World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Live 8 Edinburgh: marching for the establishment

எடின்பரோவில் Live 8: அரசியலை கட்டுப்படுத்துவோருடனான அணிவகுப்பு

By Mike Ingram
4 July 2005

Back to screen version

எடின்பரோவில் ஜூலை 2 அன்று, "வறுமையை வரலாற்றுப் பழமையாக்கிவிடு" என்ற அணியும் 200,000 மக்கள் பங்கு கொண்ட ஊர்வலமும் "வரலாற்றில் உலக வறுமைக்கு எதிரான மிகப் பெரிய, வெற்றிகரமான அணிதிரளல்" என்று கூறப்பட்டது. எடின்பரோவில் பங்கேற்றோருடைய கருத்துக்கள் எவையாயினும், இது ஒன்றும் தற்போதுள்ள அரசியல்கட்டமைப்பிற்கு எதிரான ஓர் அணிவகுப்பு அல்ல, மாறாக அதை ஆதரித்து நிகழ்ந்த அணிவகுப்பாகும். முக்கியமாக தொழிற்கட்சி பிரதம மந்திரி டோனி பிளேயர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் இருவர் சார்பாகவும் நிகழ்ந்த, பல மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்பட்ட பிரச்சாரம் ஆகும்.

ஸ்கொட்லாந்தின் பாராளுமன்றம் மற்றும் எடின்பரோ நகர மன்றம் இவற்றின் அதிகாரபூர்வ ஒப்புதலை பெற்றபின், இந்த அணிவகுப்பு எடின்பரோவின் பெருந்தகை பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்நது போப்பாண்டவரிடம் இருந்து வந்த செய்தி ஒன்று கார்டினர் கீத் ஓ'பிரைனினால் படிக்கப்பட்டது. "இந்த அணிக்காக இங்கு திரண்டிருக்கும் அனைவருக்கும் தன்னுடைய உளமார்ந்த ஆசிகளை போப்பாண்டவர் வழங்குகிறார்" என்று ஓ' பிரியன் கூறினார். இதைத் தொடர்ந்து ஒவ்வொரு சமயப்பிரிவைச் சார்ந்த பேச்சாளர்களின் கருத்தரங்கமாக அரங்கு மாறியது. இவையும் சில தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும், பிரபல்யமானவர்களும் அரசு சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள், அறக்கட்டளைகளின் சார்பு பேச்சாளர்கள் என்று டஜன் கணக்கில், எதிர்வரும் உலகச் செல்வம் கொழிக்கும் நாடுகளின் G 8 கூட்டத்திற்கு அது ஒப்புக் கொண்டுள்ளபடி கூடுதலான உதவித் தொகை கொடுத்தல், மற்றும் கடன் தள்ளுபடி செய்தல் இவற்றைச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

"ஒரு வினோதமான எதிர்ப்பு" என்று அழைக்கப்பட்ட முறையில் கார்டியன் செய்தித் தாள்கூட இதைப் பற்றி குறிப்பிடும் கட்டாயம் இருந்தது. "இது ஒரு விந்தையான எதிர்ப்பு ஆகும் -- பெரும் மக்கட் திரட்டு, அதிகரிக்கும் உலகின் கடன்களை இரத்து செய்யவும் உதவித் தொகையை இரட்டிப்பாக்கவும் அரசின் கொள்கைகளுக்கு முக்கிய ஆதரவு கொடுக்கிறது. இந்த அணிவகுப்பும், கோஷங்கள் ஒலிக்கும் தினம், நிதி மந்திரியின் உரையைக் கேட்பதற்கு மக்கள் அனுமதிசீட்டு வாங்குவதற்கு போராடிய ஒரே நிகழ்ச்சியாகும்."

தொழிற்கட்சி நிதி மந்திரியான கோர்டன் பிரெளன் முக்கிய நிகழ்வில் ஒரு பேச்சாளராக இருப்பார் என கூறப்பட்டிருந்தது; ஆனால் அதற்கு மாறாக, கிறிஸ்துவ உதவி மற்றும் ஸ்கொட்லாந்து திருச்சபை இரண்டும் ஏற்பாடு செய்திருந்த 900 பேர் அடங்கிய அணிவகுப்பில் அவர் பேசினார். இன்னும் நான்கு நாட்களில் க்ளினீகிள்ஸில் கூடவிருக்கும் உலகத் தலைவர்களின் "கடமை" நடவடிக்கை எடுக்க கேட்கப்பட்டதிற்கு பதிலளிப்பதாகும் என்று அவர் கூறினார். அவர்களுடைய முயற்சிகளினால்தான் செல்வம் படைத்த நாடுகள் 38 நாடுகளுடைய கடன்களை இரத்து செய்ய உடன்பட்டுள்ளதாகவும் ஆபிரிக்காவின் வளர்ச்சிக்கு இரு மடங்கு உதவித் தொகை அளிப்பதாகவும் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த அணியின் வாய்ப்பை பயன்படுத்தி தொழிற்கட்சியின் கோரிக்கையான ஐரோப்பிய ஒன்றியம் விவசாய உதவித்தொகைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும் என்றும் பிரெளன் தெரிவித்தார்; தடையற்ற சந்தைக்கான அழைப்பு, ஆபிரிக்காவிற்கும் "நியாயமான வணிகத்திற்கான" அக்கறையாக இருக்கும் என்றும் சித்தரித்தார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இவற்றை திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட தேதித்குள் செயல்படுத்த வேண்டும் என்றார். "இந்த தசாப்தத்திற்குள் வீணான ஏற்றுமதி உதவித் தொகைகளை அகற்றுவதற்கு ஒரு கால நிர்ணயம் செய்வோம்" என்று அவர் கூறினார்.

எடின்பரோ நிகழ்ச்சியுடன், ஒரு மகத்தான ஊடக மின்னல் தாக்குதல் போன்ற நிகழ்ச்சிகள் BBC தொலைக்காட்சியிலும், வானொலியிலும் நாள் முழுவதும் இருந்தன; தொடர்ச்சியான Live 8 இசை நிகழ்ச்சிகளை உலகம் முழுவதிலும் மில்லியன் கணக்கான மக்கள் பார்த்தும், கேட்டும் ரசித்தனர். டெய்லி மிரர் மற்றும் அதன் ஸ்கொட்டிஸ் துணை ஏடுமான சண்டே மெயிலும் ஆயிரக்கணக்கான "வறுமையை வரலாற்று பழைமையாக்கிவிடு" என்ற கோஷம் கொண்ட அட்டைகளை அடித்துக் கொடுத்திருந்தன. டைம்ஸ் ஏடும், இண்டிபென்டென்ட் ஏடும் தங்கள் ஏடுகளில் முழுப் பக்கங்களை இலவசமாக G8 தலைவர்களுக்கு அமைப்பாளர் Bob Geldof எழுதிய பகிரங்க கடிதத்தை அச்சடித்து கொடுத்ததுடன், இண்டிபென்டென்ட் அதை முதற்பக்கத்திலும் பிரசுரித்திருந்தது.

ஓர் அரசியல் அணிவகுப்பு என்பதை விட பூங்கா ஒரு கோடைக்கால விழாவைத்தான் ஒத்திருந்தது; கணிசமான மக்கள் இலவச வெளிப்புற இசை நிகழ்ச்சியை களித்தனர்; இடையிடையே பேச்சுக்களும் இருந்தன; அவற்றிற்கு அதிக கவனம் கொடுக்கப்படவில்லை. பலரும் பெரிய பூங்காவின் மறுபறுத்தில் இருந்த அரங்கத்தை பற்றி அறிந்திருக்கவில்லை போலும்; அதற்குப் பதிலாக குழந்தைகளின் விளையாட்டு திடலையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கூடாரங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர்.

நகர மையத்தை சுற்றி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறுகிய வட்டவடிவ அணிவகுப்பிற்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள் பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து பங்கு பெற்றனர். இது "வறுமைக்கு எதிரான மனிதச் சங்கிலி" என்று அழைக்கப்பட்டது. அனைவருக்கும் இடம் இல்லை என்று ஒலி பெருக்கி மூலமும் மற்ற விதங்களிலும் அறிவிப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இதில் பங்கு பெற்ற அமைப்புக்களில் Scottish Liberal Democrats, Scottish National Party, Scottish Socialist Party மற்றும் டஜன் கணக்கில் Catholic Agency for Overseas Development (CAFOD), Salvation Army அடங்கிய சமயக் குழுக்கள் ஆகியவை அடங்கியிருந்தன. இந்த அணிக்கு ஸ்கொட்லந்தின் முதல் மந்திரி ஜாக் மக்கொன்னெல் ஆதரவு கொடுத்திருந்தார்.

பெரும்பாலான மக்கள் இதை உலக வறுமைக்கு எதிராக அறநெறிவகைப்பட்ட ஒரு நிலைப்பாடு என்று எடுத்துக் கொண்டனர். இத்தகைய நிகழ்வுகள் உண்மையிலேயே G8 உச்சிமாட்டிற்கு தாக்கத்தை கொடுக்குமா என்ற ஐயுறவை கொண்டிருந்தனர். ஆனால் கூடுதலானோரின் நிலைப்பாடு விமர்சனமற்றதாகவே இருந்தது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்கள் "Live 8 ஏகாதிபத்தியத்தின் சார்பிலான ஒரு அரசியல் மோசடி" என்ற அறிக்கையை வினியோகம் செய்தனர்; உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் கூட்டத்திற்கு வந்திருந்த சிலருடன் அரசியல் கருத்துக்கள் சிலவற்றை விவாதித்தனர்.

முன்பு அயர்லாந்தின் டப்ளினில் வசித்துவந்த, இப்பொழுது ஸ்கொட்லாந்தில் வாழும் ஒரு தம்பதிகள் தாங்கள் ஈராக்கிய போருக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அணிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை; ஆனால் இந்த நிகழ்விற்கு ஈர்க்கப்பட்டிருந்தனர். "நம்மால் ஒரு மாறுதலை ஏற்படுத்த முடியும், நம்முடைய குரல்கள் கேட்கப்படும் என்ற உணர்வு எங்களிடம் இருப்பதால் நாங்கள் வந்தோம். நான் இப்பொழுதும், எப்பொழுதும் போருக்கு எதிரானவர்கள்தான். பிளேருக்கு சென்ற தடவை வாக்களிக்கவில்லை; அதற்கு முன்பும் வாக்களிக்கவில்லை; ஆனால் இவர்கள்தான் இப்பொழுது முடிவு எடுப்பவர்கள்; அவர்களின்மீது ஆளுமையை செலுத்த இது ஒரு வாய்ப்பு; ஆனால் போரின் போது இது பயன்படவில்லை. ...அவர்கள் ஆபிரிக்காவிற்கும் மத்திய கிழக்கிற்கும் ஒத்த செயல்திட்டத்தைத்தான் உறுதியாக கொண்டிருக்கிறார்களோ எனத் தோன்றுகிறது; ஆனால் நாம் என்ன செய்ய முடியும்? வீட்டில் உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் அசட்டை செய்வதா?" என கூறினர்.

National Trust for Scotland உடைய இயக்குனர் ஒருவரான Peter Burman கூறினார்: "புல் தரையில் கூடியிருப்பதில் நான் சிலிர்ப்படைகிறேன்; இந்தச் சூழ்நிலையையும் இங்கு நடப்பதையும் சிறப்பாக நினைக்கிறேன். ஒன்றாகச் சென்று நாம் அனைவரும் ஏதேனும் செய்யமுடியும்; ஆனால் ஒரு வார இறுதி ஆர்ப்பாட்டங்களினாலும், வாரம் முழுமையான ஆர்ப்பாட்டங்களாலும் இது சாதிக்கப்பட முடியும் என்று நான் நினைக்கவில்லை."

வந்திருந்தவர்களில் சிலர், சிறுபான்மையாக இருந்தபோதிலும்கூட, சற்றுக் கூடுதலான விமர்சன ரீதியான கருத்தை கொண்டிருந்தனர்.

பிரான்சில் இருந்து வந்துள்ள Celine இங்கிலாந்தில் இரண்டு மாதமாக படித்துக் கொண்டிருக்கிறார். போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அவர் கலந்து கொள்ளவில்லை; ஆனால் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்ப்பதாக கூறினார்.

"மத்திய கிழக்கில் புஷ்ஷும் பிளேயரும் எக்கொள்கைகளை கொண்டிருந்தனரோ, அவற்றையேதான் அவர்கள் ஆபிரிக்காவிலும் கொண்டுள்ளனர். அவர்கள் மக்களை சுரண்டுகின்றனர்; ஒரே வடிவமைப்பில் இல்லாவிட்டாலும், அவர்களுக்கு இலக்கு ஒன்றுதான். சமூக முறையை மாற்றாமல் வறுமையை ஒழிக்க முடியாது. கடன்களை இரத்து செய்வது அரசாங்கங்களுக்கு நன்மையே ஒழிய மக்களுக்கு நேரடியாகப் பலன் கிடையாது. ஆயினும்கூட, ஆபிரிக்காவில் நிலைமை மிகவும் மோசம்தான். பிரான்சில் எங்களுக்கு ஒரு குறைந்த சமூகநல முறையாவது உள்ளது." என்று அவர் கூறினார்

இளவயதினரான ஸ்பெயினின் Angie, Alex இருவரும் தாங்கள் G 8 ஐ ஒட்டிய நிகழ்வுகளில் பங்கு பெறுவதற்காக லண்டலில் இருந்து வந்ததாகக் கூறினர். பெப்ரவரி 2003ல் லண்டன் ஹைட் பார்க்கில் இரண்டு மில்லியன் மக்கள் பங்கு பெற்ற மகத்தான போர் எதிர்ப்பு அணியில் அவர்கள் முன்பு பங்கு பெற்றிருந்தனர். உலக சோசலிச வலைத் தளத்திடம் அலெக்ஸ் கூறினார்.

"அரசியல் தலைவர்கள் மீது கட்டுப்பாடு செலுத்துவதற்கு ஆர்ப்பாட்டங்கள் ஒன்றும் திறமையான வழிமுறை இல்லை என்பது தெளிவு; ஏனெனில் பிரச்சினை என்னவென்றால் ஜனநாயகமே ஒரு போலித் தன்மையைக் கொண்டுள்ளது."

அங்கி தொடர்ந்தார்: "எவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறோமோ, அவர்களே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும்போது, ஆர்ப்பாட்டத்தினால் என்ன பயன்? எவரைக் கேட்டாலும் அவர்கள் போர் எதிர்ப்பாளர்களாகத்தான் உள்ளனர். மக்களிடம் நீங்கள் போருக்கு ஆதரவு தருகிறீர்களா என்று கேட்டால் இல்லையே என்றுதான் கூறுகின்றனர். ஆனால் மனச்சாட்சியால் உந்தப்பட்டதால் பலரும் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டங்கள் பிரச்சினையின் வேர்களைச் சென்று அடைவதில்லை."

அலெக்ஸ் கூறினார்: "அவை பிரச்சினையின் வேர்களை அடையாததற்கு காரணம், முதலாளித்துவ முறைதான் பிரச்சினையாக உள்ளது. முதலாளித்துவ முறையில் வறுமையை வரலாற்றுப் பழைமையாக்கிவிட முடியாது"

எடின்பரோவில் நடக்கும் ஆர்ப்பாட்டம் உண்மையில் பயனற்றுத்தான் போகும் என்று அன்ஜி கருதுகிறார்: "மக்களை தாங்கள் ஏதோ செய்வதாக இது நினைக்க வைக்கிறது. வெள்ளைக் கைப்பட்டைகளை அணிவது பற்றி அவர்கள் பேசுகிறார்களே ஒழிய, பிரச்சினையின் வேர்களை அணுகவில்லை". Live 8 என்பது "பிரெளனுக்கும் பிளேயருக்கும் தங்களுடைய இலக்குளை அடைவதற்கான உதவியாகும். பிளேயரின் தோள்களில் தன்னுடைய தலையை வைத்துக் கொண்டிருக்கும் Geldof உடைய முட்டாள்தனமான புகைப்படம் இருந்தது. இந்தப் பிரச்சாரம் முழுவதுமே அரசாங்கத்தின் செலவில் நடந்திருந்தாலும் எனக்கு அதில் வியப்பு ஏதும் இருக்காது."

அரசாங்கம் Live 8 ஐயும் "வறுமையை வரலாற்றுப் பழமையாக்கிவிடு" என்பதையும் பயன்படுத்தி "ஐரோப்பிய ஒன்றிய தலைமை ஏற்றபின் தங்கள் தோற்றத்தை முற்போக்கானதாக காட்டிக்கொள்ள பயன்படுத்துகின்றது; மேலும் ஈராக்கில் நிலவும் குழப்பத்தில் இருந்து ஒதுங்கி இருப்பது போலவும் காட்டிக் கொள்ளுகிறது. G 8 பெயரளவிற்கு கடன்களை இரத்து செய்யும், அல்லது உதவித் தொகைகளை கூட்டும்; ஆனால் ஏற்கனவே ஒதுக்கி இருக்கும் வரவுசெலவுத்திட்ட பணத்தில் இருந்து இதைச் சரி செய்வார்கள்; எனவே இதனால் ஒன்றும் பெரிய வேறுபாடு வரப்போவதில்லை. இந்நாடுகளுக்கு அவர்கள் இதைக் கூடச் செய்வதற்கு ஒரே காரணம் தங்கள் பொருளாதாரத்தை தாராளமயமாக்குவதாக அவை உறுதியளித்திருப்பதால்தான்." என்று அலெக்ஸ் கூறினார்.

அங்கி மீண்டும் "முதலாளித்துவத்திற்கு இப்பொழுது இந்நாடுகளில் இருந்து இயற்கை மூலவளங்கள் தேவைப்படுகிறது. முதலாளித்துவம் என்பதே மூலதனத்தை குவிப்பதுதான்; தனியார்மயமாக்குதல் மூலமும், சர்வதேச நிறுவனங்கள் செயல்படுவதற்கு வழியமைப்பது மூலம் இவர்கள் வறிய நாடுகளுக்கும் செல்வது இதைச் செய்வதற்கே.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved