World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Western diplomacy supports Israel's war of aggression

மேற்கத்திய இராஜதந்திரம் இஸ்ரேலிய வலியத்தாக்கும் போரை ஆதரிக்கிறது

By Chris Marsden and Barry Grey
19 July 2006

Back to screen version

லெபனானுடனான இஸ்ரேலின் வான்வழிப் போரின் ஏழாம் நாளான செவ்வாயன்று, 250 குடிமக்கள் கொல்லப்பட்டு, நாட்டின் உள்கட்டுமானம் பெரிதும் அழிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் இன்னும் ஓர் அச்சுறுத்தலை சிரியாவிற்கு எதிராக வெளியிட்டார்.

"லெபனானுக்குள் மீண்டும் சிரியா நுழைய முற்படுகிறது" என்று அறிவித்த அவர், அமெரிக்கா, பிரான்சின் தலையீட்டில் நிகழ்ந்த பிரச்சாரத்தினால் சிரியப் படைகள் வெளியேறி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது என்றும், அழிவிற்குட்பட்டுள்ள லெபனான் நாட்டிற்கு அவற்றை மீண்டும் அழைக்க முற்படக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

வாஷிங்டன் மற்றும் டெல் அவிவ் இரண்டினிடமும் இருந்து வரும் அவநம்பிக்கைத்தன்மை மிகுந்த, அயோக்கியத்தனமான அறிக்கைகளின் வாடிக்கைத்தனத்தைத்தான் புஷ்ஷின் அறிக்கை கொண்டிருந்தது; இந்த அறிக்கைகள் அனைத்துமே ஐரோப்பிய சக்திகள் மற்றும் மேற்கத்தைய செய்தி ஊடகத்தால் சவாலுக்கு உட்படுத்தப்படுவதில்லை.

அமெரிக்காவினால் தன்னுடைய மத்திய கிழக்கின் நெருக்கமான நட்பு நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ள குண்டுகள், ஏவுகணைகள், போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்களால் தாங்குதலுக்கு உட்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ள நாட்டின் விவகாரங்களில் சிரியா தலையிட முற்படுகிறது என்று புஷ் குற்றம் சாட்டியுள்ளார். ஹெஸ்பொல்லா, சிரியா மற்றும் ஈரானை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அவர் சித்தரித்துக் காட்டுவதோடு, இஸ்ரேல் ஒரு பாதுகாப்பற்ற லெபனான் முழுவதிலும் குடிமக்களின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்ற எதிர்ப்பையும் பொருட்படுத்துவதில்லை; இவருடைய நடவடிக்கை, இவ்வாறு செய்பவர்களை போர்க்குற்றவாளிகள் என வரையறுக்கும் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும்.

பெரும் வல்லரசுகளும், அவற்றின் எடுபிடியுமான ஐ.நா.வும் லெபனிய பூசலை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆணையிடும் வகையில் தீர்ப்பதற்காக கூடுதலான இராஜதந்திர முயற்சிகளில் புஷ்ஷின் கருத்துக்கள் மகுடமாக அமைந்தன. தன்னுடைய தற்போதைய உந்துதலான ஹெஸ்போல்லாவை அழித்து லெபனானை இஸ்ரேலிய கருவியாக மாற்றும் முயற்சி, மற்றும் தன் ஏகாதிபத்திய இலக்குகளை எதிர்க்கும் எந்த மற்றும் அனைத்து சக்திகளின்மீதும் வருங்கால தாக்குதல்களை கொள்ளும் உந்துதலுக்கு குறுக்கே எது நின்றாலும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று இஸ்ரேல் தன் பங்கிற்கு தெளிவாக்கிவிட்டது.

பிரிட்டிஷ் பிரதம மந்திரி டொனி பிளேயர் மற்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னனாலும் கூட்டாக முன்வைக்கப்பட்ட கருத்தான "சர்வதேச அமைதிகாக்கும் படை" ஒரு வெற்றிபெற்ற நாட்டின் அமைதியை காக்கும் வகையில்தான் உள்ளது. இஸ்ரேலை ஒட்டிய தெற்குப் பகுதிகளில் ஹெஸ்பொல்லாவுடைய எவ்வித நடமாட்டமும் அகற்றப்பட வேண்டும் என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதுதான் அதன் பணியாக இருக்கும்.

அதே நேரத்தில் அன்னனும், பிளேயரும் முன்வைத்த திட்டத்தில் உள்ள சர்வதேசப் படை பெரும் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களைத்தான் நேரடியாக காக்கும். ஒரு நிரந்தரமான இராணுவக் குவிப்பை நிறுவுவதற்கு வாஷிங்டனுக்கு, ஒரு வாய்ப்பை கொடுப்பதுடன் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளுடன் (IDF) நேரடியாக செயலாற்றவும் வாய்ப்பை கொடுக்கும். "அப்படை தேவை என்னும் வாய்ப்புக்கு நாங்கள் இணங்குகிறோம்" என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்புப் பிரிவு செய்தித் தொடர்பாளரான பிரெடரிக் ஜோன்ஸ் கூறினார் ஆனால் பிற அமெரிக்க செய்தித் தொடர்பாளர்கள் திட்டத்தை பற்றி ஆர்வம் காட்டவில்லை.

ஐரோப்பிய சக்திகள் இத்திட்டத்தை வாஷிங்டனின் மேலாதிக்க நிலைமை மத்திய கிழக்கில் இருப்பதைக் குறைக்கும் திறனுடையது என்ற கருத்தில் வரவேற்றன. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து கொண்டு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் இந்தப் படைக்கு ஆதரவாக உறுதி மொழி கொடுத்த நாடுகளில் முதன்மையாக நின்றார். பிரெஞ்சு பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனும் ஐ.நா. படைகள் அனுப்பப்படுவதற்கு ஆதரவு கொடுத்தார்; பிரெஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக், ஹெஸ்போல்லாவை ஆயுதம் களையவைக்க அழைப்புவிடும் ஐ.நா. தீர்மானத்தை செயல்படுத்துதற்கு "கட்டாயப்படுத்தும் வழிவகை" தேவைப்படலாம் என்று தான் நம்புவதாக கூறினார்.

ஆனால் அத்தகைய ஐ.நா.வினால் இயக்கப்படும் பாதுகாப்புப் படை இஸ்ரேலிய பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட்டினால் இஸ்ரேலின் சுதந்திர நடவடிக்கைக்கு ஏற்க முடியாத வரம்பு எனக் கருதப்படுகிறது. இராணுவவகை வன்முறைதான் அமெரிக்க, இஸ்ரேலிய ஆளும் உயரடுக்கினரால் விழையப்படும் வழிவகையாகும்.

மேலும், லெபனானை முற்றிலும் ஆதிக்கத்திற்கு உட்படுத்தி அதை, வலிமையற்ற வாடிக்கை ஆட்சியாக மாற்றுவது ஒன்றுதான் இஸ்ரேலுக்குத் திருப்தியை அளிக்கும். இஸ்ரேலிய நாளேடான Haaretz குறிப்பிட்டுள்ளது போல், தெற்கில் ஒரு பாதுகாப்புப் பகுதியை தோற்றுவிப்பது இஸ்ரேலிய பாதுகாப்பு சக்திகளால் போதுமானதாக இருக்காது எனக் கருதப்படுகிறது; ஏனெனில் "இது ஹெஸ்போல்லாவை நீண்ட தூரம் இயக்கக்கூடிய ராக்கெட்டுக்கள், ஏவுகணைகள் லெபனானில் வடபுறத்தில் இருந்து செலுத்துவதை தடை செய்யாது...."

இஸ்ரேல் தன்னுடைய அடிப்படை இராணுவ நோக்கங்களை நிறைவேற்றும் வரை எவ்விதப் போர்நிறுத்தமும் இயலாது என்று புஷ்ஷும், ஓல்மெர்ட்டும் வலியுறுத்தியுள்ளனர். ஐ.நா.பிரதிநிதிகளுடன் நடத்திய விவாதங்களில் இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி Tzipi Livni இதே நிபந்தனைகளைத்தான் வலியுறுத்தியுள்ளார்.

இதே பிரச்சினையில் டெல் அவிவ் திறந்திருக்கும் கதவைத்தான் தட்டிக் கொண்டிருக்கிறது. ஐ.நா.வின் சிறப்பு தூதர் டெர்ஜே ரோயட் லார்சன் லிவினையை ஜெருசலத்தில் சந்தித்த பின்னர், "இரு கட்சிகளுமே உண்மையான போர் நிறுத்தத்தை பின்னர் இறுதியில் அடைவதற்கு அரசியல் வடிவமைப்பு தேவை என்று ஒத்துக் கொண்டன" என்று கூறியுள்ளார்.

எண்மர் குழுத் தலைவர்கள் ஞாயிறன்று செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் தங்கள் உச்சி மாநாட்டில் வெளியிட்டுள்ள தீர்மானமும் பூசலைப் பற்றி இஸ்ரேல் கொடுத்த விளக்கத்தை ஏற்றுள்ளது; லெபனானில் வெடித்துள்ள பூசல்களுக்கு ஹெஸ்பொல்லாவும், காசா பூசல்களுக்கு ஹமாசும்தான் காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன் மற்றும் லண்டனுடைய குறிப்பான விருப்பமாக அது இருந்த போதிலும், சிரியா, ஈரானை பெயரிட்டுக் கூறுவில்லையே ஒழிய அதுதான் தீர்மானத்தின் உட்குறிப்பாக உள்ளது;

ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இத்தகைய நீக்கம் மாஸ்கோவிற்கு காட்டிய சலுகை என்று பின்னர் தெரிவித்தார். நேற்று புஷ் இந்த நீக்கத்தையும் தவிர்த்து சிரியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

லெபனானின் மீதான தன்னுடைய தாக்குதல் சட்டநெறிக்கு உட்படுத்தப்பட்டுவிட்டது என்ற கருத்தில் இஸ்ரேல், G8 தீர்மானத்தை வரவேற்றுள்ளது. "சர்வதேச சமூகம் தீவிரவாதக் கூறுபாடுகளுடனான பூசல்களின் பொறுப்பு பற்றிக் கொண்டுள்ள நிலைப்பாட்டை பற்றிக் கூறியிருப்பதுடன் இஸ்ரேல் முற்றிலும் உடன்பட்டுள்ளது. இஸ்ரேலும் சர்வதேச சமூகமும், தீவிரமான பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் என்ற பொதுப் பிரச்சினையைத்தான் எதிர்கொண்டுள்ளன" என்று லிவினி கூறினார்.

ஓல்மெர்ட் அரசாங்கத்தை பொறுத்தவரையில், பெரும்பாலான மேற்குக்கரை மற்றும் கோலான் குன்று பகுதிகளை நிரந்தரமாக இணைத்திருக்கும் அகண்ட இஸ்ரேல் அடையப்படுவதற்கு, பாலஸ்தீனிய மற்றும் லெபனிய எதிர்ப்புக்கள் அனைத்தும் நசுக்கப்பட வேண்டும். இந்த தேவையை ஒட்டி, அதற்கு சிரியா, பின்னர் இறுதியில் ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும். ஈராக்கில் பாத்திச ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், ஈரான் ஒன்றுதான் பிராந்திய சக்தி என்னும் இடத்திற்கு இஸ்ரேலுக்கு போட்டியாக இருக்கும் ஒரே நாடாகும்.

ஈரானுக்கு எதிராக சர்வதேசப் பொருளாதாரத் தடைகளுக்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கையில் டமாஸ்கசும் டெஹ்ரானும் ஹெஸ்பொல்லலா மற்றும் ஹமாசின் நடவடிக்கைகளுக்கு ஊக்கம் கொடுத்துக் கொண்டிருப்பதாக புஷ் நிர்வாகம் குறைகூறியுள்ளது; அதே நேரத்தில் ரஷ்யாவும் சீனாவும் எதிர்ப்பையும் காட்டிக் கொண்டிருக்கிறது. காசாவிலும் லெபனானிலும் இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரோஷ போரை மத்திய கிழக்கில் தன்னுடைய சொந்த புவியியல் செயற்பாட்டிற்கு கூடுதலான நலன்களை கொடுக்கும் என்றும் புஷ் நிர்வாகம் கருதுகிறது.

ஓல்மெர்ட் அரசாங்கத்தின் பருந்துத்தன்மை கூறுபாடுகளுக்கு பெரும் ஆதரவு கொடுக்கும் ஜெருசலேம் போஸ்ட் ஏட்டின் ஜூலை 18ம் தேதி பதிப்பில் வந்துள்ள தலையங்கம் ஒன்று இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள நோக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளது. "புஷ்ஷின் மிகச் சிறந்த சிந்தனை" என்ற தலைப்பு இதற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

"ஹெஸ்பொல்லா மற்றும் ஹமாசை பெயரிட்டுக் குறிப்பிட்டுள்ளதுடன், ஈரானையும் சிரியாவையும் உட்குறிப்பாகக் கூறியதற்காகவும்" G8 தீர்மானத்தை பாராட்டிய பின்னர், புஷ்ஷும் பிளேயரும் "வெளிப்படையான வகையில்" "இப்பிரச்சினையின் அடிக் காரணம் ஈரானும், சிரியாவும்தான்" என்று அடையாளம் கண்டதற்காகவும் புகழாரம் சூட்டியுள்ளது.

"நாம் விரும்பும் சமாதானத்தை அடைவதற்கு செய்யவேண்டியது என்ன என்பது பற்றி ஒருமித்த கருத்து இருப்பதாக தெரிகிறது ... இரண்டு தேசிய நாடுகள் சமாதானத்தின் போக்கை தடுப்பதில் பெரிதும் தொடர்பு கொண்டுள்ளன; அதைச் சமாளிக்க வேண்டும்... அதில் ஒன்று ஈரான், மற்றொன்று சிரியா" என்று புஷ்ஷின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை அது குறிப்பாக கவனத்தில் கொண்டவர முயன்றுள்ளது.

போஸ்ட் மேலும் கூறியது: "பல தசாப்தங்களாக இப்படித்தான் இருந்த வருகிறது; இறுதியில், இந்த இரு பூசல்கள், அரேபிய-இஸ்ரேலியப் பூசல், இஸ்லாமிய-மேற்கத்தைய பூசல் என்பது ஒன்றுதான் என உலகத்திற்கு தெரியவந்துள்ளது. Fox News உடைய வர்ணனையாளர் ஜோன் கிப்சன் குறிப்பிட்டுள்ளபடி 'ஈரானியர்கள் அணுவாயுதம் பெற்றால், இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் தோட்டத்தில் நடப்பது போல் இருக்கும்... இது இஸ்ரேலுக்கும் சில பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே நடக்கும் போர் போல் தோன்றுகிறது. உண்மையில் ஈரான் நம் மீது நடத்தும் போர்தான் இது.' "

"ஞாயிறு வரையிலான நிலைமையின்படி, இஸ்ரேலிய பாதுகாப்பு படையில் இருந்து வரும் உறுதியான செய்திகள் இஸ்ரேல் கிட்டத்தட்ட ஹெஸ்பொல்லாவின் திறனில் 25 சதவிகிதத்தை அழித்துவிட்டதாக தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு மந்திரி அமீர் பெரட்ஸ் இன்னும் ஓரிரு வாரங்களில் இவ்வேலை முழுமையாக செய்யப்பட்டு விடும் என்று கூறியுள்ளார்...." என்று தலையங்கம் முடிவுரையாக கூறியுள்ளது.

"ஹெஸ்பொல்லாவை அழிப்பதில் இஸ்ரேல் வெற்றி அடைந்தால், நமக்கு மட்டும் அல்லாமல், உலகத்திற்கும் அது பெரும் அளிப்பு கொடுத்தது போல் ஆகும். புஷ்ஷும் பிளேயரும், ஒரு சில மற்ற தலைவர்களும்கூட, இதைப் புரிந்து கொள்ளுவது போல் தோன்றுகிறது; அதாவது சுதந்திர நாடுகள் ஒன்று சேர்ந்து ஹிஸ்பொல்லாவிற்கு ஆதரவு கொடுக்கும் டமாஸ்கசையும், டெஹ்ரானையும் மோதுவதற்கு எதிர்கொள்ள வேண்டும் என்பதே அது."

இஸ்ரேலிய குண்டுகளும் ஏவுகணைகளும் பெய்ரூட்டிலும் மற்ற பெருநகரங்கள், பேரூர்கள் ஆகியவற்றிலும் பொழிந்து கொண்டிருக்கும்போது, அமெரிக்கா ஒரு புதிய தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இயற்ற முனைந்து கொண்டிருக்கிறது; அது சட்டபூர்வ அத்தி இலை மறைப்பை ஹெஸ்பொல்லாவின் மீதான தீவிரத் தாக்குதல்களுக்கு கொடுக்கும் என்பதோடன்றி, சிரியா, ஈரானுக்கு எதிராக வருங்காலத்தில் வரவிருக்கும் இராணுவ தாக்குதல்களுக்கும் கொடுக்கும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved