World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Pope visits Bavaria: A broadside against the Enlightenment

போப் பவேரியாவிற்கு வருகை: அறிவு ஒளி இயக்கத்திற்கு எதிரான அவமதிப்பு

By Peter Schwarz
15 September 2006

Back to screen version

ஜேர்மனியின் மாநிலமான பவேரியாவிற்கு போப் ஆறு நாட்கள் வருகை புரிந்தமை பற்றி ஜேர்மனியின் செய்தி ஊடகம் கொடுத்துள்ள தகவல்களை, அப்பட்டமாக கூறவேண்டுமென்றால், அயோக்கியத்தனமாகும்.

ஜேர்மனிய அரசாங்க தொலைக் காட்சி நேரடியாக மணிக்கணக்கில் ஜோசப் ராட்சிங்கரின் ஒவ்வொரு அடியையும் மற்றும் சொல்லையும் நேரடியாக ஒளி/ஒலி பரப்பியது, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரால் உருவாக்கப்பட்ட பொது அக்கறையின் பேரில் நியாயப்படுத்தப்பட்டிருக்க முடியும். ஆனால் இரண்டு பிரதான ஜேர்மனிய அரசாங்க தொலைக்காட்சிகள் வத்திக்கானின் வானொலியின் துணை அமைப்புக்கள் போல் செயல்பட்டவிதத்தில் அவை பொது ஒளிபரப்பு, முறையான சுதந்திரத்துடன் இயங்க வேண்டும் என்ற அரசியலமைப்பு நெறியை மீறியதாகவும், திருச்சபை, அரசாங்கம் தனித்தனியே இயங்க வேண்டும் என்ற கொள்கையை மீறியதாகவும் இருந்தது. மிகுந்த பிற்போக்குத்தன பிரச்சாரத்தை திறனாய்வின்றி கொண்ட முறையிலும், பதினாறாம் பெனடிக்டின் புகழை துதிபாடியதிலும் அனைத்து செய்தி ஊடக கோட்பாட்டு நெறிகளையும் ஜேர்மனிய அரசாங்க தொலைக்காட்சி நகைப்பிற்கு இடமாக்கியது.

Suddeutsche Zeitung கருத்தின்படி, பவேரியத் தொலைக்கட்சி "மூன்றாவது நிகழ்ச்சி மட்டுமே 46 மணிநேரம் கொண்ட 70 மணிநேர போப் தொலைக் காட்சி நேரடி ஒளிபரப்பு, 4 மில்லியன் யூரோக்கள் பார்வையாளர்கள் கட்டணத்தில்" தயாரிக்கப்பட்டது. ஜேர்மனியின் இரண்டு பொதுத் தொலைக்காட்சி நிலையங்களும் இதில் பெரும்பாலான நேரத்தை எடுத்து, நாளொன்றுக்கு பல மணிநேரங்கள் ஒளிபரப்பின.

பெரும்பாலான ஒளிபரப்புக் காட்சிகள் ஒரே மத்தியஸ்தரை - பவேரிய தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியரும், நன்கு அறியப்பட்டுள்ள பழமைவாதியும் மதவெறியருமான Sigmund Gottlieb ஐ முதன்மைப்படுத்திக் காட்டியது. எட்மொண்ட் ஸ்ரொய்பருடைய (Der Spiegel) "அபிமான செய்தியாளரான" பவேரியப் பிரதமரும், பழமைவாத கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் தலைவருமான கொட்லிப் ஓராண்டிற்கு முன் பவேரியாவின் கெளரவ விருதைப் பெற்றிருந்தார்.

தன்னுடைய நடவடிக்கைகளை பவேரியாவுடன் கொட்லிப் நிறுத்திக் கொள்ளவில்லை. செவ்வாயன்று அவர் ஜேர்மனியின் முக்கிய தேசிய செய்தி நிகழ்ச்சிகளில் ஒன்றாகிய Tagesthemen லும் வர்ணனை ஒன்றை அளித்தார்; இது புரொடஸ்டான்ட் நகரமான ஹம்பேர்க்கில் தயாரிக்கப்பட்டது. பவேரியாவில் போப்பின் நடவடிக்கைகளை தொடர்ந்திருந்த வகையில்தான் இவருடைய வர்ணனையின் தன்மை இதிலும் காணப்பட்டது.

பெரும் உற்சாகத்துடன் கொட்லிப் வினவினார்: "ஆதரவாளர்களின் சமூகம் பெருகிக் கொண்டிருக்கிறது! இத்தனை ஒப்புதலும், ஆர்வமும் எங்கிருந்து வருகிறது?" .

இது ஒன்றும் கடக்கப்பட்டுவிடும் பேரார்வம் அல்ல. உண்மையில் அல்ல. "மக்கள் மிகவும் தீவிரத்துடன் உள்ளனர். தங்களுடைய வாழ்வின் இலக்கு பற்றி மக்கள் மீண்டும் சிந்திக்க தலைப்பட்டுள்ளார்கள். மதசார்பற்ற அரசியல், பொருளாதார உயரடுக்குகள் திகைத்து நிற்கும்போது, போப் தன்னுடைய மாற்றீட்டுடன் வலம் வருகிறார். தயக்கத்திற்கு பதிலாக உறுதித்தன்மையை காட்டுகிறார்; செருக்கிற்கு பதிலாக பணிவைக் காட்டுகிறார்; எளிமையான விடைக்குப் பதிலாக உற்சாக மனநிலையை காட்டுகிறார்; பூகோளமயமாக்கலுக்கு பதிலாக தாயகத்தை காட்டுகிறார். அவர் விஞ்ஞானத்தையும் நம்பிக்கையையும் ஒன்றுடன் ஒன்று சமரசப்படுத்த விழைகிறார்... இந்நாட்டில் மதிப்பீடுகள் பற்றிய விவாதங்களுக்கு மத்தியிலேயே போப் வந்துள்ளார். அவருடைய சொற்கள் மதித்துக் கேட்கப்படுகின்றன. அவருக்கு ஈர்ப்புச் சக்தி உள்ளது!"

போப்பினால் காக்கப்படும் "மதிப்பீடுகள்" பின்தங்கியதும் பிற்போக்குத்தனமானவையும் ஆகும்: கன்னி மேரி வழிபாடு, இறைநிலை இணைவுப்பான்மை, அறிவியல் மற்றும் காரணகாரியத் தொடர்புடன் கடவுளில் நம்பிக்கை இவற்றின் கலவையாகும்.

பென்டிக்ட்டின் தனி வழிபாடு அல்ரொட்ரிங் இல் உள்ள கறுப்புத்தோலில் சித்தரிக்கப்படுள்ள மேரியின் சிலை அல்லது பூச்சோவியம் (Black Madonna) முன் நிகழ்ந்ததை (பெரும் வீடியோ திரைகள் மூலம் பொதுச் சதுக்கங்களில் ஒளிபரப்பப்பட்டிருந்தது) பற்றிய Suddeutsche Zeitung ல் வந்த அறிக்கை பல நூற்றாண்டுகள் பின்னோக்கிப் பாய்ந்ததின் பதிவைத்தான் கொடுத்தது. செய்தி ஏடு எழுதியதாவது: "எதிர்பார்த்தது போலவே, அல்ரொட்ரிங்கில் போப் நின்று சென்றமை, மத மற்றும் உலகின் திருஅவதாரமாக ஆயிற்று. இருண்டு, மெழுகுவர்த்தி ஒளி, சாம்பிராணி மணம், பிரார்த்தனைகளின் முணுமுணுப்புக்கள், அரைகுறை பகுதி, முழுப் பக்தி இவற்றின் ஐயத்திற்கு இடமில்லா கலவையால் ஒரு குழந்தையாகத் தான் இருக்கும்போது, ஆல்டோட்டிங்கருக்கு புனிதப் பயணம் மேற்கொண்டிருந்தபோது தான் எவ்வாறு ஈர்க்கப்படிருந்தார் என்று குறிப்பிட்டார்; இதுதான் பின்னர் தன்னுடைய சமய வளர்ச்சியை உருவாக்கியதாவும் கூறினார்."

றேகன்ஸ்பேர்க் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையில், ஒரு கட்டத்தில் போப் விஞ்ஞானத்தின் வரம்பிற்கு எதிராக வாதிட்டு, மத இயலை "வரலாற்று, இயற்கை விஞ்ஞான பிரிவு போல் மட்டும் இன்றி உண்மையான மத இயல் விஞ்ஞான உரையாடல்களில் சேர்க்கப்பட வேண்டும்" என்றும் கூறினார். "இறைத் தன்மைக்கு செவிமடுக்காத மற்றும் மதத்தை மறுவளர்ப்பின் செயற்களத்திற்கு இழிவாக அனுப்பும் பகுத்தறிவுக்கு" எதிராக அவர் எச்சரிக்கை விடுத்தார்.

ஜேர்மனியில் மதச் சுதந்திரம் நிலவுகிறது; நம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுடைய தனி அக்கறையாகும். பொதுத் தொலைக்காட்சி நிலையங்களின் பணி ஒன்றும் குறிப்பிட்ட நம்பிக்கை சிந்தனை ஆகியவற்றை வளர்ப்பது அல்ல. அரசாங்க தொலைக் காட்சி ஒளி/ஒலி பரப்பு அமைப்புக்களின் பணியை நிர்ணயிக்கும் அடிப்படை சட்டங்கள் இவ்விதத்தில் தெளிவாக உள்ளன.

பத்தாவது பத்தியில் கூறப்படுவதாவது: "ஏற்கப்பட்டுள்ள செய்தி ஊடக கொள்கைக்கு ஏற்பத்தான் தகவல்கள் திரட்டல், தெரிவிக்கப்படல் ஆகியவை இருக்க வேண்டும்... அவை சுதந்திரமாகவும், உண்மையை ஆதாரமாகக் கொண்டவையாகவும் இருக்க வேண்டும்." மூன்றாம் பத்தியில் ஒளிபரப்புக்கள் "மனித உயிர், உரிமைகள், உடற்கூறு நேர்மை, பிறருடைய நம்பிக்கை அல்லது கருத்திற்கு மதிப்புக் கொடுப்பதாகவும் இருக்க வேண்டும்" (அழுத்தம் எமது) எனக் கூறுகிறது. பத்தி 11ன் படி "பொதுநிலை, பாரபட்சமற்ற தன்மை தகவல்கள் கொடுப்பதில்" இருக்க வேண்டும் என்றும் "மாறுபட்ட கருத்துக்களும் மதிக்கப்பட வேண்டும்" என்றும் கோருகிறது.

இத்தகைய அரிய கொள்கைகள் போப்பின் வருகையின் போது மிக அதிகமான ஒளிபரப்புக்களின் மூலம் தவறாக கையாளப்பட்டுவிட்டன. கத்தோலிக்க திருச்சபையில் இருந்தோ, வெளியில் இருந்தோ ஒரு விமர்சனக் குரல்கூட ஒலிக்கவில்லை. புதிய போப் பற்றி குறைகூறுவோர் இல்லாமல் இல்லை; போப்போ, நம்பிக்கையாளர்களின் கொள்கைக் கூட்டமைப்பின் (Congregation for the Doctrine of the Faith) தலைவர் என்ற முறையில், பல முறையும் கருத்தடை, திருச்சபையில் மகளிர் மற்றும் சாதாரண மக்களுடைய பங்கு பற்றி தன்னுடைய கடினமான பிற்போக்கு கொள்கைகளை திணிக்க தலையீடு செய்துள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் இடைவிடா பிரச்சார தாக்குதலினால் முற்றிலும் மிரட்டப்பட்டதாக உணர்கின்ற ஏனைய திருச்சபை உறுப்பினர்களின் உரிமைகள், நம்பிக்கை இல்லாதவர்களின் உரிமைகள் என்ன ஆவது?

கத்தோலிக்க திருச்சபையின் இத்தகைய பொது ஜனத் தொடர்பு பிரச்சாரம் பற்றி ஜேர்மனியின் உத்தியோகபூர்வ அரசியல் பிரதிநிதிகளிடம் இருந்து எவ்வித குறைகூறலும் வெளிவரவில்லை. ஒரு புரொடஸ்டான்ட் பாதிரியாரின் மகளாகிய அங்கேலா மேர்க்கல் போப்பாண்டவர், அவருடைய கோடைகால இல்லத்திற்கு பயணம் பற்றிய திட்டத்தை முடிவு செய்வதற்கு சென்றிருந்தார். மூனிச் விமான நிலையத்தில், மேர்க்கல் மற்றொரு புரொடஸ்டான்ட் ஆன ஜேர்மனிய ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹலருடன் போப்பை வரவேற்க நின்றிருந்தார்.

சமூக அழுத்தங்களின் பெருக்கம், மற்றும் ஜேர்மனிய உத்தியோகபூர்வ கட்சிகள், ஆளும் உயரடுக்குகள் பற்றிய பெரும் ஏமாற்றத்தின் வளர்ச்சி என்ற நிலையில், கத்தோலிக்கரோ, புரொடஸ்டான்ட்டோ, நாஸ்திகரோ, போப் கொடுக்கும் "நம்பிக்கை", "மதிப்பீடுகள்" பற்றிய உடனடி தேவையை கொண்டுள்ளனர். சமூக அழுத்தங்களில் இருந்து கவனத்தைத் திசைதிருப்பும் கருவியாக மத பிற்போக்குத்தனம் எப்பொழுதும் இருந்துள்ளது; இதை நன்கு பயன்படுத்திக் கொள்ளுவதில் வத்திக்கானை மிஞ்சியவர்கள் எவரும் இலர். "மத சார்பற்ற அரசியல் பொருளாதார உயரடுக்கினர் திகைத்து நிற்கும்போது, போப் தன்னுடைய மாற்றீட்டுடன் உலா வருகிறார்" என்று சிக்மண்ட் கொட்லிப் அனைத்து உயரடுக்கினரின் சார்பாகவும்தான் கூறினார்.

ஆனால் கொட்லிப் கண்டறிந்துள்ள ஆர்வம் பெரும்பாலும் செய்தி ஊடகத்தின் கண்டுபிடிப்புத்தான். சிறந்த சூரிய வெளிச்சம் இருந்த போதிலும், போப்பை வரவேற்க வழிநெடுக நின்றிருந்தவர்களின் எண்ணிக்கை திருச்சபை எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவுதான்; அதன் பிரதிநிதிகளோ அதற்கேற்ப எண்ணிக்கையை திரித்துக் கூறினர். போலீசாரின் கணக்கின்படி மூனிச்சில் 75,000 பேர்தான் போப் சென்றபோது கையசைப்பதற்கு கூடியிருந்தனர்; ஆனால் உள்ளூர் திருச்சபை மண்டலமோ 200,000 வரவேற்று கையசைத்தனர் எனக் கூறியது. றேகன்ஸ்பேர்க்கில் போப் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் பெரும்பகுதி காலியாகத்தான் இருந்தது.

மிகக் குறைந்த அளவில் மக்கள் வந்ததற்கான ஆரம்ப விளக்கங்கள், தொலைக்காட்சியில் போப்பை பார்த்துக் கொள்ளலாம் என மக்கள் இருந்துவிட்டனர் என்பதாக இருந்தன. ஆனால் இதன்பின்னர் தொலைக்காட்சி. கணிப்புக்களின் படியும் பார்த்தவர்கள் எண்ணிக்கை மிக மிகச் சிறியதாகத்தான் இருந்தது.

உண்மையில், ஜேர்மனியில் உள்ள திருச்சபை நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையில் இழப்பை கண்டுவருகிறது. கடந்த 15 ஆண்டுகளில் கத்தோலிக்கரின் எண்ணிக்கை 9 சதவிகிதம் சரிந்து மொத்தம் 26 மில்லியன் என்றுதான் உள்ளது; இவர்களுள் 15 சதவிகிதம் வாடிக்கையாக திருச்சபைக்குச் செல்லுகின்றனர். 1990ம் ஆண்டு இப்படிச் செல்லுபவர்களின் எண்ணிக்கை 22 சதவிகிதமாகவும், அரை நூற்றாண்டிற்கு முன்பு 50 சதவிகிதமாகவும் இருந்தது. போப்பின் தற்போதைய வருகையை சூழ்ந்திருந்த செய்தி ஊடக பரப்பிற்கு பின்னரும், ஒரு சமீபத்திய கருத்துக் கணிப்பு ஜேர்மனியில் 60 சதவிகிதத்தினர் கத்தோலிக்க திருச்சபை பற்றி குறைகூறும் கருத்தைத்தான் கொண்டிருக்கின்றனர் என்றும் கத்தோலிக்கர்களிடம்கூட இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 சதவிகிதமாக உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved