World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel tightens the siege of Gaza

காசாவின்மீதான முற்றுகையை இஸ்ரேல் இறுக்குகிறது

By Rick Kelly
7 August 2006

Back to screen version

லெபனான் மீதான இஸ்ரேலியரின் நான்கு வாரத் தாக்குதல் மீது உலகச் செய்தி ஊடகம் குவிப்பான கவனத்தை காட்டும் நிலையில், காசாவிலும் இதைவிட சற்றும் தணியாத சீற்றத்துடன் கூடிய தாக்குதலும் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனியப் பகுதியிலுள்ள 1.4 மில்லியன் மக்கள் இடையறா இஸ்ரேலிய இராணுவ தாக்குதலுக்கு உட்பட்டுள்ளனர்; இதைத்தவிர விமான, தரைப்படை, கடல்வழி முற்றுகைகளும் ஒரு பெரும் மனிதாபிமான பேரழிவை ஏற்படுத்தும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.

ஜூலை 25 அன்று பாலஸ்தீனிய போராளிகள் கார்பொரல் கிலட் ஷலிட்டைச் சிறைபிடித்ததை போலிக் காரணமாக கொண்டு, இஸ்ரேலிய இராணுவம் மேற்கு கரையை முற்றிலும் தகர்க்கும் நடவடிக்கை, மற்றும் காசாவின் சமூக, பொருளாதார, அரசியல் உள்கட்டுமானத்தை முற்றிலுமாக அழிக்கும் இலக்கினைக் கொண்டுள்ள ஆறுவார தாக்குதலை தொடங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை ஹாரெட்சில் இருந்து வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களில் இருந்து, இஸ்ரேலிய தரைப்படைகள் கடந்த ஐந்து வாரங்களில் காசாப் பகுதியில் 12,000 பீரங்கிக் குண்டுகளை எறிந்துள்ளன என்பது வெளியாகியிருக்கிறது. அதாவது இது சராசரி நாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்ட குண்டுகள் என்று ஆகும். இதைத்தவிர, ஒவ்வொரு நாளும் குறைந்தது 220 விமானத் தாக்குதல்களும் நடைபெற்றுள்ளன. தரைப்படை, பீரங்கிப்படை, புல்டோசர்கள் என்று இஸ்ரேலிய தரைப்படைப் பிரிவுகள் இப்பகுதியில் வாடிக்கையான ஊடுருவல்களைச் செய்துள்ளன. இந்த வெடிமருந்து சக்தி உலகில் மிக அதிகமான மக்கள் அடர்த்தி இருக்கும் பகுதிகள் ஒன்றில் குவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது; இது அமெரிக்க மாநிலங்களில் மிகச்சிறியதான ரோட் தீவில் ஏழில் ஒரு பங்கு நிலப்பகுதி ஆகும்.

இந்த சமீபத்திய குண்டுத்தாக்குதலில், கடந்த ஐந்து நாட்களாக தெற்கு காசாவில் உள்ள ராபாவில் தொடர்ச்சியான நடவடிக்கைகளை இஸ்ரேலியத் துருப்புக்கள் மேற்கொண்டுள்ளன. பீரங்கிகளும் வீரர்களும் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன; வீடுதோறும் சோதனைகள் நடத்தப்படுகின்றன; விளைநிலங்களும், விவசாயப் பண்ணைகளும் அழிக்கப்படுகின்றன. சனிக்கிழமையன்று எட்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் ஒரு எட்டு வயதுச் சிறுவன் உட்பட, குறைந்தது மூன்றுபேராவது, சாதாரணக் குடிமக்கள் ஆவர். இஸ்ரேலிய குண்டுவீச்சில் இருந்து தப்பியோடும்போது இவர்கள் கொலையுண்டனர்.

சோதனைகளும் படுகொலைகளும் மேற்குக்கரையில் நடந்துள்ளன. சமீபத்திய தூண்டிவிடும் நிகழ்ச்சியில் இரண்டு ஹமாஸ் சட்ட மன்ற உறுப்பினர்கள், கடந்த வார இறுதியில் கடத்தப்பட்டனர். ஒருவர் பாராளுமன்ற அவைத்தலைவரான அப்டெல் அசிஸ் டுவைக் ஆவார், இஸ்ரேல் இப்பொழுது 33 பாராளுமன்ற உறுப்பினர்களை சிறையில் வைத்துள்ளது; இதில் 8 பேர் ஹமாஸை சேர்ந்தவர்கள், காபினெட் மந்திரிகளாக இருப்பவர்கள்.

காசாவிலும் மேற்குக் கரையிலும் நடக்கும் இஸ்ரேலிய இராணுவச் செயல்கள் இத்தாக்குதல்களுக்கும் சிறைபிடிக்கப்பட்ட இராணுவத்தை மீட்பதற்கும் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதையும், "பயங்கரவாதத்தை" தடுப்பதிலும் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் நிரூபிக்கிறது. போர்நிறுத்தம் வேண்டும் என்று பலமுறையும் கோரியுள்ள ஹமாஸின் வேண்டுகோளை பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட்டின் அரசாங்கம் நிராகரித்துள்ளது; கைதிகள் பரிமாற்றம் வேண்டும் என்ற பாலஸ்தீனிய போராளிகள் முன்வைத்த திட்டத்தையும் ஏற்க மறுத்துள்ளது. பாலஸ்தீனியர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கோரிக்கைக்கும் புதிய இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கள் விடையாக அமைந்துள்ளன.

கணக்கிலடங்கா போர்க்குற்றங்கள் காசாவில் நடத்தப்பட்டுள்ளன. இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பு B'Tselem கடந்த மாதம் கொல்லப்பட்ட 178 மக்களில் பாதிக்கு மேலானவர்கள் சாதாரண குடிமக்கள் என்று தன் விசாரணையில் தெரிவித்துள்ளது. நூற்றுக்கணக்கானவர்கள் கடுமையாக காயமுற்றுள்ளனர். ஒரு காசா மருத்துவமனையில், நடந்த 100 அறுவை சிகிச்சைகளில் இஸ்ரேலியத் தாக்குதல்களின் விளைவாக 60 அறுவை சிகிச்சைகள் நடந்தன என்று BBC இடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

"உடற்பகுதிகளை வெட்டி எடுக்கும் நிலையில் இன்னும் பல உடற்சிதைவுகள் ஏற்பட்டுள்ளன; இதைத்தவிர கடுமையான தீப்புண்கள் முன்பில்லா அளவிற்கு இப்பொழுது வந்துள்ளன" என்று Medecins du Monde என்னும் உதவி அமைப்பில் இருக்கும் வில்லியம் டுபோர்ச் தெரிவித்துள்ளார். "அதாவது, மருத்துவமனைகள் இன்னும் நீடித்த காலத்திற்கு வழிந்து நிறைந்து இருக்கும்; கூடுதலான வல்லுனர்களுக்கான தேவையும், மருந்துகளுக்கான தேவையும் இருக்கும்; ஏற்கனவே இவை இரண்டும் அதிக அளவில் இல்லை. இப்பாதிப்பிற்குட்பட்டுள்ள மக்கள் வாழ்நாள் முழுவதும் ஊனமுற்றிருப்பர்."

ஏப்ரல் 2002க்கு பின்னர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஜூலை மிகக் குருதி கொட்டிய மாதமாக போயுள்ளது. "போரின்" ஒருதலைப்பட்ச இயல்பைக் குறிக்கும் வகையில் கடந்த ஐந்து வாரங்களில் ஒரு இஸ்ரேலிய வீரர்தான் கொல்லப்பட்டார்; அதுவும் கூட "friendly-fire" நிகழ்வில் ஏற்பட்டது.

B'Tselem பாலஸ்தீனிய குடிமக்கள் பற்றிய நிகழ்வுத் தொகுப்புக்களையும் பட்டியலிட்டுள்ளது; இதில் குழந்தைகளும், முதியவர்களும் வேண்டுமென்றே இஸ்ரேலிய போர்விமானங்களாலும், ஹெலிகாப்டர்களாலும் குண்டுவீசப்பட்ட சம்பவங்களும் அடங்கியுள்ளன. லெபனானை போலவே, இஸ்ரேலியத் தாக்குதல் இங்கும் முழு மக்களையும் அச்சுறுத்தவேண்டும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்புக்கள் அனைத்தையும் ஒடுக்க வேண்டும் என்பதாகத்தான் உள்ளது.

ஒரு புதிய உத்திவகையில், இஸ்ரேலிய இராணுவம் இப்பொழுது பாலஸ்தீனிய மக்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் கொடுத்து குண்டுவீச்சுக்கு சில கணங்களே இருக்கும்போது ஓடிவிடுமாறு எச்சரிக்கை கொடுக்கின்றனர். சாதாரண குடிமக்களின் இறப்புக்களை குறைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது என்று இராணுவத்தினர் கூறினாலும், உண்மையில் இத்தகைய அழைப்புக்களை பெறும் ஆயிரக்கணக்கான குடும்பங்களிடம் இது அச்சத்தை ஊட்டிவிடுகிறது.

"இத்தகைய தகவல்களை நம்பும் சில குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இருந்து அதிகாலை 2 மணிக்கே புறப்பட்டுவிடுகின்றனர்; ஆனால் F-16 போர்விமானங்கள் அவர்கள்மீது நேரடியாக உடனடிக் குண்டை பொழிகின்றன" என்று அல் அஹ்ரம் என்றும் வார ஏடு தகவல் கொடுத்துள்ளது. "மற்றவர்கள் குடும்பங்களை கைவிடுகின்றனர்; ஒன்றும் நேருவதில்லை. அச்சத்தின் காரணமாக குண்டுவீச்சு தாமதப்படக் கூடும் என்ற காரணத்தில் அவர்கள் வீடுகளுக்குத் திரும்புவதும் இல்லை."

IDF காசாப்பகுதியில் பல இடங்களிலும் உடனே மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஓடி விட வேண்டும் என்ற துண்டுப் பிரசுரங்களையும் போடுகின்றனர். ஒவ்வொரு எல்லைப் பகுதியும் மூடப்பட்டுள்ள நிலையில், மக்கள் எங்கும் செல்ல முடியாத நிலைதான் உள்ளது. லெபனானில் இருந்து மக்கள் பெருந்திரளாக வெளியேறுவது போல் பாலஸ்தீனியப் பகுதியில் நடக்காததற்குக் காரணம் காசா வாழ் மக்கள் அனைத்துப் புறங்களிலும் இஸ்ரேலால் சூழப்பட்டுள்ளதுதான்.

இஸ்ரேலியர் நடத்தும் முற்றுகை ஆக்கிரமிப்பு பகுதிகளில் மனிதாபிமான வகையில் பெரும் நெருக்கடிளை பெருக்கியுள்ளது. காசாவில் பணிபுரியும் ஒன்பது ஐ.நா. மனிதாபிமான அமைப்புக்கள் பெருகிக் கொண்டிருக்கும் வன்முறையின் தாக்கம் பற்றி "ஆழ்ந்த எச்சரிக்கையுணர்வை" வெளிப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. "லெபனானில் சர்வதேச கவனம் குவிப்புக் காட்டும் நேரத்தில், காசாவில் நடக்கும் பெருந்துன்பம் மறக்கப்பட்டுள்ளது பற்றி நாங்கள் கவலைப் படுகிறோம்" என்று அதில் எழுதப்பட்டுள்ளது.

ஒரு உதவி அமைப்பு இஸ்ரேல் நாள் ஒன்றிற்கு காசாவிக்கு 150 உணவு, உதவி வாகனங்கள்தான் செல்லமுடியும் என அனுமதித்துள்ளதை குறிப்பிட்டுள்ளது; இதையொட்டி, அங்குள்ள மக்கள் வெறும் பட்டினியில் இருந்துதான் தப்பமுடியும். மக்களுடைய ஊட்டத் தேவைகளுக்கும் சற்று கூடுதலான உணவுப் பாதுகாப்பு அளிப்பதற்கும் 400 வாகனங்கள் அளவிற்கு உணவு அனுப்பப்பட வேண்டும்.

காசாவில் கூடுதலான மின்சக்தி, எரிபொருள் பற்றாக்குறையும் உள்ளன. நாட்டின் ஒரே மின்விசை நிலையத்தை ஜூன் 28 அன்று இஸ்ரேல் அழித்துவிட்டது. சில பாலஸ்தீனிய வீடுகள் நாளொன்றுக்கு 6 முதல் 8 மணி நேரம் மின்சக்தியை பெறுகின்றன; மற்றவை தொடர்ச்சியான இருட்டடிப்பைத்தான் காண்கின்றன. சில மருத்துவமனைகளில் குறைந்தபட்ச பணிக்காக, அறுவை சிகிச்சைகளுக்கு மின் உற்பத்தி ஜெனரேட்டர்களை நம்பவேண்டியுள்ளது; ஆனால் அவற்றிற்கான எரிபொருள் கிடைப்பதில்லை. பல மருத்துவ வசதிகள் மற்றும் அறுவைச்சிகிச்சைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன; மருத்துவ மனைகளிலுள்ள உணவு வழங்குதல், மருந்துகள், இரத்த வங்கிச் செயற்பாடுகள், தடுப்பூசி வகைகள் ஆகியவை அழிக்கப்பட்டு விட்டன; குளிர்சாதனப் பெட்டிகள் வேலைசெய்வது கிடையாது.

காசாவில் உள்கட்டுமானத்தை இஸ்ரேலியத் தாக்குதல்கள் இலக்கு கொண்டுள்ளதால், குடிநீர்த் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதுடன், கழிவு நீர் வெளியேற்றத்திலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சுகாதாரக் குறைவு இப்பகுதியில் வந்துள்ளதால் பெருகிய முறையில் தொத்துநோய்கள் ஏற்படக் கூடிய அபாயத்தை பற்றியும் மனிதாபிமான அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இஸ்ரேலிய எல்லை மூடல்கள், உள்கட்டுமான அழிப்பு, ஆலைகள் மற்றும் பண்ணை, விவசாய நிலங்கள் தகர்ப்பினால் காசாவின் பொருளாதாரம் முடக்கத்தை கண்டுள்ளது. வறுமையும் வேலையின்மையும் ஆகாயமளவிற்கு உயர்ந்துள்ளன; ஜனவரி தேர்தல்களில் ஹமாஸ் வெற்றி பெற்றதை அடுத்து இஸ்ரேலிய, சர்வதேச நிதியத் தடைகள் பாலஸ்தீனிய அதிகாரத்தின் மீது சுமத்தப்பட்டதை தொடர்ந்து இந்நிலை வந்துள்ளது. இப்பகுதியில் உள்ள 140,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாதக் கணக்கில் ஊதியம் கிடைக்கவில்லை.

ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்து அது வழங்கும் உணவைப் பெறும் மக்களை 38 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. தட்டுப்பாடுகளினால் விலையுயர்வு ஏற்பட்டுள்ளது; இதன் விளைவாக அடிப்படை உணவுப் பொருட்களை வாங்க இயலா நிலைமை ஏற்பட்டு, பெரும்பாலான மக்கள் ஊட்டச் சக்தியிழந்து வாடுகின்றனர். உதாரணமாக, ஜனவரி விலைக்கு தற்போது கோதுமை மாவு 15 மடங்கு விலை உயர்வைக் கண்டுள்ளது. மற்ற உணவுப் பொருட்கள் சந்தையில் இருந்து முற்றிலும் மறைந்துவிட்டன. பாலஸ்தீனியர்கள்மீது இஸ்ரேலியர்கள் மீன்பிடிப்புத் தடை ஏற்பட்டுத்தியதில் இருந்து மீன்களும் கிடைப்பதில்லை. இதனால் கிட்டத்தட்ட 35,000 மக்களுக்கு வருமானமும் போய்விட்டது.

லெபனானில் உள்ளதை போலவே, ஆக்கிரமிப்பு பகுதிகளில் இஸ்ரேலின் போர்க்குற்றங்களுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவும் கிடைத்துள்ளது. இருதிறத்தாரும் நிதானமாக இருக்க வேண்டும் என வாடிக்கையாக வெளியிடும் அறிக்கையை கூட வாஷிங்டன் இப்பொழுது வெளியிடுவதில்லை. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு காட்டப்படும் அனைத்து பாலஸ்தீனிய எதிர்ப்பும் தகர்க்கப்படுவது, அமெரிக்க ஆதிக்கத்தின் கீழ் "புதிய மத்திய கிழக்கை" கொண்டுவரும் உந்துதலில் முக்கிய கூறுபாடு என்று புஷ் நிர்வாகம் சற்றும் ஒளிக்காமல் கூறுகிறது. இதனால்தான் இஸ்ரேலியர்கள் காசாவில் தங்கள் தாக்குதலை தடையின்றிச் செய்ய முடிகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved