World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

One year on: Lessons of the London bombings

ஓராண்டிற்கு பின்னர்: லண்டன் குண்டுத் தாக்குதல்களின் படிப்பினைகள்

Statement of the Socialist Equality Party (Britain)
7 July 2006

Back to screen version

52 பேர்கள் கொல்லப்பட்ட ஜூலை 7, 2005ல் லண்டன் பயங்கரவாத குண்டுதாக்குதல் பற்றிய உத்தியோகபூர்வ நினைவு நாள் இன்னும் கூடுதலான வகையில் அடக்குமுறை அதிகாரங்களை நியாயப்படுத்துவதற்கு பிளேயர் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படுகிறது.

இன்று சிந்தும் முதலைக் கண்ணீரை தவிர, இதல் தொடர்புடைய மக்களின் துயரங்களுக்கு அரசாங்கம் அசட்டையாகத்தான் உள்ளது. பாதிப்படைந்தவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அற்ப இழப்பீட்டுத் தொகை இதனை தெளிவாக காட்டுகின்றது. உதாரணமாக தன்னுடைய மனைவியை குண்டுவீச்சுக்களில் இழந்துவிட்ட நாடெர் மோசாக்கா 5,000 பவுண்டுகள்தான் இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளார் இரு கால்களையும் இழந்து விட்ட மார்ட்டின் ரைட்டுக்கு 110, 000 பவுண்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் துயரத்தை திரிக்கும் வகையில், பிரிட்டிஷ் மண்ணில் நிகழ்த்தப்பட்ட மோசமான பயங்கரவாத தாக்குதலில் இருந்து கிடைக்கும் அரசியல் படிப்பனைகளை பற்றி எந்தவித விமர்சனரீதியான விவாதத்தையும் அடக்கும் அளவிற்கு, அரசாங்கத்தின் நினைவுநாள் செயற்பாடுகள் வெட்ககரமான முயற்சியாக உள்ளன. அரசாங்கத்தை பொறுத்தவரையில் ஜூலை 7 நிகழ்வுகளின் சூழ்நிலை பற்றியதும் மற்றும் அதன் அரசியல் பின்னணி பற்றிய மெளனமானது, தாக்குதலுக்கு பாதிப்பாளானவர்களுக்கு இரண்டு நிமிடங்கள் ஒதுக்கி வைப்பதைவிட மிக அதிகமாகத்தான் சென்றுள்ளது.

பிரதம மந்திரி டொனி பிளேயரின் தொழிற்கட்சி அரசாங்கம் நினைவு நாள்வரை குண்டுவீச்சுக்கள் பற்றி பொது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உறுப்புக்களை இழந்தவர்கள், உயிரிழந்தவர்களுடைய கோரிக்கையை எதிர்க்கும் வகையில் நடந்து கொண்டது. அத்தகைய விசாரணை பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கு பயன்படுத்தும் முயற்சிகளை திசை திருப்பும் என்று பிளேயர் கருதுகிறார்.

இத்தகைய அவருடைய அவநம்பிக்கைவாதம் கலாச்சார மந்திரி டெசா ஜோவலின் ஆதரவை பெற்றுள்ளது; அவர்தான் அரசாங்கத்தின் சார்பில் நினைவு நாள் நிகழ்வுகளுக்கு தலைமை கொண்டுள்ளார். 1972ம் ஆண்டு வடக்கு அயர்லாந்தில் இரத்தம்தோய்ந்த ஞாயிறு அன்று குடியுரிமைகளுக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டது பற்றிய அதிகாரபூர்வ விசாரணை 400 மில்லியன் பவுண்டுகள் செலவிற்குட்பட்டது எனக் கூறியபோது, இவ்வம்மையாரின் பொய் அம்பலமாயிற்று. உண்மையில் செலவான தொகை 200 மில்லியன் பவுண்டுகள்தான்.

எப்படியாயினும், பிளேயருடைய வாதம் போலித்தனமானது. ஒரு பொது விசாரணை எப்படி பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மக்களை பாதுகாக்கும் உண்மையான முயற்சியை திசை திருப்பும்?

அரசாங்கம் ஒரு விசாரணையை விரும்பவில்லை; ஏனெனில் அது முதலில் ஜூலை 7 நிகழ்ந்த கொடுமைகளை தோற்றுவித்த சூழ்நிலைக்கான சட்ட விரோதப்போர் மற்றும் ஈராக் மீதான ஆக்கிரமிப்பு தொடர்பான அரசாங்கத்தின் பங்கு பற்றிய அரசியல் கேள்விகளை எழுப்பும்.

பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான மக்கள் போரை எதிர்த்ததுடன், இது பயங்கரவாத தாக்குதல்களில் இருந்து நிரபராதி மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக உலகம் முழுவதிலும் நவ-காலனித்துவ முறையிலான ஆக்கிரமிப்பு அமெரிக்க, பிரிட்டிஷ் மக்களை ஆபத்திற்குட்படுத்தும் என்றும் எச்சரித்தனர். மத்திய கிழக்கில் புஷ் நிர்வாகத்தின் முந்தானையை பிடித்துக் கொண்டு பிரிட்டிஷ் மூலதனத்திற்காக பூகோள-அரசியல் செல்வாக்கு மண்டலத்தை உருவாக்க வேண்டும் என்று விரைந்திருந்த பிளேயர், அத்தகைய அக்கறைகளை பொருட்படுத்தாமல் பிரிட்டனில் உள்ள ஒவ்வொரு ஆண், பெண், குழந்தையின் உயிரை ஆபத்திற்கு உட்படுத்தினார்.

இப்பொழுதும்கூட அரசாங்கம், ஈராக்கிய போருக்கும் பெருகியுள்ள பயங்கரவாத அச்சுறுத்தலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று வலியுறுத்துகிறது. அப்படியானால் "ஒரு முஸ்லீம் சமூகத்திற்குள் நுழையக்கூடிய மனிதன்" தான் இல்லை என்பதை பிளேயர் ஒப்புக்கொண்டு, ஏன் ஜூலை 7 நினைவுநாள் நிகழ்வுகளுக்கு தலைமை தாங்க அதிகம் அறியப்படாத ஜோவலை அனுப்புகிறார்?

ஜூலை 7 குண்டுத்தாக்குதல்களுக்கு முன் பாதுகாப்புப் படைகளின் பங்கு பற்றிய சங்கடமான கேள்விகளுக்கு அரசாங்கம் விடையிறுக்க விரும்பாததாலும் அது ஒரு விசாரணையை எதிர்க்கிறது. அரசாங்கத்தினால் மேடையேற்றப்படும் "தேசிய ஒற்றுமை" காட்சி என்பது அரங்கேறினால், அது அத்தகைய வினாக்களில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிவிடும் என்று நம்புகிறது.

லண்டலின் பயங்கரவாத தாக்குதல் வெடிக்கக்கூடும் என்ற விரிவான முன்னெச்சரிக்கைகள் பாதுகாப்புப் படைகளுக்கு வந்தன என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் ஒரு மாதம் கூட கடக்கப்படவில்லை.

2005 ஆரம்பத்தில் சவுதி உளவுத்துறை அடுத்த ஆறு மாதங்கள் லண்டனின் நிலத்தடி இரயில்களை தாக்கக் குறைந்தது சில பிரிட்டிஷ் குடிமக்களும் அடங்கிய 4 பேர்கள் குழு ஒன்று திட்டமிட்டுக் கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக The Obvserver வெளிப்படுத்தியுள்ளது. சவுதியின் தூதரும், மூத்த அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவின் பயங்கரவாத எதிர்ப்பு முகவர்களும் இதை உறுதிப்படுத்தியதாகவும் தகவல் கூறியது.

முகம்மத் சித்திக் கான், ஷேசட் டன்வீர் என்ற குண்டுத்தாக்குதல் நடாத்திய இருவரும் ஜூலை 7ம் தேதிக்கு முன்னதாகவே தங்களால் அறியப்பட்டிருப்பவர்கள் என்று பாதுகாப்புப் பிரிவினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இரண்டு சமயங்களில் இருவரையும் விசாரணையை ஒட்டி மற்ற நபர்களோடு இருவரையும் M15 கண்காணிப்பில் வைத்திருந்தது. இவ்விருவரும் பாக்கிஸ்தானுடைய கண்காணிப்பிலும் இருந்தனர். ஒரு சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி என்ற முறையில் கானின் தொலைபேசி எண்ணும் M15 இடம் இருந்தது; மூன்றாம் குண்டு தாக்குதல்தாரி ஜேர்மைன் லின்சேயுடைய தொலைபேசி எண்ணும் அதனிடம் இருந்தது.

கானும், தன்வீரூம் குழுவிற்கு வெளியே இருப்பவர்கள் என்று கருதப்பட்டதால் தொடர்ந்து அவர்கள்மீது கண்காணிப்பு வைக்கப்படாதது நியாயப்படுத்தப்பட்டது. ஆனால் அமெரிக்க செய்தியாளர் ரோன் சுஸ்கைண்டின் கருத்தின்படி, லண்டன் தாக்குதல்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னராக பாதுகாப்புக் காரணங்களுக்காக அமெரிக்காவில் நுழைய கானுக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டது; ஏனெனில் அவர் அல் கொய்தா வட்டங்களில் ஒரு முக்கியமான நபராக கருதப்பட்டிருந்தார். அந்நேரத்தில் அமெரிக்க அதிகாரிகள் M15 க்கு கானைப் பற்றி விரிவான கோப்பு ஒன்றை கொடுத்ததாகவும் சுஸ்கைண்ட் எழுதியுள்ளார்.

இதன் பின்னர் அல் கொய்தா தலைமையின் கீழ் குண்டுத்தாக்குதல்தாரிகள் செயல்பட்டதாக நிரூபணம் ஆயிற்று. செப்டம்பர் 2005ல் கானைப் பற்றிய ஒரு ஒளிப்படநாடா வெளியிடப்பட்டது; அதில் தான் ஓசாமா பின் லாடனினால் ஊக்கம் பெற்றதாக அவர் கூறினார். இதே ஒளிநாடாவில் அல் கொய்தாவின் தலைமையில் இரண்டாம் இடத்தில் உள்ள அய்மன் அல் ஜவஹ்ரி குண்டுவீச்சுக்களுக்கு பொறுப்பு ஏற்றதாகவும் ஒரு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று இதேபோன்ற ஒளிப்படக்காட்சி தன்வீரை முக்கியமாக கொண்டு ஒளிபரப்பாயிற்று; இதில் அல் ஜவ்ஹரி மற்றும் அஜம் அல் அம்ரிகி என்று தெரியப்பட்டுள்ள ஆடம் கான் இருவருடைய அறிக்கையும் உள்ளது; பிந்தையவர் அல் கொய்தாவின் பிரச்சாரத்திற்கு பொறுப்பு உடையவர் என்று நம்பப்படுகிறார்.

பயங்கரவாத சதியை பற்றி பாதுகாப்புப் பிரிவினர் அறிந்திருந்தனர் என்ற ஒவ்வொரு கூற்றும் மறுக்கப்பட்டது அல்லது "பிழை ஏற்பட்டது", "உளவுத்துறைத் தோல்வி" என்று ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த விளக்கங்கள் உண்மையென்றால், பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டிஷ் மக்கள் மீது, அதன் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற வடிவமைப்பில், பாரிய பொய்ச் செய்தியை நிலைநிறுத்தியதற்கு கண்டிக்கப்பட வேண்டும். தாங்கள் கூறும் பாரிய தவிர்க்க முடியாத பயங்கரவாத அச்சுறுத்தல் என விளக்கியிருந்ததில் இருந்து, மக்களை காப்பாற்றுவதற்கு பிளேயர் அரசாங்கமும் பாதுகாப்புப் பிரிவினரும் ஆழ்ந்த, அன்றாட போராட்டத்தில் அக்கறை காட்டியிருந்தால், அத்தகைய மாபெரும் "தவறு" ஏற்பட்டிருக்காது.

குறைந்த பட்சம், "உளவுத் துறை தோல்விகள்", என்பது "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்பது ஒரு மோசடி என்பதையும் மக்களிடையே பயம், பீதி இவற்றை பரப்புவதற்கும், வெளிநாடுகளில் இராணுவ ஆக்கிரமிப்பு போரை மேற்கொள்ளுவதற்கும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகள்மீது தாக்குதல் நடத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிக்கின்றது.

ஆனால் மற்றொருவித விளக்கமும் கொடுக்க முடியும்: அதாவது குண்டுவீச்சுக்கள் அரசாங்க பிழையாலோ, தோல்விகளாலோ ஏற்படவில்லை; மாறாக அவை நடத்தப்படுவதற்கு வேண்டுமென்றே அனுமதிக்கும் முடிவாகும். இதனால் அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதலான முறையில் குடி உரிமைகள் மீது தாக்குதல் நடத்தவும் புதிய இராணுவச் செயல்களை வெளிநாடுகளில் மேற்கொள்ள உதவும் என்பதே அது.

ஆயினும் கூட மார்ச் 2005ல், ஸ்கொட்லாந்தில் G8 உச்சி மாநாடு நடக்க உள்ளது எனத் தெரிந்தும், தலைநகரத்தில் அக்கூட்டம் நடந்த நேரத்திலேயே தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர் என்னும்போது, தேசியப் பாதுகாப்பு எச்சரிக்கை அளவைக் குறைக்க எடுத்த முடிவிற்கு விளக்கம் ஏதும் தரப்படவில்லை என்பது குறிப்பிடப்பட வேண்டும்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த மிகச் செல்வக்கொழிப்புடைய, சக்திவாய்ந்த நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் கூட்டங்கள் இராணுவ முறையிலான பாதுகாப்பின் கீழ்தான் நடைபெற்று வந்துள்ளன; நகர மையங்கள் முழுவதும் இராணுவச் சட்டத்தை ஒத்திருக்கும் நிலையில் வைக்கப்பட்டு, மிக கடுமையான நவீன பயங்கரவாத-எதிர்ப்பு நடவடிக்கைகளும் செயல்படுத்தப்படும். அதுவும் முந்தைய ஆண்டு மாட்ரிட்டில் இரயில்மீது குண்டுவீச்சுக்கள் நடைபெற்ற நிலையில், உச்சி மாநாட்டிற்கு விருந்தோம்பும் நாடு என்ற முறையில் பிரிட்டன் அல் கொய்தா தாக்குதலின் முக்கிய இலக்காகக் கருதப்படலாம் என்று கருதியிருக்க வேண்டும். ஆயினும் கூட, விளக்கம் கூறமுடியாத வகையில், அரசாங்கம் பயங்கரவாத எச்சரிக்கை தரத்தைக் குறைக்க முடிவெடுத்தது!

அரசாங்கத்திற்கு ஒரு அரசியல் நன்கொடை போல் இக்குண்டுவீச்சுக்கள் ஆயின; ஏனெனில் அப்பொழுதுதான் அது பொதுத் தேர்தல்களில் பெரும் இழப்பைக் கண்டிருந்து கணிசமான எதிர்ப்பையும் எதிர்நோக்கியிருந்தது; நீதித்துறைகூட அதன் சமீபத்திய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அகற்றிய வகையில், அத்தகைய எதிர்ப்பை காட்டியது. பிளேயரினால் அந்த சட்ட வரலாற்றில் பெரும் திருப்புமுனை என்று வர்ணிக்கப்பட்ட அந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் ஜூலை 7ம் தேதிக்கு பின்னர் மிகச் சிறிய திருத்தங்களுடன் நிறைவேற்ற முடிந்தது.

அரசாங்கம், போலீஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர், பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடத் தேவை என்று கூறி, இத்தகைய முறையில் கண்காணிப்பு மற்றும் காவலில் வைத்தல் போன்ற கடுமையான அதிகாரங்களை பெற்றன. இவ்வழிவகையில், அவை ஆட்கொணர்தல் முறை, தடையற்ற பேச்சு உரிமை ஆகியவற்றை குறைத்து கொள்வதற்கு, கொல்வதற்கு சுடு என்ற கொள்கையை இரகசியமாக செயல்படுத்த முடிந்தது.

இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே நிரபராதிகளை பலியாட்களாக்கிவிட்டது. கடந்த ஆண்டு இரக்கமின்றி ஜீன் சார்ல்ஸ் டி மென்ஜிஸ் கொல்லப்பட்டதை தொடர்ந்து Forest Gate ல் உள்ள வீட்டில் மற்றொரு நிரபராதி கொல்லப்பட்டது ஆகியவை இதற்கு உதாரணங்களாகும்.

ஜூலை 21ல் 2005ல் லண்டன்மீது குண்டு வீசப்பட இருந்த தோல்வியுற்ற திட்டத்தின் சதிகாரர்களில் ஒருவர் என்று, டி மென்ஜிஸ் தவறாக அடையாளம் காணப்பட்டிருந்தார். டஜன் கணக்கில் கைதுகள் நடந்த பின்னர், அதே மாதக் கடைசியில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு பயணிகளை கொலை செய்ய முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அவர்கள் இன்னும் விசாரணைக்கு காத்திருக்கின்றனர்.

மொத்தத்தில் போலீசார் 60 நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் ஜூலை 7, 2005ல் இருந்து பயங்கரவாத தொடர்புடைய குற்றங்களுக்காக குற்றச் சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் கூறுகின்றனர். மிக அசாதாரண முறையில் மிகக் குறைந்த தகவல்கள்தான் இவர்கள் செய்ததாகக்கூறப்படும் குற்றங்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன; இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இவ்விசாரணைகள் நடக்காது என்றும் தெரியவருகிறது. இன்னும் நூற்றுக் கணக்கானவர்கள் குற்றம்சாட்டப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் கூடுதலான முறையில் எதிர்ப்புக்களை தடைசெய்ய அல்லது குறைப்பதற்கு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. Observer பத்திரிகையில் ஹென்ரி பொட்டர் எழுதும்போது ஸ்டீவ் ஜாகோ கைது செய்யப்பட்ட நிகழ்வு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றது; இவர் ஜூன் மாதம் டெளனிங் தெருவில் ஒரு கோஷ அட்டை தாங்கி நின்றதற்காக கைது செய்யப்பட்டு, சட்ட விரோத ஆர்ப்பாட்டம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர் போலீசாரால் சோதனையிடப்பட்டபோது, குடியுரிமைகள் பற்றி "பிளேயரின் பெரிய அண்ணன் பிரிட்டன்" என்ற தலைப்புடைய பொர்ட்டர் எழுதிய கட்டுரையை வைத்திருந்ததாக தெரிகிறது. இக்கட்டுரை Vanity Fair என்னும் இதழில் வந்தது; அவ்விதழை 1 மில்லியனுக்கு மேலானவர்கள் வாங்குகின்றனர்; அது போலீசாரால் "அரசியல் காரணங்களுக்கு உந்துதல் கொடுக்கும் கட்டுரை" என்று விளக்கப்பட்டு ஜாகோ மீது குற்றம் சாட்டுவதை நியாயப்படுத்த ஒரு காரணமாகவும் பயன்படுத்தப்பட்டது.

பொதுவாக இலத்தீன் அமெரிக்க சர்வாதிகாரத்துடன் தொடர்புபடுத்தி காணப்படும் தோற்றம்தான் பிரிட்டனிலும் வாடிக்கையாகி வருகிறது. ஜூலை 7 ஆண்டு நிறைவு அச்சத்தை பெருக்கும் சூழ்நிலையை பயன்படுத்தி இவ்வளர்ச்சிகளை இன்னும் கூடுதலாக அதிகரிக்க விழைகிறது.

கடந்த சில நாட்களாக ஒரு தீவிரப் பயங்கரவாத எச்சரிக்கை பலமுறையும் கொடுக்கப்பட்டுவருகிறது; இதில், "பொது இடங்களில் சயனைட் வாயு வெளியிடப்படக்கூடும், லண்டன் போக்குவரத்து முறையும் பாதிக்கப்படலாம்" என்ற சதித் திட்டங்கள் பற்றிக் கூறப்படுகிறது. பிரிட்டன்மீது பயங்கரவாத தாக்குதல்களின் ஆபத்து "தெளிவாகவும், தீவிரமாகவும் உள்ளது" என்று பிளேயர் கூறியுள்ளார்; பெருநகர போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவரான, பீட்டர் கிளார்க் இந்த அச்சுறுத்தல் "முன்னோடியில்லாத வகையில்" உள்ளது என்று கூறினார். "புதிய நிகழ்வுகளின் தொடர்ச்சி குறைவதாக தெரியவில்லை; சொல்லப்போனால் அதிகரித்துக் கொண்டுதான் போகிறது." என்றார் அவர்.

இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கர குழுக்களில் சேர்வதை "ஈர்க்கும் வகையில்" ஏராளமான வெள்ளை பிரிட்டிஷார் அழைக்கப்படுவதாக, ஆதாரம் அற்ற செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன; அல் கொய்தா பரிவாளர்கள் M15 இலும் ஊடுருவி நிற்பதாக பாராளுமன்ற வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த அறிவிப்புக்களின் உள்ள பொய்பிரச்சாரத்தின் தன்மைகள் பொது மக்களின் தேவைக்காக கூறப்படுபவை அல்ல. பயங்கரவாத அச்சுறுத்தல் பயன்படுத்தப்படும் முறை, அனைத்து சமூக, அரசியல் எதிர்ப்புக்களையும் எதிர்கொள்ளும் ஒரு ஆளும்தட்டு ஆழ்ந்த முறையில் சீரழிந்து இருப்பதையும், அனைத்துப் புறங்களில் இருந்தும் விரோதிகளால் சூழப்பட்டிருக்கிறோம் என்று உணர்ந்துகொண்டிருப்பதையும் எடுத்துக் காட்டுகிறது.

பெரும்பாலான மக்கட் தொகுப்பின் பிரிவுகளுடைய நலன்களுக்கு முற்றிலும் விரோதமான கொள்கைகளை பிளேயர் அரசாங்கம் தொடர்ந்து வருகிறது. ஒரு நிதிய தன்னலக்குழுவின் சார்பில் செயல்பட்டுவரும் அரசாங்கம், உலகின் சந்தைகள், முக்கிய இருப்புக்கள் ஆகியவற்றின் மீது மேலாதிக்கத்தை கொள்ள விரும்புவதை இலக்காகக் கொண்டுள்ள அமெரிக்க பிரச்சாரத்துடன் தன்னை பிணைத்துக் கொண்டுள்ளது. உள்நாட்டை பொறுத்தவரையில், இது சமூக நலன்களுக்கான செலவினங்களை அகற்ற விரும்புகிறது; ஏனெனில் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் இதை இலாபத்தை வீணடிக்கும் ஏற்கமுடியாத செலவினம் என்று கருதுகின்றனர்; இதனால் தொழிலாள வர்க்கத்தில் இருந்து செல்வம் பணக்காரர்களுக்கு செல்கிறது; இதன் விளைவாக வரலாற்றளவில் முன்னோடியில்லாத வகையில் சமூகத்துருவப்படுத்தல் ஏற்பட்டுள்ளது.

பெருவணிகத்தின் ஆணைகளை சுமத்துதல் என்ற தன்னுடைய கொள்கையில் இருந்து பின் வாங்க முடியாத சூழ்நிலையில், அரசாங்கத்தின் ஒரே விடையிறுப்பு எழுச்சியுறும் மக்கள் மீது இன்னும் கூடுதலான ஆத்தரமூட்டல்களை நடத்துவதும், ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதும்தான்.

பயங்கரவாத அச்சுறுத்தல் "உள்நாட்டிலேயே வளர்கிறது" என்ற கருத்தை இப்பொழுது ஒவ்வொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் வலியுறுத்துகிறது; இதன் உட்குறிப்பு இன்னும் கூடுதலான முறையில் உள்நாட்டு அடக்குமுறை இருக்கப்போகிறது என்பதாகும். இந்த இலக்கையொட்டி, "குறிப்பிட்ட புதிய தகமைகளை" உளவுத்துறை அபிவிருத்தி செய்ய சான்ஸ்லர் கார்டன் பிரெளன் இன்னும் கூடுதலான 40 மில்லியன் பவுண்டுகள் உளவுத்துறை பிரிவிற்குக் கொடுக்க அறிவித்துள்ளார்: இது அதன் மாத வரவுசெலவுத் திட்டத்தை 1.6 பில்லியனுக்கு இட்டுச்செல்லும். M15 ஏராளமான பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது; அதன் ஊழியர்கள் இருமடங்காக 3,500 என்று ஆவர்; நாடு முழுவதும் எட்டு வட்டார அலுவலங்களை நிறுவ இது விழைகிறது; சமாதானக் காலத்தில் இத்தனை பெரிய அளவில் இது இவ்வாறு செய்ததில்லை.

மற்றொரு பயங்கரவாத தாக்குதலை பிரிட்டன் எதிர்கொள்ளலாம் என்பதை மறுக்கமுடியாது. ஆனால் அரசாங்கம் தன்னுடைய கொள்கைகளை வளர்த்துக் கொள்ளுவதற்குத்தான் பயங்கரவாத அச்சுறுத்தலை பயன்படுத்துவதன் மூலம் தனது ஜனநாயக எதிர்ப்பு திட்டங்களுக்கு பின்னால் மொத்த பொதுக்கருத்தும் இருக்கின்றது என நினைப்பதற்கு தொழிலாள வர்க்கம் அனுமதிக்கக்கூடாது. மாறாக தொழிலாளர்கள் பாரிய வெகுஜன அரசியல், சமூக இயக்கத்தை தொடங்கி, அது ஏகாதிபத்திய போருக்கான எதிர்ப்பை, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்புடன் பிணைக்க வேண்டும். இது இராணுவவாதம், போர், சமூக சமத்துவமின்மை அனைத்திற்கும் மூலமாக உள்ள இலாப முறைக்கு எதிரான போராட்டமாக நடாத்தப்பட வேண்டும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved