World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French government seizes on London bombings to escalate attack on civil liberties

சிவில் உரிமைகள் மீது தாக்குதலை அதிகரிப்பதற்கு லண்டன் குண்டுவெடிப்புக்களை பிரான்சு அரசாங்கம் பிடித்துக்கொண்டது

By Antoine Lerougetel
18 August 2005

Back to screen version

லண்டனில் ஜூலை 7-ல் நடைபெற்ற குண்டு வெடிப்புக்களாலும், ஜூலை 21-ல் நடைபெற்ற தாக்குதல் முயற்சிகள் தோல்வியடைந்ததாலும் ஏற்பட்ட குழப்பத்தையும், கடுஞ்சினத்தையும் பிரெஞ்சு உள்துறை அமைச்சர் நிக்கோலா சார்கோசி தனது சட்டம் ஒழுங்கு செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்கு சாதகமாக எடுத்துக்கொண்டார்.

அரசாங்கத்தின் புதிய பயங்கரவாத -எதிர்ப்பு மசோதாவானது 2005 கடைசிவாக்கிலோ அல்லது 2006 ஆரம்பத்திலோ இருந்து புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு வசதியாக கோடைவிடுமுறைக்கு பின்னர் உடனடியாக அமைச்சரவைக்கு தாக்கல் செய்யப்படும். அதில் பிரிட்டிஷ் முறை பாணியிலான முன்மாதிரி கொண்ட பல்வேறு வீடியோ கண்காணிப்பு உடைய கருவியும் உள்ளடங்கும்.

தற்போது, பிரான்சில் 20,000 கண்காணிப்பு கமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அதே நேரத்தில் பிரிட்டனில் ஏறத்தாழ 4 மில்லியன் உள்ளன. லண்டனில் உள்ள அளவிற்கு கண்காணிப்பை கொண்டு வரவேண்டும் என்பது சார்கோசியின் நோக்கமாகும், லண்டனை சேர்ந்தவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 300 தடவை தினசரி டசின் கணக்கான சர்க்கியூட்டுகளால் படம்பிடிக்கப்படுகிறார்கள் என்று அங்கு மதிப்பிடப்படுகிறது. இந்த கமராக்களால் படம் பிடிக்கின்ற தகவல்களை சேமித்து வைக்கும் சட்டபூர்வமான காலக்கெடுவையும் அவர் நீடிக்க விரும்புகிறார். தற்போது, ஒரு மாதத்திற்கு மேல் அந்தத் தகவல்களை வைத்திருக்க இயலாது.

பாரிஸ் போலீஸ் வீடியோ கண்காணிப்பு முறையில் பதவி வகிக்கும் தலைமை கமிஷனர் Pierre-Edouard Colliex, ஆகஸ்ட் 5-ல் லு மொண்ட் பத்திரிகையில் வலியுறுத்திக் கூறியதாவது: "ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை, ஒரு விபத்தை, ஒரு கண்டன பேரணியை தொடர்ந்து பின்பற்றுவதற்கு, அல்லது முக்கியமான நபர் ஒரு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளும்போது கண்காணிப்பதற்கு அது மிகவும் பயனுள்ளது".

கடும் வேலையின்மையிலிருந்து எழக்கூடிய சமூக வெடிப்புக்களை கட்டுப்படுத்துவதற்கான தேவையை பிரெஞ்சு அரசாங்கம் மிகப்பெருமளவில் தனது கவனத்தில் வைத்துக்கொண்டிருக்கிறது என்பதும், அதற்காக மேற்பூச்சு முன்மொழிவுகளை மட்டுமே முன்வைத்திருக்கிறது மற்றும் நலன்புரி அரசுகளை இரத்து செய்து வருகிறது என்பது தெளிவாகிறது.

லண்டன் குண்டு வெடிப்புகளுக்கு இரண்டு நாட்களுக்கு பின்னர், குறிப்பாக பிரிட்டனுடன் தனது எல்லைக்கட்டுப்பாடுகளை பிரான்ஸ் மீளமைத்தது. மிகப்பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இருந்து வந்த எல்லைச் சோதனை சாவடிகளை ஒழித்துக்கட்டிய, 1985 மற்றும் 1990 செங்கென் (Schengen) உடன்படிக்கையின் பாதுகாப்பு விதிக்கு அது செயலூக்கம் கொடுத்திருக்கிறது.

2004 மார்ச்சில் நடைபெற்ற மாட்ரிட் குண்டுவெடிப்புகளுக்கு பின்னர், ஜூலை 13-ல் பிரஸ்ஸல்சில் கூடிய கண்காணித்தல் மற்றும் பாதுகாப்புக்குப் பொறுப்பான ஐரோப்பிய அமைச்சர்கள், "ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத-எதிர்ப்பு திட்டத்தை அமுல்படுத்துவதை தீவிரப்படுத்தவேண்டும்" என்று முடிவு செய்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருகைதந்த ஸ்பெயினை சேர்ந்த ஜோஸ் அன்டனியோ அலோன்சோ "ஐரோப்பிய ஒன்றியம் நெருக்கடியில் சென்று கொண்டிருந்தாலும், ஐரோப்பிய பாதுகாப்பு வட்டாரத்தை கட்டாயம் கட்டியெழுப்பப்பட வேண்டும்'' என்று கூறினார்.

சார்கோசியும், பிரெஞ்சு நீதித்துறை அமைச்சர் பஸ்கால் கிளெமென்டும், தொலைபேசி மற்றும் எலக்டிரோனிக் தகவல் குறிப்புகள் போலீசாருக்கு கிடைப்பதில் ஒத்திசைவை உருவாக்கும் ஐரோப்பா-தழுவிய சட்டத்திற்காக குறிப்பாக ஆதரவு குரல் கொடுத்தனர். சென்ற ஆண்டு பிரான்சால் தாக்கல் செய்யப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, அயர்லாந்து, ஸ்வீடன் மற்றும் பிரிட்டன் ஒரு மிகப்பெரும் வகையை சார்ந்த தகவல் தொடர்புகள் சம்மந்தப்படும்: அவற்றில் இணைப்பு மற்றும் செல்லிடத் (மொபைல்) தொலைபேசிகள், வாசக வடிவில் அனுப்புதல் (Texting) மின்னஞ்சல்கள், மற்றும் இதர கணினி தகவல் தொடர்புகள் அடங்கும். இயக்குகின்றவர்களுக்கு ஆகின்ற செலவினங்கள் மற்றும் தனிமனிதர்களின் இரகசியத்தின் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் பற்றி பிரான்சில் தயக்கங்கள் இருப்பினும், "இதற்கு முழுமையான முக்கியத்துவம் தரப்பட வேண்டும்" என்று சார்கோசி வலியுறுத்திக் கூறினார்.

புலம்பெயர்ந்தோரையும், அரசியல் தஞ்சம்புக விரும்புவோரையும் அடக்கி ஒடுக்குவதில் ஐரோப்பிய ஒன்றிய போலீஸ் படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பது G-5, (ஜேர்மனி, ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, பிரிட்டன்) பிரான்சிலுள்ள இவியோனில் ஜூலை 4, 5 நாட்களில் நடைபெற்ற உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் விளக்கிக்காட்டப்பட்டது. அவர்கள் இணைந்து செயல்படுத்துவதற்கு திட்டங்களை வகுத்தனர் மற்றும் வெளிநாட்டவர்களை வெளியேற்றுவதற்கு கூட்டாக தனியுரிமைவாய்ந்த விமானங்களை ஏற்பாடு செய்ய முடிவு செய்தனர்.

லண்டன் மற்றும் சாம்-எல்-ஷேக் குண்டுவெடிப்புகளால் உருவாக்கப்பட்ட வாய்ப்பை சார்கோசியும் பிரதமர் டொமினிக் டு வில்ப்பன் அரசாங்கமும் பயன்படுத்திக்கொண்டு போலீஸ் கண்காணிப்பை விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் பிரான்சின் ஐந்து மில்லியன் முஸ்லீம்களுக்கும் மற்றும் பொதுவாக புலம்பெயர்ந்தோருக்கும் எதிராக ஒடுக்குமுறைகளை பயன்படுத்தி வருகின்றன. பொதுப்பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் தலையில் முக்காடிட்டுக் கொள்ளவதற்கு எதிரான சட்டத்தை சுற்றி 2004-ல் உருவான பரபரப்பை தொடர்ந்து, எந்தவிதமான சட்டபூர்வ நிகழ்வும் இல்லாமல், போலீசாரின் அறிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பிரான்சிலிருந்து இமாம்களை வெளியேற்றுவது அலைபோல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒரு வழக்கில், Vénissieux என்ற இடத்தை சேர்ந்த ஒரு இமாம் அப்துல்காதர் பவுசியான், தனது மனைவியை அடிப்பதற்கு கணவனுக்கு உரிமை உண்டு என்ற பிற்போக்கு கருத்துக்களை கூறியதாக குற்றம் சாட்டப்பட்டது. ஒரு உள்ளூர் பத்திரிகையான Lyon Mag அந்த Bouziane-யை பேட்டி கண்டது, அவர் நீதிமன்றத்தில் அத்தகைய கருத்துக்களை "பிரச்சாரம் செய்தார்'' அல்லது ''தற்காத்து'' நின்றார்.

ஜூலை 19-ல் லிபரேஷன் தினசரியில் அளித்த ஒரு பேட்டியில் சார்கோசி "இளம் தற்கொலை குண்டு வெடிப்பாளர்களை தேர்ந்தெடுப்போர் மீது நாம் மிகக்கடுமையான நடவடிக்க்ைகளை எடுத்தாக வேண்டும்... அவர்களிடம் எந்தவிதமான சகிப்புத்தன்மையும் காட்டக்கூடாது." என்று அறிவித்தார். ''பயங்கரவாத தீவிரவாதத்தை'' ஆதரிப்போரை ''முன்கூட்டியே கண்டுபிடிக்க வேண்டும்'' என்று ஒப்பந்தம் செய்துகொள்ள உறுதியளித்தார். ''சாத்தியமான வரையில் பரந்தரீதியாக, குழுக்கள், தனிமனிதர்கள் மற்றும் அவர்களது இடங்கள் தொடர்பாக எவ்வளவு அதிகமான புலனாய்வு தகவல்களை திரட்ட முடியுமோ, அவ்வளவு அதிகமான தகவல்களை திரட்ட வேண்டியது அவசியம்'' என்று மேலும் கூறினார்.

அவரது அறிக்கையில் மிக ஆபத்தானது என்னவென்றால்: "வன்முறை அல்லது அடிப்படைவாதக் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற இமாம்களுக்கு பிரெஞ்சு குடியுரிமையை திரும்பப்பெற்றுக்கொள்கின்ற நடைமுறையை நான் செயலாற்றப்போகிறேன், எமது மதிப்புக்களை மதிக்காதவர்களையும் பிரெஞ்சுக்காரர் அல்லாதவர்களையும் திட்டமிட்டு நாடுகடத்தப்போகிறேன்" இந்த எழுத்தாளருக்கு தெரிந்த அளவில், குடியுரிமையை திரும்பப்பெற்றுக்கொள்கின்ற அரசாங்க கொள்கை இரண்டாம் உலகப்போரின்போது, யூதர்களுக்கு எதிராகவும், நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்த மார்ஷல் பெத்தன் அரசாங்கத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பிரான்சினால் கடைசியாக பயன்படுத்தப்பட்டது.

லிபரேஷன் ஜூலை 30-ல் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, Renseignements généraux (RG என்கிற அரசியல் போலீஸ்) "லியோன், மார்சை மற்றும் பாரீஸ் பகுதிகளில் ஏற்கனவே, 10 இமாம்களை குறிவைத்துவிட்டது மற்றும் உரிமைகள் மறுக்கப்பட்டு சமூக தோல்வியில்'' சிக்கித் தவிக்கும் இளைஞர்களை சேர்த்துவைக்கின்ற ''கருத்தியல் தலைவர்கள்'' 10 பேரையும் மற்றும் சலாபிவாதத்தில் தாக்கமுள்ள ஏறத்தாழ 40 மதபோதகர்களையும் கண்டுபிடித்திருக்கிறது. அத்தோடு " 'முதல்தர அடிப்படை வாதத்திலிருந்து,' மிகவும் வன்முறையான தத்துவங்கள்'' வரை வெளிப்படுத்தப்பட்ட கருத்துகளாகும்.

லியோனிலுள்ள பெரிய மசூதியின் பொறுப்பாளரான கமால் காப்டனி சுட்டிக்காட்டியது என்னவென்றால், "உலகில் ஏதாவது ஒரு இடத்தில் நிலவுகின்ற நியாயமற்றதொரு சூழ்நிலையை ஒரு கத்தோலிக்க பாதிரியார் கண்டிக்கிறார் என்றால் அவர் தனது பணியை செய்கிறார். ஆனால் பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேலியர்களுக்குமிடையில் தடுப்புச் சுவர் கட்டப்படுவதை நியாயமற்றது என்று ஒரு இமாம் கூற முடியாது, ஏனென்றால் அது வன்முறையை தூண்டுவதற்கு அழைப்பு விடுப்பதாக எடுத்துக்கொள்ளப்படும்.'' என்று குறிப்பிட்டார்.

போலீசார் முஸ்லீம்களது வீடுகளில் நுழைவது மற்றும் சோதனையிடுவது ''பயங்கரவாத நடவடிக்கைகளை புலனாய்வு'' செய்கிறோம் என்கிற பெயரால் அப்பாவி குடும்பங்களை இழிவுக்கு ஆளாக்குவதையும் கொடூரமாக நடத்துவதையும் அதிகாரிகள் அவதூறு மொழியில் அர்ச்சனை செய்வதையும் செய்திப் பத்திரிகைகள் வெளியிட்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில், சார்கோசி ஜூலையில் பிரான்சில் புலம்பெயர்ந்தோரை நெறிமுறைப்படுத்துவதற்கு பல்வேறு முன்மொழிவுகளை தாக்கல் செய்திருக்கிறார். "சட்டவிரோத" புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் வீதத்தில் 50 சதவீதமாக -- 2005ல் 23,000 உயர்த்துமாறு அவரது புலம்பெயர்ந்தோர் பணித்துறையை கோரினார். வேறுவகைகளில் நிரூபிக்கப்படுதல் அல்லாமல், சட்டத்தடைகளை தவிர்ப்பதற்காக திருமணங்கள் வசதிக்காக செய்யப்படுகின்றன என்று கருதப்படும் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து பிரான்சில் வாழ விரும்புவோரது மனுக்களும் ஆவணங்களும் மிகக்கவனமாக ஆராயப்படும், மற்றும் நடைமுறைகள் இறுக்கமாக்கப்படும். ''உயர் ஆபத்துமிக்க'' நாடுகளிலிருந்து வருகின்ற சுற்றுலாப்பயணிகள் மீதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சார்கோசி விரும்புகிறார்.

"தேர்ந்தெடுக்கப்படுகின்ற புலம்பெயர்தல் திணிக்கப்படுகின்ற புலம்பெயர்தல் அல்ல" என்ற முழக்கத்தை அவர் பின்பற்றி வருகிறார், இப்போதிலிருந்து, "நாம் விரும்புகின்ற மக்களை ஏற்றுக்கொள்வதுதான் பிரச்சனை" என்று கூறினார். இனம் அல்லது பிறந்தநாடு என்ற அடிப்படையில் தான் ஒதுக்கீடு எதையும் விதிக்கவில்லை என்று அவர் கூறினார், பிரான்சின் தொழிலதிபர்களது நலன்களுக்கு சேவை செய்கின்ற ஒரு முறையை அவர் முன்மொழிந்தார். பல்வேறு வகைப்பட்ட தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கும் பங்கு ஒதுக்கீடு நிர்ணயிக்கப்படும், அவர்கள் பிரெஞ்சு தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள இயலாத ஊதியங்களில் மற்றும் சூழ்நிலைகளின் கீழ் பணியாற்றி செய்துமுடிக்க விருப்பம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் "எந்தவகையிலும் நமது சட்டங்களின் அடிப்படை கோட்பாடுகளை மீறுவதாக இருக்காது" என்று ஜூலை 27-ல் வில்ப்பன் அறிவித்தார். "கொல்வதற்கு-சுடுவது" என்ற பிரிட்டிஷ் கொள்கையிலிருந்து பிரதமர் தன்னையே தன்னை விலக்கிக்கொண்டார், "நியாயமான சட்டபூர்வமான தற்காப்பு நிலமை தவிர்ந்த வேறு எந்த வகையிலும் பாதுகாப்பு படைகள் சுடுவதற்கு எந்த அதிகாரமும் தரப்படமாட்டாது" என்று கோடிட்டுக்காட்டினார்.

பிரான்சில், ஒவ்வொரு போலீஸ்காரரும் ஒரு துப்பாக்கி வைத்திருக்கின்றார், மற்றும் அதை பயன்படுத்துவதில் அவர்கள் மனம் சஞ்சலப்படுவதில்லை. அன்பு கொண்ட ஆங்கிலேய போலீஸ்போல அத்தகைய கட்டுக்கதை இல்லை, பயங்கரவாதிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்றுவது யார்? என்று கேட்பதோடு இணைந்ததாக, போலீசாரிடமிருந்து எங்களை காப்பது யார்? என்ற கேள்வி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிரெஞ்சு வீதிகளில் போலீசாரால் கொல்லப்பட்ட பெரும்பாலும் புலம் பெயர்ந்த இளைஞர்கள் பற்றிய புள்ளிவிவரங்களின் கணக்கைக் கொண்டிருக்கின்றன.

பிரான்சிலுள்ள சிவில் உரிமைகளுக்கான குழுக்கள் அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக மேற்கொண்டுள்ள புதுவகை நடவடிக்கைகள் குறித்து தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளன. ஆகஸ்ட் 5-ல் லு மொண்ட் இல் மனித உரிமைக் கழகத்தை (LDH) சேர்ந்த அலன் வேபர் புதிய திட்டம் குறித்து வருந்தினார்: "லண்டன் குண்டுவெடிப்புக்களால் எழுப்பப்பட்டுள்ள நியாயமான உணர்வுகளை அவர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு குடிமக்களை கண்காணிப்பதற்கு ஊடுருவி விசாரிக்கும் நடைமுறையை வலுப்படுத்தியிருக்கிறார்கள்..... தனிமனிதர்களது உரிமைகளை அவமதிப்பதற்கு பரபரப்பூட்டும் சம்பவங்கள் அனைத்து அரசியல் சக்திகளுக்கும் தேவையாகும்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved