World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

For a socialist alternative in the 2006 US elections

2006 அமெரிக்கத் தேர்தல்களில் ஒரு சோசலிச மாற்றீட்டிற்காக

சோசலிச சமத்துவக் கட்சியின் அறிக்கை
12 January 2006

Back to screen version

2006 அமெரிக்க இடைத் தேர்தல்களில் கூட்டரசு, மற்றும் மாநில அவைகளுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்த உள்ளது. ஆளும் செல்வந்தத்தட்டு மற்றும் பெரு வர்த்தகத்தின் இரு கட்சிகளான ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் எதிரான வகையில் ஒரு பரந்த அரசியல் இயக்கத்தை கட்டமைப்பதற்காக சோசலிச சமத்துவக் கட்சி, எவ்வளவு சாத்தியமோ அத்தனை மாநிலங்களிலும் தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரமானது, புஷ் நிர்வாகத்தின் போர், ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் கொள்கைகளுக்கு அமெரிக்காவிலும் சர்வதேச ரீதியிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பிற்கு குரல் கொடுக்கும் மற்றும் தலைமையை வழங்கும்.

ஓர் ஆழமான அரசியல், பொருளாரதார, சமூக மற்றும் ஒழுக்கநெறி நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா உள்ளது. தன்னுடைய உலக ஏகாதிபத்திய நோக்க கொள்கைகள் தன் நாட்டுக் குடிமக்களிலேயே மில்லியன் கணக்கானவர்களுக்கு வெறுக்கத்தக்கதாக தோன்றிவிட்ட நாடாகத்தான் அமெரிக்கா உள்ளது.

புஷ் நிர்வாகம் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற பெயரில் கட்டவிழ்த்துள்ள போக்குகள் ஆரம்பித்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலான காலகட்டத்தில், அமெரிக்காவின் கொள்கைகள் இன்னும் கூடுதலான, வெளிப்படையான, அரசியலமைப்பிற்கு முரணான, சட்ட விரோதமான, குற்றம் சார்ந்த தன்மையையும் உடையனவாகத்தான் உள்ளன. தடையற்ற இராணுவவாதம் மற்றும் மனித உயிர், கெளரவம் ஆகியவற்றின்மீது காட்டப்படும் திமிர்த்தனமான இழிவு ஆகியவற்றிற்கு 9/11 சம்பவங்களானது ஒரு சாக்குப்போக்காக காரணம் காட்டப்படுகின்றன.

"வாழ்வு, சுதந்திரம், சந்தோஷத்தை தொடர்தல்" ஆகியவை "மாற்றப்பட முடியாத உரிமைகள்" என்று புரட்சிகர ஸ்தாபகர்கள் தோற்றுவித்த நாடு இப்பொழுது "பெரும் ஆணையான" ஆட்கொணர்தலை அகற்றுவதற்கு முயற்சி செய்யும் அரசியல் கும்பலின் சதிக்கூட்டத்தால் வழிநடத்தப்படுகிறது; இவர்கள் அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிராக சட்டவிரோத ஒற்றுக் கேட்கும் நடவடிக்கைகளில் மிகப்பெரிய அளவில் ஈடுபட்டுள்ளனர். "மனித குலத்தின் கருத்துக்களுக்கு கெளரவமான மதிப்பு" கொடுக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கப் புரட்சியின் தலைவர்கள் பிரகடனப்படுத்தி இருந்தனர். வெள்ளை மாளிகையை இப்பொழுது ஆக்கிரமித்துள்ளவரும் அவருடைய எடுபிடிகளும் சிறிதும் வெட்கமின்றி சர்வதேசச் சட்டங்களுக்கு தாங்கள் கொண்டுள்ள இகழ்வுணர்வை பறைசாற்றுவதுடன் சித்திரவதை செய்யும் பழக்கத்திற்கும் ஆதரவு கொடுத்துள்ளனர். "நம்முடைய இயல்பின் சிறந்த நற்குணங்களுக்கு" நாம் ஊக்கமளிக்க வேண்டும் என்று ஜனாதிபதியாக இருந்த லிங்கன் கூறியிருக்க, அதற்கு மாறாக புஷ் நிர்வாகம் மக்களின் மிகப் பிற்போக்கான பகுதிகளின் மட்டமான உள்ளுணர்வுகளுக்கு அழைப்புவிடுக்கின்றது.

இப்படிப்பட்ட பிற்போக்குத்தனத்திற்கான அழைப்பில் மதசார்பற்ற தன்மை, அமெரிக்க குடியரசின் அறிவொளி சார்ந்த அஸ்திவாரங்கள் ஆகியவற்றின் மீது இடைவிடாத் தாக்குதலும், மதவெறி, அமைதியின்மை வளர்க்கப்படுதலும் சேர்ந்துள்ளன. மரபணு ஆராய்ச்சி எதிர்ப்பு, சுற்றுச் சூழல் ஆய்வுகளின் படிப்பினைகளை நிராகரித்தல் உட்பட விஞ்ஞான சிந்தனை மற்றும் கலாச்சார வளர்ச்சி போன்ற கடந்த காலச் சாதனைகளின் மீது புஷ் நிர்வாகம் ஒழுங்குமுறையான தாக்குதலை கட்டவிழ்த்துள்ளதுடன், டார்வினிய பரிணாம தத்துவத்தின் மீது மத அடிப்படைவாத தாக்குதல்களை ஊக்குவிக்கிறது.

புஷ் நிர்வாகத்தின் ஈராக்கியப் போருக்கும் அதன் வலதுசாரி உள்நாட்டுக் கொள்கைகளுக்கும் அமெரிக்காவிற்குள்ளேயே மிகப் பாரிய அளவிலும் ஆழமான வகையிலும் எதிர்ப்புக்கள் உள்ளன. ஆயினும்கூட, இந்த எதிர்ப்பு உண்மையான, சுதந்திரமான அரசியல் வெளிப்பாட்டை காண்பதற்கு இரு கட்சி முறையின் அரசியல் கட்டமைப்புக்குள்ளே எந்த வழிவகையும் கிடையாது.

மிகத்தீவிர வலதுசாரி குடியரசுக்கட்சி நிர்வாகத்திற்கு தீவிர எதிர்க்கட்சியாக இல்லாது, ஜனநாயகக் கட்சி அதன் கோழைத்தனம் மிகுந்த கூட்டாளியாகத்தான் செயலாற்றி வருகிறது. இந்த இரு கட்சிகளும் இணங்கி நடக்கும் செயல்களோடு ஒப்பிடும்போது அதாவது, அவர்கள் இருவருமே அமெரிக்க பெருவணிக, பெருநிதிய ஆளும் தட்டுக்களின் உள்நாட்டு, வெளிநாட்டு நலன்களைக் கட்டிக் காப்பதில் ஒருமித்த உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளபோது, ஜனநாயகக் கட்சியினர் குடியரசுக் கட்சியினருடன் என்னென்ன வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை முக்கியத்துவமற்றதாகும்.

ஈராக்கில் நடக்கும் போரை நிறுத்துவதற்கான போராட்டம், அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தல், ஜனநாயக உரிமைகளைக் காத்திடல், வறுமையை அகற்றுதல், சமூக சமத்துவத்தை நிறுவுதல் ஆகியவற்றிற்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய பரந்த அரசியல் இயக்கம் கட்டமைக்கப்படுதல் தேவைப்படுகிறது.

ஒரு சர்வதேச வேலைத்திட்டத்திற்கான தேவை

உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் பொதுவான நலன்களை வெளிப்படுத்தும் மற்றும் அனைத்து வடிவிலான தேசிய, இனக்குழு, மத வெறி மற்றும் இனவெறி உணர்வுகளையும் எதிர்க்கும் வேலைத்திட்டத்தைக் கொண்டுள்ள ஒரே கட்சி சோசலிச சமத்துவக் கட்சி தான்.

அமெரிக்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சாராம்சத்தில் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை போன்றதாகும். போர், ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதல், சுரண்டல், வேலையின்மை, வறுமை மற்றும் இயற்கைச் சூழலை அழித்தல் ஆகியவை வெறும் அமெரிக்கப் பிரச்சினைகள் மட்டும் அல்ல. இவை உலகப் பிரச்சினைகள்; இவற்றிற்கு பூகோளரீதியான தீர்வுகள் காணப்பட வேண்டும்.

எமது காலத்தின் மேலோங்கி நிற்கும் பொருளாதார, சமூக உண்மை நிலை, சர்வதேச முதலாளித்துவ அமைப்பின் தோல்வியாகும். 5 பில்லியன் மக்களுக்கும் மேலாக வாழும் புவியில், பொருளாதார மற்றும் சமூக முடிவுகள் எடுக்கும் அனைத்து விதமான பண்புக்கூறுகளும் ஒரு சிறிய ஆளும் தட்டினாலான பெருவணிக நலன்கள், மற்றும் என்றும் அதிகமான தனிநபர் சொத்துக் குவிப்பு பற்றிய சலுகைகளுக்கு கீழ்ப்பட்டதாக வைக்கப்பட்டுள்ளன.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வியத்தகு முன்னேற்றங்கள் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைத் தரத்திலும் அதிசயிக்கத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்தவையாகும். மாறாக, உலகம் முழுவதும் உள்ள பரந்த உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை வாழ்க்கை நிலைமைகள் படுமோசமாகி வருகின்றன..

ஆசிய சுனாமிக்குக் காட்டிய அலட்சியத் தன்மை முதல் கத்திரினா பேரழிவிற்கு அமெரிக்க அரசாங்கம் காட்டிய திறமையற்ற எதிர்கொள்ளும் தன்மைவரை, இந்த அமைப்பின் இயலாத்தன்மை மக்களுடைய மிக அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்பதைத்தான் 2005ம் ஆண்டு இறுதியாக விளக்கிக் காட்டியது.

உலகப் பொருளாதார சகாப்தத்தில், பரந்த மக்கட் சமுதாயத்தின் பிரச்சினைகள் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில்தான் தீர்க்கப்பட முடியும். உலகின் வளங்கள் அறிவார்ந்த, திட்டமிட்ட மற்றும் மனிதாபிமான முறையில் அணிதிரட்டப்படுவது, நிலவும் முதலாளித்துவ அமைப்பின் அடிப்படையில் செல்வம் மற்றும் அதிகாரத்தைக் கொண்ட தேசிய ஆளும் செல்வந்தத்தட்டுக்களின் நலன்களுடன் ஒவ்வொரு கட்டத்திலும் மோதுகின்றது.

பூகோளமயமாக்கல் என்ற பேயைக் காட்டி, பெருவணிகமானது தொழிலாள வர்க்கத்தின் மீதான தனது தாக்குதலை நியாயப்படுத்துகின்றது. ஆனால் பொருளாதார வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளின் பூகோள ஒருங்கிணைப்பானது, அதுதாமே, ஆழ்ந்த சமுதாய இடர்ப்பாடுகளுக்கு உண்மைக் காரணமாக ஆகிவிடாது. உற்பத்திச் சக்திகள் உலகந்தழுவிய முறையில் விரிவாக்கம் பெறலும் ஒன்றிணைக்கப்படலும், வாழ்க்கைத் தரங்களை மிகப் பெரிய அளவில் முன்னேற்றுவிப்பதற்கான திறனை கொண்டுள்ளது. ஆனால் இந்த சக்தி வாய்ந்த பொருளாதார வழிவகைகள், தனியார் இலாப நலன்களுக்காக போட்டியிடும் தேசிய அரசுகளுடைய ஆளும் செல்வந்த தட்டுக்களின் நலன்களினால் தடைக்கு உட்படுகின்றன.

அமெரிக்காவில் உள்ள முதலாளிகள் தங்களுடைய தொழிலாளர்களிடம் அவர்கள் மிகப் பெரிய ஊதியக் குறைவை ஏற்க வேண்டும் அல்லது அவர்கள் வேலைகள் குறைவூதியப் பகுதிகளுக்கு சென்றுவிடும் என்று கூறும்போது, இது அமெரிக்கத் தொழிலாளர்கள் நாடுகடந்த நிறுவனங்களின் பொருளாதாரக் கொடுங்கோன்மைக்கு எதிராக சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்தில் சர்வதேச ரீதியாக தொழிலாளர்களுடன் அரசியல் ரீதியாக ஐக்கியப்படுவதற்கான தேவையை கோடிட்டுக் காட்டுகிறது.

பொருளாதார வாழ்வானது சமூகத் தேவைகள் மற்றும் பொது நலன்களின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதுதான் சோசலிசத்தின் பொருள் ஆகும். அதன் இலக்கு வறுமை மற்றும் அடக்குமுறை அகற்றப்படல், உலகின் மக்களுடைய வாழ்க்கைத் தரங்கள் சமூக சமத்துவத்தின் அடிப்படையில் உயர்த்தப்படல் ஆகும். இதன் பொருளானது சமூகத்தின் கொள்கைகள், முன்னுரிமைகள் ஆகியவற்றின் மீதும், செல்வம் உற்பத்தி செய்யப்படும் மற்றும் பங்கிடப்படும் நிகழ்ச்சிப்போக்கு மீதும் முழுமையான ஜனநாயகக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துதல் ஆகும்.

2006ம் ஆண்டின் பெரும் நெருக்கடிகள்

2006 தேர்தல்கள் மூன்று முக்கிய மற்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பிரச்சினைகளினால் மேலாதிக்கம் செய்யப்படுகின்றன: (1) ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் நடந்து கொண்டிருக்கும் போர்கள், மற்றும் புஷ் நிர்வாகம் இன்னும் புதிய கூடுதலான குருதிசிந்தும் வகையில் இராணுவ நடவடிக்கைகளுக்கு தயாரித்துக் கொண்டிருத்தல்; (2) அமெரிக்க மக்களுடைய ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்; மற்றும் (3) அரசாங்க ஆதரவில் நடக்கும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தின் மீதான தாக்குதல் மற்றும் அமெரிக்காவில் மகத்தான வகையில் பெருகி வரும் சமூக சமத்துவமின்மை.

இந்த முக்கிய பிரச்சினைகள் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி கொண்டுள்ள நிலைப்பாடு, பெருவணிக செல்வந்த தட்டுக்களின் கட்சிகள் கொண்டுள்ள நிலைப்பாட்டில் இருந்து ஐயத்திற்கு இடமின்றி, முற்றிலும் எதிரிடையானது ஆகும்.

* சோசலிச சமத்துவக் கட்சி, அனைத்து அமெரிக்கப் படைகளும் ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோருகிறது!

மார்ச் 2003ல் ஈராக்கின் மீதான படையெடுப்பு அப்பட்டமான பொய்களின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். ஈராக்கில் எத்தகைய பேரழிவு ஆயுதங்களும் இல்லை; சதாம் ஹுசைனின் ஆட்சி அமெரிக்காவின் மீது படையெடுப்பதற்கான தயாரிப்பில் அல் கொய்தாவுடன் எவ்விதத்திலும் ஒத்துழைக்கவில்லை.

இப்போரானது பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிடுவதற்காக ஒன்றும் தொடங்கப்படவில்லை; மாறாக ஈராக்கின் முக்கியமான எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா முழுவதும் அமெரிக்க அதிகாரத்தை முன்னிலைப்படுத்துவதற்கும்தான் தொடங்கப்பட்டது.

"பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படும் கட்டமைப்பிற்குள்தான் ஈராக்கிய போர் பற்றிய அதிகாரபூர்வ அரசியல் ஸ்தாபனத்தின் விவாதம் முற்றிலும் நடத்தப்படுகிறது. அமெரிக்க ஆளும் செல்வந்த தட்டுக்கள் உலக ஆதிக்கத்திற்காக கொண்டுள்ள விழைவுகளை நியாயப்படுத்தும் வகையில் புஷ் நிர்வாகம் மேற்கொண்டுள்ள இந்த அரசியல் ஏமாற்றுத்தனத்தை சோசலிச சமத்துவக் கட்சி முற்றிலும் நிராகரிக்கிறது. ஒரு மட்டத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பது, அது உலகம் முழுவதும் வறுமையையும் ஒடுக்குமுறையையும் உண்டு பண்ணிய மற்றும் பெருங் கோபத்தையும் வெறுப்பையும் உற்பத்தி செய்த அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கைகளின் விளைவாகத்தான்.

ஈராக்கில் இருந்தும் ஆப்கானிஸ்தானில் இருந்தும், உடனடியாகவும் நிபந்தனையற்ற முறையிலும் அனைத்து அமெரிக்கப் படைகளும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வர். ஈராக்கின்மீது சட்டவிரோத, காரணமற்ற வகையில் படையெடுப்பிற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்கும் நடுவர்மன்றத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று எமது பிரச்சாரம் கோரும்; அமெரிக்க அரசாங்கம் ஈராக்கிய மக்களுக்கு பேரழிவு, பேரிடர் இவற்றைச் சுமத்தியதற்காக இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர்களின் குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மனத்தளவிலும், உடலளவிலும் காயமுற்ற ஆண், பெண் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் எமது பிரச்சாரம் கோரும்.

* ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றிற்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது.

அமெரிக்காவில் நிலவுகின்ற செல்வக் குவிப்பு, சமூக சமத்துவமின்மை ஆகியவற்றின் மட்டங்களுடன் ஜனநாயகமானது முடிவாய் உடனொத்து இருக்க இயலாததாகும்.

ஜனநாயகத்தை பரப்புதற்கே ஈராக் மீதான படையெடுப்பு என்னும் புஷ்ஷுடைய கூற்று, தவறானது என்ற மிகப் பெரிய மறுப்பானது, அமெரிக்காவிற்குள்ளேயே ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் முடுக்கிவிடப்படுகின்றது என்ற உண்மையால் பின்தொடரப்பட்டு வருகின்றது. "பயங்கரவாதத்திற்கு" எதிராக "சுதந்திரத்தை" காத்தல் என்ற பெயரில், புஷ் நிர்வாகம் அமெரிக்காவில் நிறுவன, சட்ட கட்டமைப்பில் ஒரு போலீஸ் அரசாங்கத்திற்கான தளத்தை ஏற்படுத்தியுள்ளது; முதல், இரண்டாம் உலகப் போர்களின்போது கூட இல்லாத அளவிற்கு, எந்த முந்தைய அரசாங்கமும் உரிமை கொண்டாடாத அளவிற்கு இந்த அரசாங்கம் இராணுவ, போலீஸ் அதிகாரங்களை ஏற்றுள்ளது.

புஷ் நிர்வாகம், சர்வதேச சட்டம், ஜெனிவா மரபுகள் மற்றும் நிர்வாகத்தின் மீதான அனைத்து சட்டபூர்வ தடுப்புக்களையும் நிராகரித்துள்ளது. புஷ்ஷின் கீழ், அது தேர்ந்தெடுக்கும் எந்த நாட்டை வேண்டுமானாலும் தாக்கி ஆக்கிரமிக்கும் உரிமை தனக்கு உள்ளதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது; உலகம் முழுவதும் சிறை வலைப்பின்னல்களை நிறுவி, வாஷிங்டனால் இலக்கு கொள்ளப்படுபவர்கள் கடத்தப்பட்டு, சிந்திரவதைக்குட்படுத்தப்பட்டு சில நேரம் எப்பொறுப்பும் இல்லாமல் கொலைக்கும் உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது; மேலும் உள்நாட்டில் ஒற்றுக் கேட்டல், கண்காணித்தல், தூண்டிவிடுதல் ஆகியவற்றிற்கு பரந்த கருவி ஒன்றையும் நிறுவியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சியானது தேச பக்த சட்டம் அகற்றப்படல், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அகற்றப்படல், பென்டகனுடைய வடக்குக் கட்டுப்பாட்டு ஆணையகம் ஒழிக்கப்படல், குவாண்டநாமோ கடூழியச் சிறை மற்றும் அதே போல் இயங்கி வரும் சிறைகள் மூடப்படல் ஆகியவற்றைக் கோருகின்றது மற்றும் சித்திரவதை, கடத்தப்பட்டு சிறையிலிடப்படுதல், அதேபோன்று அமெரிக்க மக்களின் பெயரில் நிகழ்த்தப்படும் பல கொடுமைகள் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோருகிறது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புக்கு, கடந்த காலத்தில் பெறப்பட்ட முற்போக்கான சீர்திருத்தங்களை அகற்றுவதற்கும், மிகப் பிற்போக்கான அரசியல், சமூக சக்திகளை தூண்டிவிடவும் புஷ் நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு எதிராக எதிர்த் தாக்குதல் தேவைப்படுகிறது. குடியுரிமை, வாக்குரிமைகள், அனைவருக்கும் பொதுக் கல்வி, மூத்த குடிமக்களுக்கு சுகாதர பாதுகாப்பு போன்ற கடந்த கால ஜனநாயக மற்றும் சமூக வெற்றிகளை பாதுகாப்பதில் சோசலிச சமத்துவக் கட்சி அயராது பாடுபடுகிறது; அதேபோல்தான் குடியுரிமைகளின் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை காப்பாற்றுவதற்கும் அது பாடுபட்டு வருகிறது.

அனைவருக்கும் சம உரிமைகள் வேண்டும் என்று சோசலிச சமத்துவக் கட்சி கோருவதுடன், வேலைகள், வீட்டு வசதிகள், கல்வி மற்றும் எத்துறையிலும் இன, தேசிய மூலம், மதம், பால், பால்விருப்ப வேறுபாடுகளைக் கொண்ட எந்தத் தன்மையையும் எதிர்க்கிறது. மகளிர் விரும்பும் வகையில் தடையின்றி கருக்கலைக்கும் உரிமையை நாங்கள் ஆதரிக்கிறோம்; அதேபோல் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்யும் உரிமையையும் ஏற்கிறோம்; அவர்களும் மருத்துவ, சட்ட, வேலைவாய்ப்புக்களை ஏனைய தம்பதிகளைப் போல் பெறவேண்டும் என்பதை ஆதரிக்கிறோம். அரசே மனித உயிரைப் பறித்தல் என்ற வகையை அனுமதிக்கும் மரண தண்டனை என்ற காட்டுமிராண்டி பழக்கத்தையும் நாங்கள் எதிர்க்கிறோம்; இந்த தண்டனை அநேகமாக ஏழைகள் மற்றும் கூடுதலான விகிதத்தில் இனவழிச் சிறுபான்மையினர் மீது சுமத்தப்படுகிறது.

ஆனால் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பெறல் என்பது குடி உரிமைகள், அரசியலமைப்பு நெறிகள் மீதான தாக்குதல்களை முறியடித்து விரட்டுதல் என்ற எதிர்மறைப் பணியுடன் முடிந்துவிடுவதில்லை. முன்னேறிய தொழிற்துறை நாடுகளிலேயே பெரும் தடைகளுக்கு உட்பட்டதும், ஜனநாயகமற்ற தன்மையையும் கொண்ட அமெரிக்க அரசியல் அமைப்பை தீவிரமாக மாற்றி அமைத்தலுடன் தொடங்கும் ஜனநாயக உரிமைகளின் பெரும் விரிவாக்கமே தொழிலாள வர்க்கத்திற்கு தேவைப்படுகிறது.

தேர்வுக் குழு என்ற காலாவதியாகிப்போன அமைப்புக்களை அகற்றுவதும் இதில் அடங்கும்; அனைத்து மக்களும் வாக்களித்தல் என்பதற்கு இம்முறையில் இருக்கும் ஏராளமான தடைகள் அகற்றப்பட வேண்டும்; மூன்றாம் கட்சிகளும், சுதந்திரமான வேட்பாளர்களும் ஜனநாயக, குடியரசுக் கட்சிகளின் வேட்பாளர்களை எதிர்ப்பதற்கு பல விதமான தடைகள் இருப்பது அகற்றப்பட வேண்டும். இத்தடைகளில் தடுக்கும், ஒருதலைப்பட்ச வகையிலான வழிவகைகள் உள்ளன; மேலும் ஜனநாயக, குடியரசு பிரச்சாரங்களுக்கு கூட்டாட்சி உதவித்தொகைகள் உள்ளன; மூன்றாம் கட்சிகளின் வேட்பாளர்கள்மீது செய்தி ஊடகத் தணிக்கையும் உள்ளது. இவற்றையெல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது அரசாங்க ஆதரவிற்குட்பட்ட இருகட்சிமுறை அதிகரித்த வகையில் செல்வாக்கிழந்துள்ளது என்பது புலனாகும்; அதுவும் மாறுபட்ட வேற்றுமைகள் நிலவும், கிட்டத்தட்ட 300 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை எடுத்துக் கொள்கையில், குறுகிய தன்மையில் பகுத்தறிவற்ற முறையில் உள்ளது. சட்டமியற்றும் அவைகளில் விகிதாச்சார முறையில் அனைத்துக் கட்சிகளும் கணிசமான பிரதிநிதித்துவம் பெறும் ஒரு முறையை சோசலிச சமத்துவக் கட்சி ஆதரிக்கிறது.

ஜனநாயக உரிமைகள் பற்றிய கருத்துப்படிவமே, சட்டத்தின் முன்னும் அது சம்பந்தமான வழிமுறைகளிலும் அனைவரும் சமம் என்ற குறுகிய கட்டமைப்பிற்கு அப்பால் கட்டாயம் விரிவுபடுத்தப்பட வேண்டும். அது பரந்த உழைக்கும் மக்களுக்கான வாழ்க்கையின் சமூக யதார்த்தங்களை கட்டாயம் உட்கொண்டிருக்க வேண்டும். எனவே தனியாரின் சொத்துக் குவிப்பிற்கு எதிரான போராட்டத்திலிருந்து இது பிரிக்கப்பட முடியாதது ஆகும்.

பொருளாதார மற்றும் சமூக சமத்துவமற்ற தன்மை நிறைந்த ஒரு சமுதாயத்தில் சட்டத்தின் முன் அனைவருக்கும் சம உரிமைகள் என்ற கருத்துப்படிவம் அடிப்படையிலேயே ஒரு பாசாங்குத்தனத்தை கொண்டுள்ளது. அன்றாட வாழ்க்கையின் மிக முக்கியமான பிரச்சினைகளை: மக்களுக்கு வேலை கிடைக்குமா, அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படும், எந்த நிலைமைகளில் அவர்கள் வேலை செய்வார்கள் போன்றவற்றை நிதி ஆதிக்க ஒருசிலவர் நல ஆட்சியே ஆணையிடும்பொழுது, இரண்டு அல்லது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிக்கும் உரிமை என்பது கீழ்த்தரமானதாகின்றது.

பெரும்பாலான மக்கள் தங்களின் பெரும்பாலான நேரத்தையும் முயற்சியையும் செலவிடுகின்ற, வேலைத்தளத்தை ஜனநாயகமயப்படுத்தலுடன் தொடங்கி, ஜனநாயகம் என்பது ஒரு ஆழ்ந்த சமூக உள்ளடக்கத்தில் தோய்ந்திருக்க வேண்டும். தொழில்துறை ஜனநாயகத்தின் உண்மையான பொருள் தங்களுடைய உழைக்கும் வாழ்வின்மீது தொழிலாளர்கள் உண்மையான கட்டுப்பாட்டை கொண்டிருத்தல் என்பதாகும். வேலை நிலைமைகள், பாதுகாப்பு, ஊதியங்கள், பணி கொடுத்தல், நீக்கல், பணி நேரம் ஆகியவற்றை பற்றிய முடிவுகள் தொழிலாளர் தொகுப்பின் ஜனநாயகக் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும். இதற்கு முன்னிலையில் இருக்க வேண்டியது பெருநிறுவன கணக்கு ஏடுகள் தொழிலாளர்களால் ஆய்விற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்பதையும், அனைத்து தொழிலாளர்களின் ஜனநாயக வாக்கினால்தான் பெருநிறுவனத் தலைமை ஒப்புதலளித்து உறுதி செய்யப்பட வேண்டும் என்பதையும் இது முன்னனுமானிக்கிறது..

அனைத்துக் குடிபெயர்ந்தோருக்கும் முழுமையான ஜனநாயக உரிமைகள், குடியுரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனபதை நாங்கள் ஆதரிக்கிறோம்; இதில் "சட்டவிரோத வெளிநாட்டினர்" என்று முத்திரையிடப்பட்டுள்ள, 12 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களற்ற தொழிலாளர்களும் அடங்குவர். குடியேற்ற எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்: இதில் வலைபோல் அனைவரையும் பிடித்தல், தடுப்புக் காவல்கள், நாட்டைவிட்டு அகற்றுதல் ஆகியவை அடங்கும்; அரசாங்கம் இதை "பயங்கரவாதத்தின் மீதான போரின்" ஒரு பகுதியென்று ஆரம்பித்துள்ளது.

* சோசலிச சமத்துவக் கட்சி, வேலைப்பாதுகாப்புக்கள், சமூக நலன்கள் விரிவாக்கப்படுதல், அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படல் ஆகியவற்றிற்காக போராடுகிறது.

கெளரவமான ஊதியம் கிடைக்கும் பணிகள், ஓய்வூதியங்கள், சுகாதார நலன்கள், பொதுக்கல்வி போன்ற சமூக நலன்கள் இனி அரசாங்கத்தால் தர முடியாதவை என்று அமெரிக்க ஆளும் செல்வந்தத்தட்டுகள் உரிமை கோருகின்றன. அமெரிக்க சமுதாயத்தின் உயர் 1 சதவீதத்தினருக்கான தனியார் செல்வக் குவிப்பை என்றும் கூடுதலாக, அருவருக்கத்தக்க மட்டத்தில் வழங்குவதற்கு அவை கட்டாயம் தியாகம் செய்யப்பட வேண்டும் என்று அது வலியுறுத்துகின்றது.

தொழிலாள வர்க்க சமூகங்களை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ள பெருநிறுவன திவால் நிகழ்வுகளுக்கு உழைக்கும் மக்கள் பொறுப்பல்ல என்று சோசலிச சமத்துவக் கட்சி விடையிறுக்கிறது; ஆனால் இவற்றை தோற்றுவித்த கூடுதலான மில்லின்களை தங்கள் வங்கிக் கணக்கில் நிறைத்த பெருநிறுவன நிர்வாகிகளோ தப்பிவிடுகின்றனர். அமெரிக்க தொழில்முறையின் சின்னங்களான ஜெனரல் மோட்டார்ஸ், யுனைடைட் ஏர்லைன்ஸ் போன்றவை --இரண்டு மிகச் சிறந்த முறையில் அறியப்பட்டுள்ள நிறுவனங்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன-- வியத்தகு முறையில் தோல்வி அடைந்திருப்பது அமெரிக்க முதலாளித்தவ முறையின் பொது நெருக்கடிக்கு முடிவான நிரூபணங்களாகும்.

பல தசாப்தங்களாக பெருவணிகத்திற்கு வக்காலத்து வாங்குபவர்கள் "சுதந்திரமான நிறுவனம்" இருக்கும் அமெரிக்க முறை தொழிலாளர்களுக்கு உயர்ந்த ஊதியங்கள், தாராளமான சமூக நலன்கள், பாதுகாப்பான, வசதியான ஓய்வு ஆகியவற்றைக் கொடுக்கும் என்று கூறிவந்தனர். முதலாளித்துவ முறையே தொழிலாளர்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க முடியும் என்ற பொழுது, சோசலிசத்திற்கான அவசியம் இல்லை என்று, இந்த பெருநிறுவன கலைஞர்கள் பறைசாற்றுகின்றனர்.

இத்தகைய மடத்தனமான தனி மனித அரசியல் சமூக சீர்திருத்த திட்டம் அமெரிக்க வாழ்வின் பொருளாதார உண்மைகளினால் தவறென நிரூபிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domstic Product) உண்மையான தரத்தில் 1972 ஐ விட 50 சதவிகிதம் வளர்ச்சியுற்றுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி பகிர்ந்துகொள்ளப்படும் விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் பொருள் ஒரு சமூகம் என்னும் முறையில் நல்ல ஊதியம் கொடுக்கும் பணிகள், சுகாதார நலன்கள், பாதுகாப்பான ஓய்வூதியம், தரமான பொதுநலப் பணிகள் ஆகிய உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றல் எளிதாக இருக்க வேண்டும், கடினமாக அல்ல என்பதாகும். ஆயினும்கூட அமெரிக்க தொழிலாளர்களின் உண்மையான மணிநேர ஊதியம் குறைந்துவிட்டது; குடும்ப வருமானங்கள் தேக்கம் அடைந்துள்ளன; ஓய்வூதியங்கள் அகற்றப்பட்டிருக்கின்றன; முக்கிய சமூகப் பணிகளான சுகாதார வசதி, கல்வி வசதி போன்றவை நிதி இல்லாமல் வாடுகின்றன.

கடந்த 30 ஆண்டுகளில் பொருளாதார உற்பத்தி மகத்தான அளவில் பெருகியுள்ளது; ஆனால் உழைப்பை கொடுப்போருக்கு இதனால் அதிக பலன் ஏதும் இல்லை. மாறாக, பெருகிய செல்வம் என்பது அமெரிக்க சமுதாயத்தின் உயர்மட்டத்தில் இருக்கும் மிகச் சிறிய பிரிவின் ஏகபோக உரிமையாகிவிட்டது. 1979ம் ஆண்டில் இருந்து அமெரிக்க மக்களின் மிக அதிக செல்வந்தர்களில் 1 சதவிகித்தினர், தேசிய வருமானத்தில் தங்கள் பங்கை இருமடங்கிற்கும் அதிகமாக, அதாவது 19 சதவிகிதத்தில் இருந்து 40 சதவிகிதத்திற்கும் மேலாக என்ற வகையில், பெருக்கிவிட்டனர்.

பெருவணிக நிருவன தலைமை நிர்வாகிகள் இப்பொழுது ஒரு சராசரித் தொழிலாளியைவிட 431 மடங்கு அதிக ஊதியம் பெறுகின்றனர். கடந்த ஆண்டு உயர்மட்ட நிர்வாகிகளின் ஊதியம் 91 சதவிகிதம் அதிகமாயிற்று; தொழிலாளர்களின் ஊதியமோ 4 சதவிகிதம்தான் அதிகமாயிற்று.

அக்டோபர் 2005ல் நியூ யோர்க் டைம்ஸில் வந்துள்ள தகவல்படி, நாட்டின் வருமானவரித்துறை மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்காவில் வருமான சமத்துவமின்மை என்பது மிகப் பெரும் தரத்தில் இருப்பதாக நிரூபிக்கிறது. விரிவான புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ள கடைசி ஆண்டான 2003ல் மிக உயர்மட்டத்தில் உள்ள 1 சதவிகிதத்தினர் அமெரிக்காவின் முழு உண்மை வருமான உயர்வையும் அள்ளி விழுங்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

இத்தகைய பெரும் செல்வக் கொழிப்பு உடையவர்களிடம் இருந்து செல்வத்தை எடுத்து அனைவருடைய நலன்களுக்காக அவ் இருப்புக்களை பயன்படுத்துதல் என்பது ஒரு அவசர சமூகத் தேவையாகிவிட்டது, இதற்கு தொலைநோக்குடைய வகையில் செல்வம் மறுபகிர்விற்குட்பட வேண்டும். ஒரு சோசலிச அடித்தளத்தில், அதாவது தொழிலாள வர்க்கத்தினால் உற்பத்தி செய்யப்படும் செல்வம், ஒரு சிறு சலுகை பெற்ற உயரடுக்கின் தனிநபர் செல்வக் குவிப்பு மற்றும் பெருநிறுவனங்களின் இலாப நலன்களுக்காக அல்லாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்றுதற்காக அறிவார்ந்த மற்றும் மனிதாபிமான வகையில் பொருளாதார வாழ்வு மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகின்றோம்:

பொருளாதாரப் பாதுகாப்பு என்பது ஓர் அடிப்படை மனித உரிமையாகும்; அது ஒன்றும் செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிக்கும் விசேட சலுகை அல்ல. அனைத்து தொழிலாளர்களுக்கும் வசதியான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் வகையில் பொருளாதார வாழ்வு அமைக்கப்பட வேண்டும் என்பதை சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது.

* சமூக சமத்துவத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது!

அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை தொழிலாள வர்க்கத்தின் நலன்களை கருத்தில் கொண்டு மறுஒழுங்கு செய்வதை நோக்கமாக கொண்ட ஒரு வேலைத் திட்டத்தை சோசலிச சமத்துவக் கட்சி முன்னெடுக்கிறது. தற்போதைய முதலாளித்துவ அமைப்பில், தொழில், நிதிய அமைப்புக்களின் பரந்த இருப்புக்கள் அனைத்தும் தனிப்பட்டோரின் உடைமையாக இருக்கின்றன மற்றும் தனிப்பட்டோரால் கட்டுப்படுத்தப்படுகின்றன, இம்முறை பொருளாதாரத்தின் மீதான பொது உடைமை மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாடு இவற்றை உடைய ஒரு சோசலிச அமைப்பால் கட்டாயம் மாற்றப்படவேண்டும். இலாபத்தை உருவாக்கும் மற்றும் பரந்த தனிநபர் செல்வத் திரட்சியை அல்லாமல், மனித தேவைகளை நிறைவு செய்வதையே ஒழுங்கமைக்கும் கொள்கையாக உடைய ஒரு பொருளாதார அமைப்பை உருவாக்குவதைத்தான் நாம் ஆதரிக்கிறோம்.

உழைக்கும் மக்களின் பரந்த ஜனத்திரளின் நலன்களின் பேரில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைப்பதற்கான பொருளாதார அடித்தளத்தை நிறுவுவதற்கு, 10 பில்லியன் டாலர்கள் அல்லது அதற்குமேல் மதிப்பு உடைய அனைத்து வகைப்பட்ட தனியாருக்குச் சொந்தமான தொழில் மற்றும் உற்பத்தித் தொழில்துறை பெருநிறுவனங்களை, சிறு பங்குதாரர்களுக்கு முழு நஷ்ட ஈட்டுடனும் பெரிய அளவிலான பங்குதாரர்களுக்கான நஷ்டஈட்டு விதிமுறைகள் பகிரங்கமாக பேசி எடுக்கப்படும் அடிப்படையிலும், அவற்றை பொதுவில் உடைமையான நிறுவனங்களாக மாற்றுவதை நாம் ஆதரிக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி அனைத்து பெரிய வங்கிகள், காப்பீட்டுக் கழகங்கள் ஆகியவையும் கூட தேசியமயமாக்கப்படவேண்டும் என்ற திட்டத்தை முன்வைக்கின்றது. மேலும், சோசலிச சமத்துவக் கட்சி இரயில் போக்குவரத்து, விமான சேவை, தொலைத் தகவல் தொடர்பு மற்றும் மின்விசை போன்ற ஆற்றல் தொழிலும் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து இயற்கை வளங்களும் பொது உடைமை மற்றும் பொதுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவேண்டும் என்றும் வாதிடுகிறது.

இந்த வகையில் அமெரிக்கப் பொருளாதாரம் மறுஒழுங்கு செய்யப்பட்டால், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு மாபெரும் வளங்களை கிடைக்க கூடியதாகச் செய்யும்.

பொதுப்பணித் திட்டம் பரந்த அளவில் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வேலை இல்லாதவர்கள், வேலை செய்யக் கூடியவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வகை செய்யுமாறு நாங்கள் கோருகிறோம். பணவீக்கக் குறியீட்டுடன் இணைக்கப்பட்டு, கூட்டாட்சியின் உத்தரவாதம் ஒவ்வொரு ஆண்டும் இருக்கக்கூடிய வகையில் நிதியம் அமைத்து, மில்லியன் கணக்கான உழைக்கும் அமெரிக்கர்களின் வருமானத்தை உயர்த்தும் அவசர தேவையை வலியுறுத்துகிறோம். வேலைகளை தோற்றுவிக்கவும், தொழிலாளர்கள் அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வில் பங்கு பெறவும், வேலைவாரம் 40 மணி நேர சம்பளத்தில் 30 மணிநேரமாக குறைக்கப்படவேண்டும். முழுநேரத் தொழிலாளர்களுக்கு ஆண்டு விடுமுறை குறைந்தது 5 வாரங்களாவது இருக்கவேண்டும்.

இலவச, உயர்தர பொதுக் கல்வி மற்றும் அனைவருக்கும் இவவச உயர் கல்வி கிடைப்பதற்கான வழிவகையை உறுதிப்பபடுத்த பெரும் அளவில் முதலீடு செய்யப்பட வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்; அனைவருக்கும், விரிவான மருத்துவ பராமரிப்பு, அரசு-மானிய உதவியுடன் கூடிய, வசதியான மற்றும் அனைவராலும் இயலக்கூடிய வீடுகளை கட்டல்; தொழிற்சங்கத்தில் சேரவும் தொழிற்சங்கங்களை ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தவும் ஒரு உத்தரவாதமுள்ள உரிமை, தொழிற்சங்கங்களை உடைக்கும் தந்திரோபாயங்களை மற்றும் சம்பள வெட்டை சட்டவிரோதம் என அறிவித்தல்; அனைத்து உழைக்கும் மக்களுக்கும் கெளரவமான ஒரு வருமானத்தை தரும் ஓய்வூதிய பாதுகாப்பு; சிறிய, நடுத்தர வியாபாரங்களுக்கு அரசாங்க ஆதரவு ஆகியவற்றுக்காக நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.

சமூக சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் ஸ்தூலமான நடவடிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே இங்கே விவரிக்கப்பட்ட சமூக உரிமைகள் அடையப்பட முடியும். வரிவிதிப்புக் கொள்கையில் இப்பொழுதுள்ள நிலை தலைகீழாக மாற்றி அமைக்கப்படவேண்டும்: அதாவது பொதுமக்களை கொள்ளையடித்து மில்லியனர்களையும் பெருவர்த்தகத்தையும் மேலும் செல்வ குவிப்பிற்கு வழி செய்யும் சாதனமாக இருப்பதிலிருந்து, வரிவிதிப்பில் வரும் செல்வத்தை தீவிரமானமுறையில் மறுவிநியோகம் செய்வதற்கான சாதனமாக அது ஆக வேண்டும். இதன் அர்த்தம், ரோனால்ட் றேகன், மூத்த ஜோர்ஜ் புஷ், ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஆகிய ஜனாதிபதிகள் செல்வந்தர்களுக்கு வரிவிலக்கு கொடுத்தமை யாவும் நீக்கப்படவேண்டும்; செல்வத்தின் மீதான நேரடி வரிகளான எஸ்டேட் வரிகள் போன்றவை மீண்டும் கொண்டுவரப்படல் வேண்டும், பெருநிறுவனங்கள் மிகச் சிறு அளவே இலாபத்தில் வரி செலுத்த அனுமதிக்கும் வகையில் கணக்குமுறையிலான தகிடுதத்தங்கள் மற்றும் சட்டத்திலுள்ள ஓட்டைகள் போன்றவை அகற்றப்படவேண்டும். பரந்த பெரும்பான்மையான மக்களுக்கு வரிச்சுமை குறைக்கப்பட்டு, அதிக வருமானம், செல்வக் குவிப்பு இருப்பவர்மீது கூடுதலான வரி விதிக்கப்பட வேண்டும்.

கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற ஊகவாணிப நடவடிக்கைகள் மற்றும் தொழிலாளர்கள், சிறு பங்குதாரர்கள் நஷ்டமுற பெருநிறுவன தலைமை நிர்வாக அதிகாரிகளால் பெருநிறுவன வளங்கள் குற்றஞ்சார்ந்த முறையில் அபகரிக்கப்பட்டமை பற்றி விசாரணை நடத்த குறிப்பாக கவனம் செலுத்தப்படவேண்டும். திருடப்பட்ட பணம் மீட்கப்பட்டு சமூக நலப்பணிகளுக்காகவும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் பயன்படுத்தப்படவேண்டும்.

சொத்துடமை உரிமைகள் சமூக உரிமைகளுக்கு கீழ்ப்படுத்தப்படவேண்டும். இதன் பொருள் எல்லாவற்றையும் தேசியமயமாக்க வேண்டும் என்பதோ, ஏற்கனவே பகாசுரக் கம்பனிகள் மற்றும் வங்கிகளால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய அல்லது நடுத்தர வணிகங்கள் அகற்றப்படவேண்டும் என்பதோ அல்ல. திட்டமிட்டு பொருளாதாரம் செயல்படுத்தப்பட்டால், அவை நியாயமான ஊதியங்களையும் வேலைநிலைமைகளையும் வழங்கும் வரையில், அத்தகைய வணிகங்களுக்கு தேவையான கடன் வசதிகளையும், மிக உறுதியான சந்தை நிலைமைகளையும் தயாராய் கிடைக்கச் செய்யும்.

பண்பாட்டுத் தேசியம், பெண்ணிலைவாதம் போன்ற அடையாள அரசியலின் பல கூறுபாடுகளையும் சோசலிச சமத்துவக் கட்சி எதிர்க்கிறது; இவற்றின் முக்கிய பங்கானது முதலாளித்துவ சமூகத்தில் உள்ள அடிப்படைப் பிளவுகளை மறைக்கும் தன்மையில், அதாவது சமூக வர்க்கங்களுக்கிடையே உள்ள பிளவை மறைக்கும் வகையில் உள்ளது. அனைத்து உழைக்கும் மக்களின் ஒருமைப்பாட்டிற்கும் ஐக்கியத்திற்குமான ஆதரவில் நாம் உறுதியாக நிற்கிறோம். இனவெறி சார்ந்த அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம்; அது அடிப்படையிலேயே தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கும், முதலாளித்துவத்திற்கு எதிரான சர்வதேச வெகுஜன இயக்கம் ஒன்றை கட்டியமைப்பதற்கான தேவைக்கும் எதிரானது ஆகும். இனவழித் தொகுதிகளின் அரசியல் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்ளுபவர்கள் உண்மையில் குறுகிய சலுகை பெற்ற சமூக அடுக்குகளின் நலன்களைத்தான் பிரதிபலிக்கின்றனர்; இது கறுப்பர்கள், இலத்தீன் இனத்தவர் அல்லது வேறு எந்த இனக் குழுக்களாயினும் சரி, இவை அனைத்துமே பதவிகளையும் சலுகைகளையும் முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பிற்குள்ளே பெறத்தான் விரும்புகின்றன.

இந்த உள்ளடக்கத்தில், பிரதிநிதித்துவ அதிகரிப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை (affirmative action) நாங்கள் எதிர்க்கிறோம்; ஏனெனில் அது வெள்ளை இன, சிறுபான்மைத் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக வேலைகள், கல்லூரி நுழைவு ஆகியவற்றுக்கான பிளவுபடுத்தும் போராட்டத்தில் ஈடுபடுத்துகின்றது. அத்தகைய திட்டங்கள் குறுகிய சலுகை பெறுவோருக்குத்தான் நன்மையே அன்றி பெரும்பான்மையான சிறுபான்மை மக்களுக்கு அல்ல. நல்ல ஊதியம் கொடுக்கும் பணிகள், தரமான K-12 (மழலையர் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளி வரையிலான வகுப்பு) மற்றும் கல்லூரிப் படிப்பு, வசதிக்குள் வாங்கக் கூடிய வீடு, ஏனைய சமூகத் தேவைகளை உறுதியளிக்கும் மகத்தான சமூக முதலீட்டின் கட்டமைப்பிற்குள்ளே உண்மையான, முழுமையான சமத்துவ வாய்ப்புக்களை நாங்கள் கோருகிறோம்: உழைக்கும் மக்களின் அனைத்துப் பகுதியினரின் போராட்டத்தில் ஐக்கியத்தின் அடிப்படையில்தான், இப்பொழுதுள்ளதுபோல் மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புக்களை இனம் அல்லது பால் அடிப்படையில் சிலருக்கு மட்டும் பகிர்ந்து கொடுப்பது போல் அல்லாமல், அனைவரும் பொருளாதார பாதுகாப்பை பெறவும் தங்களின் முழுத் திறனையும் அடையக்கூடியதுமான ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்கான நிலைமைகளை உருவாக்க முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி, உழைக்கும் மக்களுக்கு முழு அளவில் கலை, பண்பாடு பற்றியவற்றை முழுமையாய் கிடைக்கச்செய்யும் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. தன்னுடைய புதிய கருத்துக்களினாலும், வலுவான ஜனநாயக மற்றும் மானுடம் சார்ந்த வகைகளினால், அனைவரையும் ஈர்க்கும் தன்மையை அமெரிக்க பண்பாடு பெற்றிருந்தது, ஒருசமயம் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இருந்தது. ஏனைய துறைகளைப்போலவே, பண்பாட்டை இலாப நோக்கிற்கு கீழ்ப்படிய செய்தமை மிகப்பெரிய சீரழிவிற்குத்தான் வழிவகுத்துள்ளது

கலைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த உதவித்தொகைகளை நிறுத்தியதாலும், கலைப்படைப்புக்களில் வலதுசாரிக் கருத்துக்களின் தாக்குதலினாலும் பரந்துபட்ட பண்பாடு பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. அருங்காட்சியகங்கள், இசைக் குழுக்கள், நாடகங்கள், பொதுத் தொலைக் காட்சி மற்றும் வானொலி ஆகியவற்றிற்கு அரசாங்க மானியங்கள் உள்ளீடாக அகற்றப்பட்டுள்ளன. கலை மற்றும் இசைக் கல்வி பெரும்பாலான பொதுப் பள்ளிகளிலிருந்து கடுமையாய் குறைக்கப்பட்டுள்ளன அல்லது ஒரேயடியாய் அகற்றப்பட்டு விட்டன. நூலக நேரங்களும் சேவைகளும் குறைக்கப்பட்டுவிட்டன. இத்தகைய கூலிப்படை ரீதியான மற்றும் கலை பண்பாட்டை வெறுக்கும் மற்றும் அவற்றைப் புரியா (பிலிஸ்டைன்) அணுகுமுறையால் அறிவார்ந்த மற்றும் ஒழுக்கநெறி சார்ந்த சமூக அமைப்பிற்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை நிர்ணயிப்பது கடினமாகும். ஆயினும், இராணுவவாதத்தை, மிருகத்தனத்தை புகழ்தல் மற்றும் தற்பெருமை பாராட்டுதல் இவற்றிற்கும் முந்தைய தலைமுறைகளின் கலைத்துவ மற்றும் பண்பாட்டு மரபியத்திற்கு குரோதம் காட்டுதலுக்கும் சர்ச்சைக்கில்லாத தொடர்பு உண்டு.

மக்கட்தொகையின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இசை, நடனம், நாடகம் மற்றும் கலை முதலியவை இலவசமாகவோ அல்லது மிகக்குறைந்த கட்டணத்திற்கோ கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்துவதற்கு கலைகளின் வளர்ச்சிக்கும், புதிய பள்ளிகள் தோற்றுவிக்கவும், கல்வி மையங்களுக்கும் ஏராளமாக பணம் அளிக்கவேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி கோருகின்றது. கலைகளுக்காக உதவித்தொகை, மானியத்தொகை வழங்குதல் பறிய முடிவு அரசியல்வாதிகளிடம் விடப்படாமல், கலைஞர்கள், இசைஞர்கள் மற்றும் பண்பாட்டுத்துறை தொழிலாளர்கள் கொண்ட குழுவினரின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட வேண்டும்.

பூமியின் வரம்பிற்குட்பட்ட வளங்களை அறிவுபூர்வமாய் அபிவிருத்தி செய்வதற்கு ஒரு சோசலிச பொருளாதார வேலைத்திட்டம் மட்டுமே உறுதி வழங்க முடியும். அனைத்து மனித செயற்பாடுகளையும் இலாபம் மற்றும் தனிச் சொத்துக் குவிப்புக்கான உந்துதலுக்கு கீழ்ப்படிய செய்வதினால் சுற்றுப்புறச்சூழல் பேரழிவினை கட்டவிழ்த்துவிடும் அச்சுறுத்தலை கொண்டுள்ளது. மக்கள் சமூகத்தின் அதிகரித்த அளவிலான சிக்கலான தேவைகளினால் முன்வைக்கப்படும் இந்த அல்லது அந்த பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு இலாப அமைப்பு முறையின் இயலாமையானது மனிதகுலம் தப்பித்து உயிர்வாழ்வதற்கே ஓர் அச்சுறுத்தலாக இருக்கின்றது. சோசலிச பொருளாதார திட்டமிடுதல், பூமியின் சுற்றுப்புறத்தை பாதுகாப்பதில் உண்மையான பூகோள ஒத்துழைப்பிற்கான நிலைமைகளை உருவாக்கும்.

தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக

அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேசரீதியாகவும் போர், ஒடுக்குமுறை, வாழ்க்கைத்தரம், ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல்கள் இவற்றிற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கான முன்நிபந்தனையானது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை நிறுவுதல் ஆகும். சோசலிச சமத்துவக் கட்சியை அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பரந்த கட்சியாக வளர்த்தெடுப்பதற்கான அரசியல் அடிப்படையை அமைப்பதன் மூலம் இந்த அடிப்படைப் பணியை நிறைவேற்றுவதைத்தான் சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரம் பிரதானமாக இலக்காகக் கொண்டுள்ளது: .

ஜனநாயகக் கட்சி மற்றும் இரு கட்சிகள் சார்ந்த "இருகட்சி முறையின்" முழு கட்டமைப்பிலும் இருந்து முற்றிலுமாக முறித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் தொழிலாள வர்க்கம் தற்போது எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான அரசியல் பணியாகும் என சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகின்றது. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகள் இவற்றிற்கு இடையே வேறுபாடுகள் ஏதேனும் உள்ளது என்றால், அவை தந்திரோபாய வகையைச் சார்ந்தவைதான்; அதாவது அமெரிக்காவிலும், உலகம் முழுவதிலும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் நலன்களை எப்படிச் சிறந்த முறையில் உத்தரவாதம் செய்யலாம் என்பதன் மீதான தந்திரோபாய வேறுபாடுகள்தாம்.

சட்ட மன்றம், சட்டம், அரசியலமைப்பு ஆகியவற்றை அலட்சியப்படுத்தும் போக்கு, மற்றும் ஒரு ஜனாதிபதிமுறை சர்வாதிகாரத்தை வடிவமைத்தல் என்னும் புஷ்ஷின் நடவடிக்கைகளுக்கு ஜனநாயகக் கட்சி அக்கறையுள்ள எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. நெடுநாட்களுக்கு முன்னரே சமூக சீர்திருத்தக் கொள்கையை அது தள்ளுபடி செய்துவிட்டது மற்றும் உழைக்கும் மக்கட்தொகையினரின் இழப்பில் செல்வம் கொழிக்கும் சமூக அடுக்குகளின் செல்வத்தை மேலும் வளங்கொழிக்க செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளை ஏற்றது.

ஜனநாயகக் கட்சி, புஷ் மற்றும் குடியரசுக் கட்சியினருடன் குற்றம்புரிவதற்கு உடந்தையாக இருப்பதன் அடிப்படைக் காரணம், அதே முதலாளித்துவ ஆளும் செல்வந்தத்தட்டுக்களின் அடிப்படை நலன்களையே இதுவும் பாதுகாக்கிறது. இருகட்சி முறை கட்டமைப்பிற்குள் இதன் பிரத்தியேக தொழிற்பாடு யாதெனில், கீழ்மட்டத்தில் இருந்து சமூக எதிர்ப்பு உடைய இயக்கம் வெளிவருதலை தடுக்கவும், திணற அடிக்கவும் தன்னை "மக்கள் கட்சி" என்று காட்டிக் கொள்ளுதல் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரத்திற்கு ஆதரவு தந்திடுக!

உலக சோசலிச வலைத் தளத்தின் பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கும், சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களுக்கும், மற்றும் போர்க் கொள்கைகள், ஒடுக்குமுறை, தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரத்தின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை எதிர்ப்பவர்களுக்கும், எங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு செயற்திறன் மிக்க ஆதரவு தருமாறு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுகிறது.

ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்கும் அவற்றின் ஒன்றையொன்று சேற்றை வாரி இறைக்கும், பொய்ப் பிரச்சாரங்களுக்காக அமெரிக்கப் பெருநிதியம், பெரும்செல்வந்தர்கள் ஆகியோரிடம் இருந்து வரும் பங்களிப்புக்களில் உள்ள பில்லியன் கணக்கானதொகைகளை சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நாடவில்லை; நாடவும் விரும்பவில்லை. நாங்கள் சாதிக்க விரும்புவது தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை உயர்த்துதலாகும், அது பரந்த அளவில் தொழிலாளர்கள், சுய வேலைவாய்ப்புடையோர், இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரை அணிதிரட்டும், மற்றும் தேர்தலுக்கு அப்பாலும் நீண்டு, தொழிலாள வர்க்கத்தின் பரந்த சோசலிசக் கட்சியை கட்டியமைப்பதற்கான அடித்தளங்களை இடும், அடிமட்டத்திலான ஒரு அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதன் மூலமே அடையப்பட முடியும்.

நாங்கள் இந்த சவாலை, எங்கள் ஆதரவாளர்கள் முன் வைக்கின்றோம்: சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் எங்களுடன் இணையுங்கள், அதன் வேட்பாளர்களுக்கு ஆதரவை வென்றெடுங்கள், தொழிலாள வர்க்கம், இளைஞர்களிடையே எமது வேலைத்திட்டம் பற்றிய அரசியல் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள். சோசலிச சமத்துவக் கட்சியின் பிரச்சாரத்தை கேட்பதற்கு உங்கள் அண்டைப்பகுதிகளிலும், உங்கள் பணியிடங்களிலும், பள்ளிகளிலும் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யுங்கள். இந்தப் பிரச்சார அரங்கினை எவ்வளவு விரிவுபடுத்த முடியுமோ, அவ்வளவு விரிவுபடுத்துங்கள். சோசலிச சமத்துவக் கட்சியை, உழைக்கும் மக்களின் ஒரு புதிய அரசியல் கட்சியாகக் கட்டி எழுப்ப உதவுங்கள்.

இந்தப் பிரச்சாரத்தை நடத்துவதில் மிகப் பாரிய தடைகளை சந்திக்கவுள்ளோம் என்பதை நாங்கள் இனங்கண்டுள்ளோம். அமெரிக்க அரசியல் முறை ஆழ்ந்த முறையில் ஜனநாயகத் தன்மையற்றது. இருகட்சி முறையானது, வாக்குப் பதிவில் இருந்து அனைத்துவிதமான சுயாதீனமான மாற்றீடுகளையும் அகற்றும் வகையில், குறிப்பாக இடதுகளை வாக்குச்சீட்டில் இடம்பெறவிடாது ஒதுக்கி, தன்னையே சாசுவதமாய் இருக்கச்செய்யும் வகையை கொண்டுள்ளது. ஒருதலைப்பட்சமான, இயலாத வகையில், சுதந்திரமான, மூன்றாம் கட்சி வேட்பாளர்கள் நிறைவேற்ற முடியாத வகையில் ஏராளமான தேர்தல் விதிகள் மூலம் இவ்வாறு அது செய்துள்ளது; வேட்புமனுக்கள் அளிக்க வேண்டிய காலக் கெடுக்கள் வாக்குப்பதிவில் இடம் பெறுவதற்கு வகை செய்வதற்குப் பதிலாகத் தடைசெய்யும் வகையில்தான் உள்ளன. பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம் குறிப்பாக சோசலிஸ்டுகளிடம் இருந்து வரும் விமர்சன கருத்துக்களை விலக்கி ஒதுக்குகிறது.

ஆயினும்கூட, நாங்கள் பெரு முயற்சி கொண்ட பிரச்சாரம் ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். ஒரு இலட்சியம் நிறைந்த சோசலிச, சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறோம் மற்றும் இவ்வேலைத்திட்டம் உழைக்கும் மக்களிடையே பெருகிய அளவில் ஆதரவுத் தளத்தை பெறும் என்ற உறுதியானநம்பிக்கையில் செய்கிறோம். இப்பிரச்சாரத்தின் பரப்பு, எங்களால் நிறுத்திவைக்கப்படக்கூடிய அளவு வேட்பாளர்கள், பங்கு பெறும் மாநிலங்கள், பகுதிகள், பிரச்சார ஈடுபாடுகள் ஆகியவை சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை வாக்குச் சீட்டில் பதிவு செய்ய உதவுவதற்காக முன்வரும் தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவையும், பங்குபெறுதலையும் பொறுத்தே இருக்கும்.

சோசலிசத்திற்கான போராட்டத்தில் இணையுங்கள்!

சோசலிச சமத்துவக் கட்சி சர்வதேச சோசலிச இயக்கத்தின் மாபெரும் மரபுகளை அடிப்படையாகக் கொண்ட கட்சியாகும். சமத்துவம், மனித ஒற்றுமை, கூட்டுறவு, இல்லாமை மற்றும் ஒடுக்குமுறையிலிருந்து மனிதகுலத்தை சடரீதியாகவும் ஆன்மரீதியாகவும் விடுவித்தல் இவற்றிற்காக சோசலிசம் பாடுபடுகிறது. சோசலிசத்தின் முதல் பணி, வறுமையை அகற்றுவது ஆகும்; மனிதனுடைய உற்பத்தி சக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி இவற்றில் ஏற்பட்டுள்ள மகத்தான முன்னேற்றத்தை கணக்கில் கொண்டால், இந்த இலக்கு முற்றிலும் அடையக்கூடியதே ஆகும். மனித சமுதாயத்தின் பரந்த மக்களுடைய வாழ்க்கை தரங்களை உயர்த்தி, முழுமையான சமத்துவத்திற்கான நிலைமைகளை தோற்றுவிக்கவும் சோசலிசம் பாடுபடுகிறது.

ஆனால் மனிதன் ரொட்டியால் (பாண்) மட்டுமே வாழவில்லை; உடனடியான சடத்தேவைகள் மிக முக்கியமானவையாக இருந்தபோதிலும், அவற்றை பூர்த்தி செய்வதோடு சோசலிசத்தின் முன்னோக்கு நின்று விடவில்லை. அந்த சாதனையானது, பண்பாடு, விஞ்ஞானம் மற்றும் தனிப்பட்ட ஆண்கள், பெண்களின் அறிவார்ந்த மற்றும் ஒழுக்கநெறி மேன்மை மாபெரும் அளவில் பூத்துக் குலுங்குவதற்கான அடித்தளங்களை அமைக்கும். உற்பத்தி சக்திகளின் சமூக உடைமை, சர்வதேச திட்டமிடல் மற்றும் ஒத்துழைப்பு உள்ள உலகில், மக்களுடைய திறமைகள், ஆர்வங்கள் மற்றும் இயல்திறன்களின் சாத்தியமான முழுவளர்ச்சியையும் சோசலிசம் எதிர்பார்க்கிறது, மற்றும் மக்கள் பங்கேற்பு, ஜனநாயக ரீதியான கட்டுப்பாடு இவற்றின் பரந்த அளவிலான விஸ்தரிப்பு பொருளாதார பாதுகாப்பின்மையின் அரைபடும் செயலிழந்த நிலையிலிருந்தும் நாயை-நாய் அடித்துத் தின்னும் போட்டியின் மனிதநேயமற்ற பாதிப்பிலிருந்தும் மனிதனை மீண்டுவரக் கூடியவனாக ஆக்கும்.

கார்ல் மார்க்ஸ் வருகையுடன், சோசலிசம் ஓர் விஞ்ஞானமானது. 1917 அக்டோபர் புரட்சியோடு அது, முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து முதலாவது தொழிலாளர் அரசை -சோவியத் ஒன்றியத்தை- ஸ்தாபித்ததன் மூலம் ஒரு பரந்த மக்கள் இயக்கத்தின் வேலைத் திட்டமானது.

சமூக சமத்துவத்திற்கான, தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சர்வதேச போராட்டத்தின் பாகமாக ரஷ்ய புரட்சி விளங்கியது. அமெரிக்க தொழிலாளர்களின் ஒவ்வொரு முக்கியமான முன்னேற்றமும், நாள் ஒன்றுக்கு எட்டு மணிநேர வேலையிலிருந்து, குழந்தை உழைப்புச் சட்டங்கள், அனைவருக்கும் பொதுவான பொதுக்கல்வி, மிகப்பெரிய அளவில் தொழில் துறையில் சங்கங்கள் நிறுவப்படல், தெற்கே ஜிம் க்ரோவின் (Jim Crow) பிரிவினை கருத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது வரையில், அனைத்தும் சோசலிச எண்ணம் கொண்ட போராளிகளால் தலைமை தாங்கப்பட்டதாகும்.

பல மகத்தான உயர்சிந்தனைகள் போலவே, சோசலிசமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, காட்டிக் கொடுக்கவும் பட்டது. சோவியத் ஒன்றியத்தில் ஜோசப் ஸ்ராலின் கீழ் எழுந்த ஓர் அதிகாரத்துவத்தால் அது காட்டிக் கொடுக்கப்பட்டது. ஸ்ராலினிசமானது, ரஷ்ய புரட்சியின் சர்வதேசிய மரபுரிமையின் மற்றும் அனைவருக்கும் சம உரிமைக்கு போராடுவதன் தொடர்ச்சியாக இருக்கவில்லை. அது "தனி ஒரு நாட்டில் சோசலிசம்" எனும் தேசியவாத வேலைத்திட்டத்தின் அடிப்படையில், புரட்சிக்கு எதிரான பழமைவாத, அதிகாரத்துவ பிற்போக்காக இருந்தது. ஸ்ராலினிச அதிகாரத்துவம் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகத்தை நசுக்கியது, சர்வாதிகார ஆட்சியை திணித்தது, உண்மையான மார்க்சிஸ்டுகளை கொன்றழித்தது மற்றும் உலகெங்கிலும் படர்ந்திருந்த தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை நிலைகுலையச் செய்தது - இவை எல்லாவற்றையும் "சோசலிசம்" எனும் பெயரில் செய்தது. ரஷ்ய புரட்சியும் சோசலிசமும் ஸ்ராலினிஸ்டுகளால் காட்டிக் கொடுக்கப்பட்டது, கிரெம்ளின் அதிகாரத்துவம் சர்வதேச ஏகாதிபத்தியத்துடன் நேரடியாக ஒத்துழைத்து சோவியத் ஒன்றியத்தை உடைத்ததிலும், 1990 களின் ஆரம்பத்தில் முதலாளித்துவத்தை மீட்டதிலும் உச்சக் கட்டத்தை அடைந்தது.

அமெரிக்காவில், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் தொழிற்சங்கங்களுக்குள்ளேயே வளர்ச்சி கண்ட அதிகாரத்துவத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டது. அதிகாரத்துவம், முதலாளித்துவ அமைப்பை பாதுகாத்ததோடு, பிரதானமாக ஜனநாயகக் கட்சியுடனான அதன் கூட்டின் மூலமாக, அமெரிக்க பெரு வர்த்தகத்திற்கு தொழிலாளர்களை அரசியல் ரீதியாய் அடிபணியச் செய்தது. AFL-CIO -ன் காட்டிக்கொடுப்பு, தொழிற்சங்கங்கள் தங்களை பெருநிறுவன நிர்வாக மேலாண்மையுடன் அடையளப்படுத்திக்கொள்வதற்கு இட்டுச்சென்றது மற்றும் தொழிலாள வர்க்கத்தை பாதுகாப்பதற்கு பதிலாக அவர்களை அடக்கும் கருவிகளாக அவர்கள் மாற்றம்பெற வழிவகுத்தது.

எமது இயக்கம் இந்த அதிகாரத்துவத்திற்கான எதிர்ப்பில், சோசலிசத்திற்காக போராடிய, சிறந்த மிகவும் துணிவுள்ள மற்றும் தொலைநோக்கு கொண்ட தொழிலாள வர்க்கத்தின் பிரதிநிதிகளின் மரபுரிமை செல்வத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்த மரபின் மிகப்பெரிய பண்புருவாக விளங்கியவர், ரஷ்ய புரட்சியின் தலைவராக விளங்கியவரும், ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிரான போராட்டத்தை வழிநடத்தியவரும் 1938ல் நான்காம் அகிலத்தை - சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியாக நிறுவியதன் மூலம் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தின் மறுபிறப்பிற்கு அடிப்படையை அமைத்தவருமான லியோன் ட்ரொட்ஸ்கியாவார்.

சோசலிசத்திற்காக அமெரிக்கா மாபெரும் போராளிகளையும் தோற்றுவித்துள்ளது; இந்த ஆடவரும் பெண்டிரும் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் போராடி, தொழிலாள வர்க்கத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் ஆவர். அவர்களுள் Big Bill Haywood, Eugene Debs, James Cannon போன்ற பெரும் தலைவர்களும் அடங்குவர். அமெரிக்க தொழிலாளர்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளையும் வேலை நிலைமைகளையும் பாதுகாப்பதற்கு இன்று போராட்டத்தை ஒழுங்கமைக்கும் பொருட்டு, இந்த அரிய, அவர்கள் விட்டுச் சென்ற சோசலிச மரபியத்தை தமதாக்கிக் கொள்ள வேண்டும்.

போர், இராணுவவாதம், ஜனநாயக உரிமைகள்மீதான தாக்குதலை எதிர்ப்பவர்கள் மற்றும் சமூக சமத்துவத்திற்காக போராட ஆதரவு தர விரும்பவர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அழைக்கிறோம். தங்கள் மாநிலங்களிலும் பகுதிகளிலும் மனுக்கள் தாக்கல் செய்யும் முயற்சிகளில் உவந்து முன்வந்து கலந்து கொள்ளுமாறும் வேண்டுகிறோம். சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைத்திட்டத்தில் உடன்பாடு உடையவர்கள் அனைவரையும் தாங்களே சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளராக முன்வந்து போட்டியிடவும் அழைக்கிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved