World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

US "diplomacy" on Iran: thuggery and threats of war

ஈரான் மீதான அமெரிக்க "ராஜீய முறை" : குண்டர்தன்மையும் போர் அச்சுறுத்தலும்

By Peter Symonds
15 February 2007

Back to screen version

பாரசீக வளைகுடாவில் அமெரிக்க இராணுவ நிலைகளை கட்டியெழுப்பல் தொடர்ந்து கொண்டிருப்பினும், ஜனாதிபதி புஷ்ஷும் அவருடைய அதிகாரிகளும் ஈரானுக்கு எதிராக ஒரு இராணுவ தாக்குதலை நடத்தும் திட்டம் அமெரிக்காவிற்கு இல்லை என்று வலியுறுத்துகின்றனர். திங்களன்று C-Span க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில், புஷ் அவருக்கு மந்திரமாக ஆகிவிட்டதை திரும்பவும் கூறினார். போர் பற்றிய எச்சரிக்கைகள் "மக்களின் ஊகம்" என்று உதறித்தள்ளிய அவர், அமெரிக்கா "ராஜீய முறையில் பிரச்சினைகளைத் தீர்க்க" முற்படும் என்று அறிவித்தார். இருந்தபோதிலும்கூட, "கடைசிப்பட்சமாக இராணுவமும் பயன்படுத்தப்படலாம்" என்று அவர் அழுத்தமாக கூறினார்.

புஷ்ஷின் கருத்துக்கள் மிகவும் அபத்தமானவை. அமெரிக்க கோரிக்கைகளுக்கு தெஹ்ரான் முன்னதாக இணங்கி, அதன் அணுவாயுத திட்டங்களையும் மூடினால் அன்றி பேச்சு வார்த்தைகளுக்கு இடம் இல்லை என்று வெள்ளை மாளிகை உறுதியாய் கூறிவிட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஈரான் மற்றும் சிரியாவுடன் நேரடிப் பேச்சுக்கள், மற்றும் ஈராக்கில் அரசியல் தீர்வு காணவேண்டும் என்பவை உட்பட ISG எனப்படும் உயர்மட்ட ஈராக்கிய ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை அமெரிக்க நிர்வாகம் நிராகரித்துவிட்டது.

அந்த நேரத்தில் ISG க்கு தலைமை தாங்கியிருந்த முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர், ஜேம்ஸ் பேக்கர் பகிரங்கமாக புஷ் நிர்வாகத்தை கடித்து கொண்டதுடன், சர்வதேச ராஜீய முறையின் மிக அடிப்படையான விதிகளையும் சுட்டிக்காட்டினார்: ஒருவர் தன்னுடைய நண்பர்களிடத்தில் பேசுவது போலவே பகைவர்களிடத்திலும் பேசவேண்டும். புஷ் நிர்வாகம் ராஜீய முறையில் ஈடுபடவில்லை, குறைந்த பட்சம் அச்சொல் வழக்கமாக வழங்கப்படும் அர்த்தத்தில் ஈடுபடவில்லை, சர்வதேச குண்டர்முறையில்தான் அது ஈடுபட்டுள்ளது என்ற உண்மையைத்தான் பேக்கருடைய கருத்து அடிக்கோடிட்டு காட்டியது.

கடந்த சில ஆண்டுகளில், ஈரானில் அமெரிக்க "ராஜீய முறை" என்பது தெஹ்ரானுக்கு எதிரான இறுதி எச்சரிக்கைகள், அச்சுறுத்தல்கள் கொடுத்தல் என்பதில்தான் அடங்கியிருந்தது; இத்துடன் மற்ற நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா என்று குறிப்பாக மற்ற நாடுகளையும் மிரட்டி வலுக்கட்டாயப்படுத்தி அமெரிக்கப் பிரச்சாரத்திற்கு ஆதரவை நாடும் முயற்சியும் இணைந்திருந்தது. வாஷிங்டனை எதிர்க்க விரும்பாத இதன் போட்டியாளர்களும் திருப்திபடுத்தும் கொள்கையில் இறங்கி, ஈரானுடன் வெளிப்படையான மோதலை தவிர்க்கும் வகையில் சூழ்ச்சித்திட்ட முறைகளை கையாண்டனர்; ஆனால் இறுதியில் கடந்த டிசம்பர் மாதம் இராணுவ நடவடிக்கையை நியாப்படுத்த அமெரிக்கா பயன்படுத்த இருக்கும், ஐ.நா. பாதுகாப்பு குழு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.

இதன் வெற்றுத்தனமான அமெரிக்க-எதிர்ப்பு பேச்சு ஒருபுறம் இருக்க, ஈரானிய ஆட்சி பலமுறையும் அமெரிக்க மற்றும் ஏனைய பிரதான வல்லரசுகளுக்கு இணங்கி நடக்கத்தான் முற்பட்டுள்ளது. EU 3 என்று அழைக்கப்படும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி உடனான நீடித்த பேச்சு வார்த்தைகள் அமெரிக்கா தன்னுடைய அச்சுறத்தல்களை நிறுத்த வேண்டும், ஈரானுடனான உறவுகளை சீராக்கிக் கொள்ள வேண்டும் என்ற உறுதிமொழியை அமெரிக்காவிடம் இருந்து பெறத் தவறியது தெளிவானதை அடுத்து பேச்சு வார்த்தைகள் முறிந்து போயின. வாஷிங்டன் மீது தெஹ்ரான் நேரடியாகப் பேச்சுக்கள் வேண்டும் என்று குழைந்து நின்றது அனைத்தும் இழிவுடன் நிராகரிக்கப்பட்டன.

இந்த வார நியூஸ்வீக் இல் வந்துள்ள கட்டுரை ஒன்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்புக்களுக்கு ஈரான் அமைதியாக உதவியது என்பதை உறுதிபடுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் 2001ம் ஆண்டு தலையீடு செய்வதற்கு முன்னதாக, "அமெரிக்க, ஈரானிய அதிகாரிகள் பல முறையும் ஜெனீவாவில் சந்தித்தனர்" அப்பொழுது உடனிருந்த அதிகாரி ஒருவர் இந்த இதழுக்கு கூறியதாவது: "உண்மையில் அவர்கள் பொறுமை இழந்தனர். அவர்கள் கேட்பார்கள், எப்பொழுது இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப் போகிறது? நாம் செயலாற்றுவோம்!" தாலிபன் ஆட்சி காபூலில் கவிழ்ந்தபின், ஜேர்மனியில் நடந்த ஐ.நா. மாநாட்டில் தெஹ்ரான் முக்கிய பங்கினைக் கொண்டு அமெரிக்க கைப்பாவையான ஹமித் கர்சாயை புதிய ஆப்கான் ஜனாதிபதியாக இருத்துவதற்கு உதவியது.

தெஹ்ரானுடன் உறவுகளை சீர்செய்து கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுவதற்கு பதிலாக, 2002 நாட்டு மக்களுக்கான உரையில் புஷ் இழிந்த முறையில் ஈரானை ஈராக்குடனும் வட கொரியாவுடனும் இணைத்து "தீய அச்சின்" ஒரு பகுதி என்று கூறினார். ஆயினும்கூட, ஈராக்மீது அமெரிக்கப் படையெடுப்பிற்கு முன்னதாக, நியூஸ்வீக் விளக்கியுள்ளபடி, "தீய அச்சு உரைக்கு பின்னரும் இரு பக்கத்தாரும் அடிமட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்திருந்தனர்." ஈரான், ஈராக்கிய போராளிகளுக்கு ஆயுதங்களை கொடுத்துவருகிறது என்னும் சமீபத்திய ஆதாரங்கள் அற்ற கூற்றுக்கள் ஒருபுறம் இருக்க, வாஷிங்டன் 2003 படையெடுப்பின்போது முக்கியமான ஈராக்கிய ஷியைட்டுக்கள் அதற்கு ஆதரவு தருவதற்கு தெஹ்ரானை பெரிதும் நம்பியிருந்ததுடன், பின்னர் அவை ஆக்கிரமிப்பு நிர்வாகத்தில் பங்கு பெறுவதற்கும் தெஹ்ரானைத்தான் நம்பியிருந்தது.

கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸால் பிரதிநிதிகள் சகையின் வெளியுறவுக் குழுவின் முன் கொடுக்கப்பட்ட கருத்துக்கள் அதிகம் குறிப்பிடப்படாத, ஆனால் மிகவும் முக்கியமான, அனைத்து பிரச்சினைகளையும் புரிந்துகொள்ளும் திறனுள்ள பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ளுவதற்கான அமெரிக்காவுடனான ஈரானிய ஒத்துழைப்பு மீது கவனத்தை குவித்தது. ஈராக்கின் மீதான அமெரிக்க படையெடுப்பை ஒட்டி, தெஹ்ரானுடன் பதட்டங்களை தீவிரப்படுத்துவதற்கு ஈரானின் அணுசக்தி வசதிகள் பற்றித் தெரியவந்ததை புஷ் நிர்வாகம் பற்றிக் கொள்கையில் இந்த முன்மொழிவு வெளிவந்தது. ஈரானின் உயர்மட்ட தலைமை தெஹ்ரானில் இருந்த ஸ்விஸ் நாட்டுத் தூதர் மூலம் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு பேச்சு வார்த்தைகளுக்கான திட்டத்தின் குறிப்பை கோடிட்டு அனுப்பியிருந்தது.

புஷ்ஷின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அந்த நேரத்தில் இருந்த ரைஸ், அசாதாரணமான முறையில் அத்தகைய குறிப்பு பற்றி விவரம் ஏதும் தெரியாது என்று மறுத்துவிட்டார். சட்டமன்றத்தில் கேள்விகேட்கப்பட்டதற்கு அவர் கூறியதாவது: "ஈரானிடம் இருந்து இத்தகைய திட்டம் என்று கூறப்படுவதைப் பற்றி நான் படித்தேன். "நாம் இஸ்ரேலை அங்கீகரிக்க தயார்" என்று கூறயிருந்தால் இதைப் பற்றி நான் சிந்தித்திருப்பேன். ...அத்தகைய விஷயம் ஏதையும் பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை."

ஏனைய அமெரிக்க அதிகாரிகளும் இப்படி உதறித்தள்ளுவதைத்தான் காட்டியுள்ளனர். முன்னாள் அமெரிக்க உதவி வெளியுறவுத்துறை அமைச்சர் ரிச்சார்ட் ஆர்மிடேஜ் இந்த ஆவணத்தை படித்ததாக ஒப்புக் கொண்டார்; ஆனால் நியூஸ்வீக்கிடம் "எது ஈரானியரின் திட்டம், எது ஸ்விஸ் தூதரின் திட்டம் என்பதைப் பற்றி நிர்வாகம் முடிவிற்கு வரமுடியவில்லை" என்று கூறினார். இதையே கிளிப்பிள்ளை கூறுவது போல் கூறிய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் Tom Casey செவ்வாயன்று அறிவித்தார்: "உத்தியோகபூர்வ முறையில் இந்த ஆவணம் வரவில்லை; மாறாக ஸ்விஸ் தூதரின் ஒரு படைப்பாற்றல் செயலாக வந்திருந்தது."

இப்படிப்பட்ட விமர்சனங்களால் துவண்ட தூதர் Tim Guldimann, வாஷிங்டன் போஸ்ட்டிற்கு தன்னுடைய தொடர்பை பற்றி விரிவாக கூறினார். நேற்று வெளிவந்த கட்டுரை ஒன்றில், குல்டிமன் தான் வெளியுறவு அமைச்சரிடம், ஈரானிய முன்மொழிவு தெஹ்ரானின் மிக உயர்மட்டத்தில் மிகுஉயர் தலைவர் Ayatollah Ali Khamenei, அப்பொழுதைய ஜனாதிபதி மகம்மத் கடாமி, அப்பொழுது வெளியுறவு அமைச்சராக இருந்த மகல் காரஜி ஆகியோரால் பரிசீலிக்கப்பட்டு ஏற்கபட்டிருந்தது என்று கூறியதாக விளக்கினார். "அமெரிக்காவுடன் இப்பொழுது இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மற்றும் இந்த முன்முயற்சியுடன் முயற்சிப்பதற்கு ஆட்சியின் உறுதியான விருப்பம் இருந்தது என்ற தெளிவான உணர்வைத்தான் நான் பெற்றேன்" என்று குல்டிமன் மே 4, 2003 ல் இந்த ஆவணம் பேக்ஸ் செய்யப்பட்ட மேற்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ரைசும் ஏனைய அமெரிக்க அதிகாரிகளும் இந்த அழைப்பு பற்றி பொய் கூறுகிறார்களோ இல்லையோ, இந்நிகழ்வு புஷ் நிர்வாகம் தெஹ்ரானுடன் பேச்சு வார்த்தைகளில் அக்கறை காட்டவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. இப்பொழுது Newsweek வலைத்தளத்தில் கிடைக்கும் இந்த ஆவணம் மிகத் தெளிவாக ஈரானிய ஆட்சி எந்த அளவிற்கு செல்லத் தயாராக இருந்தது என்பதை காட்டுகிறது. பாதுகாப்பு உறுதிகளை நாடி, இரு தசாப்தங்களாக இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தடைகள் நீக்கப்பட வேண்டும் என்று கோரிய தெஹ்ரான் "முழு வெளிப்படை தன்மையுடனும்" தன்னுடைய அணுசக்தி திட்டம், ஈராக்கை அரசியல் அளவில் உறுதிநிலைக்கு கொண்டுவருதல், ஹமாஸ், ஜிகாத் மற்றும் ஹெஸ்பொல்லாவிற்கு ஆதரவு கொடுத்தலை நிறுத்துதல், மற்றும் பாலஸ்தீனம் பற்றியதில் இருநாடுகள் தீர்வு என்பதின் அங்கமாக இஸ்ரலை அங்கீகரித்தல் ஆகியவை பற்றி விவாதிக்க தயாராக இருந்தது.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கொலின் பவல் நியூஸ் வீக்கிடம் ஈரான் மற்றும் அதன் நட்பு நாடான சிரியாவுடன் எவ்வித தூதரக பூர்வாங்க பேச்சுவார்த்தைகளுக்கும் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டதாக குறிப்பிட்டார். "புஷ் ஆட்சியின் முதல் பதவிக்காலத்தின் பிந்தைய ஒன்றரை ஆண்டுகாலத்தில் என்னுடைய நிலைப்பாடு நாம் ஈரானுடன் மீண்டும் பேச்சுக்களை நடத்த வழிவகைகளை காணவேண்டும் என்றுதான் இருந்தது. ஆனால் ஜனாதிபதியின் புறத்தே அதற்கான தயக்கம்தான் இருந்தது" என்று அவர் விளக்கினார். தன்னுடைய தூதரக முறைகள் தோல்விகள் என்ற கூற்றை பவல் நிராகரித்தார். "பவல் போனார், ஆர்மிடேஜ் போனார்... அவர்களுக்கு ஒன்றும் கிட்டவில்லை" என்று நிர்வாகம் கூறுவதை நான் விரும்பவில்லை. "மறுபுறத்திடம், நீங்கள் 'பேச்சுவார்த்தைகளை தொடங்கும் முன்பு பேச்சுவார்த்தை என்ன அளிக்க இருக்கிறது' என்று கூறிவிட்டு நீங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியாது" என்றார்.

இதுதான் துல்லியமான முறையில் புஷ் நிர்வாகத்தின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது: பேச்சு வார்த்தைகளுக்கு வருவதாக தெரிவிப்பது, ஆனால் ஈரான் நிபந்தனையற்ற முறையில் அதன் யுரேனிய செறிவூட்டல் நிலையம், மற்றும் ஏனைய அணுசக்தி திட்டங்களை கைவிட்டதன் பின்னர் மட்டுமே என்று கூறுவது. இது ஒன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு அல்ல; மாறாக பெருகிய முறையில் இராணுவ ஆக்கிரமிப்பு வரும், பாரசீக வளைகுடாவில் மிகப் பெரிய போர்க்கப்பல்கள் தொகுப்பு நிறுத்தப்படும் என்ற அச்சுறுத்தத்தை பின்னணியாக கொண்ட வெளிப்படையான எச்சரிக்கை ஆகும். அமெரிக்க அழுத்தத்திற்கு அடிபணிந்து, ஐ.நா.பாதுகாப்பு குழுத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்குக் கொடுத்த வகையில், ஐரோப்பிய ஒன்றியம், சீனா மற்றும் ரஷ்யா ஆகியவை அமெரிக்க போர் உந்துதலுக்கு சர்வதேச சட்டமுறைமை என்ற மூடி மறைப்பை கொடுத்துள்ளன.

ஈரானுக்கு எதிரான தூண்டுதல் தன்மையுடைய புஷ் நிர்வாகத்தின் நிலைப்பாடு வட கொரியாவின் அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக பெய்ஜிங் கொண்ட உடன்பாட்டுடன் முற்றிலும் மாறுபட்ட தன்மையை உடையது. தெஹ்ரானை போல் அல்லாமல் பியோங்யாங் Nuclear Non-Prliferation Treaty யில் இருந்து விலகியதோடு மட்டும் அல்லாமல் சர்வதேச ஆய்வாளர்களை வெளியே அனுப்பியதுடன், கடந்த ஆண்டு ஒரு பழைய பாணியிலான அணுவாயுதத்தையும் வெடித்தது. ஆயினும்கூட வெள்ளை மாளிகை பூசலை உக்கிரமில்லாது செயலற்றதாக்குவதற்கு முற்பட்டு, பியோங்யாங் அமெரிக்க கோரிக்கைகள் எதையும் ஏற்பதற்கு முன்னர் --தற்காலிகமாகவேனும்-- வட கொரிய அதிகாரிகளை நேருக்கு நேர் பேசுவதற்கும் விரிவான உடன்பாட்டை காண்பதற்கும் முன்வந்தது.

வட கொரிய பேரம் அமெரிக்காவின் போக்கில் எத்தகைய அடிப்படை மாற்றத்தையும் பிரதிபலிக்கவில்லை. பியோங்யாங்குடன் உடன்பாட்டிற்கான உடனடி தந்திரோபாய காரணங்கள் எதுவாயினும், புஷ் நிர்வாகம் தன்னுடைய முழு கவனத்தையும் அதன் உயர் முன்னுரிமையின் மீது, அதாவது ஈரான் மீது குவிக்கலாம் என்பதுதான் தெளிவு. வெளிப்படையான முரண்பாடுகள் இருந்தாலும், ஈரானுடன் புரிந்துணர்வுள்ள பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வருவதனால் வெள்ளை மாளிகை வட கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் மேற்கொள்ளுவதற்கு விருப்பத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக அமெரிக்கா இப்பொழுது தெஹ்ரானுக்கு எதிரான போருக்கு போலிக்காரணங்களாக உதவுவதற்கு புதிய குற்றச் சாட்டுக்களை தயாரித்து வருவதில் முனைப்பாயிருக்கிறது.

ஈரானிய ஆட்சிக்கு எதிரான நீண்ட குற்றச்சாட்டு பட்டியல்கள், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா என்னும் பரந்த வளங்கள் கொழித்த பகுதிகள் மீது அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான அமெரிக்க அபிலாசைகளுக்கான வசதியான மறைப்பாகத்தான் பயன்படுகின்றன. புஷ் நிர்வாகத்தின் ராஜீய முறை மற்றும் அதன் குண்டர்தன்மையின் காரணத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையான நோக்கமும் அதுதான்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved