World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

US rejects Assad's concessions and steps up threats against Syria

ஆசாத்தின் சலுகைகளை அமெரிக்கா நிராகரித்து சிரியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அதிகரிக்கிறது

By Patrick Martin
7 March 2005

Back to screen version

சிரியாவின் ஜனாதிபதி பஷீர் ஆசாத் லெபனானில் இருந்து படைகளை வரையறுக்கப்பட்ட அளவில் திரும்ப பெற்றுக் கொள்ளுவதாக அறிவித்திருந்ததை புஷ் நிர்வாகம் உறுதியாய் நிராகரித்ததுடன், சிரிய ஆட்சியை தனிமைப்படுத்தி இரண்டு அரபு நாடுகளிலும் ஏகாதிபத்திய இராணுவ தலையீட்டிற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் தன்னுடைய பிரச்சாரத்தையும் முடுக்கிவிட்டுள்ளது

லெபனான்-சிரியா எல்லையில் அடுத்த சில மாதங்களில் சிரிய படைகளைச் சிறிது சிறிதாகப் பின்வாங்கிக் கொள்ளுதல் பற்றி ஆசாத் அறிவித்திருந்தார். அமெரிக்கா, பிரான்சு இரண்டும் ஜேர்மனியின் ஒப்புதல் மற்றும் டமாஸ்கசின் இரண்டு முக்கிய புரவலர் நாடுகளான ரஷ்யா மற்றும் செளதி அரேபியா இரண்டும் இசைவும் கொடுத்திருந்த ராஜதந்திர மற்றும் பொருளாதார அழுத்தங்களுக்கு விடையிறுக்கும் வகையில் அவர் அவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு வாஷிங்டனுடைய விடையிறுப்பு கடுமையாகவும். எதிர்மறையாகவும் இருந்தது. ஆசாத்தின் "அரைகுறை நடவடிக்கைகளைக்" கண்டித்த ஒரு வெள்ளை மாளிகை சார்பில் குரல்தரவல்ல பேச்சாளர், அவை "போதுமானதாக இல்லை" என்று அறிவித்தார். அனைத்து இராணுவ படைகள், உளவுத்துறை பணியாளர்களும் திரும்பப் பெறுதல் என்பது, "உடனடியாகவும், முழுமையாகவும்" இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

வெள்ளியன்று பதிவு செய்யப்பட்டு, ஆசாத்தின் திரும்பப் பெறும் திட்டத்திற்கு இரண்டு மணி நேரம் முன்பு ஒலிபரப்பப்பட்ட, சனிக்கிழமை அன்று வெளிவந்த வானொலி உரையில், புஷ் வாய்ப்பளிக்கும் முன்னரே இந்தக் கருத்தினை நிராகரித்தார். பிரான்சும் அமெரிக்காவும் ஒத்துழைப்பதை மேற்கோளிட்ட புஷ், "ஜனநாயகமும் சுதந்திரமும் லெபனானில் செழிக்க சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என்று உலகம் ஒரு மனதாகத் தெரிவிக்கிறது" என்றும் கூறினார்.

ஈராக்கின் மீது அமெரிக்கப் படையெடுப்பிற்கு முன் நிகழ்ந்த பிரச்சார அச்சுறுத்தல்களை நினைவுபடுத்துவதுபோல், புஷ் கடந்த இலையுதிர்காலத்தில், "அனைத்து வெளிநாட்டுப் படைகளும் அகற்றப்பட வேண்டும், அயலார் செல்வாக்கு இல்லாமல் சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள்" நடத்தப்பட வேண்டும் என்ற ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேற்கோளிட்டுக் காட்டினார்.

உறுதியற்ற நிலையைக் கொண்டுவருவதற்கான பிரச்சாரம்

பெப்ரவரி 14ம் தேதி, பெய்ரூட்டில் நிகழ்ந்த, ஒரு பெரிய கார்க் குண்டுவெடிப்பில் முன்னாள் லெபனான் பிரதம மந்திரியும், சிரிய ஆட்சிக்கு முன்பு நண்பராகவும் இருந்த ரபிக் ஹரிரி கொல்லப்பட்ட பின்னர், புஷ் ஆட்சி லெபனானில் சிரியா இருப்பதற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டது. ஹரிரி, ஆசாத்துடன் கடந்த இலையுதிர்காலத்தில் நட்பை முறித்திருந்தார்; ஏனெனில் லெபனான் ஜனாதிபதி பதவியில் இருக்கும் எமீல் லெளகட்டின் (Emil Lahoud) ஆட்சிக்கால நீட்டிப்பு பற்றி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.

மிகப் பெரிய அளவிலும், நேர்த்தியான தொழில்நுட்பமும் கார்க் குண்டு வெடிப்பில் இருந்தது, தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதக் குழுவை விட, ஒரு உளவுத்துறைதான் இதைச் செய்திருக்க வேண்டும் என்ற கருத்தை ஏற்படுத்தியது; ஆனால் எந்த நாட்டு உளவுத்துறை இதைச் செய்திருக்கும் என்று திட்டவட்டமாகத் தெரியவில்லை. சிரியாவைப் போலவே அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட தங்கள் அரசியல் நோக்கங்களுக்காக ஹரிரி மடிந்தால் நல்லதுதான் என்று நினைத்திருக்கக் கூடும். நிச்சயமாக புஷ் நிர்வாகம் இந்தப் படுகொலை கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, இப்பகுதியில் இருக்கும் உறுதியற்ற தன்மையை பயன்படுத்திக் கொண்டு சிரிய ஆட்சியை அகற்றுவதற்காக கொண்டிருந்த நீண்ட காலத் திட்டத்தை மேற்கொண்டுவிட்டது.

இதற்கு அடுத்த கட்டமாக, சிரியாவிற்கு எதிரான அமெரிக்க நடவடிக்கை மார்ச் 22-23ல் நடக்க இருக்கும் அரபு நாடுகளின் உச்சி மாநாடாக இருக்கக் கூடும்; இங்கு அமெரிக்காவிற்கு பணிந்து நடக்கும் முக்கிய மத்திய கிழக்கு நாடுகளான எகிப்தும் செளதி அரேபியாவும் லெபனானில் இருந்து படைகள் திருப்பப் பெற வேண்டும் என்ற அழுத்தத்தைப் பெருக்கக் கூடும் என்று புஷ் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இதையும் விடக் கூடுதலான சக்திவாய்ந்த பதிலீடு அடிவானத்தில் காணப்படுகிறது: அது டமாஸ்கஸ் மீதான வெளிப்படையான இராணுவத் தாக்குதல் ஆகும். இத்தாலிய நாளேடான La Repubblica விற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், சிரிய ஜனாதிபதி ஆசாத், அமெரிக்கப் படையெடுப்பு வரக்கூடுமோ என்ற கேள்விக்கு விடையிறுக்கையில் கூறினார்: "வாஷிங்டன் எங்கள் மீது பொருளாதார தடைகளை சுமத்தியுள்ளது; கடந்த காலத்தில் எங்களை தனிமைப் படுத்தியுள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் சுற்று வட்டம் அதற்கு மேல் நெருக்கப்படவில்லை. ஆனால் ஒரு ஆயுதத் தாக்குதல் இருக்குமா என்று என்னை நீங்கள் கேட்டீர்கள் என்றால், நான் கூறக் கூடியது எல்லாம் ஈராக்கியப் போர் முடிவுற்றதில் இருந்தே, அது வரும் என்றுதான் நான் கருதுகிறேன்."

வாஷிங்டனில் இருக்கும் அரசியல் சூழ்நிலை, புஷ்ஷின் டெக்ஸாஸ் அரசியல் சகக் கூட்டாளிகளில் ஒருவரான, குடியரசு தேசிய சட்டமன்ற உறுப்பினர் சாம் ஜோன்சன், காட்டும் பாதையில் எடுத்துக்காட்டாக இருக்கிறது; சமீபத்தில் காபிடல் ஹில் செய்தி ஏடு Roll Call ல் மேற்கோளிடப்பட்ட வகையில், ஜோன்சன் ஒரு திருச்சபைக் காலை உணவின்போது, தன்னுடைய தொகுதியைச்சேர்ந்த ஒரு குழுவிடம் பேசுகையில், வெள்ளை மாளிகையில் புஷ்ஷிடம் விவாதித்துக் கொண்டிருக்கையில் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் கண்டு பிடிப்பதில் ஏற்பட்ட தோல்வியை பற்றி பேச்சு வந்தது என்று குறிப்பிட்டார்.

அந்த உரையாடலை நினைவு கூருகையில், ஓய்வு பெற் விமானப் போர்ப்படை விமானியாக இருந்த ஜோன்சன் தான் புஷ்ஷிடம், "சிரியாதான் சிக்கல் வாய்ந்தது. இந்தப் பேரழிவு ஆயுதங்கள் என்னுடைய கருத்தில் சிரியாவில்தான் இருக்க வேண்டும். நான் F 15 விமானத்தில் பறந்து, ஒரே தடவை கடந்து அங்கு இரண்டு அணுவாயுதங்களை வீச முடியும். அதன் பின்னர் சிரியாவைப் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை" என்று கூறியதாகத் தெரிவித்தார்.

வாஷிங்டனுடைய பாசாங்குத்தனம்

சிரியாவிற்கு எதிரான அமெரிக்கப் பிரச்சாரத்தில் மிகத்தெளிவாய்த்தெரிகின்ற இயல்பாக இருப்பது முற்றிலும் திமிர்த்தனம் நிறைந்த அதன் பாசாங்குத்தனமாகும். ஹிட்லர் மற்றும் கோயெபெல்ஸ் கையாண்ட "பெரும் பொய்கள்" உத்தியோடு ஒப்பிடவைக்கும் முறையில், அமெரிக்க அரசாங்கம் தானே செய்துள்ள குற்றங்களை மற்றவர்கள் செய்ததாகக் குற்றம் சாட்டும் நிலைப்பாட்டை கொண்டுள்ளது.

சனிக்கிழமை அன்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் எரின் ஹீலி அறிவித்தார்: "லெபனான் மக்களுக்கு எதிராக இயக்கப்படும் எந்த விதமான அச்சுறுத்தல், எதிர் கொள்ளுதல் அல்லது வன்முறைக்கு லெபனான், சிரியா அரசாங்கங்கள்தான் நேரடிப் பொறுப்பு என்று உலகம் கூறும்."

ஈராக் மக்களுக்கு எதிரான பெரும் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் ஒரு அரசாங்கத்திடமிருந்து இது வருகிறது. மார்ச் 2003ல் அமெரிக்கா அந்நாட்டின்மீது எடுத்த படையிடுப்பின் விளைவாக 100,000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்க ஆக்கிரமிப்பு ஏராளமான மக்கள் கைது செய்யப்படுதல், குற்றச் சாட்டு, விசாரணைகள் இன்றி சிறைவாசம், சித்திரவதை என்று ஈராக்கியரின் எதிர்ப்புக்களை நசுக்குவதில் அமெரிக்காவின் செயற்படும் வழிவகையாக இருந்துள்ளன. "அச்சுறுத்தலைப்" பொறுத்தவரையில், புஷ் நிர்வாக அதிகாரிகளும், அமெரிக்க செய்தி ஊடகமும், வெளிப்படையாகவே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்கப் படைகள் ஈராக்கிய-சிரிய எல்லையருகே வந்தவுடனேயே, சிரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் பற்றி வெளிப்படையாகவே விவாதித்துள்ளன.

தன்னுடைய சனிக்கிழமை உரையில் புஷ் அறிவித்ததாவது: "கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக சிரியா லெபனானில் ஆக்கிரமிப்பு சக்தியாக இருந்துவருகிறது." லெபனானில் இருந்து அனைத்து சிரியப் படைகளும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கூறினார். அமெரிக்க செய்தி ஊடகத்திற்கு இக்கோரிக்கை பற்றி விரிவுபடுத்திக் கூறிய அவருடைய உதவியாளர், பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு "குறைவான எதுவும் -- படிப்படையாக திரும்பப் பெற்றுக் கொள்ளுதல், ஓரளவு படைகளைத் திரும்பிப் பெறுதல், உளவுப் பணியாளர்களை அங்கு விட்டுச் செல்லுதல் போன்றவை அத்து மீறிய செயல்களாகும்" என்றார்.

ஆனால் அமெரிக்காவோ ஈராக்கை 150,000 துருப்புக்களுடன் ஆக்கிரமித்துள்ளது: இந்த எண்ணிக்கை லெபனானில் சிரிய படைகள் இருப்பதைப் போல் பத்து மடங்கு அதிகமாகும். இதேபோல் இஸ்ரேல், மேற்குக் கரையையும் காசாப் பகுதியையும் ஆயிரக்கணக்கான படைவீரர்களுடன் 1967ல் இருந்து, லெபனானில் சிரியா உள்ளதை விட பத்து ஆண்டுகள் அதிகமான காலம், ஆக்கிரமித்துள்ளது. மேற்குக் கரையில் பல நகரங்கள் இஸ்ரேலிய கட்டுப்பாட்டிற்குள்தான் உள்ளன; சிரியப் படைகளோ பெய்ரூட் இன்னும் பல லெபனானிய நகரங்களில் இருந்து அகன்று விட்டன; சிரியாவுடன் போர் ஏற்பட்டால் இஸ்ரேலியப் படைகளால் கடக்கப்பட வேண்டிய பாதையான பேக்கா பள்ளத்தாக்கில்தான் சிரிய துருப்புக்கள் ஒருமித்த கவனம் கொண்டுள்ளன.

கடந்த வாரம் பல பொது இடங்களிலும் பேசுகையில், புஷ் சிரியா மீது அழுத்தத்தை அதிகப்படுத்தியும், லெபனானில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளுவதற்கு ஒரு காலக் கெடுவையும் கொடுத்தார். மே மாதம் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தல்களுக்கு முன்பு அனைத்து சிரிய படைகளும் வெளியேற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் செய்தி ஊடகத்திற்குக் கூறியதாவது: "வாக்காளர்கள், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், இப்பொழுது பதவியில் இருப்பவர்கள் என்று பலரையும் படைகள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், எவ்வாறு ஒரு நியாயமான தேர்தலை லெபனான் நடத்த முடியும்?"

அத்தகைய தேர்தல் லெபனானில் ஒரு உண்மைக்குப் புறம்பான செயல் என்றால், பரந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் பார்வையில் ஜனவரி 30ல் நிகழ்ந்த தேர்தல்களை பற்றியோ அல்லது இஸ்ரேலிய இராணுவ சோதனைக் கூடங்களை கடந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய சென்ற வாக்காளர்கள் இருந்த பாலஸ்தீனிய தேர்தலை பற்றியோ என்ன சொல்லக் கூடும்? ஈராக்கில் ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்த எந்த வேட்பாளரும் தேர்தலில் போட்டியிட அனுமதி கொடுக்கப்படவில்லை. பாலஸ்தீனிய தேர்தலில் மக்களிடம் புகழ் அதிகம் பெற்றிருந்த வேட்பாளரான சிறையில் இருக்கும் பத்தாத் தலைவர் மார்வான் பர்கெளடி சிறையிலேயே தொடர்ந்து வைக்கப்பட்டிருந்ததால்தான் அமெரிக்க, இஸ்ரேலிய ஆதரவைக் கொண்டிருந்த மக்மூத் அப்பாஸ் தடையின்றி வெற்றியைப் பெற முடிந்தது.

மறந்துவிட்ட வரலாறு

இந்த தற்போதைய சிரிய நெருக்கடியில், இறுதியான வினோதம் என்னவென்றால், ஆக்கிரமிப்பிற்காக சிரியா அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இலக்குவைக்கப்பட்டிருக்கிறது, உண்மையில் லெபனானில் "பயங்கரவாதத்தை" அடக்குவதற்கும், அப்பகுதியில் உறுதித்தன்மையை உத்திரவாதம் செய்வதற்குமான நடவடிக்கையாக, வாஷிங்டனால்தான் அவ்வாக்கிரமிப்பு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

பாசிச பலாஞ்சிஸ்ட் கட்சியால் அணிதிரட்டப்பட்ட வலதுசாரி மரோனைட் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் செய்யும் லெபனான் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அந்நாட்டில் 1976ம் ஆண்டு சிரியப் படைகள் உள்ளே நுழைந்தன. மரோனைட் ஆளும் செல்வந்தத்தட்டு கீழ்மட்டத்தில் இருந்து ஒரு சவாலை, பிஎல்ஓ மற்றும் ஷியைட் அமல் குடிப்படையினால் முன்னெடுக்கப்பட்ட ஷியைட் ஏழை மக்கள் மற்றும் பாலஸ்தீனிய அகதிகளை ஐக்கியப்படுத்தும் ஒரு பரந்த அணிதிரளலில் எதிர்கொள்ள நேரிட்டது.

பலாஞ்சியர்களின் நீண்டகால நண்பர்களான, அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள், மக்கள் எதிர்ப்பு இயக்கத்தை அடக்கவும், பெய்ரூட் ஆட்சிக்கு பாதுகாப்பு கொடுக்கவும் சிரியாவை நம்பின. இது 1976ல், லெபனியத் தலைநகருக்கு சற்றே வெளியில் அமைந்திருந்த டெல் அல் ஜாடார் பாலஸ்தீனிய அகதிகள் முகாமில், சூழநின்று கொண்டிருந்த சிரிய இராணுவப் பிரிவுகளின் மேற்பார்வையின் கீழ், முகாமிற்குள் அனுப்பப்பட்ட பலாஞ்சிய துப்பாக்கி வீரர்களால், நூற்றுக்கண்க்கான பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டபொழுது கொடூரமான இரத்தம் தோய்ந்த வடிவத்தை எடுத்தது.

இதன் பின்னர், 1982ல் இஸ்ரேலிய இராணுவத்திற்கு அப்பொழுது தலைமை தாங்கியிருந்த ஏரியல் ஷரோன், பாலஸ்தீனியர்கள் மற்றும் லெபனிய குடிப்படைகளை, அந்நேரத்தில் ஈரானிய ஆதரவு பெற்றிருந்த ஹெஜ்போல்லாக்களும் அதில் சேர்ந்துவிட்டிருந்தனர் -- அடக்குவதில் சிரியா காட்டிய செயலாற்றலில் திருப்தி அடையவில்லை. எனவே அவர் இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகளையும் லெபனானுக்கு அனுப்பி நசுக்கும் வேலைகளில் ஈடுபட்டார், அப்பொழுது, ஒரு மோதலை தவிர்ப்பதற்காக சிரியப் படைகள் பின்வாங்கியிருந்தன.

சப்ரா, ஷடில்லா அகதிகள் முகாமில் இஸ்ரேலியப் படைகள், சிரியர்கள் டெல் அல் ஜாடாரில் செய்த பணியைத்தான் செய்தனர்; அவை முகாம்களைச் சுற்றி நின்று கொண்டு பலாஞ்சிஸ்ட் கொலைப்படைக் குழுக்களை உள்ளே சென்று தங்கள் விருப்பப்படி பலரையும் கொன்று குவிப்பதற்கு அனுமதித்தனர். இந்தப் பெரும் கொடுமைக்கு இறுதிப் பொறுப்பு என்ற முறையில் இஸ்ரேலிய விசாரணைக் குழுவினால் ஷரோன் குற்றவாளியாக முடிவு செய்யப்பட்டு, இராணுவத் தலைமையில் இருந்து பதவியிறங்குமாறு நிர்பந்திக்கப்பட்டார்.

இருபது ஆண்டுகளாக, சிரியப் படைகள் ஏகாதிபத்திய நலன்கள் மற்றும் நாட்டின் மிகப் பெரிய செல்வந்தரும், செளதியில் கட்டுமானத் தொழிலால் கிடைத்த பில்லியன் டாலர் சொத்தைக் குவித்தவருமான ரபிக் ஹரிரி உட்பட லெபனிய ஆளும் வர்க்கத்தின் நலன்களின் பேரில், ஸ்திரப்படுத்தும் படையாக தொடர்ந்து பங்காற்றின.

ஈராக்கை வெற்றி கண்டமை வாஷிங்டனின் அரசியல் கணிப்புமுறைகளை மாற்றிவிட்டது; இப்பொழுது தன்னுடைய மத்திய கிழக்கின் மீதான ஆதிக்கம் செலுத்தும் அதன் கொள்கைக்கு சிரியாவை அடுத்த இலக்காகக் கொண்டுள்ளது; அமெரிக்க, இஸ்ரேலிய சூழ்ச்சிகளுக்கு மிகவும் உகந்த இடமாகவும், சிரியாவின் வலுவற்ற பிடிப்பிலும் லெபனான் உள்ளது. ஹரிரியின் படுகொலைக்காக சிந்திய முதலைக் கண்ணீர் ஒரு புறம் இருந்தாலும், டமாஸ்கசுக்கு எதிரான தற்போதைய அமெரிக்கப் பிரச்சாரம், சிரிய ஆக்கிரமிப்பின்கீழ் லெபனிய மக்கள் இருக்கும் பரிதாபத்தில் விளைந்த, பரிவு உணர்வோடு எந்தத் தொடர்பையும் கொள்ளவில்லை.

அமெரிக்கச் செய்தி ஊடகம் உண்மையான வரலாற்றுப் பகுப்பாய்வை மேற்கொள்ளுவதற்கோ, வாஷிங்டனுடைய ஏகாதிபத்திய வெளியுறவுக் கொள்கை பற்றிய விமர்சன அணுகுமுறையை கொள்ளவோ திறனற்றது ஆகும். இதனுடைய பொறுக்கமுடியாத வெளிப்பாடுகளில் ஒன்று மார்ச் 4ம் தேதி நியூ யோர்க் டைம்ஸில் ஒரு ஆசிரிய தலையங்கத்தில் வந்தது.

சிரியா தனிமைப்படுத்தப்பட்டமை மற்றும் செளதி அரேபியா, ரஷ்யா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவை புஷ் நிர்வாகத்தின் பின் ஆதரவு கொடுத்திருப்பதையும் புகழ்ந்திருந்த Times, லெபனானை தனக்கு "இலாபம் ஈட்டிக் கொடுக்கும் பகுதியாக" நடத்துவது பற்றியும், ஹெஜபொல்லாப் போராளிகளை அடக்க மறுக்கும் "இழிவான தந்நிரோபாயங்களுக்கும்" கண்டனம் கூறியுள்ளது. "உலகத்தின் வளர்ந்துவரும் பொறுமையின்மையை இனியும் ஜனாதிபதி ஆசாத் அசட்டை செய்து கொண்டிருக்க முடியாது" என்று ஆசிரியர்கள் ஓதுகின்றனர்.

அமெரிக்க வெளிநாட்டுக் கொள்கையின் நம்பிக்கையற்ற தன்மையும் பொய்யுரைகளும் Times, தேர்ந்தெடுத்துள்ள தலைப்பில் சுருக்கமாக வெளிப்பட்டுள்ளது: "லெபனான் லெபனிய மக்களுக்கே" என்று இது முழங்குகிறது. புஷ் நிர்வாகத்தினதும் ஷரோன் அரசாங்கத்தினதும் இலக்கு லெபனியர்களுக்காக லெபனான் என்பது அல்ல, அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும்தான் லெபனான் என்று ஒருவர் உறுதியாய் கூற முடியும், ஒருவேளை எலும்புத் துண்டு பிரான்சிற்கும் போடப்படலாம்.

உண்மையில் மார்ச் 5ம் தேதி, சிரியா லெபனானில் இருந்து வெளியேறிய பின்னர் எத்தகைய வெளிநாட்டு இராணுவ சக்தி அங்கு அதற்குப் பதிலாக அமர்த்தப்படலாம் என்பது பற்றி புஷ் நிர்வாகம் ஏற்கனவே பிரான்சுடன் கலந்து பேசி வருகிறது: "குறிப்பாக கடவுளின் கட்சி எனக் கூறப்படும் ஹெஜ்பொல்லாதான் லெபனானின் தெற்குப் பகுதிகளில் பெரும்பாலானவற்றை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறது என்ற நிலையில் லெபனிய இராணுவம் நாடு முழுவதும் அதிகாரத்தை கடுமையாய் செயல்படுத்த மற்றும் நிலைநிறுத்தப் போதுமான வலிமையைக் கொண்டிராது என்று அமெரிக்கா அஞ்சுகிறது."

போஸ்ட் தொடர்கிறது: "அமெரிக்க, ஐரோப்பிய அதிகாரிகளின்படி, இஸ்ரேலுடனான லெபனான் எல்லையில் 1978ல் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐ.நா. படைகள் எவ்வாறு சிரியா ஆதிக்கம் கொண்டிருந்த பகுதியில் வரக்கூடிய வெற்றிடத்தை நிரப்பப் பயன்படுத்தலாம் என்பதை அமெரிக்கா ஒரு விருப்பாய்வாகக் கொண்டுள்ளது. ஒரு தற்செயல் நிகழ்வு என்னும் முறையில் ஐ.நா. தீர்மானம் எண் 1583ன் படி ஜனவரி மாதம் இப்படை அங்கு நீடிப்பதற்கான அதிகாரம் நீடிக்கப்பட்டதுடன், அதன் விதிகள் மாற்றப்படலாம் அல்லது விரிவாக்கப்படலாம் என்ற குறிப்புடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது...."

என்ன தற்செயல் நிகழ்வு! லெபனானை ஒரு புதிய ஏகாதிபத்திய முறையில் துண்டு போட்டுப் பங்கு கொள்ளும் முயற்சி, சிரியப் படைகள் திரும்பப் பெறுவதற்கு முன்னரே, மேற்கொள்ளப்பட்டுவிட்டது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved