World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany's new parliament: democratic fig leaf of an authoritarian government

ஜேர்மனியின் புதிய பாராளுமன்றம்: சர்வாதிகார அரசாங்கத்திற்கு ஜனநாயக மூடுதிரை

By Ulrich Rippert
21 October 2005

Back to screen version

செவ்வாய்க்கிழமை அன்று புதிய ஜேர்மனிய பாராளுமன்றம் முறைப்படி தன்னுடைய கூட்டத்தை தொடங்கியது. முதல் அதிகாரபூர்வ பணியாக 614 உறுப்பினர்களும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் (CDU) அரசியல்வாதியான Norbert Lammert ஐ பாராளுமன்ற தலைவராக தேர்ந்தெடுத்தனர்.

விதி ஒழுங்குமுறையின்படி, கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் உறுப்பினரான கூட்டாட்சித் தலைவர் Horst Kohler இற்கு அடுத்தபடியாக பாராளுமன்றத்தின் தலைவர் ஜேர்மனிய நாட்டின் இரண்டாம் உயர் பிரதிநிதியாவர். அதிபராக ஏஞ்சலா மெர்க்கல் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன், நாட்டின் மிக முக்கியமான பொதுப் பதவிகள் மூன்றையும் தன்வசம் வைத்திருக்கும்.

தன்னுடைய ஆரம்ப உரையில் பாராளுமன்றத்தின் முக்கியத்துவத்தை "ஜனநாயகத்தின் இதயத்தானம்" என்று லாமெர்ட் வலியுறுத்தியுள்ளார். ஆனால் வரவிருக்கும் சமூக ஜனநாயக கட்சி (SPD), கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU) ஆகியவற்றின் பெரும் கூட்டணி மிகப் பெரும்பான்மையை கொண்டுள்ள நிலையில், பாராளுமன்றம் தன்னுடைய பொறுப்புக்களை பற்றிக் குறிப்பான உணர்வு பெற்றிருக்கவேண்டும் என்று அவர் தொடர்ந்து கூறினார். கூடியிருந்த மன்ற உறுப்பினர்களிடம் பாராளுமன்றம் "அரசாங்கத்தின் முடிவுகளுக்கு வெறும் முத்திரையிடுவது" போல் இருக்கக் கூடாது என்றும் அரசாங்கத்திற்கு "கட்டளையிடும் அமைப்பாக" இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

இது இருட்டில் விசிலடிப்பது போல் இருக்கிறது. வரவிருக்கும் சட்டக்கூட்ட தொடரில், உறுப்பினர்கள், கட்சிகள், அவற்றின் பாராளுமன்ற குழுக்கள் அனைத்தும் முன்பு இருந்ததைவிட மிகக் குறைந்த அரசியல் அதிகாரத்தையும், செயற்பாட்டுத் திறன் குன்றியும்தான் செயல்படும். சமூக ஜனநாயக கட்சி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் இரண்டின் பெரும் கூட்டணி பாராளுமன்றத்தில் கிட்டத்தட்ட நான்கில் மூன்று பங்கு அளவிற்கு 448 உறுப்பினர்களை கொண்டுள்ளது.

தன் பக்கத்திலேயே இருந்த சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் செல்வாக்குட்பட்டிருந்த, வெளியேறிச் செல்லும் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணி போல் இல்லாமல், வரவிருக்கும் அரசாங்கம் தன்னுடைய பாராளுமன்ற கட்சிப் பிரிவுகளிலேயே எதிர்ப்புக் காட்டும் நூறு உறுப்பினர்களையும் சமாளிக்க முடியும். இது "சட்டம் இயற்றுவதில் இருந்து நிறைவேற்று துறைக்கு அழுத்தம் நகர்ந்துவிட்டதை தெளிவாகக் காட்டுகிறது" என்று Suddeutche Zeitung வர்ணித்துள்ளது.

அன்றாட வாழ்க்கையை போலவே, அரசியலிலும் ஒரு வெட்கம் கெட்ட செயல் மற்றொன்றிற்கு வழிவகுக்கிறது. சமூக ஜனநாயக கட்சி அதிபர் ஹெகாட் ஷ்ரோடர் தன்னுடைய நிர்வாகத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டும் என்று விரும்பியதை, சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி பாராளுமன்றத்தில் ஒரு சிறிய, ஆனால் உறுதியான பெரும்பான்மையை கொண்டுள்ளது என்று தெரிந்தும்தான், ஜூலை 1 அன்று பாராளுமன்றம் முறையாக ஆதரித்தது; அப்பொழுதே உறுப்பினர்கள் ஒரு வலுவான, சர்வாதிகார அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்ற வகையில் முன்கூட்டிய தேர்தல்களுக்கு திட்டமிட்டிருந்தனர்.

இரண்டு பிரதிநிதிகள்தாம் ஜனநாயக முறைகளுக்கு விரோதமான அத்தகைய ஒருதலைப் பட்ச நடவடிக்கை குறித்து எச்சரித்ததுடன், நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் எதிர்த்தனர். பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிபரின் ஆணைக்கு தாழ்ந்து நின்று, பாராளுமன்ற, ஜனநாயக உரிமைகள் என்னும் முக்கிய பிரச்சினையில் அவருடைய விருப்பத்திற்கு இணங்கினர். புதிய பாராளுமன்ற தலைவர், பாராளுமன்றம், அரசாங்கம் கூறுவதற்கு வெறும் முத்திரை பதிக்கும் அமைப்பாக இருக்கக் கூடாது என்று கூறியது, ஏற்கனவே பாவம் செய்திருந்த மன்றத்திற்கு அறநெறி மருந்து கொடுப்பதுபோல்தான் இருந்தது.

தன்னுடைய அதிகாரத்தை பாராளுமன்றம் தானே குறைத்துக் கொண்ட நிலை கோடை காலத்திலேயே தொடங்கிவிட்டது. பின்னர் கூட்டரசு ஜனாதிபதியும், ஜேர்மனிய அரசியலமைப்பு நீதிமன்றமும் பாராளுமன்றத்தின் திரித்த நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுத்ததால், நிலைமை ஒன்றும் சிறப்பாகிவிடவில்லை; இது எந்த அளவிற்கு ஆளும்தட்டு தன்னுடைய வழமையான சட்டநெறியையுடன் ஆழமாக முறித்துக்கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

சமூக நலன் செலவினக் குறைப்புக்களுக்கு பெருகிய முறையில் மக்கள் எதிர்ப்பு உள்ள நிலையில், முதலாளிகள் சங்கங்கள் முக்கிய முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று கோரின; இதற்கு அதிபர் ஷ்ரோடரும் முன்கூட்டிய தேர்தல்கள் என்ற முறையில் கீழ்ப்படிந்தார். இத்தகைய முற்றிலும் ஜனநாயக முறையற்ற, நெறிபிறழ்ந்த செயல்கள்தான் இப்பொழுது புதிய அரசாங்கம் ஏற்படுத்துதல் மற்றும் பாராளமன்றத்துடன் அதன் உறவுகள் என்ற புது வகையை உருவாக்குகின்றன.

பாராளுமன்றத்தின் தலைவர் லாமெர்ட் பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் "இதயம்" என்று அழைத்தாலும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுக்கு, அரசாங்கத்திட்டங்களை வகுப்பது ஒரு புறம் இருக்க, அரசாங்கம் அமைப்பதில் எந்த செல்வாக்கும் கிடையாது. அனைத்து முக்கிய முடிவுகளும், கட்சித் தலைவர்களால் திரைக்கு பின்னான பேரங்களுக்கு பின் முடிவெடுக்கப்படுகின்றன. பாராளுமன்ற பிரதிநிதிகளைவிட செய்தி ஊடகத்திற்கு கூடுதலான தகவல்கள் கிடைக்கின்றன.

இன்னும் செல்லச் செல்ல, பிரதிநிதிகளுக்கும் பாராளுமன்ற குழுக்களுக்கும் அதிக செல்வாக்கு இருக்காது. மந்திரிசபைக்குள் தீர்க்கப்படமுடியாத கடினமாக பிரச்சினைகள் கூட்டணிக் குழுவினால் தீர்க்கப்படும். பாராளுமன்றத்தின் பங்கு முன்பே முடிவெடுக்கப்பட்ட முடிவுகளுக்கு உடன்படுவது என்றுதான் இருக்கும். அதற்காக பாராளுமன்ற விவாதங்கள் குறைக்கப்படும் என்று பொருளாகிவிடாது. பிரதிநிதிகளின் உண்மையான அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றிற்கு எதிர்மாறான விதத்தில்தான் பாராளுமன்ற சொற்போர், உரத்த ஒலி ஆகியவை இருக்கும் என்பது பலமுறையும் நிகழ்வதுதான்.

எண்ணிக்கைப்படி மொத்தம் 166 பிரதிநிதிகளையே கொண்டிருக்கும் பாராளுமன்ற எதிர்க்கட்சி மிகவும் குறைவானது. அரசியலளவில் அது செயல்திறன் அற்றது. அரசாங்கத்தை அமைக்கும் கட்சிகளுக்கு புறத்தே நிற்கும் மூன்று பாராளுமன்ற கட்சிகளான தாராளவாத ஜனநாயக கட்சி (FDP), பசுமைக் கட்சி மற்றும் இடது கட்சி ஆகியவை கொள்கையளவில் பெரும் கூட்டணிக்கு எதிரானவை அல்ல.

தாராளவாத ஜனநாயக கட்சி உடைய தலைவரான Guido Westerwelle, வலதில் இருந்து "ஒரு கடுமையான எதிர்ப்பு" இருக்கும் என்று அறிவித்துள்ளார். தங்களுடைய பணி முதலாளிகள் சங்கங்களின் அழுத்தத்தை அரசாங்கத்தின் மீது அதிகரிப்பதாக இருக்கும் என்று "தடையற்ற சந்தை" தாராளவாதிகள் கூறியுள்ளனர்; இதையொட்டி, ஒருபுறம் கடுமையான சமூக நலன் வெட்டுக்கள், தொழிலாளர் சட்டங்கள் "தாராளமயமாக்கப்படுதல்" போன்றவை மூலமும், செல்வந்தர்களுக்கு வரிச் சலுகைகள் போன்றவை மறுபுறம், சமூகச் செல்வம் கீழிருந்து மேல் நோக்கிச் செல்லும் வகையில் இருக்கும்.

தேர்தல் முடிவடைந்த உடனேயே, பசுமைக் கட்சியினர் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவர் மெர்க்கல் அதிபராவதற்கு செய்த முயற்சிகளுக்கு ஆதரவைக் கொடுத்தனர். கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் ஆகியவற்றுடன் ஆழமான விவாதங்களை நடத்த அவர்கள் மறுத்திருந்தால், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைவருக்கு அவருடைய கட்சியில் இருந்தே வலுவான அழுத்தம் ஏற்பட்டிருக்கும். மாறாக, பசுமைக் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இசைவு கொடுத்ததுடன், வருங்காலத்தில் இன்னும் கூடுதலான முறையில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் உடன் ஒத்துழைப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

Joscha Fischer பசுமைக் கட்சித் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தது இத்திசையில் தெளிவான அடையாளத்தை கொடுத்தது. கடந்த ஆண்டு பசுமைக் கட்சியும் அதன் அரசாங்கத்தில் இருந்த உறுப்பினர்களும் தங்களுடைய முக்கிய பணி சமூக ஜனநாயக கட்சிக்கு ஆதரவு கொடுப்பதும், "செயற்பட்டியல் 2010"க்கு, அதாவது சமூக நலன் குறைப்புக்களுக்கு ஆதரவு கொடுப்பதும் என்று கூறினர்; இதன் விளைவாக அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் பெருகிய எதிர்ப்பு அழுத்தத்தை சமாளிக்க முடிந்தது.

எதிர்ப்பு நிலை பற்றி அடிக்கடி பேசும் இடது கட்சி நடைமுறையில் இருக்கும் ஒழுங்கை முற்றிலும் காக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளது. மெக்லென்பேர்க் போமெரேனியா மற்றும் பேர்லின் மாநில சட்ட மன்றங்களில் இக்கட்சி சமூக நலன் குறைப்புக்களை செயல்படுத்தியதோடு மட்டும் இல்லாமல், "பெரும் தீமைகளை" தடுக்கும் வகையில் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் உடன் பேச்சுவார்த்தைகள் சென்றதற்காக தேர்தலுக்கு பிறகும் சமூக ஜனநாயக கட்சி கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு புகழாரம் சூட்டியது.

எப்படிப்பார்த்தாலும் எதிர்விளைவுதான் ஏற்பட்டுள்ளது. சமூக ஜனநாயக கட்சியினால் நிதிமந்திரியாக பெரும் கூட்டணியில் நியமிக்கப்பட்டுள்ள Peer Steinbruck சிக்கன நடவடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தும் அரசியல் தலைவர்களில் பெரும் துடிப்பு உடையவராவார்; மேலும் ஜேர்மனியின் போக்குவரத்து பாதைகளை தனியார்மயமாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில் வணிக, தொழில் துறைகளின் உயர் பிரதிநிதிகள் இன்னும் புதிய, தொலைவிளவுகள் தரக்கூடிய கோரிக்கைகளை வரவிருக்கும் அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில், முன்வைத்துள்ளனர்.

ஒரு சில நாட்கள் முன்பு, ஜேர்மனிய முதலாளிகள் சங்கக் கூட்டமைப்பு ஒன்றியத்தின் தலைவரான Dieter Hundt "ஜேர்மனிய வணிகம் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் எதிர்பார்ப்பவை" என்ற தலைப்பில் கோரிக்கைகளின் பட்டியல் ஒன்றை அளித்தார். "சமூகப் பாதுகாப்பு முறை முற்றிலும் அடிப்படையான மாறுதல்களுக்கு உட்படவேண்டும்", மற்றும் மிக விரைவாக "துணைச் சம்பள செலவினங்கள் 40 சதவிகிதத்திற்குக் குறைக்கபடவேண்டும்" என்று கூறுவது மட்டும் இன்றி, இந்த ஆவணம் பெருநிறுவனங்கள் வரிக்குறைப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்றும், மரணத்தின்பின் பரம்பரை சொத்தின் மீது வசூலிக்கப்படும் வரி அகற்றப்பட வேண்டும் என்றும், 20 தொழிலாளருக்கும் குறைவாக இருக்கும் நிறுவனங்களில் முறையற்ற வேலைநீக்கத்திற்கு எதிரான தடை கூடாது என்றும் புதிய தொழிலாளர் சட்டம், கூட்டு உடன்படிக்கைகள் "வளைந்து கொடுக்கக் கூடியதாக" இருக்க வேண்டும் என்றும் ஓய்வு வயது 67க்கு உயர்த்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

சமீப காலத்தில் மெர்க்கல், எட்மண்ட் ஸ்ரொய்பர் (CSU) இன்னும் பலருக்கும் புதிய அரசாங்கத்தில் மந்திரிகள் தேர்வு, மற்றும் அதிபர் பதவிக்கான தகுதியுடைய பல வேட்பாளர்கள் பற்றியும் நடந்துள்ள இந்த அழுத்தங்களும் வெளிப்படையான பூசல்களும், இடது கட்சி கூறுவது போல் பொதுநல, சமூகச் செலவினங்கள் பிரச்சினையை செயல்படுத்துவது தொடர்பாக ஏற்பட்டவை அல்ல. அவ்விதத்தில் அனைத்துக் கட்சிகளிடமும் கணிசமான ஒற்றுமை இருக்கிறது.

பொது மக்களிடம் இருந்து முற்றிலும் ஒதுங்கியும், பொருளாதார உயர்தட்டு, அரசாங்கக் கருவி ஆகியவற்றில் ஒரு குறுகிய சமூக அடித்தளத்தை கொண்டு செயல்படும் ஒவ்வொரு சர்வாதிகார ஆட்சியிலும் கடுமையான உட்பூசல்கள் இயல்பானவையாகும். எவ்வளவிற்கு பாராளுமன்ற முறை, ஜனநாயக முறை பெரிதும் தகர்க்கப்பட்டு மற்றும் தீவிர சமூகப் பூசல்கள் ஒடுக்கப்பட்டுமானால், அந்தளவிற்கு அரசாங்கத்திற்குள்ளேயே இருக்கும் பூசல்கள் பெருகி வெடிப்புத் தன்மையை கொண்டுவிடும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved