World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

London bombings: Why does Blair oppose an inquiry into intelligence failures?

லண்டன் குண்டுவெடிப்புக்கள்: உளவுத்துறை தோல்விகள் பற்றிய விசாரணைக்கு பிளேயர் ஏன் எதிர்க்கிறார்?

By Chris Marsden
13 July 2005

Back to screen version

இந்த வாரம் பாராளுமன்றத்தில் பேசுகையில், பிரதம மந்திரி டோனி பிளேயர், 52 பேர்களின் உயிரைக் குடித்துள்ள, ஜூலை 7ம் தேதி லண்டன் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினரான கன்சர்வேடிவ்களிடம் இருந்து வந்த கோரிக்கையை நிராகரித்தார்.

டோரி தலைவரான மைக்கேல் ஹோவர்ட், ஜூலை 10 அன்று குண்டுவெடிப்புக்களை தடுப்பதற்கு "இன்னும் ஏதேனும் செய்திருக்க முடியுமா" என்பதை பற்றி ஆராய்வதற்கு ஓர் அழைப்பு விடுத்திருந்தார். ஒருவேளை உளவுத் துறையில் தவறுகள் நேர்ந்திருக்கக் கூடுமோ என்ற பிரச்சினையை இது அணுக முற்பட்டது; அதிலும் குறிப்பாக JTAC (பயங்கரவாதம் பற்றி கூட்டுப் பகுப்பாய்வு மையம்), ஜூன் மாதத்தில் இருந்து இங்கிலாந்தை எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தும் தரம் "பொது-கடுமை" என்பதில் இருந்து "போதிய அளவானது" என்று குறைக்கப்பட்டுவிட்டதை அடுத்து இவ்வினா எழுந்துள்ளது.

காபினெட் மந்திரியான ஜோன் ஹட்டன் இந்தத் திட்டத்தை கண்டித்துப் பேசுகையில் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவதற்கு "ஒவ்வொரு அவுன்ஸ்" முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உளவுப் பணித்துறையில் எந்த விதமான "மெத்தனத்திற்கும்" சான்று இல்லை என்றும் கூறினார். "எந்தக் குறிப்பிட்ட உளவுத் தகவலும்" குண்டுவெடிப்பை தவிர்த்திருக்க முடியாது என்று பிளேயரே பாராளுமன்றத்தில் கூறினார்; மேலும் இது இஸ்லாமியப் பயங்கரவாதிகள்தான் செய்திருக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.

தேசிய ஒற்றுமையை முறிக்கிறார்கள் என்ற கண்டனத்திற்குட்படுவதற்கு டோரிக்கள் அஞ்சினர். எனவே ஹோவர்ட் உடனடியாக ஒரு விசாரணை வேண்டும் என்று கோருவதற்கு பதிலாக வருங்காலத்தில் ஒரு விசாரணை மேற்கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்தார். "ஒரு குறிப்பிட்ட இலக்கை கொண்ட விசாரணை நாளடைவில் ஒரு அமைதியான, நடுநிலைப் பார்வையில் இருந்து தக்க படிப்பினைகளை அறியவும், ஊகங்களை களையவும் உதவும்" என்றும் அவர் கூறினார்.

அத்தகைய விசாரணையை எதிர்க்கையில், பிளேயர் புஷ் நிர்வாகத்தின் சுவடுகளைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார். செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர், வெள்ளை மாளிகை உலக வணிக மையம் அழிக்கப்பட்டது, மற்றும் பென்டகன் மீதான தாக்குதல் ஆகியவை ஏன் தடுக்கப்படவில்லை என்ற விசாரணையை நடத்த திட்ட வட்டமாக மறுத்துவிட்டது.

பல மாதங்களுக்கு பின்னர்தான், FBI தலைமையிடம், கீழ்மட்ட அலுவலர்களிடம் இருந்து இஸ்லாமிய பயங்கரவாதிகளால் விமானக் கடத்தல் வகையில் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று கூறப்பட்டிருந்த சில எச்சரிக்கைகளை அசட்டை செய்தது என்பது வெளியான பின்னர், புஷ்ஷே தன்னுடைய உளவுத்துறைத் தகவல் கொடுப்பவர்கள் அதேபோன்று கொடுத்திருந்த தகவல்களை அசட்டை செய்தார் என்பது தெரிய வந்த பின்னர், தேசிய சட்ட மன்றம் விசாரணையை மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து ஒரு சிறப்புக் குழு விசாரணையை நடத்தி கடந்த கோடையின்போது தனியான அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்தது.

சட்டமன்றக் குழு அறிக்கை, சிறப்பு விசாரணைக் குழு அறிக்கை இரண்டுமே அரசாங்கத்தின் எந்தப்பிரிவும் அல்லது உளவுத்துறை சாதனத்தின் எந்தப்பிரிவும் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்த வேண்டும் என்ற முறையில் வேண்டுமென்றே நடந்து கொள்ளவில்லை என்ற முன்கருத்தில்தான் தங்கள் கண்டுபிடிப்புக்களை வெளியிட்டன. FBI, CIA மற்ற அரசுத் துறைகள் கடத்தல்காரர்கள் முயற்சியை தோல்வி அடையச் செய்யமுடியாமற்போனதற்கு காரணம் அமைப்பு முறையில் இருந்த தவறுகளும் "புள்ளிகளை ஒன்று சேர்த்துப்" பொருளாக்கி கொள்ள முடியாமல் போனதும்தான் என்று கூறிவிட்டன.

லண்டன் குண்டுவெடிப்புக்களிலும்கூட, ஏராளமான வினாக்கள் வெளிவந்துள்ளன. (See"Unanswered questions in Londom bombings.")

* பிரிட்டன் பற்றிய அச்சுறுத்தல் தரம், எடின்பரோவிற்கு அருகில் உள்ள கிளீனெக்கிள்சில் கடந்த வாரம் G8 பெரும் தொழில் முன்னேற்ற நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் ஏன் உயர்த்தப்படவில்லை?

* இஸ்ரேலிய தூதரகத்திற்கு குண்டுவெடிப்புக்கள் பற்றி முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது உண்மையா?

* இஸ்ரேலிய பாதுகாப்பு படையான மொசாத் MI5 இடம், Stratfor தெரிவித்துள்ளபடி, ஒரு வேளை தாக்குதல் ஏற்படக்கூடும் என எச்சரித்ததா?

கடந்த இரண்டு நாட்களில், விடை காணவேண்டிய வினாக்கள் அதிகமாகவே வெளிவந்துள்ளன. இதில், ஸ்காட்லாந்து யார்டுடன் இணைந்து செயலாற்றும், பிரான்சின் பயங்கரவாத-எதிர்ப்பு போலீஸ் கண்கானிப்பாளர் Christophe Chaboud குறிப்பிட்டுள்ளபடி, இராணுவ வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது முக்கிய உண்மையாகும்.

இதன் மற்றொரு பொருந்தா கருத்தும் உள்ளது. ஜூலை7 காலை, "BBC Radio Five Live", நெருக்கடி நிர்வாக நிறுவனமான Visor Consultants உடைய நிர்வாக இயக்குனர் பீட்டர் பவருடன் நடத்திய பேட்டியை ஒளிபரப்பியது. பவர் முன்னாள் ஸ்கொட்லான்ட் யார்ட் அதிகாரியாக இருந்து பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவில் பணியாற்றியவர் ஆவார்.

"Radio Five" இடம் பவர் கூறினார்: "இன்று காலை ஒன்பதரை மணிக்கு நாங்கள் ஆயிரம் பேர் அடங்கிய படைப்பிரிவிற்கு உண்மையிலேயே ஒரு பயிற்சித் திட்டத்தை, ஒரே நேரத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடைபெற்றால் என்ற செய்வது என்பது பற்றி, அதுவும் இன்று காலை நிகழ்ந்த இரயில்வே நிலையங்களிலேயே நடத்தினோம். எனவே இப்பொழுதும் என் உடலில் ரோமங்கள் சிலிர்த்து நிற்கின்றன."

அவ்வினாவைக் கேட்டவர் பவரைக் கேட்டார்: "இதைச் சரியாக அறிந்து கொள்ளுவோம்; இத்தகைய சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது என்று இன்று காலையில் நீங்கள் ஒரு பயிற்சியை நடத்தினீர்களா? இந்த குண்டு வெடிப்புக்கள் நீங்கள் பயிற்சி நடத்திக் கொண்டிருந்தபோது நிகழ்ந்தனவா?"

பவர் பதில் கூறினார், "ஆம் துல்லியமாக; இன்று காலை 9.30 மணிக்கு, நாங்கள் இதற்காக ஒரு படைப்பிரிவிற்கு திட்டமிட்டிருந்தோம்; வெளிப்படையான காரணங்களுக்காக அதன் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை; அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு தெரியும்."

இதுவும் பல பிரச்சினைகளை எழுப்புகிறது. எந்தப் படைப்பிரிவிற்காக இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது? அந்தப் பிரிவுற்கு அரசாங்கத்தொடர்புகள் ஏதேனும் உண்டா? யார் இந்தப் பயிற்சிக்கான நேரத்தையும், இடத்தையும் நிர்ணயித்தது?

குண்டு வெடிப்புகளுக்கு முன்பு அரசாங்க நடவடிக்கைகளை பற்றிய விசாரணை "திசை திருப்பும் வகையில்தான் இருக்கும்" என்று கூறப்படுபவை, ஆளும்செல்வந்தத் தட்டு தன்னை கண்காணிப்பில் இருந்து காத்துக் கொள்ளும் வகைகளில் ஒன்றாகத்தான் உள்ளன. இதன் விளைவுகளை அனுபவிக்க இருப்பவர்கள் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஆவர்; அவர்களோ தங்கள் ஜனநாயக உரிமைகளை தியாகம் செய்யுமாறு கோரப்படுகின்றனர். ஒவ்வொரு நாளும் புதிய அடக்கு முறைகளுக்கான நடைமுறைகள் வந்த வண்ணம் உள்ளன.

ஒருபுறத்தில் அரசாங்கம் "பயங்கரவாதத்தின்மீதான போர்" எனக் கூறப்படுவது உலகை எதிர்கொண்டுள்ள ஒற்றை முக்கியமான பிரச்சினை என்கிறது; மறுபுறத்தில், பொதுமக்களுக்கு லண்டனில் நடந்த குண்டுவெடிப்புக்கள், இரண்டாம் உலகப்போருக்குப் பின் மிகப் பெரிய அளவில் உயிரிழப்புக்களை ஏற்படுத்தியவை பற்றி மக்கள் தெரிந்து கொள்ளும் உரிமை இல்லை என்று கூறுகிறது; ஆனால் அவை எவ்வாறு நடைபெற்றன என்பது பற்றிக் கூறவில்லை.

அரசாங்கம் பின்னர் ஒப்புக் கொண்டு ஜூலை 7ம் தேதி நிகழ்வுகளில் அதன் பங்கு பற்றி விசாரண நடத்தினாலும்கூட, நடைமுறைக் கட்சிகள், பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தும் அத்தகைய விசாரணைகள் பால் எவ்வித நம்பிக்கையையும் வைக்க முடியாது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிகாரபூர்வ விசாரணைகளின் செயற்பாடு போல்தான் இவையும் இருக்கும்; மிக முக்கியமான உண்மைகளை மறைத்தல், ஜனநாயக உரிமைகள் மீது உள்நாட்டில் இன்னும் கூடுதலான தாக்குதல் நடத்துவதற்குக் காரணங்கள் கற்பிக்கப்படல், இராணுவவாதம், ஆக்கிரமிப்பு இவற்றை அயல்நாடுகளில் நடத்துதல் போன்றவற்றிற்குத்தான் அவை உதவும். உண்மையான, சுதந்திரமான விசாரணை என்பது ஆளும் செல்வந்தத்தட்டிற்கும் அதன் போர், சமூகப் பிற்போக்குத் தனமான கோள்கைகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒரு அரசியல் இயக்கத்தின் விளைவாகத்தான் வெளிவரும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved