World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Opel works committee signs a "Pact for the Future"

Union endorses wage cuts

ஜேர்மனி: ஓப்பல் தொழிற்குழு "வருங்காலத்திற்கான ஓர் ஒப்பந்தத்தில்" கையெழுத்திடுகிறது

தொழிற்சங்கங்கள் ஊதியக் குறைப்பிற்கு ஒப்புதல் தருகின்றன

By Dietmar Henning and Peter Schwarz
16 March 2005

Back to screen version

கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி, ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து ஐரோப்பிய துணை நிறுவனங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற்சங்கங்களும், தொழிற்குழுக்களும், தங்கள் உறுப்பினர்கள் அனைவரையும் மொத்தம் இருக்கும் 63,000 வேலைகளில் 12,000 த்தை அழிக்கும் அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு விடுத்திருந்தன.

இதன் அமைப்பாளர்களின் நிலைப்பாட்டில் இருந்து, இந்த எதிர்ப்புக்கள் வெறும் கண்துடைப்பைத்தான் அர்த்தப்படுத்தியது, அதேவேளை ஜேர்மனியில் Bochum தொழிற்கூடத்தில் வேலையில் இருந்து தன்னியல்பாய் வெளிநடப்புச் செய்திருந்த தொழிலாளர்களின் நடவடிக்கைக்கு அவர்கள் ஒப்புதல் தரவில்லை.

ஐந்து மாதங்களுக்குப் பின்னர், GM, தான் திட்டமிட்டிருந்த அனைத்து வேலை வெட்டுக்களையும் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், எஞ்சியிருக்கும் தொழிலாளர்களின் ஊதியங்களைக் கணிசமாகக் குறைப்பதற்கும், தொழிற்சங்கங்கள், தொழிற்குழுக்களின் முழு ஆதரவுடன் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளது.

அக்டோபர் 19 ஆர்ப்பாட்டங்களில் தாங்கள் என்ன செய்வோம் என அறிவித்திருந்தனவோ, அதற்கு நேர்மாறாகத்தான் சங்கங்கள் செய்துள்ளன. ஆலைகளை ஒன்றுக்கு ஒன்று எதிராக தூண்டிவிடுவதன் மூலம், தொழிலாளர்களின் ஒற்றுமையை கீழறுத்த வகையில் நிறுவனம் எதையெல்லாம் செய்ய விரும்பியதோ, அதையெல்லாம் அவை செய்து முடித்துள்ளன.

இந்த நிலைக்கு தொழிலாளர்கள்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியுள்ளது. ஜேர்மனி முழுவதும், ஓப்பலில் இருக்கும் 32,000 வேலைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அழிக்கப்பட்டுவிடும் என்பதோடு, ஊதியங்களும் 15 சதவிகிதம் குறைக்கப்பட்டு விடும். ஸ்வீடனில் மகத்தான வேலைவெட்டுக்கள் திட்டமிடப்பட்டுள்ளன; டிரால்ஹாட்டனில் உள்ள சாப் (Saab) ஆலை மூடப்படுவது அநேகமாக உறுதியாகிவிடும்.

பல வாரங்கள் இழுபறிக்குப் பின்னர், ஜேர்மன் தொழிற்குழுக்கள் GM க்கு செலவினங்களை கருத்திற் கொண்டு புதிய மத்தியதர வடிவை (மாதிரி) 2008ல் இருந்து ஜேர்மனியில் டிரால்ஹட்டனில் விட, றுஸ்ஸெல்ஸ்ஹைமில் கட்டமைக்கலாம் என்று நம்பவைத்துள்ளது. டிசம்பர் 24ம் தேதி தொழிற்குழுக்கள் அனைத்தும் ஒரு கூட்டு ஒப்பந்தத்தை ஏற்று 9,500 வேலைகளை வெட்டுவதற்கு ஒப்புக் கொண்ட பின்னர், குழுத்தலைவர் Klaus Franz மற்றொரு ஒப்பந்தத்தை மார்ச் 4ம் தேதி ஊதியக் குறைப்புக்கள் மற்றும் வேலைநிலைமைகள் குறைப்பு இவற்றை ஏற்கும் முறையில் கையெழுத்திட்டார். இந்த நடவடிக்கைகள் ஓப்பலுக்கு ஆண்டு ஒன்றிற்கு ஒரு பில்லியன் யூரோக்களை சேமித்துத் தருபவை ஆகும்.

இந்த ஒப்பந்தம் விந்தையான முறையில் "வருங்காலத்திற்கான ஒப்பந்தம்" என்ற பெயரைக் கொண்டுள்ளது. இதையொட்டி தொழிற்குழு, (மிகவும் சந்தேகத்திற்குரிய) உறுதி மொழி ஒன்றை GMல் இருந்து, அதாவது இப்பொழுதில் இருந்து 2010 வரை எந்த ஆலையும் மூடப்படமாட்டாது என்பதை கையெழுத்திட்டுப் பெற முயற்சி செய்கிறது.

"வருங்காலம்" பற்றிய குறிப்பு ஓர் அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய தகுதியை கொண்டுள்ளது. தொழிற்குழுவும், தொழிற்சங்கமும் நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு நிபந்தனை இன்றிச் சரணடைந்ததை அடுத்து, அடுத்த கட்ட ஆட்குறைப்புக்கள், ஊதிய குறைப்புக்கள் ஆகியவை தொடுவானத்தில் ஏற்கனவே தென்படுகின்றன.

கடந்த பல மாதங்களாகவே, ஜெனரல் மோட்டார்ஸ் ஓப்பல் நிறுவன ஊழியர்களின் ஊதியங்கள் உலோகத் தொழிலாளர்களுடைய ஊதிய விகிதத்தைவிட 20 சதவீதம் குறைவாக இருப்பதற்கான நடவடிக்கைகளை வலியுறுத்தியுள்ளது. "வருங்காலம் பற்றிய ஒப்பந்தம்" என்பது மூன்று ஜேர்மனிய ஆலைகளான (Russelsheim, Kaiserslautern, Bochum) இவற்றில் இருக்கும் ஊதியங்களில் பல வெட்டுக்களைக் கொண்டுவர முயலுகிறது.

2004, 2005 ஆண்டுகளுக்கான ஊதிய உயர்வு மொத்தத்தில் 3.5 சதவீதம் என்பது, இந்த மூன்று இடத்தில் உள்ள ஆலைகளிலும் இப்பொழுது இரத்து செய்யப்பட்டுவிடும். Kaiserslautern ல் ஊதியங்கள் இன்னும் 6.5 சதவீத வெட்டிற்கு உட்படுத்தப்படும்.

Bochum இல் ஏழு ஆண்டுகள் ஊதியத் தேக்கநிலை என்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுவிட்டது. 2010 ஆண்டு முடியும் வரை ஊதியங்களில் எந்த உயர்வும் இராது.

இந்த நடவடிக்கைகள் அனைத்தினாலும் Rüsselsheim தொழிலாளர்களுக்கு ஊதியத்தில் 8.5 சதவீதம் வெட்டும், Kaiserslautern தொழிலாளர்களுக்கு 15 சதவீதக் குறைப்பும் ஏற்படுகின்றன. வருங்காலத்தில் இயற்றவுள்ள ஊதிய விகிதங்களை பொறுத்து, Bochum இல் உள்ள தொழிலாளர்கள் 10ல் இருந்து 12 சதவீத ஊதிய இழப்பை பெறுவர்.

கிறிஸ்துமஸ் போனஸ் தொகைகளும் குறைக்கப்பட்டுவிடும். 2001ல் ஒப்புக் கொள்ளப்பட்டிருந்த, ஒரு முந்தைய மறுசீரமைப்புத் திட்டத்தின்படி (The Olympia Program), Russelsheim, Kaiserslautern இவற்றில் உள்ள தொழிலாளர்கள் இந்த ஆண்டும், மாத மொத்த ஊதியத்தில் 130 சதவீதம் போனசாகப் பெறுகின்றனர். ஆனால் Bochum இல் இது 85 சதவீதமாகக் குறைக்கப்பட்டுவிடும்.

2006ல் இருந்து, கிறஸ்துமஸ் போனஸ்கள் அனைத்து ஆலைகளிலும் 70 சதவீதமாகத்தான் இருக்கும். நிறுவனம் நஷ்டம் இல்லாமல் இயங்கத் தொடங்கினாலோ அல்லது இலாபம் ஈட்டத் தொடங்கினாலோதான் இது 100 சதவீதமாக உயர்த்தப்படும். ஓப்பல் நிறுவனத்தலைவர் Hans Demant இன்னும் சில ஆண்டுகளுக்கு இலாபம் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துவிட்டார்.

ஒப்பந்தமானது ஊதிய வெட்டுக்களுடன்கூட, உழைக்கும் நேரம் பற்றிய கட்டுப்பாடுகள் பற்றியும் கூறுகிறது. இப்பொழுது 30ல் இருந்து 40 மணி நேரங்கள் வாரத்திற்கு என்பதில் இருந்து, வேலை மணியைப் பொறுத்து இல்லாமல் தொழிலாளர்கள் சரியாக 35 மணி நேர வாரத்திற்கு ஊதியத்தைப் பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர அவர்கள் ஆண்டு ஒன்றுக்கு, Bochum இல் இருப்பவர்கள் 15 சனிக்கிழமைகள், அல்லது ஞாயிற்றுக்கிழமை இரவுகள் வேலைக்கு வரத்தயாராக வேண்டும். இந்தப் பணிக்கு கூடுதல்நேர ஊதியம் (overtime wages) கொடுக்கப்படமாட்டாது.

இந்த நடவடிக்கைகளினால், தொழிற்குழுக்களின் கூட்டு தற்போதைக்கு நிர்வாகத்துடன், எந்த ஜேர்மனிய தொழிற்சாலையும் 2010க்கு முன்னதாக மூடப்படமாட்டாது என்ற ஒப்பந்தத்தை கொண்டுள்ளது. ஆயினும், ஜனவரி மாதம் Süddeutsche Zeitung செய்தித் தாளிடம் அளித்த பேட்டி ஒன்றில் GM தலைமை அதிகாரி ரிக் வாகோனெர் தெளிவாகக் கூறினார்: "ஐரோப்பாவில் நாங்கள் வெற்றியடையவில்லை என்றால், அனைத்து ஆலைகளையும் மூடிவிடுவோம்." "இரக்கமற்ற போட்டிச் சூழ்நிலையும் தொழிலில் கூடுதல் உற்பத்தித்திறனும் இருக்குமேயாயின் உலகத்தில் எந்தப் பகுதியிலும் ஆலைகள் மூடுவது தவிர்க்க முடியாததாகிவிடும்". ஓப்பலில் இழப்புக்கள் அதிகமாகிவிட்டால், பழையபடி பேச்சு வார்த்தைகள் தொடக்கப்பட்டு விடும்.

Rüsselsheim தான் புதிய மத்திய தர கார் மாதிரிகள் உற்பத்தி செய்யப்படவேண்டும், டிரால்ஹாட்டனில் அல்ல என்பதில் தொழிற்குழு உறுதியாக இருந்தது. கூட்டு தொழிற்குழுவின் தலைவரான Klaus Franz ஒப்பந்தத்தை இந்த அடிப்படையில்தான் மேற்கொண்டார். 2008ல் இருந்து Rüsselsheim புதிய ஓப்பல் வெக்ட்ரா மற்றும் சிக்னம் மாதிரிகளையும் சாப் 9-3 மாதிரியையும், ஆண்டு ஒன்றிற்கு 293,000 வண்டிகள் என்ற வகையில் உற்பத்தி செய்யத் தொடங்கிவிடும்.

டிரால்ஹட்டன் தொழிற்குழு கணிசமான ஊதிய வெட்டுக்கள், இன்னும் நெகிழ்ச்சியான உழைக்கும் நேரத்தை தரத்தயாராக இருந்தாலும், GM கருத்தின்படி Rüsselsheim ஆலையைப் பொறுத்தவரை செலவினங்களில் 200 மில்லியன் யூரோக்கள் மொத்த உற்பத்திக் காலத்திலும் கூடுதலாக இருக்கும் என்று உள்ளது. ஜேர்மனிய ஆலைகள் ஒரு மணி நேரத்திற்கு 60 கார்களை உற்பத்தி செய்ய முடியும்போது, டிரால்ஹட்டன் 39 கார்களைத்தான் உற்பத்தி செய்ய முடியும்.

இத்தகைய முடிவு, டிரால்ஹட்டன் சாப் ஆலை தொடர்ந்து இருக்குமா என்பதையே கேள்விக் குறியாக்கிவிட்டது. கடந்த ஆண்டு 105,000 கார்கள் ஆலையில் இருந்து உற்பத்தியாகி வெளியேறின; இவற்றில் மூன்றில் இரு மடங்கு 9-3 மாதிரியாக இருந்தவை; இதற்கு அடுத்த மாதிரி இப்பொழுது Rüsselsheim இல் கட்டமைக்கப்பட உள்ளன. உற்பத்தி இழப்பை ஈடுசெய்யும் வகையில், சில உயர்நுட்ப, சிறப்பு மாதிரிகள் அங்கு சிறிய அளவில் செய்யப்படும்; கடிலாக் BLC ஆண்டு ஒன்றுக்கு 10,000; சாபின் சொந்த மாதிரியான 9-5; புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 9-3 ஸ்போர்ட்ஸ் வாகனம் ஆகியவை மற்றும் ஒரு விளையாட்டுப் பயன்பாட்டு வாகனமும் இதில் அடங்கும். ஆண்டு ஒன்றிற்கு 200,000 வண்டிகளை தயாரிக்கும் திறன் உள்ளது என்பது டிரால்ஹட்டனில் வேலைகள் மற்றும் ஊதியங்களுக்கு கடுமையான அழுத்தத்தை, அண்மை எதிர்காலத்தில் ஆலை முடப்படவில்லை என்றால் கொடுக்கும்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் Bochum இல் உள்ள ஓப்பல் ஆலையின் வேலைகள் நிலைமை, ஊதியங்கள் ஆகியவை பிரச்சினைக்கு உரியவையாகிவிடும். இதன்பின்னர்தான் 2010ல் தொடங்க இருக்கும் அஸ்ட்ரா வகையின் உற்பத்தி எங்கு மேற்கொள்ளப்படும் என்பது முடிவெடுக்கப்படும். Bochum தொழிற்குழுத் தலைவர் Rainer Einenkel, குறைந்தது ஒரு ஐரோப்பிய ஓப்பல் நிறுவனமாவது 2010 ஐ ஒட்டி, நிரந்தரமாக மூடப்பட்டுவிடலாம் என்று கூறியுள்ளார். போச்சும் ஆலை பிரிட்டனில் உள்ள லூடன் ஆலை, பெல்ஜியத்தில் உள்ள ஆன்ட்வேர்ப் ஆலை இவற்றிற்கு எதிரான போட்டியில் உள்ளது.

தொழிற் குழுக்களின் பணி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் நிர்வாகத்துடன் காதலுருடன் ஒப்பந்தம் போல் உடன்பாடு கொள்வதோடு நின்றுவிடுவதில்லை. இந்தக்குழுக்கள் உடன்பாடுகளில் உள்ள நிபந்தனைகளை தொழிலாளர்கள்பால் சுமத்துவதற்கும் பொறுப்புக் கொண்டுள்ளனர். இந்த விதத்தில் அவர்கள் கடினமான நிலையை எதிர்கொள்ளுகின்றன.

"தானாகவே" இறுதி இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொண்டு வேலையிலிருந்து விலகத் தயாராக இருக்கும் 6,000 தொழிலாளர்களை இவர்களால் காணமுடியாதபொழுது இது தெளிவானது. டிசம்பரின் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தொழிலாளர் எண்ணிக்கை 9,500ல் இருந்து 6,000 ஆகக் குறைக்கப்பட வேண்டும்; Rüsselsheim இல் 2,700, Bochum இல் 3,000, Kaiserslautern இல் 300 என்று இது நிர்ணயிக்கப்பட்டது. இது மொத்த ஊழியக்காலத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். மற்ற வேலை வெட்டுக்கள் பகுதி முறையிலான, முன்கூட்டியே ஓய்வு என்ற அடிப்படையில் இருக்க வேண்டும்.

இதற்காக காலவரம்பு ஜனவரி இறுதியில் முடிவடைந்தபோது, தானாகவந்து விலகிச் செல்பவர்கள் எண்ணிக்கை 6,000 என்ற இலக்கைக் கூட நெருங்கவில்லை. இதற்கு ஓரளவு நிர்வாகமே காரணம்; ஏனெனில் மூத்த பணியாளர்கள் இதைப் பயன்படுத்தி வெளியேறுவதை அது ஏற்கவில்லை; ஏனென்றால் அவர்கள் நீக்கம் செய்யப்பட்டால் இழப்பீட்டுத் தொகைகள் அதிகமாக கொடுக்கப்பட வேண்டும் என்று ஆயிற்று.

தொழிலாளர்கள் ஏற்கக் கூடிய வகையில் தொழிற்குழு நீண்ட காலம் இருந்தவர்கள் நீங்கினால் கூடுதலான தொகைகள் அளிக்கப்படவேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருந்தது. இறுதியில் நிர்வாகம் சிறிய தொகைகளை மட்டுமே இழப்பீடாய் உரிமைகோரக்கூடிய இளைய, பயிற்சியற்ற தொழிலாளர்களை மட்டும்தான் அகற்ற வேண்டும் என்று பிரதானமாக விரும்பியது இறுதியில் தெளிவானது.

Rüsselsheim இல் நிர்வாகம் 600 தொழிலாளர்கள் விருப்பத்துடன் விலகுவதை ஏற்கவில்லை; Bochum இல் அதேபோல் 300 தொழிலாளர்கள் நீங்குவதையும் ஏற்கவில்லை; தொழிற்கூட உற்பத்தி முறை சீராக இயங்குவதற்கு இவர்கள் "கட்டாயம் தேவை" என்ற காரணம் கூறப்பட்டது. Bochum தொழிற்குழுவின் தலைவரான Einenkel "முக்கியமாகச் செலவினங்களின் அடிப்படையில்" விலகல்கள் மறுக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

ஜனவரி மாத இறுதியில் 6,000 பேர் நீக்கம் என்ற இலக்கு அடையப்படாதபொழுது, இறுதித் தேதி ஜனவரி 25 வரை ஒத்திவைக்கப்பட்டது. நிர்வாகமும், தொழிற்குழுக்களும் இந்த அவகாசத்தை பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்கள்மீது கடுமையான அழுத்தத்தை கொடுத்தன. மனித வளத்துறை இளவயது தொழிலாளர்களை தனித் தனியே அழைத்து விருப்பத்துடன் அவர்கள் விலகவில்லை என்றால், கட்டாய நீக்கத்தின்படி அவர்கள், முதலில் நீக்கப்பட நேரிடலாம் என்று நினைவுபடுத்தினர்.

இறுதியில் குறிப்பிட்ட அளவு Rüsselsheim இலும், Kaiserslautern இனிலும் அடையப்பட்டது. ஆனால், Bochum இல் 1,500 பேர்தான் பெப்ரவரி இறுதிக்குள் மிகையான தொழிலாளிக்கு வேலைஇழப்பீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இப்பொழுது ஒரு புதிய திட்டமாக 2007க்குள் இன்னும் 1,500 பேர் தானாக வேலை இழப்பீட்டை ஏற்கலாம் என்று வந்துள்ளது.

இப்பொழுது "வருங்காலத்திற்கான உடன்படிக்கை" என்பதை செயல்ப்படுத்துவதற்கு தொழிற்குழுக்கள் வற்புறுத்தப்படுகின்றன; இதில் ஊதியக் குறைப்புக்களும், இன்னும் நெகிழ்ச்சியான வேலைநேரங்களும் உள்ளன. "தொழிலாளர்கள் மீது அதிக வேலைப்பளுக்கள் சுமத்தப்படுகின்றன" என்று தொழிற்குழு தலைவர் Einenkel ஒப்புக் கொண்டுள்ளார். இந்த ஒப்பந்தம் "செயல்படுத்தவது பற்றிக் கடுமையான விவாதங்களை" தான் எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என்று அவர் கருதுகிறார்.

Bochum இல் தானாக வேலையில் இருந்து நிற்கத் தயாராக உள்ளவர்களை கண்டுபிடிப்பது அரிதாக உள்ள நிலை, சமூக ஜனநாயகக் கட்சி (SPD) க்கும் தொழிலாளர்களுக்கும் இடையே உள்ள வளர்ந்துவரும் மனமுறிவை நன்கு விளக்கிக் காட்டுகிறது. பல தசாப்தங்களாக ஜேர்மனிய தொழில் துறையில் மையமான ரூர் பகுதியில், முன்கூட்டி ஓய்வுபெறல் திட்டங்களுடன் சேர்ந்து, தானாக வேலையிலிருந்து விலகி இழப்பீட்டை ஏற்கும் பொதிகள் என்பது ஒரு வகையில் வேலை வெட்டுக்களுக்கு மிகவும் அடிக்கடி பயன்படுத்தப்படும் வழிமுறைகளாக இருந்திருக்கின்றன. இந்த முறை, சுரங்கத் தொழில், எஃகுத் தொழில் மற்றும் உலோகத் தொழிலில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலையிழப்பிற்குப் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ரூர் பகுதியை உள்ளடக்கிய வட ரைன் வெஸ்ட்பாலியா (NRW) வை கடந்த 38 ஆண்டுகளாக சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியும் தொழிற்சங்கங்களும் இணைந்து மகத்தான அளவில் வேலைகளை தகர்த்து வருகின்றன. கடந்த காலத்து அல்லது இப்பொழுதுள்ள பெரும்பாலான தொழிற்சங்க உயர் அலுவலர்கள் சமூக ஜனநாயகக் கட்சியிலும் உயரிடத்தில் உள்ளனர். தற்போதைய சமூக ஜனநாயகக் கட்சித் தலைவரான ஹரால்ட் சார்ட்டா, அரசாங்கத்தின் வேலைவாய்ப்பு மந்திரியாக உள்ளார்: முன்பு இவர் IG Metall உடைய, Bochum மை உள்ளடக்கிய, Dortmund கிளையில் பொறியியல் துறையின் தொழிற்சங்கத்தின் முன்னணி உறுப்பினராக இருந்தவராவார்.

தானாக விருப்ப ஓய்வு பெறலாம் என்பதற்கு நல்ல எதிர்பார்ப்பு இல்லை என்றால், இது சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள்மீது நம்பிக்கையற்ற தன்மையின் ஒரு வெளிப்பாடு ஆகும். ரூர் பகுதியில் வேறு வேலை தேடுவது என்பது அடிப்படையில் பயனற்ற முயற்சியாகும்; சமூக ஜனநாயக அரசாங்கத்தின் கீழ் எதிர்காலத்திலும் இந்த மோசமான நிலையில் எந்த மாற்றமும் இருக்காது என்றுதான் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கருதுகின்றனர்.

ரூர் பகுதியில் வேலையின்மை விகிதம் பெப்ரவரி மாதம் வியத்தகு அளவில் அதிகமாயிற்று; இப்பொழுது கிழக்கு ஜேர்மனிய நலிவுற்ற பகுதிகளில் இருந்தது போன்ற நிலைக்குச் சமமாக வந்துவிட்டது. Bochum மில் வேலையின்மை விகிதம் ஜனவரி மாதம் 14.8ல் இருந்து பெப்ரவரியில் 17.8 சதவீதம் அதிகமாகிவிட்டது. அருகில் இருக்கும் எசன் மற்றும் டோர்ட்மூண்ட் நகரங்களில் வேலையின்மை வீதம் முறையே 16.6, 20 சதவீதம் என்று உள்ளது. Gelsenkirchen நகரத்தில் இது 26.4 சதவீதமாக உள்ளது. ரூர் பகுதி முழுவதுமாக, 362,000 மக்கள் வேலை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

இத்துடன் சமீபத்திய ஹார்ட்ஸ IV சட்டங்கள், வேலையின்மை சலுகைகள் கடுமையாக குறைக்கப்பட்டமை இவற்றிக்கு பேர்லினில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டரசு அரசாங்கம் பிரதான காரணமாகும். தங்களுடைய வேலைகளை இழக்கும் நிலையில் உள்ள ஓப்பல் தொழிலாளர்கள் அடுத்த 12 மாதங்களில் தேர்ச்சி பெற்ற தொழிலாளிக்கு ஓரளவு நல்ல ஊதியம் என்ற நிலைமையில் இருந்து சமூக நலன்கள் கொடுக்கும் மிகக் குறைந்த சலுகைகள் மட்டுமே பெறும் நிலைக்குத் தள்ளப்படுவர்.

அரசாங்கத்தின் வேலைத்துறை அலுவலகத்தில் இருந்து ஒரு சென்ட் காசு வாங்குவதற்குள், பல ஆண்டுகாலமும் தவணைத்தொகை செலுத்தி பெறப்பட்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடி இல்லங்கள், மற்றும் குடும்பக் கார்கள் இவற்றை விற்பதற்கு தொழிலாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவர். சிலரைப் பொறுத்தவரை பல தசாப்தங்களின் கடின உழைப்பு ஒரே ஆண்டில் அழிக்கப்பட்டுவிடும்: இதுதான் சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு கொடுக்கும் நலன்கள் ஆகும்.

இப்பொழுது 1966க்குப் பின்னர் முதல் தடவையாக வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் மீதான ஆட்சிப் பொறுப்பை இழக்கும் எதிர்பார்ப்பைத்தான் சமூக ஜனநாயகக் கட்சி கொண்டுள்ளது. இப்போதைய கருத்துக் கணிப்புக்களின்படி, கன்சர்வேடிவ் கட்சிகளான CDU (Christian Democratic Union), மற்றும் FDP (Free Democrats) ஆகியவை மே மாதம் வரவிருக்கும் தேர்தல்களில், ஆளும் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி கூட்டணியில் இருந்து பதவியைக் கைப்பற்றிவிடுவர் எனத் தெரிகிறது.

1970 களில் சமூக ஜனநாயகக் கட்சி எழுச்சி பெற்றது சுரங்கங்களை மூடுவதற்கு எதிராக சுரங்கத் தொழிலாளிகளின் போர்க்குணமிக்க போராட்டங்களோடு நெருங்கிப் பிணைந்திருந்தது. அந்த நேரத்தில் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கம் ஓப்பல் ஆலைகளை, பழைய சுரங்கத் தொழிலாளர்களுக்கு வேலயளிக்கும் வகையில், விரைவில் விரிவாக்கம் செய்யவேண்டும் என்று முயற்சித்தனர். இப்பொழுது ஓப்பல் இருக்குமா என்ற கேள்வி வந்துள்ளபோது, அந்த நிலையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாட்டை சமூக ஜனநாயகக் கட்சி கொண்டுள்ளது. மேலும் சமூக ஜனநாயகக் கட்சி வேலையின்மை சலுகை, கடுமையான ஹார்ட்ஸ் IV சட்டங்கள் இவற்றை தவிர தொழிலாளர்களுக்கு எதையும் கொடுப்பதில்லை.

சமூக ஜனநாயகக் கட்சியால் முடிந்தது எல்லாம் ஓப்பல்லின் உற்பத்தி ஆலைகள் சிறிது காலத்திற்கு மூடப்படாமல் இருக்கும் என்ற பேச்சளவு உறுதிமொழியை பெற்றுள்ளதுதான். NRW உடைய வேலை, பொருளாதார மந்திரி ஷார்டெள சமூக ஜனநாயகக் கட்சி இன் அச்சங்களை பற்றி கூறும்போது, ஓப்பலில் இருக்கும் நிலைமையும், பெருகி வரும் வேலையின்மையும் சமூக ஜனநாயகக் கட்சியை வரவிருக்கும் தேர்தல்களில் முக்கியமற்ற நிலைக்கு தள்ளிவிடக் கூடும் என்றும், ஒரு "சமரசத்திற்கு" வருமாறு பல தடவைகளும் ஓப்பலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வெஸ்டபாலியாவின் "Rundschau" தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியில் பேசுகையில், ஷார்டெள கூறினார்: "Bochum ஆலைக்கு ஒரு நீண்டகால உத்தரவாதம் இருக்கும் என்று மக்களுக்கு நம்பிக்கை இருந்தால், சில சலுகைகளை அவர்கள் கொடுப்பார்கள்." ஆனால், இப்பொழுது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கை சமூக ஜனநாயகக் கட்சி உடைய தேர்தல் வாய்ப்புக்களை அதிகரிப்பது என்பது அரிதாகத்தான் இருக்கும்.

சமூக ஜனநாயகக் கட்சியும் தொழிற்சங்கங்களும் முற்றிவிட்ட சிதைந்த தன்மையில் இருக்கும் நிலையிலும், அவர்களுடைய இடத்தை அடைவதற்கு உருப்படியான வெகுஜன அரசியல் மாற்றீடு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

வரவிருக்கும் NRW தேர்தல்களில், தேர்தல் மாற்று என்று அழைக்கப்படும்--தொழிலாளர் மற்றும் சமூக நீதி (ASG) என்னும் கட்சி ஓப்பல் ஆலைகளில் குறிப்பிட்ட ஆதரவைப் பெற்றுள்ளது. ஆனால் ASG, அடிப்படையில் சமூக ஜனநாயகக் கட்சியின் பொறுப்பில் பேரழிவிற்கு ஆளாகிய அதே சமூக ஜனநாயக சீர்திருத்தவாத முன்னோக்கையேதான் புதிப்பிக்க முயற்சி செய்கிறது. ASG, மிகப் பெரிய வகையில் முன்னாள் சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களை கொண்டு தொழிற்சங்கங்களுடன் நெருக்கமாக ஒத்துழைக்கவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது.

சமீப காலத்திய மாதங்களில், ஓப்பலில் கிடைக்கப்படும் அனுபவங்கள் தொழிற்சங்கங்கள் உலகளாவிய நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் போன்றவற்றிற்கு எதிராகத் திறமையான பிரச்சார முயற்சிகளை மேற்கொள்ளும் திறன் அற்றவை என்பதை மட்டும் காட்டாமல், இவை வேலை மற்றும் ஊதிய வெட்டுக்களை, தங்கள் உறுப்பினர்கள்மீது ஏனைய தாக்குதல்களை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர் என்பதும் தெரியவருகிறது. இது தனி நபர், ஊழல் மலிந்த தொழிற்சங்கங்கள், செயற் குழுத் தலைவர்கள் இவர்களின் உற்பத்தி மட்டுமல்லாமல், தொழிற்சங்கவாத முன்னோக்கின் தர்க்க ரீதியான விளைவும் ஆகும்.

பூகோளமயப்படுத்தப்பட்ட முதலாளித்துவ உற்பத்தியின் பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலையின் கீழ், தொழிற்சங்கங்கள் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் மகத்தான சலுகைகளை தங்களுடைய உறுப்பினர்களுக்கு கொடுக்கும் "மிகச் சிறந்த" சலுகைகளாக விவரிக்கின்றனர். ஆலைகளை "தங்களுடையதாக" தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டும் "தங்கள்" நாட்டின் நலன்களை காக்கும் பொருட்டும் அவர்கள் அரசியல்வாதிகளையும் நிர்வாகத்தினரையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர்.

இந்த இலக்குகளை அடைவதற்காக எந்தச் சலுகைகளையும் இவர்கள் தரத்தயாராக இருக்கின்றனர்- தாங்கள் ஏற்றுக் கொள்ளுவதின் பரப்பிற்கு எந்த வரம்பையும் கொள்ளவில்லை. சர்வதேச நிறுவனங்கள், நிதிச் சந்தை அமைப்புக்கள் ஆதிக்கம் செலுத்தும் பூகோளப் பொருளாதாரத்தில், தொழிற்சங்கங்கள் தங்களுடைய நிறுவனங்கள் அரசாங்கங்கள் இவற்றின் இலாபங்கள், சந்தைகள் இவற்றிற்கான பூகோளம் தழுவிய பெருந்தேடுதலில் உடந்தையாளர்களாக ஆக்கிக் கொண்டுவிட்டுள்ளன. இந்த உண்மைதான் ஓப்பல் ஒப்பந்தத்தில் மட்டும் இல்லாமல் Daimler Chryzler, Volkswagen, Siemens மற்றும் பொதுத் துறைகளிலும் கூட தெளிவாக வெளிப்படுகிறது.

ஓப்பலில் நடைபெற்று வரும் நிகழ்வுகளில் இருந்து பற்றியெடுத்துக் கொள்ள வேண்டிய படிப்பினை இதுதான்: தொழிலாள வர்க்கத்தை தேசிய எல்லைகளைக் கடந்து ஒன்றிணைக்கும் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையின்மூலம்தான் தொழிலாளர்களின் நலன்கள் காக்கப்பட முடியும். அத்தகைய மூலோபாயம் முதலாளித்துவ அமைப்பை கட்டாயம் எதிர்த்தாக வேண்டும் மற்றும் சமுதாயத்தை சோசலிச வழியில் மறுஒழுங்கமைப்பதற்கு கட்டாயம் போராட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved