World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Japan plans aggressive global energy strategy

ஆற்றல் மிகுந்த உலகளாவிய எரிபொருள் மூலோபாயத்தை ஜப்பான் திட்டமிடுகிறது

By John Chan
15 June 2006

Back to screen version

உலகில் முக்கிய பிரதான வல்லரசுகளுக்கிடையில் எண்ணெய்க்கும் எரிவாயுவுக்கும் வலுத்த போட்டி உருவாகியிருக்கையில், அமெரிக்கா உள்பட, தனது பொருளாதாரப் போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் மற்றும் தனக்கு போதுமான அளவுக்கு எரிபொருள் அளிப்புக்கள் கிடைப்பதை உத்திரவாதம் செய்வதற்கும் ஜப்பான் தனது சொந்த மூலோபாயத்தை இரகசியமாக தயார்செய்து வருகின்றது.

டோக்கியோவை அடிப்படையாக கொண்ட ஒரு சிந்தனைக் குழாமின் மையமான ஜப்பானிய பன்னாட்டு உறவுகள் அமைப்பு (JFIR), சென்ற மாதம் ஜப்பானிய பிரதம மந்திரி ஜூனிசிரோ கொய்சுமியிடம் சக்தி ஆதாரங்கள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஒரு கொள்கை ஆவணத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆவணத்தில் மற்றைய நாடுகளுடன் "ஒத்துழைக்க வேண்டும்" என உதட்டளவில் கூறப்பட்டாலும், இந்த ஆவணத்தின் இதயப் பகுதியில் "எமது தேசிய நலன்களுக்கு தேவையான ஒரு நேர்த்தியான திட்டம் வடிவமைக்கப்பட வேண்டும்" என்கிற அழைப்பை விடுத்துள்ளது. மூலோபாய வல்லுநர்களும் ஆய்வு வல்லுநர்களும் அடங்கிய இந்தக் குழு இந்த அறிக்கையை தயாரிக்க ஏறக்குறைய ஒரு வருட காலம் எடுத்துக் கொண்டுள்ளது.

எரிபொருட்களை பன்னாட்டுச் சந்தையில் விலை கொடுத்து வாங்கும் எளிய ஒரு பண்டமாக ஜப்பான் இனி மேலும் கருதக்கூடாத நிலையில் உள்ளது என வாதிட்டுள்ள இந்த JFIR ஆவணம், ஜப்பான் "ஒரு அரசாக இந்த உலகில் நிலைத்திருக்க" எரிபொருள்கள் ஒரு முக்கியமான மூலோபாயமிக்க பகுதிப் பொருள் எனக் கருதப்படவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. எண்ணெயையும் எரிவாயுவையும் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் அரசு முனைப்பாக தலையிட வேண்டும் என வற்புறுத்தி செயலாற்றத் தூண்டும் இந்த ஆவணம் உலகின் மற்றைய பிரதான அதிகார மையங்கள் இவ்வாறு செய்து கொண்டிருக்கையில் ஜப்பான் "பின் தங்கியுள்ளது" என்று எச்சரித்துள்ளது.

"எதிர்பார்க்கும் பலனளிக்கக்கூடிய வகையில் சந்தை நுட்பங்களால் எண்ணெய் விலையை இனிமேலும் நிர்ணயிக்க முடியாது" என இந்த JFIR விவாதங்களை, முன்னின்று நடத்திய எரிசக்திப் பொருளியல் நிறுவனத்தின் தலைவரான, (Masahisa Naito) மசாஹிசா நேய்டோ விளக்கினார்: "மத்தியக்கிழக்கில் 1970-களில் தோன்றிய இந்த எண்ணெய் அதிர்ச்சி, தற்போது சீனாவில் இருந்து வெளிப்படுகிறது" என விரைவாய் வளர்ந்து கொண்டிருக்கும் சீனாவின் எண்ணெய்த் தேவைகளை, எடுத்துக்காட்டி JFIR தலைவர் கெனிச்சி இட்டோ தெளிவுப்படுத்தினார்.

மத்தியக்கிழக்கு பகுதியின் எண்ணெய் வளத்தை சார்ந்திருக்கும் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் தனது போட்டியாளர்களை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்துள்ளதுடன் ஈரானை தாக்கப்போவதாய் அச்சுறுத்தியுள்ளது. எண்ணெய் வள பணக்கார நாடுகளான ரஷ்யா, மத்திய ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள எண்ணெய் கிணறுகளை விலைக்கு வாங்கவோ அல்லது அந்த நாட்டு எரிசக்தி சொத்துக்களில் முதலீடு செய்யும்படி பெய்ஜிங் அரசு-கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களை செயலூக்கமுடன் பயன்படுத்திக் கொண்டு வருகிறது. மறுபுறத்தில், ரஷ்யா தன்னிடம் இருக்கும் அதிக அளவான எண்ணெய்் மற்றும் எரிவாயு வளங்களை ஒரு அரசியல் ஆயுதமாக அதிக அளவில் பயன்படுத்திக் கொண்டு கிழக்கு ஐரோப்பாவில் தனது செல்வாக்கெல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் கூட்டணிகளை உருவாக்கி வருகிறது.

இந்த எரிசக்திப் போட்டியில் குறிப்பாக ஜப்பான் பலவீனமாக இருக்கிறது. உலகிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகவும், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்தாற்போல உலகிலேயே மூன்றாவது பெரிய அதிக அளவில் எண்ணெய் உபயோகிப்பாளராக இருக்கும் ஜப்பானுக்கு சொந்தமாக எண்ணெய் வளம் எதுவும் இல்லாத நிலையில் தன்னுடைய எண்ணெய் இறக்குமதியில் 80 சதவீதத்துக்கும் மேலாக மத்தியக்கிழக்கு நாடுகளையே சார்ந்திருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பில் ஜப்பான் பங்கு கொண்டது ஈராக்கில் பயன்படுத்தப்படாது ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் வளத்தை அணுகுவதற்காகத்தான்.

ஈரானுக்கு எதிராக புஷ் நிர்வாகத்தின் போர்வெறிக்கூச்சலால் ஐரோப்பிய அரசுகள், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவற்றை போல ஜப்பானின் பொருளாதார நலன்களும் அச்சுறுத்தப்படுகின்றன. ஈரானில் அமெரிக்க-ஆதரவு "ஆட்சி மாற்றம்" ஏற்படின் அந்த ஆட்சி டெஹரானுடன் ஜப்பானிய பெருநிறுவனங்கள் கையெழுத்திட்டு செய்து கொண்டுள்ள எண்ணெய் ஒப்பந்தங்களை கேள்விக்குள்ளாக்கும். தற்போது ஜப்பானுக்கு மூன்றாவது பெரிய எண்ணெய் விநியோகம் செய்யும் நாடாக ஈரான் இருந்து வருகிறது. சென்ற மார்ச் மாதம், நிப்போன் ஆயில் கார்ப்பொரேஷன் ஈரானிலிருந்து தாங்கள் இறக்குமதி செய்யும் எண்ணெய்் அளவினை இந்த வருடம் 15 சதவீதம் குறைத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதற்கு, டெஹரானுக்கு எதிரான அமெரிக்க அச்சுறுத்தல் தான் பெருமளவில் காரணமாக இருக்கிறது.

பன்னாட்டு உறவுகளில் சமீப வருடங்களில் மேற்கொண்டுள்ள மாற்றம் "பன்னாட்டு எரிபொருள் சந்தையில் தேசிய நலன்கள் முரண்பட காரணமாகியுள்ளது" என JFIR அறிக்கை கருத்துத் தெரிவித்துள்ளது. "ஜப்பானை போல எரிசக்தி வளங்கள் போதாத நிலையில் இருக்கும் நாடுகளில் செயல்படுவதற்கான எரிசக்தி திட்டம் கடுமையாகத் தேவைப்படும் நிலை இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை என இந்த அறிக்கை கூறுகிறது.

இந்த ஆவணத்தில் ஒரு குறிப்பிட்ட திட்டம் எதுவும் தெரிவிக்கப்படாவிட்டாலும், தொடர் வரிசையான பரிந்துரைகளின் முக்கிய அம்சங்கள் குறித்த குறிப்புகளை தெரிவித்துள்ளன. ஒரு நீண்டகால செயல்படுத்தும் திட்டமாக ரஷ்யன் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உபயோகிப்பதன் மூலம் மத்திய கிழக்கிலிருந்து வாங்கும் எண்ணெயை பல முனைப்படுத்த வேண்டும் என்பதே முக்கியமான பிரேரனை ஆகும். மத்தியக்கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் "எண்ணெய்-வழங்கும் நாடுகள்" என்று தொடர்ந்து நிற்க வல்ல ஒரு குழுவை உருவாக்க முதலீடு, நிதி உதவி மற்றும் இதர பயன்களை பயன்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது. மேலும், நிலையான நீண்டகால விநியோக முறைமையாக குழாய் வழியைப் பயன்படுத்தவும், முக்கியமாக ரஷ்யன் பிராந்தியங்களான கிழக்கு சைபீரியா மற்றும் சாக்ஹாலின் ஆகியவற்றிலிருந்து எண்ணெய் வாங்கும் போது குழாய் வழியைப் பயன்படுத்துமாறும் இந்த ஆவணம் டோக்கியோவை வலியுறுத்தியுள்ளது.

ஒரே ஒரு எண்ணெய்் ஆதாரத்தை மட்டுமே மிகவும் சார்ந்திருப்பதன் அபாயம் குறித்தும் JFIR எச்சரித்துள்ளது. 2005ம் ஆண்டின் கடைசியிலிருந்து 2006ம் ஆண்டின் முற்பகுதி வரை ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே ஏற்பட்ட ஒரு வகையான சூழ்நிலையால் எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டது போன்ற இழப்பு நேரிடக்கூடிய நிலையையும் மனதில் கொள்ள வேண்டியது முக்கியமாகும். மேலும் மலாக்கா நீரிணை வழியாக எரிபொருட்கள் கொண்டு வருவதில் இருக்கும் பிரச்சினை உட்பட பாதுகாப்பாக எரிசக்தியை இடம் விட்டு இடம் கொண்டு செல்வதும் நமக்கு ஒரு முக்கியமான விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

தனக்கு அவசியமாக தேவைப்படும் எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து எதிர்பார்க்கும் சீனாவுடன் இத்தகைய திட்டங்கள் தவிர்க்க முடியாத நிலையில் ஜப்பானை சீனாவுடன் மோதலுக்கு கொண்டுவரும். சைபீரியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய் வழி கட்டுவதில் சீனாவும் ஜப்பானும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் கிழக்கு சீனக் கடலில் இருக்கும் தொடர் எரிவாயு வயல்கள் தொடர்பான ஒரு சச்சரவில் சிக்கிக் கொண்டிருக்கின்றன. அரசாங்கத்தின் ஆதரவுடன் இன்பெக்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் டெய்கோகு ஆகிய இரு ஜப்பானிய எண்ணெய் நிறுவனங்கள் பூசல் ஏற்பட்டுள்ள பகுதிகளில் எண்ணெய் ஆய்வை ஆரம்பித்துள்ளன.

ஜப்பானும் சீனாவும் மத்திய ஆசியாவின் போட்டியாளர்கள். கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி ஜப்பான் நாட்டு அலுவலர்கள் மத்திய ஆசியாவின் நான்கு குடியரசு நாடுகளான-கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான்-ஆகிய நாடுகளில் தங்கள் சரிநேர் அலுவலர்களுடன் எரிபொருட்கள் மற்றும் "பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்" ஆகியவற்றில் ஒத்துழைப்பை தீவிரமாக்குதல் குறித்த ஒரு "செயல் திட்டத்தைப்பற்றி" விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தனர். "பட்டுச்சாலை இராஜதந்திரம்", என்னும் தனது இராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலத்தால் சூழப்பட்டுள்ள மத்திய ஆசியாவுக்கு மாற்று அணுகு வழியாக தாஜிகிஸ்தானின் தெற்கிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு-சீனாவையும் ரஷ்யாவையும் தவிர்க்கக்கூடிய வகையில் ஒரு சாலை வழியை கட்டி முடிக்க ஜப்பான் திட்டமிடுகிறது.

மூலோபாய நலன்கள்

எண்ணெய்க்காகவும் எரிவாயுவுக்காகவும் ஜப்பானுடைய உந்துதல் அமெரிக்காவுடனான அதன் நெருக்கத்தில் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலுடைமையையும் கொண்டுள்ளது. கடல் கடந்த எரிசக்தி விநியோகத்தை "இறுக்கிப்பிடிக்கும்" ஜப்பானின் முயற்சிகள் உலக எண்ணெய் விலையை மேலும் அதிகரிக்கவே செய்யும் என மே 16ம் தேதி தி வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் பத்திரிகை எச்சரித்துள்ளது. அரசாங்க மானியங்களுடன் ஜப்பானுடைய முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் கடல் கடந்து எண்ணெய் சொத்துக்களை தேடிப் பெறுவதை நோக்கி செல்கின்றன என்பதை அந்த இதழ் சுட்டிக் காண்பித்துள்ளது. 2030ம் ஆண்டு வாக்கில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள எண்ணெய் வயல்களிலிருந்தும் அந்த நிறுவனங்கள் இயக்கி வருகின்ற எண்ணெய் நிறுவனங்களிலிருந்தும் எண்ணெய் இறக்குமதி செய்வதை தற்போதைய 15 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் அதிகரிக்க டோக்கியோ திட்டமிட்டுள்ளது.

நிறுவனங்களை முதலீடு செய்யவும் வெளிச்சந்தையில் அதிக அளவில் எண்ணெய்யை விற்கவும் ஊக்குவிப்பதன்மூலம், எண்ணெயின் அதிக விலையால் எண்ணெய் விநியோகப் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்கிற தத்துவத்தில் ஜப்பான் நம்பிக்கை கொள்ளவில்லை என ஒரு ஜப்பானிய எரிசக்தி அலுவலர் இந்த பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். தன்னுடைய எரிசக்திப் பாதுகாப்புக்காக, உலகளவில் இருக்கும் தன்னுடைய சொந்த எண்ணெய் சொத்துக்களை ஜப்பான் கட்டுப்படுத்தி இயக்க வேண்டியுள்ளது.

ஜப்பானிய அரசாங்கம் 29 சதவீதம் பங்கினை கொண்டுள்ள, இம்பெக்ஸ் ஹோல்டிங் நிறுவனம், வடமேற்கு ஆஸ்திரேலிய கடற்கரையின் கரையிலிருந்து சற்று விலகி இருக்கக்கூடிய ஒரு இயற்கை எரிவாயு வயலை வெளிக்கொணர்ந்து அபிவிருத்திசெய்ய 6 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய திட்டம் வைத்துள்ளது. ஆண்டிற்கு 12 மில்லியன் டன்கள் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை அல்லது ஜப்பானின் தேவையில் ஐந்தில் ஒரு பங்கினை இந்தத் திட்டம் உற்பத்தி செய்ய முடியும். இந்தோனேஷியா, பிரேசில், காஸ்பியன் கடல் மற்றும் லிபியாவிலும் இந்த நிறுவனம் சுறுசுறுப்பாக செயலாற்றி வருகின்றது.

ஈக்வடோரியல் கினியா, லிபியா மற்றும் இதர இடங்களிலும் இருக்கும் கடல் கடந்த எரிசக்தி சொத்துக்களில் அதிக அளவில் ஆற்றல் நிறைந்த வகையில் முதலீடு செய்யுமாறு மிட்சூயி, மிட்சூபிசி மற்றும் ஜப்பான் பெட்ரோலியம் எக்ஸ்புளோரேஷன் ஆகிய முக்கிய ஜப்பானிய நிறுவனங்களை கூட்டாண்மை நிறுவனங்களை கொய்சுமி அரசாங்கம் ஊக்கப்படுத்தி வருகின்றது.

ஈரானை எடுத்துக்கொண்டால், ஈரானில் ஜப்பானுக்கு இருக்கும் உறுதியான எண்ணெய் நலன்கள் மற்றும் டெஹரானின் அணு ஆயுதத் திட்டத்தினால் அதனை தண்டிக்கும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் ஆதரவு அளிக்க வேண்டும் என்னும் அதிகார தோரணையான அமெரிக்க கோரிக்கை ஆகியவற்றிற்கிடையில் ஜப்பான் ஏற்கெனவே அகப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது எனவும் மீறினால் பதிலடி நடவடிக்கை இருக்கும் எனவும் மறைமுகமாக குறிப்பிட்டு மே 17ம் தேதியன்று டோக்கியோவில் இருந்த ஈரானிய தூதுவர் ஜப்பானை எச்சரித்துள்ளார். ஒரு நாளைக்கு 250.000 பீப்பாய்கள் உற்பத்தி செய்யவல்ல ஈரானுடைய பெரும் பரப்பிலான அசடேகான் எண்ணெய் வயலை அபிவிருத்தி செய்ய இன்பெக்ஸ் நிறுவனம் முயல்கிறது.

அடுத்த நாள் Asahi Shimbun க்கு அளித்த பேட்டியில், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர், இஜான் போல்டன், ஈரானுடைய "திறமையான கையாளலுக்கு" ஜப்பான் அடிபணியக்கூடாது என அப்பட்டமாக எச்சரித்துள்ளார். "ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற எண்ணெய் தேவை அதிகமாக வளர்ந்து வரும் நாடுகளைப் போல் உள்ள நாடுகளை தன்னுடைய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களை நெம்புகோலாக பயன்படுத்தும் நுண்ணறிவால் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான செயல் திறனை அடைவதை பற்றித்தான் நாங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்கிறோம்" என அவர் கூறியுள்ளார்.

போல்டன் பின்னர் ஒரு மெல்லியதான-மறைவான இலஞ்சத்தை வழங்கும்விதமாக அறிவித்தார்:. "எல்லாவிதமான சாத்தியக் கூறுகளும் உள்ளன, தற்போது பொருளாதார தடுப்பு நடவடிக்கைகள் அகற்றப்பட்டுவிட்டபடியால், லிபியன் எண்ணெய் சொத்துக்களை ஆய்வு செய்து துளையிடும் பணி மேற்கொள்ளலாம். ஜப்பானிய திட்ட வகுப்பாளர்கள் இதை சற்றே எண்ணிப்பார்த்து வருகிறார்கள் என்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன். வேறு வார்த்தைகளில் கூறப்போனால், டெஹரானில் அமெரிக்காவின் "ஆட்சி மாற்ற" திட்டத்தை ஆதரித்தால் லிபியா, ஈரான் மற்றும் எங்கு வேண்டுமானாலும் எண்ணெய்க்காக ஜப்பான் அணுகலாம் என்பதே. இருந்தாலும், அப்போது ஜப்பானுடைய எண்ணெய் மற்றும் எரிவாயுவின் பங்கீடு எவ்வளவு என்பதை அமெரிக்கா தான் முடிவு செய்யும் என்பதை டோக்கியோ நன்றாக அறியும்..

இத்தகைய பெரிய வல்லரசின் பதற்றங்கள் வெடிக்குமியல்புகள் மிகுந்தவை. வளங்களின் மீது ஏற்பட்ட பூசல்களால் தான் பசிபிக் பகுதிகளில் இரண்டாம் உலக மகாயுத்தம் தோன்றியது என்பதை இங்கு நினைவு கூர்வது தகைமையுள்ள ஒன்று. 1931ம் ஆண்டில், பொருளாதார பெருமந்த நிலையின் இடையில், மஞ்சூரிய பகுதியின் எண்ணெய், இரும்புத் தாது மற்றும் நிலக்கரி ஆகியவற்றை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஜப்பான் மஞ்சூரியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது. இந்த செய்கையினால், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை ஜப்பான் பகைவராக்கிக் கொண்டு 1937-ல் சீனாவின் மீது ஜப்பான் படையெடுத்த போது இந்த முரண்பாடு ஆழமாகியது. 1941-ல், அமெரிக்கா எண்ணெய் கப்பல்கள் வெளியே செல்லவோ உள்ளே வரவோ இயலாமல் தடை செய்த பின், ஜப்பான் பேர்ள் துறைமுகத்தை தாக்கியது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved