World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq: Who did the US military massacre near Najaf?

ஈராக்: நஜாப்பில் அமெரிக்க இராணுவப் படுகொலையை யார் செய்தது?

By James Cogan
2 February 2007

Back to screen version

கடந்த ஞாயிறன்று தெற்கு ஈராக் நகரமான நஜாப்பிற்கு வெளியே நடந்த நிகழ்வுகளில் வெளியான பல கூறுபாடுகள் தெளிவற்றும் குழப்பமாகவும் உள்ளன. ஆனால் ஒன்று உறுதியானது: அது, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் ஜெட் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் Zarqa கிராமத்தில் ஈராக்கிய அரசாங்கத் துருப்புக்களால் நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்த நூற்றுக்கணக்கான மக்களை கொன்றன என்பதுதான். இவர்கள் யார் என்பது இன்னும் விவாதத்திற்கு உரியதாகத்தான் உள்ளது. ஆனால் அதிகரித்தவகையில் வெளியிடப்பட்டுள்ள நம்பத்தகுந்த தகவல்கள், சம்பவம் பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு ஒரு கொடூரமான படுகொலையை குரூரமாக மூடிமறைக்கும் முயற்சியாக உள்ளது என்று குற்றம் சாட்டுகின்றன.

ஜார்க்காவை காத்தவர்கள் "சுவர்க்கத்தின் வீரர்கள்" எனப்படும் ஒரு ஷியா பிரிவிலிருந்து பிரிந்து வந்த குழுவை சேர்ந்தவர்கள், திங்களன்று நஜாப்பில் நடக்கும் அஷுரா மத கொண்டாட்டத்தை தாக்கி, அலி அல் சிஸ்டானி உட்பட உயர்மட்ட ஷியைட் மதகுருமார்கள் பலரையும் தாக்கும் சதித்திட்டத்தை தீட்டிக்கொண்டிருந்தவர்கள் என்று ஈராக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரு துப்புக் கிடைத்த அளவில் அரசாங்கத் துருப்புக்கள் முன்கூட்டிய தாக்குதல் ஒன்றைத் தொடக்கின; ஆனால் அவை முறியடிக்கப்பட்டன. ஈராக்கிய, அமெரிக்க தரைப்படை உதவிப் படைகள் அழைக்கப்பட்டன; பலமுறையும் அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் விமானப் படைப்பிரிவுகள் நடத்திய தாக்குதலில் கிராமத்தின் பெரும்பகுதியும் தீக்கிரையாயிற்று.

இதன் விளைவு ஒரு பெரும் படுகொலையாகும். 263 மத உட்பிரிவு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 400 பேர் கைதிகளாக பிடிக்கப்பட்டனர், அவர்களுள் 210 பேர் காயமுற்றனர் என்று ஈராக்கிய அதிகாரிகள் கூறுகின்றனர். செவ்வாயன்று சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற, லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் இன் நிருபர், பாதுகாப்பு உடைய மதிலின் பிதுக்கம் மற்றும் பதுங்குகுழிகளால் சூழப்பட்ட எட்டு பண்ணைகள் இருந்த வளாகம் ஒன்று அமெரிக்க விமானத் தாக்குதலால் பேரழிவிற்கு உட்பட்டது என்று விவரித்துள்ளார். செய்தித்தாள் எழுதியது: "சிதைந்த சடலங்கள் அனைத்து நிலவறைக் குழிகளிலும் நிரம்பியிருந்தன... தாக்குதலின் விளைவாக நசுங்கிய, பொசுங்கிய உடலங்கள் நிறைந்தன. ஒரு சில முற்றிலும் சிதையுண்டு போயின. இளவயதினரும், நடுத்தர வயதினரும் போராளிகளில் இருந்தனர். சிலர் சாதாரண அன்றாட வேலைகளைக் கொண்டிருந்தவர்கள் ஆவர்."

சுவர்க்கத்தின் வீரர்கள் என்ற அமைப்பு வெளியிட்டிருந்த ஒரு செய்தித்தாளின் பிரதியை, தான் பார்த்ததாக லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நிருபர் தெரிவித்துள்ளார்; குழுவின் நம்பிக்கைகளை கோடிட்டுக் காட்டிய புத்தகம் ஒன்றும் அவருக்குக் காண்பிக்கப்பட்டதாகவும், அது சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்த சுவர்க்கத்தின் வீரர்கள் என்னும் அமைப்பு பேரழிவு முடிவு வரும் என்று கூறும் ஒரு குழுவாகும்; ஷியைட் இறையியல் கொள்கைகளில் முக்கியமானவரான இமாம் மஹ்தி உலகில் தீமை நடக்கும்பொழுது மீண்டும் வந்து, ஷியைட், சுன்னி முஸ்லிம்களுக்கு இடையே உள்ள பிளவிற்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் உலகிற்குச் சமாதானம் கொண்டுவருவார் என்று நம்பும் அழிவுகரமான வழிபாட்டுக் குழு ஆகும். ஒரு ஷியைட் மதகுருவான Ahmad al-Hussan al-Yamami 1999ம் ஆண்டு மஹ்தியை சந்தித்ததாகக் கூறினார்; பின்னர் பஸ்ரா என்னும் தெற்கின் பெரிய நகரத்தில் 5,000 பேர் கொண்ட சபையை அமைத்தார். ஷியைட்டுக்களும் சுன்னிக்களும் இந்த வழிபாட்டுக் கொள்கை முறையில் சேர்ந்துள்ளனர்.

அப்துல் ஜஹ்ரா என்பவர் தான் மீண்டு வந்த இமாம் என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளார். ஞாயிறன்று கொல்லப்பட்டவர்களில் அவரும் ஒருவர் என்று ஈராக்கிய அரசாங்கம் கூறியுள்ளது. ஏனைய கட்டுரைகளின் தகவல்களும் அகமது அல்-ஹுசனும் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கின்றது.

சிஸ்டானி மற்றும் பிற முக்கிய ஷியைட் மத குருமார்களை கொலை செய்வதை குறியாய்க் கொள்வதற்கான செயல்நோக்கம் என்று கூறப்படுவது, அப்துல் ஜஹ்ராதான் மஹ்தி என்ற அவர்களது கூற்றை மதமுறையில் எதிர்ப்பவர்களை ஒழிக்க வேண்டும் என்ற விருப்பமாகும். ஈராக்கிய உள்துறை அமைச்சரகத்தில் பாதுகாப்பிற்கான செயலாளராக இருக்கும் மேஜர் ஜெனரல் ஹுசைன் கமால் Associated Press இடம் கூறினார்: "இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஈராக்கில் அரசியல் இயக்கமாக வெளிப்படத் தொடங்கினர். இவர்களுக்கு ஆதரவாளர்களும் கிடைத்தனர். இறுதியில் அவர்கள் அரசுக்கு எதிராகவே ஆயுதமேந்தினர்." சுவர்க்கத்தின் வீரர்கள் என்ற அமைப்பு அஜிரா மத பயணிகள் போல் தோற்றமளித்து நஜப் நகரத்திற்குள் நுழைந்து, மத குருமார்கள் பலரையும் கொன்று, ஈமாம் அலி மசூதியை கைப்பற்றி மஹ்தி மீண்டுவிட்டதை பிரகடனப்படுத்த இருந்ததாக ஈராக்கிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. வெளிப்படையான நோக்கம் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒட்டுமொத்த கிளர்ச்சிஎழுச்சியையும் தூண்டிவிடுதலாக இருந்தது.

இத்தகவல் முழுவதுமே ஈராக்கிய செய்தித்தாளான Aan ஆல் கட்டுக்கதை என்று உதறித்தள்ளப்பட்டுள்ளது. British Independent க்காக Patrick Cockburn எழுதுகிறார்; International Press Service (IPS) க்காக Dahr Jamail எழுதிவருகிறார். இவர்கள் இருவரும் ஈராக்கில் இருந்தே எழுதுகின்றனர்; கடந்த நான்கு ஆண்டுகளில் பல சுதந்திரமான ஆதாரங்களை கட்டமைத்துள்ளனர். 2004ம் ஆண்டு பல்லூஜாவில் அமெரிக்க இராணுவப் போர்க்குற்றங்கள் பலவற்றை அம்பலப்படுத்தியதில் ஜமைல் மையப் பங்கைக் கொண்டவர் ஆவார். சிவிலிய இலக்குகளுக்கு எதிராக பொஸ்பரஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை, மறைவிடத்திலிருந்து சுட்டுக்கொல்லும் மரைன் படைப்பிரிவினரால் கண்மூடித்தனமாக கொல்லப்படல் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் தாக்கப்பட்டவை ஆகியவை பற்றி அவர் தொகுத்துக் கொடுத்திருந்தார்.

இந்த மூன்று கட்டுரைகளும் ஜார்க்காவில் படுகொலைசெய்யப்பட்டவர்கள் ஹவாட்டிம் (Hawatim) அல்லது அல் ஹடாமி, மற்றும் ஹஜைல் (Khazail) அல்லது அல்-கஜாலி என்னும் இரு அரேபிய பழங்குடியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஈராக்கிய அரசாங்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஷியைட் அடிப்படைவாதக் கட்சிகளை எதிர்ப்பவர்கள் எனக் கருதப்படுபவர்கள் என்றும் தெரிவிக்கின்றன. ஈராக்கிய இராணுவச் சோதனைச் சாவடியில் இருந்த படைவீரர் ஒருவர், நஜாப்பிற்கு அஷுரா விழாவில் கலந்துகொள்ளச் சென்று கொண்டிருக்கும் ஹவாடிம் பாதுகாப்புக்குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து சண்டை வெடித்தது. அக்குழுவின் தலைவரும் அவருடைய மனைவியும் கொல்லப்பட்டனர்; இது பழங்குடி மக்கள் பதிலடி கொடுபதற்கு தூண்டுதலாயிற்று. நஜப்பிற்கு சென்று கொண்டிருந்த கஜாலி பழங்குடியினரும் துப்பாக்கிச் சூட்டிற்கு உட்பட்டதால் அரசாங்கத் துருப்புக்களுக்கு எதிரான பூசலில் சேர்ந்துகொண்டனர்; அரசாங்கத் துருப்புக்கள் கூடுதலான இராணுவத்தை நாடிற்று; இறுதியில் இது அமெரிக்க விமானப் படைத் தாக்குதலில் முடிந்தது.

Dahr Jamil தெரிவிப்பதாவது: "திவானியா-நஜாப் சாலையில் இந்த சண்டை நடந்தது; பின்னர் அருகில் உள்ள பேரீச்சைத் தோட்டங்களிலும், புனித யாத்திரிகர்கள் அங்கு புகலிடம் நாடிய அளவில், தொடர்ந்தது. ஜசிம் அப்பாஸ் என்னும் அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் IPS இடம், "அமெரிக்க ஹெலிகாப்டர்கள் இப்படுகொலையில் பங்கு பெற்றன" என்று தெரிவித்தார். 'அவர்கள் அங்கு விரைந்து வந்து எத்தயக்கமும் காட்டாமல் யாத்திரிகர்களைக் கொன்றனர்; ஈராக்கியர்களுக்கு உதவி தேவைப்பட்டபோது அவர்கள் வந்ததே இல்லை. அந்தத் தோட்டங்களில் அவர்கள் சிக்கியிருந்த நிலையில் குழுவாகக் கொல்லப்பட்டதை நாங்கள் வெறுமனே காண நேர்ந்தது.' சாட்சிகள் பெரும்பாலான கொலைகளை அமெரிக்க, பிரிட்டிஷ் போர் விமானங்கள் செய்தன என்று கூறினர்."

பஸ்ராவில் இருக்கும் சுவர்க்கத்தின் வீரர்களின் பிரதிநிதியான Abdulimam Jabar அவருடைய பிரிவு எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். Azzaman இடம் அவர் கூறியதாவது: "எங்கள் குழுவை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிரச்சாரப் பகுதி உள்ளது." தன்னுடைய குழு "சமாதானம் விரும்புவது என்றும் வன்முறையில் ஒருபோதும் நம்பிக்கை வைத்ததில்லை" என்றும் அவர் அறிவித்தார். ஈராக்கிய வரலாற்று வலைத் தளமான www.historiae.org இன் ஆசிரியரான Reider Visser இதை ஆதரித்துள்ளார்; Reuters இடம் அவர் தெரிவித்ததாவது: "கடந்த காலத்தில் அவர்கள் வன்முறையைப் பயன்படுத்தியதாக சான்றே கிடையாது."

Independent ல் கொக்பேர்ன், சுவர்க்கத்தின் வீரர்கள் தொடர்பு கொண்டிருந்தனர் என்ற குற்றச்சாட்டு தங்கள் பழங்குடி எதிர்ப்பாளர்களை அமெரிக்க விமான சக்தியை கொண்டு படுகொலை செய்ததை ஈராக்கிய அரசாங்கம் முடிமுறைக்கும் ஒரு முயற்சியாகும் என்று கூறியுள்ளார். அவர் தெரிவிப்பதாவது: "ஏற்கனவே நஜாப்பில் ஈராக்கிய அதிகாரிகளுடன் மோதலில் இருந்த அஹ்மத் அல்ஹசானியின் தலைமையிலான நல்வழிக் குழு சண்டையில் இழுக்கப்பட்டதற்கு காரணம் இது ஜர்காவைத் தளமாக் கொண்டுள்ளது மற்றும் அதன் வருகையானது ஒரு படுகொலை நடத்துவதற்கு வசதியான காரணமாகப் போயிற்று. பாக்தாத் அரசாங்கத்தினை மையமாக உள்ள மற்றும் நஜாப்பின் மீது கட்டுப்பாடு கொண்டுள்ள ஈராக்கில் இஸ்லாமியப் புரட்சிக்கான தலைமைக் குழு (SCIRI), மற்றும் தாவாக் கட்சி இரண்டையும் ஹவாடிம் மற்றும் கஜையில் பழங்குடிமக்கள் எதிர்க்கின்றனர்."

Dahr Jamail கொடுக்கும் ஆதாரங்களின்படி, பழங்குடியினர் சுன்னி, ஷியைட் தீவிரவாதிகளுக்கு இடையே நடக்கும் குறுகிய பிரிவுவாத உள்நாட்டுப் போரை எதிர்ப்பதற்கும், ஷியைட் அடிப்படைவாத கட்சிகள் அரசாங்கத்தின்மீது கட்டுப்பாட்டை கொண்டிருப்பதற்கு ஒரு முடிவு கட்டவும், ஒரு ஐக்கியப்பட்ட இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்ததாகத் தெரிகிறது.

சர்ச்சை வளர்ச்சியுற்ற நிலையில், ஈராக்கிய அரசாங்கம் நேற்று தன்னுடைய சதித்திட்ட கருத்தை அலங்காரப்படுத்தும் நோக்கத்துடன் அஹ்மத் அல்ஹசன் உண்மையில் சதாம் ஹுசைனின் பாத் ஆட்சியில் முன்பு உளவுத்துறையில் பணியாற்றினார் என்ற குற்றச் சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அதிகாரிகள் முரண்பாடான கூற்றுக்களை தெரிவித்துள்ளனர்; சிலர் அவர் அல்கொய்தாவின் சுன்னி தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் சிலர் அவர் ஈரானில் இருக்கும் ஷியைட் ஆட்சியாளர்களிடம் இருந்து நிதியுதவி பெறுகிறார் என்றும் கூறுகின்றனர். இத்தகைய தகவல்கள் "ஞாயிறு தொடங்கி நடக்கும் நீடித்த போரில் அமெரிக்கார்களும் ஈராக்கியர்களும் எவரை எதிர்த்துப் போராடினர் என்ற குழப்பத்தை அதிகரித்துள்ளது" என்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

சில காலத்திற்கு உண்மை வெளியே வருவது கடினம்தான். ஆனால் ஜர்க்காவில் கட்டவிழ்த்துவிடப்பட்ட பெரும் குண்டுவீச்சு சம்பவம் நாட்டின் மீது அமெரிக்க இராணுவமும் ஈராக்கிய அரசாங்கமும், ஷியைட் ஆதிக்கம் மிகுந்த நாட்டின் தெற்குப்பகுதி உட்பட, அனைத்து இடங்களிலும் கொண்டுள்ள மிக நலிந்த கட்டுப்பாட்டைத்தான் பிரதிபலிக்கிறது.

2004 ம் ஆண்டு நடுப்பகுதியில் மதகுரு மோக்தாதா அல்சதரின் ஆதரவாளர்களின் குறுகிய எழுச்சிக்கு பின்னர், தெற்கு ஈராக்கில் இப்போர் மிகவும் குருதி கொட்டிய யுத்தம் ஆகும். கடந்த ஆண்டு தெற்கு மாகாணங்கள் ஒப்புமையில் உறுதிப்பாட்டுடன்தான் இருந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராக மில்லியன் கணக்கான ஷியைட்டுக்கள் காட்டிய எதிர்ப்பு SCIRI, Da'wa, மற்றும் சதரிஸ்ட்டுக்களால் டிசம்பர் 2005 தேர்தல்களில் பங்கு பெறும் வகையில் திசைதிருப்பப்பட்டது. வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறுவதற்கும் ஒரு கால அட்டவணை கோரப்படும் என்றும், தொழிலாள வர்க்கமும் கிராமப்புற வறியவர்களும் எதிர்கொள்ளும் பேரழிவுகர வாழ்க்கை நிலைமைகளில் விரைந்த முன்னேற்றங்களை கொண்டுவருவதற்கும் அமெரிக்கா நிறுவிய பாராளுமன்றத்தை பயன்படுத்தப்போவதாக உறுதிமொழி அளித்து அவை ஆதரவைப் பெற்றிருந்தன.

ஓராண்டிற்கு முன் நிலவிய போலித் தோற்றங்கள் சிதைந்து விட்டன. சமூக நிலைமைகள் இன்னும் சீர்கேடுற்றுள்ளன; குறுகிய பிரிவுவாதப் பதட்டங்கள் உள்நாட்டுப் போராக உருவெடுக்கின்றன; அமெரிக்க இராணுவம் தன்னுடைய படைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதையொட்டி வரும் மனமுறிவும் சீற்றமும் அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் பாக்தாத்தில் உள்ள அதன் கைப்பாவைகளுக்கு எதிராக நிலவும் எதிர்ப்பின் எண்ணற்ற நீரோட்டங்களை மேலும் சினமூட்டிக் கொண்டிருக்கின்றன.

நஜாப்பிற்கு வெளியே நடந்த படுகொலையானது ஒரு மத வழிபாட்டுக் கொள்கைமுறை மீது சுமத்தப்பட்டதாயினும், அரசாங்க எதிர்ப்பு உடைய பழங்குடியினர்மீது சுமத்தப்பட்டதாயினும் அல்லது இரண்டும் இணைந்தவற்றின் மீது சுமத்தப்பட்டதாயினும், ஈராக்கில் அமெரிக்கர் சட்டவிரோதமாக தொடர்ந்து இருப்பது அடக்குமுறை, பொறுப்பற்ற கொலைகள் ஆகியவற்றை நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தொடரச்செய்வதில்தான் முடியும் என்று நிரூபணம் செய்துள்ளது. படுகொலையின் பெரும் அளவு, புஷ்ஷின் திட்டமிட்ட "அலையெழுச்சியின்" கீழ் பாக்தாத்தில் முடுக்கிவிடப்படும் அமெரிக்க நடவடிக்கைகளின் தயாரிப்பு எப்படி இருக்கும் என்பதை எச்சரிக்கையாக காட்டுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved