World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Closed-door court proceedings in Iraq against Hussein's associates

ஈராக்கில் ஹூசேன் கூட்டாளிகளுக்கு எதிராக ரகசிய நீதிமன்ற விசாரணை

By Peter Symonds
21 December 2004

Back to screen version

ஈராக்கின் இடைக்கால பிரதமர் அயத் அல்லாவியின் தேர்தல் வெற்றி வாய்ப்புக்களை பெருக்குவதற்காகவும், போர்க்களத்தில் சிக்கியுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு உற்சாக மூட்டுகின்ற வகையிலும் சதாம் ஹூசேனின் முன்னாள் கூட்டாளிகள் இரண்டுபேர் சனிக்கிழமையன்று பாக்தாத் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அந்த விசாரணையில் பொதுமக்களோ, பத்திரிக்கையாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. விசாரணை முடிந்தவுடன் ஒரு சிறு பத்திரிக்கை குறிப்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் தரப்பட்டன.

"கெமிக்கல் அலி'' என்று அழைக்கப்பட்ட அலி ஹசன் அல் மஜீத் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் சுல்தான் ஹாசிம் அஹமத் ஆகிய இருவரும் சென்ற ஜூலை மாதம் ஈராக் சிறப்பு நீதிமன்றத்தில் ஹூசேன் மற்றும் 9 இதர நீக்கப்பட்ட பாத் ஆட்சி மூத்த உறுப்பினர்களுடன் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் மனித இனத்திற்கு எதிராக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சதாம் ஹூசேனின் மைத்துனரான அல் மஜீத் "Anfal" என்று இழிபுகழ்பெற்ற இனப்படுகொலை பிரச்சாரத்தை ஈராக்கிலுள்ள குர்து இன மக்களுக்கு எதிராக நடத்தினார். குர்துகளில் 1,00,000 மக்கள் "காணாமல் போயினர்" அல்லது கொலை செய்யப்பட்டனர், சிலர் இரசாயன ஆயுதங்கள் மூலம் கொல்லப்பட்டனர். 1991 ல் அமெரிக்கா தலைமை தாங்கி நடத்திய போர் ஈராக்கில் முடிவுக்கு வந்தபொழுது, ஈராக் தென்பகுதி ஷியைட்டுக்களின் எழுச்சியை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்குவதற்கு பொறுப்பு வகித்ததாக இவர் மீது மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஹூசேனும் அவரது கூட்டாளிகளும் கொடூரமான குற்றங்களை செய்தவர்கள் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. ஆனால், அவர்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கை வெறும் நாடக விசாரணைக்கு மேற்பட்டதல்ல. ஈராக் மக்களில் பரந்த தட்டினரின் எதிர்ப்பிற்கு உள்ளானவர்களை தண்டிப்பதன் மூலம் அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கான ஆதரவை பெறமுடியுமென்று புஷ் நிர்வாகமும் பாக்தாத் பொம்மையாட்சியும் நம்புகின்றன.

குறிப்பாக, அல்லாவி விசாரணைகளை முடுக்கிவிடப்பட வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார். இந்த ஆண்டு முடிவிற்குள் நீதிமன்ற வழக்கு விசாரணை தொடங்க வேண்டுமென்று செப்டம்பரில் அவர் வலியுறுத்தியதோடு, ஜனவரி 30 தேசிய தேர்தல்கள் நடப்பதற்கு முன் விசாரணை தொடங்கவேண்டும் என்று கூறினார். கடந்த செவ்வாயன்று அவர் திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு "முன்னாள் ஆட்சியின் அடையாளச் சின்னங்கள் மீது, ஒருவர் பின் ஒருவராக விசாரணை நடக்கும், எனவே ஈராக்கில் நீதி தன்போக்கில் நிலைநாட்டப்படும்'' என்று குறிப்பிட்டார். அடுத்த நாள், அவர் முறைப்படி நடைபெறவிருக்கும், தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக சம்பிரதாய முறையில் அறிவித்தார்.

குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள் மீது குற்றங்கள் தொடர்பாக அல்லாவி தெரிவித்து வருகிற கண்டனங்கள் மிகவும் வெற்றுத்தன்மை கொண்டவை ஆகும். 1975 வரை அவர் மிகுந்த உற்சாகத்தோடு பாத் கட்சியில் ஒரு உறுப்பினராக பணியாற்றினார். அதன் பின்னர் அவர் பிரிந்து சென்று அமெரிக்க மற்றும் பிரிட்டன் புலனாய்வு அமைப்புக்களோடு ஒரு நீண்ட ஒத்துழைப்பை நிலைநாட்டத் தொடங்கினார். இந்த ஆண்டு துவக்கத்தில் வெளியிடப்பட்ட நியூயார்க் டைம்ஸ் தகவலின்படி, ஹூசேன் ஆட்சியை ஸ்திரமற்றதாக்குவதற்காக 1990 ல் ஈராக்கிற்குள்ளே அல்லாவியும் அவரது ஈராக் தேசிய உடன்பாட்டுக் கட்சியினரும் (INA) C.I.A யுடன் ஈடுபட்டு கார் குண்டுத் தாக்குதல்களையும், இதர தாக்குதல்களையும் நடத்தியுள்ளனர். அல்லாவியை போன்று பாத் கட்சிமீது அதிருப்தி கொண்ட புலனாய்வு மற்றும் இராணுவ அதிகாரிகளை உறுப்பினர்களாக ஈராக் தேசிய உடன்பாட்டுக் கட்சி உள்ளடக்கியிருக்கிறது.

மே மாதம் இடைக்கால பிரதமராக அல்லாவி நியமிக்கப்பட்டது முதல், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடைபெற்று வரும் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு ''சக்திவாய்ந்த மனிதர்'' என்று அவர் தன்னை சித்தரித்துக்காட்ட முயன்று வருகிறார். ஜூலை மாதம், சிட்னி மார்னிங் ஹெரால்டில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் இரண்டு நேரடியான சாட்சிகளை மேற்கோள்காட்டி, அல்லாவி நேரடியாக பாக்தாதிலுள்ள அல்-அமரியா சிறைச்சாலையில் குறைந்த பட்சம் 6 கைதிகளை ஜூன் நடுவில் சுட்டுக் கொன்று போலீஸார் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை எடுத்துக் காட்டினார். அந்த செய்தியை அல்லாவி மறுத்தாலும் அந்தக் கட்டுரையில் கண்டிருந்த விரிவான குற்றச்சாட்டுக்கள் குறித்து கடுமையான விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.

சென்ற சனிக்கிழமையன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அல்லாவி முயன்றாலும் நீதிபதி ராட் அல் ஜூஜி அந்த விசாரணைகள் அடுத்த ஆண்டுதான் துவங்க முடியும் என்று குறிப்பிட்டார். "இன்று நடைபெற்றது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடைபெற்ற ஒரு பூர்வாங்க விசாரணைதான். இது பலமுறை திரும்பத் திரும்ப நடத்தப்படவேண்டும்" என்று அவர் கூறினார். ஜூலை மாதம் சதாம் ஹூசேனும் அவரது கூட்டாளிகளும் குற்றம் சாட்டப்பட்டபோது ராட் அல் ஜூஜி தலைமை வகித்து என்ன நடந்தது என்பது குறித்து சில விவரங்களையே தந்தார்.

நீதிமன்ற விசாரணை இவ்வளவு அதிக ரகசிய தன்மையோடு நடத்தப்படுவது, அந்த சிறப்பு நீதிமன்றத்தின் மோசடித் தன்மையை வலியுறுத்திக் கூறுவதாக அமைந்திருக்கின்றது. அமெரிக்க கூட்டணி இடைக்கால ஆணையம் சென்ற ஆண்டு அந்த நீதிமன்றத்தை ஸ்தாபித்தது. அத்துடன் வாஷிங்டன் அந்த நீதிமன்றத்திற்கு நிதியளிக்கிறதுடன், பெரியதொரு அமெரிக்க அதிகாரிகள் குழு அதற்கு ''ஆலோசனை'' வழங்குகிறது. அதன் நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்திற்கு கட்டுப்பட்டவையல்ல மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அடிப்படை சட்ட உரிமைகளுக்கு உத்திரவாதம் செய்து தருவதாக இல்லை. ஆனால் வாஷிங்டனுக்கு வசதியாக அந்த நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவிலிருந்து செயல்பட்டு வருகின்ற மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு (HRW) சென்ற டிசம்பர் மாதம் வெளியிட்ட ஒரு நீண்ட குறிப்பில், அந்த சிறப்பு நீதிமன்ற சட்டத்திலுள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளது. தலைமை வகிக்கின்ற நீதிபதிகள் சுதந்திரமான மற்றும் நடுநிலையோடு செயல்படுவதற்கு அதில் உறுதி செய்து தரப்படவில்லை. அல்லது அவர்கள் சிக்கல் நிறைந்த மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு தேவையான அனுபவம் பெற்றவர்கள் அல்ல. சித்திரவதை மூலம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலங்களை தள்ளுபடி செய்கின்ற அளவிலோ அல்லது குற்றம்சாட்டப்பட்டவர் பதில் சொல்ல மறுப்பதற்குள்ள உரிமையையோ உறுதி செய்து தருவதாக இல்லை. சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தத்திற்கு முரணாக அந்த சிறப்பு நீதிமன்ற சட்டம், நியாயமான, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் குற்றம் நிரூபிக்கப்படவேண்டும் என்ற நிலையை உறுதி செய்து தரவில்லை.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் சர்வதேச நீதி திட்ட இயக்குனர் ரிச்சர்ட் டிக்கர் சென்றவாரம் மிகுந்த எச்சரிக்கையோடு வெளியிட்டுள்ள அறிவிப்பில் அந்த விசாரணைகள், "ஒரு அரசியல் நாடக விசாரணைகளாக" ஆகிக்கொண்டிருக்கின்றன என்பது குறித்து தாம் கவலைப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார். "இந்த விசாரணை நடைமுறைகள் முழுவதுமே ரகசியத்தில் மூடப்பட்டு கிடக்கின்றன. உண்மையான பாதுகாப்பு கவலைகள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பாதுகாப்பு தேவை என்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு குற்றச்சாட்டு பட்டியல் தரப்பட்டு விட்டதா? குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வக்கீல்கள் ஆஜர் ஆகிறார்களா? என்பதையும் ரகசியமாக வைத்திருக்க தேவையில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

ஜூலை மாதம் நடைபெற்ற விசாரணைகளில் குற்றம்சாட்டப்பட்ட எவரும் வக்கீல்களை வைத்துக் கொள்ளவில்லை. மஜிதும் அஹமதும் நீதிமன்றம் நியமித்த வக்கீல்கள் மூலம் தங்களது தரப்பை எடுத்துக் கூற வேண்டி வந்தது. ஹூசேன் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். சென்ற வாரம்தான் அவரது வக்கீல்களில் ஒருவர் அவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. அமெரிக்க நீதிமன்ற உரிமைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விதிமுறைகளும் நடைமுறைகளும் ஈராக் நீதிமன்றத்திற்கும் பொருந்துமாறு செய்ய வேண்டுமென்று அமெரிக்க நீதிமன்றங்களில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அது "ஈராக் சிறப்பு நீதிமன்றம் வென்றவர்களின் நீதி" என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வாஷிங்டன் கட்டளைப்படி ஹூசேனுக்கு எதிரான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், அமெரிக்க சட்டம்தான் செயல்படுத்தப்பட வேண்டுமென்று அந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு வாதிடுகிறது. இந்த வழக்கின் முடிவைப் பொறுத்துதான் சதாம் ஹூசேன் தரப்பு வக்கீல்கள் குழு அமையும்.

அந்த நீதிமன்ற செயல்பாடு ரகசியமாக வைத்திருக்கப்படுவதன் நோக்கங்களில் ஒன்று இடைக்கால ஈராக் ஆட்சியும், ஈராக் அதிகாரிகளும் அந்த நீதிமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள் என்ற மோசடியை நிலைநாட்டுவதற்காகத்தான். அப்படியிருந்தும் ஹூசேனும் அவருடன் குற்றம்சாட்டப்பட்டிருப்பவர்களும் அமெரிக்க இராணுவத்தால் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மற்றும் அந்த வழக்குகளின் ஒவ்வொரு அம்சமும் நெருக்கமாக அமெரிக்க அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜூலை மாதம் நடைபெற்ற விசாரணைகளில் ஊடகங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், பத்திரிக்கையாளர்கள் தணிக்கை செய்யப்படாத வீடியோ காட்சி விவரங்களை வெளியிட்டதும் மற்றும் அமெரிக்க அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும்தான் அந்த விசாரணை நடத்துகின்றனர் என்பதை அம்பலப்படுத்தியதும் அவர்களுக்கு ஒரு சங்கடத்தை கொடுத்தது.

அதே தவறை இரண்டாவது முறை செய்ய தயாராக இல்லாத நிலையில் சென்ற சனிக்கிழமையன்று பத்திரிக்கையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் ஒரு வட்டாரம் தந்த தகவல் அடிப்படையில் அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜெனரல் அஹமது அந்த நீதிபதியை நோக்கி பின்வருமாறு கூறினார்: "நான் 40 ஆண்டுகளாக இராணுவ அதிகாரியாக பணியாற்றி வருகிறேன். நான் என்றைக்கும் தண்டிக்கப்பட்டதில்லை. அமெரிக்கர்கள் எனக்கு பின்னால் உட்கார்ந்துகொண்டிக்கும் இந்த நீதிமன்றத்தில் இப்படி நான் உட்கார்ந்திருப்பது மிகவும் தூரதிருஷ்டவசமானது". விசாரணையின் போது அமெரிக்க அதிகாரிகள் இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்த அமெரிக்க தூதரகம் மறுத்துவிட்டது. ஆனால், அவர்கள் அங்கே இருந்தார்கள் என்பதை சந்தேகிப்பதற்கு இடமில்லை.

சேர்பியாவின் முன்னாள் ஜனாதிபதி சுலோபோடன் மிலோசேவிக் நீதிமன்றத்தை, அந்த விசாரணையின் அரசியல் தன்மையை அம்பலப்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டது போன்ற முன்மாதிரி ஈராக்கில் நடந்துவிடக் கூடாது என்பதில் புஷ் நிர்வாகம் உறுதியாக உள்ளது.

ஹூசேன் ஆட்சி பல குற்றங்களுக்கு பொறுப்பு என்பதில் குறிப்பாக, ஈரானுடன் மிகக் கொடூரமான இடைவிடாத போர் 1980 களில் நடைபெற்றபோது பல குற்றங்களை புரிந்தது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால், பாதிஸ்ட் தலைவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டால் அப்போது அவர்களுக்கு பக்கத்தில் இருந்த பல அமெரிக்க தலைமை அதிகாரிகள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும். றீகன் நிர்வாகத்தின் போது ஈரானுக்கெதிராக பாத்திஸ்ட் ஆட்சிக்கு போரில் ஆயுதங்களையும், நிதியையும் வழங்கி அமெரிக்கா உதவியதுடன், இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதையும் செயலூக்கத்துடன் மன்னித்துவிட்டது.

தற்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளராக பணியாற்றிவரும் டொனால்ட் ரம்ஸ்பெல்ட், அப்போது றீகனின் சிறப்பு தூதராக பலமுறை ஹூசேனையும், இதர முன்னணி பாத்திஸ்ட்டுகளையும் சந்திப்பதற்காக பாக்தாத் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அவரது விஜயங்கள் 1984 ல் இராஜதந்திர உறவுகளை புதுப்பிப்பதற்கு மற்றும் ஈராக்கிற்கு அமெரிக்க இராஜதந்திர மற்றும் இராணுவ ஆதரவை வழங்குவதற்கு அடிப்படையாக அமைந்தது.

"கெமிக்கல் அலி" 1988 மார்ச்சில் வடக்கு நகரான ஹலாப்ஜாவில் சயனைட்டையும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் விஷவாயுவையும் பயன்படுத்தி 4,000 த்திற்கும் மேற்பட்ட மக்கள், முக்கியமாக குர்துகள் மடிவதற்கு பொறுப்பாக இருந்திருக்க கூடும். ஆனால் வாஷிங்டன் அந்த நேரத்தில் அதற்கு தீவிரமான கண்டனம் தெரிவிக்கவில்லை. மற்றும் அரசுத்துறையின் உள் ஆவணங்கள் ஹூசேன் ஆட்சியுடன் அமெரிக்காவின் உறவுகளை அந்தப் படுகொலை சேதப்படுத்திவிடக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

ஈராக்கின் பேரழிவுகரமான ஆயுதங்கள் பற்றி சொல்லப்பட்ட அனைத்து பொய்களையும் போல் திடீரென்று புஷ் நிர்வாகம் சதாம் ஹூசேனின் குற்றங்கள் பற்றி கவலைகளைத் தெரிவித்திருப்பது சட்ட விரோதமான செயல்களை நியாயப்படுத்தும் ஒரு சாக்குப்போக்கே தவிர வேறொன்றுமில்லை. அத்தோடு, ஈராக்கை அடிமைப்படுத்தி அதனுடைய பாரிய எண்ணெய் இருப்புகளை அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டுள்ளது. ஆகவே, ஈராக் மக்களுக்கு உண்மையான நீதி கிடைக்கவேண்டுமென்றால், உடனடியாகவும் எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமலும் அனைத்து அமெரிக்கத் துருப்புக்களும், வெளிநாட்டுத் துருப்புக்களும் விலக்கிக் கொள்ளப்படவேண்டும். அத்துடன், ஆக்கிரமிப்பிற்கு பொறுப்பான அமெரிக்க அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved