World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா

Council of Europe condemns British government on human rights

மனித உரிமைகள் சம்பந்தமாக பிரிட்டிஷ் அரசாங்கம் மீது ஐரோப்பிய கவுன்சில் கண்டனம்

By Robert Stevens
1 August 2005

Back to screen version

அண்மையில் ஐரோப்பிய கவுன்சில் அலுவலகமானது, பிரிட்டன் பிரதமர் டோனி பிளேயரின் அரசாங்கத்தின் மோசமாகிக் கொண்டுவரும் மனித உரிமைகள் மீறல்கள்பற்றி விமர்சிக்கும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது. 46 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கவுன்சில், ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தப்படி உறுப்பு நாடுகள் செயல்படுகின்றனவா என்பது குறித்து அறிக்கைகளை தந்து வருவது வாடிக்கையாகும். இந்தக் கவுன்சில், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட பழைய மற்றும் தனி அமைப்பாக இருக்கிறது.

ஜூனில், ஐரோப்பிய கவுன்சில் மனித உரிமைகள் கமிஷனர் அல்வரோ ஜில் ரோபில்ஸ் (Alvaro Gil-Robles) பிரிட்டனுக்கு 2004 நவம்பர் 4 முதல் 12 வரை தனது விஜயம் பற்றிய அறிக்கையை அளித்தார். அத்தோடு, சித்திரவதையை தடுப்பதற்கான (CPT) ஐரோப்பிய சபை குழு இரண்டாவது அறிக்கையை அதே மாதம் வெளியிட்டது.

பிரிட்டனிலுள்ள பெல்மார்ஷ் மற்றும் உட்ஹில் சிறைச்சாலைகள் மற்றும் பிராட்மூர் உயர் பாதுகாப்பு மருத்துவமனை ஆகியவற்றில் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்ட 12 பேர் காவலில் வைக்கப்பட்டிருந்ததை பிப்ரவரி 2002 க்கும் மார்ச் 2004 க்கும் இடைப்பட்ட காலத்தில் CPT விஜயம் செய்து பார்வையிட்டது. அந்தக் கைதிகள் 2001 ல் இயற்றப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான ஒடுக்குமுறை சட்டத்தின்கீழ், விசாரணை எதுவுமில்லாமல் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். சில கைதிகள் நடத்தப்படும் விதம் "மனித நேயத்திற்கு மாறாக மற்றும் இழிவுபடுத்தும் நடவடிக்கையாக கருதும் வகையில் அமைந்திருப்பதாக" CPT அறிக்கை தெரிவிக்கிறது.

அரசாங்கம் ஆரம்பத்தில் 2004 ஜூலையில் அந்த அறிக்கையை பெற்ற போதிலும், ஏறத்தாழ ஒரு ஆண்டுவரை அது வெளியிடப்படுவதைத் தடுத்து நிறுத்தியது. அதே நேரத்தில் கைதிகள் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தால் கைது செய்யப்பட்டபோது, தாங்கள் கைது செய்யப்பட்டது சட்டப்படி சரியா என்று அவர்கள் ஆட்சேபித்தனர்.

ஜில்-ரோபில்ஸ் அறிக்கை

அந்த இரண்டு அறிக்கைகளில் மனித உரிமை கமிஷனர் ஜில்-ரோபில்சின் அறிக்கையானது, மிகவும் அதிகமான விவரங்களை அடக்கியுள்ளது. அது பிரிட்டனின் மனித உரிமைகள் தொடர்பாக அவரது கவலைகளை பல துறைகளில் விரிவாக விவரிக்கிறது.

அவர் கூறுகையில், தான் ''அடிக்கடி பிரிட்டனில் மனித உரிமைகள் பாதுகாப்பை கொண்டு வரவேண்டிய அவசியம் குறித்த அழைப்புக்கள் மற்றும் அவை சமுதாயத்தில் கேடு பயக்கும் வகையில் தனிமனிதர்களுக்கு சாதகமாக வெகுதூரம் மாறியிருப்பதாக'' குறிப்பிட்டார். ''குற்றவியல் நீதி, தஞ்சம் கோருவது மற்றும் பயங்கரவாதத் தடுப்பு ஆகியவை அத்தகைய வாய்வீச்சிற்கு இலக்குகளாக அமைந்திருந்தன'' என்று அவர் மேலும் அடையாளப்படுத்துகிறார். உண்மையிலேயே ''பல்வேறு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன, அவை அடிக்கடி மிக மட்டுப்படுத்தப்பட்ட வரை சென்றுவிடுகின்றன மற்றும் அப்போதைக்கப்போது மனித உரிமைகள் அனுமதிக்கிற அளவையும் மீறிவிடுகின்றன'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த வகையில், ஜில்-ரோபில்ஸ் 2005 பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கட்டுப்பாட்டு கட்டளைகள் பயன்படுத்தப்படுவது குறித்து விளக்குகிறார். இந்த கட்டளைகள் அரசாங்கம் பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கையில் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படும் தனிமனிதர்கள் மீது ஒரு பரவலான வீச்சில் கட்டுப்பாடுகளை விதிக்க வகை செய்கிறது. இவை வீட்டுக்காவலிலிருந்து எலக்ட்ரானிக் சாதன வேவுபார்ப்பதுவரை செல்கிறது. சில தனிமனிதர்களை சந்திப்பதற்கு தடைகளை விதிப்பதுடன் பயணத்திற்கு கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. மற்றும் தொலைபேசிகள், இணையத் தளத்தை பயன்படுத்துவதையும் தடுக்கிறது.

ஒரு கட்டுப்பாட்டு கட்டளையை அரசுத்துறை செயலாளர்தான் பிறப்பிக்க முடியும். ஆனால், அதனை ஒரு நீதிமன்றத்திற்கு ஒப்படைக்கவேண்டும். அது, அந்தக் கட்டளை நியாயமாக மேற்கொள்ளப்பட்டதா என்பதை முடிவு செய்யும். அரசுத்துறை செயலாளரின் மதிப்பீட்டிலிருந்து நீதிமன்றம் கருத்து வேறுபாடு கொள்ளுமானால், அந்தக் கட்டளையை ஏற்றுக்கொள்ள வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்.

கமிஷனர் தனது அறிக்கையின் ஒரு பகுதியில் யாராவது ஒருவர் பயங்கரவாதம் தொடர்புடைய நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்பதை முடிவு செய்வதற்கு சித்திரவதை மூலம் பெறப்பட்ட சாட்சியத்தை நம்பியிருக்கும் நடைமுறையை விவரித்திருக்கிறார். பிரிட்டன் நீதிமன்றம் 2004 ல் வழங்கிய ஒரு தீர்ப்பில், பிரிட்டனின் ஏஜென்ட்டுகள் அல்லது அவர்களது ஒத்துழைப்போடு பெறப்படாத அத்தகைய சாட்சியத்தை மேல் முறையீட்டில் அனுமதித்தது. இது பற்றி ஜில் ரோபில்ஸ் கூறியிருப்பதாவது: ''இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில் சங்கடமிருக்கிறது. [ஐரோப்பிய ஒன்றிய மனித உரிமைகள் நீதிமன்றம்] ECHR பிரிவு 3 ல் சித்திரவதைக்கு முழுமையான தன்மையுடன் தடைவிதித்திருக்கிறது. யார் செய்தாலும் சித்திரவதை, சித்திரவதைதான். நீதிமன்ற விசாரணைகள், நீதிமன்ற விசாரணைகள்தான், அவற்றின் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், முந்தையது பின்னே கூறப்பட்டிருப்பதற்காக எப்போதுமே அனுமதிக்க முடியாது.

புலம்பெயர்தல், தஞ்சம் கோருதல் மற்றும் சமூக-எதிர்ப்பு நடவடிக்கைக்கான கட்டளைகள்

பிளேயர் அரசாங்கத்தின் சட்டம் ஓழுங்கு நடவடிக்கை செயற்திட்டத்தின் முக்கிய திட்டம் தொடர்பாக அறிக்கையில் சில கடுமையான விமர்சனங்கள் கூறப்பட்டிருக்கிறது. புலம்பெயர்ந்தோர், அகதிகளாக தஞ்சம் புகுந்தோர், மக்களில் பரம ஏழைகளாக மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவினர்களாக உள்ள சில பிரிவினருக்கு எதிராக அதன் தாக்குதலை குறிப்பிட்டுள்ளது.

தஞ்சம் கோருவோர் தொடர்பாக, அந்த அறிக்கை பரவலாக பிரிட்டனில் காவலில் வைக்கப்படுவது தொடர்பாக கவலை தெரிவித்திருக்கிறது. 2005 இறுதிவாக்கில் நாடு கடத்தப்படுவதற்குரிய நடவடிக்கைகளுக்கு இலக்கான 9 காவல் முகாம்களில் 2,750 பேர் இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது. அவற்றில் இரண்டு முகாம்களில் அவசர நீதிமன்ற விசாரணைகள் மூலம் தஞ்சம் கோருவோரது மனுக்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஜில்-ரோல்பில்ஸ் தமது அறிக்கையை வெளியிட்ட நேரத்தில் 2004 டிசம்பர் 25 வரை கிடைத்த தகவல்களின்படி தஞ்சம் கோரிய 1,515 பேர் அன்றைய தினம் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இறுதியாக அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன் தஞ்சம் கேட்டோரில் பலர் நீண்ட காலம் சிறையில் வைக்கப்பட்டிருந்ததாக தமது கவலையையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்கொட்லாந்திலுள்ள டுங்காவல் (Dungavel) முகாமில் 2004 டிசம்பர் 27 நிலவரப்படி, தஞ்சம் கேட்டோரில் 1514 பேர் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 55 பேர் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரையும், 90 பேர் ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலும் மேலும் 55 பேர் ஓராண்டிற்கு மேலாகவும் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தஞ்சம் கேட்டோரில் பலருக்கு சட்டரீதியான பிரதிநிதிகள் ஆஜராகவில்லை என்று அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது--- அந்த நிலவரத்தை கடுமையாக்குகின்ற வகையில், அரசாங்கத்தின் புதிய விதிகள் இலவச சட்ட உதவியை ஒரு வழக்கிற்கு ஐந்து மணி நேரம் என்று கட்டுப்படுத்தியுள்ளது. இது "சுதந்திரத்தை பறிப்பது தொடர்பான நடவடிக்கையில் குறிப்பாக கவலை தருவதாகும்".

சமூக-எதிர்ப்பு நடவடிக்கை கட்டளைகள் தொடர்பாக (ASBO's) அறிக்கை குறிப்பிட்டுள்ளது. ஒரு தனிமனிதர் சில நடவடிக்கைகளிலிருந்து தடுக்கப்படுவதற்கான சிவில் கட்டளைகள் 1999-2000 தில் 200 ஆக இருந்து, 2004 முதல் 9 மாதங்களில் 2600 ஆக உயர்ந்துவிட்டது. இவற்றில் பல 10 வயது இளம் குழந்தைகளுக்கு எதிராக இருந்துள்ளது.

"அத்தகைய கட்டளைகளை எளிதாக பெறுகின்ற முறை, தடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விரிவான வீச்சு, அந்தக் கட்டளைகள் கொண்டு வருவதை சுற்றியுள்ள விளம்பரம் மற்றும் அந்தக் கட்டளைகளை மீறுவதால் ஏற்படுகின்ற கடுமையான விளைவுகள் ஆகியவை கவலைகளுக்கு இடம் தருகின்றன. ASBO ஒரு சிவில் கட்டளை, ஆனால், பிரபுக்கள் சபையில், சமூக விரோத நடவடிக்கைகளை முடிவு செய்வதற்கான அடிப்படை ஒரு கிரிமினல் குற்ற வழக்கில் முடிவு செய்யப்படும். அதாவது நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்று உறுதிபடுத்தியிருக்கிறது'' என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.

ASBO வினால் பொதுவாக விதிக்கப்படுகின்ற தண்டனையானது, செய்யப்பட்டதாக கருதப்படும் குற்றத்திற்கு ஏற்றதாக இல்லாமல் அளவிற்கு அதிகமாக உள்ளது என்று கமிஷனர் தனது மறுப்பை தெரிவித்து விமர்சித்துள்ளார். அந்த தண்டனை ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையாக இருக்கும். அந்தத் தண்டனை "ஒரு கிரிமினல் குற்றமாக அங்கீகரிக்கப்படாத ஒரு குற்றத்திற்காக மிகக்கடுமையான தண்டனை விதிக்கப்படுகிறது" என்று அவர் வர்ணித்துள்ளார்.

சித்திரவதை தடுப்புக்குழுவின் அறிக்கை

இதற்கு முன்னர் குறிப்பிட்டுள்ளபடி, CPT யின் அறிக்கை சந்தேகிக்கப்பட்ட பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு நடத்தப்படுவது பற்றி கவனம் செலுத்துகிறது. குறிப்பாக, அவர்களது உடல் நலம் மற்றும் மன நலத்தில் கவனம் செலுத்துகிறது.

இத்தகைய கைதிகளில் பலர் காவலில் இருப்பதால், ஒரு மோசமான மனநிலையில், மோசமான உடல் நிலையில் அவர்கள் இருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. அவர்களில் சிலர் இருந்த நிலை ''மனித நேயமற்ற மற்றும் அதனை இழிவுபடுத்தும் நடவடிக்கையாக கருதப்படக் கூடியதாகும்" என்று அறிக்கை கூறுகிறது.

மேலும், பெல்மார்ஷ் காவல் முகாமில் வைக்கப்பட்டுள்ள பலருக்கு அவசர மனநோய் சிகிச்சை தேவைப்படுகிறது. அத்தகைய உதவியும் ஆதரவும் தருகின்ற பிற முகாம்களுக்கு அப்புறப்படுத்த வேண்டியது அவசியம் என்று CPT அறிக்கை குறிப்பிட்டிருக்கின்றது.

"P" என்று குறிப்பிடப்படும் ஒரு கைதியை CPT கவனித்தது. இரண்டு கைகளையும் இழந்து உடல் ஊனமுற்ற அந்தக் கைதி, மற்றொருவர் உதவியின்றி மல ஜலம் கழிக்க முடியாது. என்றாலும், எப்போதுமே அவருக்கு தேவையான உதவி கிடைக்கவில்லை. மேலும், அவர் காவலில் வைக்கப்பட்டிருப்பதால் அவருடைய உள்ளம் வெகுவாக பாதிக்கப்பட்டு கடுமையான மனச் சோர்வும் அதிர்ச்சியும் குழப்பமும் அடைந்திருக்கிறார்.

CPT இந்த கைதியின் நிலை மிகவும் கடுமையானது என்று வர்ணித்துள்ளதுடன், "அவருக்கு இனி எந்தவிதமான தாமதமும் இல்லாமல் உளவியல் சிகிச்சை கொடுக்க வேண்டும். அவரது நோயின் கடுமையை குறைப்பதற்கு உயிர் காக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும்'' என்று அது குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் சேர்த்து மற்றொரு கைதி பற்றியும் பிரிட்டிஷ் அரசிற்கு தகவல் தரப்பட்டு உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், இரண்டு மாதங்களுக்குள் அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கைதிகளின் தேவைகளை சமாளிப்பதற்கு போதுமான வசதிகள் பெல்மார்ஷ் முகாமில் இருப்பதாக அரசாங்கம் பதில் சொல்லியிருப்பதை CPT விமர்சித்தது.

பெல்மார்ஷில் உள்ள நிர்வாகத்தில் ''மிகக் கடுமையான கட்டுத்திட்டங்கள்'' பின்பற்றப்படுவதுடன் ''மிகச் சிக்கனமான, அதே நேரத்தில் மிகத் தீவிரமான இரைச்சலுடன் கூடிய சூழ்நிலை'' நிலவுவதாகவும், கைதிகள் சுகாதார மையத்தில் இப்போது இருக்கும் பல ATCSA கைதிகளின் உடல் நலத்தை காக்கின்ற அளவிற்கு அந்த முகாமில் சிறப்பு வசதிகள் எதுவுமில்லை என்றும், சந்தேகத்திற்குரிய நிலையில் காப்பகத்திலுள்ள மட்டம் உள்ளது என்றும் CPT கூறுகிறது.

இந்த சகித்து கொள்ள முடியாத நிலவரத்தை அரசாங்கம் சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கை மீண்டும் கேட்டுக்கொண்டது.

அந்தக் குழு பெல்மார்ஷ் சிறையில், சிறை ஊழியர்கள் கைதிகளை முறைகேடாக நடத்துவதற்கும் சான்றுகளை தந்திருக்கிறது. இவற்றில் "அச்சுறுத்தல்கள், முரட்டு சொற்களில் முறைகேடாக திட்டுவது, மற்றும் கேலி பேசுவதும்" அடங்கும். அத்தகைய நடவடிக்கைகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அது பரிந்துரை செய்திருக்கிறது.

CPT அறிக்கையின் முடிவுகளை வெளியிடுவது என்பதற்கு இறுதியாக சம்மதித்த நேரத்தில் அதன் முடிவுகளை அரசாங்கம் தள்ளுபடி செய்தது. காவலில் உள்ளவர்கள் ''மனித நேயமிக்க முறையிலும் கண்ணியமான வகையிலும்'' நடத்தப்படுவதாகவும், காவலில் இருக்கும் காலம் முழுவதிலும் தகுந்த மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகள் அவர்களுக்கு தரப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டது.

ஆனால், சர்வதேச மன்னிப்பு சபையின் பிரிட்டிஷ் டைரக்டர் கட்டே ஆலன் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். "ஒரு சர்வதேச முன்னணி மனித உரிமைகள் அமைப்பு மீண்டும் ஒரு முறை பிரிட்டனில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கண்டித்திருக்கிறது. எத்தனை முறை அரசாங்கத்திடம் அவர்களது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை முறைகள் அப்பட்டமான தவறு என்று கூறுவது?" என்று அவர் கேட்டார்.

பல கைதிகளுக்கு வாதாடிய வக்கீல் கரேத் பியர்சி என்பவர், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்தார். "பிரபுக்கள் சபை தீர்ப்பளித்த நேரத்திலிருந்து எல்லாக் கைதிகளையும் அவர்கள் காவலில் வைத்தனர். அப்படி காவலில் வைப்பது மனிதநேயமற்ற இழிவுபடுத்தும் செயல் என்று கண்டிக்கப்படும் என தெரிந்தே அவர்கள் செய்தார்கள். கடைசிவரை, மார்ச் மாதம் வரை இதை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த சட்டம் பற்றி விவாதம் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், அவர்களுக்கு தகவல் தருவதற்கு மறுக்கும் வகையில் அவர்கள் செயல்பட்டார்கள்" என்று அவர் கூறினார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved