World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Unanswered questions in London bombings

லண்டன் குண்டுவீச்சுக்களில் விடையளிக்கப்படா வினாக்கள்

By Chris Marsden
11 July 2005

Back to screen version

சனிக்கிழமை இரவன்று பேர்மிங்காம் நகர மையம் மூடப்பட்டு, 10 மணி நேரத்திற்கு 20,000 மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். வெஸ்ட் மிட்லாட் போலீசார் மதுபானக்கடைகள், திரையரங்குகள், உணவுவிடுதிகள், அடுக்கு மாளிகைகள் நிறைந்த நகரத்தின் பிராட் வீதி கேளிக்கைப் பகுதியையும், நகரத்தின் சீனப் பகுதியையும் தடுத்து, தவிர்ப்பு எல்லை ஒன்றை அமைத்தனர். கார்ப்போரேஷன் வீதியில் ஒரு பஸ்ஸின் மீது நான்கு கட்டுப்பாட்டிற்குட்பட்ட வெடிப்புக்கள் நிகழ்த்தப்பட்டன; ஆனால் அதிகாரிகள், அழிக்கப்பட்டுவிட்ட அதனால் ஆபத்து ஏதும் கிடையாது என்றும் கூறியுள்ளனர்.

"ஓர் உண்மையான நம்பகமான அச்சுறுத்தலைத்தான்" பேர்மிங்காம் நகர மையம் கண்டிருந்தது என்று வெஸ்ட் மிட்லாந்தின் தலைமைக் காவலர் போல் ஸ்கொட் லீ கூறினார். அவருடைய துணைத் தலைமைக் காவலரான ஸ்டூவர்ட் ஹைட் "இன்று மாலை நாம் தொடர்பு கொண்டிருந்த நிகழ்வு லண்டனில் ஜூலை 7ல் நடந்த நிகழ்வுகளோடு தொடர்புடையவை என்று" நாங்கள் நம்பவில்லை என்று கூறினார்.

ஞாயிறன்று காலை குண்டை வெடிக்கச்செய்யும் வல்லுனர்கள் பிராட் வீதியில் கண்டெடுக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய பொதியம் ஒன்று, "நம்பகத்தன்மையுடைய வெடி கருவி அல்ல" என்று அறிவித்தார்.

ஒரு பெரிய பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிப்பை பற்றி பகிரங்கமாக தெரிந்தது இவ்வளவுதான். கடந்த வியாழனன்று 49 உயிர்களைக் குடித்து மற்றும் ஒரு 25ஐ பற்றி உறுதிகூற முடியாது நிகழ்ந்த லண்டன் குண்டுவீச்சுக்கள் பற்றிய நிலைமையும் இதைவிட தெளிவாக இல்லை. இக்கொடுமையை நிகழ்த்தியது யார் என்று எவருக்கும் தெரியவில்லை. விடையில்லா வினாக்கள்தான் நிறைய உள்ளன; பல மாறுபட்ட அறிக்கைகள்தான் வெளிவந்த வண்ணம் உள்ளன. முன்னர் அதிகாரிகளால் கொடுக்கப்பட்ட தகவல்கள் பின்னர் தவறானவை என்று வந்துவிட்டன.

இதற்கு யார் பொறுப்பு?

ஒரு இஸ்லாமிய வலைத் தளத்தில், Secret Organisation Group of Al Queda of Jihad Organisation in Europe என்ற இதுகாறும் அறியப்பட்டிராத குழு ஒன்று இதற்கான பொறுப்பை முதலில் ஏற்றிருந்தது. இது உள்துறை மந்திரி சார்ல்ஸ் கிளார்க்கினால் "தீவிரமாக கருதப்படவேண்டியது" என்று விவரிக்கப்பட்டது; பிரதம மந்திரி டோனி பிளேயர் இஸ்லாத்தின் பெயரில் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவித்தார்.

இஸ்லாமிய பயங்கரவாதிகள்தான் குண்டுவீச்சிற்கு காரணம் என்று பிளேயர் அவசரமாக குறிப்பிட்டதற்கு அந்நேரத்தில் லண்டல் போலீஸ் அல்லது வேறு எந்த விசாரணை நிறுவனங்களின் ஆதாரங்களோ அல்லது சரிபார்க்கப்பட்ட சான்றுகளோ கிடையாது. இக்கட்டுரை வெளிவரும் நேரம் வரை பிரதம மந்திரியின் கூற்றை நியாயப்படுத்தும் வகையில் எந்தச் சான்றும் கிடைக்கவிலை. மாறாக, அந்நேரத்திலேயே பல அதிகாரிகள் இணையத்தில் பொறுப்பு ஏற்கப்பட்டிருந்த கூற்றின் நம்பகத்தன்மை பற்றி வினா எழுப்பத்தான் செய்திருந்தனர்.

தாக்குதலுக்கு பொறுப்பேற்கும் வகையில் அபு ஹப்ஸ் அல்-மஸ்ரி பிரிகேட் என்ற அமைப்பின் பெயரில் ஒரு புதிய கூற்று வந்துள்ளது. ஆனால் பிபிசி இன் பாதுகாப்புப் பிரிவு செய்தியாளர் கோர்டன் கோரீரா இதைப்பற்றி எச்சரிக்கையுடன்தான் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

விசாரணையை பொறுத்தவரையில் குவிப்பு மொரோக்கோ நாட்டைச் சேர்ந்த மகம்மது அல்- கெர்போஜி என்பவர்பால் உள்ளது; இவர் தன்னுடைய லண்டன் வீட்டில் இருந்து அண்மையில் தலைமறைவாகியுள்ளார். மாட்ரிட் மற்றும் காசாபிளாங்கா பயங்கரவாதத் தாக்குதல்களுடன் அவர் தொடர்புபடுத்தப்பட்டிருந்தார். பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிய பாதுகாப்புப் பிரிவுகள் அல்- கெர்போஜி அமெரிக்கராலும், பிரிட்டிஷாராலும் ஈராக்கில் இஸ்லாமிய எழுச்சியாளர்களுக்கு தலைவர் என்று கூறப்படும் அபு முசாப் அல்-ஜர்காவி என்னும் ஜோர்டானிய நாட்டில் பிறந்த நபருடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டியுள்ளன.

மொரோக்கோ, 16 வருஷங்களாக இங்கிலாந்தில் அரசியல் அடைக்கலம் பெற்றுள்ள அல்-கெர்போஜி, பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அந்நாட்டில் இருந்து அனுப்பி வைக்குமாறு கோரியுள்ளது. அவர் காசாபிளாங்காவில் 44 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்பட்டு, ஆஜராகாவிட்டாலும் தண்டனைக்கு உட்பட்டுள்ளார்.

லண்டனை தளமாக கொண்டுள்ள அரபு மொழி நாளேடான அல்-ஹயட், பிரிட்டிஷ் பாதுகாப்பு படையினர் லண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள இரண்டு முஸ்லிம் மாணவர்களின் வீடுகளை சோதனை செய்து, அவர்களைப் பிடித்துவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. போலீசார் டஜன்கணக்கான பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றுள்ள முஸ்லீம்களையும் சிறைபிடித்து வைத்துள்ளதாக இந்த ஏடு அறிவித்துள்ளது.

நேரக் கணக்கு மாறுதல்கள்

லண்டன் ஜூலை 7 குண்டுவீச்சு நிகழ்வுகள் பற்றிய அதிகாரபூர்வ தகவல் அறிவிப்புகளில் முக்கியமான திரித்தல் உள்ளது. ஸ்கொட்லான்ட் யார்டின் துணை ஆணையர் பிரியன் பாடிக் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் சனியன்று கூறினார்: "லண்டன் சுரங்கப் பாதையில் மூன்று குண்டுகளும் உண்மையில் காலை 8.50 ஐத் தொடந்து சில வினாடிகளில் வெடித்தன."

லண்டன் சுரங்கப்பாதை தொழில்நுட்பத்துறை விவரங்கள் முந்தைய அறிக்கைகளை நிராகரித்துள்ளன; குண்டுத்தாக்குதல்கள் சற்றுத் தள்ளித் தள்ளி நிகழ்ந்தன என்று முந்தைய அறிக்கைகள் கூறியிருந்தன. இப்பொழுது குறைந்தது நான்கு வெடிப்புக்கள் நிகழ்த்தக்கூடிய தொகுப்புக்கள், மிகஉயர் வணிக வெடிபொருட்கள், காலத்தே வெடிக்கும் நவீன கருவிகளை கொண்டிருந்தவை பயன்படுத்தப்பட்டிருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது என போலீசார் கூறியுள்ளனர்.

வியாழன் மற்றும் வெள்ளியன்று லிவர்பூல் வீதி நிலையத்தில் முதல் வெடிகுண்டு 8.51க்கு வெடித்து, இரண்டாம் வெடிப்பு 8.56க்கு என்றும் மூன்றாம் வெடிகுண்டு 9.17க்கு வெடித்தது என்றும் பரந்த அளவில் கூறப்பட்டது. யூஸ்டன் சாலையின் தெற்கே இருக்கும் டாவிஸ்டொக் சதுக்கத்தில் பேருந்தில் தாக்குதல் 9.51க்கு நடந்ததாக கூறப்பட்டது.

இஸ்ரேலிய தூதரகத்தின் எச்சரிக்கை

மூன்றாவது விவாதத்திற்குரிய பிரச்சினை லண்டலில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் முதல் வெடிப்பிற்கு முன்னரே ஒருவேளை தாக்குதல் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டதாக வந்துள்ள தகவல் ஆகும்.

ஜெருசலத்தில் ஏமி தேய்பெலால் எழுதப்பட்ட Associated Press (AP) ஜூலை 7 அன்று பிற்பகல் 12:16 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை கூறுவதாவது: "பிரிட்டிஷ் போலீசார், லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் வியாழக்கிழமை வெடிப்புக்களுக்கு சில நிமிஷங்களுக்கு முன்பு நகரத்தில் ஒருவேளை பயங்கரவாத தாக்குதல்கள் வரக்கூடும் என்ற எச்சரிக்கைகளை பெற்றுள்ளதாக ஒரு மூத்த இஸ்ரேலிய அதிகாரி கூறினார்."

அக்கட்டுரை தொடர்கிறது: "இஸ்ரேலிய நிதி மந்திரி பெஞ்சமின் நேதன்யாஹு, வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ள சுரங்கப்பாதை நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு உணவுவிடுதியில் பொருளாதார மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளத் திட்டம் இட்டிருந்தார்; இந்த எச்சரிக்கை அவரை தன்னுடைய ஒட்டல் அறையிலேயே தங்குமாறு செய்துவிட்டதாக அரசாங்க அதிகாரிகள் கூறினர்.....

"தாக்குதல்களுக்கு சற்று முன்பு ஸ்கொட்லான்ட் யார்ட் இஸ்ரேலிய தூதரக பாதுகாப்பு அதிகாரியை அழைத்து தாங்கள் ஒருவேளை தாக்குதல்கள் வரக்கூடும் என்ற எச்சரிகையை பெற்றுள்ளதாக தெரிவித்தனர் என்று அதிகாரி கூறினார். இதை பொருளாதார மாநாட்டுடன் தொடர்புபடுத்தி அவர் ஏதும் கூறவில்லை என்றும் அதிகாரி கூறினார்."

"தன்னுடைய பதவியின் தன்மையை கருத்திற்கொண்டு அதிகாரி அனாமதேயமாகத்தான் கூறமுடியும் என்று தெரிவித்தார்."

சில மணி நேரங்களுக்குள், டெல் அவிவ் மற்றும் லண்டனில் அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்ததை அடுத்து, முதலில் வந்திருந்த அசோசியேட்டட் பிரஸ் அறிவிப்பு அகற்றப்பட்டது. ஆனால் அறிக்கை சர்வதேச பதிப்புக்கள் பலவற்றில் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. முதல் கட்டுரையை மாற்றி AP, "இஸ்ரேல் லண்டன் தாக்குதல்கள் பற்றி 'எச்சரிக்கப்படவில்லை" என்ற வேறு தலையங்கத்துடன் செய்தியை வெளியிட்டது.

இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி சில்வன் ஷலோம் தூதரகத்திற்கு எச்சரிக்கை வந்தது என்பதை மறுத்துக் கூறினார்: "பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி முன்கூட்டிய தகவல்கள் ஏதும் வரவில்லை." இஸ்ரேல் இராணுவ வானொலியிடம் நேதன்யாகு ஒரு இஸ்ரேலிய பெருநிறுவன முதலீட்டு மாநாட்டில் லிவர்பூல் சுரங்கப்பாதை நிலையத்திற்கு அருகே இருக்கும் கிரேட் ஈஸ்டெர்ன் ஹோட்டலில் கலந்து கொள்ளத் திட்டமிட்டிருந்தார்; ஆனால் "முதல் வெடிப்பிற்கு பின்னர் நம்முடைய நிதி மந்திரி எங்கும் செல்லவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார்" எனத் தெரிவித்தார்.

World Net Daily இடம் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி தனக்கு முன்னெச்சரிக்கைகள் வந்ததாக கூறப்படும் தகவல்கள் "முற்றிலும் தவறானவை... முதல் குண்டுவெடிப்பிற்குப் பின், நாங்கள் ஹோட்டலை விட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தோம். வெளியில் செல்லவிருந்த நேரத்தில், பாதுகாப்புப் பிரிவினர் நான் பேசவிருந்த இடத்தின் அருகில் குண்டுவெடிப்பு இருந்ததாகக் கூறினர். நாங்கள் ஓட்டலுக்குள் சென்று அங்கேயே இருந்துவிடுமாறு கூறப்பட்டோம்" என்று நேதன்யாகு கூறினார்.

Sky News ல் வந்துள்ள அறிக்கை பற்றி கேட்கப்பட்டபோது, பெருநகர போலீஸ் ஆணையர் சேர் இயன் பிளேயர் விடையிறுப்பில் பொருள் மாறுபடும் வகையில் விடையிறுத்தார். தாக்குதல்களுக்கு சில நிமிஷங்கள் முன்பு தூதரகத்திற்கு போலீசாரிடமிருந்து எச்சரிக்கை கிடைத்தாக இஸ்ரேலியர் கூறுவதைப் பற்றித் தான் ஏதும் கூறத்தயாரில்லை என்று அவர் சொன்னார். "குறிப்பட்ட வகையில் எச்சரிக்கை இருந்திருந்தால் அதற்கேற்ப நாங்கள் நடந்து கொண்டிருப்போம் என்பது உண்மையே... ஆனால் அந்த நேரத்தில் எச்சரிக்கை பற்றி ஏதும் எங்களுக்குத் தெரியாது."

இஸ்ரேல், இங்கிலாந்தை எச்சரித்தது என்று Stratfor கூறுகிறது

அமெரிக்க உளவுத்துறை, இராணுவ அதிகாரிகள் ஆகியவற்றுடன் தொடர்புடைய, உளவுத்துறை பகுப்பாய்வு வலைத் தளமான Stratfor, இந்த அறிக்கைக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் பல முன்னாள் CIA ஊழியர்கள் சம்பளம் பெறுபவராக உள்ளனர். AP தகவலை அது மறுத்துள்ளது; உண்மையில் இஸ்ரேல் இங்கிலாந்திற்கு, லண்டன் மீதான தாக்குதல் பற்றி முன் எச்சரிக்கை கொடுத்தது என்று இது கூறுகிறது.

ஜூலை 7ம் தேதி Strafor எழுதியதாவது: "இஸ்ரேல் முதல் தாக்குதலுக்கு சில "நிமிஷங்கள் முன்பாக" எச்சரித்தது என்ற ஆரம்ப கூற்றுக்களுக்கு மாறாக, உளவுத்துறை வட்டாரங்களில் உறுதிசெய்யப்படாத வதந்திகளின்படி, இஸ்ரேல் அரசாங்கம்தான் லண்டன்மீது தாக்குதல்கள் வரலாம் என சில நாட்களுக்கு முன்பே உண்மையில் எச்சரித்ததாக தெரிகிறது. இதற்கு முன்னரும் பாதியிலேயே கைவிடப்பட்டுவிட்ட சாத்தியமான சில தாக்குதல்களை பற்றி இஸ்ரேல் முன் தகவல்களை கொடுத்திருக்கக்கூடும். பிரிட்டிஷ் அரசாங்கம், ஸ்கொட்லாந்தில், கிளினேகிள்ஸில் நடக்கும் G-8 உச்சி மாநாட்டை தடைக்குட்படுத்தவோ லண்டனுக்கு வருகை புரிய இருந்த வெளிநாட்டுக் கனவான்களின் பயணத்தை இரத்து செய்யவோ விரும்பவில்லை; முந்தையதை போல் இதுவும் தவறான எச்சரிக்கையாக இருக்கலாம் என்று அது கருதியது.

"பல நாட்கள் இந்தத் தகவல் பற்றி பிரிட்டிஷ் அரசாங்கம் பேசாமல் இருந்ததோடு விடையிறுப்பை கொடுக்கவுமில்லை. இஸ்ரேலிய அரசாங்கம் இதைப்பற்றி பகிரங்கமாக ஏதும் கூறவில்லை என்றாலும், அது நீண்டகாலம் சும்மா இருக்காது. அது வெகு விரைவில் பெரிய பயங்கரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் தோல்வி அடைந்ததற்காக அது பிளேயர் மீது அழுத்தம் கொடுக்கும்."

பிரிட்டனின் அச்சுறுத்தல் தரம் ஏன் குறைக்கப்பட்டது?

பிரிட்டிஷ் அதிகாரிகள் அதிகாரபூர்வமாக, அசாதாரண வகையில் அச்சுறுத்தல் தரத்தை குறைத்தற்கான காரணமும் நம்பகத்தன்மையை கொண்டிருக்கவில்லை; அதுவும் தொழிற் துறையில் வளர்ச்சியுற்ற நாடுகளின் G-8 உச்சி மாநாட்டு நேரத்தில் அவ்வாறு குறைக்கப்பட்டது விந்தையே ஆகும்.

பயங்கரவாதம் பற்றிய தகவல் Ml5 இன் கூட்டு பயங்கரவாதம் பற்றிய பகுப்பாய்வு மையத்தால் (Joint Terrrorism Analysis Centre) மேற்கொள்ளப்படுகிறது. ஜூன் மாதம் JTAC அச்சுறுத்தல் தரத்தைக் குறைத்துவிட்டது; இதற்கு காரணம் 9/11க்கு பின்னர் ஓர் அச்சுறுத்தல் பற்றிய கவலை மிகக் குறைவு என்று கருதப்பட்டது. அச்சுறுத்தல் தரங்கள் ஏழுவிதமாக பிரிக்கப்பட்டுள்ளன; ஜூலை 7 அன்று பிரிட்டன் கொடுத்தது "கணிசமான" (substantial) என்ற தரத்தில் இருந்தது. இது "கடுமையான பொது" (Severe General), "கடுமையான குறிப்பிட்ட இடம்" (severe specific), "தவிர்க்கமுடியாதது" (Imminent) என்பதற்கு அடுத்த இடத்தில் உள்ளது.

இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதற்கு பொதுவான குறிப்பு Financial Times, ஜூன் 7ம் தேதி பதிப்பில்தான் வந்தது; அது விளக்கியதாவது: "முக்கியமான செயற்பாடுகளுக்கு சமீபத்தில் கொடுக்கப்பட்ட ஆலோசனை குறிப்பின்படி அச்சுறுத்தலின் தரம் இரண்டாம் உயர்ந்த தரமான 'கடுமையான பொது' என்பதில் இருந்து குறைந்த 'கணிசமான' என்ற தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது." [பைனான்சியல் டைம்ஸ் கடுமையான பொது என்பதை இரண்டாம் உயர்தரம் என்று கூறியுள்ளது வெளிப்படையான தவறு ஆகும் --- ஆசிரியர்].

"பாதுகாப்புத் துறை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்புக் கொண்ட முறைப்படி, வணிகங்கள் எழுத்து மூலமான ஆபத்து மதிப்பீடுகளையும் பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய முறையான குறிப்பையும் பெறுகின்றன. இவை பகிரங்கமாக அறிவிக்கப்படுவதில்லை."

அந்த நேரத்தில் ஏன் பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துவிட்டது என்பதற்கு எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. பிரிட்டிஷ் பொதுத் தேர்தலுக்கான பிரச்சாரம் மே மாதம் நடைபெற்றபோது அது உயர்ந்த தரத்தில்தான் வைக்கப்பட்டிருந்தது.

The Financial Times ம் மற்ற செய்தித் தாட்களும் பிரிட்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்த ஆதரவு திரட்டிய நேரத்தில் பயங்கரவாதத்தால் வரக்கூடிய ஆபத்தைப் பற்றிய கவலைகளை நீக்கும் வகையில் ஒலிம்பிக் குழு உறுப்பினர்களை சேர் இயன் பிளேயர் சந்தித்திருந்தார். ஒலிம்பிக் நடத்துவதில் ஆர்வம் காட்டிய நகரங்களில் நியூ யோர்க், மாட்ரிட், மாஸ்கோவும் அடங்கும்; அனைத்துமே சமீபத்தில் பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களின் இலக்குகளாக இருந்தவை.

பைனான்சியல் டைம்சின் ஜிம்மி பேர்ன்ஸ் ஜூலை 7ம் தேதி எழுதினார்: "முதல் வெடிப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக, பிபிசி யின் Today நிகழ்ச்சியை கேட்டவர்கள், மெட்ரோபாலிடன் போலீஸ் ஆணையர், சேர் இயன் பிளேயர் 2012 ஒலிம்பிக் நிகழ்ச்சிகள் லண்டனில் நடைபெறுவதற்கு சற்றுக் காரணமாக இருந்தது பற்றி பெருமிதம் அடைந்தார் என்று கேள்வியுற்றனர்.

"லண்டனின் அந்தஸ்து உலகின் முக்கிய தலைநகரங்கள் மற்றும் நிதிய மையங்களில் முக்கியமான ஒன்று என இருந்தாலும், பயங்கரவாதத்தின் தலையங்கத்தை ஈர்க்கும் முக்கிய இலக்கு என்னும் வகையில் அதன் கவனமும் இருந்த முறையில், நகரம் விளையாட்டுக்களை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு சேர் இயன் லண்டன் உலகெங்கிலும் இருந்து வரும் பார்வையாளர்களை உபசரிப்பதற்கு பாதுகாப்பாக உள்ளது என்று கொடுத்த உத்தரவாதமும் உதவியது."

ஏலத்தில் பிரிட்டன் பங்கு பெற்றபோது பெப்ரவரி 1996 ல் Canary Wharf க்குப் பின்னர் எந்தப் பெரிய பயங்கரவாத தாக்குதலும் நடைபெறவில்லை என்று வற்புறுத்தப்பட்டது. சேர் இயன் பிளேயர் ஒலிம்பிக் நடத்துபவர்கள் மாநகரத்தின் "இடையில்லாத எதிர்-பயங்கரவாத- அனுபவங்களை நம்பலாம் என்றும் இது உலகின் மற்ற போலீசாரின் பொறாமையை தூண்டும் வகையில் உள்ளது என்றும் தெரிவித்தார்."

பேர்ன்ஸ் குறிப்பிட்டுள்ள ஒரு கூடுதலான குறிப்பு, "பாதுகாப்பு மற்றும் போலீசாரின் குவிப்பு பொதுவாக இந்நேரத்தில் வேறு இடத்தில், அதாவது ஸ்கொட்லாந்தில் நடைபெறும் G-8 உச்சிமாநாட்டின்மீதுதான் இருந்தது."

பேர்ன்ஸ் தொடர்கிறார்: "உச்சிமாநாட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 12,000 சிறப்புப்படை அதிகாரிகளில் பாதிப்பேர் இங்கிலாந்தில் இருந்து, அதுவும் லண்டனில் இருந்து மிக அதிக அளவு அனுப்பப்பட்டிருந்தனர். பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, மூத்த போலீஸ் அதிகாரிகள் 1,500 மாநகரப் போலீஸ் அதிகாரிகள் லண்டனுக்கு திருப்ப அனுப்பி வைக்கப்பட்டனர் என்று தெரிவித்தனர்.

குறைவான தரம் பாதுகாப்பிற்கு கொடுக்கப்பட்டதற்கு கபடமற்ற முறையில் கொடுக்கப்படும் விளக்கம் திறமையற்ற தன்மை, இங்கிலாந்து மக்களின் பாதுகாப்பு பற்றிய அசட்டைத் தன்மையுடன் இணைந்து விட்டது என்பதே ஆகும்.

4,000 போலீசார் எந்தக் குறிப்பிட்ட நேரத்திலும் உச்சிமாநாட்டுச் சூழலில், ஸ்கொட்லாந்தில், எடின்பரோக்கு வெளியே நடக்கும் நிகழ்வில், இங்கிலாந்து வரலாற்றிலேயே மிகப் பெரிய பாதுகாப்பு செயற்பாடு என்னும் முறையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால் 12,000 அதிகாரிகளும் மூன்று பாதுகாப்பு வளையங்களும் கிளெனீகிள்ஸ் ஹோட்டலை சுற்றி G-8 நாடுகளின் தலைவர்கள், மற்றும் அவர்களுடைய பரிவராங்களுக்கு, கையில் குச்சிகளும் செங்கற்களும் வைத்திருந்த ஒரு சில நூறு அனார்க்கிச எதிர்ப்பாளர்களுக்காக போடவேண்டிய தேவையில்லை.

இங்கிலாந்தை தாக்கவேண்டும் என்ற தீவிரம் உடைய பயங்கரவாதிகளுக்கு உச்சிமாநாட்டு நேரத்தில், கோட்டை போல் மகத்தான முறையில் பாதுகாக்கப்பட்டிருக்கும் உச்சிமாநாட்டு இடத்தைவிட, லண்டன் அழைக்கும் இடமாகவும் இலக்கை அடையும் இடமாகவும் தோன்றியிருக்கும் என்பது நியாயமான ஊகமே ஆகும்.

மாநகரத்தில் மொத்தம் 31,000 போலீசார் உள்ளனர்; ஆனால் எடின்பரோவிற்கு அனுப்பப்பட்டிருந்த 1,500 பேரில் பலரும் பயங்கரவாத-எதிர் நடவடிக்கைகளில் வல்லுனர்களாக இருந்திருப்பர். இதன் விளைவாக லண்டனில் பாதுகாப்புத் திறன் குன்றியிருந்திருக்கக்கூடியதற்கு வாய்ப்பு உண்டு.

பேர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளது போல், G-8 நீதி, உள்துறை மந்திரிகள் கூட்டம் ஷெப்பீல்டில் கிளெனேகிள்ஸ் உச்சி மாநாட்டிற்கு முன் நடந்ததும் "தாக்குதலுக்கு இலக்காகும் திறன் படைத்த இடங்களை பாதுகாக்க சர்வதேச ஒன்றுமையை வளர்க்க வேண்டும் என்ற கருத்திற்கு உடன்பட்டனர் என்றும் அவற்றுள் ஒன்றாக சுரங்கப் பாதை, ரயில் இணையங்கள் பாதுகாப்பிற்குட்படவேண்டும் என்றும் இருந்தது."

லண்டனில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் பற்றி எந்த முடிவிற்கும் இப்பொழுது வருவது இயலாததாகும். அவர்கள் எவராக இருந்தாலும், அவர்களுடைய அரசியல் நோக்கம் எதுவாக இருந்தாலும், அவர்கள் ஒரு பிற்போக்குத் தனமான குற்றத்தை செய்துள்ளனர்; அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிடிக்குள்தான் அவர்கள் விழுந்துள்ளனர்; ஏனெனில் இவை இந்தப் பெரும் சோகத்தை ஈராக் மற்றும் பயங்கரவாதத்தின் மீதான போர் என்று அழைக்கப்படும் தங்களுடைய போர்களை நியாயப்படுத்துவதற்குத்தான் இதைப் பயன்படுத்துவர்.

ஆனால், பெருகிய முறையில் வரும் ஒத்திசைவற்ற விளக்கங்களும் வினாக்களும் ஒரு முக்கியமான அரசியல் உண்மையை சுட்டிக் காட்டுகின்றன: ஏகாதிபத்திய அரசாங்கங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் என்ற குரலை எழுப்புவது, இராணுவவாதத்தை வெளியிலும், அடக்குமுறையை உள்நாட்டில் கட்டவிழ்த்து விடுவதற்கும் போலிக் காரணத்தை அளிக்க பயன்பட்டுள்ளது; பெரும்பாலான மக்களுடைய நலன்களை பற்றிய அக்கறையைவிட இதில்தான் கவனம் செலுத்தப்படுகிறது.

எப்பொழுதும் போல், அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் குறிப்பாக, பயங்கரவாதத் தாக்குதல்கள் ஈராக்கில் போரை நியாயப்படுத்தும் வாய்ப்புக்களாக கருதப்படுகின்றன; ஈராக்கிற்கும் அல் கொய்தாவிற்கும், அல்லது 9/11க்கும் கூட எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே: அதேபோல் ஈராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இல்லை என்பதும் அது அமெரிக்காவிற்கோ அல்லது பிரிட்டிஷ் மக்களுக்கோ எந்த அச்சுறுத்தலையும் முன்வைக்கவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved