World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israel stokes up Hamas-Fatah strife in Gaza, considers ground invasion

காசாவில் ஹமாஸ்-ஃபத்தா பூசலை இஸ்ரேல் கிளறிவிடுகிறது, இராணுவப் படையெடுப்புபற்றி சிந்திக்கிறது

By Jean Shaoul
21 May 2007

Back to screen version

ஃபத்தாவிற்கும் ஹமாஸிற்கும் இடையே பெருகிவரும் உட்பூசல் பிளவில், ஹமாஸை ஒரு இராணுவ மற்றும் அரசியல் சக்தி என்ற நிலையில் இருந்து அகற்றும் வெளிப்படையான நோக்கத்தில் இஸ்ரேல் தலையிடுகிறது.

பாலஸ்தீனிய அதிகாரத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசின் படைகள் பிரதம மந்திரி இஸ்மாயில் ஹனியேவிற்கு விசுவாசமாக இருக்கும் படைகளுக்கு எதிராக போரிட ஆதரவு தரும் வகையில் மே 27ம் தேதி, எகிப்தில் இருந்து காசா பாலைநிலப் பகுதிக்கு தொடர்ந்துசெல்வதற்கு 50 ஃபத்தா போராளிகளுக்கு இஸ்ரேல் ஊக்கம் கொடுத்தது. 500 பேருக்கு அமெரிக்க ஆதரவுத் திட்டம் ஒன்றின் கீழ் பயிற்சி கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பல ஃபத்தா பாதுகாப்பு வீரர்கள் அரபு மற்றும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பெரும்பாலும் அமெரிக்க, ரஷ்ய நபர்கள் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர்.

முந்தைய தினம்தான் ஒரு இஸ்ரேலிய இராணுவ ஹெலிகாப்டர் தெற்கு காசாப் பகுதியில் ராபாவில் ஓர் இலக்கில் குண்டுவீச்சை நடத்தியது; அதில் ஹமாஸ் நிர்வாகக் குழு படையை சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர், 18 பேர் காயமுற்றனர். இஸ்ரேலிய படைகள் ஹமாசிற்கும் ஃபத்தாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருந்த காசாவின் ஒரே சரக்கு ஏற்றப்படும் முனையான கர்னி கிராசிங்கில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது.

மே 17 அன்றே, இஸ்ரேலிய பாதுகாப்பு மந்திரி, தொழிற்கட்சியின் அமிர் பெரெட், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளை (Israeli Defence Forces -IDF) ஹமாஸ் மற்றும் சந்தேகத்திற்கு உரிய போராளிகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்த உத்தரவிட்டார். ஒரு தாக்குதலில் இஸ்ரேலிய படைகள் ஹமாஸின் நிர்வாகக்குழு படைகளையும், காசாவில் ஜனவரி 2006ல் அது பதவியேற்றதில் இருந்து செயல்பட்டுவரும் அதன் ஆயுதமேந்திய பாதுகாப்பு குழுவையும் தாக்கின. இஸ்ரேலிய இராணுவம் இலக்கு வைக்கப்பட்டிருந்த படுகொலைகளை நிகழ்த்தின; சந்தேகத்திற்குரிய போராளிகளை அழைத்துச் சென்றதாக அது கூறிய கார்களையும் தகர்த்தது. தன்னுடைய உறுப்பினர்களில் மூவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் கூறியது. மற்றும் இரண்டு ஏவுகணைகள் ஒரு லாரியைத் தாக்கி 13, 18 வயது சகோதரர்கள் உட்பட ஒரு குடும்பத்தை கொன்றன.

எல்லையில் பீரங்கிப் படைகள் குவிக்கப்பட்டு, அவற்றுள் சில டாங்குகள் காசாப் பகுதிக்குள் சென்றன. தரைப்படை பிரிவு ஒன்று காசாவின் வடபகுதியில் நுழைந்தது; ஆனால் இஸ்ரேலின் இராணுவம் படையெடுப்பு என்று தொடங்காமல் நிறுத்திக் கொண்டது. இதன் பின் மே 18ம் தேதி அதிக வான்வழித் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இஸ்ரேலிய தாக்குதலால் மொத்தத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமுற்றனர்.

தன் நடவடிக்கைகள் க்ரூட் ஏவுகணைகள், காசெம் ராக்கெட்டுக்கள் என்று அழைக்கப்படுபவற்றை இஸ்ரேலின் தெற்கு சிறுநகரங்கள்மீது ஏவக் கூடிய ஹமாசின் அழிக்கும் திறனை இலக்காக கொண்டவை என்று இஸ்ரேல் கூறுகிறது. கடந்த வாரத்தில் ஹமாஸ் 80 ராக்கெட்டுக்களுக்கும் மேலாக செலுத்தி குறைந்தது ஏழு பேரையாவது காயப்படுத்தியதுடன், பல வீடுகளையும் சேதத்திற்கு உட்படுத்தி, பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓடும்படி நிர்பந்தித்தது. வட ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு வம்சாவளியினரான வறிய இஸ்ரேலியர்கள் வாழும், மிக அதிக வேலையின்மை நிறைந்திருக்கும், எல்லைச் சிறுநகர் செடெரொட் ஏவுகணை தாக்குதல்களின் கொடுமையை அனுபவித்தது.

ஒரு மூத்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி காசாவில் தற்பொழுது நடைபெறும் நடவடிக்கையின் இலக்கு, அதன் இஸ்ரேலுக்கு எதிரான ராக்கெட் தாக்குதல்களுக்கு "ஹமாஸ் தக்க விலை கொடுக்க வேண்டும்" என்பதாகும் என்றார். ஆனால் இஸ்ரேலுக்கு இது முக்கிய பிரச்சினை இல்லை என்பதை அவர் தெளிவாக்கி ஹமாஸ் ராக்கெட்டுக்களை ஏவாவிட்டாலும் மிஞிதி நடவடிக்கைகள் தொடரும் என்று கூறினார்.

ஹமாஸிடம் இஸ்ரேல் "பேச்சுவார்த்தைகள்" நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்; மிஞிதி நடவடிக்கைகள் ராக்கெட் தாக்குதல்களின் தொடர்ச்சியுடன் இணைந்திருக்கவில்லை என்றும் கூறினார். "நாங்கள் சரியான நிலப்பரப்பை மட்டும் தாக்கவில்லை. அவர்களுடைய அச்சுறுத்தலுக்கு ஹமாஸ் தக்க விலை கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம்." என்று அவர் கூறினார். தன்னுடைய நடவடிக்கைகளின் தொடர்ச்சி பற்றிய திட்டங்களை மந்திரிசபைக்கு மிஞிதி அளிக்கும் என்றும் அவ்வதிகாரி கூறினார்.

தன்னுடைய நடவடிக்கைகள் ஹமாஸ் மற்றும் ஃபத்தாவிற்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் உட்பூசல்களுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை என்று இராணுவம் போலித்தனமாக கூறிக் கொண்டிருக்கிறது; ஆனால் தாக்குதலின் அளவும் பாலஸ்தீனியர்களின் இறப்பு எண்ணிக்கையும் இக்கூற்றில் உள்ள பொய்களை நன்கு வெளிப்படுத்துகின்றன.

மே 20ம் தேதி, இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி சபை, ஹமாஸ் மற்றும் காசாவில் இருக்கும் இஸ்லாமிய ஜிகாத் இரண்டிற்கும் எதிரான நடவடிக்கைகளை முடுக்கிவிடும் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தது. "பயங்கரவாத உள்கட்டுமானத்தை" தகர்த்துவிடும் நடவடிக்கைகளுக்கு அது இசைவு கொடுத்ததுள்ளது; பெயரளவிற்கு முழுமையான தரைப்படை நடவடிக்கைகளுக்கான உத்தரவுதான் கொடுக்கப்படவில்லை.

ஒரு வாரத்திற்கு முன் வெடித்தெழுந்த வன்முறை இதுவரை இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஹமாஸுக்கும் ஃபத்தாவிற்கும் இடையே நடந்துவரும் பூசல்களின் இறப்பு எண்ணிக்கையிலேயே மோசமாக உள்ளது. தன்னுடைய ஆதாரங்கள் இந்த உட்பூசலில் இதுவரை 73 பேர் இறந்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலனவர்கள் ஃபத்தா உறுப்பினர்கள் என்றும் தெரிவிப்பதாக பெரெட்ஸ் கூறியுள்ளார். இன்னும் டஜன் கணக்கானவர்கள் காயமுற்றுள்ளனர்; இதில் இரு கோஷ்டிகளுக்கும் இடையே நடக்கும் துப்பாக்கிச் சண்டையின் குறுக்கே அகப்பட்டு இறந்துள்ள சாதாராண மக்களும் அடங்குவர்.

சீற்றமுடைய தெருப் போர்கள், அழுத்தங்கள் பெருகிய அளவில் வெடித்தெழுந்து, மார்ச் 17 அன்று பதவியேற்றிருந்த ஹமாஸ்-ஃபத்தா கூட்டணி அரசாங்கத்தை முடிவிற்கு கொண்டுவருவது போல் அச்சுறுத்தின. இஸ்ரேல் இந்த அரசாங்கத்தை அங்கீகரிக்கவே இல்லை; காசாவை தனிமைப்படுத்தி, பட்டினிபோடும் அதன் முயற்சிகளை அது தொடர்கிறது மற்றும் அதன் அரசியல் சரிவு உள்நாட்டுப் போராக ஆவதை விரைவுபடுத்துகிறது.

பாலஸ்தீனிய உள்துறை மந்திரியான ஹனி கவஸ்மே பலமுறையும் ஃபத்தா மற்றும் ஹமாஸ் போராளிகளை ஒருங்கிணைக்கும் திட்டம் அவருடைய பாதுகாப்பு தலைவர் ரஷின் அபு ஷ்பக்கினால் எதிர் உத்தரவு இடப்பட்டதை திரும்பத் திரும்பக் கண்டுளார்; பிந்தையவர் காசாவில் ஒரு போர்ப்பிரபுவாக இருக்கும் மஹ்மூத் டஹ்லானினின் சம்பளப் பட்டியலில் இருக்கிறார். ஷ்பக் படைகள், காசா தெருக்களில் ஹமாஸ் அரசாங்கம் அல்லது கவஸ்மேயின் உத்தரவுகளை பொருட்படுத்தாமல் இயங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்; இது கடந்த வாரத்தில் வன்முறையை முன்கூட்டி கொண்டுவந்துள்ளது. கவஸ்மேயை பொறுத்தவரையில், இது இறுதி அடியாகும், அவர் அரசாங்கத்தில் தான் கொண்டிருந்த பதவியை இராஜிநாமா செய்துவிட்டார்.

பின்பு, ஹமாஸ் படைகள் ஷ்பக்கின் வீட்டை தாக்கி, அவருடைய மெய்காப்பாளர்களில் ஐந்து பேரையாவது கொன்றனர். அந்த நேரத்தில் பெரும் பாதுகாப்பிற்குட்பட்ட அவர்களுடைய வீட்டில் ஷ்பக்கும் அவருடைய குடும்பத்தினரும் இல்லை.

பைனான்சியல் டைம்ஸில் வெளிவந்துள்ள ஷ்பக்கின் இல்லத்தைக் காட்டும் ஒரு வண்ண நிழற்படம், கிரெனாவில் அல்ஹம்ப்ரா அரண்மனை போன்ற ஒரு வீட்டை காட்டுகிறதே அன்றி, சராசரி காசா நகரம் அல்லது அகதிகள் முகாம்களுக்கு அருகே உள்ள வீடு போல் தெரியவில்லை. பாலஸ்தீனிய நிர்வாகத்தின் வளரும் பாதுகாப்புப் படைகள், உலகிலேயே மக்கள் எண்ணிக்கை ஒப்புமையில் மிக அதிகம் என்று இருப்பது, பாலஸ்தீனிய மக்களை இஸ்ரேலியத் தாக்குதலில் இருந்து காப்பதற்கு அல்ல என்றும் அமெரிக்க-இஸ்ரேலிய ஆணையின் கீழ் உள்ள குடியிருப்பிற்கு காவலாக இருப்பதற்கு என்றும், அதே நேரத்தில் பாலஸ்தீனிய மக்களிடம் இருந்து பாலஸ்தீனிய மில்லியனர்கள், மற்றும் பில்லியனர்களைக் காப்பதற்கும்தான் என்றும் புலனாகிறது.

கடந்த புதனன்று, இறப்பு எண்ணிக்கை நான்கு நாட்களில் 41 ஆக உயர்ந்தவுடன், மேற்குக் கரை ரமல்லா மற்றும் காசா நகரத்தில் போருக்கு முடிவு வேண்டும் என்று பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆனால் காசா நகரத்தில் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, மக்கள் சிதறியோடியதில் குறைந்தது எட்டுப் பேராவது காயமுற்றனர். ஐ.நா. மனிதாபிமான விவகாரங்கள் அலுவலகத்தின்படி இந்த உட்பூசல்களில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு, 650 பேர் காயமும் ஆடைந்ததாக தெரிகிறது.

இஸ்ரேலின் ஆளும் உயரடுக்கிற்குள் இப்படி காசாவில் நடந்து கொண்டிருக்கும் கிட்டத்தட்ட உள்நாட்டுப் போர் பற்றி எத்தகைய அணுகுமுறை மேற்கொள்ளவது என்ற உடன்பாடு இல்லை; இதையொட்டி முழு அளவு தரைப்படை நடவடிக்கையை அங்கரிக்க வேண்டுமா என்ற முடிவும் வரவில்லை.

படையெடுப்பு என்பதை இதுவரை பிரதம மந்திரி எகுட் ஓல்மெர்ட் நிராகரித்துள்ளார். லெபனானுக்கு பின்னர் ஓர் இரண்டாம் இராணுவ சங்கடம் நேரிடக்கூடாது, குறிப்பாக ஹமாஸ் தன்னுடைய இராணுவப் படைகளை 10,000 மாக உயர்த்தியுள்ளது என்றும், ஏராளமான டாங்கு-எதிர் ஏவுகணைகள், மற்றும் ஆயுதங்கள் உயர்தர வெடிமருந்துகளை காசாவில் இறக்குமதி செய்துள்ளது என்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியில் அவர் அஞ்சுகிறார். எப்படிப்பார்த்தாலும், அதிலும் 2006ல் லெபனானில் சங்கதடத்தை இஸ்ரேல் சந்தித்தபின் இன்னும் நேரடியாகவும், உடனடியாகவும் அப்பகுதிக்குள் செல்வது மிகவும் கடினமானதாகும்.

அவருடைய இந்த நிலைப்பாட்டிற்கு வாஷிங்டனுடைய ஆதரவு உள்ளது; அது ஓர் இஸ்ரேலிய படையெடுப்பு மத்திய கிழக்கில் உறுதித்தன்மையை சீர்குலைத்துவிடும் என்று அஞ்சுகிறது. அமெரிக்கா, அபாசிற்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பதில் குவிப்புக்காட்டுவது அதன் உள்ளூர் ஆதரவிற்கு உகந்தது என்றுதான் கருதுகிறது. இதைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேல், பணம் அபாசின் படைகளுக்கு மாற்றப்படுவதற்கு அனுமதிப்பதுடன் ஃபத்தாவும் ஜோர்டானில் பயிற்சி பெறவும் அனுமதிக்கிறது.

ஆனால் இந்தக் கொள்கை பின்னடைவை கொடுத்தது. அப்பாஸ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆதரவைக் கொண்டிருப்பதாக கூடுதலாக கருதப்பட்டால், பாலஸ்தீனிய மக்கள் கூடுதலாக அப்பாஸ் மற்றும் ஃபத்தாவில் இருந்து மனமுறிவு கொள்வர்; ஏற்கனவே இவை தங்கள் ஊழல், திறமையின்மை ஆகியவற்றால் வெறுக்கப்படுகின்றன. ஹமாஸ் ஆதரவளர்களை எதிர்கொள்ள, அமெரிக்கர்கள், அப்பாஸின் படைகளுக்கு துப்பாக்கிகளும் மில்லியன் கணக்கான டாலர்களும் கொடுக்கிறார்கள் என்னும் தகவல் எரிகிற தீக்கு எண்ணெய்யாக மேலும் சேரும்..

ஒரு மூத்த ஃபத்தா உறுப்பினர் பாலஸ்தீனிய மக்களுடைய ஆதரவு தங்களுக்கு இல்லை என்பதை ஒப்புக் கொண்டார். "பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் இன்னமும் எங்களிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் பாலஸ்தீனிய அதிகாரத்தில் இருக்கும் நிதி ஊழலுக்கு இன்னமும் எங்களைத்தான் பொறுப்பாக நினைக்கின்றனர். இதையும் விட மோசமானது என்னவென்றால், பல பாலஸ்தீனியர்கள் எங்களுக்கு அமெரிக்க, இஸ்ரேல் ஆதரவு உள்ளது என்ற உண்மையையும் விரும்பவில்லை" என்று அவர் கூறினார்.

கடந்த செவ்வாயன்று கர்னி சோதனைச் சாவடியில் நடந்த மோதலில், அப்பாஸ்-ஆதரவு கொள்கைக்கு ஆதரவு கொடுக்கும் இஸ்ரேலிய தலைவர்கள், சிறந்த ஆயுதங்கள், பயிற்சிகள், எண்ணிக்கையில் கூடுதல் என்று இருந்த ஹமாசின் சக்திகளுக்கு எதிராக ஃபத்தா நன்கு செயலாற்றியது என்று வாதிட்டுள்ளனர்.

இஸ்ரேலிய கொள்கை வகுப்பாளர்களிடையே எவ்வித தயக்கங்களும் உள் வேறுபாடுகளும் இருந்தாலும், பொதுப் போக்கு இப்பொழுது வெளிப்படையான இராணுவ பூசல் வேண்டும் என்று இருக்கிறது. இஸ்ரேலின் இராணுவ மற்றும் உளவுத்துறை தலைவர்கள் பலரும், பென்யமின் நெதன்யஹுவில் தலைமையில் செயல்படும் அரசியல் கூறுபாடுகளில் கூர்மையாக இருப்பவர்களும் பாலஸ்தீனிய அதிகாரத்தை காக்கும் திறனை அபாஸ் கொண்டிருக்கவில்லை என்றே வலியுறுத்தியுள்ளனர்.

1977ம் ஆண்டு கட்சி பதவிக்கு வந்து 30 ஆண்டுகள் முடிவை குறிக்கும் கூட்டம் ஒன்று லிகுட் பிரிவினரால் Menachem Begin Heritage Centre ல் நடத்தப்பட்டபோது, அதில் பேசிய நெதன்யஹு, "யார் தேவை என்று கருதுகிறதோ அவர்களை அரசாங்கம் வெளியேற்றலாம், காசாப் பகுதியை மூடி சட்டம் இயற்றலாம், மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகளை நிறுத்தலாம் அல்லது Qassesms பகுதியில் நான்கு அல்லது ஐந்து கிலோமீட்டர்கள் தூரம் படையெடுக்கலாம்" என்று கூறினார்.

தன்னுடைய பங்கிற்கு துணைப் பிரதம மந்திரி, தீவிர வலது Yisrael Beiteinu வைச் சேர்ந்த அவிக்டர் லிபர்மன் இன்னும் கூடுதலான முறையில் காசாப் பகுதியில் தரைப்படை நடவடிக்கை வேண்டும் என்று கூறியுள்ளார். அரசாங்கத்தில் இருந்து தன்னுடைய பதினொரு உறுப்பினர்களை விலக்கிக் கொண்டு அரசாங்கத்தை கூட கவிழ்ப்பதற்கு தயாராக இருப்பதாகவும், "இப்பொழுதுள்ள கூட்டணி உண்மை என்னும் கணத்தை அடைந்துவிட்டது. ஒன்று ஹமாஸை நாம் தகர்க்கிறோம்; அல்லது அரசாங்கத்தை தகர்க்கிறோம்." என்று அவர் கூறினார்.

காசாப் பகுதி தளபதியான பிரிகேடியர் தளபதி மோஷே டமிர் நீண்டகாலமாகவே தரைப்படை மற்றும் டாங்குப் பிரிவுகள் காசா பகுதியில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். காசா பற்றி கடுமையான அணுகுமுறை தேவை என்று மந்திரிசபை கூட்டங்களில் அவர் கூறிவருகிறார்; ஓல்மெர்ட் மற்றும் பெரெட்ஸ் இருவரும் அத்தகைய படையெடுப்பிற்கு பச்சை விளக்கு காட்ட வேண்டும் என்றும் கூறுகிறார்.

இவரும் இராணுவத்தின் உயர்கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றவர்களும் "காசாப் பகுதி மற்றொரு தெற்கு லெபனானாக மாறுவதற்கு முன் "ஹமாஸை நசுக்கிவிட வேண்டும்" என விரும்புவதாக ஒரு தகவல் கூறுகிறது. அவர்களுடைய திட்டம் காசாவை மூற்று பகுதிகளாப் பிரித்து, எல்லைகளை மூடிவிட்டு, ஹமாஸை ஒரு வாரத்திற்கு முகாமல் இருக்கும் நடவடிக்கையில், அப்பகுதியிலுள்ள சிறு நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றில் படைகளை வெள்ளமென செலுத்தி ஹமாஸை நசுக்குவதாகும். இஸ்ரேல் வேகம், உயர்ந்த தொழில்நுட்பம், சிறப்பான பயிற்சி, அறிவு, எண்ணிக்கை மேன்மை மற்றும் கடுமையான மிருகத்தனம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஹமாஸை நசுக்க விரும்புகிறது.

அமெரிக்க ஆதரவை நாடுவதற்காக அவர்கள் கொண்டுள்ள இலக்கு, மற்றொரு அரசாங்கத்தை நிறுவுவது அல்ல; இன்னும் பேரழிவையும் இடர்பாடுகளையும் அங்கு கொடுத்து பாலஸ்தீனியர்களை இறுதியாக வறிய சேரிகளில் வசிக்க ஒப்புக்கொள்ள வைத்தல் அல்லது அங்கிருந்தே சென்றுவிடுவது என்ற முடிவிற்கு அவர்கள் வரவேண்டும் என்பதாகும். பாலஸ்தீனிய பகுதிகள் ஏற்கனவே கிட்டத்தட்ட வெளியுலகில் இருந்து தனியாக்கப்பட்டுவிட்டதால், பாலஸ்தீனிய பொருளாதாரம் நம்பியிருக்க வேண்டிய விவசாயப் பொருட்களை கூட பெறமுடியாத நிலையில் இருப்பதால், அங்கு வறுமைதான் உள்ளது; தட்டுப்பாடுகள் பரந்த அளவில் உள்ளன.

செளதி அரேபியா ஃபத்தாவிற்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த பெப்ருவரியில் சமாதனத்தை கொண்டுவந்து, அதையொட்டி ஒற்றுமைக் கூட்டணி நிறுவப்பட்ட போது, பல அரேபிய நாடுகள் பாலஸ்தீன அதிகாரத்திற்கு நிதி உதவி அளிக்க முன்வரும் என்ற உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன; ஆனால் இதுவரை ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மட்டும்தான் கொஞ்சம் பணம் கொடுத்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பாலஸ்தீனிய அதிகாரத்தை தாங்கள் புறக்கணித்துவருவதை தக்க வைத்துள்ளன. வெளி உதவி $900 மில்லியன் என்று இருமடங்காக உயர்ந்துள்ளபோது, இஸ்ரேல் PA க்காக வசூலித்த வரிகளில் இருந்து $800 மில்லியனை கொடுக்க மறுத்துள்ளது; இது மாதம் ஒன்றிற்கு $55 மில்லியன் அதிகமாகிக் கொண்டுவருகிறது. நிதி இல்லாமல், PA அல்லது கூட்டணி அரசாங்கம் அதிக காலம் நீடித்து இருக்க முடியாது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved