World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India-Pakistan talks hold out the promise of a Kashmiri bus service

இந்தியா-பாக்கிஸ்தான் பேச்சுவார்த்தைகள் காஷ்மீர் பஸ் சேவையை நீட்டிக்க உறுதிமொழி தந்திருக்கிறது

By Sarath Kumara
11 March 2005

Back to screen version

தேக்கநிலை அடைந்திருக்கும் இரு தரப்பு பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு முயற்சியாக பெப்ரவரி 16-ல் இரண்டு நாடுகளுக்குமிடையில் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தவும், போக்குவரத்து தொடர்புகளை ஸ்தாபிக்கவும், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் உடன்பட்டனர். இதில் மிகக் குறிப்பிடத்தக்க முடிவு என்னவென்றால், பாக்கிஸ்தான் மற்றும் இந்திய கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிகள் முறையே முஸாபராபாத்திற்கும் ஸ்ரீநகருக்குமிடையில் ஒரு பஸ் சேவையை தொடக்குவதற்கான ஒரு முன்மொழிவு செய்யப்பட்டதுதான்.

அந்த பஸ் சேவை உண்மையிலேயே ஸ்தாபிக்கப்படுமானால், காஷ்மீரை பிரித்து வைத்துள்ள எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைக் (LOC) கடந்து மக்கள் முதல் தடவையாக கடந்த பல தசாப்தங்களுக்கு பின்னர் பயணம் செய்வதாக அமையும். பல காஷ்மீர் மக்கள் இந்த முடிவை மிக உற்சாகமாக பாராட்டி வரவேற்றுள்ளனர். எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு குறுக்கே தாங்கள் கண்ணால் பார்க்க முடிகின்ற கிராமங்களில் வாழ்கின்ற உறவினர்கள் மற்றும் நண்பர்களை பார்ப்பதற்கு இதற்கு முன்னர் நீண்ட சிக்கலான செலவு பிடிக்கும் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரிலிருந்து வெளியேறிய முகமது இக்பால் அவான், ராய்ட்டர்ஸ்க்கு பேட்டியளிக்கும்போது கூறினார் "15 ஆண்டுகளாக அன்பிற்குரியவர்களைவிட்டு பிரிந்து வாழ்ந்து கொண்டுள்ள நான் அவர்களை சந்திக்க முடியும் என்ற உணர்வால் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது". ஒரு மின்சாரத்துறை ஊழியரான காலித் தார் அசோசியேடட் பிரஸ்-க்கு பேட்டியளிக்கும்போது, "இது மகத்தானது. இப்போது காஷ்மீர் இந்தியப் பகுதிக்கு நான் பயணம் மேற்கொண்டு என்னுடைய உறவினர்களைப் பார்க்க முடியும். இத்தகையதொரு முடிவிற்கு இரண்டு நாடுகளும் வரும் என்று நான் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை" என்று குறிப்பிட்டார்.

ஏப்ரல் ஆரம்பத்தில் இந்த பஸ் சேவை தொடங்கவிருக்கிறது. இரண்டு நகரங்களுக்கும் இடையிலான சாலைகள் குண்டும் குழியுமாக சிதைந்து கிடக்கின்றன, இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இராணுவங்கள் சாலைகளை கண்ணி வெடி வைத்து தகர்த்திருக்கின்றன. என்றாலும் இதில் மிகக்கடுமையான தடைக்கல், ஒரு பஸ் சேவை முன்னெடுத்து வைக்கும் அரசியல் கண்ணி வெடிதான். இரண்டு போர்கள் மற்றும் காஷ்மீர் தொடர்பாக ஒரு அரை நூற்றாண்டுக்கு மேலாக நிலவுகின்ற கடுமையான பகை இவற்றின் பின்னரும் பெரிய சலுகை எதையும் அறிவிப்பதற்கு இரண்டு தரப்புமே தயாராக இல்லை.

பேச்சு வார்த்தைகளை தொடக்குவதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக 2003-ல் ஒரு காஷ்மீர் வழித்தடத்திற்கான முன்மொழிவை இந்தியா முதலில் விவாதித்தது. 2002-ல் இரண்டு நாடுகளுமே போரின் விளிம்பிற்கு வந்துவிட்டன. 2001 டிசம்பரில் இந்திய நாடாளுமன்ற கட்டடத்தில் ஆயுதந்தாங்கிய காஷ்மீர் போராளிகள் ஒரு தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து அரை மில்லியனுக்கும் மேற்பட்ட துருப்புக்கள் டாங்கிகள், போர்விமானங்கள் ஏவுகணைகள் புடைசூழ அணிதிரட்டப்பட்டன. சக்திவாய்ந்த சர்வதேச அழுத்தத்தின் காரணமாக, குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரிட்டனிலிருந்து வந்த அழுத்தத்தால், ஈராக் படையெடுப்பின் உடனடி பின்விளைவால் இந்த பதட்டங்கள் தளர்த்தப்பட்டன, இந்திய துணைக் கண்டத்தில் ஒரு நெருக்கடியை நீர்த்துப் போகச் செய்வதில் அவைகள் மிகுந்த ஆர்வம் காட்டி வந்தன.

பஸ்ஸில் பயணம் செல்பவர்கள் கொண்டு செல்லவேண்டிய பயண ஆவணங்களின் தன்மை தொடர்பாக பஸ் சேவை பற்றிய உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் இழுபறி நிலையில் சென்று கொண்டிருந்தன. அந்த பிரச்சனை மிக அற்பமானதாக தோன்றினாலும், காஷ்மீர் தொடர்பான சர்ச்சையின் உயிர்நாடியாக அது அமைந்திருக்கிறது. பாக்கிஸ்தான் எப்போதுமே காஷ்மீர் பிரிவினையை எதிர்த்து வருகிறது, ஐ.நா மேற்பார்வையில் காஷ்மீர் மக்களிடையே ஒரு பொதுவாக்கெடுப்பு நடத்தி அந்த பிராந்தியத்தின் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. பஸ் பயணிகள் தங்களது பாஸ்போர்ட்டுக்களையும் விசாக்களையும் வைத்திருக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைகளை இஸ்லாமாபாத் எதிர்த்தது, இப்படிச் செய்வதன் மூலம், எல்லைக் கட்டுப்பாட்டுக்கோட்டிற்கு ஒரு சர்வதேச எல்லையாக உண்மையிலேயே ஒரு அங்கீகாரம் தந்ததாக ஆகிவிடுமென்று இஸ்லாமாபாத் கூறிற்று.

இதில் ஒரு சமரசமாக இறுதியில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்தியா ஸ்ரீநகரிலும் முஸாபராபாத்திலும் உள்ள அதிகாரிகள் தருகின்ற சிறப்பு பயண அனுமதிகளை பயன்படுத்திக்கொள்ள இந்தியா சம்மதித்தது. இஸ்லாமாபாத் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இதர முடிவுகளில் பாக்கிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்திற்கும் இந்தியாவிலுள்ள ராஜஸ்தானுக்குமிடையில் ரயில் போக்குவரத்து தொடர்பை மீண்டும் தொடக்குவது, பாக்கிஸ்தான் நகரமான லாகூருக்கும் இந்தியாவிலுள்ள அமிர்தசரசிற்கும் ஒரு பஸ் தொடர்பை ஏற்படுத்துவது, கராச்சியில் இந்திய துணைத் தூதரகத்தையும் மும்பையில் ஒரு பாக்கிஸ்தான் துணைத் தூதரகத்தையும் ஸ்தாபிப்பதாக இருக்கும்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங்கும் அவருக்கு நிகர் எதிர்தரப்பினரான பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் கசூரியும் இந்த உடன்படிக்கைகளை ஒரு கூட்டு நிருபர்கள் மாநாட்டில் அறிவித்தனர். இந்திய அமைச்சர் மிக உற்சாகமாக வெளியிட்ட அறிவிப்பில் ''கடந்த ஓராண்டு அல்லது அதற்கு மேலாக நாம் வெகுதூரம் முன்னேறி வந்திருக்கிறோம். இரண்டு தரப்பிற்கும் ஒத்துழைப்பு நிலவுவது விருப்பம் மட்டுமல்ல அது ஒரு புறநிலையானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். இது இன்றைய உள்ளடக்கத்தில் மிக இன்றியமையாததாகும்." கசூரி மிக கவனமாக அவரோடு சேர்ந்து கூறினார்: "சமாதான நடவடிக்கைகளை காப்பாற்றுவதற்காக, இந்தியா பாக்கிஸ்தான் ஆகிய இருதரப்பினரும் ஓரளவிற்கு வளைந்து கொடுக்கும் தன்மையை காட்ட முடிவு செய்துள்ளன".

இராஜதந்திர மொழி எதுவாக இருந்தாலும் இருதரப்பிற்குமிடையே உறவுகள் இன்னமும் உறைந்துதான் கிடக்கின்றன. கூட்டறிக்கை காஷ்மீர் பஸ் சேவை தொடர்பாக மூன்றே வாக்கியங்களில் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. தனியாக ஒரு அறிக்கையை வெளியிட்ட கசூரி, "[இந்தியா-கட்டுப்பாட்டிலுள்ள] ஜம்மு மற்றும் காஷ்மீர் தொடர்பான உயிர்நாடிப்பிரச்சனையில்'' "காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ப" அமைந்திருக்க வேண்டுமென்று பாக்கிஸ்தானின் கவலைகளை மீண்டும் வலியுறுத்திக் கூறினார். சிங், அந்த பேச்சு வார்த்தைகள் "பயங்கரவாதம் மற்றும் வன்முறைகளிலிருந்து சுதந்திரமாக" இருக்கவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைகளை மீண்டும் குறிப்பிட்டார்---இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், பாக்கிஸ்தான், இந்தியா கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீரை எதிர்த்து நிற்கும் இஸ்லாமிய ஆயுதந்தாங்கிய போராளிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பதாகும்.

தேக்கமடைந்துவிட்ட பேச்சுவார்த்தைகள்

"சமாதான முன்னெடுப்புகளைக் காப்பாற்ற'' என்ற கசூரியின் கருத்து பதட்டங்கள் தொடர்ந்து கொண்டிருப்பதையும் எந்த ஆக்கபூர்வமான உடன்படிக்கையையும் உருவாக்க பேச்சுவார்த்தைகள் தவறிவிட்டதையும் வலியுறுத்திக் கூறுவதாக அமைந்திருக்கிறது. இந்த உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் 2003-ல் அட்டல் பிஹாரி வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது அவரது பாரதீய ஜனதாக் கட்சி (BJP) தலைமையிலான கூட்டணி இந்தியாவில் பதவியில் இருந்தபோது தொடங்கப்பட்டன. ஆனால் அந்த முன்னெடுப்பு சென்ற ஏப்ரலில் பொதுத்தேர்தல்கள் நடைபெற்றதையொட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

பிஜேபி-ன் தோல்வியை தொடர்ந்து புதிய காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடக்குவதற்கு உடனடி முயற்சி எதையும் செய்யவில்லை. நட்வர்சிங் அத்தகைய பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், காஷ்மீர் சர்ச்சைக்கு எந்தத் தீர்வு காண்பதாக இருந்தாலும் அது சிம்லா உடன்படிக்கை முன்மாதிரியை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருக்க வேண்டுமென்று கருத்து தெரிவித்தார். 1971-ல் இந்தியாவுடன் பாக்கிஸ்தான் நடத்திய போரில் இந்தியாவின் கையில் இழிவைச் சந்திக்கிற வகையில் தோல்வியைச் சந்தித்த பின்னர், சிம்லாவில் கையெழுத்தான உடன்படிக்கையில் குறிப்பாக பாக்கிஸ்தானின் முக்கிய கோரிக்கையான காஷ்மீர் பொது வாக்கெடுப்பு பற்றி எந்த குறிப்பும் இடம் பெறவில்லை.

மீண்டும் ஒரு முறை, பின்னணியில் இருந்து கொண்டு வாஷிங்டன் இரண்டு நாடுகளையும் பேச்சு வார்த்தைகளை நடத்துவதை நோக்கி தள்ளியது. இந்திய துணைக் கண்டத்தில் அமெரிக்கா வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களைக் கொண்டிருக்கிறது. இந்தியா அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு குவிமையப்படுத்தப்பட்டது மட்டுமல்ல, ஆனால் இரண்டு நாடுகளுமே அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதில் பயனுள்ள கூட்டணியினராகவும், இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் மூலோபாய அபிலாஷைகளை முன்னெடுத்துச் செல்வதில் மதிப்பு மிக்க சொத்துக்களாகவும் கருதப்படுகின்றன.

சம்பிரதாய முறையில் சென்ற ஜூன் மாதம் கலைந்துரையாடல்கள் நடைபெற்றன, ஆனால் அவை வெகுதூரம் செல்லவில்லை. கசூரியும் சிங்கும் செப்டம்பரில் சந்தித்துப் பேசியும், அதே மாதத்தில் நியூயோர்க்கில் முஷாரஃப் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். ஆனால், விளிம்புநிலை பிரச்சனைகளில் கூட எந்தவிதமான உடன்பாடும் ஏற்படவில்லை.

அதற்குப் பின்னர் பக்லிஹார் அணையை இந்தியா கட்டுவது தொடர்பாக ஒரு கூர்மையான சர்ச்சை வெடித்துக் கிளம்பியது, அது இந்தியாவில் உற்பத்தியாகி பாக்கிஸ்தானுக்குள் செல்கின்ற நதிகளின் நீர்பகிர்வு சம்மந்தப்பட்ட 1960 சிந்து நதி தண்ணீர் பகிர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக அமைந்திருப்பதாக பாக்கிஸ்தான் கூறிற்று. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதி முழுவதும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறிவருவதாக இருதரப்பும் ஜனவரியில் குற்றம் சாட்டிகொண்டன.

நீண்ட நெடுங்காலமாக நீடித்துக் கொண்டுள்ள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் இரண்டு நாடுகளுக்குமே சக்திவாய்ந்த பொருளாதார அடிப்படைகள் உள்ளன. குறிப்பாக தகவல் தொழில்நுட்ப பிரிவில் இந்தியாவிற்குள் வந்து கொண்டிருக்கிற வெளிநாட்டு முதலீட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதில் பாக்கிஸ்தான் வர்த்தக நிறுவனங்கள் குறியாக உள்ளன. இந்திய துணைக் கண்டம் மற்றும் அதற்கப்பால் மூலப்பொருட்களை பெறுவதிலும் சந்தைகளை நிலைநாட்டுவதிலும் தனது பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தவும் இந்தியா முயன்று வருகிறது.

சென்ற மாதம் கசூரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், சிங் முதல் தடவையாக இதர பொருளாதார பிரச்சனைகளுக்கு அப்பால் சுதந்திரமாக பாக்கிஸ்தான் வழியாக ஈரானிலிருந்து இந்தியாவிற்கு ஒரு எரிவாயு குழாய் இணைப்பு கட்டுவது தொடர்பாக ஒரு உடன்படிக்கை செய்து கொள்வது குறித்து தாம் ஆராய்வதற்கு தயாராக இருப்பதாக கோடிட்டுக் காட்டினார். இதற்கு முன்னர் இந்தியா அந்த குழாய் இணைப்பு பிரச்சனையை விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார சலுகைகளோடு இணைத்தே பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது.

அத்தகையதொரு குழாய் இணைப்பு இருதரப்பிற்கும் தெளிவான பொருளாதார பயன்களை தருவதாகும். இந்தியாவிற்கு எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது மற்றும் அவை பாக்கிஸ்தான் வழியாக ஒரு குழாய் இணைப்பில் வருவது மாற்றுவழிகளை விட மிகவும் சிக்கனமானது. கடல் கீழ் குழாய் வழி அல்லது கடல் வழி என்றாலும். பாக்கிஸ்தான் ஒவ்வொரு ஆண்டும் அந்த குழாய் இணைப்பு மூலம் 150 முதல் 200 மில்லியன் டாலர்கள் கட்டணத்தை பெறுவதுடன் தனது சொந்த தேவைகளுக்காகவும் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும். இதில் ஒரு தெளிவான முன் நிபந்தனை என்னவென்றால் இராணுவ மோதல் எதுவும் நடைபெறக்கூடாது.

என்றாலும் எந்த நிரந்தரமான உடன்படிக்கைக்கும் எதிராக போர்க்குணம் கொண்டு எதிர்க்கின்ற சக்திவாய்ந்த அரசியல் சக்திகள் உள்ளன. 1948-ல் இந்த துணைக்கண்டம் பிரிக்கப்பட்ட சம்பிரதாய முறையிலான சுதந்திரத்திற்குப் பின்னர், இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் உள்ள அரசாங்கங்கள் தங்களது பதவிகளை நிலைநாட்டிக்கொள்ள தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கு வகுப்பு வாதத்தை கிளறிவிடுவதை நம்பியிருக்கின்றன. இரண்டு நாடுகளிலுமே தேசியவாத வாய்வீச்சை கையாள்வதற்கு காஷ்மீர் மையமாக விளங்குகிறது. காஷ்மீர் கடந்த பஸ் சேவை தொடர்பான அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகளும் குழுக்களும் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்தியாவில் இந்து மேலாதிக்கவாதிகள் அந்த அறிவிப்பு பாக்கிஸ்தானுக்கு தேசத்துரோக சலுகை என்றும் அது ஜம்மு மற்றும் காஷ்மீரில் "பயங்கரவாதிகள்'' நுழைவதற்கு அனுமதி வழங்கிவிடுமெனவும் கண்டித்துள்ளனர். ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) பேச்சாளரான ராம் மதாய் நுழைவு அனுமதி சீட்டோடு பயணம் செய்ய மக்களை அனுமதிப்பது "காஷ்மீர் தொடர்பாக பாக்கிஸ்தான் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு ஏறத்தாழ ஒப்பானதாகும்" என்று அறிவித்துள்ளார். "பாஸ்போர்ட்டுக்களும் விசாக்களும் இரத்து செய்யப்பட்டுவிடுமானால், எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு நெடுகிலும் வேலிகள் எதற்காக பாதுகாப்பு படைகளை அனுப்புவது எதற்காக" என்று மூத்த பிஜேபி தலைவர் ஜஸ்வந்சிங் ஆத்திரத்துடன் கேட்டார்.

பாக்கிஸ்தானில், இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்த ஏற்பாடு காஷ்மீர் போராட்டத்திற்கு துரோகமிழைக்கும் செயல் என்று கண்டித்துள்ளனர். "காஷ்மீர் முஜாஹைதீன்கள் (புனிதப் போராளிகள்) சிந்திய இரத்தத்திற்கு இது துரோகம் இழைப்பதற்கு சமமாகும்". என ஜெய்ஸ்-இ-மொகம்மது எனும் அமைப்பிற்கான பேச்சாளர் ஒருவர் அறிவித்தார். "பாக்கிஸ்தானுடன் காஷ்மீர் ஐக்கியப்படுவதற்கான கருத்தை இது பலவீனப்படுத்திவிடும்" ஹிஸ்புல் முஜாஹைதீன் தலைவர் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.

பாக்கிஸ்தான் ஜனாதிபதி பர்வெஸ் முஷாரஃப் அல்லது இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இருவருமே வலுவான அரசியல் நிலைப்பாட்டில் இல்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டதற்கு ஆதரவு தெரிவித்ததற்கு முஷாரஃப் ஏற்கனவே அழுத்தத்தின் கீழ் இருந்து வருகிறார். தங்களது பொருளாதார கொள்கைகளின் காரணமாக மக்களது வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக இரண்டு தலைவர்களுமே தங்களது நாடுகளின் விரோதப்போக்கை சந்தித்து வருகின்றனர். தங்களது அரசியல் கடினங்களை சமாளிப்பதற்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் உடனடியாக கையில் எடுத்துக் கொள்வது தேசியவாத மற்றும் வகுப்புவாத பதட்டங்களை கிளறி விடுவதுதான். அப்படி ஏதாவதொரு சம்பவம் நடந்து விடுமானால், இரு நாடுகளுக்குமிடையில் தற்போது நடைபெற்று வரும் ''ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தைகள்'' காஷ்மீர் பஸ் சேவைகள் மற்றும் இதர அடையாளபூர்வமான, "நல்லெண்ண சமிக்கைகள்தான்" முதலில் பலியாகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved