World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Ex-Chancellor Schröder launches corporate career

ஜேர்மனி: முன்னாள் அதிபர் ஷ்ரோடர் பெருநிறுவனத்தில் பணியாற்ற தொடங்குகிறார்

By Peter Schwarz
15 December 2005

Back to screen version

முன்னாள் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் பெருநிறுவன உயர்மட்ட பணியில் மிகவிரைவில் ஈடுபட்டுள்ளமை, அவருடைய முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கக்கூடியதாக இருக்கலாம்.

பதவியில் இருந்து விலகி இரண்டு நாட்களுக்குள்ளேயே, செய்தி ஊடகம் ஷ்ரோடர் ஸ்விஸ் நாட்டு பதிப்பு நிறுவனம் Ringier Verlag இல் சேரவிருப்பதாக அறிவித்தது. இந்த Ringier ஒன்றும் ஒரு சாதாரண நிறுவனம் அல்ல; ஜேர்மனியின் Springer Verlag உடன் ஒப்பிடத்தக்க ஸ்விட்ஸர்லாந்தின் மிகப் பெரிய பதிப்பகம். ஸ்விட்சர்லாந்தின் மிகப் பெரிய பரபரப்பு ஏடான Der Blick ஐ இது வெளியிடுகிறது; இதைத்தவிர, ஏனைய புகழ்வாய்ந்த இதழ்களை வெளியிடும் இந்நிறுவனம் சர்வதேச அளவில் தன்னுடைய பதிப்புக்களை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனம் தற்பொழுது 100 இதழ்களை 10 நாடுகளில் வெளியிடுவதுடன், தொலைக்காட்சி பிரிவிலும் ஊக்கமாக உள்ளது.

இதன் பின்னர், டிசம்பர் 9ம் தேதி Northern European Gas Pipeline Company (NEGPC) நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் குழுவின் தலைவராகவும் ஷ்ரோடர் பொறுப்பு ஏற்பார் என்று அறிக்கப்பட்டது. இப்பெரும் கூட்டு நிறுவனத்தில் ரஷ்ய அரசாங்க நிறுவனமான Gazprom 51 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது; ஜேர்மனிய எரிபொருள் நிறுவனங்களான Eon மற்றும் BASF ஒவ்வொன்றும் 24.5 சதவிகித பங்குகளை கொண்டுள்ளது; பால்டிக் கடல் குழாய் திட்டத்தை கட்டமைத்து, நடைமுறைக்கு கொண்டு வரும் பொறுப்பை இந்நிறுவனம் கொண்டுள்ளது. அத்திட்டத்தின்படி ரஷ்ய இயற்கை எரிவாயு உக்ரைன், போலந்து நாடுகளின் மூலம் இல்லாமல் நேரடியாக ஜேர்மனிக்கு கொண்டுவரப்படும். செய்தி ஊடகத் தகவல்களின்படி, ஷ்ரோடருக்கு நிறுவனம் ஆண்டு ஒன்றுக்கு ஒரு மில்லியன் யூரோக்கள் கொடுக்கும்; அவர் இக்கூற்றை "முட்டாள்த்தனமானது" என்று மறுத்துள்ளார்.

ஆனால் ஷ்ரோடரின் ஊதிய வருவாய் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், உயர்ந்த பொதுப் பதவியில் இருந்ததால் விளையும் தொடர்புகள், அறிவு ஆகியவற்றை பயன்படுத்தி தங்களுக்கு வருவாய் தேடிக்கொள்ளும் அரசியல்வாதிகள் பட்டியலில் இந்த சமூக ஜனநாயகவாதியும் சேர்ந்துள்ளர் என்பது மிகத் தெளிவு. அதிபராக இருந்தபோது Hartz தொழிலாளர் "சீர்திருத்தங்கள்", செயற்பட்டியல் 2010 ஆகியவற்றின் மூலம் பொதுநலச் செலவுகளை குறைப்பதற்கு பொறுப்பாக இருந்த இந்த சமூக ஜனநாயக கட்சித் தலைவர், தனது அதிபருக்கான ஊதியமான ஆண்டு ஒன்றுக்கு 180,000 யூரோக்களுக்கு பின்னர் மில்லியனுக்கும் கூடுதலாக ஊதியம் பெறும் உயரடுக்கு தட்டில் சேர்ந்து கொள்ளுகிறார்.

ஷ்ரோடர் பெரும் செல்வம் கொழிக்கும் சமூகத்தின் ஏற்றம் பெற்றுள்ளதற்கும், அவருடைய அரசாங்கம் (பெருநிறுவன வரிகளில் கணிசமான வெட்டுக்கள் பற்றிக் குறிப்பிடத் தேவையில்லை) சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் இடையிலான தொடர்பு எதையும் காணாதவர்கள் குருடர்களாகத்தான் இருப்பர்.

ஷ்ரோடருக்கு முன்பு பதவியில் இருந்த Helmut Kohl (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-CDU), அதிபர் பதவியை நீத்ததும், ஆண்டுதோறும் 300,000 யூரோக்கள் ஊதியத்தை ஏற்று செய்தி ஊடகப் பேரரசர் Leo Kirch இற்கு "ஆலோசகராக" விளங்குகிறார். அவருடைய அரசாங்கம் Leo Kirch இன் செய்தி ஊடகப் பேரரசிற்கு ஆதரவான சட்டங்களை இயற்றிய பின்னர் கோல் அதற்குரிய இனிப்புக்களைத்தான் பெற்றுக் கொண்டிருக்கிறார். கோல் திமிர்த்தனத்துடன் பெற்ற சலுகையைவிட ஷ்ரோடர் தன்னுடைய அரசாங்கத்தின் செயற்பாட்டிற்காக பெற்றுள்ள ஆதாயம் இன்னும் கூடுதலானதே ஆகும்.

ஷ்ரோடரின் நியமனம் பற்றி வெளியீட்டாளர் மைக்கேல் ரிங்கியர் விளக்குகையில், முன்னாள் அதிபர் அவருடன் கிழக்கு ஐரோப்பா, ஆசியா செல்லும்போதெல்லாம் தன்னுடன் கூடவருவார் எனறும் அவரால் "உறுதியாகப் புதிய வாய்ப்புக்கள் பெருகும்" என்றும் கூறினார். ஷ்ரோடருக்கு ஒன்றும் "வாரம் 40 மணி நேர ஒப்பந்தம்" கிடையாது; நிறுவனத்திற்காக வாரத்திற்கு ஓரிரு நாட்கள் வேலை செய்தால் போதுமானது.

வேறுவிதமாகக் கூறினால், ஒரு செல்வாக்கை திரட்டிப் பயன்படுத்துபவராக ஷ்ரோடர் செயலாற்றுவர்; அரசாங்கத்தின் தலைவர் என்று தான் பெற்ற அனுபவத்தை கிழக்கு ஐரோப்பா, ஆசிய சந்தைகளில் ரிங்கருக்கு ஆதாயம் தேடப் பயன்படுத்துவார்.

Ringier Verlag நிறுவனம் ஷ்ரோடருக்கு வேலை கொடுத்தது அதிக குறைகூறலை மக்களிடம் பெறவில்லை என்றாலும், இவருடைய சமீபத்திய குழாய்த்திட்ட பெருநிறுவன வேலை இகழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பெருவணிகத்திற்கும், பெரும்பதவிக்கும் இடையே உள்ள தகாத உறவு மிக வெளிப்படையாக உள்ள நிலையில் அது அதிகாரபூர்வ அரசியலையே குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் இணைந்து அதிபர் ஷ்ரோடர் இக்குழாய்த் திட்டத்திற்கு பெரிதும் முயற்சி எடுத்துள்ளார். அண்மைய ஜேர்மனிய கூட்டாட்சித் தேர்தல்களுக்கு சற்று முன்பு, இந்த ஆண்டு செப்டம்பர் 8 அன்றுதான் ஒப்பந்தம் கையெழுத்தாயிற்று. "முன்னாள் அதிபர் குறைந்து குறுகிய காலத்திற்காகவாவது தன்னுடைய அரசியல் பதவிக்கும் வணிகச் செயற்பாடுகளுக்கு இடையே சற்று இடைவெளி கொடுத்திருக்க வேண்டாமா? ஒரு தகுதிகாண் பருவம், ஒரு கெளரவ இடைவெளி என்பதுபோல்?" ஒன்று இருந்திருக்கவேண்டாமா?. மற்றவிதத்தில் குழாய்த் திட்டத்தை நல்லதிட்டம் என்று கருதும் Süddeutsche Zeitung பத்திரிகை முனகியுள்ளது.

சமூக ஜனநாயக கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளில் இருந்தும் இதேபோன்ற குறைகூறல்கள்தான் வந்துள்ளது; எல்லாவற்றிற்கும் மேலாக பொதுவாக அரசியல், வணிக நலன்களை இணைப்பதில் எந்தத் தயக்கமும் காட்டாத தாராளவாத ஜனநாயக கட்சி (FDP) கூட இவ்வாறு கூறியுள்ளது. தாராளவாத ஜனநாயக கட்சி உடைய தலைவரான Guido Westerwelle "ஒரு மாட்சிமை நிறைந்த நெறி" முன்னாள் அரசு அரசியல்வாதிகளுக்கு தேவை என்று கூறும் அளவிற்கு அவர் சென்றுள்ளார். பசுமைக் கட்சியின் தலைவரான Reinhard Butikofer, ஷ்ரோடரின் செயல்கள் அவரை அதிர்ச்சி தரும் வியப்பிற்கு உட்படுத்தியுள்ளதாக கூறினார். சமூக ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற பிரிவுத் துணைத் தலைவர் Stephan Hilsberg தன்னுடைய சொந்த அரசியல் முடிவுகளில் இருந்து தனிப்பட்ட ஆதாயத்தை பெற்றுள்ளதாக ஷ்ரோடர் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

மூலோபாய நலன்கள்

இக்குறைகூறலில் நிறைய பாசாங்குத்தனம் உள்ளது. குழாய்த்திட்ட பெருநிறுவனக் கூட்டில் ஷ்ரோடரின் தொர்பு வெறும் தனிப்பட்ட அக்கறை விவகாரம் மட்டுமில்லை. பால்டிக் கடல் குழாய்த்திட்டம் கட்டமைப்பது வெளியுறவுக் கொள்கையின் மத்திய தூணாக இருந்தது; அதாவது ஜேர்மனி தனிப்பட்ட வகையில் ஒரு ஏகாதிபத்திய சக்தியாக வளரவேண்டும் என்பதில் ஆளும் உயரடுக்குகளின் பரந்த பிரிவுகளின் ஆதரவைப் பெற்றது ஆகும்.

அதிபர் என்னும் முறையில் ஷ்ரோடர் வெளிப்படையாக இந்த நோக்கத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தார். மார்ச் மாதம் வெளிநாடு சென்றிருந்தபோது, அவர் கூறினார்: "ஐரோப்பாவில் மிகப் பெரிய தேசிய பொருளாதாரம் நம்முடையது என்பது உண்மை; உலகின் மிக அதிக அளவிலான ஏற்றுமதி செய்யும் நாடு நம்முடைய நாடு; 82 மில்லியன் மக்களை நாம் கொண்டுள்ளோம்; எனவே உலகில் நடுத்தர சக்தி என்னும் பங்கை நாம் மேற்கொண்டே ஆகவேண்டும்."

இந்த உத்தியில் நீண்ட காலத்திற்கு எரிபொருள் பெறுதல் என்பது முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள எரிபொருள் இருப்புக்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருதல் என்பது ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு முக்கிய உந்ததுதலாக இருந்தது. பால்டிக் கடல் குழாய்த்திட்டத்தைக் கட்டமைப்பது என்பது அடுத்த 30 ஆண்டுகளுக்கு தேவையான இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்கு ஜேர்மனியின் திறனுக்கான உத்தரவாதம் ஆக்குகிறது; மேலும் அமெரிக்க ஆதிக்கத்திற்குட்பட்ட பாரசீக வளைகுடா பகுதி மற்றும் அமெரிக்க நட்புடைய கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் தயவிலும் முழுமையாக நிற்க வேண்டிய தேவையில்லை. ஒரு குறிப்பிட்டவிதத்தில், இதுதான் ரஷியாவுடனான "மூலோபாய கூட்டு" என்பதின் முக்கிய முதுகெலும்பாக உள்ளது; நீண்டகாலமாகவே ஷ்ரோடர் இதை வலியுறுத்தி வந்துள்ளார்.

2010ல் 6 பில்லியன் யூரோ மதிப்புள்ள இத்திட்டம் செயல்முறைக்கு வரும்; இறுதியாக முடிக்கப்பட்டவுடன் இத்திட்டத்தின்படி 55 பில்லியன் கன மீட்டர்கள் எரிவாயு ஆண்டு ஒன்றுக்கு ரஷியக் கடலோரப் பகுதியில் இருநது பால்டிக் கடல் வழியாக ஜேர்மனிக்கு கொண்டுவரப்படும். இது ஜேர்மனியின் தற்பொழுதைய ஆண்டு நுகர்வில் பாதிக்கும் மேலாகும். பிரான்ஸ், இங்கிலாந்து உட்பட மற்ற நாடுகள் பின்னர் ஜேர்மனியில் இருந்து எரிவாயுவைப் பெறும். கிழக்கில் குழாய்த்திட்டம் சைபீரிய எரிவாயு உற்பத்தி வயல்களுடன் இணைப்புக் கொடுக்கப்படும்.

தற்பொழுது ஜேர்மனி தன்னுடைய எரிவாயுத் தேவைகளில் 35 சதவிகிதத்தை ரஷ்யாவில் இருந்து பெறுகிறது. ஜேர்மனிய தேவைக்கு கிட்டத்தட்ட 30 சதவிகிதம் நோர்வேயில் இருந்தும், 20 சதவிகிதம் நெதர்லாந்தில் இருந்தும் கிட்டத்தட்ட 13 சதவிகிதம் உள்நாட்டு உற்பத்தியில் இருந்தும் வருகிறது. ஆனால், ஐரோப்பிய இருப்புக்களின் கொள்ளளவு குறைந்தது ஆகும். மாறாக, ரஷ்யா உலகின் எரிவாயு இருப்புக்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது.

ஷ்ரோடரை பொறுத்தவரையில், இத்திட்டத்தை கண்காணித்து செயல்படுத்துவது தர்க்கரீதியாக முடிவாகியுள்ளது. அதிபர் என்னும் முறையில், "முதலாளிகளின் தோழர்" பெருவணிக நலன்களின் அக்கறைகளைத் தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கினார் என்று மட்டும் இல்லாமல், ஆக்கிரோஷமான முறையில் ஜேர்மனிய பெருநிறுவனங்களின் நலன்களையும் வெளிநாட்டுக் கொள்கைகளில் இணைத்துச் செலுத்தினார். இப்பொழுது அவர் அதை தன்னுடைய முக்கிய வேலையாகக் கொண்டுள்ளார்; உரிய ஊதிய ஆதாயத்தையும் பெறுகிறார்.

"இந்த குழைய்த்திட்டத்தில் தொடர்பு கொண்டிருப்பது தனக்கு ஒரு கெளரவமான விஷயமாகும்" என்று ஷ்ரோடர் Süddeutsche Zeitung பத்திரிகையிடம் சமீபத்தின் கூறினார். ஊழல் குற்றச்சாட்டுக்களை "முட்டாள்த்தனம்" என்று அவர் நிராகரித்தார்.

பெருவணிகம், குழாய்த்திட்ட கண்காணிப்புக் குழுவின் தலைவராக ஷ்ரோடரின் நியமனத்தை வரவேற்றுள்ளது. "வணிகம் இரகசியமாக கவலையை விட்டுவிட்டது; ஏனெனில் இதில் மகத்தான பெருவணிக, தேசிய நலன்கள் உள்ளன... இன்னும் கூடுதலான வகையில் ஜேர்மனிய எரிபொருள் பெறுதல் பாதுகாக்கப்படுகிறது" என்று Die Welt பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ஷ்ரோடரின் நியமனம் புட்டினால் செய்யப்பட்டது பற்றிப் பின்னர்தான் அறிந்ததாகக் கூறும் Eon, BASF என்னும் ஜேர்மனிய நிறுவனங்கள் களிப்புடன் இதை வரவேற்றன. "இந்தப் பதவியில் ஹெகார்ட் ஷ்ரோடர் ஜேர்மனிய, மேற்கு ஐரோப்பிய நலன்களை, வருங்கால எரிபொருள் தேவைகளைப் பொறுத்தவரையில், சிறப்பாகச் செயலாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று BASF உடைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

Eon நிர்வாகக் குழுவின் தலைவர், ஐரோப்பாவிற்கு இத்திட்டத்தின் மூலம் வரக்கூடிய "மாபெரும் முக்கியத்துவத்தை" வலியுறுத்தினார்; சீனா, இந்தியா போன்று எரிபொருள் தேவைகள் பெருக்கியுள்ள, வேகமாக வளரும் நாடுகளுடன், தேவைகளுக்குப் போட்டியிடும் நிலையில் கண்டம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஜனநாயக கட்சியின் புதிய தலைவரான மத்தியாஸ் பிளாட்செக், மற்றும் அவருக்கு முன் பதவியில் இருந்த துணை அதிபர் பிரான்ஸ் முன்டபெயரிங் ஆகியோருடைய ஆதரவையும் ஷ்ரோடர் பெற்றுள்ளார். ஜேர்மனிய, மேற்கு ஐரோப்பிய எரிபொருள் தேவைகளுக்கு குழாய்த்திட்டத்தின் மூலோபாய முக்கியத்துவத்தின் அடிப்படையில் இந்த நியமனம் சிறந்தது என்று பிந்தையவர் நியாயப்படுத்திப் பேசினார். "இது ஒரு நல்ல அடையாளம்; இதனால் சர்வதேச திட்டத்தில் நலன்கள் பெருகும்; ஷ்ரோடரை பொறுத்தவரையில் இந்த முயற்சியில் முக்கிய பங்கை கொள்ளுவார் என்ற நம்பிக்கை பங்குதாரர்களுக்கு உண்டு." என்றார் அவர்.

Verdi பணித்துறையின் தொழிற்சங்கத் தலைவரான Franz Bsirske யும் குறைகூறுபவருக்கு எதிராக ஷ்ரோடருக்கு ஆதரவு கொடுத்துள்ளார். முன்னாள் சான்ஸ்லர் தனனுடைய புதிய பதவியைப் பயன்படுத்தி ஜேர்மனிய நலன்களை எண்ணெய்த் தேவைத் துறையில் நிலைநிறுத்துவதில் எந்தத் தவறும் இல்லை என்று அவர் கூறினார்.

சமீபத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அங்கேலா மேர்க்கல் (CDU) சற்று நிதானத்தை கடைப்பிடித்தார். "தற்பொழுதைய விவாதங்களில் எழுப்பப்படும் பிரச்சினைகள் பற்றி ஓரளவு எனக்குத் தெரியும்" என்று அவர் கூறியதான அரசாங்க செய்தி தொடர்பாளர் Thomas Steg கூறினார். ஷ்ரோடருடைய திட்டங்கள் ஏற்பதற்கில்லை என்ற பொருளை இது கொடுக்காது என்று Steg வலியுறுத்தினார்.

பொருளாதார மந்திரி Michael Glos (கிறிஸ்தவ சமூக யூனியன்- CSU) டிசம்பர் 9 அன்று குழாய்த்திட்ட கட்டமைப்பு தொடக்கத்தை காண செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்து 800 கிலோமீட்டர்கள் உள்ள Babayevo விற்குச் சென்றிருந்தார். இத்திட்டத்தை "ஜேர்மனிய-ரஷ்ய ஒத்துழைப்பில் இன்னும் ஒரு மைல்கல்" என்று அவர் அங்கு புகழ்ந்தார்.

கிழக்கு ஐரோப்பாவினதும் அமெரிக்காவினதும் எதிர்ப்பு

கிழக்கு ஐரோப்பாவில், குறிப்பாக போலந்திலும், உக்ரைனிலும் பால்டிக் கடல் குழாய்த்திட்டம் தீவிர எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது; இந்நாடுகள் தாங்கள் "ஜேர்மனிய ரஷ்ய ஒத்துழைப்பினால்" பாதிக்கப்பட்டுவிட்டவையாக அஞ்சுகின்றன.

மேற்கு ஐரோப்பாவிற்கு ரஷ்யாவின் எரிவாயு அளிப்பில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் இப்பொழுது உக்ரைன் வழியாகச் செல்லுகிறது; ஒரு சிறு பகுதி போலந்தின் மூலம் செல்லுகிறது. இரு நாடுகளும் ரஷ்யாவைத்தான் எரிபொருள் தேவைக்கு நம்பியிருக்கின்றன.

பால்டிக் கடல் குழாய்த்திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டால், உக்ரைன், போலந்திற்குக் கிடைக்கும் விநியோகம் மேற்கு ஐரோப்பிய விநியோக இணைப்பில் இருந்து நீக்கப்படும். இரண்டு நாடுகளும் அவற்றின் வழியே செல்லும் பொருட்கள் மீதான வரி இழப்பை சந்திக்கும்; அதைத்தவிர எந்த நேரத்திலும் அவற்றின் தேவைகளையும் ரஷ்ய மறுக்கலாம், அல்லது அப்படிப்பட்ட அச்சுறுத்தலை பயன்படுத்தலாம்.

கடந்த ஆண்டு நடந்த "ஆரஞ்சுப் புரட்சிக்கு" பிறகு அமெரிக்க ஆதரவை நாடி நிற்கும் உக்ரைனும், ரஷ்யாவும் ஆக்கிரோஷமான "எரிவாயுப் போரில்" பிணைந்த நிலையில் உள்ளன. அடுத்த ஆண்டில் உக்ரைனுக்குக் கொடுக்கப்படும் எரிவாயு விலையை $50 ல் இருந்து $160 ஆக ஒரு கனமீட்டருக்கு என்று ரஷ்யா உயர்த்த விரும்புகிறது. மேற்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விலையைவிட இது $95 குறைவென்றாலும், இதனால் பொருளாதார பலமற்ற உக்ரைனுக்கு ஆண்டு ஒன்றுக்கு $2 பில்லியன் கூடுதல் செலவு ஏற்படும்.

அமெரிக்க செய்தி ஊடகத்திலும் ஷ்ரோடர் புதிய கண்காணிப்பு குழுத் தலைவராக பொறுப்பேற்பது குறைகூறலுக்குட்பட்டுள்ளது. ரஷ்ய அரசாங்கத்திடம் ஊதியம் பெறும் ஒரு வேலையில் ஷ்ரோடர் இருப்பதால் தங்கள் நாட்டின் உறவு ரஷியாவுடன் இருப்பது பற்றி ஜேர்மனிய வாக்காளர்கள் சிந்திக்க வேண்டும் என்று Washington Post எழுதியுள்ளது.

Washington Post எழுதியதாவது: "அதிபராக இருந்து ஏழு ஆண்டுகளில் திரு. ஷ்ரோடர் ரஷ்யாவில் அரசியல் உரிமைகளை மெதுவாக அடக்கப்படுவதை கூடுதலாகவே அசட்டை செய்தார். செச்சேன்யாவில் ரஷ்யா நிகழ்த்திய கொடூரப் போரின் முக்கியத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தினார். இவர் பதவியில் இருந்த காலம் முழுவதும் ரஷ்யா தன்னுடைய போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மேற்கு நாடுகள் ஒன்றாகக் குரல் கொடுக்கும் முயற்சிகளை முறியடித்தார். ஜேர்மனியின் புதிய அதிபர் அங்கேலா மேர்க்கல் இந்த அசாதாரண அறிவிப்பை பயன்படுத்தி ரஷ்யாவோடு ஒரு புதிய ஜேர்மன் கொள்கையை தொடக்குவார் என்றும் அது திரு.ஷ்ரோடரின் தனி நலன்களுக்கு அப்பாற்பட்டு அமையும் என்றும் நம்புகிறோம்."

இது வெறும் கற்பனை சிந்தனைதான். வாஷிங்டனில் உள்ள வெளியுறவுக் கொள்கை பிரிவு புதிய ஜேர்மனிய அரசாங்கம் ரஷ்யாவில் இருந்து இன்னும் நகர்ந்து மேற்கு ஐரோப்பாவிலுள்ள தனது நட்பு நாடுகளுடன் நெருக்கமாக இருக்கும் என்று நம்புகிறது. ஷ்ரோடர், புட்டினுடன் கொண்டுள்ள நிலைப்பாடு பற்றிய குறிப்பு, அதிலும் ஈராக்கிய போருக்கு ஆதரவு கொடுத்திருந்த வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஏட்டில் வந்துள்ளது, முழுமையான அவமரியாதைக்குரியதாகும்.

ஆயினும்கூட, Washington Post இன் கருத்துக்களில் ஓரளவு உண்மை உள்ளது. முன்னாள் இரகசியப் சேவையில் இருந்த நபரான இப்பொழுது அவருடைய சட்டபூர்வ முதலாளியான புட்டினுடன் ஷ்ரோடரின் நெருக்கமான தனிப்பட்ட உறவும், புட்டினுடைய சர்வாதிகார முறைகளுக்கான தந்திரோபாயரீதியான ஆதரவும் ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்கள் தொடர்பாக வருகையில் ஜனநாயக விதிமுறைகள் தொடர்பான அவரின் மதிப்பின்மையையும் வெளிப்படுத்துகின்றது. இவ்விதத்தில் ஷ்ரோடர், அவருடைய கட்சியின் முழு ஆதரவைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved