World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Ariel Sharon: a political assessment-Part two

ஏரியல் ஷரோன்: ஓர் அரசியல் மதிப்பீடு

பகுதி 2

By Jean Shaoul
19 January 2006

Back to screen version

இது இரு பகுதிகள் கொண்ட கட்டுரையின் முடிவுப் பகுதியாகும். முதல்பகுதி (தமிழில்) ஜனவரி 30 அன்று வெளிவந்தது.

1992 தேர்தலில் தோல்வியை தழுவிய பின்னர் லிக்குட் சார்ந்திருந்த மத மற்றும் அதிதீவிர தேசியவாதி சக்திகளுக்கு 1993ல் ஓஸ்லோ உடன்படிக்கைகளின்படி பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடனான (PLO) ஒப்பந்தம் ஒரு காட்டிக் கொடுப்பாக இருந்தது. இஸ்ரேலின் பைபிளில் குறிப்பிடப்பட்ட நிலமான ''Eretz Israel" இன் பகுதி ஒன்று விட்டுக்கொடுக்கப்பட்டதற்கு ஒப்பாக அது கருதப்பட்டது.

யூதர்கள் ஜோர்டானின் கிழக்குக் கரையில் மட்டுமில்லாமல், லெபனானின் சரிவுப் பகுதிகள் மற்றும் நைல் நதியை அணுகும் பகுதிகளிலும் ''பைபிளில் கூறப்பட்ட பாலஸ்தீனத்திற்கான நிலைத்திருக்கும், மாற்றிக்கொடுக்கப்பட முடியாத உரிமையைக் கொண்டிருந்தனர்" என்று அவர்கள் நம்பினர். லிக்குட் "இஸ்ரேலின் நிலப்பகுதி" மீது கட்டுப்பாட்டை நிறுவுதற்கு சம்பிரதாய ரீதியாக கடப்பாடு கொண்டிருக்கவில்லை என்றாலும்கூட, அகண்ட இஸ்ரேல் என்ற கருத்திற்கேனும் அது கடப்பாடுடையதாக இருந்தது என்றும் இப்பகுதி 1967க்கு முந்தைய நிலப்பகுதியைவிடக் கணிசமாக அதிகமானது என்றும் கருதப்பட்டது.

PLO உடன் உடன்பாடு கொள்ளும் கிளின்டனின் கொள்கையை நிராகரித்திருந்த அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் நவீன-பழமைவாத குழுவின் (கன்னையில்) இஸ்ரேல் நண்பராகத்தான் பெஞ்சமின் நெத்தன்யாகு இருந்தார். 1993ல் இவர் லிக்குட்டின் தலைவரானார்.

எப்படிக்குறைந்த பகுதியாக இருந்தாலும் பாலஸ்தீனிய அரசை ஸ்தாபிப்பதற்கும் PLO உடன் எத்தகைய பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கும் எதிர்ப்புக் காட்டிய நெத்தன்யாகு மேற்குக் கரை மறுபடியும் பிளவுபடுத்தப்படுவதை ஏற்க மறுத்துவிட்டார். அவரும், லிக்குட்டில் இருந்த அவருடைய சக ஊழியர்களும் பாலஸ்தினீயர்களை பயமுறுத்தவும், தூண்டிவிடுவதற்கும், ஓஸ்லோ உடன்படிக்கைகளை நாசப்படுத்துவதற்கும் அதிதீவிர தேசியவாத மற்றும் மதவாத சக்திகளின் பக்கம் திரும்பினர்.

அவர்கள் வாடிக்கையாக ராபின், ஷிமோன் பெரஸ் மற்றும் தொழிற்கட்சியை போருக்கு முந்தைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி நெவில் சேம்பர்லின் மற்றும் ஹிட்லரை விட்டுக்கொடுத்து சமாதானப்படுத்தும் ஏனையோருடன் தொடர்புபடுத்தினர், மற்றும் ஓஸ்லோ உடன்படிக்கையை நாஜிக்களுடனான 1938ல் மூனிச் உடன்படிக்கையுடன் ஒப்பிட்டனர். 1995 நவம்பரில் ஒரு மத வெறியனால் பிரதமர் யிட்சாக் ராபினின் படுகொலைகளுக்கு இட்டுச்சென்ற அரசியல் சூழலை உருவாக்குவதிலும் தீவர வலதை ஊக்குவிப்பதிலும் அவர்கள் முக்கியமான பங்கை வகித்தனர்.

இஸ்ரேலிய செல்வந்தத் தட்டு தன்னுடைய விரிவாக்க கொள்கையினால், குறிப்பாக 1967 போருக்கு பின்னர் கொண்டிருந்த கொள்கையினால், உருவாக்கப்பட்டிருந்த அரசியல் பிராங்கென்ஸ்டைன் அரக்கனைத்தான் இந்தப் படுகொலை வெளிப்படுத்தியது மேலும் பாலஸ்தீனியர்களுடன் எவ்வித உடன்பாட்டிற்கும் வராத வகையில் வலதுபுறம் பாய்ந்துவிடும் தன்மையும் இது முன்னிழலாகக் காட்டியது. பெரும்பாலும் இஸ்ரேலிய ஆளும் செல்வந்த தட்டு கொலைகளையும், அவற்றிற்கு பின் இருந்த வலதுசாரி சக்திகளையும் கண்டித்த அதேவேளை, 2000ல் ஏற்பட்ட முட்டுக்கட்டைநிலை இறுதியாக வருவதற்கு முன் பேச்சுவார்த்தைகளின்படியான சமாதான உடன்பாட்டிற்கு முயற்சித்த அளவில், படுகொலையானது ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை தூண்டிவிட்டது.

1996ம் ஆண்டு ஏராளமான பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இஸ்ரேலுக்குள் தீவிர வெறுப்பும் அச்சமும் கொண்ட அலையின் மீதாக, லிக்குட் பதவிக்கு மீண்டும் வந்தது அத்தகைய தாக்குதல்களுக்கு PLO காரணம் என்றும் கூறப்பட்டது. நெதன்யாகுவின் ஏறுமுகத்தை ஒட்டி பாலஸ்தீனியர்களுடனான பேச்சுவார்த்தைகள் முடக்கம் கண்டன, ஆனால் வாஷிங்டனில் இருந்து வந்த அழுத்தம் அவரை ஜனாதிபதி பில் கிளின்டன் மேரிலாண்ட் ஒய் தோட்டத்தில் 1998ல் ஏற்பாடு செய்திருந்த கலைந்துரையாடல்களில் பங்கு பெறக் கட்டாயப்படுத்தியது. அதே ஆண்டு, நெதன்யாகு, இப்பொழுது மூத்த அரசியல்வாதி என்று சித்திரித்துக் காட்டப்படும் ஷரோனை தன்னுடைய வெளியுறவு மந்திரியாக்கினார். ஷரோனுக்குத்தான் ஒய் பேச்சுவார்த்தைகளை கையாளும் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

ஒஸ்லோ உடன்பாடுகளை அங்கீகரிக்க லிக்குட் மறுத்தது, ஆனால் "ஒஸ்லோ ஒப்பந்தம் தோற்றுவித்திருந்த உண்மை நிலைப்பாடுகளை" ஏற்றது. பாலஸ்தீனிய நிர்வாகத்தினால் கட்டுப்படுத்தப்படும் நகரங்களை இஸ்ரேல் மீண்டும் பெறாது. ஆனால் ஒருவகையாக பாலஸ்தீனிய எல்லை உருவாகுமேயாகில், இஸ்ரேலிய கட்டுப்பாட்டின்கீழ் உள்ள நிலங்களில் எத்தனை பெறமுடியுமோ அவற்றைப் பெறுவதற்கு ஷரோனும், நெதன்யாகுவும் முயலுவர். கிழக்கு ஜெருசலேத்தின்மீதான இறைமை மற்றும் இஸ்ரேலுக்கு பாலஸ்தீனிய அகதிகள் திரும்பும் உரிமை என்ற முக்கிய பாலஸ்தீனிய கோரிக்கைகளை அவர்கள் பிடிவாதமாக நிராகரித்தனர்.

வைய் ஏற்பாட்டின்படி, இஸ்ரேல் மேற்குக் கரையில் கூடுதலான நிலப்பகுதியை பாலஸ்தீனிய அதிகாரத்திற்கு மாற்றுதல், காசாவிற்கும் மேற்குக் கரைக்கும் இடையே பாலஸ்தீனியர்களின் சுதந்திரமான இயக்கத்திற்கான பாதுகாப்பான ஒரு வழியை உருவாக்குவதற்கு, 3,000 பாலஸ்தீனிய சிறை கைதிகளை விடுதலை செய்தல் ஆகியவற்றிற்கு உடன்பட்டது. இதற்குப் பதிலாக, இஸ்ரேலிய-எதிர்ப்பு போராளி குழுக்களான ஹமாஸ் போன்றவற்றை கட்டுப்படுத்துதல், ஆயுதங்கள் ஏந்துவதை தடை செய்தல், இஸ்ரேலை அழிக்க PLO வின் சாசனத்தில் இருந்த விதிகளை அகற்றுதல் ஆகியவற்றிற்கு பாலஸ்தீனிய அதிகாரம் ஒப்புக்கொண்டது. CIA உடைய நேரடி மேற்பார்வையின் கீழ் கூட செய்வதாக அராஃபத் ஒப்புக் கொண்டார்.

ஆனால் தன்னுடைய கூட்டணிக் கட்சியினரை இந்த உடன்பாட்டை ஏற்கும்படி செய்ய நெதன்யாகுவினால் இயலவில்லை மற்றும் பாலஸ்தீனியர்கள் உடன்பாட்டை மீறிவிட்டனர் என்று குற்றம்சாட்டி டிசம்பர் 1988ல் ஒரேதடவையில் திரும்பப் பெற்ற பின்னர் இத்திட்டம் முடக்கப்பட்டது. தன்னுடைய பொது நிலையைப் பயன்படுத்தித் தன்னையும், தன்னுடைய குடும்பம், மற்றும் நண்பர்களை ஷரோன் செல்வந்தராக்கிக் கொண்டதாகவும் பரந்த அளவில் நம்பப்பட்டது; பின்னர் இவருடைய முந்தைய கூட்டாளியாக இருந்த டேவிட் ஆபேல் மீது நடந்த ஊழல் வழக்கில் இது சுட்டிக் காட்டப்பட்டது.

பெரும்பாலான இஸ்ரேலியர்கள் பூசலுக்கு ஏதேனும் தீர்வு வேண்டும் என்றும் தெற்கு லெபனானில் ஆக்கிரமிப்பிற்கு முடிவு வேண்டும் என்றும் கவலை கொண்டிருந்தனர். நெதன்யாகுவின் கூட்டணி ஆட்சி பொறிந்தது மற்றும் லிக்குட் உடைவுற்றது. 1999 தேர்தல்களில் அது படுதோல்வியை கண்டது. இஸ்ரேலியர்கள் ஒரு புதிய தொழிற்கட்சி கூட்டணி அரசாங்கம், எகுட் பராக் உடைய தலைமையின் கீழ் வருவதற்கு வாக்களித்தபொழுது அவர் பாலஸ்தீனியர்களுடன் தடைப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகளை புதுப்பிப்பதாக உறுதி கூறியிருந்தார்.

லிக்குட் கட்சியின் பேரழிவுகரமான தேர்தல் தோல்விக்குப் பின்னர் சட்டவிரோத பிரச்சார பங்களிப்புக்களின் உதவியுடன் ஷரோன் கட்சியின் தலைமையை வென்றதாகக் கூறப்பட்டது; அதற்காக பிரச்சார மேலாளராக இருந்த அவருடைய மகன் இப்பொழுது தண்டனை அனுபவித்து வருகிறார். அப்பொழுது 71 வயதாகி இருந்த ஷரோன் நேற்றைய மனிதர் போல காணப்பட்டார் மற்றும் லிக்குட்டின் தற்காலிக தலைவருக்கு மேலாக எதுவும் இல்லா நிலையில்தான் இருந்தார். ஜூலை 2000ல் காம்ப் டேவிட் பேச்சு வார்த்தைகள் முடியும் வரை கட்சித்தலைவராக அவர் பெரும்பாலும் பின்னணியில்தான் இருந்தார்.

காம்ப் டேவிட் முகாம் பேச்சுக்களும், தொழிற்கட்சி அரசாங்கமும் இறுதியில் தோல்வியைத்தான் சந்திக்கும் என்று போயிற்று ஏனெனில் பாலஸ்தீனியர்களின் மீதான சரிர, சமுக, பொருளாதார அடக்குமுறைகளுக்கு எந்தத் தீர்வையும் காண்பதற்கு ஓஸ்லோ உடன்பாட்டினால் இயலவில்லை. பாலஸ்தீனிய நிர்வாகம் நிறுவப்பட்டது பாலஸ்தீனிய மக்களுக்கு நன்மையை கொடுக்கவில்லை; மாறாக அராஃபத்தை சுற்றியிருந்த ஒரு சிறிய செல்வந்தத் தட்டிற்குத்தான் பலன்கள் கிட்டின. கிளின்டன் இடைத்தரகராக இருந்து இரு வாரங்கள் பராக்கிற்கும் அராஃபத்திற்கும் இடையே நடைபெற்ற தீவிரப் பேச்சுவார்த்தைகளினால் உடன்பாட்டை ஏற்படுத்த முடியவில்லை.

அரஃபாத் பெரும் சலுகைகளை --பெரும்பாலான குடியேற்றங்களை இஸ்ரேல் இணைத்துக் கொள்ளல், 1948 மற்றும் 1967ல் நாட்டை விட்டு ஒடி, வெளியே இருக்கும் 3.6 மில்லியன் பாலஸ்தீனியர்களில் 100,000க்கும் மேலானோர் மீண்டும் இல்லங்களுக்கு திரும்புவதை அனுமதிக்க மறுத்தல், மிகக் குறைந்த நிலப்பரப்பு உடைய பாலஸ்தீனிய அரசு ஆகியவற்றை-- காட்டுவதற்குத் தயாராக இருந்தபோதிலும், அவர் ஜெருசலேத்தின் விதி பற்றிய பராக்கின் திட்டங்களை ஏற்க இயலவில்லை. பாலஸ்தீனியர்கள் கிழக்கு ஜெருசலேத்திற்கு மீண்டும் திரும்ப விரும்பினர்; இது 1967 போரில் ஜோர்டானிடம் இருந்து, தங்களுடைய வருங்கால அரசிற்கு தலைநகராக இருக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேலால் கைப்பற்றப்பட்டிருந்தது.

ஜெருசலேத்தின் பழைய நகரத்தில் உள்ள புனித இடங்களில் "எஞ்சிய இறைமையை" இஸ்ரேல் கொள்ளலாம் என்றும் அதே நேரத்தில் பாலஸ்தீனியர்கள் சில மதத்தலங்களிலும், கிழக்கு ஜெருசலேத்தின் கூடுதலான வெளி மாவட்டங்களை பகிர்ந்து கொள்ளும் இறைமையை வைத்துக் கொள்ளலாம் என்றும், இஸ்ரேலிடம் மேற்பார்வை இறைமை இருக்கலாம் என்றும் பராக் முன்மொழிந்தார். இது அரஃபாத் ஏற்க முடியாத நிலைப்பாடு ஆகும். சமாதானப் பேச்சுக்களும் அத்துடன் சமாதான நடைமுறை என்று அழைக்கப்பட்டதும் காம்ப் டேவிட்டில் வீழ்ச்சியடைந்துவிட்டன ஏனெனில் இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய சலுகைகள் கொடுக்கப்படுவது மறைக்கப்பட முடியாமற் போயிற்று இந்த நடைமுறைகளில் அத்தகைய உட்குறிப்பு முன்னரே இருந்தது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

காம்ப் டேவிட் முகாம் பேச்சுக்கள் தோல்வியில் முடிவுற்றபின், ஓஸ்லோ மற்றும் தொழிற்கட்சி அரசாங்கம் ஆகிய இரண்டையும் தகர்ப்பதற்கு ஷரோனுக்கு அதிக நேரம் ஆகவில்லை. காம்ப் டேவிட்டில் பாலஸ்தீனியர்களுக்கு தொழிற்கட்சி கொடுக்கவந்த சிறு சலுகைகளைக் கூட அவர் கண்டித்த வகையில் பராக்கிடமிருந்து ஆதரவை தன்பால் ஈர்த்துக் கொண்டார்.

இரண்டு மாதங்களுக்கு பின்னர், ஷரோனுக்கு மலைக் கோயிலில் (டெம்பிள் மவுன்ட்) ஒரு பெரிய ஆயுதமேந்திய குழுவினருடன் நுழைவதற்கு பராக் அனுமதி கொடுத்தார். வலதுசாரி ஷாஸ் கட்சியின் ஆதரவை நம்பியிருந்த ஆட்டம் கண்டுவிட்ட பராக்கின் கூட்டணியானது தீவிர தேசியவாதிகள், மதவாத சக்தியை விரோதித்துக் கொள்ள விரும்பவில்லை. கணக்கிற்குட்பட்ட முடிவைத்தான் அவர் எடுத்தார்; இதற்கு ஐயத்திற்கு இடமின்றி வாஷிங்டனின் ஆசிகள் இருந்தன; அரஃபாத்தையும், பாலஸ்தீனியர்களையும் தண்டிப்பதற்கான ஷரோனின் தூண்டுதல் தன்மை நிறைந்த நடவடிக்கைகளை ஆதரித்து கூடுதலான வகையில் மோதலை வளர்ப்பது என்பதே அது.

மலைக் கோவிலிற்கு ஷரான் சென்றது ஓஸ்லோ ஒப்பந்தங்கள் காப்பாற்றப்படுதல் எந்த சந்தர்ப்பத்திலும் தடுக்கப்படவேண்டும் என்ற தெளிவான ஆத்திரமூட்டும் தன்மையை கொண்டிருந்தது; இதையொட்டி மேற்குக்கரையில் குடியிருப்புக்களை விரிவாக்கம் செய்தல் தொடரலாம் என்ற கருத்தும் இருந்தது. இது இரண்டாம் இன்டிபதாவினால்----பாலஸ்தீனியத்தில் போர்க்குணமிக்க கண்டனம் வெடிப்பை அது உருவாக்கியது இஸ்ரேல் விடையிறுப்பாக ஒரு பாரிய மற்றும் குருதிசிந்தும் சாக்குப்போக்கை வழங்க வேண்டியதாயிற்று.

"சமாதானத்திற்கான கட்சி" என்று குறுகிய காலத்தில், செயலாற்றமுடியாத தன்மையில் இருந்த பின்னர், தொழிற்கட்சி பெப்ரவரி 2001ல் பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தது; இது ஷரோன் பதவிக்கு வருவதற்கு வழிகோலியது.

பிரதம மந்திரியாக ஷரோன்

பாதுகாப்பு மந்திரியாக இருக்கத் தகுதியற்றவர் என அகற்றப்பட்டபின், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஷரோன் பிரதம மந்திரியாக பதவியேற்றார். பெரும்பாலான இஸ்ரேலியர்கள் அவருடைய கொள்கைகளுக்கு ஒப்புதல் கொடுத்துவிட்டனர் என்ற பொருளை இது கொடுத்துவிடவில்லை. சொல்லப்போனால், வாக்களிக்கும் உரிமை பெற்றவர்களில் 37 சதவிகிதத்தினர்தான் அவருக்கு வாக்களித்தனர் மற்றும் கருத்து வாக்கெடுப்பின்படி தொடர்ச்சியாக பெரும்பாலான இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களுடனான மோதலை நிறுத்த விரும்பினர் என்றுதான் இருந்ததது. இடதில் மிகப் பெரிய அரசியல் வெற்றிடம் இருந்த வகையில், உண்மையான சமாதானக் கொள்கை ஒன்றை முன்வைக்க தொழிற்கட்சிக்கு விருப்பம் இல்லாததும், இயலாத்தன்மையும் மற்றும் சியோனிச ஆட்சியின் கீழ்க்கட்டுமான ஆதரவு பிற்போக்கு அடிப்படைக்கு எதிராக போராடும் மற்றும் மற்றும் பல்வேறு தட்டு தேசியவாத அரசிற்கு ஒரு உண்மையான சோசலிச மாற்றீட்டை முன்வைக்கும் குறிப்பிடத்தக்க கட்சி எதுவும் இல்லாததும் ஆகிய இவற்றின் காரணமாக ஷரோன் வெற்றி கண்டார்.

உண்மையில், ஒரு கூட்டணி அரசாங்கத்தில் லிக்குட்டுடன் சேர்ந்ததில் மூலம் தொழிற்கட்சியானது ஷரோனுடன் தன்னுடைய அடிப்படை உடன்பாட்டை விளக்கிக்காட்டியது..

வாஷிங்டன் மற்றும் இஸ்ரேலின் ஆளும் செல்வந்த தட்டில் இருக்கும் தன்னுடைய ஆதரவாளர்களின் நலன்களை வெளிப்படுத்திய கொள்கையை ஷரோன் கொண்டிருந்தார். அதையொட்டி அவர் குடியிருப்புக்களில் இருந்தவர்கள் மற்றும் மதக் கட்சிகளின் ஆதரவை வெல்ல முடிந்தது. இஸ்ரேலிய ஆளும் செல்வந்த தட்டினர்களிடையே போருக்கான ஆதரவில் ஒரு புதிய கருத்து ஒற்றுமை வெளிப்பட்டது; இதற்கு தொழிற் கட்சியின் தலைமையும் உடன்பட்டது.

பிரதம மந்திரி பதவியின் மூலம் ஷரோன் தன்னுடைய "இருக்கும் நிலைமையின் உண்மை" க்கு ஏற்ப சோதித்து முயற்சித்த கொள்கைகளுக்கு திரும்பினார். ஓஸ்லோ இப்பொழுது மடிந்துவிட்டது; ஒருதலைப்பட்சமாக அவர் இப்பொழுது பாலஸ்தீனிய அரசின் வருங்காலத்தின் தன்மையை உருவாக்கி, அதையொட்டி இஸ்ரேலுக்கு கிடைக்கும் நலன்கள் அதிகரிப்பதையும் நிர்ணயிக்கமுடியும் என்று ஆயிற்று.

இந்த முடிவிற்காக, ஷரோன் மிகவும் பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான, குற்றம் சார்ந்த இராணுவ அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டார்; அவை பாலஸ்தீனியர்களின் அரஃபாத் தலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வழிவகையை கொண்டிருந்தது. இதில், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பல படையெடுப்புக்களும், குண்டுவீச்சுக்களும், வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டதும், நூற்றுக் கணக்கான சாலைத் தடைகளும், ஊரடங்கு உத்தரவுகளும், அரசியல் படுகொலைகளும், விசாரணையின்றி சிறைத்தண்டனையும், சித்திரவதைகளும் இருந்தன. குடியிருப்புக்களை தீவிரமாக கட்டுதல், நிலப்பறிப்புக்கள் ஆகியவை தொடர்ந்தன.

மார்ச் 2002ல், ஜெனீவாவில் ஒரு சம்பிரதாயமற்ற சமாதான முயற்சியை மற்றும் அரேபிய அரசினால் கொடுத்திருந்த திட்டம் ஒன்றை முன்கூட்டி தாக்குவதற்கும், ஷரோன், பாலஸ்தீனிய அதிகாரத்தின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள மேற்குக்கரை நகரங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வதற்கு இராணுவத்தை அனுப்பி, பாலஸ்தீனிய அதிகாரத்தின் அரசியல் உள்கட்டுமானத்தை உடைப்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்தார். இதில் மிகப் பரந்த வகையில் சாதாரண மக்கள் உயிரிழந்தனர்.

பாலஸ்தினிய நிர்வாகத்தை ஆட்சி செய்துவந்த அரஃபாத்தின் கட்டிட சுற்றுச்சுவர் குண்டுவீச்சில் கற்களின் குவியலாயிற்று. அரஃபாத்தே கிட்டத்தட்ட ஒரு கைதி போல்தான் நடத்தப்பட்டார் அவரால் பயணிக்கவும் முடியவில்லை பார்வையாளர்களை சந்திக்கவும் முடியவில்லை; மறுக்கப்பட்ட மருத்துவ வசதிகள்கூட சர்வதேச அழுத்தத்தையொட்டி இஸ்ரேல் அவருக்கு அனுமதித்தது; அப்பொழுது அவர் மரணத்திற்கு வெகு அருகில் சென்றுவிட்டிருந்தார்-----ஒரு பாரிஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் இன்டிபாடாவால் தூண்டிவிடப்பட்டிருந்த பெருகிய நெருக்கடி, பாலஸ்தீனியர்கள் இராணுவ அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது, மற்றும் பொருளாதார மந்த நிலை தொழிலாள வர்க்கத்திற்குள்ளேயே கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது இது ஷரோனின் லிக்குட்-தொழிற்கட்சி கூட்டணிக்குள் ஒரு அரசியல் நெருக்கடியைத் தூண்டிவிட்டது. அக்டோபர் 2002ல் இஸ்ரேலிய தொழிலாளர்களுக்கு கடுமையான பொருளாதார மற்றும் சமூக கஷ்டங்கள் இருந்தபோதிலும் குடியிருப்புக்களை ஏற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டதை எதிர்த்து கூட்டணியில் இருந்து தொழிற்கட்சி விலகியது. மற்றொரு கூட்டணிக்கு ஏற்பாடு செய்ய முடியாத நிலையில் பெப்ரவரி 2003ல் முன்கூட்டிய பொதுத் தேர்தல்களுக்கு ஷரோன் ஏற்பாடு செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.

எந்த உண்மையான மாற்றீட்டு முன்னோக்கும் இல்லாத காரணத்தால்தான் அவர் மீண்டும் தேர்தலில் வெற்றியடைந்தார். இஸ்ரேலிய பொதுத் தேர்தலிலேயே மிகக் குறைவான மக்கள் வாக்களித்திருந்த நிலையில் லிக்குட் மொத்தத்தில் ஆறில் ஒரு பங்கு சதவிகிதத்தைத்தான் பெற்றிருந்தது.

ஷரோன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமை அதிகாரபூர்வ அரசியலில் இருந்து ஆழ்ந்த விரோதப் போக்கின் வெளிப்பாடாக அதிக வலதுபுற மாற்றத்தை குறிக்கவில்லை. இந்தப்பிரச்சாரத்தில் பொருளாதாரப் பிரச்சினையை பற்றி விவாதிக்கக் கூட தொழிற்கட்சி கடுமையாக முயலவில்லை; இத்தேர்தல் முன்கூட்டி வருவதற்கே அதுதான் முதலாவது காரணமாக இருந்தது.

ஆரம்ப முயற்சியை ஷரோன் பற்றிக் கொள்ள முடிந்தது என்றால் அதற்குக் காரணம் லிக்குட்டின் இனவெறி, அரேபிய-எதிர்ப்புக் கொள்கைகள் ஆகும்; அவை தொடர்ச்சியாக, இரக்கமற்ற முறையில் சியோனிச ஆட்சியின் தர்க்கத்தையும் தேவைகளையும் வெளிப்படுத்தி நின்றன. அவர் இஸ்ரேலிய வரலாற்றிலேயே மிகவும் வலதுசாரி ஒரு புதிய அரசாங்கம் ஒன்றை, தீவிர தேசியவாத, மதவாத கட்சிகளுடைய பங்காண்மையில் அமைத்தார்.

தன்னுடைய "பாதுகாப்புச் சுவரை" தொடர்ந்து நிறைவேற்றி ஷரோன் அழுத்தம் கொடுத்தார்---அது சர்வதேச நீதிமன்றத்தால் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டிருந்தது-- கிழக்கு ஜெருசேலம் உட்பட மேற்குக் கரையில் பாதிப் பகுதியை இஸ்ரேலுடன் இணைத்தமை; மற்றும் பாலஸ்தீனியர்கள் இழிவுபடுத்தப்பட்ட முறையில் ஏழ்மையான சேரிக்குள் அடைத்துவைக்கப்பட்டனர்.

இரு-அரசு தீர்வு என்ற ஒருவகை நிலைக்கு ஷரோன் இணங்குமாறு நிர்பந்திக்கப்பட்ட அளவில், இஸ்ரேல் ஒருதலைப்பட்சமாக தன்னுடைய எல்லைகளை நிர்ணயித்தது மற்றும் பாலஸ்தீனிய துண்டு அரசை முற்றிலும் கீழ்ப்படிந்த மற்றும் பணிந்த நிலையில் ஒப்படைத்தது. இந்த முடிவிற்கு வருவதற்கு அரஃபாத் சட்டத்தில் கணக்கிடப்படாத மனிதர் என்ற நிலைக்கு அறிவிக்கப்பட்டார்; ஷரோனைப்போலவே அமெரிக்காவில் உள்ள புஷ் நிர்வாகமும் இஸ்ரேல் "சமாதனத்திற்கான பங்குதாரர்" ஒருவரையும் கொண்டிருக்கவில்லை என்று அறிவித்தது.

இஸ்ரேலுக்கும் வாஷிங்டனுக்கும் ஏற்கும் தன்மையுடைய, ஒரு பாலஸ்தீனிய தலைமையுடன் மற்றும் நவம்பர் 2004ல் அரஃபாத்தின் மரணத்திற்கு பின்னர் மகம்மூட் அப்பாஸ் பதவிக்கு வருதலில் உறுதிப்படுத்தப்பட்டவாறு, துப்பாக்கி முனையில்தான் வருங்கால பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என்றாகிவிட்டது.

லெபனானில் ஷரோன் பலசந்தர்ப்பங்களிலும், ஆத்திரமூட்டல்களையும், குண்டுவீச்சுக்களையும் அதிகரித்த வகையில், ஒரு முழு அளவு இராணுவத் தலையீட்டிற்கான சாக்குப்போக்கை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருந்தார். தெற்கு லெபனானில் ஹெஜ்பொல்லா போராளிகளுக்கு ஆயிரக்கணக்கில் நிலத்தில் இருந்து வான் வழியே தாக்கக் கூடிய ஏவுகணைகளை கொடுத்ததாக சிரியா மீது அவர் குற்றம் சாட்டினார்; அவை வடக்கு இஸ்ரேலிய நகரங்கள், மாநகரங்களை அழிக்கும் தன்மை உடையவை என்றும், இஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்கவேண்டும் என்றும் சிரியாவை கோரினார். ஈரானில் உள்ள அணுவாயுத வசதிகளை விமானத் தாக்குதல் மூலம் அழித்துவிடப்போவதாகவும் அச்சுறுத்தினார். இந்த தூண்டுதல்கள் அனைத்தும் இப்பிராந்தியத்தில் இஸ்ரேலிய விரோதிகள் உட்பட அமெரிக்காவின் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பதை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தைக் கொண்டிருந்தன; ஆனால் இதுவரை வாஷிங்டன் இன்னும் கூடுதலான நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது.

என்றாலும் தன்னுடைய விரிவாக்கக் கொள்கைக்கு அமெரிக்க ஆதரவைப் பெறுவதில் ஷரோன் பெரிதும் வெற்றியைத்தான் அடைந்தார். ஒரு சிறிய-பாலஸ்தீனிய அரசு தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்கான அழைப்பு விடுத்திருந்தபோதிலும், உடனடியாக பாலஸ்தீனியர்கள் இன்டிபதாவை இஸ்ரேலிய பாதுகாப்பு நலன்களைக் கருதி உடனடியாக நிறுத்தவிட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் ஜனாதிபதி புஷ்ஷின் "சாலை வரைபடம்" இருந்ததே அதன் முக்கியத்துவம் ஆகும். ஒரு ஆத்திரமூட்டல் தாக்குதலுக்கு அடுத்து இன்னொரு தாக்குதல் என்று பெருக்குவதன் மூலம் எவ்விதமான பேச்சுவார்த்தைகளின் வாய்ப்பு வளங்களை தண்டனை அளிக்கப்படுவதற்கும் அது நிறைவேற்றப்படுவதற்கும் இடையேயான சொற்ப காலத்தை ஷரோன் உருவாக்கினார்.

இருக்கும் குடியிருப்புக்களை விரிவுபடுத்துவதற்கும், கிழக்கு ஜெருசலேத்தை இணைப்பதற்கும் அமெரிக்காவின் உட்குறிப்பு வகையிலான ஒப்புதலைப் பெறுவதிலும் ஷரோன் வெற்றி கண்டார். அகண்ட இஸ்ரேல் என்ற தன்னுடைய இலக்கை ஷரோன் வளர்த்துவிட்டார்; அவர் விரும்பியவகையில் அது பெரிதாக இல்லையென்றாலும், 1967க்கு முந்தைய இஸ்ரேலின் எல்லைகளைவிட அது அதிகமாகத்தான் இருந்தது. ஷரோன் மற்றும் அவருடைய ஆலோசகர்களை பொறுத்தவரையில் முக்கியமான விஷயம், கணிசமான பாலஸ்தீனிய மக்களுடன் உள்ள பகுதிகளை அது உள்ளடக்காததால், இத்தகைய எல்லைகளுடன் இஸ்ரேல் இராணுவ ரீதியாக பாதுகாப்புடையது மற்றும் கூடுதலான வகையில் அரசியல்ரீதியாக, கலாச்சாரரீதியாக ஒரே இயல்புடையதாகும்.

அவருடைய இராணுவ விரிவாக்க கொள்கையும் இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் இழப்பை கொடுத்துத்தான் வெளிவந்தது. முன்னாள் சர்வதேச நாணய நிதிய அலுவலர் ஸ்டான்லி பிஷ்ஷரை, இஸ்ரேலின் மத்திய வங்கித் தலைவராக ஷரோன் நியமித்தார்; தன்னுடைய நெடுநாள் விரோதி நெதன்யாகுவை நிதி மந்திரியாகவும் நியமித்தார். இம்மூவர் ஏராளமான சந்தைச் சீர்திருத்தங்களை -தனியார்மயமாக்குதல், சமூகநலச் செலவினங்கள் வெட்டுதல், செல்வந்தர்களுக்கு வரிக்குறைப்பு அதிருஷ்டம் ஆகியவற்றை கொண்டு வந்தனர், இவை இஸ்ரேலிய தொழிலாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் இன்னல்களையும், வேலையின்மையையும், வறுமையையும் கொண்டுவந்தன.

வாஷிங்டனிடமிருந்து தொடர்ந்து ஆதரவு பெறுவதற்கு விலையாக, ஷரோன் பாலஸ்தீனியர்களுக்கு சிறு சலுகைகள் கொடுத்தால் போதும் என்று இருந்தார். தீவிர தேசியவாதிகள், மத சக்திகளுடைய எதிர்ப்பிற்கு இடையேயும், இதுதான் ஒருதலைப்பட்சமாக காசாவில் இருந்து பின்வாங்கியதற்கு பின்னணி ஆகும். இது சர்வதேச செய்தி ஊடகத்தை "பெய்ரூட் படுகொலையாளரை" "சமாதானவாதி" என்று மாற்றி அழைக்க உதவியது.

பெரும்பாலான அரசியல் வர்ணனையாளர்கள், ஏதோ ஷரோன் ஒருவிதமான டமாஸ்கஸ்வாசியின் மாற்றத்தைக் கண்டுவிட்டார், தன்னுடைய வழிவகைகளின் பிழையை கண்டுவிட்டார், பாலஸ்தீனியர்களுடன் இணக்கமாக இருக்கத் தயாராகிவிட்டார் என்ற குறிப்பைக் காட்டுகிறது என்று கூறினர். அது அரசியல் உண்மை பற்றிய படுமோசமான திரித்தலாகும்.

காசாவிலிருந்து 8,000 குடியேறியவர்களை தந்திரமுறையில் திரும்பப்பெற்றதற்கும் சமாதான உடன்பாட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஷரோனே இஸ்ரேலில் தன்னுடைய ஆதரவாளர்களிடம் வெளிப்படையாகக் கூறினார்; இந்தச் செயல் கிழக்கு ஜெருசேலம் மற்றும் மேற்குக் கரை ஆகியவற்றில் உள்ள பாலஸ்தீனிய நிலப்பகுதியை நிரந்தரமாக இணைப்பதற்கு அமெரிக்க ஆதரவை நாடுவதற்கான இலக்கைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். காசா இல்லாத விரிவாக்கப்பட்ட இஸ்ரேல் என்பது இன்னும் கூடுதலான வகையில் சாதகமானதாகும்; ஏனெனில் 1.4 மில்லியன் பாலஸ்தீனிய மக்களை ஒதுக்கிவிட்டால், இன்னும் 20 ஆண்டுகளில் அது இஸ்ரேலிய யூதர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகப் போய்விடும் என்பது ஷரோனின் கணக்கு.

தொழிற்கட்சியின் தலைவரும், நோபல் சமாதானத்திற்கான பரிசை வாங்கிய ஷிமோன் பெரசை தன்னுடைய கூட்டணியில் இணைத்துக் கொண்டவகையிலும் காசாவில் இருந்து குடியேறியவர்களை திரும்பப்பெற்றுக் கொண்டதும், இஸ்ரேலியர்கள் கொடுத்த பெரும் சலுகை, பாலஸ்தீனியர்களுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் உடன்பாடு காண்பதற்கு ஒரு பெரிய முயற்சி என்ற புஷ் நிர்வாகத்தினால் ஆதரவு காட்டப்படும் கட்டுக்கதையை ஷரோன் முன்னிலைப்படுத்தக்கூடியதாக ஆக்கியது.

இஸ்ரேல் தன்னுடைய இராணுவத் தளங்களையும், குடியேறியவர்களையும் காசாவில் இருந்து திருப்பப் பெற்றுக் கொண்டாலும், காசா உண்மையான இறைமை வாய்ந்த நிலைப்பகுதியாக செயல்படும் வாய்ப்பு இல்லை. காசாவில் நிலம் சார்ந்த நீர்நிலைகள், ஆகாய உரிமை, குடிநீர் வழங்குதல் ஆகியவற்றைக் கொடுக்காமல், காசாவிற்கும் மேற்குக் கரைக்கும் பாதுகாப்பாக செல்லும் உரிமையை சர்வதேச சட்டத்தின்படி கொடுக்காத வகையில், இஸ்ரேல் ஆக்கிரமிப்பு சக்தியாகத்தான் அங்கு உள்ளது.

இப்படி வெளியே வந்தாலும், இஸ்ரேல் இராணுவக் கட்டுப்பாட்டைக் கொண்டு எந்த நேரமும் மீண்டும் முழு அதிகாரத்தை காட்டலாம் என்பது அண்மையில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சுக்கள், இலக்கு வைக்கப்பட்ட கொலைகள், இடைப்பகுதிகள் தோற்றுவிக்கப்பட்டிருத்தல், காசாப் பகுதியின் மேலே ஒலியின் முழக்கத்தை காட்டியது ஆகியவற்றின் மூலம் வெளிப்பட்டுள்ளன. உண்மையில் யூதக் குடியேற்றக்காரர்களை அகற்றியதானது பாலஸ்தீனியர்களை அச்சுறுத்தலையும் நசுக்குதலையும் எளிதானதாகவும், குறைந்த செலவு உடையதாகவும் ஆக்கியது.

ஆயினும்கூட, காசாவில் இருந்து வெளியேறியது நீண்ட காலமாக நடந்து வரும் போருக்கு முற்றுப் புள்ளி வைக்க விரும்பியதோடு குடியேற்றங்களுக்கான செலவு பற்றியும் மனவருத்தத்தைக் கொண்டிருந்த பெரும்பாலான இஸ்ரேலியர்களிடையே ஆதரவைப் பெற்றது. பலருக்கும் ஷரோன் ஒருதலைப்பட்சமாக அங்கிருந்து வெளியேறியது பல ஆண்டுகளாக நிலவியிருந்த தேக்க நிலையில் இருந்து ஒரு முன்னேற்றப்பாதையைக் காட்டியதாகத்தான் தோன்றியது.

ஆனால் தீவிர வலது, லிக்குட் கட்சியின் அரை-பாசிசப்பிரிவு, சிறிய அளவிலான மதவாத மற்றும் தேசியவாதக் கட்சிகள் ஆகியவற்றிற்கு (அவரே அவற்றின் வளர்ச்சிக்கு உதவியிருந்தும்கூட) ஷரோன் இந்த அளவு செய்தது கூட மன்னிக்கமுடியாத குற்றமாக கருதப்பட்டது. ஷரோனுடன் தன்னுடைய அதிகாரப் போராட்டத்தை வைத்திருந்தபோது, நெத்தன்யாகு இந்த தட்டினர்களை பயன்படுத்தி, தன்னுடைய சிதைந்த கூட்டணியை ஷரோன் கட்டுப்படுத்த முடியாமல் செய்திருந்தார். தொழிற்கட்சியின் தயவில்தான் அவர் பதவியில் இருக்க முடிந்தது, டிசம்பர் 2004 ல் அவருடைய ஸ்திரமற்ற கூட்டணியில் அது சேர்ந்தது.

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இராணுவப் போரை நடத்தும்பொருட்டு உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீது பொருளாதாரப் போரை நடத்திக் கொண்டிருந்த அரசாங்கத்தை தூக்கிநிறுத்துவதற்கு தொழிற்கட்சி நிர்பந்திக்கப்பட்டதால், இயல்பில் இக்கூட்டணியும் செயல்பட முடியாமல் போயிற்று. இதனால் தொழிற்கட்சியின் இடது கருத்தைப் பேசும் அமீர் பெரெட்ஸ் அதன் தலைமையை பெற்று, கடந்த நவம்பரில் இக்கூட்டணியில் இருந்து தனது மந்திரிகளை விலக்கிக் கொண்ட பொழுது, ஷரோன் லிக்குட்டை உடைத்து தன்னுடைய கட்சியான கதீமாவை அமைக்க முடிவு செய்தார்.

தன்னுடன் முக்கியமான அரசாங்கப் புள்ளிகளையும் ஷரோன் அழைத்துக் கொண்டார்; இது அடிப்படையில் புது உயிர் பெற்ற லிக்குட் போலாயிற்று; ஆனால் குடியேற்ற மற்றும் மதக் கட்சிகளுக்கு கொத்தடிமையாக இருக்கவில்லை. தன்னுடைய புதிய கட்சி புதிய கூட்டணி ஏற்பாட்டை தொழிற்கட்சியுடன் பாலஸ்தீனியர்களுடன் ஒருதலைப்பட்சமாக சுமத்தப்பட்டிருந்த உடன்பாடு என்ற பொய் உறுதிமொழி மூலம் கொள்ள முடியும் என்று ஷரோன் நம்பினார். இது இப்பொழுது மார்ச் 28 ல் அறிவிக்கப்பட்டுள்ள முன்கூட்டிய தேர்தலை தவிர்க்க முடியாததாக்கி விட்டது.

அதிகாரத்திற்கு ஷரோன் எழுவதற்கான காரணம் என்ன?

ஊழலில் தோய்ந்து, வெளிப்படையாக வாரிசு அற்ற ஒரு எழுபது வயதிற்கும் மேற்பட்ட போர்க்குற்றவாளியால் இஸ்ரேல் ஆளப்பட்டு வருவதென்பது, எந்த அளவிற்கு சியோனிச நாடு தவிர்க்கமுடியாத நோய்த்தன்மையை கொண்டுள்ளது என்பதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. சமாதானத்தை விட்டுச் செல்வதற்கு பதிலாக, இவருடைய மரபு அரசியல் கொந்தளிப்பை விட்டுச்செல்கிறது, இதில் இருந்து உள்நாட்டுப் போர் தவிர்க்கப்பட முடியாதது.

சர்வதேச செய்தி ஊடகக் கருத்துக்களின்படி, ஷரோன் பெரும் கவர்ச்சி வாய்ந்த நபர் -பேராற்றல் கொண்ட அரசியல் வாதி-- இருப்பது நீண்ட காலமாக உள்ள இஸ்ரேலிய-பாலஸ்தீனிய பூசலுக்கு அமைதியான தீர்வு காண்பதில் முக்கியம் வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

ஷரோனுடைய கொள்கைகளும் வழிவகைகளும் ஏகாதிபத்திய சக்திகள், அவற்றின் அடிமையாய் கருத்துக் கூறும் எழுதாளர்களுக்கும் "சமாதான வகை" என்று தோன்றினால், அத்தகைய பார்வையில் பெரும் உட்குறிப்புக்கள் உள்ளன.

அரசியல் தலைவர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது, வேண்டுமென்றே ஆட்சி மாற்றங்களை கொண்டுவருதல், பாதுகாப்பின் பெயரில் நிலப்பறிப்புக்களில் ஈடுபட்டது ஆகியவை வெறுமே வாஷிங்டனுடைய ஒப்புதலை மட்டும் பெறவில்லை. மாறாக அவை அனைத்துமே அமெரிக்காவின் மத்திய கிழக்கு, மற்ற இடங்களில் உள்ள சொந்த வெளிநாட்டுக் கொள்கையோடு இணையாக இருப்பவையாகும்.

ஈராக் நிருபணம் செய்துள்ளதுபோல், ஒரு புதிய இராணுவவாத சகாப்தம், காலனித்துவ தீரச்செயல்கள், வெளிநாடுகளில் அடக்கு முறை, உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் ஆரம்பமாகிவிட்டன. அமெரிக்காவும் மற்ற ஏகாதிபத்திய வல்லரசுகளும் இத்தகைய இராணுவவாதம், காலனித்துவ கொள்கைக்கு திரும்பியிருப்பது --அதிலும் ஆளும் வட்டங்களே குற்றம் சார்ந்த செயல்களை தயக்கமின்றிச்செய்வது-- என்பதுதான் ஷரோனை ஒரு பெரிய அரசியல்வாதியாக காட்டுவதற்கு செய்தி ஊடகம் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு காரணமாக உள்ளது.

மத்திய கிழக்கில் காவற்படை அரண் அரசாக செயல்படும் ஆட்சிக்கு தலைவரான ஷரோன், அமெரிக்காவின் சார்பாக தத்துப் புதல்வர் போலவும், பகடையாகவும், தூண்டிவிடுபவராகவும் செயல்பட்டு எந்த வார்ப்பில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் "சமாதான மனிதாக" உள்ளாரோ, அதே வார்ப்பில் உண்மையாக சமாதான மனிதனாக உள்ளார்.

ஆனால் ஏரியல் ஷரோனுக்கு கெளரவப் பூச்சு கொடுப்பதற்கு உலகச் செய்தி ஊடகத்திற்கு இரண்டாவது காரணியும் உள்ளது. முன்னாள் "சமாதானம்" மற்றும் "இரு நாடுகள் தீர்வு" இவை வேண்டும் என்று கூறியவர்களில், ஷிமோன் பெரஸ் மற்றும் யோசி பேய்ளின் உட்பட, ஓஸ்லோ ஒப்பந்தத்தை வடிவமைத்தவர்கள், இத்தகைய குணச் சித்தரிப்பை மோசடியானது என்று கண்டிக்கவில்லை.

ஷரோன் அதிகார ஏற்றம் பெற்றதும், மக்கள் ஆதரவைக் கொண்டதும் --அவருடைய வரலாறு நன்கு அறியப்பட்டிருந்தபோதிலும்-- இரண்டு ஒன்றுக்கொன்று தொடர்புடைய வழிவகைகளால் எளிதாயிற்று. முதலாவது இதே இஸ்ரேலிய தொழிற்கட்சி இடதுகளின் சிந்தனைத் திவால்தன்மை; அது சியோனிச, முதலாளித்துவ வடிவமைப்பை அவர்கள் ஏற்றதில் வேர் கொண்டுள்ளது; இதனால் அவர்கள் இன்னும் கூடுதலான வகையில் ஷரோனுடைய தலைமையில் வெளிவந்த சியோனிச ஆக்கிரோஷத்தை அறைகூவலுக்கு உட்படுத்த முடியாமற் போயினர். சாராம்சத்தில், இருவகை சியோனிச போக்குகளுமே மத அடிப்படையை கொண்ட ஒரு நாட்டில் பாலஸ்தீனியர்கள் பெரும்பான்மை வந்துவிடலாம் என்பது, நாட்டின் இருப்புக்கே பெரும் அச்சுறுத்தலைக் கொண்டது என்பதைத்தான் அங்கீகரிக்கின்றன.

சியோனிசத்தின் அரசியல் வளர்ப்பு முறையின்கீழ், அனைத்திற்கும் மேலாக இன அழிப்பு படுகொலை அனுபவத்தின் பயங்கரம் உட்பட நூற்றாண்டுகளாக யூதர்கள் அடக்குமுறைக்கு உட்பட்டிருந்த தன்மை மீண்டும் வெளிக் கொண்டுவரப்பட்டு, மிகப் பிற்போக்குத்தனமாக விளக்கத்திற்கு உட்பட்டிருப்பது இரண்டாவது காரணியாகும். "இனி யூதர்கள் பாதிப்பிற்குட்படமாட்டார்கள்" என்ற போர் முற்றுகை உளப்பாங்கை சியோனிசம் உள்ளத்தில் பதிய வைக்க முயன்றுள்ளது. ''புல்டோசர் போல்'' இருந்த ஷரோன் இந்த உணர்வுகளை பயன்படுத்தித் தன்னை வலுவான மனிதனாகவும், அவரது இரக்கமற்ற வழிவகைகள் இஸ்ரேலை சுற்றியுள்ள கடல்போன்ற விரோதிகள் அனைவரையும் சமாளிப்பதற்கு அவசியமானவை என்றும் காட்டிக் கொண்டார்.

யூத மக்களின் சில பிரிவுகள், மிகப் பெரும் முற்போக்கு இயக்கங்களுடன் நீண்ட காலம் தொடர்புடையவர்கள், வரலாற்றின் பெரும் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் கூட இத்தகைய தங்களை துன்புறுத்தியவர்களின் கண்ணோட்டத்தைத் தாங்களே ஏற்றுக் கொண்டது, இராணுவ கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டது, பாலஸ்தீனிய மக்களை சேரி நிலைக்கும் வறுமைக்கும் தள்ளியதை ஏற்றது, வரலாற்றின் சோகம் ததும்பிய விந்தையான கூற்றாகும். ஆனால் இந்தப் பிற்போக்கான பார்வை அனைவராலும் ஏற்கப்படவும் இல்லை. மீண்டும் மீண்டும், இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் இந்தக் கொடூரமான பூசல்களில் இருந்து வெளிவர ஒரு வழியை நாடுகிறது, பாலஸ்தீனியர்களுடன் சமாதானமாக இருக்க ஒரு வழியைத் தேடுகிறது.

இஸ்ரேலிய தொழிலாள வர்க்கத்தின் அரசியல் வளர்ச்சியில் பிரச்சினைகள் இருந்த போதிலும்கூட, ஆளும் மேற்தட்டின் செயற்பட்டியலுக்கு பரந்த வகையில் எதிர்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்பிற்கு வெளிப்பாடு கொடுப்பதற்கு அரசியல் கருவியோ, வேலைத்திட்டமோ இல்லை. சியோனிசத்தின் தேசியவாத மற்றும் வகுப்புவாத செயற்திட்டத்திலிருந்து முறித்துக்கொள்ளமால் இந்தப் பெரும் தேக்கத்தில் இருந்து வழியைக்கண்டுப்பிடிப்பது சாத்தியமற்றது. எனவேதான் முந்தைய சகாப்தத்தில் யூதத் தொழிலாளர்களும் அறிவுஜீவிகளும் முக்கிய பங்கை வகித்திருக்கின்ற சோசலிச, சர்வதேச கலாச்சாரத்தை புதுப்பிப்பது முற்றிலும் இன்றியமையாத விஷயமாக உள்ளது. அதுதான் ஏரியல் ஷரோனுடைய கசப்பான அரசியல் பூர்வீக சொத்தை கடப்பதற்கு ஒரே வழியாகும்.

முற்றும்


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved