World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : ஜப்பான்

Japan's defence minister strikes an anti-US posture

ஜப்பானிய பாதுகாப்பு மந்திரி அமெரிக்க-எதிர்ப்பு தன்மையைக் காட்டுகிறார்

By John Chan
31 January 2007

Back to screen version

போருக்குப் பிந்தைய ஜப்பானின் முதல் பாதுகாப்பு மந்திரி என்று நியமிக்கப்பட்ட சில வாரங்களில், புயூமியோ க்யூமா, ஈராக் போர் பற்றியதில் வெளிப்படையாக அமெரிக்காவை குறைகூறியுள்ளார். இக்குறிப்புக்கள் புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கும்" மக்களின் ஆதரவைப்பெறாத, ஈராக்கிற்கு ஜப்பானிய படைகள் அனுப்பி வைத்ததற்குமான ஜப்பானின் முந்தைய முழுமனதாக ஆதரவுக்கு முற்றிலும் மாறுபாடாக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஜனவரி 24ம் தேதியன்று தன்னுடைய நாட்டு மக்களுக்கான உரையை வழங்கி போர்பெருக்கத்திற்கான தன்னுடைய திட்டத்தை காத்துப் பேசிய பின்னர் க்யூமா தன்னுடை கருத்துக்களை தெரிவித்துள்ளார்: "பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற முன்கருத்தையொட்டி ஜனாதிபதி புஷ் ஈராக்கில் போரைத் தொடக்கியது ஒரு தவறு ஆகும்" என்று பாதுகாப்பு மந்திரி ஜப்பானின் தேசிய செய்தியாளர் குழுவிடம் கூறினார்.

க்யூமாவின் கருத்துக்களை அமெரிக்கா "தீவிர முறையில்" எடுத்துக் கொண்டதாக அறிவித்து வாஷிங்டனில் இருக்கும் ஜப்பானிய தூதரகத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை உடனடியாக எதிர்ப்பை பதிவு செய்தது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் அதிகாரி James Zumwalt க்யூமாவிடம் இருந்து வரும் மேலதிக விமர்சனம் எதுவும் இருநாடுகளுக்கும் இடையே உயர்மட்ட வெளியுறவு, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இடையே மே மாதம் நடக்க இருக்கும் "இரண்டு கூட்டல் இரண்டு" கூட்டத்திற்குத் தடையாகிவிடும் என்று எச்சரித்தார்.

பிரதம மந்திரி ஷின்ஜோ அபே, தன்னுடைய சொற்கள் பற்றி கவனமாக இருக்குமாறு சடுதியில் க்யூமாவிற்கு எச்சரிக்கை கொடுத்தார். க்யூமா தன்னுடைய விமர்சனம் பூதாகரப்படுத்தப்பட்டதற்கு ஆங்கில மொழிபெயர்ப்புத்தான் காரணம் என்றாலும், தன்னுடைய கருத்துக்களை திருப்பிப் பெற்றுக் கொள்ளவில்லை. அமெரிக்கா ஈராக்கில் ஆக்கிரமிப்பு செய்ததற்கு ஜப்பான் பங்கு பற்றி தான் முன்னர் ஆதரவு தெரிவித்ததை குறிப்பிட்ட, க்யூமா, மேலும் கூறினார்; "தனிப்பட்ட முறையில் அந்நேரத்தில் [அமெரிக்கப் படையெடுப்பு, 2003ல்] ஏதோ குறைபாடு உள்ளது என்று உணர்ந்தேன்."

க்யூமாவின் விமர்சனம் மிகக் குறைந்த வரம்புடையது என்றுதான் கூறவேண்டும். ஈராக்கிடம் இருந்ததாகக் கூறப்பட்ட பேரழிவு ஆயுதங்கள் பற்றி புஷ் உலகிற்குப் பொய் கூறினார் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. ஜப்பானிற்குள்ளேயே, பெரும்பாலன மக்கள் 2004ம் ஆண்டு படைகள் அமெரிக்காவின் ஈராக்கிய ஆக்கிரமிப்பிற்கு உதவ அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இதன் பின்னர் படைகள் திரும்பப் பெறப்பட்டாலும், ஜப்பானிய விமானப் படை இன்னும் அமெரிக்க இராணுவத்திற்கு ஈராக்கில் ஆதரவு கொடுத்துவருகிறது. ஜனவரி 10ல் அறிவிக்கப்பட்ட புஷ்ஷின் திட்டமான ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் 20,000 த்திற்கு கூடுதலாக அதிகரிக்கப்படும் என்பதற்கு ஆதரவு கொடுத்தவற்றுள் முதலாவது அபேயின் அரசாங்கம் ஆகும்.

க்யூமாவின் கருத்துக்கள் தனிப்பட்ட மனச் சிதைவைவிடக் கூடுதலான தன்மை உடையவை ஆகும். கடந்த வாரம் நாகசாகி ஆட்சித்துறைத்தலைவர் அலுவலகத்தில் ஆற்றிய உரையில், அவர் ஓகினாவாவில் இருக்கும் அமெரிக்க இராணுவத் தளங்களில் வாஷிங்டனின் "எசமான" பாத்திரம் பற்றிக் குறைகூறியிருந்தார்; ஜப்பானில் உள்ள 50,000 அமெரிக்க வீரர்களில் மூன்றில் இரு மடங்கு அங்கு தங்கியிருக்கின்றனர்.

ஓகினோவா தளங்கள் உள்ளூர் மக்களிடையே பெரும் விவாதத்திற்கு உரியதாகும். அக்டோபர் 2005ல் டோக்கியோவும் வாஷிங்டனும் அமெரிக்க கடற்படையினரால் பயன்படுத்தப்படும் Futenma விமானத் தளத்தை தீவில் இன்னும் குறைவான மக்கள் இருக்கும் இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கு ஒப்புக் கொண்டன.

ஆனல் ஓகினாவாவின் கவர்னரிடம் ஆலோசனை செய்யாததற்காக அமெரிக்காவை க்யூமா குற்றம் சாட்டியுள்ளார். "தளப் பணி எப்படிச் செய்யப்பட வேண்டும் என்பதை அமெரிக்கா அறிந்துகொள்ளவில்லை. "மிகவும் துடுக்குத்தனமான வகையில் தயவு செய்து பேசாதீர்கள். ஜப்பான் தன்னுடைய செயல்களை ஜப்பானில் செய்யட்டும்" என்று நாங்கள் (அமெரிக்காவிடம்), கூறிக்கொண்டு வந்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

அமெரிக்க-ஜப்பான் கூட்டணி பற்றிய விவாதம் அடுத்த மாதம் இன்னும் சூடேறலாம்; ஏனெனில் 8,000 அமெரிக்கக் கடற்படையினர்கள் ஓகினாவாவில் இருந்து குவாமிற்கு தனியாக வேறு இடம் செல்வதற்கு, பாராளுமன்றம் $10 பில்லியன்களில் $6 பில்லியனை ஒதுக்குவதற்கான சட்டவரைவை விவாதிக்க உள்ளது. அமெரிக்கப் படைகள் தன்னுடைய நிலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு ஜப்பான் எதற்காக செலவு செய்ய வேண்டும் என்று விமர்சகர்கள் கேட்கின்றனர்.

அமெரிக்காவுடன் தூதரக முறையில் சச்சரவுகளின் சாத்தியத்தை எதிர்கொள்ளும்முகமாக, அமெரிக்காவுடனான கூட்டிற்கு டோக்கியோவின் "வலுவான கடப்பாட்டை" மறு உறுதி செய்யும் பகிரங்க அறிக்கை ஒன்றை திங்கட்கிழமை வெளியிடும்படி அபே நிர்பந்திக்கப்பட்டார். க்யூமாவின் கருத்துக்கள் மந்திரியின் தனிப்பட்ட கருத்து என்றும் அவர் அறிவித்தார் மந்திரிசபை செயலாளரான Yasuhisa Shiozaki செய்தியாளர்களிடம் மந்திரிகள் "தாங்கள் விரும்புவதையெல்லாம் கூறக்கூடாது" என்றும் தெரிவித்தார். இருந்தபோதிலும்கூட, க்யூமா குறைந்த பட்சம் பகிரங்கமாகவாவது, கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படவில்லை.

உண்மையில் க்யூமாவின் அமெரிக்கா பற்றிய விமர்சனங்கள் ஜப்பானிய ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகளுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்றன; அவர்கள் சர்வதேச அரங்கில் ஜப்பானுக்கு இன்னும் கூடுதலான சுயாதீன பங்கு வேண்டும் என்று விரும்புகின்றனர்.

அபே கூட ஜப்பான் ஒரு "சாதாரண" நாடு ஆக வேண்டும் என்று வலியுறுத்துகிறார்; அதாவது தன்னுடைய இராணுவத்தை தன்னுடைய மூலோபாய நலன்களுக்கு நாட்டின் போருக்குப் பிந்தைய சமாதானவகை அரசியல் அமைப்பின் தளைகளுக்கு உட்படாமல் தொடர வேண்டும் என்று விரும்புகிறார். கடந்த செப்டம்பர் மாதம் ஜூயுனிசிரோ கொய்சுமியிடம் இருந்து பிரதம மந்திரி பதவியை எடுத்துக் கொண்ட பின்னர், அபே, நாட்டின் பாதுகாப்புப் பிரிவை முழு அமைச்சகம் என்ற தகுதிக்கு உயர்த்தியுள்ளதுடன், ஜப்பானிய பள்ளிகளில் தேசியவாத உணர்வைக் கற்பிப்பதற்கான "கல்விச் சீர்திருத்தம்" ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், ஜூன் மாதத்தில் அரசியலமைப்பு மறுபடி எழுதப்படுவதற்கு ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திட்டத்தையும் கொண்டுள்ளார்.

"எமது போருக்குப் பிந்தைய ஆட்சிமுறையை தைரியமாக திருத்துவதற்கும் ஒரு புதிய தொடக்கத்தை காணவும் இப்பொழுதுதான் சரியான நேரம்" என்று ஜப்பானிய பாராளுமன்றத்தில் கடந்த வாரம் ஒரு முக்கிய கொள்கை உரையில் அவர் அறிவித்தார். அமெரிக்க-ஜப்பானிய கூட்டு "ஆசியாவில் சமாதனத்திற்கு அஸ்திவாரம்" என்று அவர் விவரித்தாலும்கூட, திட்டமிடப்பட்டுள்ள அரசியல் சீர்திருத்தம் ஜப்பானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருக்கும் போருக்குப் பிந்தைய அரசியல் அஸ்திரவார உறவுகளில் மாறுதலை ஏற்படுத்தும்.

அரசியலமைப்பின் தற்போதைய சமாதான விதியின் உட்பிரிவு தற்காப்பு தவிர வேறு எதற்கும் இராணுவசக்தியை பயன்படுத்தக்கூடாது என்று டோக்கியோவை தடைவிதித்துள்ளது. இதன்விளைவாக, "தற்காப்பிற்காக" பெரும் சக்திகளை கட்டமைத்துக் கொண்டுள்ளபோதிலும், ஜப்பான் அமெரிக்க இராணுவ சக்தியைத்தான் நம்பி இருக்கிறது என்பதுடன் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை அடி ஒற்றியும் நடக்கிறது. தன்னுடைய இராணுவ வலிமையை மீண்டும் வலியுறுத்திவிட்டால், டோக்கியோ தவிர்க்கமுடியாமல் வாஷிங்டனுடன் சம பங்காண்மையை கேட்கும்.

கொய்சுமியின் தலைமையில் டோக்கியோ புஷ் நிர்வாகத்தின் "பயங்கரவாதத்தின் மீதான போருக்கு" முழு ஆதரவைக் கொடுத்து, ஜப்பானிய இராணுவப் படைகள் கடல் கடந்து அனுப்பப்படுவதற்கும் வகை செய்தது. ஆப்கானிஸ்தானத்தின் மீது அமெரிக்க படையெடுப்பு நடத்த உதவுவதற்கு 2001ம் ஆண்டு ஜப்பான் போர்க்கப்பல்களை அனுப்பி வைத்தது. 2004ம் ஆண்டு ஜப்பானிய படைகள் ஈராக்கிற்கு அனுப்பப்பட்டதானது இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் போர்ப்பகுதி ஒன்றுக்கு முதல் முதலாக படைகளை அனுப்பிவைத்ததாகும். சீனாவுடனான அழுத்தங்களுக்கும் கொய்சுமி எரியூட்டிய வகையில் வடகிழக்கு ஆசியாவில் ஜப்பானிய நலன்களை ஆக்கிரோஷமாக வலியுறுத்திப் பேசினார்.

அதிகாரத்திற்கு வந்த பின்னர், அபே, சீனாவுடனான உறவுகளைச் சீர்செய்யும் வகையில், பொருளாதார உறவுகளில் நெருக்கத்திற்கு வழிவகுத்தது. மூத்த ஜப்பானிய மற்றும் சீன மந்திரிகள் கடந்த வாரம் மூன்று நாட்கள் "மூலோபாய பேச்சுவார்த்தைகளை" சீனாவில் நடத்தி சீனப் பிரதமர் வென் ஜியாபோ இந்த வசந்த காலத்தில் ஜப்பானுக்கு வருகை தருவார் என்பதை உறுதிப்படுத்தினர்; அப்படியானால் 2000க்குப் பின்னர் அவ்வாறு செய்யக்கூடிய முதல் சீனத்தலைவர் அவராவார்.

க்யூமாவின் கருத்துக்களில் இருந்து தன்னை அபே ஒதுக்கிவைத்துக் கொண்டாலும், அவை அரசாங்கம் இன்னும் கூடுதலான சுதந்திரப் போக்கில் செல்ல விரும்புகிறது என்பதை குறிக்கக்கூடும். பாதுகாப்பு மந்திரியின் கருத்துக்கள் ஈராக்கிய போருக்கு மக்கள் எதிர்ப்பு பரந்து இருப்பதை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அரசாங்க ஆதரவை காட்டுவதை நோக்கமாகவும் கொண்டிருக்கலாம். பல ஊழல் விவகாரங்களில் அரசாங்கம் சிக்கிக் கொண்டிருக்கிறது; மேலும் அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு "நகர மன்ற" கூட்டங்களில் ஆள் சேர்ப்பதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன.

Mainischi Daily கடந்த வார இறுதியில் நடத்திய கருத்துக் கணக்கின்படி, பொதுமக்கள் அபே மந்திரிசபைக்கு கொடுத்துள்ள ஆதரவு கடந்த மாதம் இருந்த 40 சதவிகிதத்துடன் ஒப்பிடும்போது, மற்றுமொரு 6 புள்ளிகள் குறைந்து விட்டது என்று தெரிகிறது. ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சிக்கான (LDP) ஆதரவு 25 சதவிகிதத்திற்கு குறைந்துவிட்டது. எதிர்க்கட்சியான ஜப்பான் ஜனநாயகக் கட்சியும் ஒன்றும் சிறப்பிடம் பெற்றுவிடவில்லை; அதன் நிலை வெறும் 13 சதவிகிதம்தான். கிட்டத்தட்ட கணக்கெடுப்பில் பாதி பேர்--49 சதவிகிதம்-- எந்தப் பெரிய கட்சியையும் தாங்கள் ஆதரிக்கவில்லை என்று அறிவித்தனர்; இது 10 புள்ளிகள் உயர்வைக் காட்டுகிறது.

கொய்சுமி, அமைப்புமுறைக்கு எதிர்ப்பாளர் என்று தன்னைக் காட்டிக் கொண்டு, தன்னுடைய செயற்பட்டியலான மீளவும் இராணுவமயப்படுத்தல், பொருளாதார சீரமைப்பை கொண்டுவருதல் ஆகியவற்றை முன்னெடுக்கும் பொருட்டு ஒரு பெரும் தனிப்பட்ட ஆதரவாளர்கள் கூட்டத்தை கட்டி எழுப்பினார். தாராளவாத ஜனநாயகக் கட்சி உயர் அடுக்கில் இருந்து வந்துள்ள அபே, மிகவும் செல்வாக்கற்ற கொள்கைகளை செயல்படுத்த முயற்சிப்பதன் மூலம் தடுமாறுகிறார் எனத் தோன்றுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved