World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Further shift to the right by the German Green Party

ஜேர்மன் பசுமைக்கட்சி மேலும் வலதுசாரி பக்கம் திரும்புகிறது

By Dietmar Henning
14 July 2005

Back to screen version

சென்ற வாரக்கடைசியில், Bündnis 90/பசுமைக் கட்சியினர் இந்த இலையுதிர் காலத்தில் நடத்த முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள தேர்தலுக்கான தமது தேர்தல் முன்னோக்கை உத்தியோகபூர்வமாக நிறைவேற்றினர். புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக கடந்த ஆறு வாரங்களுக்கு மேலாக இந்தத் திட்டத்தை அவர்கள் வகுத்தனர்.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநில தேர்தல்களில் கட்சி பெருமளவில் தோல்வியடைந்த இரவில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) தலைவர் பிரான்ஸ் முன்டபெயர்ரிங் மற்றும் ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் ஆகிய இருவரினதும் புதிய தேர்தலுக்கான அறிவிப்பினால், சமூக ஜனநாயக கட்சி அரசாங்கத்தின் கூட்டணி பங்குதாரர்களான பசுமைக் கட்சியினர் முற்றிலும் வியப்படைந்தனர் மற்றும் அதற்கு தயாராக அவர்கள் இல்லை என்று அறிவித்தனர். பசுமைக் கட்சியின் தலைவர்களுக்கோ அல்லது நாடாளுமன்ற குழுவிற்கோ தகவல்கள் தரப்படவில்லை. ஜேர்மனியின் துணை அதிபரும் வெளியுறவு அமைச்சருமான பசுமைக்கட்சி தலைவர் ஜோஸ்கா பிஸ்சருக்கு மட்டும் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பின்னர்தான் அந்த முடிவு தெரிவிக்கப்பட்டது.

பசுமைக் கட்சியினரின் முதலாவது பதில் ஆத்திரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தது என்னவென்றால் ஷ்ரோடர் தானே அந்த முடிவை செய்துவிட்டார் மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியின் இளைய கூட்டணி பங்குதாரரை புறக்கணித்துவிட்டார். அதற்கு பின்னர் பதவியை இழந்துவிடுவோம் என்ற உண்மையான சாத்தியக்கூறு கட்சிக்கு பயங்கரமானதொரு நிலையை உருவாக்கிற்று. பசுமைக்கட்சி உறுப்பினர்களில் ஒருவரான வெயனர் சூல்ஸ் அதிபரின் அரசியலை தற்கொலைக்கு சமமானது என்று வர்ணித்தார்: ''தேர்தல்கள் தொடர்பாக நாம் இங்கே செய்துகொண்டிருப்பது வயிற்றை வெட்டி தற்கொலை செய்வதாகும்'' இந்த முடிவிற்கு எதிராக ஜேர்மனியின் அரசியல் சட்ட நீதிமன்றத்தில்தான் மேல்முறையீடு செய்யபோவதாக தனது முடிவை அதற்கு பின்னர் சூல்ஸ் அறிவித்தார்.

என்றாலும்---அடிக்கடி பசுமைக் கட்சிக்காரர்கள் எவ்வளவு விரைவாக புதிய சூழ்நிலைகளுக்கு தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அந்தக் கட்சியின் பொருளாளர் கிறிஸ்டியான் ஷீல ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது முதலில் ''வெறுப்பை'' தெரிவித்தார் பின்னர் விரைவில் தனது கருத்தை மாற்றிக்கொண்டார். ''அந்தக் கருத்துடன் இரவில் தூங்கச் சென்ற நான் உண்மையிலேயே ஒரு நல்ல முடிவு என்பதை உணர்ந்து கொண்டேன்'' என்று ஜூன் துவக்கத்தில் Die Zeit பத்திரிகையிடம் தெரிவித்தார். அந்த பத்திரிகை எழுதியது, ''பசுமைக் கட்சிக்காரர்கள் பிஷ்ஷர் தலைமையில் திடீரென்று தங்களது வழியை அதிர்ச்சி கொண்ட பயங்கர உணர்விலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்ட சில நாட்களில் மகிழ்ச்சிகரமான உடன்பாட்டிற்கு வந்திருப்பது அரசியல் அரங்கில் நாம் எப்போதாவது அற்புதமாக பார்க்கின்ற ஒரு நிகழ்ச்சியாகும். பிஷ்ஷர், ரோத் மற்றும் புட்டிக்கோவர் (அனைவரும் பசுமைக் கட்சித் தலைவர்கள்) பத்திரிகையாளர் முன்னர் தோன்றினர் மற்றும் ஷ்ரோடரின் அதிரடி நடவடிக்கைக்கு உடன்படுவதாக அறிவித்தனர், என்றாலும் அவர் தன்னிச்சையாக கூட்டணியை இரத்துச் செய்தார், ஆனால் பசுமை கட்சியினர் எதிர்காலம் பற்றி ஒரு கேள்விக்குறியை எழுப்பினர்---அது தன்னைத்தானே இழிவுபடுத்திகொள்ளும் செயலாகும்.

அதற்கு பின்னர் உடனடியாக, முன்டபெயர்ரிங், ஷ்ரோடர் மற்றும் இதர முன்னணி சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்கள், பசுமைக் கட்சிக்காரர்களிடமிருந்து தங்களை விலக்கிக்கொண்டுவிட்டனர். செப்டம்பரில் இதர போட்டியாளர் ஒவ்வொருவருக்கும் எதிராக முடிந்தவரை மிகப்பெருமளவிற்கு வாக்குகளை பெறுவதற்கு முயல வேண்டும் என்று குறிப்பிட்டார். ''போட்டியாளர்கள்'' என்று ஷ்ரோடர் குறிப்பிட்டது பசுமைக் கட்சிக்காரர்களும் அடங்கியுள்ளனர். சமூக ஜனநாயகக் கட்சி குழுவின் துணைத்தலைவரான லூத்விக் ஸ்ரைக்லர் அதைவிட தெளிவாக: ''ஒரு தேர்தல் பிரசாரத்தில் கூட்டணிகள் எதுவுமில்லை'' என்று தெளிவுபடுத்தினார்.

அதற்கு ஒரு நாளைக்கு பின்னர், தேர்தல்கள் நடத்தப்படுவதற்கு பசுமைக் கட்சிக்காரர்களும் பொறுப்பு என்று ஆக்குவதற்கு சமூக ஜனநாயகக் கட்சி தலைமை முயன்றது, இதன் விளைபயன் என்னவென்றால் அரசாங்கத்தின் கொள்கைகளை அதற்கு மேல் அவர்கள் ஆதரிக்கவில்லை என்பதுதான். ஒரு அரசாங்க பேச்சாளரான, பேலா அன்டா கருத்துத் தெரிவிக்கும்போது நிறுவனங்கள் மீது வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தங்களை கொண்டுவருவதை பசுமை கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலோர் ஆதரிக்க விரும்பவில்லை என்பது ''வருந்தத்தக்கது'' என்று கூறினார். எதிர்க்கட்சியான யூனியன் கட்சிக்காரர்கள் மட்டுமே அந்த மசோதாவை தடுத்து நிறுத்தவில்லை, ஆனால் பசுமைகளும் அதைச் செய்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பசுமைக் கட்சி தலைமை அடிபட்ட நாயைப்போல் முதலில் குரைத்தது மற்றும் சில முணுமுணுப்புக்கு பின்னர் சமூக ஜனநாயகக் கட்சி பசுமைக் கூட்டணி அரசாங்கத்திற்கு பின்னால் ''100 சதவீதம்'' அணிவகுத்து நிற்பதாக அறிவித்தது. அவர்கள் வழியை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. அரசாங்கத்தின் தவறுகளுக்கும் பொறுப்பு என்று ஆக்கப்படுவதை விரும்பவில்லை என்று ஷீல கூறினார்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற வேலைவாய்ப்பு உச்சி மாநாடு என்றழைக்கப்பட்டதில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்(CDU) தலைவி ஏஞ்சலா மெர்கல், கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) தலைவர் எட்மன் ஸ்ரொயபர் மற்றும் சான்சலர் ஸ்ரோடர் ஆகியோர் கலந்துகொண்டனர், அதில் பெருநிறுவன வரிவிகிதத்தை 25 சதவீதத்திலிருந்து 19 சதவீதமாக குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது, அந்த முடிவு அதற்கு பின்னர் மந்திரி சபையினால் ஒரு மசோதாவாக உருவாக்கப்பட்டது. பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் கிரிஸ்டா சாகேர் ''வேலை வாய்ப்புக்கான உச்சி மாநாட்டில் இந்த முன்மொழிவுகளை நாங்கள் ஆதரித்து நிற்கிறோம்'' என்று கூறினார்.

சமூக ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட இந்தத் தாக்குதல்களை தவிர, ஒரு இரண்டாவது சம்பவம் பசுமைக் கட்சி மீது கொடுக்கப்பட்ட அழுத்தம். சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னாள் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைன் இராஜினாமா செய்தது. அவர் ஜனநாயக சோசலிசக் கட்சியின் முன்னணி தலைவர் (PDS முன்னாள் கிழக்கு ஜேர்மனியில் ஆளும் கட்சியாக இருந்த SED அமைப்பின் வாரிசு) கிரிகோர் கீஸியுடன் சேர்ந்து ஒரு புதிய இடதுசாரி கட்சியை அமைப்பதாக அறிவித்தது, ஆகியவை மக்களிடையே ஒரு கணிசமான ஆதரவைப் பெற்றது. புதிய அமைப்பு உருவாக்கப்பட்டு சில வாரங்களுக்குள் அந்த அமைப்பு கருத்துக்கணிப்பில் பொதுமக்களது ஆதரவை 10 சதவீதம் மேல் பெற்றது மற்றும் அதன் மூலம் அந்த அமைப்பு பசுமைக்கட்சி மற்றும் தாராளவாத சுதந்திர கட்சி(FDP) அமைப்புக்களை மிஞ்சியது.

இந்த அரசியல் நிலவரம் பசுமைக் கட்சிக்காரர்களுக்கிடையே எதிர்பார்க்கப்பட்ட குழப்ப தந்திரோபாயங்களை தூண்டி விட்டது.

சில தலைவர்கள் தங்களை கட்சியின் இடதுசாரி அணி என்று கருதிக்கொள்பவர்கள் சமூக ஜனநாயகக் கட்சி சிற்றரசர்களாக மாறுவது குறித்து எச்சரித்தனர், அரசியல் திசையை மாற்ற வேண்டும் என்று கோரினர் மற்றும் தங்களது சொந்த வழியில் ''தாக்குதல் போக்கை மேற்கொள்ள'' வேண்டுமென்று கோரினர். அதில் தொக்கி நிற்கின்ற கேள்வி: சமூக ஜனநாயகக் கட்சியின் இளைய பங்குதாரர் என்பதைத் தவிர தங்களது சொந்த பங்களிப்பு என்ன? என்பதாகும்.

பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஹான்ஸ்-கிறிஸ்டியன் ஸ்ரொய்பில நல்ல ஊதியம் பெறுவோர் மற்றும் பெருநிறுவனங்களுக்கு மட்டுமே பயன்தருகின்ற கொள்கைகளில் இருந்து ஒரு மாற்றத்தை வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்று கூறினார். எனவே ஒரு ''புதிய வழிக்காக'' போராட வேண்டும் என்று அவர் கூறினார். கடந்த பல ஆண்டுகளாக அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த போது, ஸ்ரொய்பில தொடர்ந்து ''ஒரு இடதுசாரி கோமாளி'' என்ற பங்கை வகித்தார். அவர் ஜேர்மன் துருப்புக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு எதிராக வாக்களித்தார் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக எச்சரிக்கை செய்தார், ஆனால் எப்போதுமே கட்சிக்குள் இருந்து கொண்டு தொடர்ந்து அதன் வலதுசாரிக் கொள்கைகளுக்கு ஒரு இடதுசாரி முகமூடியாக பயன்பட்டு வந்தார்.

சமூக ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஒரு தசாப்தமாக பதவியில் இருந்து வந்த பசுமைக் கட்சிக்காரர்கள் வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதும் விமர்சனக் குரல்களும் எழுந்துள்ளன. ''எங்களது உதடுகள் செயல்திட்டம் 2010 உச்சரித்துக்கொண்டே ஒரு அரசியல் வீரனின் மரணத்தை நாங்கள் விரும்பவில்லை. அதே நேரத்தில் சமூக ஜனநாயகக் கட்சி [யூனியன் கட்சிகளுடன்] ஒரு பாரிய கூட்டணிக்கு தயாராகி வருகிறது'' என்று வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவின் பசுமைக் கட்சி மாநில உறுப்பினர் Rüdiger Sagel உம் பசுமைக் கட்சி முன்ஸ்டர் பிரிவு தலைவர் Wilhelm Achelpöhler உம் எழுதியுள்ளார். இந்த நடவடிக்கையை மாற்றிக்கொள்ளவேண்டுமென்ற கோரிக்கையும் அவர்கள் விடுத்தனர்.

வடக்கு ரைன் வெஸ்ட்பாலியாவில் முன்னாள் பசுமைக்கட்சி சுற்றுப்புற சூழல் அமைச்சர் Bärbel Höhn பின்னர் இந்தக் கோரிக்கையோடு தனது கருத்தையும் சேர்த்து Berliner Zeitung செய்தி பத்திரிகைக்கு கூறினார்: ''மீண்டும் ஒரு முறை நாம் நமது சுற்றுப்புற சூழல் பிரசாரத்துடன் சமூக நீதி பிரச்சனையை முன்னணிக்கு கொண்டு வரவேண்டும்.'' என்றார்.

இந்த நிலைப்பாடுகளுக்கு எதிராக கருத்துக்கள் நிலவின. எடுத்துக்காட்டாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் Jürgen Trittin பகிரங்கமாக ''இடது பக்கம் திரும்புவதற்கு'' எதிராக தமது கட்சியை எச்சரித்தார். ''பசுமைக் கட்சிக்காரர்களைப் போல், இப்போது நாம் பகிரங்கமாக கடந்த ஏழு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் சீர்திருத்தக் கொள்கையிலிருந்து விலகிச்செல்வதை நான் பகிரங்கமாக எச்சரிக்கிறேன். அப்படிச் செய்வது நம்மை வரும் ஆண்டுகளில் திறமையற்றவர்களாக காட்டிவிடும்'' என்று அவர் Die Welt தினசரிக்கு பேட்டயளித்தார்.

பசுமைக் கட்சியின் தேர்தல் அறிக்கை இந்த விவாதங்களை எதிரொலிக்கிறது. சுற்றுபுறச் சூழலுக்கு முன்னர் துவக்க அத்தியாயமாக ''வேலை வாய்ப்பு'' இடம்பெற்றிருக்கிறது. பணக்காரர்களுக்கான தனிமனித வரிவிதிப்பு உயர்வு அடையாளபூர்வமாக, சமூக ஜனநாயகக் கட்சியைப்போல் தேர்தல் அறிக்கையில் அந்த நடவடிக்கைப்பற்றி மிகத் தெளிவில்லாமல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ''எந்த விவரங்களையும் நாங்கள் தரவில்லை. அவை அடிப்படைகள் பற்றியவை'' என்று ஜூன் இறுதியில் தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்தும்போது பசுமைக் கட்சித் தலைவர் புட்டிக்கோவர் கூறினார்.

தேர்தல் அறிக்கை அரசாங்கத்தின் கடந்த ஏழு ஆண்டுகள் கொள்கையை நீடிக்க வேண்டுமென்று தெளிவுபடுத்துகிறது. சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகளை பகிரங்கமாக பாராட்டுகிறது. அந்த தேர்தல் அறிக்கை தந்துள்ள தகவலின்படி பொதுமக்களை பாரதூரமாக பாதிக்கின்ற ஒவ்வொரு கொள்கையும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், கிறிஸ்தவ சமூக யூனியன் அல்லது சமூக ஜனநாயகக் கட்சியிடமிருந்து வந்தவை என்று கூறுகிறது. ''இவ்வளவு பெரிய பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை அடிக்கடி அமைப்பு ரீதியில் பெருவர்த்தக நிறுவனங்களின் பழமைவாத கட்சி என்று தோன்றும் சமூக ஜனநாயகக் கட்சியிடம் ஒப்படைத்தது ஒரு தவறு'' என்று அது முன்னுரையில் விளக்குகிறது.

பசுமைக் கட்சிக்காரர்கள் பொதுமக்களுக்கு ஒரு பலவீனமான நினைவாற்றல் இருப்பதாக தெளிவாகக் கருதுகின்றனர். இதுவரை பசுமைக்கட்சிக்காரர்கள் தங்களை ''சீர்திருத்த உந்துசக்தி'' என்று முன்வைத்தனர். மற்றும் சமூகநல அரசு கொள்கைகளில் அவசியமான மறுசீரமைப்பை துவக்கி வைத்தனர் மற்றும் கட்டாயப்படுத்தி செயல்படுத்தினர். சமூக வெட்டுக்களை '' அமைப்பு ரீதியில் பழமைவாதிகளான'' சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்களை செயல்படுத்துமாறு கட்டாயப்படுத்தினர்.

ஹார்ட்ஸ் IV சீர்திருத்தங்களின் விளைவுகள் குறித்து கவனத்தை ஈர்க்கின்ற வகையில் செயல்பட்டார்கள் என்பதற்காக கிழக்கு ஜேர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் அரசியல்வாதிகளை "கோழைகள்" என்றும் "மென்மைவாதிகள்" என்றும் புட்டிக்கோவர் அழைத்தது நீண்ட காலத்திற்கு முன்னர் அல்ல என்று Tageszeitung செய்தி பத்திரிகை சுட்டிக்காட்டியது. தங்களது சொந்தக் கட்சியிலிருந்தும் சமூக ஜனநாயகக் கட்சியிலிருந்தும் ஹார்ட்ஸ் IV ஐ விமர்சித்தவர்கள் அதேபோன்று தான் நடத்தப்பட்டனர். செய்தி வார இதழான Der Spiegel இல் பேட்டியளித்த டிரிட்டின்: ''நாங்கள் நவீனமயமாக்காளர்கள். மிக கடினமான பிரச்சனைகளை தீர்த்துவைப்பதிலிருந்து நாங்கள் ஒதுங்கிகொள்ளவில்லை, அது சமூகப் பிரச்சனையாக இருந்தாலும் குடிமக்களது உரிமைகளாக இருந்தாலும் அல்லது எரிசக்திபொருள் கொள்கைகளாக இருந்தாலும்'' என்று குறிப்பிட்டார்.

தேர்தல் அறிக்கை ''வேலை வாய்பபை'' உருவாக்குவது தொடர்பான அத்தியாயத்திற்கு முக்கிய இடம் தரப்பட்டிப்பதும், பணக்காரர்களுக்கான கூடுதல் வரி விதிப்புக்களை இணைத்திருப்பதும் அரைகுறை மனதோடு ஹார்ட்ஸ் IV நெறிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதும் தெளிவாக மேற்பூச்சு நடவடிக்கைதான் ''ஹார்ட்ஸ் IV-ä ஒழித்துக்கட்ட எவரும் விரும்பவில்லை'' என்று கட்சித்தலைவர் புட்டிக்கோவர் உறுதிப்படுத்தியிருப்பது இதைத் தெளிவுபடுத்துகிறது.

கூடுதலாக, பசுமைக் கட்சிக்காரர்களின் தேர்தல் அறிக்கை குறுகிய காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகக் கூடியது. இது ஒருவருக்கு 1999 அக்டோபர் ''பசுமைக் கட்சி அரசியலுக்கு புதியதொரு விடியல் என்ற பேர்லின் தத்துவங்களை'' நினைவுபடுத்துவதாக உள்ளது. அந்த நேரத்தில், சொத்துக்கள் மீதான வரி மறுபடியும் அறிமுகப்படுத்தப்படுகிறது--- அவர்களது 1998 தேர்தல் வேலைதிட்டத்தில் ஓரு பாகமாகும்-----அது ஆவணக்கோப்பில் போடப்பட்டது. இன்னமும் ''நல்ல ஊதியம் பெறுவோரை தார்மீகரீதியாக மிரட்டுவது எனவும் கட்டாய வரிவிதிப்புகளோடு சம்மந்தப்பட்டிருப்பதாகும் கூறி'' அந்த வரி இனி சமூக நீதிக்கான ஒரு வழி என்று வாதிட முடியாது என அரசாங்கத்தில் நுழைந்த ஓராண்டிற்கு பின்னர் அவர்கள் கூறினார்கள். அதே அடிப்படையில், இப்போது பணக்காரர்களுக்கு குறைந்தபட்ச உயர்ந்த வரி விகிதங்களை கொண்டு வரவேண்டும் என்ற முன்மொழிவும் பின்நோக்கிபார்க்கும்போது இரத்துச் செய்யப்படக்கூடும்.

மதிப்புக்-கூடுதல் வரி (Value-Added Tax) அதிகரிப்பு

பசுமைக் கட்சிக்காரர்களின் தேர்தல் அறிக்கையின் உண்மையான பொருடளக்கம், அவற்றின் முன்னணி உறுப்பினர்களின் தனிப்பட்ட முடிவுகள் மற்றும் கருத்துக்களிலிருந்து சிறப்பாக தெரிகிறது.

இதர பிரதான அரசியல் கட்சிகள் இன்னமும் விவாதித்து கொண்டிருக்கின்றன அல்லது ஏற்கனவே அடிப்படைப் பொருள்களுக்கு மதிப்புக்கூடுதல் வரியை அதிகரிப்பது தொடர்பாக உடன்பட்ட பின்னர்கூட, பசுமைக் கட்சிக்காரர்களின் திட்டம் அத்தகையதொரு முன்மொழிவை வைக்கவில்லை. அப்படியிருந்தாலும் பல பசுமைக் கட்சிக்காரர்கள் ஒரு உயர்வைக் கோரி வருகின்றனர். Schleswig Holstein மாநிலத்தைச் சேர்ந்த பசுமைக் கட்சிக்காரர்கள் தேசிய பசுமைக் கட்சியின் மாநாடு சென்ற வாரக்கடைசியில் நடைபெற்ற போது தேர்தல் அறிக்கையில் அந்த முன்மொழிவு இடம்பெற வேண்டுமென்று கோரினார்கள். நாடாளுமன்ற பசுமைக் கட்சிக் குழுவின் தலைவரான கிரிஸ்டா சாகேர், ஹம்பர்க் பசுமைக் கட்சித் தலைவரும், அவர்களது நாடாளுமன்ற நிதித்துறை பேச்சாளருமான Anja Hajduk போன்றவர்களும் இதர முன்னணி உறுப்பினர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

கூடுதல் வரி வருவாய்களை குறைந்த-ஊதியப் பிரிவுகளில் மானிய செலவுகளை குறைப்பதற்கு பயன்படுத்திக்கொள்வதன் மூலம் மலிவூதிய தொழிலாளர்களை விரிவுபடுத்த உதவ முடியும் என்று பசுமைக் கட்சிக்காரர்கள் கருதுகின்றனர். கிரிஸ்டியானா சீல் இதுபற்றி கூறியதாவது: ''சமூக பாதுகாப்புக்கான நிதிப்பங்களிப்புகள் மிக அதிகமாக உள்ளன. எனவே அதை குறைப்பதற்கு வரிகள் மூலம் நிதியளிப்பு செய்ய வேண்டுமென்று நாங்கள் கோருவது இயல்பாகவே நேர்மையான ஒன்று தான்'' இந்த நிதிப்பங்களிப்பை கணிசமான அளவிற்கு குறைக்க வேண்டுமென்றால் மதிப்புக்கூடுதல் வரியை 4 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்று மேலும் அவர் கூறினார். அதேபோன்று Anja Hajduk, Berliner Zeitung இல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் வாதிடுவது என்னவென்றால் ''குறைந்த ஊதியப் பிரிவில் வேலையில்லாதிருப்போரின் எண்ணிக்கையை குறைத்தாக வேண்டும்.'' மற்றும் இந்த வகையில் மதிப்புக் கூடுதல் வரியை உயர்த்த வேண்டும். உழைக்கும் மக்களை பிரதானமாக பாதிக்கின்ற ஒரு பிற்போக்குத்தனமான வரிவிதிப்பை உயர்த்த வேண்டும் என்பது போன்ற காரணங்களை பசுமைக் கட்சிக்காரர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.

இதர பகுதிகளிலும் தங்களது மேளங்களை அதிகப் ''போட்டி'' அதிகத் ''திறமை'' என்று வேகமாக தட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுகாதாரத் துறைக்கான அவர்களது பேச்சாளர் Birgit Bender மக்களுக்கு பிடிக்காத நடவடிக்கைகளை எடுப்பதில் தனது சமூக ஜனநாயக கட்சிப் பங்குதாரர்கள் துணிச்சலை காட்டவில்லை என்று வருந்தினார். பசுமைக் கட்சி மற்றும் சமூக ஜனநாயக கட்சி வேலைத் திட்டங்களில் குடிமக்கள் காப்புறுதி திட்டம் (citizens' insurance scheme) இடம்பெற்றிருப்பது பற்றி குறிப்பிட்ட அவர், ''ஒற்றுமையை விரிவுபடுத்துவது மில்லியனர்களாக இல்லாதவர்களிடத்திலும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது'' என்று கூறினார். ஓய்வூதிய திட்டத்திற்கு நிதியளிப்பது பற்றி, அவர் Frankfurter Rundschau செய்தி பத்திரிகைக்கு பேட்டியளித்த போது ''நான் வேலைவாய்ப்பை மட்டுப்படுத்த விரும்பவில்லை, இதை அதிகரிப்பதற்கு ஒரே வழி வரி விதிப்பு அதிகமாக இருக்க வேண்டும் அல்லது ஒரு வலுவான, மிக விரிவான போட்டியான தனியார் காப்புறுதி திட்டம் செயல்பட வேண்டும். பசுமைக் கட்சிக்காரர்களாகிய நாங்கள் கருதுவது என்னவென்றால் தனியார் துறை காப்புறுதி இல்லாமல் அது நடக்காது'' என்று குறிப்பிட்டார்.

அந்த செய்தி பத்திரிகை அதையொட்டி கேட்ட கேள்வி என்னவென்றால், [தற்போது தொழிலதிபர்களும், ஊழியர்களும் சரிபாதியாக செலுத்தும்] ஓய்வூதிய சந்தாக்களில் தொழிலாளர்களது சந்தா அதிகரிக்குமா அப்படி அதிகரிப்பது பசுமைக் கட்சிக்காரர்கள் தடைப்பட்ட ஒரு செயலா? என்று அந்த பத்திரிகை கேட்டது. அதற்கு பதிலளித்த பென்டர் '' அது ஒரு இரகசியமல்ல. தொழிலதிபர்கள் வழங்கும் சந்தாக்களை உயர்த்த முடியாது'' என்று பதிலளித்தார்.

இதற்கிடையில், பல மாநிலக் கட்சி வேட்பாளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன. அங்கு அதில் வியப்புக்கள் எதுவுமில்லை. பொதுவாக, முன்னணி உறுப்பினர்களை பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள் மற்றும் மிகவும் விமர்சிக்கும் சக்திகளின் முயற்சிகளை முறியடித்திருக்கிறார்கள். இந்த வகையில், பேர்லின் மாநில பட்டியல் குறிப்பிடத்தக்கதாகும். அதில் முன்னாள் மாணவத் தலைவர் Rudi Dutschke மகன் 25 வயது Marek Dutschke இன் பெயர் இடம்பெற்றிருக்கிறது. கட்சியை ''புதுப்பிப்பதன்'' பெயரால் தான் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை Marek Dutschke நியாயப்படுத்தினார், ஆனால் உண்மையிலேயே அவர் பசுமைக் கட்சிக்காரர்களின் அரசியல் வழியை முழுமையாக பின்பற்றி நிற்கிறார் (வேலையில்லாதவர்கள் மற்றும் சமூக நலன்புரி உதவிகளை பெறுபவர்கள் தொடர்பான இரண்டு திட்டங்களையும் இணைப்பது சரிதான் என்று அவர் கருதினாலும் ஹார்ட்ஸ் IV இல் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்). அப்படியிருந்தும், அவர் கட்சியின் இடதுசாரி பிரிவில் ஓர் அங்கம் என்று கருதப்படுகிறார்.

மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் Renate Künast பாரம்பரியமாக ஒரு பெண்ணுக்கு ஒதுக்கப்படும் இடத்தை முன்னணி பசுமைக் கட்சி வேட்பாளர் பெற்றிருக்கிறார். பேர்லின் மாநில நாடாளுமன்றத்தில் பசுமைக் கட்சிக் குழுவின் பெண் தலைவராக உள்ள Sybill Klotz மூன்றாவது வேட்பாளர் நிலையை பெற்றிருக்கிறார். மூன்று உறுப்பினர்கள் இரண்டாவது வேட்பாளர் தகுதிக்கு Marek Dutschke, Werner Schulz மற்றும் முன்னாள் பேர்லின் மாநில நீதியமைச்சர் Wolfgang Wieland ஆகியோர் போட்டியிட்டனர். இதில் Wolfgang Wieland முன்னுக்கு வந்து வெற்றிபெற்றார். மற்ற இருவரும் நான்காவது இடத்தைப் பெற தவறிவிட்டனர், அதை தற்போது பேர்லின் மாநில நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள Öczan Mutlu வென்றார்.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் சமரசம்

புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு மூன்று நாட்களில் மாநிலத்தில் பழைமைவாத கிறிஸ்தவ ஜனநாயக யூனியனுடன் மாநிலத்தில் ஒரு கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என்ற கருத்தை பரப்பிய பின்னர் பேர்லின் பசுமைக் கட்சிக்காரர்கள் Wieland ஐ வேட்பாளராக நியமித்திருக்கின்றனர். மத்திய தேர்தல்களை ஓராண்டிற்கு முன்னரே நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்ட பின்னர், Wieland, Berliner Kurier-க்கு அளித்த பேட்டியில் பேர்லின் பசுமைக் கட்சிக்காரர்கள், ''2006 இலையுதிர் கால மாநில தேர்தல்களை கருத்தில்கொண்டு இனி மத்திய அரசியலை கருதிப்பார்க்க தேவையில்லை'' என்று கூறினார். அதே நேரத்தில், பேர்லினில் முன்னணி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் வேட்பாளர் என்று கருதப்பட்டு வரும முன்னாள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் Klaus Töpfer இனை அவர் புகழ்ந்துரைத்தார்.

இதர முன்னணி பசுமைக் கட்சிக்காரர்களும் அதே போன்ற கருத்துக்களை வெளியிட்டிருக்கின்றனர். சட்ட விவகாரங்களுக்கான பசுமைக் கட்சி பேச்சாளர், Jerzy Montag உம் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் கூட்டணி அரசாங்கத்திற்கு சாத்தியக்கூறு இருப்பதாக கருதுகிறார். அவர் Financial Times Deutschland இற்கு பேட்டியளித்தபோது ''சமூக ஜனநாயகவாதிகளோடு நம்மை நாமே சங்கிலியால் பிணைத்துக்கொள்ளக்கூடாது'' என்று கூறிவிட்டு மேலும் ''ஒரு அறிவு ஒளி, ஜனநாயக யூனியன் என்ற இரண்டு முகாம்களுக்கிடையிலும், ஒற்றுமை இருப்பதாக கூறினார். நாடாளுமன்ற துணைத் தலைவரான Reinhard Loske யூனியனுடன் உயிரியல் தார்மீக நெறிகள் மற்றும் சிறுவர்த்தக நிறுவனங்களுக்கான கொள்கைகளுடன் ஒரு பொதுக்கருத்து நிலவுவதாக குறிப்பிட்டார்.

புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதற்கு பசுமைக் கட்சிக்காரர்கள் இப்படித்தான் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தினர். தேர்தல் அறிக்கையில் கூச்சல் கிளப்பும் ஒரு சில வெற்று சொற்றொடர்களை தவிர, அவர்கள் மேலும் வலதுசாரி பக்கம் சாய்ந்துவிட்டனர். இப்போது அவர்கள் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியனுடன் இந்த ஆண்டு இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் கூட்டணி சேர்வதற்கான சாத்தியக்கூறுகளுக்கு அடிப்படைகளையும்கூட தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved