World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Greens vs. Lefts

Germany: a revealing debate on Sudan military deployment

இடதுகளை எதிர்த்து பசுமைகள்

ஜேர்மனி: சூடானுக்கு இராணுவம் அனுப்பப்பட்டது மீதான ஒரு அம்பலப்படுத்தும் விவாதம்

By Marius Heuser
31 December 2005

Back to screen version

ஜேர்மன் இராணுவம் (Bundeswehr) சூடானுக்கு அனுப்பப்பட்டது தொடர்பாக ஜேர்மன் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 16-ந் தேதி நடைபெற்ற விவாதம் நாடாளுமன்ற எதிர்கட்சி என்றழைக்கப்படுவதன் பங்கை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்திருக்கிறது. கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU)/ கிறிஸ்தவ சமூக ஒன்றியம் (CSU) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆளுகின்ற கூட்டணி அனைத்து பிரதிநிதிகளிலும் 73 சதவீதம் பேரைக் கொண்டிருக்கும் அதேவேளை, மூன்று எதிர்க்கட்சிகளான----சுதந்திர ஜனநாயகக்கட்சி (FDP), இடதுசாரிக்கட்சி மற்றும் பசுமைகள்---- ஒரு சிறந்த, ஒரு போலியான- ஜனநாயக மூடிமறைப்பை வழங்கின.

ஆதரவாக 487 வாக்குகளுடனும் எதிராக 39 வாக்குகளுடனும் சூடானில் இராணுவ நடவடிக்கைகளை நீடிப்பதற்கு நாடாளுமன்றம் உடன்பட்டது. ஆபிரிக்க ஒன்றியத்தின் ''அமிஸ்'' பணிக்கு ஆயுத தளவாட ஆதரவு வழங்குவதற்கு 200 ஆயுதந்தாங்கிய போர்வீரர்கள் வரை உள்ளனர். இராணுவத்தின் பிரதான பணி ஆயுதத்தாங்கிய படைகளையும் தளவாடங்களையும் ஆபிரிக்க ஒன்றியத்திலிருந்து சூடானுக்கு விமான போக்குவரத்து மூலம் கொண்டுசெல்வதாகும்.

ஜேர்மனிக்கு சூடான் மகத்தான புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். அந்த நாடு மத்திய கிழக்கிற்கும் வடக்கு ஆபிரிக்காவிற்கும் இடையில் ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் உள்ளதாகும் மற்றும் தற்போது உற்பத்தியை அதிகரிக்காமல், ஒரு நாளைக்கு சுமார் 250,000 பீப்பாய்கள் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கிறது.

படைகளின் பணி நீடிப்பிற்கு எதிராக இடதுசாரிக் கட்சி மட்டுமே வாக்களித்தது மற்றும் இது ஏனென்றால் இந்தக் கட்சியின் நடப்புத்திட்டம் ஜேர்மனியின் ஆயுதப்படைகள் எந்த வடிவத்திலும் வெளிநாடுகளில் தலையிடுவதை இன்னும் புறக்கணிப்பதாக அமைந்திருக்கிறது.

பசுமைக் கட்சியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற விவாதங்களை எதிரொலிக்கின்ற வகையில் கட்சி உறுப்பினர்களால் இந்தக்கொள்கை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. வாராந்திர செய்தி சஞ்சிகையான டெர் ஸ்பிகேல் தகவலின்படி ஆயுதப்படைகள் வெளிநாடுகளில் தலையிடுவதை பரீட்சிக்கும் வாக்களிப்பு நாடாளுமன்ற கன்னைகளில் (பிரிவுகளில்) நடைபெற்றதில் இடதுகட்சியின் அனைத்து பிரதிநிதிகளிலும் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதியினர் 54 உறுப்பினர்களில் 39 பேர் மட்டுமே வெளிநாட்டு தலையீடுகளை புறக்கணித்தனர், மற்றவர்கள் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

மத்திய அரசாங்கத்தில் பங்கெடுத்துக்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று மோப்பம் பிடித்ததும் உடனடியாக தனது எதிர்ப்பை இடதுகட்சி முழுமையாக கைவிட்டுவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 1998-ல் யூகோஸ்லாவியாவிற்கு எதிராக நேட்டோ யுத்தத்தை ஆதரிப்பதற்கு ஒப்புக்கொண்டதால் SPD-யுடன் ஒரு மத்திய கூட்டணி அரசாங்கத்தில் அவர்களது இடத்தை பசுமைகள் பாதுகாத்துக்கொண்டன. CDU தலைவர் அங்கேலா மேர்க்கல் தலைமையில் நடைபெற்று வருகின்ற தற்பொழுதைய கூட்டணி, பதவி காலம் முடியும் முன்னரே பிளவுபட்டுவிடுமானால் இடதுசாரி கட்சி தலைவர்களான கிரிகோர் கைசியும் ஓஸ்கர் லாபொன்டைனும் இருவரும் SPD பசுமைக்கட்சியுடன் கூட்டணி சேர விருப்பம் கொண்டிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்த மறைக்கமுடியாத இரகசியமாகும். ''தேர்தல்களில் போட்டியிடுகின்றவர்கள்'' அரசாங்கத்திலும் மற்றும் எதிர்கட்சியாகவும் இரண்டுவகையான பொறுப்புகளுக்கு தயாராக இருந்தாக வேண்டும்'' என்று கைசி விளக்கினார். அந்தக் கட்சியின் தேர்தல் பிரச்சார நிர்வாகியான போடோ ரமேலோ சற்று வெளிப்படையாக ''நாம் அரசாங்கத்தில்---மற்றும் மத்திய மட்டத்திலும் கூட பங்கெடுத்துக்கொள்வதற்கு தயாராக இருக்கவேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் பேசிய பின்னர் ஒருவரையொருவர் பாராட்டிய பின்னர் அரசாங்க பிரதிநிதிகள் தங்களது இருக்கைகளில் அமர்ந்த பின்னர் இடது கட்சியை சேர்ந்த நோர்மன் பீச் இராணுவம் இருப்பதை நீட்டிப்பதற்கு எதிராக தமது குழுவினுடைய (fraction) பிரச்சனையை எடுத்துரைத்தார் இருந்தபோதிலும் அது உறுப்பினர்களுக்கு எளிதான ஒன்றல்ல இந்த முடிவு என்று குறிப்பிட்டார். இதில் குறிப்பிடத்தக்கது பசுமைக் கட்சிக்காரர்கள் அரசாங்கத்தின் நிலையை பாதுகாத்து நின்றனர் மற்றும் இராணுவத்தை அடிப்படையாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையை மிகத்தீவிரமாக வாதிட்டு நிற்பவர்களாக காட்டிக்கொண்டனர்.

ஜனநாயக சோசலிசத்திற்கான கட்சி (PDS தற்போது இடதுசாரிக்கட்சியன் ஓர் அங்கம்) ஓராண்டிற்கு முன்னர் சூடானுக்கு துருப்புகளை அனுப்புவதை புறக்கணித்து வந்தது ஏனென்றால் அப்போது கட்சி கருதியது பொருளாதார மற்றும் சமூக காரணங்களும் அவற்றின் பயங்கரமான விளைவுகளையும் கட்டுப்படுத்தி தீர்த்து வைக்காத வரை இராணுவ நடவடிக்கை பயனற்றதாக இருக்கும் என்று பீச் குறிப்பிட்டார். இராணுவ நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்றும் ஐரோப்பிய மற்றும் AU அல்ல, நேட்டோ இறுதியில் அந்த நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்க வேண்டி வரலாம் என்று கட்சி பயந்ததாகவும்'' அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் SPD நாடாளுமன்ற குழுவின் தற்போதைய தலைவரான பீட்டர் ஸ்டிரக் இராணுவம் ஆபிரிக்காவிற்கு விரைவில் அனுப்பப்படவேண்டும் என்று கூறிய கருத்துகளை பீச் விமர்சித்தார். அவர் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் பீரைட்பேர்ட் பிப்ளுக்கர் கூறிய கருத்தையும் மேற்கோள் காட்டினார். ''ஏனென்றால் ஐரோப்பா.....இதர பிராந்தியங்களிலிருந்தும் பெருமளவிற்கு எரிசக்தியை இறக்குமதி செய்யவேண்டியிருப்பதால் ஆபிரிக்க எண்ணெய் வளத்தின் மீது கவனம் செலுத்தவேண்டும் அது நமது எண்ணெய் வழங்கலை பன்முகப்படுத்துவதற்கு ஒரு உள்ளார்ந்த வழியாக அமையும். நம்மோடு ஒப்புநோக்கும்போது அமெரிக்கா ஏற்கனவே ஆபிரிக்காவின் எண்ணெய்யின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளது. 2015 வாக்கில் அவர்களது முக்கியமான எண்ணெய் இறக்குமதிகளில் ஒரு கால்பங்கை மேற்கு ஆபிரிக்கா கணக்கில் கொள்ளும்.

இராணுவ முறைக்கு பதிலாக சிவிலியன் நிர்வாக வழிவகை முழுவதும் அவற்றின் கொள்கைகளையே ஜேர்மன் அரசாங்கம் தொடரவேண்டும் என்று பீச் கேட்டுக்கொண்டார்; ''வெளியுறவுத்துறை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அறிக்கையில் மோதல் தடுப்பு மற்றும் சமரசம் பற்றிய கவலைகள் காணப்படுகிறது. இராணுவ நடவடிக்கைகளை பயன்படுத்தாமல் சமாதானத்தை வளர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. இந்தக் கருவிகளை நாம் பயன்படுத்தியாகவேண்டும்.

அனைத்து இதர கட்சிகளிலிருந்து வியப்புரையினால் பீச்சின் உரையில் இடைவிடாமல் தடை ஏற்பட்டது. அனைவருக்கும் மேலாக பசுமைக் கட்சிக்காரர்கள் பீச்சின் உரையை சகித்துக்கொள்ள முடியாதது என்று கருதினர். அதன் முடிவில் பசுமைகளில் முன்னணி உறுப்பினரான ஹான்ஸ்- கிறிஸ்டியன் ஸ்ரோபேலே இறுதியாக ஒரு கேள்விக்கேட்டார். கட்சியின் இடதுசாரி உறுப்பினர்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் என்று தன்னத்தானே நீண்டகாலமாக வளர்த்துக்கொண்டவர் ஸ்ரோபேலே. ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனி இராணுவத்தின் பங்கேற்பை ஸ்ரோபேலே புறக்கணித்தாலும் அதற்குப் பின்னர் அந்த தலையீட்டிற்கு கட்சிக்கு உள்ளே எழும் எதிர்ப்பு தோல்வியடைவதை தவிர்ப்பதற்கு உறுதிசெய்துகொண்டார். அதற்குப் பின்னர் ஸ்ரோபேலே ஆப்கானிஸ்தான் மாசிடோனியா மற்றும் ஆபிரிக்கா உட்பட பல்வேறு வெளிநாடுகளில் ஜேர்மன் இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் தலையீடுகளுக்கு தமது ஆசியை வழங்கியுள்ளார்.

ஸ்ரோபேலே குறிப்பிட்டார்; "திரு பீச் உங்களது வாதங்கள் பலவற்றை நான் புரிந்து கொண்டேன் மற்றும் எண்ணெய் பற்றி நீங்கள் கூறியதையும் புரிந்து கொண்டேன்.'' என்றாலும் ஆபிரிக்க ஒன்றியமே உதவ வேண்டும் என்று அழைப்புவிடுக்கவில்லையா? அரசாங்கம் அந்த உதவியை மறுக்குமானால், ஆபிரிக்காவின் சுய நிர்ணய உரிமையை கீழறுப்பதாக ஆகிவிடும் என்று மேலும் கூறினார்.

மற்றொரு பசுமை நாடாளுமன்ற உறுப்பினரான உஸ்ச்சி எய்ட் தெளிவாக கருத்து தெரிவித்தார். பீச்சின் வாதங்கள் அவரை ''ஆழமாக திகைப்படையச் செய்தது''. தனது உரை முழுவதிலும் இடது கட்சிக்காரர்களை நோக்கி இசிவு நோயாளியைப்போல் எய்ட் கூக்குரலிட்டார். பீச்சின் விவாதங்கள் கொலைகாரர்களையும் கற்பழிப்பவர்களையும் பாதுகாப்பதாக உள்ளது என்று அவ்வம்மையார் குறிப்பிட்டார். ஒரு பக்கம் அரசாங்கமும் கிளர்ச்சிக்காரர்களும் நிற்கின்றனர் ''மற்றொரு பக்கம் மக்கள்; பெண்களும் ஆண்களும் குழந்தைகளும் இடம்பெயர்ந்தோரும் கொலை செய்யப்பட்டவர்களும் மற்றும் கற்பழிக்கப்பட்டவர்களும் நிற்கிறார்கள். அதற்குப்பின்னர் உங்களை நான் கேட்கவிரும்புவது: ஒரு இடதுசாரிக்கட்சியை சேர்ந்தவர்கள் என்ற முறையில் யார் பக்கம் நீங்கள் நிற்கிறீர்கள்? பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கும் இடதுசாரிகளின் பக்கமா? மற்றும் அந்த பாதிப்பை நடத்தியவர்கள் பக்கமா? பாதிப்பை நடத்தியவர்கள் பக்கம் நீங்கள் நின்றால் தலையிடவேண்டியதில்லை. அதை புறக்கணிப்பதன்மூலம் நீங்கள் குற்றம் செய்தவர்களாக ஆகிறீர்கள்'' என்று குறிப்பிட்டார்.

எய்ட் உரையை ஒன்றியக்கட்சிகள், SPD, FDP மற்றும் பசுமைக்கட்சியை சேர்ந்த பல உறுப்பினர்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு பாராட்டி வரவேற்பு அளித்தனர்.

பசுமைக் கட்சிக்காரர்கள் நீண்டகாலமாக ஜேர்மனியின் இராணுவவாதத்தை தீவிரமாக வாதிட்டு வருகின்றனர். அவர்கள் அரசாங்கத்திலிருந்த ஏழு ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதல் தடவையாக ஜேர்மன் துருப்புக்களை போர்க் களத்திற்கு அனுப்பினர். அந்த நேரத்தில் இராணுவ தலையீட்டிற்கு பரந்த பொதுமக்கள் எதிர்ப்பை சமாளிப்பதில் பசுமைகளின் வாதங்கள் ஒரு முக்கிய பங்கை வகித்தன. இன்றையதினம் ஒரு முழு நேர தொழில்சார்ந்த இராணுவ சூழ்நிலைக்கான அவர்களது கோரிக்கை பசுமைக்கட்சிக்காரர்கள் இந்த வெளியுறவுக்கொள்கை விவாதத்தில் வலதுசாரிப்பக்கம் குறிப்பிட்ட இடத்தில் வைக்கிறது.

பத்தாண்டுகளுக்கு முன்பு அவர்கள் உருவாக்கிய வாதங்கள் இப்போது எடுத்துரைக்கப்படுவது குறித்து பசுமை கட்சிக்காரர்கள் ஆவேசமாக எதிர்ப்பது குறிப்பிடத்தக்கதாகும். இடது கட்சிகளுக்கு எதிரான அவர்களின் வசைமாரிகள் மேலும் எடுத்துக்காட்டுவதுபோல், ஒவ்வொரு பிரச்சனைகளிலும் அவர்கள் ஒரு மத்தியதர வர்க்க கட்சியின் வலதுசாரிகளாக மாறுவதற்கு தங்களது ''மாற்றீட்டு'' கொள்கைகளுடன் முறித்துக் கொண்டு விட்டனர்.

இடதுசாரி கட்சி, SPD மற்றும் பசுமைக் கட்சிக்காரர்களோடு ஒரு கூட்டணி அமைத்துக்கொள்வதற்கு முயன்று வருகின்ற அதேவேளை, பிந்தையவர்கள் ஒன்றியக்கட்சியோடும் FDP யோடும் பங்குதாரராவதற்கு இறுதியாக தயாராகி வருகின்றனர். அவர்களது கடைசியாக நடைபெற்ற கட்சி மாநாட்டில் ஆட்சி செய்யும் எந்தக்கட்சியுடனும் எதிர்க்காலத்தில் கூட்டணி வைத்துக்கொள்வதை தள்ளிவிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தினர். இந்த அர்த்தத்தில் எய்ட் மற்றும் ஸ்ரோபேலேவின் அண்மைய நடத்தை ஆதரவு திரட்டலாக கட்டாயம் பார்க்கப்படவேண்டும்: தங்களது கடந்தகாலத்தை மறுத்து வருகிறார்கள் ஏனென்றால் எதிர்கால கூட்டணியின் பாதையில் அது நிற்கக்கூடும் என்பதால்தான் .

இந்த முயற்சியின் காரணமாக பசுமைக் கட்சிக்காரர்கள் ஒரு கணிசமான அளவிற்கு வெற்றியை பெற்றதாக கூறிக்கொள்ளமுடிகிறது. பழமைவாத CDU நாடாளுமன்ற உறுப்பினர் Anke Eymer தனது உரையை கீழ்கண்ட வார்த்தைகளில் தொடக்கினார்: ''உஸ்ச்சி எய்ட் கூறிய வார்த்தைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன், பாராட்டுக்கள்''!


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved