World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Socialist Equality Party receives over 15,000 votes in German elections

ஜேர்மன் தேர்தல்களில் சோசலிச சமத்துவக் கட்சி 15,000 வாக்குகளுக்கு மேல் பெற்றது

By Ludwig Niethammer
21 September 2005

Back to screen version

செப்டம்பர் 18-ல் நடைபெற்ற ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி மொத்தம் 15,365 வாக்குகளை பெற்றது. ஜேர்மனியின் 16 மாகாணங்களில் 4 மாகாணங்களில் PSG வேட்பாளர்களை நிறுத்தியது.

முந்திய தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடும்போது மொத்த வாக்குகள் ஒரு கணிசமான அளவிற்கு உயர்ந்திருக்கின்றன. 1998-ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் PSG 6 மாகாணங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது. மற்றும் மொத்தம் 6,226 வாக்குகளை பெற்றது. மற்றும் 2004-ல் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் ஜேர்மனியின் 16 மாகாணங்களிலும் போட்டியிட்ட PSG 25,824 வாக்குகளை பெற்றது.

PSG-ன் மாகாண வேட்பாளர் பட்டியலுக்கு பதிவான வாக்குகள் கீழே தரப்பட்டுள்ளன. (அடைப்புக் குறிக்குள் 2004 ஐரோப்பிய ஒன்றியத் தேர்தல் முடிவுகள் தரப்பட்டுள்ளன):

பேர்லின் - 1,618 (1,404)

சாக்சோனி - 6,368 (3,472)

ஹெஸ்சியன் - 3,311 (1,448)

வடக்கு ரைன் வெஸ்ட் பாலியா - 4,068 (3,828)

சென்ற ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தலோடு ஒப்பிடும்போது PSG, தான் வேட்பாளர்களை நிறுத்திய நான்கு மாகாணங்களில் தனக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஹெஸ்சியானிலும், சாக்சோனியிலும் கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது. சாக்சோனி மாகாணத்திலுள்ள டிரஸ்டன் தொகுதியில் ஒரு வேட்பாளர் இறந்துவிட்டதால் அக்டோபர் 2-ல் அந்தத் தொகுதியில் பாரளுமன்றத்திற்கு மறு வாக்குப்பதிவு நடைபெறவிருப்பதால் PSG-ன் இறுதி வாக்குகள் தவிர்க்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும்.

PSG வேட்பாளர்களை நிறுத்தியிருந்த நான்கு மாகாணங்களில் தேர்தல் முடிவுகளை தேசிய அடிப்படையில் கணக்கிட்டுப் பார்த்தால் (16 மாகாணங்கள் அனைத்திலும்) PSG வேட்பாளர்களை நிறுத்தியிருந்திருக்குமானால் 45,000 முதல் 50,000 வாக்குகள் பெற்றிருக்கும்.

பெரிய அரசியல் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளோடு ஒப்பிடும்போது PSG பெற்றிருக்கும் வாக்குகள் மிகக்குறைந்தவைதான். ஆனால், ஒரு சோசலிச முன்னோக்கு அடிப்படையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்பது முக்கியமானதாகும். பெரும்பாலானவர்கள் விஷயத்தில் இது மிக நனவுபூர்வமான முடிவாக இருந்தது. ஒரு கண்டன வாக்குப்பதிவு செய்ய விரும்புபவர்கள் பெரிய கட்சிகளை விரும்பவில்லை என்றால் அண்மையில் அமைக்கப்பட்ட ஒஸ்கார் லாபொன்டைன் மற்றும் கிரிகோர் கேசி தலைமையிலான இடதுசாரி கட்சிக்கு வாக்களித்திருக்க முடியும். அக்கட்சி அத்தகைய கண்டன வாக்குகளை பெற்று வெற்றி பெறும் என்று முயற்சி செய்யப்பட்டது.

ஆரம்பத்திலிருந்தே PSG தேர்தல் பிரச்சாரத்தில் இடதுசாரிக் கட்சி மேற்கொண்ட தேசிய சீர்திருத்தவாத முன்னோக்கை தள்ளுபடி செய்தது என்பதை தவறுக்கிடமின்றி தெளிவுபடுத்தியது, SPD மற்றும் இடதுசாரி கட்சிகள் இவற்றிடமிருந்து சுயாதீனமாக ஒரு சோசலிச வேலைத்திட்ட அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கு முயன்று வந்தது. ஒரு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேசக் கட்சியாக நான்காம் அகிலத்தை கட்டி எழுப்புவதை முன்னெடுத்துச் செல்வதுதான் அதன் நோக்கம் என PSG விளக்கியது. 15,000 வாக்காளர்கள் இந்த வேலைத்திட்டத்திற்கு வாக்களித்திருப்பது தொழிலாள வர்க்கத்திற்குள்ளே சோசலிச நனவின் வளர்ச்சியை கொண்டு வருவதை வெளிக்காட்டுகிறது.

சாக்சோனி மாகாணத்தில் உயர்ந்த அளவிற்கு வேலையில்லாதவர்கள் வாழ்கின்ற நகரங்களிலும், பிராந்தியங்களிலும் PSG வாக்காளர்களில் 0.3%லிருந்து 0.4% வரை ஆதரவை பெற்றிருக்கிறது. லைப்சிக் நகரத்தில் 752 வாக்குகளையும் சாக்சோனி - ஸ்விட்சர்லாந்தில் 460 வாக்குகளையும் காமெனேஸ்/ஹோயர்வெர்டா பகுதியில் 497 வாக்குளையும் PSG பெற்றிருக்கிறது.

இதர ஜேர்மன் மாகாணங்களிலும் கட்சி பெற்ற வாக்குகளின் அளவு குறைவாகும். ஆனால் கூட்டாட்சிக் குடியரசின் இதர இந்தப் பகுதிகளில் கணிசமான அளவிற்கு ஆதரவு நிலவியது. பேர்லின் நகரில் அந்த நகருக்கு கிழக்கேயுள்ள தொகுதிகளில் PSG சிறந்த தேர்தல் முடிவுகளை நிலைநாட்டியுள்ளது. அந்தப் பகுதி 1989-க்கு முன் ஸ்ராலினிச கட்டுப்பாட்டில் இருந்த ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் ஒரு பகுதியாகும். PSG மாகர்சானில் 226 வாக்குகளையும், லீச்டன்பேர்க்கில் 186 வாக்குகளையும், பங்கோவில் 152 வாக்குகளையும் பெற்றது.

வடக்கு ரைன் வெஸ்ட் பாலியா மாகாணத்தில் கோலோன் நகரில் PSG 238 வாக்குகளையும் டோர்ட்முண்டில் 194 வாக்குகளையும் பெற்றது. ஹெஸ்சியன் மாகாணத்தில், பிராங்பர்ட் நகரில் கட்சி 200 வாக்குகளையும், டார்ம்ஸ்டர் ஹன்னாவில் 171 வாக்குகளையும், ஒபன்பாக்கில் 143 வாக்குகளையும் பெற்றது.

தன்னை சோசலிஸ்ட் என்று அழைத்துக்கொள்ளும் வேறு எந்தக் கட்சியையும்விட PSG கணிசமான அளவிற்கு வாக்குகளை பெற்றிருக்கிறது. ஜேர்மனியின் மாவோயிச அமைப்பான MLPD (ஜேர்மனியின் மார்க்சிச - லெனினிச கட்சி) தன்னை சோசலிஸ்ட் என்று கூறிக்கொள்கிறது. MLPD பகிரங்கமாக ஸ்ராலினிசத்தையும் மாவோயிசத்தையும் தற்காத்து நிற்கிறது. மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் ஒரு சந்தர்ப்பவாத அணுகுமுறையில் இதை தொடர்புபடுத்திக் கொண்டிருக்கிறது.

தேர்தலுக்கு முன்னர் இடதுசாரிக் கட்சியுடன் ஒத்துழைக்கவும் அதன் சொந்த வேட்பாளரை வாபஸ் பெறவும் அது முன்வந்தது. ஆனால் பின்னர் தனது ஆலோசனையை திரும்பப் பெற்றுக்கொண்டது. அதற்குப் பின்னர் MLDP 16 மாகாணங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியது மற்றும் தீவிரமானதொரு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது, அக்கட்சி தந்துள்ள புள்ளி விவரங்களின்படி 4,00,000 யூரோக்களை செலவிட்டது. இந்தத் தொகை PSG செலவிட்ட தொகையைவிட மிக அதிகமாகும்.

அப்படியிருந்தாலும், பேர்லின், சாக்சோனி மற்றும் ஹெஸ்சியனில் MLPD, PSG-யைவிட மிகக்குறைந்த வாக்குகளையே பெற்றிருக்கிறது. சாக்சோனியில் இந்த மாவோயிச கட்சி, PSG பெற்ற வாக்குகளில் பாதியைத்தான் பெற்றது. இந்தக் கட்சிக்கு வடக்கு ரைன் வெஸ்ட் பாலியாவில் தலைமை அலுவலகங்கள் உள்ளன. அங்கு இந்த அமைப்பு PSGயைவிட சில நூறு வாக்குகளை கூடுதலாக வெல்லமுடிந்தது.

PSG பெற்றுள்ள 15,000 வாக்குகள் சோசலிச வேலைத்திட்டத்திற்கான அதன் போராட்டத்தில் ஒரு முக்கியமான முன்னேற்றப் பாதையில் ஒரு அடி எடுத்துவைத்தலை பிரதிநிதித்துவம் செய்கிறது மற்றும் கட்சியின் அரசியல் ஆய்வையும் முன்னோக்கையும் உறுதிபடுத்துவதாகவும் அமைந்திருக்கிறது. சமூக மற்றும் அரசியல் நெருக்கடியின் மூலகாரணங்களை உழைக்கும் மக்களுக்கு விளக்குவதிலும் அவர்களை சர்வதேச சோசலிச திட்டத்தில் பழக்கம் ஏற்பட செய்வதிலும்தான் PSG தேர்தல் பிரசாரத்தின் வலு அடங்கியிருக்கிறது. முதலாளித்துவ அமைப்பை ஏற்றுக்கொண்டு ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் தொழிலாள வர்க்கத்தின் சமுதாய நலன்களை தற்காத்து நிற்பது சாத்தியம் என்று கூறிவந்த SPD, பசுமைக்கட்சி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் பிரசாரத்தோடு ஒப்பிடும்போது PSG தேர்தல் பிரச்சாரம் மிகத் தெளிவாக வேறுபட்டு நின்றது.

PSG ஒரு கணிசமான அளவிற்கு அரசியல் விவாதங்களை ஆரம்பித்து வைக்க முடிந்தது. அது PSG வலைத் தளத்திற்கு அனுப்பப்பட்ட டஜன் கணக்கான கேள்விகள், கடிதங்கள் மற்றும் மின் அஞ்சல்களிலிருந்து தெரியவருகிறது. இது தவிர PSG லைப்சிக், பிராங்போர்ட், டோர்ட்மொண்ட், பேர்லின் மற்றும் பீலபெல்ட் போன்ற பெரிய நகரங்களில் தொடர்ந்து தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தியது. அவை புரட்சிகர சோசலிச வேலைத்திட்டத்தில் உயர்ந்த தரமான அரசியல் விவாதங்களாலும் ஆர்வங்களாலும் பண்பிடப்படுகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved