World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US-Israeli war aim is to annihilate Lebanon

லெபனானை முற்றுமுழுதாக அழிப்பதே அமெரிக்கா-இஸ்ரேலின் போர் நோக்கம்

By the Editorial Board
5 August 2006

Back to screen version

இக்கட்டுரை PDF துண்டுப் பிரசுரமாக வினியோகிப்பதற்கு கிடைக்கும்

வெள்ளிக்கிழமை தீவிரக் கடுமை அடைந்துள்ள லெபனான்மீதான தாக்குதல்கள், இந்த அமெரிக்க-இஸ்ரேலிய வலியத்தாக்கும் போரின் குறிக்கோளானது லெபனான் ஒரு சுதந்திரமான, இறைமை பெற்ற நாடு என்ற நிலையை முற்றிலும் அழித்துவிட வேண்டும் என்பதை மிகத் தெளிவாகக் காட்டுகின்றன.

இப்போரானது அந்நாட்டை அமெரிக்காவாலும் இஸ்ரேலாலும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள ஓர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எல்லைப்பகுதியாக மாற்றுவதற்கான நோக்கத்தைக் கொண்டுள்ளது; இதற்கு NATO இன் "அமைதி காக்கும்" படைகள் என்பவையும் ஒரு கருவியாக அமையலாம். லெபனான் அழிப்பு மிகத் திட்டவட்டமான வடிவங்களுடன் வேண்டுமென்றே நடத்தப்பட்டு வருகின்றது. இஸ்ரேலை பொறுத்தவரையில், இது இன்னும் கூடுதலான நிலப்பகுதியை இணைத்துக் கொள்ளும் ஒரு விஷயமாகும். வாஷிங்டனை பொறுத்தவரையில், முதலாவது எடுத்துக்காட்டில் சிரியாவிற்கும் ஈரானுக்கும் எதிராக இயக்கப்படும் இன்னும் புதிய, கூடுதலான குருதி கொட்டும் போர்களின் தயாரிப்பாகும்.

இந்தப் போர் இஸ்ரேலை பயங்கரவாதத்தில் இருந்து காப்பதற்கு எனக் கூறப்படும், அல்லது ஷியைட் ஹெஸ்பொல்லா இயக்கத்தை அழிப்பதற்கு எனக்கூடக் கூறப்படும் போலிக் காரணத்தை, தெற்கு லெபனானில் ஷியைட் மையப் பகுதிகளில் இருந்தும் பெய்ரூட்டின் தெற்குப் புறநகரங்களில் இருந்தும் மிகத் தொலைவில் உள்ள இலக்குகள் இஸ்ரேலிய குண்டு வீச்சுக்களால் தாக்கப்படுவதும், சேதப்படுத்தப்படுவதும் பொய்யென காட்டுகிறது.

போர் ஆரம்பித்ததில் இருந்து நிகழ்த்தப்படும் பெரும் அட்டூழியங்களில் ஒன்று, சிரிய எல்லைக்கு அருகே உள்ள பெக்கா பள்ளத் தாக்கிற்கு சற்றே வடக்கே உள்ள பண்ணை பண்டகசாலை ஒன்றில் பிளம்ஸ் மற்றும் பழவகைகளை வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்த 33 பண்ணைத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த வகையில் விமானத்தில் இருந்து தாக்குதல் நடத்தி அவர்களுடைய உடல்களை சிதற அடித்துள்ள நிகழ்வாகும். இத்தாக்குதலில் குறைந்தது இன்னும் ஒரு 20 பண்ணைத் தொழிலாளர்கள் காயமுற்றனர். பெரும்பாலான பாதிப்பாளர்கள் சிரிய குர்துகள் ஆவர். இவர்கள் எல்லையை தாண்டி சிரிய மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்; ஏனெனில் முந்தைய குண்டுத் தாக்குதல்கள் லெபனானுக்குள்ளேயே இருக்கும் மருத்துவமனைகளுக்கு செல்லும் பாதைகளை தகர்த்து விட்டன.

இப்படி பண்ணைத் தொழிலாளர்களை விமானத்தாக்குதல் மூலம் படுகொலை செய்தல் என்பது பெய்ரூட்டையும் தெற்கு லெபனிய பகுதிகளையும் நாட்டின் வட பகுதியுடன் இணைக்கும் பெரும் கடலோர நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள் அனைத்தும் முறையாக தகர்க்கப்பட்டபின் நடந்தது ஆகும். பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் கொண்டுள்ள வடக்கில் முதல்தடவையாக நடத்தப்பட்ட பெரும் தாக்குதல்கள் என்ற வகையில் இத்தாக்குதல்கள் நாட்டை இரண்டாக துண்டாடுவதற்கு பயன்படும்; வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய உதவிப் பொருட்கள் அனைத்தும் எஞ்சியிருந்த இப்பாதையின் மூலம்தான் வரவேண்டும். குறைந்தது ஐந்து பேராவது இக்குண்டுவீச்சுக்களில் மாண்டு போயினர்; பரபரப்பான காலை நேரத்தில் இது நிகழ்ந்தது; பாலங்கள் கீழிருந்து தகர்க்கப்பட்ட வகையில் பயணித்திருந்த கார் ஓட்டி வந்தவர்களும் நசுக்கப்பட்டு இறந்து போயினர்.

லெபனானுக்கு தெற்கில், இஸ்ரேலிய எல்லைக்கு அருகில், வெள்ளியன்று மற்றும் ஒரு கொடூரம் நிகழ்த்தப்பட்டது; இராணுவத்தாக்குதலில் இருந்து தஞ்சம் நாடி வந்திருந்த சாதாரண மக்கள் நிறைந்திருந்த இரு வீடுகளை இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் அழித்திருந்த பின் மேற்கூறியது நடந்தது. லெபனிய அதிகாரிகள் கொடுத்துள்ள தகவல்படி, கிட்டத்தட்ட 57 பேர்கள் கட்டிட இடுபாடுகளின்கீழ் சிக்கியுள்ளனர்; எவ்வளவு பேர் மடிந்துள்ளனர், எவரேனும் தப்பிவிட்டனரா என்பது பற்றிச் சரியாகத் தெரியவில்லை.

இதற்கிடையில், இஸ்ரேலிய போர்விமானங்கள் தெற்கு பெய்ரூட்டில் நகரத்தின் ஷியைட் புறநகர் பகுதிகள்மீதான குண்டுவீச்சுக்களை மீண்டும் தொடங்கியுள்ளன; இதையொட்டி குடியிருப்புக் கட்டிடங்கள், சாலைகளை மற்றும் பல கட்டுமானங்களும் அழிவிற்குள்ளாயின. விமானங்களில் இருந்து வீசும் துண்டுப் பிரசுரங்கள் உயிர் பிழைக்க வேண்டுமானால் மக்கள் கூட்டம் நிறைந்த நகர்ப்பகுதிகளில் இருந்து அனைவரும், ஓடிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் இஸ்ரேலிய தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், லெபனானின் பிரதம மந்திரியான பெளவத் சினியோரா மலேசியாவில் நடைபெற்ற இஸ்லாமிய அமைப்பு மாநாட்டின் அவசரக்கூட்டத்தில் ஆற்றிய உரையில், லெபனானில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 3,000 மக்கள் காயமுற்றுள்ளனர், லெபனிய மக்கட்தொகையில் கால்பகுதிக்கும் மேலான, ஒரு மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்று அறிவித்தார். இறந்தவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் 12 வயதிற்கும் உட்பட்ட குழந்தைகளாவர் என்றும் அவர் கூறினார்.

வெளியுலகில் இருந்து லெபனானைத் தொடர்பு கொள்ள முடியாமல் துண்டித்து விடவேண்டும் என்றுள்ள இஸ்ரேலிய நடவடிக்கை நாட்டின் ஒரு பகுதியையே மற்றொரு பகுதியுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளிவிடும் என்ற அச்சுறுத்தலோடு, நாட்டின் குடிமக்கள் மீது போடப்படும் குண்டுகளிலிருந்தும் அதிகமான முறையில் மனிதாபிமான உதவி கிடைக்காததால் வரும் பேரழிவு இறப்புக்கள் அதிகமாகக் கூடும் என்ற நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜூலை மாத நடுப்பகுதியில் இருந்தே லெபனான் கடல், விமான வழி முற்றுகைக்கு முற்றிலும் ஆட்பட்டிருக்கும் தன்மையை இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கிறது. இதன் விளைவாக எரிபொருள் கிடைத்தல் மோசமான நிலையை அடைந்து, நாட்டின் பெரும்பகுதி இருளில் மூழ்கும் அபயாமும் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலிய போர்க்கப்பல்கள் எண்ணெய் எரிபொருள் கப்பல்களை விரட்டி அடித்துக் கொண்டுள்ளன. உடனடியான பெரும் பேரழிவுத் தாக்கம் என்னவென்றால், 1970 களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போதுகூட திறந்திருந்த முக்கிய மருத்துவமனைகள் இப்பொழுது எரிவாயு, மருந்துகள் போதுமான நிலையில் இல்லாததாலும், பணியாளர்கள் வேலைக்கு வரமுடியாத நிலையிலும் மூடப்படும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய முற்றுகையின் விளைவாக அபாயநிலையில் உள்ள நோயாளிகள் இறக்க நேரிடக்கூடும் என்று மருத்துவப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பெய்ரூட், மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும், மின்சார வெட்டுக்கள் வாடிக்கையாக போய்விட்டன; சில பகுதிகளில் நாள் ஒன்றிற்கு இரண்டு மணி நேரம்தான் மின்வசதி உள்ளது. இதற்கிடையில் கடைகளில் இன்றியமையாத உணவுப் பொருட்களின் இருப்பும் கரைந்துவிட்டது.

லெபனானின் ஜனாதிபதியான எமிலி லஹெளட், லெபனிய மக்களுக்கு எதிராக "பட்டினி போடும் போர்" ஒன்றை இஸ்ரேல் தொடக்கியுள்ளதாக குற்றம் சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். "இஸ்ரேல் அறிவித்துள்ள குறிக்கோள்களை விஞ்சிய ஒரு வலியத்தாக்கும் நடவடிக்கையாகும் இது. லெபனானை அழிப்பது என்ற முடிவிற்கு இப்பொழுது இஸ்ரேல் வந்துவிட்டது." என்று அவர் கூறினார்.

வெள்ளியன்று, நாட்டின் வடக்கு தெற்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய பாலங்களின் மீது குண்டுவீசியதன் விளைவானது நாட்டிற்கு உதவி வரும் கடைசிப் பாதையையும் அழித்துத் தகர்த்துவிடும் வேலையை விரைவுபடுத்தப்பட வேண்டும் என்று ஆகியுள்ளது.

லெபனிய மக்களுடைய துன்பங்களை துடைக்கும் எந்த முயற்சியையும் வேண்டுமேன்றே நாசப்படுத்துதல் என்னும் செயல் பேரழிவு தரக்கூடிய விளைவுகளை தரக்கூடியதாக உள்ளது. ஐ.நா.சிறுவர் நிதி (UNICEF), உள்கட்டுமான அழிப்பு மற்றும் எரிபொருள் வினியோகம் வெட்டப்படுதல் ஆகியவற்றால் ஏற்படும் குடிநீர் மாசுபடுதல் தெற்கு லெபனானை அச்சுறுத்தும் என்றும் குறிப்பாக இடம் பெயர்ந்துள்ள மக்களை கடுமையான தொற்று நோய்களுக்கு உட்படுத்தக் கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

லெபனான்மீது இஸ்ரேலியர்கள் நடத்தும் காட்டிமிராண்டித்தன தாக்குதலை உணர்வுபூர்வமாக மட்டும் லஹெளட்டின் அறிக்கை கண்டிக்கவில்லை; அது இப்போரின் உண்மை இலக்குகளை பற்றிய துல்லியமான மதிப்பீடும் ஆகும்.

வாஷிங்டனில் உள்ள புஷ் நிர்வாகமும், இஸ்ரேலில் உள்ள பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட்டின் அரசாங்கமும், லெபனான் ஒரு நாடு என்பதை உடைத்து எறிய வேண்டும், அதற்கு முழு மக்கட்தொகையையும் பரந்த பயங்கரவாத அச்சுறுத்தலின் மூலம் வெளியேற்ற வேண்டும் என்றும், நாட்டை அதன் பாதுகாப்பிலுள்ள அரைக் காலனித்துவ நாடாக மாற்ற வேண்டும், வாஷிங்டன் மற்றும் சியோனிச ஆட்சிகளின் நலன்களுக்கு இது முற்றிலும் கீழ்ப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளன.

நிலப்பரப்பு இணைப்பும், "ஆட்சி மாற்றமும்"

லெபனிய மக்களுக்கு எதிராக கையாளப்படும் காட்டுமிராண்டித்தன வழிவகைகளில் இருந்து போர்க் குற்றங்கள் வெளிப்பட்டுள்ளன. இஸ்ரேலை பொறுத்தவரையில், படுகொலை, பயங்கரம் ஆகியவற்றால் சாதாரண குடிமக்கள் பெரிதும் குறைந்த பின்னர் லெபனிய நிலப்பகுதியின் கணிசமான நிலப்பரப்பை இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இஸ்ரேலின் நோக்கமாக இருக்கக்கூடும். இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி அமிர் பெரட்ஸ் அந்நாட்டு இராணுவம் எல்லையிலிருந்து 15 மைல்களை தள்ளியிருக்கும் லிட்டனி ஆறு வரை ஆக்கிரமிக்க தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுளார். இந்த ஆற்றின்மீதான கட்டுப்பாடுதான் இஸ்ரேலிய அரசு தோற்றுவிப்பதற்கு முன்பே சியோனிஸ்டுகளின் மூலோபாய குறிக்கோளாக இருந்து வருகிறது.

கடந்த 40 ஆண்டுகளின் அனுபவம் இஸ்ரேல் என்பது வரையறுக்கப்படாத எல்லைகளை உடைய நாடு என்பதை நிரூபணம் செய்துள்ளது. ஒவ்வொரு புதிய போரின் உந்துவிசையும் தன்னுடைய பாதுகாப்புத் தேவைகள் என்று கூறப்படுவதன் பெயரில் புதிய பகுதிகள் மீது தன்னுடைய கட்டுப்பாட்டை விஸ்தரிப்பதில் இருந்திருக்கிறது. ஹிட்லரின் மூன்றாம் ரைக் காலத்தில் Lebensraum (வளரும் மக்கள்தொகைக்கான கூடுதல் வசிப்பிடம்) எனக் குறிப்பிடப்பட்டதைத்தான், லெபனானில், இஸ்ரேலிய அரசு பின்பற்றி வருகிறது --- அதாவது தங்களுடைய நிலத்தில் மீண்டும் மக்கட்தொகையை நிரப்பும்பொருட்டு மக்களைக் கொல்லுதல் அல்லது வெளியேற்றுதல் என்பது இழிவான ஒன்றாக பார்க்கப்பட்டது.

வாஷிங்டனை பொறுத்தவரையில், இஸ்ரேலிய தாக்குதலுக்கு இன்னும் பரந்த முக்கியத்துவம் உள்ளது. லெபனானை அழிப்பது என்பது சிரியா மற்றும் ஈரானில் "ஆட்சி மாற்றத்தை" அடைவதற்கு, புதிய ஆக்கிரமிப்பு போர்களை நடத்துவதற்கு பாதை வகுக்கும் என்று கருதப்படுகிறது. இஸ்ரேல் லெபனிய மக்கள்மீது நடத்தும் குற்றம்சார்ந்த போருக்கு நிபந்தனையற்ற முறையில் அமெரிக்கா கொடுக்கும் ஆதரவானது மத்திய கிழக்கு, அதன் எண்ணெய் வளம் ஆகியவற்றின் மீது சர்ச்சைக்கிடமில்லாத மேலாதிக்கத்தை அங்கு நிறுவவேண்டும் என்ற அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாய இலக்கினால் உந்துதலைப் பெற்றுள்ளது.

ஐயத்திற்கிடமின்றி இதே இலக்குதான் கடந்த ஆண்டு "செடர் புரட்சி" என்று அழைக்கப்பட்டதற்கு அமெரிக்கா கொடுத்த ஆதரவின் உந்துதலும் ஆகும். இந்த நிகழ்வும் அதைத் தொடர்ந்த தேர்தல்களும் ஹெஸ்பொல்லாவின் அரசியல் செல்வாக்கை வலிமைப்படுத்தவே பயன்பட்டது, இது வாஷிங்டனால் தன்னுடைய நோக்கங்களுக்கு இடையூறாக, பொறுத்துக் கொள்ளமுடியாத தடையாக கருதப்பட்டு, கொலைகார இராணுவசக்தியை பயன்படுத்துவதன் மூலம் அகற்றப்பட வேண்டும் என்பது சிறந்த சரிப்படுத்தும் வழியாக பார்க்கப்படுகிறதுது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அப்பட்டமான நோக்கங்கள் வெள்ளியன்று வாஷிங்டன் போஸ்ட்டில் மத்திய கிழக்கில் புஷ் நிர்வாகம் கொண்டுள்ள கொள்கைக்கு தொடர்ந்து ஆதரவு தரும் முக்கிய கட்டுரையாளர்களில் ஒருவரான சார்ல்ஸ் கிரெளத்தமரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் வெளிப்பட்டுள்ளது. "இஸ்ரேல் தன்னை காத்துக் கொள்ளலாம் என்று அமெரிக்கா கொடுத்துள்ள அனுமதி இஸ்ரேலுக்கு ஒரு ஆதரவுச் செயல் என்று நினைக்கப்படலாம். ஆனால் அது ஒன்றுக்கு துணைபுரியும் நோக்குள்ள, தவறாக இட்டுச்செல்லும் பகுதியளவிலான ஆய்வு ஆகும். இந்த ஊக்கம், இப்பச்சை விளக்கு உண்மையில் தெளிவான தன்னலச் செயல் ஆகும். ஹெஸ்பொல்லா உறுதியாக முறியடிக்கப்படவேண்டும் என்பதுதான் அமெரிக்கா விரும்புவதும், அமெரிக்காவிற்கு தேவைப்படுவதும் ஆகும்."

லெபனிய மக்கள்மீது கொலைகாரத்தன்மையுடன் நடத்தும் போருக்காக ஒன்றும் இஸ்ரேலை கிரெளத்மெர் குறைகூறிவிடவில்லை; மாறாக இன்னும் கூடுதலான சக்தியை பயன்படுத்திக் கொள்ளாததற்காக அவர் குறைகூறுகிறார். "இஸ்ரேல் இந்த வேலையை செவ்வனே முடித்துவிடும் என்று வாஷிங்டன் கருதியது. இதில் அதற்கு ஏமாற்றம் வந்துள்ளது. பிரதம மந்திரி ஓல்மெர்ட் உறுதியற்ற தலைமையைத்தான் கொடுத்துள்ளார். விமான சக்தியை மட்டுமே மடத்தனமாக நம்பிய அவர், தளபதிகள் விரும்பியிருந்த தரைப்படைத் தாக்குதலை மறுத்துவிட்டார்: பின் இந்நிலையில் இருந்து அவர் பின்வாங்கியுள்ளார்" என்று கிரெளத்மெர் எழுதியுள்ளார்.

புஷ் நிர்வாகத்திற்குள் இருக்கும் உண்மையான உணர்வுகளும் இவைதான். லெபனானில் பெரும் மக்கட் கொலைகள் செய்யப்படுவது இஸ்ரேலால் தொடரப்பட வேண்டும், அமெரிக்க இலக்குகளை அடைவதற்காக, ஆயிரக்கணக்கான, ஏன் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கொல்லப்படவேண்டும் என்று அது விரும்புகிறது.

இந்த மூலோபாயத்தின் மிருகத்தனம் மத்திய கிழக்கு முழுவதும் மகத்தான எழுச்சிகளை தூண்டிவிடும் என்பதில் எக்கருத்து வேறுபாடும் இல்லை. இக்குருதி தோய்ந்த நடவடிக்கைக்கு திட்டமிட்டு ஆதரவு கொடுக்கும் அமெரிக்க பங்கின் இழிந்த பாசாங்குத்தனமும் குற்றம் வாய்ந்த தன்மையும்தான் உத்தியின் பெரும்பகுதியில் ததும்பி நிற்கிறது. பால்கன்களில் போரைத் தொடங்க போலிக் காரணத்திற்காக வாஷிங்டன் மற்றும் அமெரிக்க செய்தி ஊடகம் கோசோவாவில் நிகழ்ந்த "இனத்தூய்மை நடவடிக்கைகள்" பற்றிய பெரும் பிரச்சாரங்களை சில ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்த்தியது நினைவுகூரப்பட வேண்டும். இப்பொழுது இஸ்ரேலுக்கு அமெரிக்க குண்டுகளையும் ஏவுகணைகளையும் அளித்து தெற்கு லெபனான் முழுவதும் பொறுப்பற்ற முறையில் குடிமக்கள் பகுதிகளை தாக்குவதின் மூலம் அதன் ஷியைட் மக்கட்தொகையை விரைவில் தூய்மைப்படுத்தலாம் என்று செயல்படுகிறது.

வெள்ளியன்று பாக்தாத்தின் ஷியைட்டுக்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் சதர் நகரத்திற்கு அருகே 100,000 மக்களுக்கும் மேலே கூடி இஸ்ரேலிய அமெரிக்கர்கள் லெபனானில் போர் நடத்துவதை கண்டித்ததுடன், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராகப் போரிடவும் உறுதி பூண்டனர். ஜோர்டான் மற்றும் எகிப்தில் உள்ள வலதுசாரி அரேபிய ஆட்சிகள்கூட வாஷிங்டன் நடவடிக்கைகளில் இருந்து தங்களை தொலைவில் வைத்துக் கொள்ளும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

பெய்ரூட்டின் நாளேடான Daily Star வெள்ளியன்று ஒரு தலையங்கத்தில், "தங்களது சொந்த அரசாங்கக் கொள்கைகள் பற்றிய அரபு மக்களின் பெரும்தொகுதியினரின் பொதுக்கருத்து - ஒருவேளை பெரும்பான்மைரின் கருத்து தெள்ளத்தெளிவாய் மயக்கம்தெளிவித்து" சினமூட்டுவதாக உள்ளது என்பதை போர் காட்டுகிறது என எழுதியுள்ளது. "உலகின் விசை இருப்புக்கள் மிக அதிக அளவில் இருக்கும் இப்பகுதியில், தங்கள் இலக்கை அடையும் பொருட்டு பல அரசாங்கங்களும் சாதாரண மக்களும் தங்களின் இலக்குகளை அடைவதற்கு மிகக் கொடுமையான வன்முறையையும் பயன்படுத்துவதற்கு விருப்பமுடையவர்களாகி விட்டனர். இத்தகைய தீவிரமயமாகலின் அறிகுறி பல அரேபிய நாடுகளில் வெளிப்படுகின்றது; லெபனான்- இஸ்ரேல் இடையிலான போரின் விளைவாக இது தோன்றியுள்ளது என்பது புறக்கணிக்கப்பட முடியாதது" என்றும் அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த தெளிவான நல்ல ஆலோசனை பற்றியும் புஷ் நிர்வாகம் சிறிதும் கவலை கொள்ளவில்லை. ஈராக்கில் பேரழிவு தரும் புதை சேற்றுக்கு நாட்டை இட்டுச் சென்றுள்ளதுடன், புதிய போர்களையும் புதிய பயங்கரவாத தாக்குதல்களையும் "பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போர்" என்பதை தொடக்கும் முயற்சியில் புத்துணர்ச்சியூட்டும் வழிமுறைகளாக வரவேற்கிறது.

இஸ்ரேல் மற்றும் வாஷிங்டனுடைய கொள்கைகளுக்கு பாரிய மக்கள் எதிர்ப்பின் வளர்ச்சியானது "பயங்கரவாதத்திற்கு" கற்பித்துக்கூறத்தக்கதாக இருக்கும் மற்றும் இன்னும் புதிய, கொடூரமான போர்களை தொடக்குவதற்கு போலிக் காரணங்கள் கண்டுபிடிக்கப்படும்.

இதற்கிடையில் வாஷிங்டனில் பெயரளவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் ஜனநாயகக் கட்சி, லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் போருக்கு இன்னும் ஆர்வமிக்க ஆதரவாளராக தன்னை போட்டிபோட்டு காட்டிக் கொண்டுள்ளது.

2006 ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் முக்கிய வேட்பாளராக இருப்பவரும், நியூ யோர்க்கில் இருந்து ஜனநாயகக் கட்சியின் செனட்டராக இருப்பவரும்தான் ஹில்லாரி கிளின்டன் ஆவார்.

கானா கிராமத்தில் பெரும்பாலான குழந்தைகள் உட்பட பலரும் கொல்லப்பட்ட சில நாட்களுள் நியூ யோர்க்கில் உள்ள Buffalo நகரத்தில் இருந்து உரையாற்றிய கிளின்டன், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு தான் கொடுத்துவரும் நிபந்தனையற்ற ஆதரவை வலியுறுத்தினார். "இஸ்ரேலை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா முன்னணியில் இருக்க வேண்டும். இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு உறுதி செய்ய வேண்டும். படைகளை அளித்தல் வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பற்றி எனக்குத் தெரியாது." என்று அவர் கூறினார்.

லெபனிய மக்கள் குருதி சொட்ட நின்றிருப்பது பற்றி ஒரு அக்கறையான சொல்லோ உணர்வோ கூட கிளின்டனுடைய உதடுகளில் இருந்து வெளிப்படவில்லை. அமெரிக்க அரசியல் அமைப்புமுறை முழுவதும், மற்றும் செய்தி ஊடகத்தின் நிலை முழுவதும் இத்தகைய அணுகுமுறைதான் விதியாக உள்ளதே அன்றி விதிவிலக்காக அல்ல. 1930களில் எதியோப்பியா, கூர்னிகா, போலந்திற்கு எதிரான மின்னல்வேகத் தாக்குதல் என்று அந்த அளவுக்கு இல்லாத ஜேர்மனிய மற்றும் இத்தாலிய பாசிச குற்றங்களை நினைவு கூரும் அட்டூழியங்கள், முற்றிலும் ஏற்கக் கூடிய மற்றும் புரிந்துகொள்ளக் கூடிய இஸ்ரேலின் "தற்காப்பு" நடவடிக்கைகளாக கருதப்படுகின்றன.

இப்படிச் சிறிதும் ஒழுக்கநெறி இல்லாத தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் அமெரிக்க ஆளும் தன்னல சிறுகுழுவின் வர்க்க நலன்கள், தடையற்ற இராணுவவாதத்தை பயன்படுத்துவதன் மூலம் அதன் பூகோள நலன்கள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது.

இறுதியில், அமெரிக்க தொழிலாள வர்க்கம்தான் இந்த பைத்தியக்காரத்தனம் எனத் தோன்றும் கொள்கைக்கான செலவினங்களை ஏற்கும் கட்டாயத்திற்கு உள்ளாகும். அமெரிக்க இராணுவ வாதத்தின் செலவினங்கள் பெருகிய முறையில் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு இன்னும் எஞ்சியிருக்கும் சமூகசேவைகளை அழித்தல், வாழ்க்கை தரத்தைக் குறைத்தல் என்னும் வகையில்தான் முடியும்.

மத்திய கிழக்கில் என்றும் விரிந்துவரும் போரானது, கட்டாய இராணுவ திட்டம் இல்லாமல் தொடரப்பட முடியாது. இதனால் 2006 இடைத் தேர்தல்கள் முடிவடைந்ததும் --- கண்டிப்பான ஒழுங்கை பின்பற்றும் அமெரிக்க இளைஞர்களை, அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்திற்காக நடத்தப்பட இருக்கும் "நீண்ட போர்" என அழைக்கப்படுவதை நடத்துவதற்கு தயார் செய்யப்பட்டு வரும் வெளிநாட்டில் போரிடுவதற்கு அனுப்பப்படும் படைக்குள் மீண்டும் பயன்படுத்துவதற்கு, இரு கட்சியினதும் முயற்சிகள் இருக்கும் என்பது பெரும்பாலும் நிகழலாம், இது ஜனநாயகக் கட்சியினரால் முன்னுக்கு எடுத்துச்செல்லப்படும் என்பதில் ஐயமில்லை.

உலகை மேலாதிக்கம் செய்யும் உலகளாவிய நிதி நிறுவன, பெருவணிக நலன்கள் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களின் சர்வதேச ஐக்கியத்தை நாடும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், உழைக்கும் மக்களை சுயாதீன அரசியல் அணிதிரட்டல் மூலம் மட்டுமே, போருக்கு எதிரான போராட்டம் முன்னெடுக்கப்பட முடியும். அத்தகைய மாற்றீட்டை முன்னெடுப்பதற்குத்தான் சோசலிச சமத்துவக் கட்சி 2006 தேர்தல்களில் தலையீடு செய்கிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved