள்ளது. இருபதாம் நூற்றாண்டில் தொழிலாளர் வர்க்கம் காட்டிக் கொடுக்கப்பட்டதற்கு ஸ்ராலினிசத்தையும் தன்னையும் எந்த விதத்திலும் பொறுப்பெடுக்காமல் அவர் கருத்துத் தெரிவித்தார். "முதலாளித்துவ முறையின் திறன்கள் குறைத்து மதிப்பிடப்பட்டன என்றும், சோசலிசத்தின் திறன்கள் கூடுதல் மதிப்பிற்கு உட்பட்டுவிட்டன" என்றும் தான் கருதுவதாகக் அவர் கூறினார். மேலும், "முன்னேற்றப்பாதை உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகளுக்கான உத்தி ஒன்றை விளக்குவதில் ஏற்பட்டுவிடாது" என்றும் கூறினார். "சோவியத் ஒன்றியத்தின் சிதைவு என்ற பெரும் வரலாற்றுப் பேரழிவிற்கு முதலாம் குற்றவாளி" மிக்கைல் கோர்ப்பஷேவ்தான் என்று அவர் குறை கூறினார். "ஐரோப்பிய ஒருங்கிணைப்பினால் போர்த்துக்கல்லுக்கு ஏற்பட்ட விளைவுகள் தீவிரமானவை. தேசமே அடிபணிந்து நின்ற நிலையில், வலதுசாரி அரசாங்கம் போர்த்துக்கீசிய நலன்களை அயல்நாட்டு நலன்களுக்காக விட்டுக் கொடுத்துவிட்டது" என்று ஐரோப்பிய ஒன்றியத்தையும் வலது பக்கத்திலிருந்து தாக்கிப் பேசினார்.

இன்று போத்துக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி, தனது செல்வாக்கை பெரும்பாலான போர்த்துக்கீசிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு என்ற பொதுக் கூட்டமைப்பில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரசாங்கங்கள் ஒன்றன் பின் ஒன்றாக பிரகடனப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டு வந்திருந்த பெரும் சிக்கன நடவடிக்கைகளில் இது அரும்பெரும் பங்கைக் கொண்டுள்ளது. இதுதான் குன்ஹால் உண்மையில் விட்டுச் சென்ற பூர்வீகம் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved