World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

US and EU-3 make another provocative move against Iran

ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் EU-3 உம் மேற்கொண்டுள்ள ஆத்திரமூட்டும் மற்றொரு நகர்வு

By Peter Symonds
29 September 2005

Back to screen version

சென்ற சனிக்கிழமையன்று சர்வதேச அணு சக்தி அமைப்பின் (IAEA) நிர்வாகக் குழு அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை (NPT) தெஹ்ரான் மீறியதாக அறிவித்ததை தொடர்ந்து புஷ் நிர்வாகமும் அதன் ஐரோப்பிய கூட்டணியினரும் ஈரானுடன் பகிரங்கமானதொரு மோதலை நோக்கி ஓரடி நெருங்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். ஈரான் தனது யுரேனிய செறிவூட்டத் திட்டத்தை மூடிவிட தவறுமானால், அதன் அணுவசதிகளை மிக தீவிரமாக புதிய சோதனைகள் நடத்துவதற்கு அனுமதிக்க தவறுமானால் மற்றும் ஒரு கனநீர் ஆய்வு அணுஉலையை அமைப்பது குறித்து ''மறுபரிசீலனை'' செய்ய தவறுமானால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தண்டிக்கும் தடைகள் விதிப்பது தொடர்பாக முடிவு செய்தவற்கு இந்தத்தீர்மானத்தை அனுப்புவதற்கு உரிய கட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வதேச அணு சக்தி அமைப்புக்கூட்டத்தில் கசப்பான பிளவுகள் எழுந்தன. ஐ.நா பாதுகாப்பு சபையில் இரத்து அதிகாரங்களை பெற்றிருக்கும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் ஈரான் பற்றி உடனடி பரிசீலனைக்கு விடுவதை எதிர்த்தன. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோ அத்தகைய நடவடிக்கை ''தேவையற்ற அரசியல் ஆக்கப்பட்டுவிடும்'' நிலைக்கு இட்டுச் செல்லும் மற்றும் சர்வதேச அணு சக்தி அமைப்புடன் ஏற்கனவே ஈரான் ஒத்துழைத்து வருவதால் அத்தகைய நடவடிக்கை ''எதிர்மாறான விளைவுகளை'' ஏற்படுத்தும் என்று சென்ற வாரம் அறிவித்தார். அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தம் அனுமதித்துள்ள வேறு இடங்களில் நடாத்தப்படும் சமாதான நோக்கங்களுக்கான செறிவூட்டத் திட்டங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க இந்த தீர்மானம் ஒரு ஆபத்தான முன்மாதிரியை ஏற்படுத்தியிருப்பதாக பிரேசில் போன்ற இதர நாடுகள் கவலைகளை தெரிவித்தன.

EU-3 என்றழைக்கப்படுகின்ற (பிரிட்டன், பிரான்சு மற்றும் ஜேர்மனி) ஆகிய நாடுகள் தீர்மானத்தை தளர்த்தும் வகையில் செயல்பட கட்டாயப்படுத்தப்பட்டன. ஐ.நா பாதுகாப்பு சபைக்கு விடுவதற்கான எந்த இறுதி முடிவு தாமதமாக நவம்பர் மாதம் நடக்கும் சர்வதேச அணு சக்தி அமைப்பின் அடுத்தக் கூட்டத்தில் எடுக்கப்படும். நிர்வாகக்குழுவில் இடம் பெற்றுள்ள 34 உறுப்பினர்களில் அப்போதும் 22 பேர் மட்டுமே சாதகமாக வாக்களித்தனர். ரஷ்யா, சீனா, பாக்கிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் பிரேசில் உட்பட 11 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. வெனிசூலா இந்தத் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இரண்டு தசாப்தத்தில் மூன்றாவது முறையாக சர்வதேச அணுசக்தி அமைப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படவில்லை.

சர்வதேச அணுசக்தி அமைப்பின் தீர்மானம் தெஹ்ரானில் ஒரு ஆத்திரமூட்டும் பதிலை தூண்டிவிட்டது. அங்கு வெளியுறவு அமைச்சர் மனூஜியர் மொட்டாக்கி (Manuchehr Mottaki) அது ஒரு ''அரசியல், சட்டவிரோதமான மற்றும் காரணமற்றது'' என்று கண்டித்தார். நேற்று பிரிட்டிஷ் தூதரகத்திற்கு வெளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டனர் மற்றும் அந்த தீர்மானத்திற்கு எதிராக கண்டனங்களை தெரிவித்தனர், அமெரிக்க மற்றும் பிரிட்டனின் தேசக் கொடிகளை எரித்தனர் மற்றும் பிரிட்டிஷ் தூதரை வெளியேற்ற வேண்டும் என்று கோரினர். ஈரான் நாடாளுமன்றம் விவாதித்துக் கொண்டிருக்கின்ற ஒரு மசோதா சர்வதேச அணுசக்தி அமைப்பு ஆய்வாளர்கள் எவருக்கும் அரசாங்கம் எந்த ஒத்தழைப்பு தருவதையும் அரசாங்கம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கடமையாக்குகிறது மற்றும் அதிகாரிகள் ஈரான் நடான்சிலுள்ள தனது செறிவூட்டத்திட்டத்தை மீண்டும் தொடக்கும் என்று எச்சரித்துள்ளனர்.

அமெரிக்காவும் EU-3ம் தங்களது மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை நியாயப்படுத்தி, அந்த தீர்மானம் ''ஈரானின் அணு நடவடிக்கைகள் மறைக்கப்பட்ட வரலாற்றினால் உருவானவை, ஈரானின் அணுத்திட்டங்கள் சமாதான நோக்கங்களுக்காக மட்டுமே என்ற நம்பிக்கை இல்லாததன் விளைவுதான்'' என்று கூறின. ''ஈரானின் நடவடிக்கைகள், அதன் ஏமாற்று முறை மற்றும் மோதல் அணுகுமுறை ஆகியவை உலக சமுதாயத்திற்கு பெரும் கவலைத்தருவதாகும் மற்றும் சர்வதேச அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பெருகிவரும் ஒரு அச்சுறுத்தலாகும்.'' என்று அமெரிக்கத் தூதர் Greg Schulte ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த அறிக்கைகள் வெறுப்பின் நாற்றம்மிக்கவை. பக்கத்து நாடான ஈராக்கில், அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதரவோடு அந்த நாட்டை நிரூபிக்க முடியாததை நிரூபிப்பதற்காக மேலும் மேலும் ஆழமாக துருவி ஆராய்கின்ற சோதனைகளுக்கு உட்படுத்தியது: அவற்றின் பரந்த எல்லைக்குள் எங்கும் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருக்கவில்லை. தற்போது இதே வல்லரசுகள் அதே போன்றதொரு மோசடி வன்செயலை நடத்த முயலுகின்றன: அணுஆயுதங்களை தயாரிக்கும் வல்லமை கொண்ட எந்தத்திட்டமும் அதனிடம் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக ஒரு முடிவற்ற சோதனை நிகழ்ச்சி போக்கிற்கு ஈரான் மறுப்பின்றி சம்மதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன.

மேலும் ஈரானிடம் ''மறைத்து வைக்கின்ற ஒரு வரலாறு'' இருக்கிறதென்றால் வாஷிங்டன் அதற்கு நேரடியாக பொறுப்பாகும். 1979ல் மன்னர் ஷா வீழ்ச்சியடைந்த பின்னர், அமெரிக்கா எந்த வகையான ஈரானிய அணுத்திட்டங்களும், அவை சமாதான வழிகளுக்கு என்றாலும் அல்லது இல்லாவிட்டாலும் அவற்றை திரும்பத்திரும்ப தடுத்து நிறுத்த முயன்றது. மன்னர் ஷா காலத்தில் புஷ்ஷேர் பகுதியில் ஒரு அணுமின்சார உலையை கட்டுவதற்க ஈரான் தொடங்கியது அப்போது ஜேர்மனியின் கட்டுமான நிறுவனங்கள் அவற்றிலிருந்து விலகிக் கொண்டதும் அந்தத்திட்டம் கைவிடப்பட்டது. 1990 களில் அந்தத்திட்டத்தை முடித்து தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்ட ரஷ்யாவை அதிலிருந்து விலகிக் கொள்ளுமாறு அமெரிக்கா கோரியது.

2002ல் அதன் இரகசிய யுரேனிய செறிவூட்ட வசதிகள் அம்பலப்படுத்தப்பட்ட பின்னர் தெஹ்ரான் ஒரு கூடுதல் சோதனை ஒப்பந்தத்தை செய்து கொள்ள வேண்டும் என்ற சர்வதேச அணுசக்தி அமைப்பின் கோரிக்கையை ஏற்று செயல்படுத்தியது. பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்திற்கு பதிலாக ''தன்னிச்சையாக, சட்டபூர்வமாக கட்டுப்படுத்தாத அடிப்படையில்'' தனது யுரேனிய செறிவூட்டத்திட்டத்தை முடக்கிவைக்க EU-3 நாடுகளுடன் அது உடன்பட்டது. அப்படி முடக்கி வைக்கப்பட்டிருப்பதை நிரந்தரமாக ஆக்குகின்ற வகையில், EU உடன் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் நீடித்துக் கொண்டே போவதற்கு தான் அனுமதிக்க போவதில்லை என்றும் அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் தனக்குள்ள யுரேனிய செறிவூட்ட உரிமையை விட்டுத்தரப்போவதில்லை என்றும் ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

சென்ற மாதம் உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் முறிந்தன, அப்போது EU-3 தங்களது இறுதி யோசனையை தெரிவித்தன-----ஈரான் தனது செறிவூட்டத்திட்டங்களை கைவிடும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மட்டுமே நெருக்கமான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை நிலைநாட்ட முடியும் என்பதாகும். ஈரான் ஆட்சி உடனடியாக இந்த யோசனை ஒரு ''இழிவுபடுத்தும்'' செயல் என்று கண்டித்தது மற்றும் இஸ்பாகன் தொழிற்கூடத்தில் தனது யுரேனிய செறிவூட்டத்திட்டத்தை மீண்டும் தொடக்கியது. செப்டம்பர் 17ல் ஐ.நாவில் ஆற்றிய உரை ஒன்றில் ஈரானிய ஜனாதிபதி மஹமூத் அஹமதினாஜாத் இது ''அணுசக்தி இன ஒதுக்கல்'' முறை என்றும் அது ''சில வலுவான அரசுகள் அணு சக்தி வளங்கள் அனைத்தையும் மற்றும் தொழில் நுட்பத்தையும் தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் மற்றும் இதர நாடுகளுக்கு அவை கிடைப்பதை மறுத்துவருவதாகவும்'' குறிப்பிட்டார்.

சென்ற வாரம் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகார பிரதிநிதி ஜேவியர் சோலனா பிரிட்டன், பிரான்சு மற்றும் ஜேர்மனியின் வெளியுறவு அமைச்சர்களோடு சேர்ந்து, ஜனாதிபதி அஹமதினேஜாட்டிடம் உரையில் ''நெகிழ்தல் தொடர்பான எந்த சமிக்கையும் இல்லை'' என்று கண்டித்தனர். தாங்கள் ''நல்லெண்ணத்தில்'' உடன்பாட்டு பேச்சு வார்த்தைகள் நடத்தியதாகவும் ''அந்த உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை நீடிக்க வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும்'' கபடநாடகம் ஆடும் முறையில் அறிவித்தனர். இந்த கூற்றுகளின் முட்டாள்தனம் அந்த அறிக்கையிலேயே தெளிவாக காணப்படுகிறது, அது ஈரானின் நடுநாயகமான கோரிக்கையான ''செறிவூட்ட வசதிகளை நிலைநாட்டுவதை'' பற்றிய எந்த விவாதத்திற்கும் வழியில்லை என்று அது தெளிவுபடுத்தியிருக்கிறது.

இந்த அறிக்கையை Wall Street Journal வெளியிட்டிருக்கிறது என்ற உண்மை முக்கியத்துவம் நிறைந்ததாகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே, ஐரோப்பிய ஒன்றியம் தனது கணிசமான ஈரானிலுள்ள பொருளாதார நலன்களுக்கும் மற்றும் ஈரான் தொடர்பாக வாஷிங்டன் மேற்கொண்டு வரும் போர் வெறி மற்றும் ஆத்திரமூட்டும் நிலைப்பாடு ஆகியவற்றிற்கிடையே மிகத்தீவிரமாக சமநிலைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. Wall Street Journalஇல் வந்திருக்கின்ற விமர்சனம் அமெரிக்க அரசியல் நிர்வாகத்தில் இடம் பெற்றுள்ள மிக தீவிரமான இராணுவவாத பிரிவுகளுக்கு ஒரு சமிக்கையாகும். ஈராக்கில் நடந்ததைப்போல் அல்லாமல் ஈரானுடன் அமெரிக்கா எந்த மோதலில் ஈடுபட்டாலும் ஐரோப்பிய ஒன்றியம் சந்தேகத்திற்கு இடமின்றி அமெரிக்காவின் பக்கம் நிற்கும்.

அமெரிக்க இராணுவவாதத்தின் தர்க்கம்

வாஷிங்டனை திருப்திபடுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமும் எந்த மோதலையும் தவிர்த்துவிட முடியும் என்றும், ஈரானில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நலன்களை பேணிக்காக முடியும் என்றும் இன்னும் EU-3 நம்பிக்கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஐ.நா பாதுகாப்பு சபையின் பரிசீலனைக்கு ஈரானை விடுவதாக இருந்தால் அடுத்த மாதம் நடைபெறும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் நிர்வாகக்குழு அதற்கு ஒப்புதல் தர வேண்டும். மற்றும் இந்த விவகாரம் ஐ.நாவில் சென்றுதான் முடிவடையும் என்றால் வீட்டோ அதிகாரம் படைத்துள்ள ரஷ்யாவும் சீனாவும் ஈரான் மீது தடைகளை கொண்டு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. என்றாலும் அத்தகைய கணிப்புக்கள் அமெரிக்க இராணுவவாதத்தின் தர்க்கத்தை புறக்கணிப்பதாக அமைந்திருக்கின்றன.

மத்திய ஆசியாவிலும், மத்திய கிழக்கிலும் எண்ணெய் வளம் மிக்க பிராந்தியங்களில் பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்கம் செலுத்த வேண்டும் என்ற அதன் அபிலாஷைகளை புஷ் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து முன்னெடுத்துச் செல்வதற்கு தேவைப்பட்டால் இராணுவத்தை பயன்படுத்துவதற்கான ஒரு சாக்குப்போக்கு தான் ஈரானின் அணுத்திட்டங்கள். ஈரானிடம் உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் இருப்புக்களும் உலகிலேயே இரண்டவதாக மிகப்பெரும் அளவிற்கு இயற்கை எரிவாயு வளங்களும் இருப்பதுடன் இரண்டு முக்கிய பிராந்தியங்களுக்கு கிடையில் மூலோபாய முக்கியமான சந்தியில் உள்ளது. வாஷிங்டனை பொறுத்தவரை கவலை, ஈரானிய அணுத் திட்டங்கள் பற்றியதை விட இருப்பினும், அமெரிக்காவின் தாக்குதல்களிலிருந்து ஈரான் தன்னை சிறப்பாக தற்காத்துக்கொள்ள இயலும் என்பதுதான்.

ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடும் என்ற சாத்தியக் கூறு தொடர்பாக புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இரட்டை வேட போக்கை அம்பலப்படுத்துகின்ற வகையில் ஏற்கனவே அணுகுண்டுகளை வைத்திருக்கின்ற - இஸ்ரேல் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் தொடர்பாக அது மேற்கொண்டுள்ள அணுகுமுறை அமைந்திருக்கிறது. அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்ற ஒரு நாடாக இஸ்ரேல் ஆக வேண்டும், சோதனைக்கு தனது அணு நிலையங்களை திறந்து விட வேண்டும் அல்லது அணுகுண்டுகளை ஒழித்துக்கட்டிவிட வேண்டும் என்று எப்போதுமே அமெரிக்கா வற்புறுத்தியதில்லை. அதேபோன்று 1998 அணுவெடிப்பு சோதனைகளின் போது பாக்கிஸ்தான் மீதும் இந்தியா மீதும் மிகக் குறைவான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த அமெரிக்கா அவற்றை பகுதி பகுதியாக நீக்கிவிட்டது. மேலும், அமெரிக்காவை அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டது என்று அது கருதவில்லை, அணுஆயுத பரவல் தடை ஒப்பந்த நிபந்தனைகளின்படி, தற்போதுள்ள அணுவல்லரசுகள் தங்களது அணு ஆயுதங்களை ஒழித்துக்கட்டியாக வேண்டும்.

நேற்று பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ ஈரானுடன் ஒரு இராணுவ மோதல் ஏற்படும் என்ற கவலைகளை நீர்த்துப் போகச் செய்ய முயன்றார். ''எல்லா தேர்வுகளும் மேஜை மேல் உள்ளன'' என்று திரும்பத்திரும்ப புஷ் வெளியிட்டு வரும் கருத்துகளை அவர் மிக சாதாரணமானது என்று குறிப்பிட்டார். ''எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளுமே எப்போதுமே எல்லா தேர்வுகளும் திறந்தே இருக்கின்றன என்றுதான் சொல்வார்கள் ''ஆனால் அது [இராணுவ நடவடிக்கை] மேஜையில் இல்லை, செயல்திட்டத்தில் இல்லை. அது நினைத்துப்பார்க்க முடியாதது என்று நான் கருதுகிறேன்`` என்று ஸ்ட்ரோ அறிவித்தார். ஸ்ட்ரோவின் கருத்துக்கள் விருபத்திலுள்ள சிந்தனையாகவோ அல்லது ஒட்டுமொத்த மோசடியாவோ இருந்தாலும், அவற்றின் மீது ஒரு சிறிது அல்லது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிகழ்ச்சிபோக்கை EU-3 இன் நடவடிக்கைகள் இயக்கிவிட்டிருக்கின்றன.

புஷ் நிர்வாக கவலையை பொறுத்தவரை, சர்வதேச அணுசக்தி அமைப்பின் தீர்மானத்தில் இடம் பெற்றுள்ள முக்கியமான அம்சம் ஈரான் முறைப்படி அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை ''மீறியதாக'' அறிவிக்கப்பட்டிருக்கிறது, அது தண்டனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஒரு சாக்குப் போக்கை வழங்குகிறது. அதிகாரபூர்வமாக அமெரிக்கா ஈரானை ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லவும் அந்த நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதிக்கவும் உறுதி கொண்டிருக்கிறது. அத்தகையதொரு பொருளாதார தடை அமெரிக்காவை விட அதன் ஐரோப்பிய பொருளாதார போட்டி நாடுகளுக்கு அதிக வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும், ஏனெனில் வாஷிங்டன் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஈரானுடன் ஏறத்தாழ எந்த உறவுகளையும் வைத்துக்கொண்டிருக்கவில்லை.

ஆனால் புஷ் நிர்வாகம் ஐ.நா. பாதுகாப்பு சபையினால் கட்டுப்படுத்தப்பட போவதில்லை. New york Times-ல் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையின்படி ஜ.நா.விற்கு வெளியில் ஈரானுக்கும் எதிராக கூட்டாக அமெரிக்க -ஐரோப்பிய நடவடிக்கையில் இறங்குவதற்கு வெள்ளை மாளிகை ஒரு புதிய மூலோபாயத்தை ஏற்கனவே விவாதிக்கத் தொடங்கியிருக்கிறது. ''ஐரோப்பிய இராஜதந்திர வாய்ப்புக்களை பயனில்லாமல் போகுமானால் அது இராஜதந்திர தடைகளையும் பொருளாதார தடைகளையும் கொண்டு வருவதற்கான வாய்ப்பை பெறும்'' என்று ஒரு அமெரிக்க அதிகாரி அந்த செய்தி பத்திரிகையிடம் தெரிவித்தார்.

எவ்வாறிருந்தபோதிலும், பல விமர்சகர்கள் சுட்டிக்காட்டியிருப்பதைப்போல் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்தடைகள் ---ஐ.நா. கொண்டு வந்தாலும் அல்லது ஒருதலைபட்சமாக அமெரிக்கா மேற்கொண்டாலும்---- அவை பெரும் பிரச்சனைகளுக்கு உரியவையாக ஆகிவிடும். குறிப்பாக இன்றைய நிலவரத்தில், ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளுக்கு எந்த நிச்சயமற்ற நிலை தோன்றினாலும் அது பூகோள எண்ணெய் விலையை உச்சாணிக்கொம்பிற்கு கொண்டு சென்று விடும். இப்போதே புதிய உயர்மட்டத்திற்கு அளவிற்கு உயர்ந்து நிற்கிறது. இது மேலும் உலக நிதிச்சந்தையை ஸ்திரமற்றதாக்கிவிடும்.

மேலும் ஈரான், பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படும் என்று காத்திருக்கப்போவதில்லை ஆனால் தானே சொந்த முறையில் எதிர்நடவடிக்கைளை எடுக்கலாம். இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளை தண்டிப்பதற்காக ஈரான் தனது பொருளாதார உறவுகளை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக செவ்வாய்க்கிழமையன்று வெளியுறவு அமைச்சக பேச்சாளர் ஹமீர் ராஜா ஹசபி அறிவித்தார். ''அணுசக்தி அமைப்பும் ஐரோப்பிய நாடுகளும் எங்கள் மீது ஒரு கடுமையான அணுகுமுறையை கடைப்பிடிப்பார்களானால் அவைகள் எங்களை ஒரே ஒரு வழியில் விரட்டுவதாக அமையும் மற்றும் எதிர்நடவடிக்கை எடுப்பதைவிட எங்களுக்கு வேறுவழியில்லை. ஒரு நெருக்கடியை உருவாக்குவது எப்போதுமே மிக எளிதானது, ஆனால் அதைக்கட்டுப்படுத்துவது எளிதானதல்ல. நாங்கள் அந்த அமைப்பிற்கும் ஐரோப்பாவிற்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுக்கின்றோம்''.

சென்ற வாரம் இதே போன்று ஈரானின் தலைமை அணுசக்தி உடன்பாட்டு பேச்சாளர் அயில் லாரிஜானி வெளியிட்ட இதே கருத்துக்கள் பற்றி குறிப்பிட்டு Asian Times வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரை கருத்து கூறியுள்ளது: ''இப்போதுதான் முதல் தடவையாக ஈரானின் தலைமை பகிரங்கமாக அணுக்கொள்கைக்கும் எண்ணெய்க்குமிடையே ஒரு நேரடியான மற்றும் பாதிப்பை உருவாக்ககூடிய தொடர்பை பகிரங்கமாக உருவாக்கியிருக்கிறது. இது உளவியல் போரின் ஓர் அங்கமாகவும் இருக்கலாம். ஆனால் அது அபாய மணிகளை ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஐரோப்பாவிலுள்ள ஆய்வாளர்கள் ஈரான் ஒரு எண்ணெய் தடையை அடுத்த சில மாதங்களில் விதிக்குமானால் ஒரு பீப்பாய் எண்ணெய் விலை எளிதாக 100 டாலரை தொட்டுவிடும் என்று ஒப்புக் கொள்கின்றனர். Total Fina Elf நிறுவன தலைமை நிர்வாகியான Thierry Demarest ஈரானின் எண்ணெய் இல்லாமல் உலகம் வாழ முடியாது என்று கூறியிருக்கிறார்.''

ஈரானின் அணுத்திட்டங்கள் தொடர்பான நெருக்கடி ஒரு முழுமையான நிதி நெருக்கடியாக முற்றிவிடுமானால் அப்போது புஷ் நிர்வாகத்தின் பதில் என்னவாக இருக்கும் என்பதை முன் கணிப்பதில் எந்த சங்கடமும் இருக்கப்போவதில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை பாதுகாத்து நிற்பதற்காக எவ்வித விளைவுகளையும் பற்றி கவனமற்ற இராணுவ அதிரடி நடவடிக்கைகளில் புஷ் நிர்வாகம் இறங்குவதற்கு தயங்கப்போவதில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved