World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Journalist killed after investigating US-backed death squads in Iraq

ஈராக்கில் அமெரிக்க ஆதரவு கொலைக் கும்பல்களை புலன் விசாரணை செய்த பத்திரிக்கையாளர் கொல்லப்பட்டார்

By James Cogan
1 July 2005

Back to screen version

Knight Ridder செய்தி நிறுவனத்தின் ஈராக்கிய சிறப்பு நிருபரான யாசீர் சாலிஹி (Yasser Salihee) என்பவர் ஜூன் 24 அன்று தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது கொல்லப்பட்டார். மேற்கு பாக்தாத்திலுள்ள அவரது வீட்டிற்கு அருகில் அமெரிக்க மற்றும் ஈராக் துருப்புக்கள் திறந்துள்ள ஒரு சோதனைச் சாவடியை அவர் நெருங்கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு அமெரிக்கர் தனது சினைப்பர் துப்பாக்கியால் சாலிஹியை சுட்டார் என்று நம்பப்படுகிறது. இச்சம்பவத்தை நேரில் கண்டவர்களின் படி, முன்னெச்சரிக்கை துப்பாக்கிப் பிரயோகம் என்று இதனைக் கூறவில்லை.

சாலிஹி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒரு விசாரணை நடத்திக்கொண்டிருப்பதாக அமெரிக்க இராணுவம் அறிவித்திருக்கிறது. என்றாலும், Knight Ridder ஏற்கெனவே "அவரது நிருபர் பணியோடு இந்த துப்பாக்கி சூடு எந்த வகையிலும் சம்மந்தப்பட்டது என்று கருதுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நினைக்கவில்லை" என்று அறிவித்தது. ஆனால் உண்மையிலேயே, கடைசியாக அவருக்கு தரப்பட்ட பணி இந்தக் கொலைக்கு அடிப்படையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

ஆக்கிரமிப்பு எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள் என்று கூறப்படுபவர்கள் ஆகியோர், நீதிமன்ற நடைமுறைகளுக்கு புறம்பாக கொல்லப்படுவதை அமெரிக்க ஆதரவு ஈராக் படைகள் செயல்படுத்தி வருகின்றன என்பதற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சாலிஹி சான்றுகளை திரட்டி வந்தார். மே, மாதம் நியூயோர்க் டைம்ஸ் சிறப்பிதழில் ஒரு சிறப்புக் கட்டுரை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அவர், தனது செய்தி நிறுவனத்திற்கான புலன் விசாரணையை துவக்கினார். எப்படி அமெரிக்க இராணுவம் ஈராக்கின் உள்துறை அமைச்சக ஓநாய் பிரிகேட் (Wolf Brigade) போலீஸ் கொமாண்டோக்களை 1980 களில் எல் சால்வடாரில், இடதுசாரி கிளர்ச்சியை நசுக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட கொலைக் குழுக்கள் பாணியில் அமைத்துள்ளனர் என்பது அதில் விளக்கப்பட்டுள்ளது.

2004 ல் அமெரிக்க அதிகாரிகளும், அமெரிக்காவினால் நியமிக்கப்பட்ட அயாத் அல்லாவி தலைமையிலான இடைக்கால அரசாங்கமும், இந்த ஓநாய் பிரிகேட்டை உருவாக்கின. அந்தப் படையிலுள்ள பெரும்பாலான அதிகாரிகளும், ஊழியர்களும் சதாம் ஹூசேனின் முன்னாள் சிறப்புப் படையான குடியரசுக் காவலர் படையில் பணியாற்றிய, கொலை, சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறைகளைக் கையாண்டவர்கள் ஆவர். மோசூல் மற்றும் சமாரா போன்ற கிளர்ச்சி நகரங்களில் எழுச்சிக்கு எதிராக அந்தப்பிரிவு பயன்படுத்தப்பட்டது. மற்றும் கடந்த ஆறு வாரங்களுக்கு மேலாக பாக்தாத்திலுள்ள ஈராக் அரசாங்கம் சங்கேத பெயர் சூட்டியுள்ள "மின்னல் நடவடிக்கைக்கு'' கட்டளையிட்டதைத் தொடர்ந்து பாரியளவு ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் இப்படைப் பிரிவு முன்னணி பங்கு வகிக்கிறது.

ஜூன் 27 ல் Knight Ridder ஸ்தாபனம், சாலிஹியும் நிருபர் டாம் லெசடரும் கூட்டாக எழுதியிருந்த புலன் விசாரணைக் கட்டுரையை வெளியிட்டது. போலீஸ் கொமாண்டோக்களின் விசாரனைக்காக தடுப்புக் காவலில் இருந்து, இறந்துபோன பிணங்கள் கடைசியாக பாக்தாத்திலுள்ள பிண அறைகளிற்கு மாற்றப்பட்டதாகவும், ''ஒரு வாரத்திற்கு குறைவான நாட்களில் 30 க்கும் மேற்பட்டவைகளை தாம் கண்டுபிடித்ததாகவும்'' இந்த பத்திரிக்கையாளர்கள் குறிப்பிட்டனர்.

அவர்கள் ஒரு ''திட்டமிட்ட பாணியில் கொல்லப்பட்டிருக்கின்றனர்'' என்று மத்திய பாக்தாத் பிணவறை டைரக்டர் பெயிக் பாக்கர் என்பவர் கூறியுள்ளார். "அவர்களது கைகள் கட்டப்பட்டிருந்தன அல்லது அவர்களது முதுகுக்குப் பின்னால் கைகளில் விலங்கிடப்பட்டிருந்தது, அவர்களது கண்கள் கட்டப்பட்டிருந்தது மற்றும் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாக தோன்றுகிறது. மிகப்பெரும்பாலான மரணங்களில், அந்த இறந்தபோன மனிதர்களை பார்க்கும்போது, ஒரு கம்பியினால் அவர்கள் தாக்க்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மின்சார அதிர்ச்சியூட்டப்பட்டிருக்கிறது. அல்லது ஒரு கூர்மையான ஆயுதத்தால் அவர்கள் தாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். அத்துடன், அவர்களது தலையில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருக்கிறது" என்று அந்தக் கட்டுரை தகவல் தந்துள்ளது.

மேற்கு பாக்தாத்திலுள்ள மளிகைக்கடைக்காரர் ஒருவர், போலீஸாரால் தான் காவலில் வைக்கப்பட்டதாகவும், அன்வர் ஜாசிம் என்ற மற்றொருவரும் மே 13 ல் கைது செய்யப்பட்டதாகவும் சாலிஹியிடம் கூறினார்: "நாங்கள் காவலில் இருந்தபோது, கண்களை கட்டினார்கள், கைவிலங்குகளை எங்களுக்கு பூட்டினார்கள். இரண்டாவது நாளில் ஒருவர் இறந்துவிட்டார் என்று படையினர் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பின்னர் அது அன்வர்தான் என்று நாங்கள் கண்டுபிடித்தோம்". அங்கு கிடைத்த மருத்துவ அறிக்கைகளின் படி, யார்முக் பிணவறையில் (Yarmuk morgue) போலீஸாரினால் தள்ளப்பட்ட அன்வரின் ''தலையின் பின்பகுதியில் துப்பாக்கி குண்டு காயமிருந்தது, மற்றும் அவரது அடிவயிற்றிலும் பின்பக்கத்திலும் கழுத்திலும் வெட்டுக்களும் காயங்களும் இருந்தன'' என்று குறிப்பிட்டுள்ளது.

"நாய்கள் அந்தப் பிணத்தை சாப்பிடட்டும், ஏனென்றால் அவர் ஒரு பயங்கரவாதி, அந்தத் தண்டனைக்கு உரியவர்" என்று அந்த உடலை அப்படியே விட்டுவிடும்படி பிணவறை டைரக்டரிடம் போலீஸ் கொமாண்டோக்கள் சொல்லியதாக கூறப்படுகிறது.

ஒரு இரண்டாவது சம்பவத்தில், ஈராக் உள்துறை அமைச்சக பிரிகேடியர் ஜெனரல் கூறியது என்னவென்றால், அவரது சகோதரர் மே 14 ல் நடைபெற்ற ஒரு அதிரடிச் சோதனையில் பாக்தாத்தின் மேற்கு பகுதியிலுள்ள ஷன்னி தொழிலாளர் வர்க்க புறநகரில் கைது செய்யப்பட்டார். அவரது உடல் அடுத்தநாள் சித்திரவதை செய்யப்பட்ட அடையாளங்களுடன் காணப்பட்டது. அவரைக் கடத்தியவர்கள் "வெள்ளை போலீஸ் டயோட்டா ஜீப்பில் வந்தனர், போலீஸ் கமாண்டோக்களின் சீருடைகளையும், ஹெல்மெட்டுக்களையும் அவர்கள் அணிந்திருந்தனர், மற்றும் 9 மிமீ Glock பிஸ்டல் துப்பாக்கிகளை வைத்திருந்தனர்'' என்று நேரில் கண்டவர்கள் அந்த ஜெனரலிடம் கூறினார்கள்.

Glock பிஸ்டல் ஆயுதங்கள் பல அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றும் அவை ஈராக் பாதுகாப்புப் படைகளுக்கு அமெரிக்க இராணுவத்தால் தரப்பட்டிருக்கின்றன.

யாசர் சாலிஹியின் கட்டுரை மூன்றாவது சம்பவத்தையும் குறிப்பிட்டிருக்கிறது. ஜூன் 10 ல் போலீஸ் கொமாண்டோக்களினால் சாதி காலிப் என்பவர், அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டார். பலநாட்களுக்கு பின்னர், அவரது உடல் யார்முக் பிணவறைக்கு கொண்டுவரப்பட்டது. சாதிக்கின் சகோதரர் Knight Ridder க்கு தகவல் தரும்போது, "அவர்கள் அவரை சுட்டுக்கொல்ல முன்னர் சித்திரவதை செய்திருக்கிறார்கள். அவர் மூச்சுத் திணறச் செய்யப்பட்டிருக்கிறார் என்று டாக்டர் எங்களிடம் கூறினார். ஒரு காரினால் இழுத்துவரப்பட்டவர் போன்று அவர் காணப்பட்டார்" என்று கூறினார்.

போலீஸ் கொமாண்டோக்களின் அட்டூழியங்களுக்கு மேலும் சான்றுகள் தரும் வகையில் ஜூன் 29 ல் பிரிட்டிஷ் பைனான்சியல் டைம்ஸ் ஒரு கட்டுரையை வெளியிட்டது. பாக்தாத்தின் மேற்கு புறநகரான அபுகிரைபிலிருந்து முஸ்தபா முஹமது அலி என்பவர் மே 22 ல், மின்னல் நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நேரத்தில் ஓநாய் படையால் கைது செய்யப்பட்டார். அவர் 26 நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டினார்.

அந்தக் கட்டுரை தெரிவித்திருப்பது என்னவென்றால், "நூற்றுக்கணக்கான இதர கைதிகளுடன் உணவு, தண்ணீர் அல்லது கழிப்பிட வசதிகள் இல்லாமல் ஒரு முள்வேலி அடைக்கப்பட்ட வட்டத்திற்குள் முதல் நாளை அவர் கழித்தார்..... நான்காவது நாள் விசாரணைகள் துவங்கின. ஒநாய் படை கொமாண்டோக்கள் தனது காதிலும் பிறப்பு உறுப்பிலும் மின்சார கம்பிகளை பொருத்தி, கையினால் இயக்கப்படும் ஒரு இராணுவ தொலைபேசி மூலம் மின்சாரத்தை உருவாக்கி, அதனை பாய்ச்சினர்'' என்று அலி சொன்னார்.

பைனான்சியல் டைம்ஸ் தந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, அபுகிரைப் பகுதியில் ஓநாய் பிரிகேட் அதிரடிச் சோதனை நடத்தி வீடுகளிலிருந்து பிடித்துச் சென்ற 474 பேரில் இப்போது 22 பேர் மட்டுமே காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். விடுதலை செய்யப்பட்டவர்கள் தங்களைத் திட்டமிட்டு முறைகேடாக நடத்தியதாக குற்றம்சாட்டினர். அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் டோனால்ட் ரம்ஸ்பெல்ட் தந்துள்ள மதிப்பீட்டின்படி கிளர்ச்சியை நசுக்குவதற்கு ''ஐந்து, ஆறு, எட்டு, 10, 12 ஆண்டுகள் ஆகலாம். அதற்கு ஒட்டுமொத்த காவல்களும் கணக்கு முறையற்ற சித்திரவதைகளும் பயன்படுத்தப்படுகின்ற பிரதான கருவிகள்'' என்று அந்தப் பத்திரிக்கை கருத்து கூறியுள்ளது.

சாலிஹி திரட்டிய ஆதாரங்களைத் தொடர்ந்து பாக்தாத்தில் நடைபெற்ற மின்னல் நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களில் கணிசமான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவது, கைது செய்யப்பட்டவர்களின் கதி என்ன ஆயிற்றோ என்ற கவலைகளை மேலும் பெருக்கியுள்ளது. ஜூன் துவக்கத்தில், ஈராக் அரசாங்கம் 1,200 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியது. சிலநாட்கள் கழித்து ஜூன் 6 ல் இந்த எண்ணிக்கை 887 ஆக குறைக்கப்பட்டது. அதற்கான எந்த விளக்கமும் தரப்படவில்லை. அத்தோடு, Knight Ridder கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில மரணங்கள் இந்தக் காலத்தை ஒட்டி நடந்திருக்கின்றன.

ஒட்டுமொத்த கொலைகள் பற்றிய சந்தேகங்கள்

ஒநாய் பிரிகேட்டின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் அம்பலத்திற்கு வந்திருப்பது, ''ஈராக்கிற்கு சால்வடார் நடவடிக்கை வாய்ப்பு உண்மையாகிறது'' என்ற தலைப்பில் வெளிவந்த மாக்ஸ் பில்லர் என்பவரின் ஒரு சிறப்பு கட்டுரைக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்துகின்றன. இந்தக் கட்டுரை "For Iraq, ‘The Salvador Option' Becomes Reality" பூகோளமயமாக்கல் ஆய்வு நிலையத்தினால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஒன்பது மாதங்களுக்கு மேலாக, ஈராக்கில் நடைபெற்றுக் கொண்டுவரும் ஒரு புதிய பயங்கரமூட்டும் நிகழ்ச்சி என்னவென்றால், டசின்கணக்கான உடல்கள் குப்பைக் குவியலுக்கு இடையிலும் ஆறுகள் அல்லது கைவிடப்பட்ட கட்டடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதாகும். மிகப்பெரும்பாலான சம்பவங்களில் மக்கள் சித்திரவதைகளையும் உடல் உறுப்புக்கள் சிதைவுகளையும் சந்தித்த பின்னர், இறுதியாக தலையில் ஒரு துப்பாக்கி குண்டால் சுடப்பட்டு பரிதாபமாக இறந்திருக்கின்றனர். அமெரிக்க இராணுவம் இடைவிடாது இதுபற்றி தகவல் தரும்போது பலியானவர்கள் ஈராக் இராணுவம் அல்லது போலீஸ் துறையை சார்ந்தவர்கள் என்று கூறி வந்தது. அதேபோன்று அதன் ஊடகங்களும், இந்த வெகுஜனக் கொலைகள் ஆக்கிரமிப்பிற்கு எதிரான பயங்கரவாதிகளின் செயல் என்று தகவல் தந்தன.

"குறிப்பாக நமக்கு சட்டென்று உள்ளத்தில் பதிவது என்னவென்றால், போலீஸ் கொமாண்டோக்கள் தீவிரமாக செயல்பட துவங்கிய பின்னர், அவற்றில் பல கொலைகள் நடந்திருக்கின்றன. மற்றும் எந்தப் பகுதிகளுக்கு அவர்கள் பணிக்கு அனுப்பப்பட்டார்களோ அங்கு இவைகள் நடந்திருக்கின்றன" என்று மாக்ஸ் பில்லர் குறிப்பிட்டுள்ளார்.

எடுத்துக்காட்டாக, சென்ற நவம்பரில் மோசூல் நகரத்தை மீண்டும் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கையின் ஒரு பாகமாக செயற்பட்ட கொமாண்டோக்களினால் டசின் கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கு அடுத்த வாரங்களில், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 150 க்கு மேற்பட்டவர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. சமாராவிற்கு அருகாமையிலுள்ள தார்தார் ஏரியில் (Lake Thartar) டசின் கணக்கான உடல்கள் அந்த நகரில் கொமாண்டோக்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து காணப்பட்டன.

நாட்டின் மிகப்பெரிய கிளர்ச்சிப் பகுதிகளில் ஒன்றான பாக்தாத்தின் தெற்குபுறத்திலுள்ள டைக்கிரிஸ் ஆற்றிலிருந்து பிப்ரவரியில் துவங்கி ஏப்ரல் கடைசிவரை 100 க்கு மேற்ப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. துவக்கத்தில் ஈராக் அரசாங்கம் கிளர்ச்சிக்காரர்கள் மைடான் கிராமத்திலிருந்து கடத்திக்கொண்டுவந்த கிராமவாசிகளின் உடல்கள் என்று அவற்றைக் கூறிற்று. இக்கூற்று பின்னர் வெட்கக்கேடான முறையில் இழிவுக்குள்ளாகியது. வடக்கிலுள்ள குட், தெற்கிலுள்ள பாஸ்ரா உட்பட பல்வேறு நகரங்களையும் கிராமங்களையும் சேர்ந்தவர்கள் இதில் பலியாகி இருக்கிறார்கள். "திடீரென்று முளைத்த சோதனைச் சாவடிகளில் முகமூடியணிந்த கிலாஷ்நிக்கோவ் துப்பாக்கி ஏந்திய நபர்கள் வாகன ஓட்டிகளை அந்தப் பகுதியில் தடுத்தனர். இறந்தவர்களில் பலர் அப்படியே வாகனங்களை ஓட்டிக்கொண்டு வந்தவர்கள்தான்" என்று போலீஸார் சான்பிரான்சிஸ்கோ குரோனிக்கல் என்ற பத்திரிகைக்கு தகவல் தந்தனர்.

அமெரிக்க படைகளும் அவர்களது ஈராக் கூட்டணியினரும், கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை துவக்கிய பின்னர் இதர கொலைகள் பாக்குபாவிலும் சிரியாவின் எல்லை நகரான கையுமிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. அதில் 200 க்கு மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் கொலை செய்யப்பட்டதாக சந்தேகங்கள் நிலவுவதாக மாக்ஸ் பில்லர் குறிப்பிட்டிருக்கிறார். அவர்களில் மிகப்பெரும்பாலோர் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து வந்தவர்கள் ஆவர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பாக்தாத்தில் டசின் கணக்கான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மே, யில் முஸ்லீம் அறிஞர்கள் சங்கம் (AMS) ----ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் பிரதான ஷன்னி பிரிவின் அமைப்பு--- ஓநாய் பிரிகேட் மீது நேரடியாக குற்றம்சாட்டியது. "அவர்கள் இமாம்களையும் சில மசூதிகளின் காவலர்களையும் கைது செய்து, சித்திரவதை செய்து கொன்றனர். அதற்கு பின்னர் பாக்தாத்தின் சாஹாப் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கில் அவர்களது உடல்களை தள்ளினர். அந்த நேரத்தில் AMS பொதுச் செயலாளர் ஹாரத் அல்-தாரி உள்துறை அமைச்சரால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அரசு பயங்கரவாதம் இது" என்று அறிவித்தார்.

ஈராக்கில் ''ஜனநாயகத்தையும்" "விடுதலையையும்" கொண்டு வருவதாக கூறிக்கொண்ட புஷ் நிர்வாகத்தின் அப்பட்டமான மோசடியையும், அமெரிக்க ஆக்கிரமிப்பின் கிரிமினல் குற்றத் தன்மையையும் வலியுறுத்திக் கூறும் வகையில், இந்த ஓநாய் பிரிகேட் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படையில் சேர்ந்திருக்கிற கொமாண்டோக்களில் பலர் சதாம் ஹூசேன் ஆட்சியின் சார்பில் கொலை மற்றும் சித்திரவதைகளில் சம்மந்தப்பட்டிருக்கலாம். அவர்களது வெகுஜன ஒடுக்குமுறை அனுபவத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக அமெரிக்க இராணுவம் அவர்களை திட்டமிட்டே நியமித்திருக்கிறது. மற்றும் மத்திய அமெரிக்காவில் வலதுசாரி கொலைக் குழுக்கள் செயல்பட்ட முன்மாதிரியில் நேரடியாக இந்த கொமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஓநாய் பிரிகேட் உருவாக்கப்பட்டது முதல் 2005 ஏப்ரல் வரை அதன் பிரதான அமெரிக்க ஆலோசகராக ஜேம்ஸ் ஸ்டீல் என்பவர் உள்ளார். ஸ்டீலின் சொந்த வாழ்க்கை குறிப்பு கூறுவது என்னவென்றால் எல் சால்வடாரில் கொரில்லாப் போர் உச்சக்கட்டமாக நடந்தபோது, அவர் அமெரிக்க இராணுவக் குழுவிற்கு தளபதியாக செயல்பட்டார் என்பதாகும். மற்றும் அந்த பிராந்தியத்தில் எதிர் நடவடிக்கை படைகளுக்கு ஆயுதங்கள் வழங்கி பயிற்சியளிப்பதற்கு செயல்பட்டார். சால்வடார் கொலைக் குழுக்கள் ஸ்டீல் போன்றவர்களால் பயிற்றுவிக்கப்பட்டு ஆலோசனை கூறப்பட்டு ஒரு 12 ஆண்டுகள் நடத்திய கொலை மற்றும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் 70,000 ற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஜூன் 28 ஜோர்ஜ் W. புஷ் உரையாற்றுகையில், தனது நிர்வாகம் ஈராக்கின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுடன், "பயங்கரவாத எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அவர்களது ஆற்றல்களை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் அவர்களது கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்களை உருவாக்குவதற்காகவும் இணைந்து பணியாற்றி வருகிறது" என்று அறிவித்தார். இதன் பொருள் என்ன என்பதற்கு சான்றுகள் வெளிவரத் துவங்கிவிட்டது. மற்றும் முன்னாள் பாத்திஸ்ட் கொலைகாரர்களுக்கு ஆயுதங்களை வழங்கி பொதுமக்களது எதிர்ப்புக் கிளர்ச்சியோடு தொடர்புள்ளவர்கள் என்று நம்பப்படுகிற ஈராக்கியர்களை பயமுறுத்தி, சித்திரவதை செய்து கொலை செய்வதற்கு அவர்கள் பணம் கொடுக்கிறார்கள். இதை ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க ஆய்வாளர் ஒருவர், ஜூன் 27 ல் வெளிவந்த நியூஸ் வீக்கில் 400,000 துணைப்படைகளும், அதன் ஆதரவு ஊழியர்களும் இதில் இடம்பெற்றிருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்.

பொது மக்களுக்கு எதிராக நடத்தப்படும் ஒவ்வொரு கறைபடிந்த போரிலும் அரசு ஏற்பாடு செய்யும் கொலைகளை, அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை அம்பலப்படுத்தும் அல்லது ஆவணங்களை தயாரிக்க முயலும் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து நடைபெறுகின்ற காரியங்களாக உள்ளன. ஈராக் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு துவங்கிய பின்னர், சந்தேகத்திற்குரிய சூழ்நிலைகளில் டசின்கணக்கான நிருபர்கள், புகைப்படம் எடுப்போர் மற்றும் இதர ஊடக ஊழியர்கள் அமெரிக்கா தலைமையிலான படைகளால் கொல்லப்பட்டனர். அவை பற்றி எப்போதுமே சுதந்திரமான விசாரணை நடத்தப்படவில்லை.

யாசர் சாலிஹி மரணத்திற்கு அடுத்த நாட்களில் மேலும் இரண்டு ஈராக் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜூன் 26 ல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான ஈராக் இஸ்லாமியக் கட்சி நடத்துகின்ற ஒரு தொலைக்காட்சி நிலையத்தின் செய்தி ஆசிரியர்களில் ஒருவரான மாஹா இப்ராஹீம் என்ற பெண் அவரது கணவருடன் காரில் பணியாற்ற சென்றபோது, அமெரிக்க துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு பின்னர் ஈராக்கின் அல் ஷரீகியா தொலைக்காட்சி நிலையத்தின் ஒரு நிகழ்ச்சி தயாரிப்பு இயக்குனர் அஹமது வெய்ல் பாக்ரி என்பவர் அமெரிக்கத் துருப்புக்களால் கொல்லப்பட்டார். அப்போது அவர், பாக்தாத்தில் நடைபெற்ற ஒரு போக்குவரத்து விபத்து நடந்த இடத்தை சுற்றிக்கொண்டு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved