World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The miserable end of the "Volkswagen model"

"வோல்க்ஸ்வாகன் முன்மாதிரியின்" துயர முடிவு

By Peter Schwarz
27 July 2005

Back to screen version

தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் தலைவர் கிளவுஸ் வோல்கேட் மற்றும் ஊழியர்கள் நியமன இயக்குனர் பீட்டர் ஹார்ட்ஸ் மற்றும் பல முன்னணி மேலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவதற்கு இட்டுச் சென்ற அண்மையில் வோல்க்ஸ்வாகனில் நடைபெற்ற விவகாரங்கள், அவர்களுக்கு எதிராக இப்போது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு இட்டுச்சென்றுள்ளதுடன், இவைகள் அத்தனையும் ஒரு பெரிய பொது மோசடியான அம்சங்கள் அனைத்தையும் உள்ளடக்கியது. ஊழல், பாலியல், நிறுவனம் நிதியளித்த சொகுசு பயணங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் உறுப்பினர்களுக்கு உலகம் முழுவதிலும் சுற்றுலா அழைத்துச் சென்றது மற்றும் இரகசியமாக நடைபெற்ற அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் மற்றும் பேரங்களும் அடங்கும். ஊடகங்கள் அவற்றின் வழக்கப்படி அந்த விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டன, அதற்கெல்லாம் மேலாக பரபரப்பு செய்திதாளான Bild முழுமையான புதிய நெருக்கமான விபரமான தகவல்களை நாளாந்தம் வழங்கி வருகிறது.

கற்பனையிலிருந்து உண்மையை முடிவு செய்வது மிகவும் கடினமாகும். என்றாலும், கடைபிடிக்கப்பட்டு வரும் பெரிய நோக்கங்கள் மிகவும் தெளிவானவை. 2001 மற்றும் 2002ல் அந்த நிறுவனம் பெற்ற உயர்ந்த இலாபங்களை தொடர்ந்து பெரிய இழப்புகளாகின. மே 1 இலிருந்து 44 வயது வொல்வ்காங் பெர்ன்ஹர்ட் வோல்ஸ்வாகனின் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். அவர் ஏற்கனவே மெர்சிடஸ் நிறுவனத்தின் ஒரு நிர்வாகி என்ற முறையில் தனக்கென்று ஒரு பெயரை சம்பாதித்துக் கொண்டவர். அது என்னவென்றால், அமெரிக்காவின் கிரைஸ்லர் நிறுவனத்தை கொடூரமான முறையில் உற்பத்திய அதிகரித்து ஆண்டிற்கு 7 பில்லியன் யூரோக்களை சேமிக்க விரும்பினார். அவ்வாறு செய்வது பத்தாயிரக்கணக்கில் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதாலும் மற்றும் ஒட்டுமொத்த தொழிற்சாலைகளை மூடுவதாலும்தான் சாத்தியமாகும்.

1990களின் தொடக்கத்தில் அன்றைய மாநில பிரதமராக லோயர் சாக்சோனியில் பணியாற்றி வந்த ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக்கட்சி), IG மெட்டல் தொழிற்சங்கம் மற்றும் வோல்ஸ்வாகனின் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் மற்றும் இயக்குனர்கள் குழு அடங்கிய நெருக்கமான ஒரு சங்கிலித் தொடர் போன்ற பின்னல் நிர்வாகத்தை ஏற்படுத்தினார். அது 15 ஆண்டுகளுக்கு மேலாக ஆதிக்கம் செலுத்தியது. இது இப்போது ஒரு தடைகல்லாக ஆகிவிட்டது அதை அப்புறப்படுத்தியாக வேண்டும்.

"பாதிக்கப்பட்ட தொழிற்சாலையை பொருளாதார சீரமைப்பு செய்கின்ற நடவடிக்கை, பழைய உள் உறவுகளை துண்டிப்பதன் மூலம்தான் வெற்றி பெற முடியும். பழைய உறவுகளால் ஒருவர் இன்னொருவரை சார்ந்து வாழ்கின்ற நிலை ஏற்படுவதுடன், மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கு துணைப்பங்களிப்பு செய்கின்றன" என்று வார செய்தி பத்திரிகை Der Spiegel விமர்சித்தது மற்றும் Die Zeit எழுதியது. "நிர்வாகிகள், தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் மிக நெருக்கமாக இணைந்து வோல்ஸ்வாகனில் பணியாற்றியதை எப்போதுமே தங்களுக்கு முள் குத்தியதாக கருதியவர்கள் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருப்பதாக கருதுகின்றனர்".

இந்த மோசடிக்கு பின்னணியாக உள்ள அரசியல் நலன்களும் மிகத்தெளிவானது. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கான மேலாளரான Klaus Joachim Gebauer தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் உறுப்பினர்களுக்கு அதிகமாக நன்மை தருகின்ற செலவுகள் செய்யப்பட்டன என்ற தகவலை கசியவிட்டார். (சில செய்தி பத்திரிகைகள் அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கை இது என்று ஊகச் செய்திகளை வெளியிட்டிருக்கின்றன) அவருக்காக தாராளவாத ஜனநாயக கட்சியின் (FDP) முன்னணி அரசியல்வாதியும் ஒரு வக்கீலுமான வொல்ப்காங் குபிக்கி வாதாடுகிறார். கீழ் சாக்ஸ்சோனி மாநில பிரதமரும் வோல்ஸ்வாகனில் மேற்பார்வை குழுவில் இடம்பெற்றிருக்கும் கிறிஸ்டியான் வொல்ப் (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்- CDU) பீட்டர் ஹார்ட்ஸ் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டுமென்று அழுத்தம் கொடுத்தார். மிகப்பெரிய பங்குதாரர் என்ற முறையில், கீழ் சாக்சோனி மாகாணம் அந்த பெருநிறுவனத்தில் கணிசமான செல்வாக்கு பெற்றிருக்கிறது.

வொல்ப்பின் முன்னோடியான ஷ்ரோடரின் தயவினால்தான் ஹார்ட்ஸ் பதவிக்கு வந்திருக்கிறார். மற்றும் அதிபரின் ஒரு நெருக்கமான நண்பர் என்று கருதப்பட்டு வருகிறார் மற்றும் பரவலான வெறுப்பிற்கு இலக்காகியுள்ள தொழிலாளர் சந்தையில், "ஹார்ட்ஸ் சீர்திருத்தங்களுக்கு" தனது பெயரையே வழங்கியவர். இந்த மோசடி வரவிருக்கின்ற மத்திய தேர்தல்களில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் மற்றும் தாராளவாத ஜனநாயக கட்சியின் பிரசாரத்திற்கு பயனுள்ள ஒரு ஆயுதத்தை வழங்குகிறது.

என்றாலும், தொழிலாளரை பொறுத்தவரை இந்த மோசடியின் முக்கியத்துவம் அதன் பிற்போக்குத்தனமான காரணத்தை விளங்கிக்கொள்வதனால் மட்டும் தீர்ந்துபோகப்போவதில்லை. பல தசாப்தங்களாக, வோல்க்ஸ்வாகன் "தொழிலாளர் பங்கேற்பதில் ஜேர்மனியின் முன்மாதிரி", ''ஜேர்மன் கூட்டுறவு" அல்லது "கூட்டு நிர்வாகம்" ஆகியவற்றிற்கு மாற்று அடையாள சின்னம் என்று கருதப்பட்டு வந்தது. வோல்க்ஸ்வாகனில் நிலவிய அளவிற்கு வேறு எந்த நிறுவனத்திலும் இயக்குனர்கள் குழு, தொழிற்சங்கங்கள், தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் அரசியல்வாதிகளுக்கிடையில் நெருக்கமான உறவு நிலவியதில்லை.

உலகிலேயே மிகப்பெரிய தொழிற்துறை தொழிற்சங்கத்தின் தலைவரான IG மெட்டலின் தலைவர் பாரம்பரியமாக தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் மேற்பார்வை குழுவில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார், அவருக்கு தொழிற்சாலை தொழிலாளர் குழு உதவுகிறது, தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கு ஜேர்மனியின் தொழிற்துறை சட்டம் பல தொழிற்சங்க உறுப்பினர்களை மேற்பார்வை குழுவிற்கு வழங்குகிறது. 1990 முதல் 2003 வரை ஹனோவர் மாநில தலைநகரில் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்தை நடத்தியது வரை IG மெட்டல், தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகிய ஒரு மும்மூர்த்திகள் குழுதான் நடைமுறையில் வோல்க்ஸ்வாகனை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன.

கிளவுஸ் வோல்கர்ட் இராஜினாமா செய்யும்வரை, 1990 முதல் வோல்க்ஸ்வாகனில் பொது தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவராகவும், வோல்க்ஸ்வாகனின் உலக மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தொழிலாளர் குழு தலைவராகவும் பணியாற்றி வந்தார். அவர் ஜேர்மனியின் மிக செல்வாக்குள்ள தொழிற்சாலை தொழிலாளர் குழு தலைவராக கருதப்பட்டார். வோல்க்ஸ்வாகனில் ஊழியர்களுக்கான இயக்குனராக பணியாற்றிய பீட்டர் ஹார்ட்சின் ஒரு நெருக்கமான நண்பராகவும் மற்றும் அவர் அதிபருக்கு ஒரு ஆலோசகரும், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் IG மெட்டல் அங்கத்தவரும் ஆவார்.

அத்தகைய நெருக்கமான உறவுகளால் அவர்களுக்கு சடத்துவ நலன்கள் கிடைக்கும் என்பதால் பெரிய நிறுவனங்களில் இயங்குகின்ற தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களில் காணப்படுகின்ற ஊழல் சூழ்நிலைகளை அறியாதவர்கள்தான் இத்தகைய உறவுகள் குறித்து வியப்படைவர். அரச வழக்குதொடுனர் அலுவலகம் தந்துள்ள தகவலின்படி, இரண்டாண்டு இடைவெளியில், தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினர்களுக்கான அங்கீகாரம் பெறாத 7,80,000 யூரோக்கள் (9,37,000 டாலர்கள்) செலவிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் அவர்கள் உலக சுற்றுப்பயணம் செய்தபோது, விலைமாதர்களுக்கு கொடுத்த பணமும் அடங்கும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, வோல்கர்டின் பிரேசில் நாட்டு தோழியான Adriana B இக்கு திரைப்பட பணிக்கு என்று வங்கி கணக்கில் 23,000 யூரோக்கள், (27,700 டாலர்கள்) மாற்றப்பட்டிருக்கின்றன. இது, மிகவும் வழக்கத்திற்கு மாறானது. ஏனெனில், இது போன்ற வேலைகளுக்கு வழக்கமாக தனித்தனியாக ஒவ்வொரு பணிக்கும் தனிமனிதர்களுகு பணம் தரப்பட்டு விடுகிறதே தவிர இவ்வாறான முறையில் பணம் அனுப்பப்படுவதில்லை.

வோல்க்ஸ்வாகன் உடன் இலாபகரமான வர்த்தக பேரங்களுக்கு முயன்றுவருகின்ற ஹெல்முட் ஷூஸ்டருக்கு சொந்தமான ஒரு நிறுவனத்தில் ஒரு பங்குதாரர் ஆக இருக்கிறார் என்ற தகவல் வெளியில் வந்ததும் வோல்கர்ட் இறுதியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டிவந்தது, அவர் இப்போது அரசு வழக்கறிஞர் அலுவலகத்தினால் புலன் விசாரணை செய்யப்பட்டு வருகிறார். அவர் வோல்க்ஸ்வாகனின் செக் நாட்டின் துணை நிறுவனமான ஸ்கோடாவில் ஒரு நிர்வாகக் குழு உறுப்பினர்.

வோல்கர்ட் ராஜினாமா செய்து ஒரு வாரத்திற்கு பின்னர் ஹார்ட்ஸ் முன்கூட்டியே தமது இராஜினாமாவை தாக்கல் செய்தார், அங்கீகரிக்கப்படாத செலவுகளுக்கு தானே பொறுப்பு என்பதை சுட்டிக்காட்டி இந்த இராஜினாமாவை நியாயப்படுத்தினார். இதற்கிடையில், அவர் நிறுவனப்பணத்தை ஒரு விலைமாதிற்கு தந்தார் என்ற வதந்திகள் உலவின. அந்தக் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.

"வோல்க்ஸ்வாகன் அமைப்புமுறை"

"வோல்க்ஸ்வாகன் மாதிரி" அந்த பெறுநிறுவனத்திற்கு ஒரு நீண்டகால அடிப்படையில் மிகவும் இலாபம் தருவதாக அமைந்திருந்தது. 1990களில் பல நெருக்கடிகள் ஏற்பட்ட பின்னர், வோல்க்ஸ்வாகன் குழு பெருநிறுவனம் மட்டுமே 2001இல் 3 பில்லியன் யூரோக்கள் (3.6 பில்லியன் டாலர்கள்) இலாபம் பெற்றது. இது தவிர, Audi குழு பெருநிறுவனங்களிலிருந்து மேலும் 1.5 பில்லியன் யூரோக்கள் (1.8 பில்லியன் டாலர்கள்) இந்த பெருநிறுவனத்திற்கு வந்த சேர்ந்தது.

என்றாலும், தொழிலாளர்களை பொறுத்தவரை, "பலமுறை ஒரு துன்பம் தரும் நடைமுறையாகதான் நீடித்து, ஊதியங்களும் சலுகைகளும் வெட்டப்பட்டன. அந்த நடவடிக்கைகளை IG மெட்டல், தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவை ஒரே மாதிரியாக வேலை வாய்ப்புக்களை வெற்றிகரமாக பாதுகாத்து நின்ற நடவடிக்கை என்று சித்தரித்தனர்.

ஹார்ட்ஸ், வோல்கர்ட் உதவியுடன் எல்லையற்ற கற்பனை திறத்துடன் ஒரு புதிய வேலை நேரத்தையும் ஊதியத்திட்டத்தையும் உருவாக்கினார். அவை வோல்ஸ்வேகன் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை குறைப்பதற்கு இட்டுச்சென்றதுடன் மட்டுமல்லாமல், தொழிற்துறை முழுவதிலும் இருந்த கூட்டு உடன்படிக்கைகளை சிதைப்பதற்கான அச்சாணியாகவும் பயன்பட்டது. அதிபர் ஷ்ரோடர் வோல்க்ஸ்வாகன் நிர்வாகியை வெறுப்பிற்கு இடமான தொழிலாளர் சந்தை சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு பயன்படுத்திக்கொண்டது தற்செயலாக நடந்துவிட்ட சம்பவம் அல்ல அது தற்போது அவரது பெயரை கொண்டுள்ளது.

1993TM, IG மெட்டல் ஆதரவோடு அன்றைய மாநில பிரதமர் ஷ்ரோடர் வோல்க்ஸ்வாகன் நிர்வாகக் குழுவின் தலைவராக பேர்டினன்ட் பீச்சை நியமித்தார். இந்த ஆஸ்திரேலிய கோடீஸ்வரர், ஹிட்லருக்கு முதலாவது VW beetle முன்மாதிரியை உருவாக்கித் தந்த பெர்டினான்ட் போர்சீயின் பேரனாவார். மூன்று ஆண்டுகளுக்கு பின்னர், சாக்சோனியின் மாநில பிரதமரும் அவரது மனைவியும் வோல்க்ஸ்வாகன் தலைவரின் தனியார் ஜெட் விமானத்தில் அவரது செலவில் வியன்னா பொழுதுபோக்கு விடுதியின் நடன அரங்கிற்கு விஜயம் செய்தமை ஷ்ரோடர், பீச்சுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளாக வருவதற்கு காரணமாக அமைந்துவிட்டது.

பீச் இரண்டு பண்புகளைக் கொண்டவர்: ஒரு பக்கத்தில், அதற்கு முன்னர் நடுத்தர குறைந்த விலை கார்களை தயாரித்துக்கொண்டிருந்த வோல்ஸ்வாகன் நிறுவனத்தை சொகுசுகார் சந்தைக்கு கொண்டுவருவதற்கான அவரது முயற்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆக வோல்க்ஸ்வாகன் செல்வாக்குமிக்க Bentley, Bugatti மற்றும் Lamborghini போன்ற மாதிரிகளில் கார்களை தயாரித்தது. மற்றும் Phaeton சொகுசு கார் மாதிரியையும் உருவாக்கிற்று, இதற்காக Dresden நகரில் தனது சொந்த கண்ணாடியால் கட்டப்பட்ட தொழிற்சாலையை உருவாக்கிற்று.

இந்த முயற்சி முழுவதிலும் பில்லியன் கணக்கில் செலவை ஏற்படுத்திய ஒரு பேரழிவாக ஆயிற்று. ஓராண்டிற்கு 6,000 Phaeton கார்களையே வோல்க்ஸ்வாகன் விற்றது. இந்த திட்டத்தை சமூக ஜனநாயகக் கட்சியும் IG மெட்டலும் ஆதரித்ததற்கு காரணம் என்னவென்றால், அது பங்குச் சந்தைகளில் ஊகவாணிப பூரிப்பால் உருவாகிய பெரும் பணத்தின் மீதும் மற்றும் சொகுசு மீதும் அவர்களுக்கு மற்றும் ஏற்பட்ட நாட்டத்தை காட்டுகிறது.

இரண்டாவதாக, ஹார்ட்சுடனும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவுடனும் ஒத்துழைத்து எப்படி தொழிலாளருக்கான செலவினங்களை வெட்டுவது என்பதை பீச் நன்றாக புரிந்து கொண்டார்.

1993ல் விற்பனைகள் வீழ்ச்சியடைந்ததும் 30,000 வேலைகளை வெட்டுவதாக அவர் அச்சுறுத்தினார். அதனுடைய விளைவு என்னவென்றால் வாரத்திற்கு நான்கு நாட்கள் பணியை அறிமுகப்படுத்தியது. வாரப்பணி 28.8 மணி நேரமாக சுருங்கியது, இதன் மூலம் ''கட்டாய ஆட்குறைப்பு'' தவிர்க்கப்பட்டுவிட்டதாக தொழிற்சங்கம் பெருமையாக அறிவித்தது.

ஒரே அடியில், அந்த நிறுவனம் பல பிரச்சனைகளை தீர்த்து வைத்தது. ஒரு சமூகத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக அது ஏறத்தாழ 3 பில்லியன் ஜேர்மன் மார்க்குகளை (1.9 பில்லியன் டாலர்களை சேமித்தது. இத்திட்டம் தொழிலாளர்கள் மிகவும் விட்டுக்கொடுப்பதை சாத்தியமாக்கி கார்களுக்கான கேள்விகள் நிறைய குவிந்துவிடுமானால், மேலதிகநேரத்திற்கான கொடுப்பனவு இல்லாமல் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும், கட்டாய ஆட்குறைப்பு, அறிவிக்கப்படாமல் வேலைவாய்ப்பு வெட்டப்பட்டுதல் போன்றவற்றிற்கு பிரயோகிக்கப்பட்டது. இந்த ஒட்டுமொத்த நிகழ்ச்சிபோக்கும் தொழிலாளர்கள்தான் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அவர்கள் தங்களது ஊதியத்தில் 18 சதவீத இழப்பை தாங்கிக்கொள்ள வேண்டி வந்தது.

வோல்ஸ்வாகன் தொழிலாளர்களை மேலதிகமாக கசக்கிப் பிழிந்ததற்கு உறுதுணையாக உதிரிப்பாக விநியோக பிரிவுகளுக்கு பாரியளவிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது. 1993ல் மீண்டும் IG மெட்டல் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவின் ஆதரவோடு வோல்ஸ்வாகன் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து Jose Ignacio Lopez இனை நிர்வாகியாக நியமித்தது. அவர் அந்த நிறுவனத்தின் செலவுகளை வெட்டுவதில் இழிபுகழ் பெற்றவர், மற்றும் விநியோக நிறுவனங்களிடமிருந்து கடைசி பைசா வரை கறப்பதில் சிறப்பு தகுதி பெற்றவர். நீண்டகால அடிப்படையில் பார்த்தால், வோல்ஸ்வாகனிற்கு உபரி பாகங்களை விநியோகம் செய்கின்ற தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள்தான் (அவர்களும் IG மெட்டல் உறுப்பினர்கள்தான்) இந்தத் தாக்குதல்களை நேரடியாக சந்தித்தனர். ஆனால் வோல்ஸ்வாகனிலுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இதைப்பற்றிக் கவலையில்லை.

இறுதியில், லோப்பஸ் வோல்ஸ்வாகனிற்கு செலவாளியாக அமைந்து விட்டார். ஜேர்மனியிலுள்ள General Motors துணை நிறுவனமான ஓப்பல் தொழிற்துறையில் வேவு பார்த்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பியதை தொடர்ந்து வோல்ஸ்வாகன்அவரை 1996ல் பதவியிலிருந்து நீக்க வேண்டி வந்ததுடன் GM இற்கு இழப்பீடாக 100 மில்லியன் டாலர்களை செலுத்தியதுடன், அதன் போட்டியாளர்களிடமிருந்து 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள கார் பாகங்களை வாங்க வேண்டி வந்தது.

2000ல் அடுத்த அடி விழுந்தது "5,000 மடங்குகள் 5,000" என்ற ஒப்பந்தம் அறிமுகப்படுத்தப்பட்டது, அதை அரசியல்வாதிகளும் பெரு வர்த்தகங்களும் வெகுவாக பாராட்டின. வோல்ஸ்வாகன் நிர்வாகக் குழுவும் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் கடிகார முள்ளைப்போல் தொடர்ந்து பணியாற்றினர். தனது வொல்ப்ஸ்பேர்க் தொழிற்சாலையில் புதிய டூரான் மாடல் உற்பத்தியில் வோல்ஸ்வாகன் உறுதி எடுத்துக்கொண்டதை தொடர்ந்து 5,000 புதிய தொழிலாளர்களை பணியில் அமர்த்திக்கொள்ள உறுதியளித்தது. இங்கு பல அம்சங்களில் அவர்களது பணிநிலைமைகள் கடந்த உடன்படிக்கைகளில் இருந்து அடிப்படையிலேயே வேறுபட்டவை. புதிய தொழிலாளர்கள் அவர்களது பணியில் அளவிற்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவர் பணியாற்றும் காலத்திற்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதற்கு முன்னர் வோல்ஸ்வாகனில் நிலவிய நெறிமுறைக்கு மாறாக மிகத்தெளிவாக குறைந்த ஊதியங்கள்தான் வழங்கப்பட்டன மற்றும் அவர்களுக்கு அதிக வளைந்துகொடுக்கும் தன்மையுடனான பணிகள் வழங்கப்படும்.

புதிய வேலைகள், வருமானங்கள் மற்றும் எப்படி ஊழியர்கள் பணிகளுக்கு அனுப்பப்படவேண்டும் என்பது ''அதிக வளைந்துகொடுக்கும் தன்மையுடன்'' எவ்வாறு புதிய வேலைத்தலங்களை உருவாக்குகின்றது என்பதை புதிய ஒப்பந்தம் சமிக்கை காட்டுவதாக நிர்வாக ஆலோசகரான றோலாந்து பேர்கர் வர்ணித்தார். அதிபர் ஷ்ரோடர் இந்த ஒப்பந்தத்தை, "ஒரு புதுமையான தீர்வு" என்று புகழ்துரைத்தார்.

சென்ற ஆண்டு இறுதியில், பியச் நீக்கப்பட்டு முன்னாள் BMW அதிபர் Bernd Pischetsrieder நியமிக்கப்பட்டார் மற்றும் மேற்பார்வை குழுவின் தலைவர் பதவியை மட்டும் தக்கவைத்துக்கொண்டார். அதன் மூலம் மூன்றாவது அடி விழுந்தது, அது, ''எதிர்கால ஒப்பந்தம்'' என்றழைக்கப்படுவதாகும். இந்த முறை, ஹார்ட்சும், வோல்காட்டும் பெரும்பாலும் பழைய வழக்கமான மந்திரங்களை விட்டுவிட்டு, பகிரங்கமாக ஊழியர்களை அழுத்தம் கொடுத்து அச்சுறுத்தினர். "பணத்திற்கு பதிலாக வேலைகள்" (வோல்கர்ட்).

இந்த ஒப்பந்தம் மூலம் ஆண்டிற்கு ஒரு பில்லியன் யூரோக்கள் (1.2 பில்லியன் டாலர்கள்) ஊதிய சேமிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள ஊதியங்களும் கூலிகளும் 28 மாதங்களுக்கு முடக்கப்பட்டுவிட்டன, மேலதிக கொடுப்பனவுகள் பல நூறு யூரோக்கள் வெட்டப்பட்டுவிட்டன, பணியாற்றும் காலம் அதிக வளைந்துகொடுக்கும் தன்மையுடையதாக ஆக்கப்பட்டுவிட்டது. மொத்த ஊதியத்தில் 1.4 சதவீத அளவிற்குள்ள சலுகைகள் வெட்டப்பட்டுவிட்டன, பயிற்சி தொழிலாளர்களுக்கு கணிசமான அளவிற்கு குறைந்த விகிதங்களில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதன் மூலம் தொழிலாளர்கள் மேலும் பிளவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

இதற்கு பதிலாக, வோல்ஸ்வாகன் தனது ஜேர்மன் தொழிற்சாலைகளில் 2011 வரை 99,000 ஊழியர்களையும் அவர்களுடன் புதிதாக பயிற்சிக்கு சேர்ந்திருப்பவர்களையும் பணியில் நீடித்து வைத்திருப்பதாக உறுதிமொழிகளை தந்திருக்கிறது. என்றாலும், இந்த உறுதிமொழிகளை நெருக்கமாக சோதித்தால், அவை வெறும் தந்திரங்களே தவிர வேறொன்றும் இல்லை. அந்த ஒப்பந்தத்திலேயே ஒரு பிரிவு சேர்க்கப்பட்டிருக்கிறது, அடிப்படை எதிர்பார்ப்புகளிலோ அல்லது வர்த்தக சூழ்நிலைகளிலோ கணிசமான மாற்றங்கள் ஏற்படுமானால் மூன்று மாதங்களுக்குள் அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்கு வோல்ஸ்வாகனிற்கு அனுமதி வழங்குகிறது.

இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஆறு மாதங்களுக்கு பின்னர் அந்த நிறுவனம் ஓராண்டிற்கு மேலும் 7 பில்லியன் யூரோக்களை (8.4 பில்லியன் டாலர்கள்) சேமிக்க விரும்புகிறது என்று வோல்ஸ்வாகன் தலைவர் வொல்ப்காங் பேர்னார்ட் அறிவித்திருப்பது, ''எதிர்கால ஒப்பந்தம்'' கடந்த காலத்தை சார்ந்தது என்று காட்டுகிறது. நிர்வாகக் குழு இயக்குனர்கள் தொழிற்சாலை தொழிலாளர் குழு மற்றும் தொழிற்சங்கத்திற்கிடையே சொகுசான ஒரு உறவிற்கு வகை செய்த ''வோல்ஸ்வாகன் அமைப்புமுறை'' எதிர்வரும் மோதல்களில் பயனற்றது மற்றும் ஒரு சுமையான செலவு காரணி என்று மட்டுமே கருதப்படுகிறது. எனவேதான் நாற்றமெடுத்துக்கொண்டிருந்த ஊழல் என்கிற கட்டி இப்போது உடைக்கப்பட்டுவிட்டது.

அரசியல் படிப்பினைகள்

கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்ற ஹார்ட்ஸ் மற்றும் வோல்கர்ட் சகாப்தத்திலிருந்து தொழிலாளர்கள் அரசியல் படிப்பினைகளை பெற்றாக வேண்டும். தொழிலாளர்கள் மீதான தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு பதில் தொழிலாளர்கள் நிர்வாகத்தில் பங்கேற்பது மற்றும் சமூக கூட்டு என்கிற முன்னைய வடிவங்களுக்கு செல்வதாக இருக்க முடியாது. அப்படி செய்வது ஒரு தீர்க்க முடியாத நுரையீரல் புற்று நோயாளி குறைந்த நிகோட்டின் கலந்த சிகரெட்டுகளை புகைக்கலாம் என்று சொல்வது போல் இருக்கிறது.

இதுதான் வோல்கர்ட்டின் வாரிசான பேர்ன்ட் ஆஸ்டர்லோ தலைமையில் தொழிற்சாலை தொழிலாளர் குழு முன்னெடுத்து வைக்கின்ற முன்னோக்கு. படுமோசமான கழிவுகள் சிலவற்றிலிருந்து அது தன்னை விலக்கிக்கொண்டிருக்கிறது--- ஆனால் முந்தைய வழியிலேயே செல்கின்றது.

எடுத்துக்காட்டாக, Braunschweig நகரின் வோல்ஸ்வாகன் தொழிற்சாலையின் தொழிற்சங்கக்குழு தலைவரான, Uwe Fritsch கணக்குவழக்குகளில் ஒளிவு மறைவற்ற தன்மை வேண்டும் என்று கோருகிறார் அதே மூச்சில் ஹார்ட்சையும் தொழிற்சாலையின் தொழிற்சங்கக் குழுவின் கடந்தகால நடைமுறைகளையும் பாராட்டுகிறார்.

"வோல்ஸ்வாகன் மாதிரிக்காக முன்னாள் ஊழியர்களின் நிர்வாகத்தலைவரான பீட்டர் ஹார்ட்ஸ் தொடர்ச்சியான இலாபங்களை பெற்றுத்தருவதற்கு பணியாற்றி வந்ததுடன் சமூக தாக்கங்களை கருத்தில் எடுத்துக்கொண்டு தொழிற்சாலைகளை மூடாமலும் மற்றும் பணிநீக்கங்களை தவிர்த்து பணியாற்றி வந்தார். "வோல்ஸ்வாகன் அமைப்புமுறையை'' நீக்கிவிடுவது என்றால், அதன் பொருள் எல்லா சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தி மிக விரைவான அதிகபட்ச இலாப நோக்கு கொள்கையை அமுல்படுத்துவது----நிறுவனத்தை மூடுவது மற்றும் ஒட்டுமொத்த ஆட்குறைப்பும் அதில் அடங்கும்." என்று அவர் Junge Welt செய்தி பத்திரிக்கையிடம் தெரிவித்தார்.

"அந்த அமைப்புக்கள் அதிக ஜனநாயக தன்மையுள்ளதாகவும், ஒளிவு மறைவற்றதாகவும் இருக்க வேண்டும் என்றாலும் நான் 'கூட்டு நிர்வாகம்' பற்றி பேசமாட்டேன், ஆனால் ஒரு நிபந்தனைக்கு உட்பட்ட தொழிலாளர் பங்கேற்பை ஏற்றுக் கொள்கிறேன். அதாவது, நாங்கள் அடிப்படையிலேயே ஒரு எதிர்க்கட்சியின் பங்களிப்பை செய்ய மாட்டோம், ஆனால் முதலாளித்துவ முறைக்குள் எங்களது சகவாளர்களுக்கு சிறப்பாக பயன்கள் கிடைக்க முயலுவோம். ஏற்கனவே வேலை' உத்தரவாதத்தில் ஓரளவிற்கு நாம் சாதனை புரிந்திருக்கிறோம்" என்றும் அவர் வலியுறுத்திக் கூறினார்.

சரியாக "வோல்ஸ்வாகன் மாதிரி" என்ற முன்னோக்குதான் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது. 15 ஆண்டுகளாக, வோல்ஸ்வாகன் சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்களுக்கு மற்றும் தொழிற்சங்கங்களுக்கு ஒரு முன்மாதிரி இயக்கமாக விளங்கியது (தொழிலாளரில் 90% இற்கு மேற்பட்டவர்கள் IG மெட்டல் உறுப்பினர்கள்) மற்றும் தேசிய அடிப்படையில் ஊதியங்களை குறைப்பதற்கும் நடைமுறையில் இருந்த ஒப்பந்தங்களை இல்லாதொழிப்பதற்கும் மற்றும் வளைந்துகொடுக்கும் வேலை நிலைமைகளை செயல்படுத்துவதற்கும் வழிகாட்டினார்கள்-----அந்த நேரங்களில் எப்போதுமே அவர்கள் எடுத்து வைத்த வாதம் என்னவென்றால், ''முதலாளித்துவ முறைக்குள் எங்களது சகவாளர்களுக்கு சிறந்தவற்றை பெற்று தருகிறோம்" என்பதுதான். இப்பொழுது வெளிப்படையாகியுள்ள அருவருக்கத்தக்கமுறையில் முடிவடைந்த குழப்பம்வரை இந்த முயற்சியில் தொழிற்சாலையின் தொழிற்சங்கக்குழுவும் தொழிற்சங்கமும் நிர்வாகத்துடன் மிக நெருக்கமாக இணைந்து கொண்டிருந்தன.

தனிப்பட்ட பண்புகள் ஒரு பங்களிப்பு செய்திருக்க கூடும், ஆனால் நீண்டகால அடிப்படையில் இந்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒட்டுமொத்த முன்னோக்கு வளர்ச்சியின் விளைவாகும். உற்பத்தி பூகோளமயமாக்கலானது, ஒரு நாட்டின் தேசிய எல்லைக்குள் தொழிலாளர்களின் நலன்களை கருத்தில் எடுத்துக் கொண்ட சமூக சமரச பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான சாத்தியக்கூறை இல்லாதொழித்துவிட்டது. பூகோளரீதியான போட்டியின் அழுத்தங்களின் கீழ் மற்றும் குறைந்த ஊதிய நாடுகளுக்கு தொழில்களை மாற்றுவது என்ற நிரந்தர அச்சுறுத்தல் காரணமாகவும், தொழிற்சங்க அதிகாரத்துவம் ஜேர்மன் தொழிற்சாலைகளில் தங்களது சொந்த தொழிற்கூடங்களில் ''தொடர்ச்சியான இலாபத்தை பாதுகாப்பதற்காக'' நிர்வாகத்தின் ஒரு துணை அமைப்பாக ஆயிற்று. இந்த வளர்ச்சியை உலகம் முழுவதிலும் எல்லா தொழிற்சங்கங்களிலும் காண முடியும்.

வேலை வாய்ப்புகள் மற்றும் ஊதியங்கள் மீது நடைபெறுகின்ற தாக்குதல்களை எதிர்த்து நிற்பதற்கு முற்றிலும் மாறுபட்டதொரு முன்னோக்கு அவசியமாகும். அது நவீன உற்பத்தி முறையின் சர்வதேசத் தன்மை மற்றும் அனைத்து நாடுகளிலும் இருக்கின்ற தொழிலாள வர்க்கத்தின் பொது நலன்கள் மற்றும் அவர்களை சர்வதேசரீதியாக ஐக்கியப்படுவதற்கான முயற்சி ஆகியவற்றிலிருந்து வரவேண்டும். மற்றும் அது சமுதாயத்தை சோசலிச மாற்றத்திகாக போராட முயல வேண்டும், அதில் சமூக நலன்கள் பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்கு மேலாக முன்னுரிமை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்தகையதொரு முன்னோக்கின் மூலம் மட்டுமே வோல்ஸ்வாகன் நிர்வாகத்தின் தாக்குதல்களை உண்மையாக எதிர்த்து நிற்க முடியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved