World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Saddam Hussein verdict: US politicians, media applaud the gallows and the noose

சதாம் ஹுசைன் மீதான தீர்ப்பு: அமெரிக்க அரசியல் வாதிகள், செய்தி ஊடகம் தூக்கு மேடை மற்றும் தூக்குக் கயிற்றை பாராட்டுகின்றன

By David Walsh
7 November 2006

Back to screen version

அமெரிக்க செய்தி ஊடகத்தாலும் மற்றும் இரு பெரும் கட்சிகளாலும், போலி விசாரணையும் அதைத் தொடர்ந்து தூக்குத் தண்டனையும் ஈராக்கில் வாஷிங்டனுடைய "ஜனநாயகப்" பணியின் முக்கிய அடையாளங்களாக பாராட்டப்படுவது, அவற்றின் சொந்த வழியில் முற்றிலும் பொருத்தமானதாகும்.

அரசியல்வாதிகள், குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் தீர்ப்பை மகிழ்ந்து கொண்டாடுவதில் ஒருமித்துத்தான் இருந்தனர். மரணதண்டனை தீர்ப்பை, "கொடுங்கோன்மை ஆட்சியை, சட்டத்தின் ஆட்சியின் மூலம் மாற்றும் ஈராக்கிய மக்களின் முயற்சியில் இது ஒரு மைல் கல்லாகும்"; "ஈராக்கியர்களின் இளம் ஜனநாயகம், அதன் அரசியலமைப்பு நெறி அரசாங்கத்திற்கு ஒரு பெரும் சாதனையாகும்" என்றும் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் அழைத்துள்ளார்.

அரை மில்லியன் ஈராக்கியர்களுக்கும் மேலாக படுகொலை செய்யப்பட்டமைக்கு தலைமை தாங்கிய ஒரு ஜனாதிபதி, தன்னுடைய அதிகாரத்திற்கு எவ்வித அரசியலமைப்பு தடுப்புக்களையும் அங்கீகரிக்காமல் அமெரிக்காவிற்குள்ளேயே ஒரு போலீஸ்-அரசின் வடிவமைப்பை சட்ட பூர்வமாக நிறுவுதலை மேற்பார்வையிடுபவரிடம் இருந்து இத்தகைய கருத்துக்கள் வெளிவந்துள்ளது.

அமெரிக்கவில் உள்ள "எதிர்க் கட்சியான" ஜனநாயகக் கட்சியின் தலைவர்களும் புஷ்ஷுடன் இணைந்து ஹுசைனுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை கொண்டாடுகின்றனர். ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவின் தலைவரான ஹோவர்ட் டீன் நீதிமன்றத்தின் தீர்ப்பை "ஒரு பெரும் தீர்ப்பு" என்று விளித்து ஹுசைன் "ஒரு போர்க் குற்றவாளி, எதற்கு தகுதியாக இருக்கிறாரோ அதையே பெற்றிருக்கிறார்" என்றும் கூறியுள்ளார்.

நியூ யோர்க்கின் செனட் உறுப்பினரான ஹில்லாரி கிளின்டன், இத்தீர்ப்பானது புஷ் நிர்வாகத்திற்கு ஈராக்கில் அது செயல்படுவதை மேம்பாடு அடையச்செய்து கொள்வதற்கு ஒரு புதிய வாய்ப்பு என்று கூறியுள்ளார்: "அந்நாட்டின் அவருடைய தவறான ஆட்சிக்கு இறுதியாக சதாம் பொறுப்பு என்று இப்பொழுது ஆகியுள்ள நிலையில், மக்கள் முன்னேற்றப்பாதையில் செல்வர் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார். நியூ யோர்க்கின் செனட்டர் சார்ல்ஸ் ஷ்யூமர் "செய்தியாளர்களை சந்தியுங்கள்" என்ற நிகழ்ச்சியில், "ஹுசைன் ஒரு மிருகத்தனமான, தீமை நிறைந்த சர்வாதிகாரி, கிடைக்க வேண்டிய தண்டனையை இப்பொழுது பெற்றுள்ளார்" என்று கூறியுள்ளார்.

அமெரிக்க செய்தி ஊடகமும் இதே அணுகுமுறையை பின் தொடர்ந்தது; சற்று கூடுதலான கெளரவத்தை கொண்டிருந்த ஊடக அடுக்குகள் தங்களுடைய பார்வையில் இருந்த இழிந்த தன்மையை மறைக்க பாசாங்கு உரைகளையும் சேர்த்துக் கொண்டன.

ஹுசைன் விசாரணை உலகிலேயே "ஒரு சட்டத்தின் ஆட்சி பற்றிய சிறந்த உதாரணம்" என்று எடுத்துக் கொள்ளப்பட்டாலும்கூட, நடைமுறையில் நீதிமன்ற நடவடிக்கைகள் "உயர் இலக்கில் இருந்து சற்று குறைந்தே காணப்பட்டன" என்று நியூ யோர்க் டைம்ஸ் முணுமுணுத்தது. இதன் குறைகளை சுட்டிக் காட்டுகையில், செய்தித்தாள் உண்மையில் நீதி நடவடிக்கை பற்றிய கோரமான கேலிக்கூத்தைத்தான் கோடிட்டுக் காட்ட முடிந்தது: "இன்னும் தீவிரமான முறையில், சக்திவாய்ந்த அரசியல்வாதிகள், விளைவை செல்வாக்கிற்குட்படுத்த வாடிக்கையாக முயன்றனர்; நீதிபதிகள் நடுநிலையில் தீர்ப்புக் கூற அனுமதிக்கப்படவில்லை; குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை; அவர்கள் கேட்ட ஆவணங்களும் அளிக்கப்படவில்லை." (இந்த நடைமுறையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய வக்கீல்கள் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டதைத்தான் டைம்ஸ் தூதரக நய வகையில் "பாதுகாப்பு நடவடிக்கைகள் மறுக்கப்பட்டன" என்று கூறியுள்ளது.")

இருந்தபோதிலும், "செய்தித்தாளின் பதிவுச்சான்று" இந்தத் தீர்ப்பை எளிதில் ஏற்றுக் கொள்ளுவதில் பிரச்சினை கொள்ளாமல் உட்குறிப்பாக தூக்குதண்டனையை "முன்னுதாரணமாக இருக்கும் தண்டனை" என்று வரவேற்றுள்ளது.

இதே இழிந்த அணுகுமுறையைத்தான் வாஷிங்டன் போஸ்ட்டும் கடைப்பிடித்து, "பல ஈராக்கியர்கள் நம்பியிருந்த புஷ் நிர்வாகத்தின் நேர்மைத்தனத்தின் உதாரணமாக இந்த விசாரணை இல்லை" என்பதை ஒப்புக் கொண்டு, முடிவாகக் கூறியது: "இருந்த போதிலும்கூட நீதி வழங்கப்பட்டது என்பதில் ஐயம் ஏதும் இல்லை."

"தற்கால கொடுங்கோலர்கள் போலன்றி, ஹுசைன் தன்னுடைய நாட்டிலேயே விசாரணைக்கு அவருடைய மக்களாலேயே உட்படுத்தப்பட்டு, தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். இது வளரும் ஜனநாயகமுறை, நாட்டிற்கு எழுச்சி கொடுக்கக் கூடிய ஒரு சாதனையாகும்" என்று சிக்காகோ டிரிபியூன் கூறியது. USA Today யும் இதே போன்றே கூறியுள்ளது: "பல தவறுகள் இருந்தாலும், சதாம் ஹுசைன் விசாரணை, எம்முடைய நினைவில், முதன்முறையாக ஒரு நாடு அதன் மக்களை அச்சுறுத்திய சர்வாதிகாரியை விசாரணைக்கு உட்படுத்தி மரண தண்டனை கொடுத்த நிகழ்வாகும். மூன்று ஆண்டுகாலம் பல குழப்பங்களும் நிறைந்திருந்த ஒரு நாட்டில், இது ஒரு சிறிய சாதனை அல்ல."

சதாம் ஹுசைனின் விசாரணையை பொறுத்தவரையில் ஈராக்கிய மக்கள் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. இது ஒரு நாட்டு ஆக்கிரமிப்புப் படையின் துப்பாக்கிமுனையில் சட்டவிரோதாமாக நடந்த கங்காரு நீதிமன்ற (கட்டைப் பஞ்சாயத்து) தீர்ப்பு ஆகும்; இதன் விளைவு முற்றிலும் முன்னரே தீர்மானிக்கப்பட்டு, எழுதப்பட்டது ஆகும்.

கைப்பாவை பிரதம மந்திரியான நெளரி அல்-மாலிகி கடந்த மாதம் நம்பிக்கையுடன் கணித்திருந்ததாவது: "இந்தக் குற்றம் சார்ந்த கொடுங்கோலர் தூக்கிலிடப்படுவார்." அமெரிக்காவும் பிரிட்டனும் நீதிபதிகளை தேர்ந்தெடுத்தன; அவர்கள் பயிற்சிக்காக லண்டனுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்; இத்தாலியிலும், நெதர்லாந்திலும் "ஒத்திகைகள்" நிகழ்த்தப்பட்டன. நடுநிலை பிறழாதவர் என்று அடையாளம் காணப்பட்ட நீதிபதி அகற்றப்பட்டார். பாக்தாத்தின் பசுமைப் பகுதி என அழைக்கப்படும் பெரும் பாதுகாப்பு உடைய பகுதியில் தோட்டாக்கள் துழைக்காத தடுப்புக்களும் பாதுகாப்பான ஆயுதமேந்திய காவலர்களும் நிறைந்திருந்த இடத்தில், விசாரணை என்ற கேலிக்கூத்தின் போது, மூன்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கறிஞர்களும் ஒரு சாட்சியும் கடத்தப்பட்டு கொல்லவும் பட்டனர்.

வெற்றி பெற்றவர்கள் கொடுக்கும் நீதி என்ற இத்தகைய அப்பட்டமான நடவடிக்கையில், அமெரிக்க செய்தி ஊடகம் "குறைபாடானது", "பிழைகள் நிறைந்தது", "குழப்பங்கள் மலிந்தது" என்பவற்றை கூறுகின்றனர். இங்கு சம்பந்தப்பட்டது உண்மைகள் ஒடுக்கப்பட்டது மட்டும் அல்ல; ஜனநாயக கோட்பாடுகள் பற்றி அக்கறை அல்லது அர்ப்பணிப்பு என்பது முற்றிலும் இல்லாதிருந்தது. நீதி, பாக்தாதில் வழங்கப்பட வேண்டுமா அல்லது எந்த அமெரிக்க நீதிமன்றத்திலும் வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி இவர்கள் அக்கறை இன்றி இருக்க முடியும்.

இன்னும் கூடுதலான வலதுசாரி பத்திரிகை, தீர்ப்பிற்கு பின்னர் தன்னுடைய அடிப்படைக் கூற்றை ஆர்வத்துடன் வெளிப்படுத்தியது. ரூப்பேர்ட் மேர்டோக்கின் கழிசடை ஏடான நியூ யோர்க் போஸ்ட் "News" என்பது 'நூஸ்' என உச்சரிக்கப்படுவதை சிலேடையாக எடுத்துக் கொண்டு "நல்ல (செய்தி) --தூக்குக்கயிறு-- சதாம் தூக்கில் தொங்க தீர்ப்பளிக்கப்பட்டார்" என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டது; அதன் சகோதர ஏடு New York Daily News அறிவித்தது: "அடுத்த நிறுத்தம் நரகம்தான்!" அமெரிக்க அரசியல் வாழ்வின் இன்றைய நிலையின் தன்மை News ல் உள்ள எவருக்கும் இதையொட்டி வந்த கட்டுரையின் தலைப்பு "மரண தண்டனை பழம்பெரும் கட்சிக்கு (GOP) புத்துயிரைக் கொடுக்கலாம்" என்பதன் தாக்கம் எப்படியிருக்கும் என்று இரு முறை சிந்தித்தது கூட இல்லை என்பது புலனாகிறது.

பிறரை துன்புறுத்துவதில் களிப்படைதல், குருதி சிந்துவதில் மகிழ்ச்சி அடைதல் இவற்றை வெட்கங்கெட்ட தனமாகவும் பகிரங்கமாகவும் வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு அரசியல் உயரடுக்கில் மற்றும் செய்தி ஊடகத்தில், ஆழ்ந்த முறையில் நோய் பற்றியிருப்பதுதான் நன்கு வெளிப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றில் "கொல்லுக" என்ற சொல் இந்த அளவிற்கு இதுகாறும் அரசியல் வாதிகள், தளபதிகள், தலையங்கம் எழுதுபவர்கள் ஆகியோரிடையே அதிகம் புகழ் பெற்று இருந்தது இல்லை. தற்போதைய வழக்கை ஒட்டியுள்ள நிலையில், தூக்குமேடை மற்றும் தூக்குக் கயிற்றில், இப்படி நிறைந்த வகையில் பரந்துள்ள நோயின் தன்மை, இறப்பிலும் அழிவிலும் களிப்படைவது என்பது உயரடுக்கின் ஒரு பிரிவிற்கு பதிலாக மற்றொரு பிரிவு தேர்தலில் வந்தாலும் மாறப்போவது இல்லை.

இவர்கள் ஹுசைன் தீர்ப்பு பற்றி ஏன் பாராட்டுகின்றனர்? முதலாவதாக அவர்களுடைய ஆர்வம் அமெரிக்க ஆட்சி உயரடுக்கின் உண்மை மனப்போக்கை வெளிப்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக ஹுசைன் ஆட்சியை (ஈராக்கிய சர்வாதிகாரி அமெரிக்க நண்பராக இருக்க மறுத்த பின்னர்) அப்பகுதியில் தடையற்ற ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒரு பெரும் தடுப்பு என்று கருதியவர்களின் பழிவாங்கும் உணர்வை இது வெளிப்படுத்துகிறது. மத்திய கிழக்கின் எண்ணெய் வளங்களை கொள்கையடிப்பதற்கு தன்னுடைய "தேசிய நலன்கள்" அதற்கு தெய்வீக உரிமை கொடுத்துள்ளது என்று அமெரிக்க ஆளும் உயரடுக்கு நம்புகிறது. எதிர்ப்புக்கள் பொறுத்துக்கொள்ளப்பட முடியாது.

மிகக் கொடூரமான வன்முறை, அடக்குமுறை ஆகியவற்றை கையாண்டும்கூட, ஈராக்கிய மக்களின் எதிர்ப்பை அடக்கி தங்களுடைய இலக்கை அடையமுடியாத நிலையில், அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ உயரடுக்கினர் இன்னும் கூடுதலான வகையில் தங்களுடைய சீற்றத்தை கையில் அகப்பட்ட இலக்குகளில் காட்டுவதின் மூலம் வெளிப்படுத்திக் கொள்ள விழைகின்றனர்.

இன்னும் பொதுவான வகையில், ஹுசைன் மீது விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் மக்களுக்கு உலகில் அமெரிக்கா ஒரு பெரும் இராட்சத நாடாக உலவுகிறது அல்லது உலவ விரும்புகிறது என்பதை உணர்த்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட அரசியல் செயற்பாடு ஆகும். ஒரு தேசத்தின் தலைவர் தூக்கில் இடப்படும் தோற்றம், அமெரிக்க அதிகாரத்தை எதிர்த்தால் அவர்களுக்கு என்ன நேரிடும் என்பதின் நிரூபணமாக, ஒரு படிப்பினையாக, ஒரு எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளது.

புஷ்ஷும் அவருடைய ஜனநாயகக் கட்சி நண்பர்களும் செய்தி ஊடகமும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தோல்வியடையா தன்மையை நிரூபிக்க முற்பட்டுள்ளன. ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநெஜட்டிற்கு, வடகொரியத் தலைவர் கிம் ஜோங்யில்லிற்கு, சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசத்திற்கு மற்றும் ரஷ்ய, சீன, பாகிஸ்தான் தலைவர்கள், ஏன் ஐரோப்பிய உயரடுக்குகளுக்கும் இது ஒரு எச்சரிக்கையாகும்.

ஹுசைன் மீதான தீர்ப்பு "ஒரு முன்னுதாரண தண்டனை" என ஒப்புக் கொள்ளும் வகையில், டைம்ஸ், நாஜிக்கள் முன்னர் கையாண்ட வழிவகைகளுடன் தொடர்பு கொண்டுள்ள ஒரு சொற்றொடரை பயன்படுத்தியது தற்செயல் நிகழ்வு அல்ல.

சதாம் ஹுசைன் பல குற்றங்கள் புரிந்தவர்; ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கைப்பாவைகளுக்கு அவரை விசாரிப்பதற்கு அல்லது தண்டனை கொடுப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. ஈராக்கிய தொழிலாள வர்க்கத்தின் அதிகார வரம்புதான் அதன் முன்னாள் அடக்குமுறையாளர்களுக்கு நீதி வழங்குவது ஆகும்.

"மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு" ஹுசைன் பொறுப்பு என்றால், புஷ், செனி, ரம்ஸ்பெல்ட், வொல்போவிட்ச் இன்னும் பிறர்மீது எந்தக் குற்றங்கள் சுமத்தப்பட வேண்டும்? அவர்கள் ஒரு நாடு முழுவதையும் அழித்து, நகரங்களை தரைமட்டமாக்கி, கிட்டத்தட்ட 655,000 மக்களை கொன்று குவித்துள்ளனர். வரும் ஆபத்தை முன் உணர்ந்திராத மக்ட்தொகையினர் மீது அமெரிக்க இராணுவத்தை நுழைத்து சித்திரவதை, கற்பழிப்பு, கணக்கிலடங்கா கொடுஞ் செயல்களுக்கு காரணமாக இருந்துள்ளனர். அபுகிறைப், பல்லுஜார, ஹடிதா -- இவை பெரும் இழிவுச் செயல்களை இவர்கள் புரிந்த இடங்களாகும். எத்தனை பழைய குற்றங்கள் இன்னும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் அல்லது இன்னும் எத்தனை புதிய குற்றங்கள் புரியப்பட வேண்டும்?

கிளின்டன் மற்றும் புஷ் ஆட்சிகளுக்கு இடையேயான, பல விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் சரியாக இருக்குமேயானால், ஒரு மில்லியன் ஈராக்கியர்களின் இறப்பிற்கு அமெரிக்க ஏகாதிபத்தியமே பொறுப்பாகும். இவை அனைத்தும் அந்நாட்டின் பரந்த எண்ணெய் இருப்புக்களை கைப்பற்ற வேணடும் என்ற நோக்கத்தில் நடந்தவை ஆகும். ஹுசைன் ஒரு போர்க் குற்றவாளியென்றால், அமெரிக்க அரசியல் உயரடுக்கினரை எப்படி விவரிக்கமுடியும்?

1990களில் அமெரிக்கா சுமத்திய பொருளாதாரத் தடைகளின் கொடூரமான விளைவுகள் மற்றும் ஈராக்கின்மீது படையெடுப்பதற்கான புஷ் நிர்வாகத்தின் நோக்கங்களை மறைத்து, "பேரழிவு ஆயுதங்கள்", "அல்கொய்தாவுடன் தொடர்புகள்" போன்ற பிரச்சாரங்களுக்கும் உடந்தையாக இருந்த அமெரிக்க செய்தி ஊடகம், இப்பொழுதும் அங்கு ஆக்கிரமிப்பினால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மிருகத்தனமான செயல்கள் குற்றங்கள் ஆகியவற்றை மூடி மறைக்கிறது. நியூ யோர்க் டைம்ஸ் பிரதானமாக, செய்தி ஊடகம் அனைத்தும் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் ஈராக்கிய இறப்புக்கள் பற்றி நடத்திய ஆய்வையும் மறைத்துள்ளன. இவையெல்லாம் ஒழுக்கநெறியின் காவலர்கள் என்று தம்மைத்தாமே பறை சாற்றிக் கொண்ட அமைப்புக்கள் ஆகும்.

அமெரிக்கா விரைவில் சதான் ஹுசைனை தீர்த்துக்கட்ட விரும்புகிறது. மற்றொரு விசாரணை சுற்றுக்கு அவர் இருப்பதை அது விரும்பவில்லை. குறிப்பாக 1988ல் குர்திஷ் பகுதியில் நிகழ்ந்தவை பற்றி ஹுசைன் சாட்சியம் கூறுவது பற்றி வாஷிங்டன் அக்கறை காட்டவில்லை. அப்பொழுது ஈரானுடன் போரில் ஈடுபட்டிருந்த ஈராக்கிய இராணுவம் ஹலப்ஜா நகர மக்கள் உட்பட, குர்துகள்மீது இராசயனத் தாக்குதல்களை நடத்தியது. அமெரிக்க அரசாங்கம் இதை அறிந்திருந்தது, இதற்கு உடந்தையாகவும் இருந்தது. அத்தகைய விசாரணையை ஹுசைன் இன்றி நடத்துவதுதான் அவர்களுக்கு வசதியாகும்; அப்பொழுதுதான் அவர் சங்கடமான கேள்விகளை எழுப்பாமல் இருப்பார். கொலைகாரக் கும்பலில் ஒவ்வொருவருக்கும் இறந்தவர்கள் தகவல்கள் கூறமாட்டார்கள் என்பது நன்கு தெரியும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved